Preethi S Karthikவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள்

வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் – 18

நம்பகமான நீலம் – 4(3)

“என்ன மேடம் இப்படி சிரிக்கறீங்க. நெஜம்மா பாவம் அவரு” மறுபடியும் சக்திக்காக பரிந்து பேசிய மங்கையை பார்த்து மிதுலா, “ஆமாம் சக்தி ஸார் பாவம் தான். ஆனா நான் அதைவிட பாவம்… அவன் நினைச்சத சாதிச்சுக்கிட்டானே” புன்னகையுடன் சொன்னவள், பக்கங்களை திருப்ப ஆரம்பித்தாள்.

———————

சக்தி கோபித்துக்கொண்டு சென்றவுடன், அவள் மனதில் ‘கோவப்பட வேண்டியது நானு. இவன் ஏன் இவளோ பில்டப் தரான்… போ. கோவிச்சுட்டு போ… எனக்கென்ன’ என நினைத்தவள் வேறு எதிலாவது சிந்தனையை செலுத்த முயன்றாள்.

இருப்பினும் ‘ஏதாச்சும் தப்பா பேசிட்டோமா…? இவ்வளோ கோவப்பட… இல்ல இல்ல… என் மேல தப்பு இல்ல… விடு மிது யோசிக்காத’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

அடுப்படி சென்று ஏதோ உருட்டினாள்… வேலையும் இல்லை. எதை செய்யவும் நாட்டமில்லை.

‘அவனுக்கு கோவமே வராது. அவனுக்கே வருதுன்னா நான் பேசினது அவனை ஹர்ட் பண்ணிருக்கும்… ப்ச்… இருக்காதா மிது… அந்த கிழவன்கூட போய் சக்திய கம்பேர் பண்ணுவியா?’ நடந்துகொண்டே யோசிக்க, கால்கள் நின்ற இடம் அவன் வீட்டின் வாசல்.

கதவை தட்டி, திறக்கிறதா என்று பார்க்க, திறந்தது.

மெதுவாக உள்ளே எட்டி பார்த்த மிதுலா, சுற்றியும் அவனை தேட, அவனைப் பார்த்ததும் சிரித்துவிட்டாள். ஆனால் அவனுக்கு தெரிந்தால் தானே? கோபத்தில் உள்ளே வந்தவன், கோபத்துடனே தூங்கிவிட்டான் போல…

‘எழுந்ததும் பேசிக்கொள்ளலாம்’ என்று தன் வீட்டிற்கு வந்தவளின் மனதில் மாற்றத்தை உணர்ந்தாள்.

‘இந்த ரெண்டு நாள்ல எவளோ சேன்ஞ் என்கிட்ட. கோவம் வருது… வந்த உடனே போயிடுது. அடிக்கடி சிரிக்கறேன். மனசு ரொம்ப ரிலாக்ஸ்ட்டா இருக்கு. அட வீட்டுக்கதவு கூட பாதி நேரம் திறந்தே இருக்கே’ மனது யோசிக்கும் போது கண்கள் எதிர்வீட்டை பார்த்தது. மானசீகமாக நன்றி சொன்னாள் அவனுக்கு.

மதிய நேரமாக, அவன் கண்விழித்தான்.

‘ப்ச் தூங்கிட்டேனா… ரெண்டு நாள் சரியா தூங்கல…அதான்’ நினைக்கும்போதே மிதுலா நினைவுக்கு வந்தாள்.

‘கல்நெஞ்சக்காரி… பேசறதெல்லாம் பேசிட்டு வந்து கூட பாக்கல… நான் போய் அவளைப் பாக்கக்கூடாது. அவளா வந்து சாரி கேட்டா தான் பேசணும்’ அறிவு அறிவுறித்தினாலும் மனது சொல்லும்படியே கால்கள் நகர்ந்தன.

அவள் வீட்டு வாசலில் அவன் நிற்க, அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள். அவள் மேல் கோபமிருந்தாலும், அவளின் மலர்ந்த முகம் அவன் கோவத்தை மட்டுப்படுத்தியது.

இருப்பினும் அவன் உள்ளே செல்லாமல் முகத்தை வேறு புறம் திருப்பிக்கொள்ள, அவனருகில் வந்தவள் “என்ன நல்ல தூக்கமா…? நைட் தூங்கலன்னா இப்படி தான். கோவத்துல கூட தூக்கம் வரும்” என கிண்டல் செய்ய, திரும்பி அவன் வீட்டிற்கு செல்ல எத்தனித்தான்.

அவன் கையைப் பற்றி தடுத்தவள் “சரி சரி கோபம் வேணாம். சாரி… நான் பேசுனது தப்புதான். மன்னிச்சுடு” என சொல்ல, அவள் பக்கம் திரும்பியவன், அவளின் கெஞ்சலான முகத்தைப் பார்த்ததும் கோபமாவது ஒன்னாவது… அனைத்தும் பறந்தது.

இருந்தும் காரியத்தில் கண்ணாக “நான் உன்ன மன்னிக்கனும்னா… நான் சொல்றத நீ கேட்கணும்” சீரியஸ்’ஸாக அவன் கேட்க, பதில் பேசாமல் அவனையே பார்த்து நின்றாள்.

“நீ சரிபட்டு வர மாட்ட” என அவன் திரும்பி செல்ல “சொல்லித்தொலை. கேட்கறேன்” எரிச்சலுடன் பதில் வந்தது.

அவள் பக்கம் திரும்பி பற்களை காட்டி சிரித்தவன் “தேங்க்ஸ். என்னன்னு அப்பறம் சொல்றேன். செம்ம வாசனையா இருக்கே… என்ன சமைச்சுருக்க? உனக்கு சமைக்கலாம் தெரியுமா?” கேட்டுக்கொண்டே அவள் வீட்டினுள் சென்றான்.

ஏனோ அவனுடனான இந்த சம்பாஷணை… அவளுடன் அவன் இருப்பது… அவன் கேட்கும் எதையும் செய்யலாம் என்றே தோன்றியது அவளுக்கு.

“பெருசா தெரியாது. கிறிஸ்டிக்கா கொஞ்சம் கொஞ்சம் சொல்லி கொடுத்திருக்காங்க. அதுதான்” என்றவள் அவனுக்கு தட்டில் உணவு பரிமாறினாள். அவளையும் உட்காரச்சொல்லி இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

“சரி இப்போ சொல்லு… டாக்டர் கிட்ட போறதுக்குத்தானே என்ன சொன்னாலும் கேட்கணும்ன்னு சொன்ன” நேரடியாக கேட்க, அவன் ஆம் என்பது போல் தலையசைத்தான்.

“என்னால முடியாது…” அவள் முடிக்கும் முன் “உன்ன நம்பி ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்க எதிர்காலத்துக்கு நீ ரொம்ப முக்கியம். இத சொன்னதுக்கு நீ அந்த கிழவனோட திரும்ப என்ன கம்பேர் பண்ணாலும் ஒகே. பட் எனக்கு நீ கண்டிப்பா செக்கப் வரணும்” என அவன் சொன்னது ‘நீ வந்தாகவேண்டும்’ என்ற தொனியில் இருந்தது.

அவனை அவள் முறைக்க “அதுகூட இன்னொன்னும் இருக்கு. அது நாளைக்கு சொல்றேன். இன்னிக்கி டாக்டர்’ட்ட போலாம்”

“அதென்ன இன்னொரு விஷயம்? இங்கபாரு சக்தி… நீ என்ன ரொம்ப டார்ச்சர் பண்ற… சொல்லிட்டேன்” ஒற்றை விரல் நீட்டி மிரட்ட “உனக்கு பிடிக்கும் கண்டிப்பா…” என்றான் கண்கள் மின்ன.

“தனியா… நிம்மதியா இருந்தேன். எல்லாம் போச்சு. எனக்கும் நிம்மதிக்கும் ரொம்ப தூரம் போல” அவள் புலம்பிக்கொண்டிருக்க அவனோ நன்றாக உண்டுகொண்டிருந்தான்.

“தின்னு நல்லா தின்னு. இந்தா..” என்று பற்களை கடித்துக்கொண்டு அவன் தட்டில் இன்னமும் சாதம் வைக்க “அந்த சாம்பார் கொஞ்சம் போடு” என்றான் ‘உன் கோவம் என்னை ஒன்றும் செய்யது’ என்பதுபோல்.

மாலை நேரம், டாக்ஸி புக் செய்துகொண்டு டாக்டர்ரை பார்க்க இருவரும் சென்றிருந்தனர்.

அவளிடம் நடந்ததனைத்தும் கேட்டறிந்துகொண்டார் அந்த மனநல மருத்துவர்.

“சோ உங்களுக்கு எல்லார்கூடவும் பழக கஷ்டமா இருக்கா… இல்ல, ஆண்கள் மேல மட்டும் கோவமா?” மருத்துவர் கேட்க

மிதுலா, “யார்கூடவும் பேசமாட்டேன்னு இல்ல. எனக்கு தேவைன்னா மட்டும் பேசுவேன். தேவையில்லாம யார்கூடவும் பேச பிடிக்காது டாக்டர்”

அதற்கு டாக்டர் “அப்போ ஜென்ட்ஸ் கூட பேசறது உங்களுக்கு ப்ரோப்லம் இல்ல. கரெக்ட்?”

“நம்பிக்கை இருந்தா மட்டும் பேசுவேன். அதுகூட ரொம்ப இல்ல. நம்பிக்கை அவளோ சீக்கரம் யார்மேலயும் வராது. எங்க அட்வான்டேஜ்  எடுத்துட்டு என்னோட பாஸ்ட் கூட லிங்க் பண்ணி என்ன பாப்பாங்களோன்னு பேச பிடிக்காது” என்றாள் மிதுலா.

“நைட் தூக்கம் டிஸ்டர்ப் ஆகுதா?” அந்த டாக்டர் கேட்க

“எஸ். நல்லா தூங்கறப்ப…” சற்று தயங்கி “முன்னெல்லாம்… நைட்… தூங்க முடியாது…  கூட யாராச்சும்… இருந்துட்டே…” வார்த்தைகள் பேசமுடியாமல் மனதில் அழுத்தம் ஏற்பட, கண்ணிமைகள் அங்கும் இங்கும் அலைந்தது. 

டாக்டர் அவளிடம் “முன்னாடி நடந்ததெல்லாம் இப்போ நடக்கற மாதிரி தோணும் இல்லையா?” அவள் சொல்ல கஷ்டப்படுவதை அவர் சொல்லிமுடிக்க, ஆம் என்பது போல் தலையசைத்தாள்.

“ஹ்ம்ம்… நல்லா யோசிச்சு சொல்லுங்க… இதுக்கு முன்னாடி எதுக்கு இந்த வாழ்க வாழணும்ன்னு நினச்சுருக்கீங்களா?” அவர் கேட்க

“யோசனை வரும். ஆனா அத பெருசா எடுத்துக்க மாட்டேன். பசங்க இருக்காங்க என்ன நம்பி. என் வாழ்க மாதிரியோ… இல்ல அவங்க அம்மா வாழ்க மாதிரியோ ஆயிடக்கூடாது. அவங்க நல்லா வாழனும். கண்டிப்பா நான் அவங்களுக்காக இருப்பேன்”

அவளுக்கு கொன்செலிங் செய்துவிட்டு, கொஞ்சம் அலுப்பாக இருந்ததால், அவளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு சென்றார்.

சக்தி அவரை சென்று பார்க்க “அவங்க கூட பேசினேன். நீங்க பயப்படற அளவுக்கு ரொம்ப மோசம் இல்ல. நீங்க லாஸ்ட் டைம் சொன்னதை எல்லாம் வெச்சு நான் Schizophrenia’யாவா இருக்க வாய்ப்பு இருக்குன்னு நெனச்சேன்”

“பட் அவங்க பேசறது சில விஷயம்… ரொம்ப கிளியர்’ரா பேசறாங்க. அவங்க குழப்பத்துல இல்ல. அவங்க ஃலைப் எய்ம் என்னன்னு நல்லா தெளிவா சொல்றாங்க”

“துல்லியமா எதுனால அவங்களுக்கு இப்படி ஆகுதுன்னு சொல்லனும்னா, அவங்க பாஸ்ட்… அவங்கள ரொம்ப தொந்தரவு பண்ணுது. இது வரைக்கும் பேசினதை வெச்சு பாக்கறப்ப மே பி… PTSD’ன்னு சொல்ற Post Traumatic Stress Disorder’ரா இருக்கலாம்”

“பழைய வாழ்க்கைல நடந்த சம்பவங்கள், எஸ்பெஷல்லி நைட் அவங்களுக்கு நடந்த, அவங்களுக்கு விருப்பமில்லாத சம்பவங்கள், ஆழ் மனசுல பதிஞ்சிருக்கலாம். அதனோட தாக்கம் தான் நைட் அவங்க தூக்கத்துல டிஸ்டர்ப் ஆகிறது”

“Nightmare disorder இல்ல Night terror இதுல ரெண்டுல ஏதாவதா இருக்கலாம். இது ரெண்டும் PSTD கூட சம்மந்தப்பட்டது. அந்த ஞாபகங்கள் வரப்ப, அவங்க தூக்கம் தடைபடும். யாரோ அட்டாக் பண்ற ஃபீல் இருக்கும்”

“அதோட இன்னும் கொஞ்சம் சிம்டம்ஸ் சொல்லனும்னா, எல்லாம் முடுஞ்சுபோச்சுண்ணு நினைப்பாங்க”

“சாதாரணமான வாழ்க்கை சாத்தியமே இல்லன்னு நினைப்பாங்க. மூட் ஸ்விங்ஸ் நிறைய இருக்கும். திடீர்ன்னு நல்லா பேசுவாங்க. அடுத்த நிமிஷமே கோவமாயிடுவாங்க. இல்ல சோகமாயிடுவாங்க.”

அவர் அந்த குறைபாட்டை பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்துகொள்ள, அனைத்தையும் பொறுமையாக கேட்டான் சக்தி.

“அவங்கல முக்கியமா தனியா இருக்க விடவேணாம். கூட யாராவது இருந்துட்டே இருந்தா அவங்க தனிமைய உணர மாட்டாங்க. நைட் கூட அவங்க பீஸ்ஃபுல்லா தூங்க ஏற்பாடு பண்ணுங்க” என்றவர் சில அறிவுரைகளை கூறினார்.

“அப்பறம் அவங்களுக்கு Cognitive Processing Therapy சொல்ற வீக்லி தெரபி மொதல்ல கொடுப்போம். அதுல முன்னேற்றம் தெரியலன்னா அடுத்து என்னன்னு பாக்கலாம். அவங்க வரமுடியாதுன்னு சொல்லலாம் பட் கூட்டிட்டுவர்றது உங்க பொறுப்பு” என்று புன்னகைத்தார்.

இருவரும் மருத்துவமனையில் இருந்து புறப்பட “மொத்தத்துல நான் பைத்தியம்ன்னு முடிவு பண்ணிட்டல சக்தி. இன்னும் என்னென்ன பண்ணனும்ன்னு பிளான் வெச்சுருக்க?” கோவமாக வந்து அவள் வார்த்தைகள்.

டாக்டர் சொன்னது நினைவிற்கு வர, ‘பொறுமையாக இருக்க வேண்டும்’ என்று தனக்கே சொல்லிக்கொண்டான்.

“நீ தான் சொல்ற பைத்தியம்ன்னு. ஆனா நீ முழிக்கறத பாத்தா எனக்கு என்னமோ உன்ன பேய் அடிச்சிருச்சோன்னு தோணுது” வருத்தப்படுவது போல் சொன்னவன்

“காலைல உன்ன மசூதிக்கு கூட்டிட்டுப்போய் மந்திரிச்சு கூட்டிட்டு வரலாம்ன்னு பிளான்” என்றான் முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு!!!

———————

மங்கை சிரிப்பைக் கட்டுப்படுத்தமுடியாமல் சிரித்தாள். அதைப் பார்த்த மிதுலா அவளை பார்த்து போலியாக முறைத்தாள் இதழில் புன்னகையுடன்.

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved