வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் – 24
பசுமையின் புத்துணர்ச்சி – 5(4)
மிதுலா மங்கையின் வருத்தத்தை பார்த்து புன்னகைத்துக்கொண்டே ” எல்லாமே சொல்லித்தான் தெரியணும்ன்னு இல்ல மங்கை. சொல்லாமலே ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுட்டோம்” என புன்னகையுடன், மிதுலா விட்ட இடத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்தாள்.
———————
அடுத்தநாள் சக்தி தெளிவாக இருந்தாலும், மிதுலாவின் முகம் சற்று கலங்கியே இருந்தது. அவளுக்குள்ளும், அவனுக்கு தோன்றிய அதே எண்ணங்கள் தோன்றியிருக்கும் என நினைக்கவில்லை அவன்.
முன்பு அவன் தயங்கினான்; வண்டியில் அவளை ஏற்ற… இப்போது அவளுக்கு தயக்கம்; வண்டியில் ஏற.
இருந்தும் எதையும் காட்டிக்கொள்ளாமல் ஏறி உட்கார்ந்துகொள்ள, வண்டியை எடுத்தான் எப்பொழுதும்போல் கண்ணாடியை சரி செய்யாமலேயே. பழகிக்கொள்ளவேண்டும் என்று!!
இதுவரை அவன் மாறுதல்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தவள் இப்போது அதை கவனிக்க எண்ணி, கண்ணாடி வழியே அவனை எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தாள். அவனைப் படிக்க.
ஆனால் அவனோ, ‘எங்கே தன் முகம் தன் எண்ணங்களை அவளுக்கு காட்டிவிடுமோ… அதனால் தன்னை விட்டு, செய்ய நினைத்ததையெல்லாம் விட்டுவிட்டு சென்று விடுவாளோ…’ என்று பயத்தில் அவளைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தான்.
ஒருவழியாக டேகேர் வந்துவிட, அவன் அவளைப் பாராமல் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
அவன் பட்டும் படாமல் பேசுவது ஏனோ மிகவும் கஷ்டமாக இருந்தது மிதுலாவிற்கு.
‘கண்டிப்பாக தான் செல்வதால் தான் இந்த மாற்றம்’ என்று புரிந்தது. ஒருவேளை அவனை விட்டு கொஞ்ச நாள் பிரிந்து சென்றால் அவன் அதை பழகிக்கொள்வான் என்று என்னென்னவோ நினைத்தாள்.
அன்று மதியம் அவளை அழைத்துச்செல்ல வந்தவன், ப்ரியாவுடன் நன்றாகப் பேசுவதைப் பார்த்தாள். தன்னிடம் காலையில் இருந்து சரியாக பேசவில்லை… ஆனால் இப்போது பேசமுடிகிறதோ… என்று கோவம் வேறு அவன்மேல் கொண்டாள்.
அவளை வீட்டிற்கு அழைத்துவந்தவன், அவள் பார்த்துவைத்திருந்த யூனிவெர்சிடியின் டீடெயில்ஸ் எடுத்துவந்திருந்தான்.
“மிது… யூனிவர்சிட்டி’ல அட்மிஷன் ஓபன் ஆயிருக்கு. நெஸ்ட் மந்த்ல ஒரு பேட்ச் ஆரம்பிக்கறாங்க. ஒரு வருஷம்… சீக்கரம் அப்ளை பண்ணிடலாம்” என்றவன்
“நம்ம NGO’வுக்கு லண்டன்’ல இருந்து நிதி உதவி பண்றவங்கள காண்டாக்ட் பண்ணேன். நல்ல யூனிவர்சிட்டி’ன்னு சொன்னாங்க. ஆனா காலேஜ் ஹாஸ்டல்ல இடம் கிடைக்கறது கஷ்டமாம்”
“அவங்கள வெச்சே ஒரு மேன்ஷன்’ல தங்கறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். அவங்க, நீ அங்கப்போய் இறங்குறதுல இருந்து பார்த்துக்கறோம்ன்னு சொல்லிட்டாங்க” என்று நிறுத்த, அவன் பேசுவதையே பார்த்திருந்தாள் மிதுலா.
அவள் தலையில் செல்லமாக குட்டியவன் “இனி அப்ளை பண்ணவேண்டியதுதான் பாக்கி. அத முடுச்சுட்டா… மிது படிக்க பறந்துடலாம்” அவள் கண்களை பார்க்க, ஏனோ வலித்தது அவனுக்கு. தன்னை விட்டு செல்கிறாள் என்ற வருத்தம்.
தனக்கு விருப்பமானது எதுவோ தன்னைவிட்டு செல்வதுபோல் வலி. நிற்க முடியவில்லை.
“மிது… ஒரு அஞ்சு நிமிஷம். வந்துடறேன்” என்று அங்கிருந்து நகர்ந்தான்.
‘சொல்லமட்டுமே செய்தேன் இங்கு படிக்கவேண்டுமென… அதற்குள் அனைத்தையும் முடித்துவிட்டு வந்து நிற்கிறான்…”
‘தனக்காக ஒன்றொன்றையும், பார்த்த நாள் முதல் பார்த்துப் பார்த்து செய்கிறான்… இவனைப் போல் ஒருவன் வாழ்க்கையில் வந்ததற்கு என்ன தவம் செய்தேனோ….’ அவளின் மனம் அவன் பின்னால் ஓடியது.
அதை பிடித்து வைத்தவள் ‘அவன் உன் வாழ்க்கையில் இருப்பது உனக்கு கிடைத்த வரம். ஆனால் உன்னைப் போல் ஒரு பெண்ணை அவன் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டால் அது அவனுக்கு சாபம்’
‘போதும். அவன் நன்றாக இருக்கவேண்டும்’ என தனக்குத்தானே கடிவாளமிட்டுக்கொண்டாள் அவன் பின்னே மனம் செல்லக்கூடாது என்று.
பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து, அவளின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில் அவள் பயணிக்கப் போகிறாள். இருவரின் மனமும் ஒரே சிந்தனையில் கனத்தது.
முன்பு அவள் பார்க்காதபோது அவளைப் பார்த்தான் அவன். இப்போது அவளின் முறை ஆயிற்று. அவனின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் மனதில் ஏற்றிக்கொண்டாள்.
இருவரும் அவளுக்குத் தேவையான உடை மற்றும் சில பொருட்களை வாங்க சென்றிருந்தனர்.
அந்த துணிக்கடையில் அவளுக்கு உடைகள் எடுக்கும்போது, அவனுடன் பணிபுரியும் பெண்ணை அங்கே பார்க்க, மிதுலாவிடம் சொல்லிவிட்டு பேசச்சென்றான்.
அங்கிருந்த ஒரு டேபிள் மேல் சாய்ந்துகொண்டு அவன் அவளுடன் பேசிக்கொண்டிருக்க, மிதுலா உடைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவ்வப்போது அவனையும் பார்க்க, அவனின் அந்த சிரித்த முகம்… ‘ஏன் தன்னிடம் சில நாட்களாக இப்படி மனம்விட்டு சிரித்துப் பேசாமல் இருக்கிறான்’ என்று வருந்தினாள்.
முதல் முறை இத்தனை நாட்களில்… ஏன் வருடங்களில்… இல்லை முதல் முறை என்று கூட சொல்லலாம்… ஒரு ஆண்மகனை ரசிப்பது. கடந்து வந்த நாட்கள், ஆண்மகன்களை ரசிக்கும் போக்கில் பார்க்கவிடவில்லை. ஆனால் இன்று ஆராய ஆரம்பித்தாள்!
அளவான உயரம்… சற்று கூடுதலான மாநிறம். தீர்க்கமான, யாரையும் நேர்ப்பார்வை பார்க்கும் கண்கள்… ஆனால் மற்றவர்களை வசீகரிக்கும் பார்வை… சிரித்தால் அழகாக கன்னத்தில் விழும் சின்ன குழி… அவன் நிறத்தைவிட சற்றே கூடுதல் நிறத்துடன் வளர்ந்த மீசை… சிலநாள் வெட்டப்படாமல் முகவாயை மறைத்த தாடி… சீராக வாரப்பட்ட அடர்த்தியான சிகை… பார்ப்பதற்கு அக்மார்க் தமிழ்மகன் போல இருந்தான்.
தலைசாய்த்து அவனை ரசித்தாள்… ஒரு ஏக்கப்பார்வையுடன்… எட்டாக்கனியை பார்ப்பதுபோல்.
பேசிக்கொண்டிருந்த பெண்ணோ, பார்க்க அவ்வளவு லட்சணமாக இருந்தாள். உயர்தட்டுப் பெண் போல தோற்றம். இப்படிப்பட்ட பெண்களுடன் நட்பு கொண்டவன், தன்னைப்போல் ஒருத்தியிடம் அக்கறையாக இருப்பதை நினைத்து மனது அவனை மெச்சினாலும் தன்னை நினைத்து வெட்கிப்போனாள்.
என்னதான் தகுதியை உயர்த்திக்கொண்டாலும், தன் இழுக்கான கடந்தகாலம் தன்னை அவனிடம் இருந்து பிரித்துக்கொள்ள நினைத்தது.
ஆசைகள் சுமந்த இதயத்தைத் தானே கத்தியால் கிழித்துக்கொண்ட உணர்வு. இதுவரை அனுபவிக்காத வலி. உடலில் அல்ல. குத்தப்பட்ட இதயத்தில்.
அவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவன், அவள் முகம் மாறுபடுவதை பார்த்து, பேசிக்கொண்டிருந்தவளிடம் சொல்லிக்கொண்டு மிதுலாவிடம் வந்தான்.
கண்கள் லேசாக கலங்கியிருந்தது. “மிது… என்ன ஆச்சு?” பதட்டத்துடன் வந்தது அவன் வார்த்தைகள். “கிளம்பலாம் சக்தி” என்றாள் அவன் முகம் பாராமல். அங்கிருந்தும் வெளியே சென்றுவிட்டாள் எடுத்துவைத்த துணி எதையும் எடுக்காமல்.
சிலநிமிடங்கள் கழித்து வெளியே வந்தான் சக்தி.
அவள் வெளியே வானத்தை வெறித்து பார்த்து கண்கலங்கி நிற்க, அந்த கோலம் அவனை வெகுவாக வருத்தியது. ஓடிச்சென்று, அவளை ஆரத்தழுவி “நான் இருக்கிறேன். எதற்காக வருந்துகிறாய்” என்று சொல்ல மனம் ஏங்கியது.
அவள் அருகே சென்றான். கைகள் துடித்தது. முன்புபோல் இருந்திருந்தால் யோசித்திருக்க மாட்டான். ஆனால் இப்போது, அவள் தன் மனதில் இருக்கும்போது, தன் ஒவ்வொரு செயலையும் யோசித்தே செய்தான்.
அவனையே கட்டுப்படுத்திக்கொண்டு “மிது…” என்றழைக்க “போலாமா சக்தி. பைக் இங்க எடுத்துட்டு வரையா? இல்ல பார்க்கிங் போலாமா?” அவனைப் பாராமல் எங்கோ அலைபாய்ந்த கண்களுடன் அவள் கேட்க, அது இன்னமும் அவனை நோகடித்தது.
“நீ இரு மிது” என்றவன் கால்கள் பரபரத்தது. கைகளில் நடுக்கம். அவசரமாக ஓடிச்சென்று வண்டியை எடுத்தான். அவள் முன் வந்து நிற்க, எதுவும் பேசாமல் ஏறிக்கொண்டாள்.
அவள் பேசவேயில்லை. அவனும் பேசவில்லை. அடுத்த நாள், ஏனோ மனம் சரியில்லாததால் வீட்டிலேயே இருந்துகொண்டாள்.
மதியம் வீட்டிற்கு வந்தவன் கைகளில் துணிப்பை. அவள் அவனை பார்க்க “நேத்து எடுத்துட்டு, வாங்காம வந்துட்ட. அதுதான்” என்று அதை அவளருகே வைத்துவிட்டு அவன் வீட்டிற்கு சென்றான்.
அவனுக்கும் எங்கே அவளிடம் மனம்விட்டு பேசினால், தவறாகிவிடுமோ… என்று எண்ணி தள்ளியே இருந்தான்.
அவனின் ஒவ்வொரு செய்கையும் அவளை வெகுவாக தாக்கியது. விடவும் முடியாமல், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தவித்தாள். அதே நிலை தான் சக்திக்கும்.
ஒரு வாரம் ஓடியது. அவள் செல்லும்நாள் வந்தது. இருவரும் ஒரே மனநிலையில் இருந்தனர். அவர்களின் மனதில் இருப்பதை தெரியப்படுத்த முடியாமல், தற்காலிகமாக பிரிந்தனர்.
மிதுலாவின் அடுத்த பயணம் ஆரம்பித்தது!!!
———————
“போங்க மேடம். ரெண்டு பேரும் எப்போ தான் மனசுல இருக்கிறத சொல்லுவீங்க” மங்கை சலித்துக்கொள்ள, “சிலவிஷயங்கள் சொல்லாமல் இருக்கிறதே நல்லதுன்னு நினச்சேன் மங்கை” என்றாள் பதிலுக்கு. முகம் வெறுமையை பூசிக்கொண்டது.
