Preethi S Karthikவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள்

வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் – 7

மந்தகாச மஞ்சள் – 2(3)

“மங்கை. நான் யாரையும் பாக்கவோ, பேசவோ பிடிக்காத நிலமைல இருந்தேன். நான் சொல்லியும் போகாம நின்னானேன்னு கோவம் தான்… ஆனா…” என்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள் மிதுலா.

———————

தான் சொல்லியும் போகாமல் இருந்த சக்தியை பார்த்து ஆத்திரம் ஒரு புறம் வந்தாலும் அவன் தோற்றம் அவளின் கோவத்தை மட்டுப்படுத்தியது.

“உள்ள வா” என்றாள் பற்களை கடித்துக்கொண்டு. அவள் திட்டுவாள் என்று எதிர்பார்க்க, அவளின் இந்த செயல் அவனுக்கு சின்ன நம்பிக்கை கொடுத்தது. ‘எப்படியும் சரி செய்துவிடலாம்’ என்று.

உள்ளே சென்றுகொண்டே, அவன் புறம் திரும்பி “அறிவில்லை. சாப்பிட்டயா? இல்லையா?” என கேட்க… இல்லை என்பதுபோல் தலையசைத்தான்.

“இரு ஏதாச்சும்…” என்று சொல்லவரும்போது தான் நினைவிற்கு வந்தது எதுவும் சமைக்கவில்லை. சாப்பிடவும் இல்லை என்று. ‘இவனிடம் சொல்லவேண்டாம்’ என்று நினைத்தபோது…

“நீயும் சாப்பிடலயே மிது” அவளையே பார்த்துக்கொண்டு சொன்னான் அவளின் மனதை படித்ததுபோல்.

அவன் கேட்டதில் ‘இவனுக்கு எப்படி தெரிந்தது?’ என்று அதிர்ச்சி அடைந்தாலும் “நான் சாப்பிடலையா…? பக்கத்துல இருந்து பாத்த மாதிரி சொல்ற…. நான் சாப்பிட்டேன்” என்றாள் அவன் முகம் பாராமல்.

எங்கே அவனை பார்த்தால், பொய் சொல்வதை கண்டுகொள்வான் என்பது அவளுக்கு தெரியும். ‘அந்த சின்ன வயதிலேயே சரியாக சொன்னவன் இப்போது கண்டுபிடிக்க மாட்டானா என்ன’ என்ற எண்ணமே.

“ஏன் எங்கயோ பார்த்து சொல்ற? என்ன பாத்து சொல்லு… நீ சாப்டன்னு. காலைல இருந்து மெஷின் சத்தம் மட்டும் தான் கேட்டது. மிஞ்சி போன ஒரு ரெண்டு மூணு நிமிஷம் பிரேக் எடுத்துட்ட” என்றான் தெளிவாக உள்ளிருந்து பார்த்தது போல்.

அவள் இன்னமும் அதிர்ந்தாள். ‘எப்போல இருந்து இங்க இருக்கான்?’ என்று நினைத்ததை அவனிடம் கேட்டாள். “நைட்ல இருந்து இருக்கயா? நேத்து நைட்டும் சாப்பிடிலல?” என்று கேட்கும்போது, அவன் பதில் பேசாமல் தலைகுனிந்தான்.

தனக்காக அவன் இருந்தான் என்று நினைக்கையில் மனதில் ஒரு மூலையில் இதமாக இருப்பதுபோல் இருந்தாலும்; ‘எதற்காக இப்படி செய்ய வேண்டும்?’ என்ற கோவமும் சேர்ந்து வந்தது.

கையில் இருந்த தைத்த துணிகள் வைத்திருந்த பையை தூக்கி எறிந்தவள்…

அவன் அருகே சென்று “உன்ன நான் போ சொன்னேனா இல்லையா? என்ன ஸீன் போடறயா? ஏன் என் உயிரை வாங்கற? நேத்துல இருந்து என் நிம்மதி போச்சு உன்னால” கோவத்தில் அவன் சட்டையை கொத்தாக பிடித்து உலுக்கினாள்.

அவன் பேசவில்லை.

“நீ ஏன் வந்த சக்தி? உன்ன பாத்தவுடனே நான் கொஞ்சம் கொஞ்சமா மாறறமாதிரி தெரியுது. என்னோட இத்தன நாள்… மன உறுதியெல்லாம் போயிடும்போல. நீ போ… நீ என்ன பாக்கலன்னு நினைச்சுக்கோ”

“நான் உன்கிட்டயும்… அந்த கவுதம்கிட்ட பேசினது போல பேசி அனுப்பிடலாம். ஆனா வேணாம்ன்னு பாத்தேன். போய்டு சக்தி. கெஞ்சி கேக்கறேன்” நேற்றிலிருந்து கட்டிவைத்த பாரம் கண்ணீராக வழிந்தது.

அவன் சட்டையை பிடித்திருந்த தன் கைகளின் மேல, தன் முகத்தை புதைத்துக்கொண்டு “போய்டு சக்தி… என் வாழ்க்கை இது தான். உங்க எல்லாரையும் என் வாழ்க்கைல இருந்து பிரிச்சு பல வருஷம் ஆச்சு. இனி ஒட்டவைக்க முயற்சி பண்ணாத. போய்டேன்… ப்ளீஸ்” என்றாள் தலை குனிந்து.

அவள் அழுவதை அவன் பார்க்கக்கூடாது என்று.

அவளை தலைத்தூக்கவைத்தது, அவள் கைகளில் பட்ட அவன் கண்ணீரே. அவன் கண்கலங்கி இருந்ததை பார்த்தவள், அதிர்ந்து அவனை விட்டு இரண்டு அடி பின் நகர்ந்தாள்.

“நான் சாப்பிடலன்னு தெரிஞ்சவுடனே எவளோ கோவம் இருந்தாலும் உள்ள வரசொன்னயே அது மாதிரி தான் மிது… உன்ன பாத்ததும் உன்ன இப்படியே விட்டுட்டு என்னால போக முடில” என்றான் இறுகிய முகத்துடன்.

அவளுக்கு பதில் பேசமுடியவில்லை. ‘தனக்கு யாருமில்லை’ என்று அவளே அவளை நம்பவைத்துக்கொண்டாள். ஆனால் இப்போது ‘இல்லை’ என்பது போல் இவன் நிற்கிறான்.

“எதுக்கு இப்படி என்ன தொல்ல பண்ற? எனக்காக நீ இவளோ மெனக்கெடறதுக்கு, நான் ஒண்ணுமே உனக்கு செஞ்சதில்லயே?” ஆற்றாமையுடன் கேட்டாள்.

“உன் அப்பா அம்மா இப்போ உனக்கு துணையா இருக்க முடில. ஆனா அவங்க செஞ்ச நல்லகாரியங்கள் நிறைய… அதுனால பயன் அடைஞ்சது நிறைய பேர். அதுல நானும் ஒருத்தன். இது போதாதா நான் மெனக்கெடறதுக்கு?”

அவன் சொன்ன ‘துணை’ என்ற வார்த்தை அவளுக்கு ஆத்திரத்தை கிளப்ப “நான் கேட்டேனா? எனக்கு யாராச்சும் உதவி பண்ணுங்க… துணையா இருக்கங்கன்னு கேட்டேனா? என் அப்பா அம்மாவே இப்போ வந்து ஹெல்ப் பண்றேன்னு சொன்னாக் கூட எனக்கு வேணாம்”

“நீ மொதல்ல வெளிய போ. எனக்கு யாரு துணையும் வேணாம்” அவள் முதலில் கத்த, பின் குரல் குறைந்துகொண்டே வந்தது. திடீரென கண்கள் சொருகியது. மயங்கினாள்.

அவனோ ‘அவள் அனைத்தையும் வேறு கோணத்தில் பார்க்கிறாளே’ என்ற கோவத்தில் இருக்க, அவள் விழப்போவதை பார்த்து ஓடிச்சென்று தாங்கினான்.

அவளை படுக்கையில் படுக்கவைத்தவன், தண்ணீர் தெளிக்க, அவள் எழவில்லை. முகத்தை தட்டிப்பார்த்தான். எழவில்லை.

அவள் உண்ணாமல் இருந்ததால் மயக்கம் வந்திருக்குமோ என்று எண்ணினாலும் எதற்கும் அசையாமல் இருப்பவளை பார்த்து பதட்டம் அதிகரிக்க… உடனே கவுதமை அழைத்தான் ஆம்புலன்ஸ் வரவைக்க.

அடுத்த இருபது நிமிடத்தில், அவளை ஒரு பல்நோக்கு மருத்துவமனையில் சேர்த்தான். முதலில் அவளை பரிசோதித்து, முதலுதவி அளிக்கப்பட்டது.  

மருத்துவர் சக்தியிடம் “நீங்க அவங்களுக்கு என்ன ரிலேஷன்” என கேட்க

“நான் அவங்க ஃபேமிலி ஃபிரன்ட் டாக்டர். அவங்க பேரன்ட்ஸ் இப்போ இல்ல” அவன் சுருக்கமாக சொன்னான்.

“ஹ்ம்ம். அவங்க ரொம்ப வீக்’கா இருக்காங்க. சரியான ஃபுட்  இன்டேக் இருக்கறமாதிரி தெரில. தூக்கமும் சரிவரயில்லன்னு நினைக்கறேன். இப்போதைக்கு இதுதான் ரீசன்னா இருக்கனும். நல்லா தூங்கிட்டு இருக்காங்க”

“ஒரு அட்டெண்டர் இங்க இருக்கலாம். நாளைக்கி டெஸ்ட் ரிஸல்ட்ஸ் வந்தப்பறம் எந்த மாதிரி மெடிகேஷன் எடுக்கலாம்னு பாக்கலாம்” என்று முடித்தார்.

எதுவும் பேசாமல் அவளருகே அமர்ந்தான். இவளை எப்படி சரிசெய்வது என்ற குழப்பத்திலேயே இருந்தான்.

நள்ளிரவு நேரமும் ஆனது. நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள்.

அவனும் சரிவர தூங்காததால் கண்ணசந்தான். அவனும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும்போது, திடீரென அவள் சத்தம். பதறிக்கொண்டு எழுந்தான்.

அவள் காதுகளை கைகளால் மூடிக்கொண்டு, கண்களையும் இறுக மூடிக்கொண்டு, கால்களை மாறி மாறி மடித்து மடித்து விடுவித்தாள்.

துரிதமாக அவன் அவள் அருகில் செல்ல, அவள் சட்டென எழுந்து உட்கார்ந்து, முகத்தை மடித்த கால்களுக்குள் புதைத்துக்கொண்டாள்.

“மிது… என்னாச்சு மிது” என்று அவளை உலுக்க, அவனை ஏறிட்டவள், “வேணாம் போய்டு… என்ன தொடாத. போ. போ” என்று பித்து பிடித்தவள் போல் கத்தினாள்.

அதற்குள் செவிலியர்கள் இருவர் உள்ளே வர, அவள் கத்திக்கொண்டிருப்பதைப் பார்த்து, அருகில் செல்ல, அவர்களை பார்த்தும் “போ போ” என்று கத்தினாள்.

அவள் கைகள் இன்னமும் காதுகளில் இறுக மூடியிருக்க, கையில் குத்தப்பட்டிருந்த venflon’னில் இருந்து ரத்தம் வெளிவர ஆரம்பித்தது.

அவளை கட்டுக்கு கொண்டு வர அவள் கைகளை நர்ஸ் பிடிக்க, அவள் இன்னமும் உக்கிரமானாள்!!

———————

மிதுலா அவளை பற்றி சொல்லிக்கொண்டிருக்க, ஆதவனும், மங்கையும் மெளனமாக இருந்தனர். அவளுக்கு ஒரு போன் அழைப்பு வர, இருவரிடமும் சொல்லிக்கொண்டு பேசச்சென்றாள்.

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved