எதிர்வினை

எதிர்வினை!

“வெர் இஸ் தி பார்ட்டி டுநைட்… ஆஹ் உங்க வூட்ல…” என்ற பாடல் கூப்பாடு போட, ஆங்காங்கே வட்ட மேஜை மாநாடு நடந்து கொண்டிருந்தது அந்த நடுத்தர ரக சாராய பாரில்.

“அடேய் சின்ராசு… போதும் டா… எத்தினி க்ளாஸ் குடிக்க…” ‘போதும் போதும்’ என்று சொன்னாலும், அனைத்தையும் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான் மாரி…

“மாமா குடி மாமா… உனிக்கு இல்லாததா…?” என ஊற்றிக் கொடுத்துக்கொண்டே இருந்தான் சின்ராசு… கூடவே அவனும் ஏற்றிக் கொண்டான் அந்த பானத்தை…

“எத்தினி நாள் ஆச்சு… இப்டி அடுச்சு… இந்த மரகதம் மட்டும் ஊருக்கு போலன்னா இன்னிக்கும் அந்த கஞ்சியத்தான் குடிச்சிருக்கணும்…” தன் மனைவியின் அர்ச்சனைகளும், கட்டுப்பாடுகளும் இல்லாமல் இன்று நிம்மதியாக ஓசி சரக்கை நன்றாக உள்ளிறக்கிக்கொண்டு பிதற்றிக் கொண்டிருந்தான் மாரி.

“அக்காவ அடிக்கடி ஊருக்கு போ சொல்லு மாமு… எனக்கும் உன்கூட அடுச்சா தான் அடிச்ச மாதிரி இருக்கு…” என ஓவராக ஐஸ் வைத்தான் சின்ராசு.

“ஆமா மாப்பு… இன்னிக்கி என்ன ரொம்ப ஆப்பியா இருக்கயோ…? இவ்ளோ செலவு பண்றயே” வெகுநாள் கழித்து சரக்கு வாங்கித்தந்த சின்ராசிடம் மாரி போதையிலே கொஞ்சம் தெளிவாக கேட்க,

“ஆமா மாமு… பலான சரக்கு வித்ததுல கொஞ்சம் துட்டு பாத்தேன்… உன் ஞாபகம் வந்திச்சு… நீதானே என் குரு… அதான்” என்றான்.

“எம்புட்டு நாள் ஆச்சு… உனக்கு தான் தெரியுமே… அதெல்லாம் வுட்டுட்டேன்… எம்புட்டு காசு பாத்தேன்… எல்லாம் போச்சி… இப்போ பாரு… கூலி வேல… அந்த மரகதம்னால தான் எல்லாம்” தொழிலை விட்டுவிட்ட கோவத்தில் பொருமினாலும்…

“ஆனா இன்னிக்கி அது ஊட்டாண்ட இல்ல… அதுதான் உன்கூட வந்தேன்… இல்லாக்காட்டி அது பாட காட்டிடும்” சந்தோஷத்தில் அவனே ஊற்றி குடிக்க ஆரம்பித்தான் மாரி.

“எப்படி இருந்த மாமு நீ… உன்னாண்ட தொழில் கத்துடவன்லாம் இன்னிக்கி இன்னா சீன் போடறான்… ஆனா நீ அஞ்சும் பத்துக்கும் மாறடுச்சுட்டு… கஷ்ட்டிமா இருக்கு மாமு” அவனின் குரலில் வருத்தம் தெரிய,

“என்ன மாப்பு பண்றது… நல்லா இருந்தப்ப வாங்கின சொத்தெல்லாம் அந்த மரகதமாண்ட தான் இருக்கு… அதுனால அது சொல்ற பேச்ச கேக்க வேண்டியதா போச்சு. வயசாயிடுச்சுல்ல எனக்கும்” என புலம்பினான் மாரி…

“மாமு… கஷ்டமா இருக்கு உன்ன பாத்தா… இந்தா… நல்லா ஊத்திக்க… இனி என்னிக்கு முடிமோ உன்னால” என்று மாரியை ஏற்றிவிட்டு ஊற்றிக்கொடுத்தான் சின்ராசு.

சரக்கு அதிகாமாக உள்ளே செல்ல… இது தான் சரியான நேரம் என்று,

“மாமு நீ ரொம்ப நாள் பாத்துக்குன்னு மட்டும் இருப்பியே… சரோசா… நீ வேணுன்னாக்கா இன்னிக்கி…” சின்ராசு மாரியை ஏற்றிவிட, “அய்யோ மாப்பு… மரகதத்துக்கு தெரிஞ்சுது… கொதறிடும்… வேணாம்பா” என்றான் மாரி உடனே…

“என்ன மாமு நீ… அக்கா ஊட்டாண்ட இல்லல. குஜால்ஸ் பண்ணு மாமு… இனி எப்போ முடியுமோ” என எடுத்துக்கொடுக்க, மாரி எதையோ நினைத்து யோசித்தான்.

அதை தடுக்கும் விதமாக, போனில் மாரி சரோசாவிடம் பேசி அன்றைய மாரியின் இரவை நிர்ணயித்தான்.

“நீ சொல்றதும் சரிதான் மாப்பு… அதுவும், உள்ள போன சரக்கு என்னின்னமோ பண்ணுது… ஒரே வெறப்பாவுது…” என்றான் மாரி குழைவாக அவனின் கறைபட்ட பற்களை காட்டிக்கொண்டு…

“பாவம் மாமு நீ… அக்கா ரொம்ப பேஜார் பண்ணுது… இன்னிக்கி மஜா பண்ணு” என்றான் சின்ராசு அர்த்தப்புன்னகையுடன்.

“அப்பறம் மாப்பு… தப்பா எடுத்துக்காத… உன்னாண்ட…” என விழுங்கி விழுங்கி ஏதோ தயங்க “என்ன மாமு… நான் போய் உன்ன தப்பா எடுத்துப்பேனா… சொல்லு மாமு… இன்னா வேணும்” கேட்டான் சின்ராசு.

“அது வந்து மாப்ள… வயசாயிடுச்சுல்ல… அதுதான்… சரோசா’ட்ட போறப்ப…கொஞ்சம் ஏத்திக்க சரக்…கு…” என்றான் மாரி இழுத்து இழுத்து தலையை சொறிந்துகொண்டு.

“அட மாமு… இதுக்குத்தானா இம்புட்டு தயக்கம்… இரு” என்றவன் சுற்றியும் பார்வையை சுழற்றிவிட்டு ஒரு துண்டு பொட்டலத்தை பேண்ட் பாக்கெட்டில் இருந்து வெளியிலெடுத்தான்.

அதைப்பார்த்த மாரியின் மனது குத்தாட்டம் போட்டது. சந்தோஷத்தில் மொத்த பொட்டலத்தையும் பிடுங்கப் பார்க்க, “மாமு… பாடி தாங்காது” என சிரித்தான் சின்ராசு.

“அட போடா மாப்ள… எத்தினி நாள் ஆச்சு” என லாவகமாக அந்த பொட்டலத்தில் இருந்த தூளை எடுத்து கைக்கு கொஞ்சம் வேலைத்தந்து பின் அதை நுகர்ந்தான்.

சப்த நாடிகளும் எகிறி குதிப்பது போல உணர, மீண்டும் நுகர்ந்தான். இம்முறை அது தலைக்கேறியது. கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை மறக்க ஆரம்பித்தான் மாரி. போதும் என மீதத்தை சின்ராசிடம் நீட்ட, அவனும் இளித்துக்கொண்டே அதில் ஐக்கியமானான்.

இருவரும் ஒருசேர ஒரே மனநிலையில் இருந்தனர்… அன்றைய இரவை இஷ்டம் போல் கழிக்க.

மாரி செய்யப்போகும் வேலை பற்றி சின்ராசுக்கு தெரியும். ஆனால் சின்ராசு செய்யப்போகும் காரியம்??? அது தெரிந்திருந்தால் மாரி தன்னை இந்த நிலைக்கு நிறுத்தியிருந்திருப்பானா? தெரியவில்லை…

இரவு நேரம் ஆக, ஒரு வழியாக புறப்பட்டனர்… மாரி தள்ளாடிக்கொண்டே “மாப்பு… இப்போ வண்டி வேணாம்… விடுஞ்சதும் எடுத்துப்போம்… நடந்தே போய்டலாம்” என சொல்ல, சரி என்பது போல் மண்டையை மட்டும் ஆட்டினான் சின்ராசு.

அவன் போதையின் உச்சத்தில் இருந்தான் சின்ராசு. தான் நினைத்தது நடந்தாகவேண்டுமென ஒரு முடிவில் இருந்தான்…

இருவராலும் நடக்க முடியாமல், ஆசுவாசப்படுத்திக்கொள்ள, அங்கிருந்த பேருந்து நிறுத்தத்திற்கு சென்று உட்கார, அந்த இடம் அமைதியாக இருந்தது. யாரும் இல்லை.

சில வினாடிகள் கழித்து ஒரு பெண் அங்கு வந்து நிற்க, அவளை பார்த்த சின்ராசு மனது தறிகெட்டத்தனமாக நினைக்க ஆரம்பித்தது. மாரி ஒருபக்கம் தலைசாய்த்து உட்கார்ந்திருந்தான்.

அங்கு நிலவி இருந்த அமைதியை பார்த்த பெண், ‘சென்று விடலாமா??? இல்லை நிற்கலாமா???’ என யோசித்து பதட்டமடைந்தாள்.

சுற்றியும் முற்றியும் திரும்பிப் பார்க்க, அந்த நொடி… அந்த பாதகன் சின்ராசு, காட்டிய கேவலமான விஷயத்தைப் பார்த்து ஜீரணிக்க முடியாமல் ஸ்தம்பித்து திரும்பினாள்.

அவளின் கண்கள் கூசியது… குமட்டிக்கொண்டு வருவது போல் இருந்தது, அவனின் அருவருக்கத்தக்க செயல். அது மனதளவில் அவளை பெரிதும் தாக்க, படபடப்புடன் திரும்பிப் பார்க்காமல் ஓடவே ஓடிவிட்டாள் அங்கிருந்து.

சின்ராசுவால் அவனை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. நினைத்ததை செய்தாக வேண்டும் என முடிவெடுத்து, “மாமு… ரோசா காத்துட்டு இருக்கும்… வா போலாம்” என இழுத்துச் செல்லாத குறையாக கூட்டிச் சென்றான் மாரியை.

அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் மாரியும் சென்றான். சின்ராசு போகும் வழியில் பெண்களை அருவருக்கத்தக்க பார்வையை பார்க்காமல் சென்றிருந்தான் என்றால் அது ஆச்சர்யமே.

பார்வையில் அவ்வளவு ஆபாசம். அந்த வழியில் செல்லும் பெண்களைப் பார்த்து தறிகெட்டு மேய்ந்தது அவள் கண்கள். ஒருவழியாக சில பெண்கள் தப்பித்தனர் அவன் பார்வையில் இருந்து… ஆம்… அவர்கள் இருவரும் வரவேண்டிய இடத்திற்கு வந்தடைந்தனர்.

“மாமு… இன்னிக்கி ஜமாய்” என சொன்னதுதான் தாமதம்… மாரி ‘ஈஈ’ என இளித்துக்கொண்டு சரோசா வீட்டின் உள்ளே சென்றான்… உள்ளே சென்றவன், சுற்றம் மறந்தான். மனைவியை மறந்தான்… குடும்பத்தை மறந்தான்… தன்னிலையயே மறந்தான்…

ஏதோ சொர்க்கத்தின் வாயில் என்றே தோன்றியது… ஆனால் அவன் அறியாதது, இது அனைத்தும் மாயை என்று… நிஜம் முகத்தில் அறைந்தாற்ப்போல் தன் சுயரூபத்தை காட்டப்போகிறது என்பது…

உடல் சோர்வடையும் வரை அங்கிருந்தவன், விடிந்ததும் வெளியில் வந்தான். போதை தெளிந்ததுபோல் இருந்தாலும், சரியாக நடக்க முடியவில்லை. இருந்தாலும் மெதுவாக வீட்டை நோக்கி நடந்து சென்றான்.

‘மரகதம் வந்துருப்பாளோ…? என்ன நடக்கப்போகுதோ…?’ உள்ளே கொஞ்சம் பயமிருந்தாலும் ‘அவ கெடக்கா’ என்ற எண்ணமே மேலோங்கியது.

தள்ளாடி வீட்டையடைய, அங்கே உக்கிரத்துடன் உட்கார்ந்திருந்தாள் அவன் மனைவி. இவனைப் பார்த்தவள், வீறுகொண்டு எழுந்து, சட்டையைக் கொத்தாகப் பிடித்து…

“பாவி… நல்லா இருப்பியா நீ… என்ன சொல்லிட்டு போனேன் நான்… படுபாவி… எல்லாமே போச்சே… நாசமா போனவனே… இந்த குடிய விடு’ன்னு எத்தினி வாட்டி சொன்னேன்… இப்போ நம்ம குடியவே அழிச்சுடுச்சே… குடிகாரப்பாவி…” என்று அவனின் முகத்தில் மாறி மாறி அறைந்தாள்.

ஒன்றும் புரியாமல் மாரி விழிக்க “என்ன பாக்கற… படுபாவி. உள்ள போய் பாருயா” என கத்த, அவனுக்காக ‘என்ன காத்திருக்கிறது’ என்று தெரியாமல் வீட்டினுள் எட்டிப்பார்த்தான்.

பார்த்தவன் விழிகள் ஆணி அடித்தாற்ப்போல் நிலைக்குத்தியிருந்தன… முந்தைய தினம் தன் மனைவி ஊருக்கு செல்லும் முன் சொன்னதெல்லாம் தன் மூளையில் இப்போதுதான் உரைத்தது.

“யோவ்… என் சித்தியோட காரியத்துக்கு போய்ட்டாந்துடறேன்… காலைல வந்துடுவேன்… பொண்ணுக்கு பரிச்சை இருக்குயா… அதா வுட்டுட்டுப்போறேன்… காலம் கெட்டுக் கெடக்கு… பொழுதோட வூட்டுக்கு வந்துரு…”

இதுவே பலமுறை சொன்னாள் அவன் மனைவி. ஆனால் நடந்தது??? பித்துப்பிடித்தவன் போல் சரிந்தான் தரையில்… மனது பதைபதைத்து!!!

மகள் இருந்த நிலை… முகத்திலும், உடம்பிலும் ஆங்காங்கே கீறல்… கிழிந்திருந்த ஆடை… ஆனால் அதையெல்லாம் மீறி கையில் தெரிந்த அருவாமனை… அதன் வெட்டும் பகுதியில் உறைந்த குருதி… அதை தரையில் ஊன்றியவாறே… ரௌத்திரம் பொங்கும் கண்களுடன்… ஒரு மஹாகாளி போல்!!!

அந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி, சின்ராசு… உடைகள் களைந்த உடல்… மண்டை உடைபட்டு… கழுத்து வெட்டப்பட்டு… ரத்தம் உறைந்து… விழிகள் பிதுங்கி… வதம் செய்யப்பட்டிருந்தான் மஹாகாளியால்!!!

புரிந்துவிட்டது மாரிக்கு… ஆனால் காலம் கடந்த புரிதல்!!!

மகளை பார்க்கமுடியாமல் வெட்கிப்போனான்… ஆனால் மகளின் கண்களோ கொலைவெறியுடன் தந்தையையே பார்த்திருந்தது!!!

குடி தன்னை மட்டுமில்லாது தன்னை சுற்றியுள்ளவர்களையும் கெடுக்கும்!!!

  •  
  •  
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !! ©All Rights Reserved
0
Would love your thoughts, please comment.x
()
x