Preethi S Karthikவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள்

வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் – 15

காழ்ப்பின் கருமை – 3(6)

அவள் கண்களும் கலங்க “நீ என்ன தப்பு பண்ண மிது? உன்னோட கடந்தகாலத்தை பயன்படுத்திட்டு உன்ன கார்னெர் பண்ணானே அவன் தான் தப்பு. உன் நிலமையை தப்பா யூஸ் பண்ணிட்டவன் அவன்”

“உன் மனசு யாருக்கு வரும் சொல்லு? தன் குழந்தைக்காக இருந்தா கூட செய்ய யோசிக்கற விஷயத்தை, நீ உன்ன நம்பி விட்டுட்டுப்போனதுனால செய்ஞ்சுருக்க”

“நீ ஏன் கண்கலங்குற? உன் நிலைமையை பயன்படுதிட்டான் பாரு அந்த ஆளு… அவன் செஞ்சதை நினைச்சு அவன் அழணும்… அவனை… நான் சும்மா விட மாட்டேன்” சொன்னவன் கண்களில் அவ்வளவு தீவிரம் இருந்தது.

“அது தான் நான் கடைசியா இன்னொருத்தனோட…” அதற்கு மேல் சொல்லமுடியாமல் தொண்டை அடைத்தது. குரல் தழுதழுத்தது.

அழுகை தாங்கமுடியவில்லை. அவள் வெடித்துக் கதறி அழுதாள். அவளை சமாதானப்படுத்துவதற்கு மிகவும் கஷ்டப்பட்டான் சக்தி.

அவள் பக்கத்தில் அமர்ந்து கொள்ள, அவன் தோள்மேல் சாய்த்தவள், விம்மிக்கொண்டு

“அந்த ஆளு நான் நினச்ச மாதிரியே அடுத்த நாள், குழந்தைகள சேர்க்க போனப்ப, ‘அவனால என்ன மறக்க முடில, திரும்ப திரும்ப செய்யணும் போல இருக்கு’ன்னு சொன்னான். எனக்கு வந்த கோவத்துக்கு, கைல கட்ட மட்டும் இருந்துருந்துச்சு, அடி போட்டு தொவச்சுருப்பேன்”

“ஆனா எதுக்காக அவன் சொன்னதை கேட்டு அவன்கூட ஒரு நைட் இருந்தேன்னு நினைச்சப்ப, அமைதியாகிட்டேன். கோவத்தை காட்டிக்கல. அவன்கிட்ட ‘அவன் என்கூட இருக்கப்ப போட்டோ எடுத்தேன்’னு சொன்னேன்”

“அவன் மொதல்ல நம்பல. ஒழுங்கா சீட் வாங்கித்தரலன்னா அவனோட பொண்டாட்டி கிட்ட காட்டுவேன்னு சொன்னேன். என்ன நெனச்சானோ உடனே பாண்டிச்சேரில இருக்கற போர்டிங் ஸ்கூல் ஒன்னுக்கு போன் பண்ணான்”

“என்ன பசங்களோட கார்டியன்னு சொன்னான். டிரஸ்ட் மூலம் அவங்களுக்கு சீட் தர சொல்லி சொன்னவுடனே, அவங்களும் சரின்னுட்டாங்க “

“அப்பறம் அந்த போட்டோ கேட்டான். ‘அத கண்டிப்பா நான் வெளிய காட்டமாட்டேன் என் பசங்களுக்கு எந்த பிரச்சனை வராதவரைக்கும். மீறி ஏதாச்சும் பண்ணா கண்டிப்பா நடக்கிறதே வேற’ன்னு சொன்னேன். அதுக்கப்பறம் எதுமே அவன் சொல்லல”

“உண்மைய சொல்லனும்னா, போட்டோ மட்டும் எப்படி எடுக்கறதுன்னு தான் கத்துக்கிட்டேன். அத எங்க போய் பாக்கணும்ன்னு கூட அப்போ எனக்கு தெரியாது”

“அப்பறம் ரெண்டு நாள்ல பசங்களுக்கு தேவயானத வாங்கிட்டு, ஹாஸ்டல்ல விட போனப்ப, ‘அந்த வருஷம் ஃபீஸ் டிரஸ்ட்ல இருந்து கட்டிட்டாங்க அடுத்த வருஷம் நான் தான் கட்டணும் அதுவும் இல்லாம, மத்த செலவை நான் தான் பத்துக்கணும், வருஷத்துக்கு ஒரு லட்சம் ஆகும் ரெண்டு பேத்துக்கும்’ன்னு சொன்னாங்க. எல்லாத்துக்கும் சரின்னு சொல்லிட்டு வந்துட்டேன்”

“பசங்கதான் ஒரே அழுகை. சின்ன பசங்கல்ல… அதான்… ஆனா அந்த வயசுலயே விட்டுட்டா, என்கூட பெருசா அவங்களுக்கு அட்டாச்மென்ட் வராது. இன்னமும் பெருசானதுக்கப்பறம் விட்டா, போகமாட்டேன்னு சொல்லிடுவாங்களோன்னு தான் சேர்த்துட்டேன்”

“அதுவும் இல்லாம அவங்களுக்கு என்னோட வாழ்க்கையோ, இல்ல அவங்க அம்மாவோட வாழ்க்கையோ தெருஞ்சுட கூடாது. என்கூட இருந்தா எங்க அவங்களுக்கு தெருஞ்சுடுமோன்னு பயம் வேற. அவங்க வாழ்க்கை நல்லா இருக்கனும்ன்னு நினச்சேன். அவ்ளோதான்”

“அப்பறம் நான் எந்த மாதிரி வேலைக்கு போகணும்ன்னு யோசிச்சேன். வீட்டுவேலைக்கு போகவே கூடாதுன்னு முடிவெடுத்தேன். எனக்கு இங்கிலிஷ் நல்லாவே பேச வந்துச்சு. ஏதாச்சும் ஸ்கூல்ல ட்ரை பண்ணலாம்ன்னு யோசிச்சப்ப, அதுக்கெல்லாம் சர்டிஃபிகேட் வேணும்

“அதுவும் இல்லாம, ஆம்பளைங்க இருக்கற இடத்துக்கு போகவே கூடாதுன்னு முடிவு பண்ணேன். ஏன்னா எவன பார்த்தாலும் அருவருப்பா இருந்துச்சு”

“பல விஷயத்தை யோசிச்சதுக்கப்புறம், தைச்சு பழகிக்கலாம்ன்னு தையல் கிளாஸ்க்கு போனேன். வருண் குடுத்த பணத்துல படிச்சேன். ஒரு மெஷின் வாங்கினேன். அவன் குடுத்த பணமும் கிட்டத்தட்ட காலி ஆயிடுச்சு… ஆனா ஒரு மாசம் முழுசா கத்துட்டேன்”

“அந்த சென்டர்ல, ‘சென்னைக்கு போனா நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கும்’ன்னு சொன்னாங்க. இங்க கிளம்பி வந்தேன்.” என சொல்லி நிறுத்தியவள் வீட்டை சுற்றியும் முற்றியும் பார்த்தாள்.

“ஏனோ ஒரு ரூம்லயே இருந்து பழகிடுச்சு. பெரிய வீடோ, தனி தனி ரூம் இருக்கற இடமெல்லாம், பாக்கறப்ப ஏதோ ஒரு இனம் புரியாத அழுத்தம் உருவாகும். நமக்கென்ன குடும்பமா ஒன்னா? எப்பவும் போல ஒரு ரூம் போதும்ன்னு தோணும்” அவள் கண்கள் விரக்தியை பிரதிபலித்தது.

“அதனாலேயே ஒரு ரூம் இருந்த இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக்கிட்டேன்”

“பக்கத்துல எக்ஸ்ப்போர்ட் கம்பெனி பாத்ததும் அவங்ககிட்ட பேசலாம்ன்னு போனேன்”

“மொதல்ல வேல குடுக்க யோசிச்சாங்க. அப்பறம் இதுக்கு முன்னாடி வேல பாத்த இடத்துல, நடந்த விஷயத்தை சொன்னேன். அதுனால ஆம்பளைங்கள பாத்தாலே, நெர்வஸ் ஆகி பயம் வந்துடுதுன்னு சொன்னேன். அவங்களும் வீட்ல தைக்கறதுக்கு சரின்னு சொன்னாங்க”

“டே நைட் தைக்க ஆரம்பிச்சேன். இதோ இந்த ஒரு வருஷத்துல பசங்க படிப்புக்கு தேவயானதைவிட அதிகம் சம்பாதிச்சிட்டேன்” அந்த கலங்கிய கண்களில் பெருமையுடன் புன்னகைத்தாள்.

அவளின் அந்த முகம் அவனின் மனதை சற்று நிம்மதி அடையச்செய்தது.

“நான் அப்பப்போ யோசிப்பேன் சக்தி… ஏன் கிறிஸ்டி’க்கா வருண் கிட்ட ஹெல்ப் கேட்க வேணாம்ன்னு சொன்னாங்க. எனக்கு அவங்கள தவிர இருந்த ஒரே ஒரு சப்போர்ட் வருண்”

“ஆனா, ஒரு வகைல யோசிச்சப்ப, எல்லாரும் எல்லா நேரமும் நல்லவங்களா இருக்க முடியாம போச்சுன்னா? வருண் நல்லவனா இருக்கலாம். ஆனா வேற ஏதாச்சும் எண்ணம் அவன் மனசுல வந்துடுச்சுன்னா? என்னோட கடந்தாலம் அவனை அப்படி நினைக்க வெச்சுடுச்சுனா?”

“இதை நான் நெனச்சப்பவே… வேணாம், வருண் என் மனசுல நல்லவனா மட்டுமே இருக்கனும்னு நெனைச்சுப்பேன்.”

“இது அவன் குடுத்த வாழ்க்கை. அங்கயிருந்து வந்தப்ப, வெளியாவந்ததே பெருசா தெரிஞ்சுது. ஒன்னொன்னுக்கும் அவன்கிட்ட நின்னா, நல்லவா இருக்கும்? அவனை பயன்படுத்திக்கற மாதிரில்ல இருக்கும்?”

“அவன் கிட்ட உதவி கேட்காம நானே தப்பு செஞ்சு, அடிபட்டு, மிதிபட்டு, ரொம்ப நல்லா வாழலைனாலும், தனியா நிக்கற அளவுக்கு மாறிருக்கேன். இதையே கிறிஸ்டி’க்கா கூட யோசிச்சுருக்கலாம்”

“அப்போயிருந்த மிதுலாவால யோசிக்க முடில, ஆனா போகப்போக புருஞ்சுட்டேன். ஏன்னா எங்க கடந்தகாலம் எங்களை எல்லா வகைளயும் யோசிக்க வெச்சது. அதனாலேயே மைதிலி மேம், கௌதம்’ட்ட உண்மைய சொல்லல”

“ஆனா… உன்கிட்ட உண்மைய சொல்லாம இருக்க முடில” அவள் சொன்னவுடன் அவள் கைவிரல்களை ஆதரவாக வருடினான்.

சில மணித்துளிகள் அமைதி நிலவியிருக்க, அவளிடம் அவள் பயப்படுவது பற்றி கேட்கலாமா? வேண்டாமா? என்று தயங்கினான்.

ஒருவேளை தெரிந்துகொண்டால் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். அதற்காகவே அவளிடம் கேட்டான்.

“ஏன் மிது நைட்லாம் எதையோ நினைச்சுட்டு பயந்துக்கற?” ஆதரவாக அவள் கைகளை பற்றிக்கொண்டு கேட்க, புன்னகைத்த அவள் முகம் தொய்ந்தது.

யாரிடமேனும் சொன்னால் மனது ஆசுவாசப்படும் என்றெண்ணியவள், “அக்கா கூட, இல்ல பசங்ககூட இருந்தப்ப, எதுவும் ஆகல சக்தி. ஆனா தனியா படுக்கறப்ப பழைய ஞாபகங்கள், யார் யாரோ என்ன வந்து….” சொல்லமுடியாமல் தொண்டை கரகரத்தது.

அவளின் கைகளை அவன் தட்டிக்கொடுக்க, “பழைய மாதிரி என்கிட்ட வந்து எனக்கு பிடிக்காம, என்மேல விழற மாதிரி இருக்கும். என்ன பிடிச்சு திரும்ப அந்த இடத்துக்கு கூட்டிட்டுப்போற மாதிரி இருக்கும். விரசமா பேசமாதிரி இருக்கும்” அவள் கண்களில் கலவரம் தெரிந்தது அவனுக்கு.

“அவங்ககிட்ட இருந்து என்ன காப்பாத்திக்க நினைப்பேன். மூச்சு விடமுடியாம கஷ்டபடுவேன். யாரோ கழுத்தை நெரிக்கற மாதிரி இருக்கும்” அவள் கண்ணிமைகள் இப்போது அலைப்பாய்ந்து பயத்தில்.

திடீரென கைகளை இறுகக் காதுடன் பொத்திக்கொண்டாள். கண்களை மூடிக்கொள்ள, மூச்சு இறைத்தது அவளுக்கு.

இந்த பரிமாணம் அவனுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்த, ஓடிச்சென்று தண்ணீர் கொண்டுவந்தவன், அவளை அழைத்துக்கொண்டே உலுக்கினான்.

‘யாரோ தெரிந்தவரின் குரல். அமானுஷயத்தின் குரல் அல்ல’ என்று நினைத்தாளோ என்னவோ கண்களைத் திறந்தாள். சக்தியை பார்த்தவுடன், தன்னையும் அறியாமல், தன்னருகே மண்டியிட்டிருந்தவனின் கைவளைவில் முகத்தைப் புதைத்துக்கொண்டு,

“அவங்கள போ சொல்லு சக்தி. என்கிட்ட வர வேணாம்ன்னு சொல்லு. அவங்கள எனக்கு பிடிக்கலன்னு சொல்லு சக்தி” என்று முகத்தை எடுக்காமல் கத்தினாள்.

ஆதரவாக அவளின் தலைமுடியை கோதியவன் கண்களில் சொல்லமுடியாத வலி. என்னசெய்வது என்று யோசிக்கும் நிலமையில் அவன் இல்லை. அவள் பட்டதெல்லாம் கண் முன்னே ஓடியது அவனுக்கு.

எப்படியாவது சரிசெய்தாக வேண்டும். இதிலிருந்து அவள் மீளவேண்டும் என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன் “மிது…மிது… ஒன்னும் இல்ல… பாரு யாருமே இல்ல இங்க… எழுந்து பாரு. இந்தா தண்ணி கொஞ்சம் குடி” என்று மெதுவாக அவளிடம் சொல்ல, அவளும் நிமிர்ந்து பார்த்தாள்.

அவனிடம் தண்ணீரை வாங்கி அவசரமாக பருகியவள், அங்கிருந்து எழுந்து சாமியின் முன் உட்கார்ந்து கவசம் சொல்ல ஆரம்பித்தாள்!! அவளையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் சக்தி.

சிறிது நேரத்தில் அவள் சோர்ந்து அப்படியே படுத்துவிட, அதைப் பார்த்தவன் அவளுக்கு தலையணை வைத்து, போர்த்திவிட்டுவிட்டு, கதவின் அருகே அப்படியே உட்கார்ந்துவிட்டான் அவளைப் பார்த்தவண்ணம். 

———————

தன் வாழ்க்கையின் கனமான கருப்புப் பக்கங்களை மிதுலா சொல்லி முடிக்க, ஆதவனுக்கும் மங்கைக்கும் நெஞ்சு பிசைந்தது.

அதை உணர்ந்துகொண்டவள், அவர்கள் மனநிலையை மாற்ற “மதியம் ஆயிடுச்சே. சாப்பிட வேணாமா? ஒரு பிரேக் விடுவோம். வாங்க” என்றழைக்க, எதுவும் சொல்லாமல் எழுந்தனர்.

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved