வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் – 26
இளகிய இளஞ்சிவப்பு – 6(2)
இருவரும் அவளையே பார்க்க, மிதுலா, அவர்கள் பார்ப்பதின் பொருளை புரிந்துகொண்டாள். அவளே நடந்ததை புரட்ட ஆரம்பித்தாள்.
———————
தீடீரென ஏதோ நினைவிற்கு வர அவனிடம் இருந்து விலகியவள், “இதுக்கு தான் நீ கொஞ்ச நாளா கூப்பிடலையா?” இடுப்பில் கைவைத்துக்கொண்டு முறைக்க, புன்னகையுடன் ஆம் என்றான்.
“நீ போன் பண்ணலன்னு கோவமா இருந்தேன்” முறைத்துக்கொண்டு அவள் சொல்ல “அதான் பாத்தேனே. நீ கோவமா இருக்கேன்னு” என்றான் இதழோரம் புன்னகையுடன். அவள் சற்றுமுன் புலம்பியதை மனதில்வைத்து சொன்னான்.
‘அனைத்தையும் கேட்டுவிட்டானோ’ நாக்கைக் கடித்து தலையில் அடித்துக்கொள்ள, “போன் பண்ணா எடுக்கமாட்டாங்களாம். ஆனா பண்ணலன்னு மட்டும் கோவம் வருமாம்” ‘என்ன நியாயம் இது’ என்பது போல் பார்த்தான்.
“அது… வந்து… ஆமா… நான் எடுக்கலனாலும் நீ போன் பண்ணனும். தனியா இருக்கேனேன்னு தோணுச்சா” விடாமல் வாய்க்குவந்ததை அவள் பேச…
“நானும் அங்க தனியாத்தானே இருந்தேன். ஆனா நீ போன் அட்டென்ட் பண்ணவே இல்ல” வருத்தத்துடன் அவன் சொல்ல, அன்று அவன் பேசியது அனைத்தும் நினைவிற்கு வந்தது.
‘இனி அவன் மனதில் இந்த மாதிரி நினைப்பு வரக்கூடாது என்று தானே பேசாமல் இருந்தேன். இது என்ன… அவன் வந்ததும் நானே போய் விழுகிறேன். பாவி மனம்’ என்று மனதை திட்டினாள்.
அவள் பதில் பேசாமல் எதையோ யோசிக்கிறாள். இன்னமும் யோசிக்கவிட்டால் பிரச்சனை என்றுணர்ந்தவன் “கொஞ்சம் காஃபி கிடைக்குமா. ட்ராவல் பண்ணதுல ஒரே தலவலி” அவளின் சிந்தனை ஓட்டத்தை தடைசெய்தான்.
அவன் நினைத்தது வேலை செய்தது. அவள் அந்த சிந்தனையில் இருந்து விடுபட்டு…. “இரு… ரெண்டு நிமிஷம்” என்று பரபரப்பாக போட ஆரம்பித்தாள். சில நாட்களாக பேசாததை, சேர்த்து வைத்து இருவரும் வாயாடிக்கொண்டிருந்தனர்.
“இவளோ செலவு பண்ணி வரணுமா சக்தி? கஷ்டப்பட்டு சம்பாரிச்ச பணத்தை எதுக்கு வேஸ்ட் பண்ணனும்” ‘உன்னை பார்க்கத்தான் இவ்வளவும்’ என்று அவன் சொல்லும் வார்த்தைகளைக் காது குளிர கேட்கவேண்டும் என்ற ஆசையில் கேட்டாள் அவனிடம்.
அவள் அருகில் வந்தமர்த்தவன், அவள் கையை எடுத்து விரல்களுக்கு சொடுக்கெடுத்தபடியே…
“ப்ச். பணம் எப்பொவேணும்னாலும் சம்பாதிச்சுக்கலாம்… உன்ன பார்க்க முடியாம, உன்கூட பேச முடியாம… மரண வலி மிது… எங்க உன்ன பாக்காமலேயே, மனசு அழுத்தமாகி போய் சேர்ந்துடுவேனோ…” அவன் முடிக்கும் அவன் வாயை பேசவிடாமல் கைகளால் மறித்தாள்.
முகத்தை இடமும் வலுமாக ஆட்டினாள் ‘இப்படி பேசக்கூடாது’ என்பது போல்.
திடீரென மௌனம் நிலவியது. கண்கள் பேசிக்கொள்ளும் இடத்தில் வாய் வார்த்தைகளுக்கு என்ன வேலை? அவள் கண்களில் காதலை நேராகக்கண்டான்.
இருவரும் காதலில் திளைத்திருக்கும் வேலையில், அழைப்பு மணி சத்தத்தில், “அச்சோ யாரோ வந்துருக்காங்க…” என்று அவன் பார்வையில் இருந்து தப்பித்து கதவின் பக்கம் ஓடினாள்.
அங்கே அவளை முதல் நாள் ஏர்போர்ட்டிலிருந்து அழைத்துவந்தவர், வந்திருந்தார் சக்தி வருவதை அறிந்து.
அவரை வரவேற்று உள்ளே அழைத்தாள் மிதுலா. பின் மூவரும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, அவரிடம் சக்தி தான் இன்னும் மூன்று நாளில் கிளம்புவதாக சொன்னான்.
மிதுலாவின் முகவாட்டம் அப்பட்டமாக தெரிந்தது. அதை காட்டிக்கொள்ள மனமில்லாமல் உள்ளே சென்றாள்.
வந்திருந்தவர் சென்றவுடன், அவளின் முகவாட்டத்தை புரிந்துகொண்டு அவளை கிளப்பி வெளியே அழைத்துச்சென்றான். இருவரும் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தனர்.
அவள் படிப்பதை பற்றி வெகு நேரம் அவனிடம் பேசினாள். அதுவெல்லாம் அவன் காதுகளை அடைந்ததா…? தெரியவில்லை… அவளையே பார்த்திருந்தான்.
தலையை ஆட்டி ஆட்டி அவள் பேசும்போது, அதனுடன் அசையும் பின்னப்படாத கூந்தல்… அவ்வப்போது அது காற்றில் பறப்பதை அவள் கைகளுக்குள் கொண்டுவருவது. கொஞ்சிக் கொஞ்சி பேசும் இதழ்கள், அதை வழிமொழியும் காந்த கண்கள்… கொஞ்சமே கொஞ்சம் பூசினாற்போல இருக்கும் கன்னங்கள் என அவளை முற்றிலுமாக ரசித்துக்கொண்டிருந்தேன்.
பயணச்சீட்டை சரிபார்க்க வந்தவரிடம் அவள் அதை காட்டிவிட்டு திரும்புகையில், பக்கவாட்டில் ஒரு ஜோடி, இதழ்களால் இணைந்திருப்பதைப் பார்த்து ஒரு க்ஷணம் அவளையும், சக்தியையும் நினைத்துப்பார்த்தாள்.
திடீரென கன்னத்தில் யாரோ இதழை ஒற்றி எடுத்ததுபோல் உணர்ந்தவள், சட்டென திரும்பி சக்தியைப் பார்த்தாள். அவன் ஜன்னல் பக்கம் பார்த்திருந்தான்.
இதழ் தொட்டதாக எண்ணிய கன்னத்தைத் தன் தோள்களில் துடைத்துக்கொண்டவள் ‘இது கனவா நிகழ்வா? ச்ச… கனவு கண்டு கண்டு, எது நடந்தது எது கனவுன்னு கூட சொல்லமுடியாத நிலமைல இருக்கேனே’ என தலையில் அடித்துக்கொண்டாள்.
இது அனைத்தையும் ஓரக்கண்ணால் சக்தி பார்த்திருந்தான். அவனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. அவள் அந்த ஜோடியை பார்த்த நொடி, அவள் முகத்தில் தெரிந்த அந்த மாற்றம்… அதை பார்த்ததும்…
அவள் அறியும் முன்… அவள் கன்னத்தில் ஒரு சின்ன முத்தத்தை பதித்துவிட்டான்…
அவள் கன்னத்தை மீண்டும் மீண்டும் தொட்டுத்தடவிப் பார்த்தாள்.
‘உண்மையாகவே அவன் தந்திருப்பானோ?’ அந்த எண்ணமே அவளுக்கு வெட்கப்புன்னகையை தர, ‘அவள் என்ன உணர்கிறாள்?’ என்பதை தெரிந்துகொள்ள நினைத்தவன் “அங்க என்ன இருக்கு? சும்மா துடைசுட்டே இருக்க?” கள்ளப்புன்னகையுடன் கேட்டான்.
அவனை ‘நம்புவதா? வேண்டாமா?’ என யோசித்தாள்.
இருந்தும் அவன் எதுவும் செய்யவில்லை என்றால், தன் மனஓட்டம் அவனுக்கு தெரிந்துவிடும் என்று நினைத்து “ஒன்னுமில்ல. ஏதோ வந்து உக்கார்ந்தமாதிரி இருந்துச்சு” என்று சொல்லிவிட்டு தலையை குனிந்துகொண்டாள்.
அவளின் அந்த யோசனையான முகத்தை கூட ரசித்தான்.
அதன் பின் இரண்டு நாட்கள் முழுவதும் இருவரும் ஊர் சுற்றினார்கள். நிறைய நிறைய ஆசைதீர பேசினார்கள். ரசிப்பது அவன் வேலை மட்டுமில்லை, ‘என்னாலும் முடியும்’ என்று அவனின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்தாள்.
‘இவனுடன் காலம் முழுக்க இருக்க ஆசை. ஆனால் அது தண்ணீரில் எழுதப்படும் ஆசைபோல’ என்பதையும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
‘இன்னமும் கொஞ்ச நேரம் தான் இருக்கப்போகிறான்’ என்பது அவளுக்கு மிகுந்த சோகத்தை தந்தாலும், இங்கே இருப்பது தேவையில்லாமல் மனதை யோசிக்கச்செய்யும் என்று நினைத்தாள்.
அவள் நினைத்ததுபோல் அவனும் அதையே நினைத்திருந்தான். ஆனால் அவளிடம் சொல்லிவிடவேண்டும் என முடிவெடுத்திருந்தான்.
“மிது… உன்கிட்ட பேசணும்… மனசுவிட்டு…” வார்த்தைகளை கஷ்டப்பட்டு கோர்த்து சொன்னதுதான் தாமதம்…
“சக்தி… டைம் ஆச்சு… எவளோ நேரம் சாப்பிடாம இருப்போம்? நான் போய் ஏதாச்சும் ரெடி பண்றேன்” என்று ‘அந்த பேச்சை அவன் எடுக்கக்கூடாது’ என நினைத்து எழுந்து சென்றுவிட்டாள்.
அவள் பின்னாலேயே அவன் சமயலறைக்கு சென்றான்.
அவள் பின்னல் நின்றுகொண்டு “மிது… உனக்கு தெரியும் நான் என்ன பேசவறேன்னு. நீ வேணும்னே அவாய்ட் பண்ற. நான் பேசியே ஆகணும்” என்றான் விடாமல் அவனும்.
அவள் பதில்பேசவில்லை. அவளை தோள்தொட்டு தன் புறம் திருப்பினான். அவன் முகம் பார்ப்பதை தவிர்த்தாள்.
அவளின் முகவாயை திருப்பி தன்னை பார்க்கவைத்தவன், “உன் மனசோட பிரதிபலிப்பு… இந்த கண்ணு… இது எனக்கு ஆயிரம் விஷயம் சொல்லுது மிது…” அவளின் கண்களை ஊடுருவினான்.
இதுபோல ஒருவனை எப்படி வேண்டாம்மென சொல்லமுடியும். எதுவும் பேசமுடியவில்லை.
கண்கள் கலங்கியது. அவனை பார்க்காமல் மூச்சை ஆழஇழுத்து கண்களை மூடிக்கொள்ள, சொட்டு நீர் வெளியே வந்தது.
அதை வரவிடாமல் அவளை அவன் மேல் சாய்த்துக்கொண்டான். சில நொடிகளில், அவன் சட்டையையும் தாண்டி, அவள் கண்ணீர் அவன் இதயத்துடிப்புடன் கலந்தது.
அவனுடைய அணைப்பில் அவனுக்குள் புதைந்துகொண்டாள். அவளை உச்சி நுகர்ந்து, நெற்றியில் முத்தமிட்டான்.
ஒரு ஆணின் முத்தத்தில் இவ்வளவு கண்ணியம் இருக்கும் என்று அன்றே உணர்ந்தாள். முதல் முறை ஒரு ஆணின் தீண்டலில் சிலிர்த்தது அவளில் உடல். சுகமாய் உணர்ந்தாள்.
இந்த அரவணைப்பு ஆயுசுக்கும் கிடைத்தால்? ‘அனைத்தையும் மறந்து அவனுடனான வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளலாமா?’ என்ற எண்ணம் முதல் முதலாக மனதில் தோன்றியது…
அனைத்தும் சில நிமிடங்களே… அந்த தீண்டல்… அவளை சுற்றியிருந்த அவன் கைகள்… அந்த நெருக்கம்… எதையெதையோ நினைவுகூர்ந்தது.
பல கசப்பான நினைவுகள், மூடிய கண்களுக்குள் ஓடின. சிலிர்த்த உடல் இப்போது தகித்தது. அவனின் கைகள் தற்போது ஒரு ஆணின் கைகள் என்றே தோன்றியது. உடல் இறுகியது.
அறிவும் மனதும் ஒரே விஷயத்தை அறிவுறுத்தியது…
‘இவனுக்கு நான் தகுதியற்றவள் தான். ஒருவேளை எல்லாம் கடந்து, மறந்து, நான் இவனுடன் சேர்ந்தால்… என்னால் இவனுக்கு சந்தோஷம் கிடைக்குமா? மனதளவில் சரி… உடலளவில்? இவன் தொடுகை பல கசப்பான தொடுகைகளை நினைவூட்டுகிறதே?’ என நினைக்கும்போது அவளுக்கு புரிந்துவிட்டது…
அவ்வளவு தான்… சட்டென அவனிடம் இருந்து விலகினாள். அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து…
“வேணாம் சக்தி… நான் வேணாம்” என்று மட்டுமே சொல்லிவிட்டு அவனைக் கடந்து செல்ல நினைக்க, அவன் அவளை தடுத்தான். “மிது…” குரலில் அவ்வளவு ஏக்கம்… கண்களில் அவ்வளவு காதல்.
“எனக்கு நீ மட்டும் தான் வேணும். நீ மட்டும் தான் இருக்க” குரல் உடைந்தது. அவன் எதிர்பார்த்ததுதான். எளிதாக அவளை சம்மதிக்கவைக்கமுடியாது என்று.
இப்போது அவனின் பரிதவிப்பெல்லாம் அவள் மனதில் எதையெதையோ யோசித்து அவளையே வருத்திக்கொள்வாள் என்பது. அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது.
அவனை நேராக பார்த்தவள், தீர்க்கமாக “உன் வாழ்க்கை நல்லா இருக்கனும். நீ சந்தோஷமா இருக்கனும். நான் வேணாம். நான் அசிங்கம்” என்று அவள் எதையோ சொல்லவர, அவள் வாயை கையால் மூடியவன் “நீ தான் என் வாழ்க்கையோட சந்தோஷம்” அவனும் விடாப்பிடியாக பேசினான்.
விரக்தியுடன் சிரித்தவள் “நான் உன் வாழ்க்கைல வந்தா எந்த சந்தோஷமும் வராது… இருக்காது…” அவன் புரியாமல் பார்க்க…
அவள் “புரில? என்னால எந்த சந்தோஷமும் உனக்கு கிடைக்காது” என நிறுத்தியவள், கண்களை மூடி மூச்சை இழுத்துவிட்டு, அவனை பார்த்தாள்.
இதை அவனிடம் சொல்லவேண்டும் என நினைக்கையிலேயே, ‘தன் மனதை தானே ஈட்டியால் குத்திக்கொள்ளும் உணர்வு. இருந்தாலும் சொல்லியாகவேண்டும் அவனின் வாழ்க்கைக்காக’ என நினைத்தவள்…
அவன் முகம்பாராமல், கீழே பார்த்துக்கொண்டு “நீ இப்போ தொட்டயே… எனக்கு அது… அது… வேற எதஎதயோ ஞாபகப்படுத்துது. உடம்பு கூசுது… எரியுது… என்னால முடியாது சக்தி… உனக்கு சந்தோஷத்தை குடுக்க முடியாது”
“என்கூட முன்னாடி இருந்தவங்களையெல்லாம் ஒரு ஈன பிறவியா பார்த்தேன். ஒருவேள பிற்காலத்துல உன்னுடனான கூடல்… நீ… உன்… தொடுகை அவங்களோடத நியாபகப்படுத்திடுச்சுனா, அது எவ்வளவு பெரிய அவஸ்தை… எனக்கு மட்டும் இல்ல. உனக்கும் தான்”
வார்த்தைகள் சரியாக வெளியில் வர மறுக்க, “ஏன்னா உன்…ன… நல்லவனா மட்டும் தான் நான் பாக்கணும்… உன் தீண்டல்… வேற ஏதாச்சும் எனக்கு தோனவெச்சுடுச்சுன்னா?”அவள் சொல்லச்சொல்ல கண்களில் கண்ணீர் கொட்டியது.
சுத்தமாக உடைந்தவன், தளர்ந்து போய் சுவற்றில் சாய்ந்தான். என்ன சொல்வது அவளுக்கு. தன் தொடுகை அவளுக்கு வேறொன்றை நினைவுபடுத்துகிறது என்று சொல்லும்போது என்ன சொல்வது….
இருந்தும் தன்னை தன்னிலைப்படுத்துக்கொண்டு “மிது… நீ நினைக்கறது மட்டும் வாழ்க்கையோட சந்தோஷம் இல்ல மிது… அதெல்லாம் ஒரு அங்கம்… அதில்லா…” அவன் சொல்லவருவது புரிந்து அவனை தடுத்தவள்,
இதற்கு மேல் இதை வளரவிடவேண்டாமென முடிவெடுத்து, எதை சொன்னால் அவனே தன்னை விட்டுவிட்டு வேறு வாழ்க்கையை பார்த்துகொள்வானோ, அதை பிரயோகிக்க ஆரம்பித்தாள்.
“உனக்கு சந்தோஷத்தை குடுக்கமுடியலையேன்னு என் சந்தோஷத்தையும் கெடுத்துட்டு நான் வாழனும் சக்தி… அது சாபம்… உனக்கும் மட்டும் இல்ல. எனக்கும். வேணாம் எனக்கு அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை “
“எனக்கு நல்லது செய்யணும்ன்னு நீ நினச்சா, நான் நல்லா இருக்கனும்ன்னு நீ நினச்சா… போய்டு… என்னவிட்டுட்டு போய்டு… இது நீ தந்த வாழ்க்கை… நீயே பறிச்சிக்காத” கண்கள் மல்க கைகூப்பி அழுதாள்.
இதையெல்லாம் கேட்டு அவனின் இதயம் இன்னமும் துடித்துக்கொண்டிருக்கிறதா என்ற சந்தேகமே அவனுள்!!!
எதுவும் பேசவில்லை. கிளம்பிவிட்டான்… விமானத்திற்கு ஒன்பது மணிநேரம் இருந்தது. இருப்பினும் கிளம்பிவிட்டான்…!
———————
“நீங்க பண்ணினது தப்பு மேடம்” சொன்னது மங்கையல்ல, ஆதவன். இதுவரை இதுபோல பேசாதவன், இப்படி சொன்னதைப் பார்த்த மிதுலா, புன்னகைத்துக்கொண்டு…
“எல்லாத்தையும் காலம் மாற்றும். என்ன மறந்து, அவனோட வாழ்க்கை மாற கண்டிப்பா சாத்தியம் இருக்குன்னு நம்பினேன். ஆனா … அப்படி இல்ல போல” என நிறுத்தி அவர்களைப் பார்த்தாள்.
மங்கையும், ஆதவனும் புரியாமல் பார்த்தனர்.
