வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் – 9
மந்தகாச மஞ்சள் – 2(5)
மங்கையின் ஆர்வத்தை பார்த்த மிதுலா, மங்கையைப்போலவே “சக்தி ஸார் என் எதிர் வீட்டுக்கு குடித்தனம் வந்துட்டாரு” ‘ஸார்’ என்பதை கிண்டலாக சொல்லி சிரித்தாள்.
“என்ன மேடம் சொல்றீங்க? நீங்க அவரை திட்டினீங்களா?” இன்னமும் ஆர்வத்துடன் கேட்க, அன்றைய நினைவுகளுடன் கலந்த மிதுலா, மீண்டும் தொடர்ந்தாள் பழைய பக்கங்களை புரட்ட.
———————
சக்தி எதிர் வீட்டின் கதவை திறந்துகொண்டு உள்ளே செல்வதை பார்த்தவள், சில நொடிகள் அங்கேயே நிற்க, பின் சுதாரித்துக்கொண்டு உள்ளே சென்றாள். அவள்வீட்டிற்குள் அல்ல. அவன் புகுந்த வீட்டிற்குள்.
உள்ளே சில பெட்டிகள் இருக்க, ஒரே ஒரு கேஸ் அடுப்பு. வீடு முழுவதுக்கும் காலியாக இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் புரிய “ஏய்… யாரு பெட்டி இதெல்லாம்?” என்று கேட்கும் போது அவன் முகம் இன்னமும் புன்னகையை தழுவி இருந்தது.
அவள் கைகளை கட்டிக்கொண்டு “சோ இங்கயே தான் இருக்க போற” நிறுத்தி “இருந்து என் உயிரை வாங்க போற… இல்ல…?” எரிச்சலுடன் கேட்டாள்.
அதே புன்னகை மாறாமல் ‘ஆம்’ என்பதுபோல் தலையை மட்டும் அசைத்தான்.
அவள் சோர்ந்துபோனாள். இவன் எப்படியும் போகமாட்டான். என்ன திட்டினாலும் போகமாட்டான். ஒருபுறம் அவனை நினைத்து மனது சந்தோஷப்பட்டாலும், இன்னொருபுறம் சந்தோஷப்படும் மனதை மிகவும் வெறுத்தாள்.
தளர்ந்து போனவளாய் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியே செல்ல நினைக்கும்போது “நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. கதைவை பூட்டாத. நான் கஞ்சி போட்டுத்தறேன்” என்றான்.
‘யார் உதவியும் இல்லாமல் இருந்துவிட்டு, இப்போது இவன் யார் இதெல்லாம் பேசுவதற்கு, செய்வதற்கு’ மனதில் கடுப்பு தோன்ற “அப்படியே கொஞ்சம் விஷத்தையும் கலந்து குடு. உன்தொல்ல இல்லமா போய் சேரறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே செல்ல…
அவனும் விடாமல் “அப்படியா சரி, நீ குடுச்சதுக்கப்பறம் நானும் அதையே குடுச்சிக்கறேன்” என்றான் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
அவனை பார்த்து முறைத்தவள், அவள் வீட்டிற்கு சென்று கதவை அறைந்து மூடினாள்.
வீட்டிற்குள் சென்றதும், நேற்று அவள் தூக்கி எறிந்த, தைத்த துணிகள் இருந்த பை கீழே கிடக்க, அவசரமாக அதை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டாள்.
‘ச்ச என்ன நம்பி வேல குடுத்தாங்க. என்ன பத்தி என்ன நினைப்பாங்க’ என்று அதை எடுத்துக்கொண்டு கதவை பூட்டும்போது, சத்தம் கேட்டு அவன் வெளியே வந்தான். கையில் துணி பையை பார்க்க, அவள் பேசாமல் அவனை கடந்து நடக்க முற்பட்டாள்.
“நான் மைதிலி மேம்’கிட்ட சொல்லிட்டேன். உனக்கு உடம்பு சரியில்ல, நாளைக்கு வந்து தருவனுட்டு. சோ போய் ரெஸ்ட் எடு… போ” என்று அவளை செல்லவிடாமல் தடுத்தான்.
‘இவன் அங்கு வரை சென்றுவிட்டானா?’ பற்களை கடித்துக்கொண்டு கோவப்பட்டவள் பையை அவன் கால்மேலேயே போட்டுவிட்டு உள்ளே சென்றாள்.
அவள் போட்டது வலித்தாலும், சிரித்துக்கொண்டே உள்ளே சென்றான் அதை எடுத்துக்கொண்டு. சிறிதுநேரத்தில் கஞ்சி காய்ச்சி அவளுக்கு கொடுக்க செல்ல, அவள் சோர்வாக உட்கார்ந்திருந்தாள்.
கதவை தட்டினான். திறக்க வில்லை. பலமாக தட்டினான் திறக்க வில்லை. “மிது நீ இப்போ திறக்கலை, கதவ உடைச்சுட்டு உள்ளே வருவேன்” என்று சொல்லிமுடிக்கவில்லை, கதவு திறந்தது.
“ஏன் கத்தற. நீ இங்க இருக்கறது எல்லாத்துக்கும் தெரியனுமா?” அர்ச்சனையை அவள் ஆரம்பிக்க “ஒழுங்கா கதவ தட்டறப்ப திறந்துட்டா, இவளோ பேசவேண்டியது வருமா” என்று அவளை பார்க்காமல், அவளை தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் சென்றான்.
அவன் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது கோவம் வந்தாலும் ஏனோ அவள் மனம் அதை விரும்பவும் செய்தது. அமைதியாக போய் படுக்கையில் உட்கார்ந்தாள்.
தன் நிலைமையை பார்த்துத்தானே வெட்கிக்கொண்டாள். யாரும் வேண்டாம் என்றிருந்தோமே. ஏன் இவனை பார்த்ததும் அந்த நினைப்பு மங்கிக்கொண்டிருக்கிறது.
தன் மனதின் திடம் இவ்வளவுதானா? என்று அவள் எண்ணிக்கொண்டிருக்கும் போது “மிது” என்று அவன் தெருவிற்க்கே கேட்கும்படி கத்தியதில் அவனை பார்த்தாள்.
“கத்தி கத்தி தொண்ட தண்ணி வந்துபோச்சு. இந்தா இதை குடி” என்று அவளிடம் கஞ்சியை கொடுக்க, எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்டாள். ஏனோ அதை தடுக்கவும் முடியவில்லை. குடிக்கவும் முடியவில்லை.
அவள் பக்கத்தில் உட்கார்ந்தவன் “எதையும் யோசிக்காம குடி மிது” என்றான் அக்கறையாக. அவனை பார்த்துவிட்டு குடிக்க ஆரம்பித்தாள்.
“நாளைக்கு முருகன் கோவில் போலாமா?” அவன் கேட்க , கொஞ்சம் யோசித்தவள் “இல்ல எனக்கு பீரியட்ஸ் வந்தாலும் வந்துடும். கோவிலுக்கு போகக்கூடாது” என்றாள்.
“ஏன் கோவிலுக்கு போக கூடாது?” கேள்வியாக கேட்க “ஆண்ட்டி தான் சொல்லிருக்காங்க. அவங்க போகமாட்டாங்கன்னு” என்றாள்.
புருவம் முடிச்சிட்டு “யாரு அந்த ஆண்ட்டி?” அவன் கேட்க, அவனை பார்த்து முறைத்து “வேற எந்த ஆண்ட்டிய எனக்கு தெரியும்? யார் கூட நான் பேசியிருக்கேன்? உன் அம்மா தான்” என்றாள் கடுகடுவென.
அதிர்ந்து அவள் புறம் திரும்பி அவளை பார்க்க, “பீரியட்ஸ் பத்தி நிறைய சொல்லிருக்காங்க. எப்படி நடந்துக்கணும். நடந்துக்கக்கூடாதுன்னு. ஆனா பாரேன்… அது வந்ததுக்கப்பறம் நடக்க வேண்டியதெல்லாம், முன்னாடியே நடந்துருச்சு என் வாழ்க்கைல… ஆண்ட்டி அத பத்தி எதுவுமே சொல்லல” ஆற்றாமையுடன் அவள் சொல்ல, அதன் அர்த்தம் புரிந்து கொள்ள அவனுக்கு நேரம் எடுத்தது.
ஆனால் புரிந்தவுடன், இதயம் வெடிப்பது போல், வயிற்றில் பூகம்பம் வருவதுபோல் உணர்ந்தான், அவள் பட்ட வேதனையை நினைக்கும்போது… துடித்துப்போனான்!
“என் வாழ்க்கைல நிறைய நடந்துருச்சு சக்தி. இதெல்லாம் நடந்துருக்கும்ன்னு நீங்க யாருமே நினைச்சிருக்கருக்கமாட்டிங்க. அவளோ ஏன் …அதெல்லாம் நடந்தப்ப என்ன நடக்குதுன்னே தெரியாம நான் இருந்தேன்”
“என்ன கார்ல ஏத்தினதுக்கப்பறம் மேனேஜர் அங்கிள் என்ன எங்கயோ போய் அடச்சுவெச்சுட்டாரு. ஒன்னுமே புரியல. கை ,கால, கட்டிபோட்டுட்டாங்க”
“மேனேஜர் அங்கிள்கிட்ட கேட்டேன் ‘ஏன் இப்படி பண்ணீங்கன்னு’, ஆனா அவர் பதிலே சொல்லல”
“அப்போ எவனோ உள்ள வந்தான். அவன்கிட்ட மேனேஜர் ‘ஒரு ரெண்டு நாள் இங்க இருக்கட்டும். அப்பறம் கூட்டிட்டு போய் விட்டுடலாம்’ன்னு சொன்னாரு. அவனும் சரின்னு சொன்னான்”
“எனக்கு என்னனு புரில. ஆனா ரெண்டு நாள் அங்கேயே தான்னு மட்டும் புரிஞ்சது. அப்பறம் அந்த மேனேஜர் போய்ட்டாரு. அங்க இருந்தவன் ஏதோ சாப்பிட குடுத்தான் கைக்கட்ட அவிழ்த்துவிட்டுட்டு”
“நான் சாப்பிட முடியாதுன்னு சொன்னவுடனே, என் கழுத்தை நெறிச்சான். ஆனா என்ன தோணுச்சோ தெரில.. அவன் கை எங்க…கெங்கேயோ…” சொல்லும்போது தொண்டை அடைத்தது மிதுலாவிற்கு.
பக்கத்தில் இருந்த சக்தியின் கையுடன் தன் கையை இறுக கோர்த்துக்கொண்டாள். அவள் விரல் நகத்தினால் அவன் கையில் கொடுத்த அழுத்தம், அவள் அனுபத்த வலியை விட ஒன்றும் பெரிதில்லை என்றே தோன்றியது சக்திக்கு…
அன்றிலிருந்து நடந்த சம்பவங்களை, தன் வாழ்வின் ரகசியத்தை ஒருவரை தவிர யாரிடமும் சொல்லாத மிதுலா, சக்தியிடம் நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்!
———————
இதை மிதுலா சொல்லிமுடிக்கும்போது சக்தி எப்படி உணர்ந்தானோ, அதே போல் தான் உணர்ந்தனர் கதையை கேட்டுக்கொண்டிருந்த ஆதவனும் மங்கையும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி!!!
