அகம் புறம் – 1A

அகம் புறம் – 1A 

சொந்த பந்தங்கள் சூழ, அந்த பிரமாண்ட மண்டபமே குதூகலமாய் காட்சியளித்தது அடுத்த நாள் நடக்க இருக்கும் திருமணத்திற்க்காக. 

மணமகன் கௌதம் அன்றைய வரவேற்புக்காக தயாராக, மணமகள் பாலா தன் கையறு நிலையை எண்ணி மனம் நொந்து தயாராகிக் கொண்டிருந்தாள்.

முடிந்தவரை முயற்சி செய்தாயிற்று… இந்த திருமணத்தை நிறுத்த. ஆனால் எதுவுமே அவளுக்கு உதவவில்லை. தன் வாழ்க்கை இருண்டது போல ஒரு உணர்வு!

அவள் பெற்றோருக்கோ அவள் மேல் அளவு கடந்த நம்பிக்கை! ‘எங்கே அவள் தோழன் அருண்னுடன் வீட்டை விட்டு ஓடி விடுவாளோ’ என்று எண்ணி… பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள், மற்றும் பத்தொன்பது வயதை கடந்த அடுத்த இரண்டு வாரத்தில்… திருமணத்திற்கான தேதியை முடிவு செய்துவிட்டனர்.

அவளின் மருத்துவ கனவை கூட கானல் நீர் ஆக்கி விட்டு, நெருங்கிய சொந்தமான கௌதமுடன் திருமணம் நிச்சயம் செய்தனர்.

கௌதம், ‘திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லை’ என்று தெரிந்த பின்னும் மணம் முடிக்க ஒப்புக்கொண்டான். ஒப்புக்கொண்டதற்கான காரணங்கள் பல! 

‘எல்லாம் பார்த்துக்கொள்ளலாம்’ என்ற நம்பிக்கையில் இதோ இன்று உல்லாசமாக வரவேற்புக்கு தயாராகிக் கொண்டிருக்கிறான்.

பாலா மற்றும் கௌதமின் குடும்பம் சேலத்தில் பெயர்போன குடும்பம். மில் மற்றும் ஏற்றுமதி தொழிலில் கொடிகட்டி திகழ்பவர்கள்.

கவுரவம், பணம், அந்தஸ்து, இனம், சாதிப்பற்று… இது அனைத்தையும் பெரிதாக நினைக்கும் பெரிய கூட்டுக் குடும்பம். 

பாலாவின் குடும்பம், கௌதமின் குடும்பம், மற்றும் நிறைய சொந்தங்களுடன் ஒன்றாக பழமையான பங்களா போன்ற வீட்டில் வாழ்பவர்கள். 

காலம் காலமாக மில் தொழில் செய்தவர்கள், பாலா பிறந்த பின், தயக்கத்துடன் ஏற்றுமதி தொழிலில் கால் வைத்தனர். நினைத்ததை விட, பலமடங்கு அதில் லாபம் கிட்டியது. அவள் பிறந்த நேரம் தான் என கருதி… குடும்பத்திற்கே பாலா செல்ல பிள்ளையானாள்.

அப்படி இருக்கும் குடும்பத்துக்குள், அதுவும் அவர்களின் மகாலட்சுமி என்று சொல்லும் பாலாவின் திருமணமிது.

அவர்களின் செல்வ நிலை, மற்றும் சமுதாய நிலை… திருமணத்தில் நடக்கும் ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் பிரதிபலித்தது. அவர்கள் இன மக்களால் சூழப்பட்டிருந்தது அந்த மண்டபம்.

மணப்பெண் அறையில் பாலாவுக்கு ஒப்பனைகள் நடந்து கொண்டிருக்க, அவளின் மொபைலில் ஒரு குறுஞ்செய்தி. அனுப்பியவன் அருண்!

சுற்றி ஆட்கள் இருக்க, திறந்து பார்க்க முடியாத நிலை. கைகள் பரபரத்தது. சரியான நேரத்திற்காக காத்திருந்தாள்.

ஒப்பனை முழுதும் முடிந்த பின், கிடைத்த சில நொடிகளில் அவசரமாக பார்த்தவள் கண்களில் ஒரே சமயத்தில் நிம்மதி, மகிழ்ச்சி, பயம், பதட்டம் என பல வித உணர்வுகள்.

‘எப்படியாவது இன்றிரவு தப்பித்துவிடலாம்’ என்றது அந்த செய்தி.

உடனே குறுஞ்செய்தியை அழித்துவிட்டு, மொபைலை அணைத்தாள். எங்கே யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் என்ற பயத்தில். 

சில நொடிகளில் மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள் பாலா.

அடுத்து… வரவேற்பு ஆரம்பமானது. முதலில் புகைப்படம் எடுக்கும் படலம். பல விதங்களில் நின்றபடி, அமர்ந்தபடி எடுக்க… அடுத்து தோளோடு அணைத்து, பின் அதுபோலவே சில படங்கள்.

எதிலும் சிறு புன்னகை இல்லை அவள் முகத்தில். அதுவும் கௌதமுடன் சேர்ந்து எடுக்கும்போது, உடல் கூசியது. எப்போது இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என தவித்தாள். அதுவும் பல பல வேலைப்பாடுகள் நிறைந்த அந்த புடவை மற்றும் அட்டிகைகள் மூச்சை அடைப்பது போல இருந்தது.

‘என்னை சீக்கிரம் காப்பாற்று அருண்’ என்று அவள் மனம் தவித்தது. 

அவளுக்கு தற்காலிக விடுதலை கிடைத்தது போல, வரவேற்புக்கான பரிசுகள் தரும் நிகழ்வு ஆரம்பமானது. 

நேரம் செல்ல செல்ல, பதட்டம் அதிகரித்தது பாலாவுக்கு. பக்கத்தில் இருந்த கௌதம் ஏதேதோ பேசினான் ஆனால் எதுவுமே பதியவில்லை. அவள் எதுவும் கேட்கவில்லை என்று தெரிந்தும், அவன் மனம் தளராமல் பேசினான். 

இரவு நேரம் ஆனது. மணமக்களை உணவு உண்ண அழைத்துச் சென்றனர். அங்கேயும் அடுத்த கட்ட புகைப்படங்கள். வெறுப்பாக வந்தது அவளுக்கு. சின்ன சின்ன தீண்டல் கூட எரிச்சலாக இருந்தது.

அது அவனுக்கு புரிந்தாலும், அமைதியாக அவளை பார்த்தபடியே, அவளின் செய்கைகளை கணித்தபடியே இருந்தான் கௌதம்.

ஒரு வழியாக சாப்பிட்டு  முடித்த பின், அவரவர் அறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உள்ளே வந்த பாலா அடுத்த நொடி மொபைலை பார்க்க, அதில் அருணிடம் இருந்து மற்றொரு குறுஞ்செய்தி. 

‘இரவு பனிரெண்டு மணி அளவில் பால்கனி வரவும். தப்பிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளும் பக்கா. ஜாக்கிரதை’

அதில் சொல்லியிருந்த தகவலை செயல்முறை படுத்த ஆயத்தமானாள்.

அவசரமாக கட்டியிருந்த புடவையை கழற்றி எறிந்தாள். நிம்மதியாக மூச்சு விட முடிந்தது இப்போது. சுவற்றை எகிறி குதிக்க சுலபமாக இருக்க காட்டன் பேண்ட்  டீஷர்ட்’க்கு மாறினாள்.

அந்நேரம் அவள் அம்மா உள்ளே வந்தார். வந்தவர் அவள் உடையை பார்த்துவிட்டு…

“இங்க பாரு பாலா. கல்யாணம் ஆகப்போற பொண்ணு, இனி இத போல டிரஸ் போடாதே. எங்களை தான் தப்பா பேசுவாங்க” என்றவர் அவள் அருகில் வந்தமர்ந்து…

“இது தான் இனி உன் வாழ்க்கை. புரிஞ்சு நடந்துக்கோ பாலா. படிப்பு மட்டும்  வாழ்க்கை இல்லம்மா. நீயே சொல்லு உனக்கு நாங்க நல்லது தானே யோசிப்போம்?” என்று சில அறிவுரைகளை தந்துவிட்டு, துணைக்கு ஓரிரு சொந்தங்களை அவளுடன் அமர்த்திவிட்டு சென்றார். 

அவள் அம்மா பேசி சென்றவுடன், ‘அம்மாவிடமாவது மனம் திறந்து பேசி இருக்கலாமோ?’ என்று அவள் மனதில் சின்ன நெருடல். 

‘சொன்னாலும் தன்னை புரிந்துகொள்வாரா? அப்படியே புரிந்தாலும், அவரால் மற்றவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியுமா?’ இந்த கேள்விகளும் மனதில் எழ, அதற்கு பதிலில்லை. பெருமூச்சு விட்டபடி காத்திருந்தாள் நடு இரவுக்காக.

மணி பதினொன்று நாற்பத்தைந்து ஆகியிருக்க, உள்ளுக்குள் பயம் தாண்டவமாடியது. 

‘எப்படி அருணால் மண்டபத்துக்குள் வர முடிந்தது? அதுவும் எப்படி ஒரு ஆளை பனிரெண்டு மணிக்கு பால்கனி அருகில் அனுப்ப முடியும்? ஒருவேளை கல்யாண வேலையில் வீட்டில் யாரும் கவனித்திருக்க மாட்டார்களோ?’ என்ற சில கேள்விகள் பயத்தின் இடையே எழுந்தது. பதட்டத்துடனே இருந்தாள்.

இப்போது மணி பார்க்க, பனிரெண்டாக ஐந்து நிமிடங்கள் இருந்தது. சுற்றியும் பார்த்தாள். அமைதியே நிலவி இருந்தது. வந்தவர்கள் கண்ணுறங்கி இருந்தனர்.

சத்தம் செய்யாமல் அவள் பால்கனி சென்றடைய, அங்கே ஏணி முதல் அனைத்தும் தயாராக இருந்தது. மண்டபத்தின் பக்கவாட்டில் இருந்த பால்கனி என்பதால் அங்கே கூட்டம் இல்லை. ஒரு சின்ன விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்தது.

மெதுவாக அவள் இறங்க, கீழே அந்த விளக்கொளியில் கண்ட காட்சியில் மிரண்டுவிட்டாள்.

குற்றுயிரும் குறையுயிருமாக அருண்! பக்கத்தில் அவள் அப்பா, கௌதம் அப்பா மற்றும் அருணின் பின்புற சட்டையை கொத்தாக பிடித்தபடி கௌதம்.

“அரு” என்று அவள் பதறி அருகில் செல்ல, “ஹ்ம்ம்” என்ற அவள் தந்தையின் உறுமல் மற்றும் கௌதம் அருணுக்கு தந்த அடி, அவளை அங்கேயே நிறுத்தியது.

“மச்சான் ஏதோ சொன்னீங்க… உங்க பொண்ணு இவன் கூப்பிட்டாலாம் வராதுன்னு. பாருங்க வந்து நிக்குது. சரியா பிளான் போட்டு தூக்கினோம்… பார்த்தீங்களா? இது தான் நீங்க செல்லம் கொடுத்து வளர்த்த வளர்ப்பா?” கௌதமின் அப்பா, அவள் அப்பாவை சாடினார்.

பாலாவின் அப்பா பார்த்த பார்வையே அவளை கதிகலங்க செய்தது.

“அவனை விட்டுடுங்க ப்பா” என்று முடிக்கவில்லை, அவள் கன்னத்தில் அவள் அப்பா கை பதிந்தது. கூடவே கௌதமின் அடிகள் அருணுக்கு.

“ஐயோ அவனை அடிக்காதீங்கப்பா… என்ன அடிங்க. தப்பு என் பேர்ல தான். அவனை விட்டுடுங்க… நான் உள்ள போய்டறேன். கல்யாணம் பண்ணிக்கறேன். ப்ளீஸ் அவனை விட்டுடுங்க” கைகூப்பி கண்ணீருடன் வேண்டியவள், அருணிடம் கண்களால் ஆயிரம் மன்னிப்பை யாசித்தாள். 

அந்த நிலையிலும், உடல் முழுவதும் அடி வாங்கிய வலியை தாண்டி, அவன் வலி நிறைந்த பார்வை… இயலாமையுடன் மன்னிப்பை வேண்டியது அவளிடம்.

அவ்வளவுதான்… அவள் கண்ணீருடன் உள்ளே சென்றுவிட்டாள். அருண் மறுபடியும் அடைக்கப்பட்டான்.

அடுத்த நாள்! திருமணம் இனிதே ஆரம்பமானது… நடந்தது… முடிந்தது! 

நேற்றைய இரவு அறைக்கு திரும்பிய பாலா, துளியும் உறங்கவில்லை. 

அருணின் முகம் கண் முன்னே வந்து பதைபதைத்தது. திக்பிரமை பிடித்தது போல வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

அப்போது கோபத்துடன் வந்த அவள் அப்பா, கட்டியிருந்த பெல்ட்டை கழற்றி வீசி அடித்தார் அவளை. சுருண்டு விழுந்தாள் பாலா.

“என் மானம் போச்சு. மரியாதை போச்சு. என்ன நெஞ்சழுத்தம் இருந்தா, இது போல ஒரு காரியத்தை கல்யாணத்துக்கு முந்தின நாள் செய்ய நினச்சிருப்ப?” அவமானம் தாங்க முடியாமல் மறுபடியும் அடித்தார்.

பதில் பேசவில்லை பாலா. உடலில் நடுக்கம் தெரிந்தது.

“நல்லா தானே உன்னை வளர்த்தேன். பொண்ணு பொறந்திருச்சானு சொந்தமும் ஊரும் சொன்னப்ப, அதெல்லாம் காதுல வாங்காம, ஒரு பையன எப்படி வளர்ப்பாங்களோ… அது மாதிரி, நீ ஆசைப்பட்டது எல்லாமே செய்தேனே. ஆனா நீ? அந்த அருண் பயலோட… ச்ச” மறுபடியும் அடித்தார் ஆனால் இப்போது கண்ணீருடன்.

அவள் உடல் ரணமானது. முகத்தில் இயலாமை தெரிந்தது அவர் கண்ணீரை பார்த்தவுடன்.

“என் பொண்ணு வரமாட்டா. கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பா. என் மானம் போக விடமாட்டானு உறுதியா சொன்னேன். ஆனா நீ… அர்த்தராத்திரில அவன் முன்னாடி வந்து நின்னையே, அதை பார்த்து நான் இன்னுமா உயிரோட இருக்கணும்” என்றவர் தன்னையே அடித்துக்கொள்ள, இதுவரை அமைதியாக இருந்த பாலா, பதறி தந்தையை தடுத்தாள்.

அவ்வளவு தான்! முடிந்தது! மனம் இளகியது! பொழுதும் விடிந்தது!

தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று எதுவும் அவளுக்கு தெரியவில்லை. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. 

இதோ இப்போது திருமணமும் முடிந்தது. அவள் எதிலும் நாட்டமில்லாமல் இருப்பதை கவனித்த கௌதம், அருணை மதியமே விடுவிக்கலாம் என்ற எண்ணத்தை தள்ளிப்போட்டான்.

நெருங்கிய சொந்தத்துக்குள் திருமணம் என்பதால், இரவு நடந்தது யாருக்கும் தெரியாமலேயே மறைக்கப்பட்டது… குடும்ப மானத்தை கருத்தில் கொண்டு.

பாலாவின் அம்மா, கௌதமின் அம்மாவுக்கும் கூட தெரியாமல் மறைத்துவிட்டார்கள். பெண்கள் என்றால் அவர்கள் எல்லை சமையலறையின் நான்கு சுவர் மட்டுமே என்ற பழக்கத்தை காலம் காலமாக கடைபிடிப்பவர்கள்.

அவர்கள் கொஞ்சம் தளர்ந்தது, பாலாவின் விஷயத்தில் மட்டுமே. சுதந்திரமாக வளர்ந்தாள். உடையில் ஆரம்பித்து சமையல் அறை வரை, மற்றவர்களை காட்டிலும் சுதந்திரமாக வளர்ந்தாள். ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கும் அல்லவா?! 

பெண் பிள்ளையை பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே அனுமதிக்கும் குடும்பம், பாலாவையும் அதற்கு மேல் படிக்க விடவில்லை. இத்தனைக்கும்  அவள் மதிப்பெண்ணுக்கு அவள் விருப்பப்பட்ட மருத்துவமே கூட படிக்கலாம். 

ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. போதாதற்கு, நிறைய முறை அருணுடன் அவளை பார்த்திருந்தான் கௌதம். 

ஏதேனும் தவறு நடக்கும் முன் திருமணத்தை முடிக்க எண்ணினார்கள் பாலாவின் அப்பா, கௌதமின் அப்பா மற்றும் கௌதம்.

முன்னமே பேசி முடிவு செய்தது போல, கௌதமுடன் திருமணம் என்று அவள் தந்தை கூற, பாலா மறுத்தாள். படிக்க வேண்டும் என்றாள். திருமணம் வேண்டாம்… தனக்கு நாட்டமில்லை என்றாள். 

‘கௌதமுடன் அவள் திருமணம் என்று சின்ன வயதில் இருந்து சொன்னது தான். இப்போது ஏன் மறுக்கிறாள்? ஒருவேளை அருணை காதலிக்கிறாளோ? அதனால் மறுக்கிறாளோ?’ அவளின் மறுப்புக்கு இதுதான் காரணமாக இருக்கும் என அவள் தந்தை நினைத்தார். 

பாலாவும் எவ்வளவோ தந்தையிடம் கெஞ்சினாள். எதற்கும் பயனில்லாமல் போனது. நேரமும் இல்லாமல் போனது… காரணம் அவ்வளவு சீக்கிரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால். 

திருமணம் நடக்கும் நாளும் நெருங்க, ஒருநாள் ‘ஓடிவிடலாமா என்பது போல இருக்கு’ என்று அருணுடன் பாலா பேசியதை கெளதம் கேட்டுவிட்டான்.

சிறு வயதில் இருந்து திருமணம் பற்றி சொன்னதாலோ என்னவோ கௌதமுக்கு பாலாவை மிகவும் பிடிக்கும். அவளை அவளாகவே பிடிக்கும். 

அவர்கள் வீட்டில் அடங்கி இருக்கும் பெண்களை பார்த்து வளர்ந்தவன்… சுதந்திரமாக, யாரையும் அதிகம் நாடாமல் ‘தன்னால் முடியும்’ என்ற நிமிர்ந்த குணம் உடைய பாலாவை அவனுக்கு பிடிக்கும்.

தன்னை சுற்றி… குடும்பத்துடன் ஒன்றி, பழைய கலாச்சாரங்களை கடைபிடிக்கும் பெண்கள் மத்தியில், இந்த காலத்திற்கு ஏற்றாற்போல நவ நாகரீகத்துடன் இருந்த பாலாவை பிடிக்கும்.

படிப்பில் நாட்டம் இல்லாத பெண்கள் வாழும் குடும்பத்தில், படிப்பிலும் பிரகாசிக்கும் பாலாவை பிடிக்கும். 

ஆக அவளை மட்டும் தான் பிடிக்கும். அவளுக்கும் தன்னை மட்டும் தான் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுள்  வேறூன்றி வளர்ந்து நின்றது.

அவளும் சிறு வயது முதல் எப்போதும் ‘கௌதம் மாமா’ என்று அவனுடன் நன்றாக பழகினாள்.

அப்படி இருக்க, பள்ளியில் அவளுடன் படிக்கும் அருணுடன் அவள் நெருக்கமாக பழகுவது கொஞ்சம் நெருடலாக இருந்தது. இருந்தும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை கௌதம்.

அவள் வயதும் ஏற ஏற, ‘அருணுடன் காட்டும் நெருக்கத்தில், சிறிதளவு கூட தன்னிடம் காட்டவில்லை’ என்று கௌதம் மனதில் தோன்ற ஆரம்பித்தது.

கூடவே அவள் கௌதமிடம் பேசுவதில் கூட கொஞ்சம் விலகல் இருப்பது போல தெரிந்தது.

பாலா பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது, தன்னிடம் பேசுவதையே பாலா  குறைத்துக்கொண்டது போல தெரிந்தது கௌதமுக்கு. உடனே முடிவெடுத்தான். 

அவன் தந்தையிடம் திருமணம் குறித்து பாலாவின் தந்தையிடம் பேச சொன்னான். கூடவே அருணை பற்றியும் சொன்னான்.

அங்கேயே முடிந்தது! ‘எங்கே பாலா வயது கோளாறில் தவறான முடிவேதேனும் எடுத்துவிடுவாளோ! அதுவும் வேற்று சாதி ஒருவனுடன்!’ என்று எண்ணி திருமணத்திற்கான தேதியை குறித்தனர்.

பாலா மறுப்பாள் என்று கௌதம் எண்ணியது போலவே நடந்தது. ‘அவ்வளவு முக்கியம் ஆகிவிட்டானா அந்த அருண்?!’ என்ற எண்ணம் அவன் மனதில் புகைந்தது.

அது கொழுந்துவிட்டும் எரிந்தது… அருணிடம் போன் பேசும்போது அவள் ‘ஓடிவிடலாமா என்பது போல இருக்கு’ என்று சொன்னதை கேட்டவுடன். 

நல்ல தருணத்துக்காக காத்திருந்தான் கௌதம். திருமணத்திற்கு முந்தைய தினம் அருணை சிறை பிடித்தான். 

‘தான் விரும்புபவளை தன்னிடம் இருந்து பிரிக்க நினைப்பவன்’ என்றெண்ணி அருணை தாறுமாறாக அடிக்க, அருண் எவ்வளவு தடுத்தும் முடியவில்லை.

அருண் போனில் இருந்து பாலாவின் எண்ணிற்கு கௌதமே குறுஞ்செய்தி அனுப்பினான். அதன் விளைவு, இரவு பாலா அருண் திட்டம் என்று நினைத்து கௌதம் பின்னிய வலையில் மாட்டிக்கொண்டாள்.

அப்போது ஒரு சில நொடிகள் பாலா மற்றும் அருண் கண்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஏதோ பரிமாறிக்கொண்டது, இன்னமும் கோபத்தை கிளப்பியது.

முதலில் திருமணம் முடிந்தவுடன் அருணை விடுவிக்க எண்ணிய கௌதம், இப்போது முடிவை மாற்றிக்கொண்டான்.

பாலாவிடம் நெருங்குவதற்கு , அருண் தான் துருப்புச் சீட்டு என்று எண்ணினான்.

திருமண சடங்குகள் முடிந்து சொந்த பந்தங்களுடன் வீடு திரும்பியிருந்தனர் அனைவரும்.

பாலாவிற்கு பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது. அருணுக்கு என்ன ஆனதோ என்ற பயம். அடுத்து வீட்டில் என்ன நடக்க போகிறதோ என்ற பதட்டம்.

வீடு திரும்பியவுடன் வீட்டில் சில சடங்குகள், உணவு என முடிந்த பின், இரவு கௌதமின் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.

பதட்டம் இன்னமும் அதிகமானது. அங்கே அவளுக்காக காத்திருந்த கௌதம், அவள் நுழைந்ததும் கதவை தாழிட்டான்.

பல முறை வந்த அறைதான் அது அவளுக்கு. இருந்தும் இப்போது உள்ளுக்குள் உதறியது.

அவளை கைப்பற்றி அவன் அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்த, அவனிடம் இருந்து நாசுக்காக கையை பிரித்துக்கொண்டாள் பாலா.

அது அவனுக்கும் புரிந்தது.

தொண்டையை சரி செய்து கொண்ட கௌதம், மறுபடியும் அவள் கையை பற்றியபடி… “உன் அரு உயிரோட… அவன் குடும்பம் உயிரோட இருக்கணும்னா இதெல்லாம் நீ சகிச்சுக்கிட்டு தான் ஆகணும் பாலா” சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டு அழுத்தமாக ஆணையிட்டான்.

அதிர்ந்து திரும்பிய பாலாவிற்கு கண்கள் கலங்கிவிட்டது.

அவளுக்கு தெரியாதா… இவர்கள் குடும்பத்திற்கு அந்த ஊரில் உள்ள செல்வாக்கு. எதுவும் செய்ய முடியும் இவர்களால். 

அவளால் எதுவும் பேச முடியவில்லை. கத்த வேண்டும் என்பது போல இருந்தது. முடியவில்லை.

அவன் எல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாக மீற, கண்களால் கெஞ்சினாள். மன்றாடினாள். பலனில்லை. 

அவள் உடல் கூசியது. எரிந்தது. எதிர்ப்பை காட்டியது. பின் இறுகியது! 

கண்கள் கலங்கியது. பின் கண்ணீர் பெருக்கெடுத்தது. பின் இலக்கில்லாமல் எங்கேயோ வெறித்தது!

அன்றைய இரவுக்கான வேலையை அவன் முடித்தான். தன் வாழ்வே முடிந்தது போல உணர்ந்தாள் பாலா. 

******************************

 

  •  
  •  
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !! ©All Rights Reserved
0
Would love your thoughts, please comment.x
()
x