வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் – 27
செம்மையின் செழிப்பு – 7(1)
மங்கையும், ஆதவனும் புரியாமல் பார்க்க… “கதைல கொஞ்சம் மிச்சம் இருக்கு… அப்பறம் சொல்றேன் காலம் மாற்றியதா இல்லையானு” என கண்சிமிட்டி செழிமையான செந்நிறப் பக்கங்களை சொல்ல ஆரம்பித்தாள்.
———————
சக்தி கிளம்பி சென்றதும், வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்தவள், எழவில்லை. கண்களில் கண்ணீர் மட்டும் அதன் வேலையே செய்தது. மற்ற அங்கங்கள் நகரக்கூட இல்ல.
கிட்டத்தட்ட இருபது மணிநேரம் அப்படியே இருந்தாள். தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்த அழைப்பு மணி, அவளை தன்னிலைக்கு கொண்டுவந்தது. அவள் கதவை திறக்க, அதே மனிதர். அவளை ஏர்போர்ட்டில் இருந்து அழைத்துவந்தவர்.
“சக்தி இருக்காரான்னு பார்க்க வந்தேன்” என்றார் சம்மந்தமில்லாமல். அவன் கிளம்பிவிட்டதாக சொல்லி, கொஞ்சம் நேரம் பேசிவிட்டு அனுப்பிவைத்தாள். அவர் சென்றவுடன் புன்னகை முகத்தில்…
‘திருந்த மாட்ட சக்தி நீ’ என்று நினைத்துக்கொண்டு அடுத்தடுத்த வேலையில் தன்னை ஈடுபடித்துக்கொண்டாள்.
ஆம். சக்தி தான் அவரை அனுப்பியிருந்தான். ‘அவள் அப்படியே இருப்பாள். தன்னை பேசிவிட்டு சந்தோஷமாகவா இருப்பாள்?’ என்றெண்ணி அவரை அனுப்பிவைத்தான் மிதுலாவைப் பார்ப்பதற்கு.
அவன் அவளிடம் பேசாவிட்டாலும், அவரை மறைமுகமாக பார்த்துக் கொள்ளச்சொன்னான்.
‘அவன் பேசவில்லை’ என்ற எண்ணம் வறுத்தெடுத்தாலும், ‘அவன் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும்’ என்று தன்னை சமாதானபடுத்துக்கொண்டாள். அவனுடன் இருந்த நாட்களை நினைத்து தனக்குத்தானே சந்தோஷப்பட்டுக்கொண்டாள்.
அவளின் படிப்பும் முடிந்தது. சென்னைக்கு வரும் நாளும் வந்தது. ‘அவன் வருவானா?’ என மனம் ஏங்கினாலும், அந்த எண்ணத்தைத் தட்டி புதைத்துவிட்டு வெளியே வந்தாள். அவளை அழைத்துச்செல்ல வந்திருந்தவர், NGO’வின் வக்கீல்.
நேராக அவளை பாண்டிச்சேரிக்கு அழைத்துச்சென்றார். போய் சேர்ந்த அன்றைக்கே, அவளிடம் சில ஆவணங்களை கொடுத்தவர்,
“சக்தி ஸார் அஃபீஷியலா பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். இனி அனைத்தையும் நீங்களே பொறுப்பேற்று நடத்திச்செல்லவேண்டும்” என்றார். தானும் மேனேஜரும் உதவுவோம் என்று உறுதியளித்தார்.
கடுப்பாக வந்தது மிதுலாவிற்கு. மொத்தமாக அவன் இப்படி செல்லவேண்டுமா என்ற கோவம். எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற எண்ணம்.
இதே யோசனையோடு, அடுத்த நாள் ஆஃ பீசுக்கு வர, அங்கே வக்கீலுடன் சில மனிதர்கள் இருந்தனர்.
“இவங்க தான் Budding Buds day care and preschool’ஓட CEO, Managing Director” என அங்கிருந்த இருவரை அறிமுகப்படுத்த, மனதில் சக்தியை எவ்வளவு அர்ச்சனை செய்யமுடியுமோ அவ்வளவு செய்தாள். வந்த அடுத்த நாளே இவை அனைத்துமா என்ற கோவம்.
ஆனால் அவள் நினைத்தாற்போல் பெரிய வேலையாக தெரியவில்லை. இவளின் வெறும் கையொப்பமே போதுமானதாக இருந்தது. அனைத்தையும் வக்கீல் பார்த்துக்கொண்டார். கூடவே இந்த தொழில் பற்றி தெரிந்த ஒருவரை மிதுலாவிக்கு ஆலோசகராக அமர்த்தினார்.
நாட்கள் சென்றது. அவளே ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டு தெரிந்துகொண்டாள்.
முதலில் வேலைப்பளு அதிகமிருந்தாலும், அது பெரிதாக தெரியவில்லை. அனைத்திற்கும் உதவி என்று ஒருவர் இருந்தார்.
ஒன்றின் பின் ஒன்றாக கற்றுக்கொண்டாள். முதலில் வக்கீல், மேனேஜர் மற்றும் ஆலோசகரிடம் அந்தந்த வேலைகளுக்கு உதவிகளை நாடியவள், பின் அவளே முடிவெடுக்கும் நிலைக்கு முன்னேறினாள்.
அந்த Pre-School நிறுவனத்தை வாங்கும்போது இருந்த கிளைகளை விட, இரண்டு மடங்கு பெரிதாக்கினாள். NGO’வை விட, இதன் மீதே பற்று அதிகம் இருந்தது. இருப்பினும் இரண்டையும் பார்த்துக்கொண்டாள்.
இது அனைத்தும் செய்தாலும், சக்தியின் முகத்தை நினைக்காத நாளில்லை. அப்பாவுக்காக செய்வதாக ஆரம்பித்த இந்த பயணம், போகப்போக, ‘சக்தி எவ்வளவு தனக்காக பார்த்துப்பார்த்து செய்தான். அவனுக்காக இதை நல்லபடியாக செய்தாகவேண்டும்’ என முடிவெடுத்தாள்.
‘அவன் வேறு வாழ்க்கை அமைத்துக்கொண்டிருப்பானோ? யாரிடம் கேட்கலாம்’ என தோன்ற… ஒருநாள் வக்கீலிடம், கேட்டுவிட்டாள். அவர், இவள் சென்னை வந்த அடுத்தநாளே அவன் அமெரிக்கா சென்றுவிட்டதாக சொன்னார்.
மனது அவனை நினைத்து ஏங்கினாலும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வேலையில் தன்னை ஈடுப்படுத்துக்கொண்டாள்.
இருப்பினும் தினமும் அவன் தரிசனம் கிடைத்துவிடும்… ஆம்… முன்பு போல், அவனைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவள் முன் தெரிவான். பிம்பமாக!!!
சிலசமயம் அவனாக இருக்குமோ… அன்று போல் வந்து நிற்பானோ, என்று பக்கத்திலெல்லாம் போய் பார்த்திருக்கிறாள். ஆனால் ஒரு நாளும் அவன் வரவில்லை.
“ஆமா… அவ்வளோ பேசி அவனை காயப்படுத்தின. எப்படி வருவான்? அவன் நல்லா இருக்கட்டும்” கண்ணாடியில் தன்னைப் பார்த்து சொல்லிக்கொள்வாள்.
மனது வலியால் துடித்தது. பின் அவளே “நீ வேணாம் அவனுக்கு. அவன் நல்ல மனசுக்கு நல்ல பொண்ணு கிடைக்கும். நீ வேணாம்…” என்று பலமுறை தன்னிலையை தனக்கே நினைவுபடுத்திக்கொள்வாள்.
அவன் லண்டன் வந்து சென்றபோது, அவனுடைய பெர்சனல் டைரி’யை எடுக்க மறந்து சென்றுவிட்டான் அவன் அன்றிந்த மனநிலையில்.
அவனைப் பற்றிய அனைத்துமே அதிலிருந்ததது. அந்த வருடத்தில் அவன் செய்தது, முக்கியமாக மிதுலாவின் மீதான அவன் எண்ணங்கள் என அனைத்தையுமே பதிவிட்டிருந்தான்.
மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம், மறுபடியும் தனிமை சூழ்ந்துகொண்டதாக நினைக்கும்போதெல்லாம், அவன் கேட்கச் சொன்ன சில தியானம் சம்மந்தப்பட்ட இசையை கேட்பாள். அந்த டைரியை பார்த்துக்கொள்வான்.
பகல் பொழுது என்றால் டேகேர் குழந்தைகளுடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்வாள்.
அவனை மானசீகமாக தன்னில் பாதி என்றே நினைத்தாள். அவனின் பிம்பத்துடனே வாழ்க்கையை நடத்தினாள்.
நாட்கள் வருடங்களாக ஓடின. தன் அப்பாவின் கனவு திட்டம்… நல்ல சேவைகளுடன், கல்வித்தரத்தை உயர்த்தும் விதத்தில் அரசாங்க அங்கன்வாடிகளை மாற்றுவது.
அன்றொரு நாள் சக்தி “நம்ம செய்வோம்” என சொன்னது நினைவிற்கு வந்தது. அவன் தன்னோடு இருந்தால்? என்ற எண்ணமும் வந்தது. அவனுக்காக இதை நேர்த்தியாக செய்யவேண்டும் என்று உறுதிகொண்டாள்.
அந்த வேலையில் முழுவதுமாக இறங்கினாள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த திட்டத்தை செயல் படுத்த திட்டமிட்டிருந்தாள். அதற்கான முதற்கட்ட வேலைகளைத் துவங்கினாள்.
அவள் அதற்கான முதல் அடி எடுத்துவைக்க, எந்த தடையும் இன்றி நன்றாக சென்றது.
அவளின் பேச்சுத்திறன், அவளின் செயல் விளக்கம், அதிலும் ‘அரசாங்கம் தற்போது செலவு செய்யும் பணமே போதும். அதில் நல்ல திட்டங்களைக் கொண்டு வரலாம்’ என்று அவள் சொன்ன உதாரணங்கள், அந்த துறைசார்ந்தவர்களை மிகவும் ஈர்த்தது.
அதில் எப்படி பணம் பார்க்கலாம் என்ற கும்பலும் இருந்தது. அதையும் கடந்து இதில் எப்படி வெற்றி காண்பது என்பதையும் தெரிந்துகொண்டாள்.
சில சமயம் உடல் மனது என ஒருசேர்ந்து சோர்வடைந்தாலும், தனக்குத்தானே ஊக்கப்படுத்திக்கொண்டு ‘இன்னும் இன்னும்’ என்று வேலையில் ஈடுபட்டாள்.
சில விஷயங்கள் தன்னால் முடியவில்லை என்றால் வக்கீலை அணுகுவாள். அந்த வேலை அவரிடம் சொன்ன அடுத்தநாளே சரியாகிவிடும். ‘பெரிய மனிதர் போல’ என்று எண்ணினாள்.
அவள் அப்பாவின் கனவு… நிறைவேறப்போகிறது…! அதற்கு அவள் எடுத்துக்கொண்ட வருடங்கள் ஐந்து!!! அரசாங்கத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடம் நாளும் நெருங்கியது.
அந்த நாள், ஒப்பந்தம் முடிந்த பின், பத்திரிக்கையாளர்கள் அவளை சந்திப்பதாகவும், அவளின் வாழ்க்கை, மற்றும் இந்த ஒப்பந்தம் குறித்து சந்திக்க உள்ளதாக முடிவாகியிருந்தது.
அந்தநாளிற்காக எதிர்நோக்கி காத்திருக்கையில் ஒரு நாள், மற்றொரு NGO அவளை தொடர்புகொண்டு , ‘முனைவர் பட்டம் பெற இருக்கும் இருவர், ஆய்வறிக்கைக்காக… ‘அவளின் முன்னேற்றம்’ பற்றி அறிந்துகொள்ள, நேர்காணல் எடுக்கலாமா?’ என்று கேட்டிருந்தனர்.
எப்படியும் தன்னைப் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பின்போது சொல்லவேண்டும் என்று நினைத்தவள், எந்த தயக்கமும் இன்றி இருவரையும் வரச்சொன்னாள். அப்படி வந்தவர்களே ஆதவனும் மங்கையும்!!!
இதோ இப்போது அவர்கள் இருவரும் மிதுலாமுன்.
“அப்பப்போ யோசிப்பேன்… சக்தி போனப்பறம் என்னால எப்படி எல்லாம் செய்ய முடுஞ்சது’ன்னு… நான் எல்லாம் தெருஞ்சுக்கறவரைக்கும், எனக்கு உதவி செய்ய எல்லாவகையிலும், எல்லாரும் தயாரா இருந்தாங்க”
“சில விஷயங்கள் என்னால முடிமா’ன்னு நினைக்கறப்ப, லாயர் ஸார் கிட்ட கேட்பேன். அவரும் ஏதோ அத எதிர்பாத்தமாதிரியே அடுத்தநாளே செய்து முடிப்பார். ஆனா இப்போ தான் புரியுது…” என்று இருவரையும் பார்த்து மர்மப்புன்னகை உதிர்த்தாள்.
மங்கையும் அதவனும் ஒருவரையருவர் பார்த்துக்கொண்டனர். “இது எல்லாத்துக்கும் யாரு காரணம்’ன்னு இப்போ தான் புரிது. அமெரிக்காவும் போகாம, அப்பிரிக்காவும் போகாம, இங்கதான் அமிஞ்சிக்கரைல இருப்பான் போல” என சொல்ல, இருவரின் முகத்தில் புன்னகை…
ஆதவன் “தேங்க்ஸ் மேடம்… உங்க டைம் எடுத்துட்டு இதெல்லாம் சொன்னதுக்கு” என சொல்ல, மங்கை, “மேடம் இதுல ஏதாச்சும் ஆஃப் ரெகார்ட் (off record) பண்ணனும்னா சொல்லுங்க. எடிட் பண்ணிடறோம்” எனக் கேட்டாள்.
“இதுல மறைக்க எதுவும் இல்ல… சோ எல்லாத்தையும் வேணும்னாலும் இன்க்ளூட் பண்ணிக்கோங்க. ஆனா கவுதம், வருண், மைதிலி மேம், கிறிஸ்டிக்கா, அவங்க பசங்க ரெண்டுபேத்து பேரையும் மாத்திடுங்க” என நிறுத்த…
மங்கை தயங்கி “சக்தி ஸார் பேரு மேடம்?” என கேட்க, அவளைப் பார்த்து போலியாக முறைத்தவள் “அத உங்க சக்தி ஸார்’ட்டயே கேட்டுக்கோங்க” என்றாள்.
இருவரும் கொஞ்சம் அதிர்ந்து அவளைப் பார்க்க, ஆதவன், “எப்படி கண்டுபிடிச்சீங்க மேடம்? அவரு தான் உங்கள பார்க்கச்சொல்லி அனுப்பினாரு’ன்னு?” அர்ச்சர்யாமாக கேட்டான்.
“ஹ்ம்ம்…. இந்த பொண்ணு… சக்தி பத்தி சொன்னவுடனே ஏதோ பல வருஷம் தெரிஞ்சவரு மாதிரி சக்தி ஸார் சக்தி ஸார்’ன்னு அவனப்பத்தியே பேசினாலே… அப்போவே கண்டுபிடிச்சுட்டேன்” என்றாள் சிரித்துக்கொண்டு.
மங்கை அசடுவழிய, ஆதவன் “ஆனா சக்தி ஸார் சொன்னாரு மேடம்… இன்டெர்வியூ முடியறதுக்குள்ள நீங்க கண்டுபிடிச்சுருவீங்கன்னு” என பெருமையாக சொல்ல, மிதுலாவின் முகத்தில் பெருமிதம்.
தன்னை நினைத்து அல்ல… தன்னை பற்றி சரியாக சொன்ன சக்தியை நினைத்து…
“அப்பறம் மேடம். ஸார் அமிஞ்சிக்கரைல இல்ல. பெங்களூருல இருக்காரு. நாங்க அங்க தான் PhD பண்றோம்” என்றாள் மங்கை புன்னகையுடன்.
இவர்களிடம் ‘சக்தி எப்படி இருக்கிறான். தனக்கென வாழ்க்கை அமைத்துக்கொண்டு நன்றாக இருக்கிறானா?’ என்று கேட்டுவிட எண்ணம் கூட தோன்றியது. ஆனால் கேட்கவில்லை.
ஏதோ அவள் மனதைப் படித்தது போல, ஆதவன் “நீங்க ஒரு இடத்துல ஸார்ட்ட கேட்டீங்க… “என்ன விட்டு போய்ட மாட்டேல்ல சக்தி’ன்னு”… அதுக்கு அவர் “நீயே போ’ன்னு சொன்னாலும் போ மாட்டேன்’னு” சொன்னாரில்லையா…”
“இதுவரைக்கும் அத அவர் மறக்கல போல மேடம். உங்க கண் முன்னாடி தெரியாம இருக்கார் அவ்ளோதான்” என சொல்ல மனதில் இனம்புரியாத ஒரு உணர்வு மிதுலாவிற்கு… ஆனால் வெளியில் புன்னகையை மட்டுமே பதிலாக தந்தாள்.
“மேடம்… அப்பறம்… உங்க லைப்ல முக்கியமான நிறைய பேர் இருந்துருக்காங்க. உங்களுக்கு ஒரு ஆப்ஷன் கிடைக்குது யாரையாச்சும் ஒருத்தர பாக்கறதுக்கு… அப்படி கிடைச்சா இப்போவே யாரை பாக்கணும்ன்னு நினைப்பீங்க…” மனதில் சக்தியை வைத்துக்கொண்டு கேட்டாள் மங்கை.
மிதுலா புன்னகை மாறாமல், “எனக்கு அப்பா, அம்மா, கிறிஸ்டிக்கா திரும்ப வந்தா நல்லாருக்கும்ன்னு தோணும்… ஆனா அது நடக்காது. அவங்கள தவிர்த்து வேற யாராச்சும்னா, அது கண்டிப்பா வருண். அவனைப் பார்த்த இடம் தப்பாயிருக்கலாம். ஆனா கண்டிப்பா அவனுக்குள்ள நல்லவன் இருக்கான். நான் நல்லா இருக்கறத பார்த்தா சந்தோஷப்படுவான்” என்றாள்.
“அப்போ சக்தி ஸார்…” தயங்கி மங்கை கேட்க, வெறும் புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.
‘இங்க இருந்து அவன் வெளிய போனாதானே அவனை நான் பாக்கணும்ன்னு நினைப்பேன். அவன் தான் இங்கயே இருக்கானே…’ என்றது அவளின் மனம்…
இருவரும் கிளம்ப எத்தனிக்க, மங்கை மிதுலாவை அணைத்துக்கொண்டு “மேடம்… நம்மளப் போல பெண்களுக்கு… லைப் எவளோ கஷ்டங்களைக் குடுத்தாலும் அதிலிருந்து எப்படி வெளிய வரணும்ன்னு உங்க கிட்ட இருந்து கத்துட்டேன். யு ஆர் ட்ருலி இன்ஸ்பைரிங்” என்றாள் ஆனந்த கண்ணீருடன்.
அவளைத் தேற்றி அனுப்பிவைத்த மிதுலாவிற்கு, நாளை நடைபெறும் ஒப்பந்தம் பற்றியெல்லாம் நினைவிற்கு வரவில்லை. அது கண்டிப்பாக நல்லபடியாக நடக்கும் என நம்பினாள். அவள் மனதில் இப்போது நினைப்பது ஒருவனை மட்டுமே.
ஒருவேளை அவன் நாளை வருவானோ??? என்ற எண்ணம் வேறு இம்சித்தது…
