அகம் புறம் – 19

அகம் புறம் – 19:

அன்றைய தினமே பரபரப்பாக ஆரம்பமானது. ஒரு புறம் சத்யா பாலா தந்த பொருட்களையெல்லாம் பாரம்பரிய முறைப்படி மசாலாக்களாக செய்துகொண்டிருக்க, ரூபிணி அதில் சிலவற்றை மிக கவனமாக பேக் செய்துகொண்டிருந்தாள்.

சத்யாவின் கைகள் வேளையில் ஈடுபட்டாலும், ‘இதெல்லாம் நிஜமா?’ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

அன்று பாலா படகில் சென்றுகொண்டிருக்கும் போது, சத்யாவிடம் “நம்ம வீடியோ பார்த்து சாம்பிள் வாங்கினவங்க, ஒரு சமையல் வெப்சைட் பிளாக்கர் (food website blogger). யூடியூப் விலோக் (vlog) கூட இருக்கு. நம்மள பத்தி அவங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டேன்.

இப்போ, அவங்க வெப்சைட்ல ஆர்கானிக் தானியங்கள், அப்புறம் மசாலா எல்லாம் விற்க பிளான் பண்ணிருக்காங்களாம். நம்ம சாம்பிள் வச்சு செய்த டிஷ் அருமையா இருந்துச்சாம். அதுனால, சில மசாலாக்கள் பல்க் ஆர்டர் (bulk order) பண்ணிருக்காங்க. 

இப்போதைக்கு அவங்க ப்ராண்ட்ல விற்கறாங்களாம். நம்மள சீக்கிரம் FSSAI அண்ட் பிராண்ட் நேம் ரெஜிஸ்டர் பண்ண சொல்லிருக்காங்க. ரெண்டு நாள்ல அட்வான்ஸ் கொடுக்கிறதா சொல்லிருக்காங்க சத்யா” என்றான்.

சத்யாவால் நம்ப முடியவில்லை. இன்ப அதிர்ச்சியில் கண்கள் கலங்கியது. பாலாவை நன்றியுடன் பார்த்தாள்.

“கங்கிராட்ஸ் சத்யா. இது உனக்கு கிடைச்ச வெற்றி. உன்னோட எஃப்போர்ட்’க்கு கிடைச்ச வெற்றி!” 

அவன் சாதாரணமாக சொன்னாலும், இந்த வாக்கியம் நிச்சயமாக தொண்டையை அடைத்தது அவளுக்கு. 

‘தன்னலமில்லாமல் வெற்றிக்கான காரணம் நீதான் என்கிறானே… யாருக்கு வரும் இந்த மனம்?’ என்று நினைத்த கணம், கனத்த மனதுடன், “நீயில்லைனா இதெல்லாம் நடந்திருக்காது பாலா. தேங்கா மாங்கானு பீச்ல தான் சுத்திட்டு இருந்திருப்பேன்” புன்னகைக்க நினைத்து, முடியாமல் கண்களில் கண்ணீர் வெளியேறியது.

“உன்னோட திறமைக்கான பலன் யார் இருந்தாலும் இல்லைனாலும், உனக்கு வந்து சேர்ந்திருக்கும்” என்ற பாலா, அடுத்து ‘என்ன செய்யலாம்’ என பேச்சை மாற்றி அருணுடன் கலந்தாலோசித்தான்.

சத்யா மனதில், ‘நடப்பதெல்லாம் நிஜமா’ என்ற எண்ணமே அன்றும் இன்றும். 

மூவரும் மசாலா தயாரிப்பில் ஈடுபட்டிருக்க, அப்போது வீட்டிற்கு வந்தார் மஞ்சுளாவின் தோழி. கடைசியாக சத்யா, கடன் தொகை கட்ட வேண்டும் என்று அவருடன் சென்ட்ரல் ஸ்டேஷன் சென்றபோதுதான்,  பாலாவை பார்க்க நேர்ந்தது.

அவரை பார்த்ததும் உற்சாகத்துடன் வரவேற்றாள் சத்யா. அவர் பாலாவை பார்த்ததும், அவர் முகத்தில் குழப்பத்துடன் புன்னகை. பாலா புன்னகைத்தான். 

அவ்வளவுதான், குழப்பத்துடன் பார்த்தவர், பின் புன்னகைத்தார். வேறெதுவும் கேட்கவில்லை. புரிந்துகொண்டார்.

மஞ்சுளா உறங்கிக்கொண்டிருந்தார். சத்யா பொறுமையாக வேலையின் இடையே நடந்ததனைத்தையும் சொன்னாள். 

‘ஒவ்வொரு செயலும், நிகழ்வும் காரணம் இல்லாமல் நடக்காது. அன்று சத்யா அவர் மறுத்தும் கேட்காமல் பாலாவை காப்பாற்றியது எவ்வளவு நல்லதாக முடிந்துள்ளது’ என எண்ணி, சத்யா ரூபிணியை நினைத்து நிம்மதி அடைந்தார்.

அதுவரை புன்னகையுடன் அமைதியாக இருந்த பாலா, “ஏம்மா, எங்களுக்கு பெரியவங்கன்னு யாரும் வழிநடத்த இல்ல. எங்களுக்கு உதவியா இருக்க முடியுமா?”

முதன் முதலில் சத்யாவுடன் அவரை பார்த்திருந்தான். ‘எதற்காக அப்படி கையேந்த வேண்டும்?’ என எண்ணியே கேட்டான். 

சத்யாவுக்கு மறுபடியும் அதிர்ச்சி. திகைப்புடன் பார்த்தாள் பாலாவை. அவனின் ‘ஏம்மா’ என்ற விளிப்பிலேயே மனம் நெகிழ்ந்து போனார் மஞ்சுளாவின் தோழி. கண்கள் கலங்க சரி என தலையசைத்தார். 

……………

அந்த வார இறுதி, பாலா மனநல மருத்துவரிடம் சென்றான். உடன் அருணும், சத்யாவும்.

ஆரம்ப கேள்விகள் மற்றும் பரிசோதனைக்குப்பின், “முன்னாடியே வந்திருக்கணுமே… ஏன் டிலே?” என கேட்டார் மருத்துவர்.

“கொஞ்சம் வேலைல மறந்துட்டேன் டாக்டர்” – பாலா.

“மருந்து?” என்று அவர் நிறுத்த, “முன்னாடி கொடுத்த மாத்திரை முடிஞ்சுது டாக்டர். அதுனால சாப்பிடல” பாலா பதில் தந்தான்.

அன்று போலவே இன்றும் தனியாக பேச அழைத்துச்சென்றார். 

“எப்படி இருக்கீங்க… எப்படி ஃபீல் பண்ணீங்க பாலா?” மருத்துவர் ஆரம்பிக்க, பாலா நேரமெடுத்து, கொஞ்சம் தெளிவுடன் பேச ஆரம்பித்தான்.

“விருப்பம் போல இருக்கேன் டாக்டர். அது ரொம்ப நிம்மதியா இருந்தாலும் சில சமயம் என்னையும் மீறி சில விஷயங்கள், மனச பாதிக்குது” என்றவன் அன்று அவன் அம்மாவுடன் தொலைபேசி வழி பேச சென்றபோது அங்கிருந்தவர்கள் இகழ்ந்து பேசியதை பகிர்ந்துகொண்டான்.

“அவங்க என்னை, என் குரலை வச்சு, ஒரு மாதிரி பேசினதை கேட்டு வீட்டுக்கு வந்து ரொம்ப என்னையே ஹெர்ட் பண்ணிக்க இருந்தேன்” என்ற பாலா, அன்று அவன் எப்படி உணர்ந்தான், பின் மஞ்சுளா தன்னை தேற்றியது என்பதையும் சொன்னான்.

வெளியே கேட்டுக்கொண்டிருந்த அருணுக்கும், சத்யாவுக்கும் மனது கனத்தது. இதை தான் அன்று அவர்களிடம் சொல்ல மறுத்தான் பாலா என்பது புரிந்தது.

பாலா தொடர்ந்தான்.

“எனக்கு எப்போல்லாம் மனசு ஒரு நிலைல இல்லையோ, சத்யாவை நினைச்சுப்பேன் டாக்டர்” என்றபோது சத்யா புருவங்கள் உயர்ந்தன. 

“எவ்வளவோ சங்கடங்களை தாங்கிட்டு, மனசு தளர்ந்தாலும்… திரும்ப தன்னை மீட்டெடுத்து வாழனும்னு நினைக்கறது தான் எனக்கு நானே சொல்லிப்பேன் டாக்டர்” என்றபோது சத்யா கண்கள் கலங்கினாலும் உதடுகள் லேசாக விரிந்தது.

அடுத்து செந்தில் யார், என்ன என்றெல்லாம் சொல்லாமல், தன்னை பேசியதை மட்டும் சொன்ன பாலா, “எனக்கு பிடிக்கல டாக்டர். சிலர் ஒரு மாதிரி என்னை பார்த்து பேசுறது வேதனையா இருக்கு. ரொம்ப நாள் கழிச்சு அன்னைக்கு மனசு ஒருநிலைல இல்லாம… திரும்ப” என்ற பாலா சற்று தயங்கி…

“ஏதாச்சும் என்னைய பண்ணிக்கலாமான்னு… ஏதோ ஒரு உந்துதல். அப்போ, மறுபடியும் சத்யாவை பார்த்து மனசு மாறிடுச்சு” தடுமாறி பேசிய பாலாவை கண்டு அதிர்ந்தார்கள் அருணும் சத்யாவும்.

அருண் சத்யாவை பார்க்க, தனக்கு தெரியாது என்பது போல குற்றஉணச்சியுடன் தலையசைத்தாள். செந்திலால் எவ்வளவு துன்பம், மற்றும் எந்த அளவுக்கு பாலாவை எடுத்து சென்றுள்ளது என்பதை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. பதைபதைத்து. 

சில நொடிகள்… மறுபடியும் முயன்று பேச்சை தொடர்ந்தான் பாலா. 

“அசிங்கமா இருக்கு டாக்டர். இந்த குரலை கேட்டப்புறம் என்னை பார்க்கற பார்வை, இந்த உடலை மேல கீழ ஒரு மாதிரி பார்க்கறப்பெல்லாம் ஏதோ அழுந்துது டாக்டர். இது இல்லாம என்னால வாழ முடியாதா டாக்டர்?” கண்ணீருடன் தன் உடலை பார்த்து கேட்டான்.

அவனை அதற்கு மேல் கேள்வி கேட்காமல் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு வெளியே வந்தார். 

சத்யாவுக்கும் அருணுக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மருத்துவர் பேச ஆரம்பித்தார்.

“பாலா கொஞ்சம் கொஞ்சமா மாறி வந்தாலும், சில சமயம், சில சூழ்நிலைகளால மன அழுத்தம் ஏற்பட்டுருக்கு. அதுனால இந்த வாழ்க்கை எதுக்குன்னு தோணறப்ப தான், தப்பான முடிவுகள் எடுக்க தோணுது. 

Gender Dysphoria – ஒரு மனநோய்னு இல்ல… அதாவது டிசார்டர் வகைல வராதுன்னு ஆராய்ச்சிகள் சொல்லியிருக்கு. அத Gender Identity Disorderனு, சொல்லகூடுதுனு சொல்லியிருக்காங்க.

ஆனா, இது போல எண்ணங்கள் … அதாவது வாழ்க்கை மேல விரக்தி, எதுக்கு வாழனும் அப்படின்னு நினைக்கறதெல்லாம் ஒரு வகையான மன அழுத்தம், டிப்ரெஷன்க்கு கொண்டுபோகும். அது வேற விதமான மனநோய்க்கு வித்திடும்.

முன்னமே இதுபோல எண்ணங்கள், தூக்கமின்மை காரணமா தான், பாலாவுக்கு மருந்துகள் கொடுத்திருந்தேன். இந்த மருந்து எல்லாம் மூளை சம்மந்தப்பட்டது. அது எடுத்துக்கறப்ப, மூட் ஸ்விங்ஸ் கண்ட்ரோல் பண்ணி, நார்மலா இருக்க வைக்கும். தூக்கம் நல்லா வரும்/

பட், அதுபோல மருந்துகள் எடுக்க ஆரம்பிச்சுட்டா, டாக்டர் சொல்லாமலோ, இல்ல எந்த காரணத்துக்காகவும் அப்படியே நிறுத்த கூடாது. அதுவேற மாதிரி பக்கவிளைவுகள் கொடுக்கும். 

உதாரணம் சொல்லனும்னா, யாரோ பாலாவை ரொம்ப அநாகரீகமா பேசியிருக்காங்க. அது அவங்கள ரொம்ப பாதிச்சிருக்கு. அந்த சூழ்நிலைல, ஏதாச்சும் பண்ணிக்கனும்னு தோணிருக்கு. மூட் ஸ்விங்ஸ் அதிகம் ஆயிருக்கு. 

ஒருவேளை சரியா மருந்து எடுத்திருந்தா, மூட் ஸ்விங்ஸ் கண்ட்ரோல் ஆகியிருக்கும். பட், மருந்து முடிஞ்சதுனு எடுத்துக்காம இருந்திருக்காங்க. மருந்தும், கவுன்செல்லிங்’கும் ரொம்ப முக்கியம் அவங்களுக்கு. 

சோ, இனி அவங்களே மறந்தாலும் நீங்க கொஞ்சம் கவனமா இருங்க” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போது பாலா வெளியே வந்தான்.

அருணையும், சத்யாவையும் வெளியே இருக்க சொல்லிவிட்டு… பாலாவிடம் பேச ஆரம்பித்தார் மருத்துவர்.

சில அறிவுரைகளை கூறிவிட்டு, “பெண்மைக்கான உடல் பாகங்கள் பிடிக்கலைனு சொன்னீங்க பாலா இல்லையா… நான் உங்களுக்கு என்னென்ன ஆப்ஷன்ஸ் இருக்குனு சொல்றேன். அதற்கான பாதகங்களையும் சொல்றேன். டைம் எடுத்துக்கோங்க. உங்களுக்கு எது சரினு தோணுதோ அத பண்ணலாம்.

மொதல்ல, ஹார்மோன் தெரபி எடுத்துப்பாங்க. திருநங்கைகள் பெண்மைக்கான ஈஸ்ட்ரோஜென்’னு (Estrogen) ஹார்மோன் எடுத்துப்பாங்க. அதனால அவங்களுக்கு பெண்மைக்கான சில மாறுதல்கள் தெரியவரும்.

திருநம்பிகள் எடுத்துக்கற ஹார்மோன் தெரபில… டெஸ்டோஸ்டீரான்’னு (testosterone) சொல்ற ஆண்களுக்கான ஹார்மோன் எடுத்துப்பாங்க. அப்படி எடுக்கும்போது, ஆண்மைக்கான உடல் கூறுகள் கொஞ்சம் கொஞ்சமா தெரிய வரும். அதாவது தோல் தடிமன் ஆகுறது, முகத்துல ரோமங்கள் வளர்றது, குரல்ல மாற்றம் தெரியறது, அதிகம் வேர்க்கறதுனு… சில மாற்றங்கள் தெரியவரும். 

அப்புறம், டிரான்ஸ்ஜெண்டர்ஸ், அதாவது திருனர்கள் செய்துக்கற அறுவை சிகிச்சைகளுக்கு “பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை” – “Sex Reassignment Surgery”னு சொல்வாங்க. இதை செய்றதுக்கு முன்னாடி அவங்க உடல் இதை ஒத்துழைக்குமான்னு பார்த்துட்டு தான் செய்வாங்க. 

ஆணாக பிறந்து பெண்ணாக மாறும் திருநங்கைகளுக்கு, மேல் உடல் பாகம், அதாவது மார்பகங்கள் செயற்கை முறைல… சிலிகான் வைத்து இம்பிளான்ட் பண்ணுவாங்க. சிலர் உடம்புல, வேற பாகத்துல இருந்து திசுக்கள் (tissue) எடுத்து ஆப்பரேட் பண்ணுவாங்க. அதை டாப் சர்ஜெரி’னு (Top Surgery) சொல்வாங்க.

அதுவே பெண்ணாக பிறந்து ஆணாக மாறும் திருநம்பிகள் செய்ற டாப் சர்ஜெரில, மார்பகங்களை சரி செய்து, அதாவது திசுக்களை அகற்றி, ஆண்களை போல மார்பகங்களை மாதிப்பாங்க. சிலர் Mastectomyனு சொல்ற, மார்பகங்களை மொத்தமா நீக்கும் சர்ஜெரி செய்துப்பாங்க. 

பொதுவா திருநங்கைகளும் சரி, திருநம்பிகளுக்கும் சரி, டாப் சர்ஜெரி செய்ததும், உடல்  மற்றும் மன உபாதைகள் கொஞ்சம் கடுமையாகவே இருந்தாலும், சமாளிக்க கூடியதா சிலருக்கு இருக்கும். 

அடுத்து வர்ற ஆப்பேரஷன்… கீழ் உடல் பாகங்களுக்கான பாட்டம் சர்ஜெரி… திருநங்கைகள் பிறப்புறுப்பை அகற்றி, பெண் மாதிரி மாற்றுவாங்க. அதாவது உறுப்பு மாற்றங்கள் தான் செய்வாங்க.  

ஆனா, திருநம்பிகளுக்கு, ஆண் மாதிரி பிறப்புறுப்பை உருவாக்கணும். அதாவது உடல்ல புது உறுப்பு சேர்க்கறது. உடலில் சில குறிப்பிட்ட பகுதிகள்ல இருந்து திசுக்கள் சேகரித்து செய்யற அறுவை சிகிச்சை Metoidioplasty. இதுக்கப்புறம் இன்னமும் இரண்டு சர்ஜெரி Phalloplasty, Scrotoplasty சிலர் செய்துக்குவாங்க. 

இன்னமும் சிலர், மாதவிடாய் வர்றது நிறுத்தணும்னு கர்பப்பை கூட ரிமூவ் பண்ணிப்பாங்க. 

சோ, நமக்கு எது செய்துக்கணும்னு நாம தான் முடிவு பண்ணனும். 

திருநங்கைகளை கம்பேர் பண்றப்ப, திருநம்பிகளுக்காக செய்ற கீழ் உடல் அறுவை சிகிச்சைகள் அதிகம். அதுனால ஏற்படற மன அழுத்தம், பக்க விளைவுகள் இன்னும் அதிகம். 

சிலருக்கு சிகிச்சை தோல்வில முடியலாம். சிலருக்கு நினச்ச மாதிரி திசுக்கள் வேலை செய்யாம போகலாம். ரத்தப்போக்கு, இல்ல நிரம்பு பிரச்சனை வர்றதுக்கு சாத்தியம் சிலருக்கு இருக்காலம். இது எல்லாத்தையும் விட, இதுக்கு ஆகுற செலவுகள் பல லட்சங்கள். 

திருநங்கைகளுக்கு இப்போதான் அரசாங்கம் இலவசமா இந்த சிகிச்சைகளை செய்றதா சொல்லிருக்காங்க. ஒரு சிலருக்கு செய்துருக்காங்க. ஆனா திருநம்பிகளுக்கு இன்னும் எதுவும் ஆரம்பிக்கல.

என்னடா பயமுறுத்துற மாதிரி பேசறேனேன்னு நினைக்க வேண்டாம் பாலா. இதுல இருக்குற நல்லதை சொல்வதை விட, அதுனால வர்ற பக்கவிளைவுகள் சொல்லணும்… அதுதான் சரி. அப்போதான் உங்களுக்கு என்ன வேணும்னு, என்ன தேவைன்னு… நீங்க சரியா முடிவு பண்ண முடியும்” 

சிகிச்சை முறைகளை சொன்னவர், பாலாவுக்கு தேவையான கவுன்செல்லிங் அளித்து, மருந்துகளை பரிந்துரைத்து… தவறாமல் அனைத்தையும் எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி அனுப்பிவைத்தார். 

மருத்துவரை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து அவர் பேசியதை யோசித்தவனுக்கு, மனதில் தோன்றிய அடுத்த விஷயம்… சத்யா இதுபோல அறுவை சிகிச்சையெல்லாம் செய்யாமலேயே, உடலளவில் நிம்மதியாக இருக்கும்போது, தனக்கு இவ்வளவு பெரிய சிகிச்சைகள் தேவையா என்று தான் யோசித்தான்.  

வேண்டுமென்றால் ஹார்மோன் சிகிச்சை மட்டும் எடுத்துக்கொள்ளலாமா என்றும் யோசித்தான். 

சத்யாவும் அருணும் பாலாவை தொந்தரவு செய்யாமல்… இன்னமும் சிரத்தை எடுத்து அவனை கவனிக்க வேண்டும் என முடிவெடுத்திருந்தனர்.

————

அன்று யூடியூப் வீடியோ எடுப்பதற்கான வேலையில் சத்யாவும் பாலாவும் ஈடுபட்டிருக்க, மஞ்சுளாவின் தோழி இருவருக்கும் உதவியாக இருந்தார். ரூபிணி பள்ளிக்கு சென்றிருந்தாள்.

அந்நேரம் வீட்டிற்கு வந்தவர்களை பார்த்து சத்யா அதிர்ந்தாள். 

செந்திலின் தங்கை… ரூபிணியின் தோழி மற்றும் அவள் அம்மா வீட்டிற்கு வந்திருந்தார்கள். 

முதலில் அதிர்ந்தாலும், மனது படபடத்தாலும்… வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவர்களை உபசரித்தாள். 

மிகுந்த தயக்கத்துக்குப் பின், “தாயி எங்கள மன்னிச்சிடு மா. அந்த படுபாவி இப்படியெல்லாம் பண்ணுவான்னு நினைக்கவே இல்ல. வேலை செய்றவங்க மூலமா தான் அங்க என்ன நடந்துச்சுனு எனக்கு தெரிய வந்துச்சு. 

பாவி இப்போகூட அவன் செய்தது தப்புனு அவனுக்கு புரியல. ஆனா என்னால அப்படியே இதை விட முடியாலதாயி. உன் சாபம் எங்கமேல பட்டுச்சுன்னா… எவ்ளோ ஜென்மம் எடுத்தாலும் அந்த பாவம் எங்களை விட்டு போகாதுமா.

உன்னைப்போல இருக்கவங்களெல்லாம் எங்களுக்கு சாமி மாதிரி. பாவிப்பய இப்படி பண்ணிட்டானே” உடைந்து அழுதுவிட்டார் அந்த பெண்மணி. சத்யாவுக்கு கண்களில் கண்ணீர் நிற்கவில்லை.

பாலா அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான். 

அவரின் கண்ணீரை பார்க்க முடியாமல், ஆசுவாச படுத்த அவரிடம் சென்றவள் சட்டென தன்னை நினைத்து சற்று தள்ளியே நின்றுகொண்டாள். செந்தில் பேசிய பேச்சுக்கள் நஞ்சு தேய்த்த முள் போல இன்னமும் குத்திக்கொண்டு தான் இருந்தது.

பொதுவாகவே இங்கு ஒரு சாரார் மற்றும் வடக்கில்… திருநங்கைகளை மிகவும் மதிப்பவர்கள். அவர்களிடம் ஆசி வாங்கினால் நல்லதே நடக்கும் என்று எண்ணுபவர்கள். 

பல நல்ல காரியங்களுக்கு திருநங்கையை அழைப்பது கூட வடக்கில் ஒரு பாரம்பரியமாகவே இன்னமும் இருக்கிறது. கிருஷ்ணரின் மறுபிறப்பு என்றே கருதுவர். 

மகாபாரதத்தில் அர்ஜுனனின் மகன் அரவான்… தன் தந்தையை போலவே மிகப்பெரிய வீரனாக இருந்தார். தன் தந்தை மற்றும் இதர பாண்டவர்களுடன் சேர்ந்து குருஷேத்திர போரில் கலந்து கொண்டார். 

போருக்கு முன் செய்யப்படும் சடங்கான ‘களப்பலி’ என்பதை எவர் செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயம் போரில் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

இந்த சடங்கின் போது, மிகச் சிறந்த வீரர் ஒருவர் தனது உயிரை காளிதேவிக்கு காணிக்கையாக கொடுக்க வேண்டும், இவ்வாறு கொடுப்பவரின் படை நிச்சயம் வெற்றி பெறும். இந்த சடங்கிற்காக அரவான் தன் உயிரை கொடுக்க முன்வந்தார். 

அவரின் மாபெரும் தியாகத்தை எண்ணி, கிருஷ்ணபகவான் வரம் தருவதாக வாக்களிக்க, அரவான் கேட்டது… ‘இறந்தாலும் 18 நாள் போரையும் பார்க்க வேண்டும்’ மற்றும் ‘தியாகத்தை செய்யும் முன் தனக்கு திருமணம் செய்து கொள்ள ஆசை’ என்பதையும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் இன்னமும் சில நாழிகையில் உயிரை விடப்போகும் ஒருவரை, திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. அரவானின் ஆசையை நிறைவேற்ற, கிருஷ்ணர் பெண் உருவமான மோகினி வடிவம் எடுத்து, அரவானை திருமணம் செய்து கொண்டு, அந்த இரவை அரவானோடு கழித்தார். கிருஷ்ணரின் இந்த அவதாரம் மூலம் தான் திருநங்கைகள் உருவானதாக சிலரால் கூறப்படுகிறது. 

அரவான் மோகினி; இருவரின் திருமணம்; அரவானின் மரணம்; மோகினி விதவையானது; அரவானின் இழப்பால் ஒப்பாரி; இவையே தமிழகத்தில் உள்ள கூவாகத்திற்கும், அரவானை கூத்தாண்டவராக பாவிப்பதற்கும் அடிப்படையாக அமைந்தது.

இங்கே திருநங்கைகள் கடைகேட்டலில் இருக்கும்போது கூட, பலர் பணம் யாசிக்கும் முன், கடவுளை வேண்டுவர். பின் நல்லாசி வழங்கி பணம் பெற்றுக்கொள்வது வழக்கம்.

சத்யா அவரை சமாதானப்படுத்த… “அவன் உனக்கு எவ்வளவு தரணும்னு தெரியல மா. என்கிட்டபணமா தர காசும் இல்ல. பெண்ணுக்காக வாங்கின இந்த நகை இருக்கு. இத வச்சுக்கோ” என்று கலங்கியபடி அவர் தர, சத்யாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

இழந்தது பாலாவின் பணம். ஆனாலும் பெண்ணிற்காக என்று அந்த பெண்மணி வாங்கிய நகையை வாங்கவும் மனம் ஒப்பவில்லை. பாலாவை சங்கடத்துடன் பார்த்தாள்…

ஒரே ஒரு செயல் தான் செய்தான் பாலா. கண்களை மூடித்திறந்தான். அவ்வளவே! அதில் என்ன பொருள் அவளுக்கு புரிந்ததோ. கண் கலங்கிய புன்னகையுடன் தலையசைத்தாள்.

பின், “பரவால்ல மா. உங்க பொண்ணு, ரூபிணி போலத்தான் எனக்கு. பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும். பார்த்துக்கலாம். கவலைப்படாதீங்க. சாபமெல்லாம் தர தெரியாது எனக்கு. 

சங்கடம் இருந்துச்சு தான். ஆனா அதெல்லாம் கடந்து போயிட்டே இருக்கணும் இல்லையா… மறக்க முயற்சி செய்யறேன். மன்னிச்சுட்டேன்னு சொல்லமாட்டேன். ஏன்னா தப்பு என் பேர்லயும் தான். மனுஷங்களை இன்னமும் புரிஞ்சுக்காம இருக்கேனே!” என்றவள்… 

“பொண்ண நல்லா படிக்க வைங்க. இதெல்லாம் வேண்டாம்” என முடித்துக்கொண்டாள். 

அவர் எவ்வளவோ சொல்லியும் வேண்டாம் என சொல்லி அனுப்பி வைத்தாள் சத்யா. அனைத்தையும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் பாலா. சத்யாவால் தனியாக அனைத்தையும் செய்யமுடியும் என்றே அவனுக்கு தோன்றியது. 

பாலா தன் முடிவுக்கு சம்மதம் தரவேண்டும் என்று அவசியமில்லை… இழந்தது அவன் பணம். இருந்தும் அவன் கண்ணசைவில் தன்னை முடிவெடுக்க சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது சத்யாவிற்கு.

அவர் சென்றவுடன், பாலாவிடம்… “தேங்க்ஸ் பாலா” என்றாள் மனநிறைவுடன். பின், “நான் வாங்கலாம்னு நினைச்சிருந்தாலும், நீ வாங்கி இருக்க மாட்டனு எனக்கு தெரியும்” என்று புன்னகைக்க, பாலா புருவங்கள் உயர்ந்தது.

நிச்சயமாக அதை தான் அவனும் செய்திருப்பான். அவளின் புரிதலை எண்ணி மனம் நெகிழ்ந்தது. மென்னகையுடன் ஆம் என தலையசைத்தான். 

அடுத்த ஓரிரு நாட்கள் சென்றிருந்த நிலையில்… பாலா முன்பே முடிவெடுத்தது போல கௌதமிடம் பேசுவதற்கு அவனை அழைத்தான்!

———-

அந்த அமைதியான பூங்காவில் ஓரிடத்தில் பாலாவும் கௌதமும், சற்று இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தார்கள். 

அருணும் சத்யாவும் பாலாவின் பாதுகாப்பை எண்ணி அவனுடன் வந்திருந்தாலும், கௌதமுக்கும் பாலாவுக்கும் தனிமையை தந்து சற்று தொலைவில் இருந்தனர்.

முதலில் பல தயக்கத்துடன், ஏதோ அழுத்தத்துடன் பாலா இருந்தாலும்… தன்னை சமாளித்துக் கொண்டு பேச, அனைத்திற்குமே அமைதியாக இருந்தான் கௌதம்.

இடையில் ஒரு தருணத்தில் பாலா அமைதியாகிவிட, கௌதம், “எனக்கு நடந்ததெல்லாம் தெரியும் பாலா. உன்னை இன்னும் வருத்தக்கூடாதுனு தான் இத்தனை நாளா வரல” என்றான் கௌதம் உணர்ச்சிகளற்ற முகத்துடன்.

பாலா அதிர்ந்து பார்த்தான் கௌதமை!

  •  
  •  
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !! ©All Rights Reserved
0
Would love your thoughts, please comment.x
()
x