என்னோடு நீ உன்னோடு நான் – 12
என்னோடு நீ உன்னோடு நான் – 12
அருவியின் அடியில், நிலாவை பின்னோடு இறுக அணைத்துக்கொண்ட ஆதி, “உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு மொதல்ல தெரியல. இன்ஃபாக்ட், எனக்கே ஒரு முடிவுக்கு வர கொஞ்சம் நேரம் எடுத்துச்சு.
உன்ன ஹோம்ல பார்த்தப்ப, ஐ லைக்ட் யுவர் கரேஜ்! அப்புறம் இங்க வந்தப்புறம், அந்த ஊருக்கு போயே ஆகணும்னு சொன்னப்ப, உன்னோட டிடெர்மினேஷன் – ரொம்பவே பிடிச்சது. ஏதோ உதவி பண்ணத்தான் இவ்ளோ ரிஸ்க் எடுத்திருக்கன்னு தோணுச்சு. அப்புறம் உன்னோட அருகாமை…”
பேச்சை நிறுத்திய ஆதி அவளை தன் பக்கம் திருப்பி, “நிறைய பேர் கூட பழகியிருக்கேன்… இங்க USல-னு! பட், இந்த ஃபீல் இது தான் நான் ஃபர்ஸ்ட் டைம் எக்ஸ்பிரியன்ஸ் பண்றேன்…
உன்னோட கண்கள்… என்கூட இருக்கிறப்ப அதுல தெரிஞ்ச சின்ன ஹாப்பினெஸ்… காலைல நான் உன்கிட்ட வந்தப்ப உன் முகத்துல தெரிஞ்ச, இதோ இந்த அருவி மாதிரி சந்தோஷம்… அதுல ஒரு நூலிழை ஆவல், ஆசை… நான் விலகினவுடனே ஒரு சின்ன வருத்தம் அதெல்லாம் உன் கண்ணுல பார்த்தேன்”
அவன் முடிக்கும்முன், “ஏய்!” செல்லமாக அடித்திருந்தாள்.
அதற்குள் அடித்த கையை பற்றிக்கொண்ட ஆதி, அதில் முத்தமிட்டவாறே “அப்புறம் என் ரிலேஷன்ஷிப் ஸ்டேடஸ் பத்தி நீ தெரிஞ்சுக்க காட்டின ஆர்வம்… அப்பவே சொல்லலாம்னு தோணுச்சு. ஆனா இந்த ஒரு அழகான தருணத்துக்காக தான் காத்திருந்தேன்”
அருவியின் தண்ணீர் அவர்கள் மேல் பூபோல் கொட்ட, சந்தோஷத்தின் மிகுதியில் அவளைத் தூக்கி சுற்றினான்.
அவன் மேல் சாய்ந்துகொண்ட நிலா, “சில பேர பார்த்து பேசும்போதே தெரியும்… அவங்க நல்லவங்களா இல்லையானு. உன்னப்பத்தி முதல்ல யோசிச்சாலும், உன்னோட கேர், அப்புறம் என்ன… எதுக்கு… இதெல்லாம் தேவையான்னு கேட்காம, என்னோட இன்ஸ்டிங்க்ட்’க்கு மதிப்பு கொடுத்தது. எதையும் ஃபோர்ஸ் ஃபீட்(force-feed) பண்ணாதது!
இதுவரை என்னை இது செய்யாத அது செய்யாத… ஒரு பொண்ணு இதெல்லாம் செய்ய கூடாதுனு தான் எல்லாரும் சொல்லியிருக்காங்க. பட், உன்னோட இருக்கப்ப தான் நான் நானா இருக்கேன் ஆதி! எந்த ரெஸ்ட்ரிக்ஷன்ஸ்’உம் இல்லாம இருக்கேன்!”
அவன் கண்களை ஆழமாகப் பார்த்து சொன்னாள். அவன் புன்னகைத்தான்.
“தேங்க்ஸ் ஃபார் அக்ஸெப்ட்டிங் அஸ் ஐ அம் (Thanks for accepting me as I’m – என்னை அப்படியே ஏத்துக்கிட்டதுக்கு நன்றி)” கண்கள் மூடி, தன் கால்களை உயர்த்தி அவன் நெற்றியில் முத்தமிட்டாள் நிலா.
மறுபடியும், மகிழ்ச்சியின் மிகுதியில், அவளை அப்படியே சுற்றிய ஆதி, சிறிது நேரத்துக்குப்பின் தண்ணீரிலிருந்து வெளியே வந்தான் அவளுடன்.
“ரொம்ப நேரம் தண்ணிலயே இருந்துட்டோம் நிலா. நீ தலையை துவட்டிட்டு, போய் டிரஸ் மாத்திட்டு வா. இல்லைனா கோல்ட் வந்துடும் ”
அவள் ஆடைகளைத் தந்து கூடவே, அவனுடைய துண்டையும் நீட்டினான். புன்னகையுடன் வாங்கிக்கொண்டு உடை மாற்றச் சென்றாள்.
அவள் திரும்பி வந்த போது, அவன் அடுக்கி வைத்திருந்த கட்டைகளுக்கு தீ மூட்டியிருந்தான்.
அவளைப் பார்த்தவுடன் ஆதி, “என்ன டிரஸ் இது … இவளோ லூசா இருக்கே” என்று கேட்டுக்கொண்டே இரவுக்கு உணவு செய்து கொண்டிருந்தான்.
“இது தான் அங்க இருந்துச்சு ஆதி”
“ஹ்ம்ம். நிலா… டென்ட் ஃபிக்ஸ் பண்ண முடியல. சோ இங்க இப்படியே தான் இன்னைக்கு நைட் படுக்கணும். அப்புறம், இங்க வா… உனக்கு காட்டணும்னு இருந்தேன்” என்றவன் அவள் அருகில் வந்தவுடன்,
“இந்த ப்யூரிஃபையர்ர (purifier) பாரு. இந்த அருவி தண்ணி 99.4% சுத்தமானது கொஞ்சமே கொஞ்சம் தான் மாசு கலந்திருக்கு. ஒருவேளை மாசு இல்லாமகூட இருக்கலாம். தண்ணிய அப்படியே குடிச்சு பார்த்தேன். ரொம்பவே நல்லா இருக்கு”
அவன் பேசப் பேச அவன் முடியிலிருந்து சில சொட்டு தண்ணீர் வடிந்தது.
“ஆதி உன் முடி இன்னும் ஈரமாவே இருக்கு”
“நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்ற? லக்கேஜ் அதிகமாயிடுமேனு ஒரு டவல் தான் எடுத்துட்டு வந்தேன். எனக்கு ஒன்னும் ஆகாது. இந்த மீட்டர பாரு” அவன் முறைத்தான்.
“ஏன் உனக்கு கோல்ட் வராதா?” சொல்லிக்கொண்டே தான் கட்டியிருந்த டவலை அவனிடம் தந்தாள். ஆனால் அந்த துண்டும் ஈரமாகத்தான் இருந்தது.
அப்போது அவனுக்கு ஒரு யோசனை தோன்ற, எரிந்துகொண்டிருந்த கேம்ப் பையரில் இருந்து ஒரு கட்டையை மட்டும் எடுத்து, அதில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றியவுடன் நெருப்பு அணைந்து, பிழம்பாகப் புகைந்தது.
“இன்ஸ்டன்ட் ஓடர்லெஸ் சாம்பிராணி. ஈசி ஹேர் ட்ரையர்” அவன் புன்னகைக்க, அவள் திகைத்துப் பார்த்தாள்.
தன் முடியை அந்த புகையில் காட்டிக்கொண்டே, “சாம்பிராணி, இதெல்லாம் தெரியுமா உனக்கு?”
“ஏன் தெரியாது… அம்மா தினமும் தலைக்கு குளிப்பாங்க. அவங்க ஹாஸ்பிடல் போறதுக்கு முன்னாடி சீக்கிரம் காயணும்னு, பாட்டி அவங்களுக்கு சாம்பிராணி போட்டு பார்த்திருக்கேன். ஹேர் ட்ரையர் யூஸ் பண்ண விடமாட்டாங்க” என்றான்.
“உன் ஃபேமிலி பத்தி சொல்லேன் ஆதி” ஆவலுடன் அவள் கேட்டவுடன், “பெருசா சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. அப்பா சைட்ல எல்லாருமே டாக்டர்ஸ். அவர் MMC’ல படிக்கிறப்ப அம்மா கேரளால இருந்து வந்து சேர்ந்தாங்களாம்.
அப்போ ரெண்டு பேரும் லவ் பண்ணியிருக்காங்க. தென் கல்யாணம். அம்மாக்கு அம்மா மட்டும் தான். சோ பாட்டியும் அப்போ இருந்து, இப்போ வர எங்ககூட தான் இருக்காங்க”
“நீ ஏன் தனியா இருக்க?” அடுத்த கேள்வியை கேட்டாள்.
“அதுவா! எனக்கு கொஞ்சம் இண்டிபெண்டன்ட்டா இருக்கணும்னு வந்துட்டேன்” பெரிதாக ஆர்வம் இல்லாமல் பதில் தந்தான்.
பின், “சரி அதெல்லாம் விடு. நம்ம சாப்பிடலாம்… எனக்கு பசிக்குது” செய்து வைத்திருந்த ஓட்ஸ் எடுத்து அவளுக்குக் கொடுத்துவிட்டு, அவனும் உண்டான்.
உணவுக்குப் பின், சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கும் போது…
“கத்திரிக்கா எடுத்துட்டு வந்தோம்ல சுட்டு பார்ப்போம் எப்படி இருக்குனு”
அதை ஒரு குச்சியில் சொருகி, நெருப்பிலே காட்ட, அது சுருங்கியவுடன் எடுத்து ருசித்துப் பார்த்தான்.
“ச்சைக்… நல்லாவே இல்ல. வாயே கெட்டு போச்சு”
போர்வையைப் போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருந்தவள், அவன் முகம் போன போக்கைப் பார்த்து, சிரிப்பு தாங்க முடியாமல் “உனக்கு இது தேவையா. கத்திரிக்கா… பேரிக்கான்னு” முகம் மலர சிரித்தாள்.
“உனக்கு சிரிப்பா இருக்கா?!” அவளின் பக்கத்தில் வந்து, “எனக்கு இப்போவே ஸ்வீட் வேணும். குடு” வம்படியாக கேட்டான்.
“லூசா ஆதி நீ?! எனக்கிட்ட ஏது ஸ்வீட்?!”
இப்போது அவன் விழிகள் அவளின் இதழ்களைப் பார்க்க, அதன் பொருள் புரிந்து முறைத்தாள் நிலா. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், கண்மூடி அவள் முகத்தின் அருகே தன் முகத்தைக் காட்டினான்.
“ஆள பாரு. அதெல்லாம் முடியாது” அவன் முகத்தைத் தள்ளினாள்.
“என்னையா தள்ற” என்று அவள் அருகே வந்தவன், வலுக்கட்டாயமாக அந்த போர்வைக்குள் தானும் புகுந்து, அவளுடன் நெருக்கமாக உட்கார்ந்தபடி, “நீ அப்ப குடுத்த ஸ்வீட்டே போதும். இன்னும் அந்த டேஸ்ட் இருந்துட்டே இருக்கு”
கண்சிமிட்டிக்கொண்டு சொன்னவன், தளர்ந்திருந்த அவளுடைய டிஷர்ட் வழியாகத் தெரிந்த அவளுடைய தோள்பட்டையில் முத்தமிட்டான்.
“என்ன பண்ற ஆதி” அவனை அவள் தள்ள முற்பட, அவன் இன்னும் அவளிடம் நெருக்கமாக அமர்ந்து, அவள் காதருகே… “ஐ லவ் யு நிலா!” என்றான் அவளின் கண்களைப் பார்த்து! அவளும் புன்னகையுடன் அவன் மேல் சாய்ந்துகொண்டாள்.
இருட்டு நன்றாகச் சூழ, நெருப்பு மூட்டத்தின் எதிரே… ஒரு போர்வைக்குள் உட்கார்ந்து, ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். .
“நாம சென்னை போன உடனே, இது போல இன்னோரு ட்ரிப் போகணும் நிலா”
“ரோட் ட்ரிப்?” சந்தோஷத்துடன் கேட்டாள்.
“பெர்ஃபெக்ட். டன்!” ஆமோதித்தான் ஆதி.
“எனக்கு பைக் ரைட்னா ரொம்ப பிடிக்கும்” என்று அவள் சொல்லும்போது பிரதீப் நினைவிற்கு வர, “ஆதி உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” தயக்கத்துடன் வார்த்தைகள் வந்தது.
“ஹ்ம்ம் எதுக்கு இந்த தயக்கம்!?”
“நான் முன்னாடி ஒருத்தன லவ்…” என்று சொல்லவர, அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பது புரிந்து, அவள் இதழ்களை கைகளால் மறைத்து “பாஸ்ட் இஸ் பாஸ்ட்! அதெல்லாம் மறந்துடணும். இப்போ ஒன்லி யூ அண்ட் மீ! லெட்ஸ் லிவ் இன் திஸ் மொமெண்ட் நிலா!”
அவள் கண்கள் லேசாகக் கலங்கியது, அதை மறைக்க அவன் மேலே சாய்ந்துகொண்டாள்.
அவளின் மனநிலையை மாற்ற, “என்ன சொன்ன… உனக்கு பைக் ரைட் பிடிக்கும் தானே. என்கிட்டே ஹார்லே இருக்கு. லெட்ஸ் ராக்” என்றான் அவள் நெற்றியில் முத்தமிட்டவாறே.
“மொதல்ல, ஐ வில் டேக் யு டு சிறுதுளி. நீ சயின்ஸ் ஸ்டுடென்ட்ல. பசங்களுக்கு பயோலஜி சொல்லிக்குடு ஆதி”
“சரிங்க மேடம். அப்படியே பண்ணிடுவோம். நீ எது டீச் பண்ற?”
“நான் மேத்ஸ் அண்ட் ஃபிசிக்ஸ். நடுல ஒரு வருஷம் நான் சிறு துளி பக்கமே போகாம இருந்தேன்… அவனால. ஒரு ஸ்டேஜ்ல அடைபட்ட மாதிரி ஃபீல்… அப்புறம் தான் வெளிய வந்தேன்.
என்னை புரிஞ்சிட்டு என் எண்ணங்கள், ஆசைகளை புரிஞ்சிட்டு, என்னை ஏத்துக்கறவங்க யாராச்சும் இருப்பாங்களானு யோசிச்சிருக்கேன்.
வீட்ல மாப்பிள்ளை பார்க்கறப்ப இதை சொன்னா, அதெல்லாம் முடியாதுனுதான் முதல்ல சொல்வாங்க. வீக்கெண்ட், ஒரு ரெண்டு மூணு மணிநேரம் போயிட்டு வர்றதுக்கு, எவ்ளோ தடங்கல் தெரியுமா ஆதி…”
“விடு விடு நிலா! இனி நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம் வீக்கெண்ட்ல. அப்புறம் சாட்டர்டே நைட் … பார்ட்டி தான். ஸ்டே அவுட் தான்” என்றான் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு.
அவன் மேல் சாய்த்திருந்தவள் எழுந்து அவனைப்பார்க்க, அவன் புருவங்களை ஏற்றி இறக்கி, இதழ் விரிய சிரித்தான்.
“இப்படி சிரிக்காத. ஆரம்பத்துல இருந்தே இந்த சிரிப்பு தான்…” என்று அவன் இரு கன்னத்தை இழுத்துக் கிள்ளி, நெற்றியில் முத்தமிட்டாள்.
அவளின் அந்த மந்தகாச புன்னகை, நெருக்கம் அவனை ஏதோ செய்தது.
உடனே, “நாளைக்கி சீக்கிரம் எழுந்திருக்கணும். நீ படு”
“நீ தூங்கலயா?”
“இல்ல நீ தூங்கு… நான் அப்புறம் தூங்கறேன்” என்று சொன்னவன், ப்ளாங்கெட்டை நன்றாக விரித்து படுக்கும்படி சொல்ல, அவளும் படுத்தாள்.
அவளுக்கு போர்த்திக்கொள்ள, மற்றொரு ப்ளாங்கெட் கொடுக்க “எனக்கு வேண்டாம் ஆதி. நீ யூஸ் பண்ணிக்கோ” என்றவளிடம், “நான் பார்த்துக்கறேன், நைட் உனக்கு ரொம்ப குளிரும்… நீ போர்த்திக்கோ” என்றான்.
விடாப்பிடியாக மறுத்தவள், களைப்புடன் இருந்ததால் உடனே உறங்கிவிட்டாள்.
சிறிது நேரத்துக்கு பின், நிலாவை பார்த்தவனுக்கு, அவள் சொன்ன, ‘தன் சிரிப்பு’ மற்றும் அவளின் இதழொற்றல் நினைவுக்கு வந்தது. கூடவே அவன் முன்பு எப்படி இருந்தான்… இப்போது எப்படி சிரித்துக்கொண்டே இருக்கிறான் என்பதும் நினைவுக்கு வந்தது. அதற்கு காரணம் தன் அருகில் உறங்குபவள் தான் என்ற எண்ணம்.
போர்வையை அவளுக்குப் போர்த்திவிட்டு, “தேங்க்ஸ் ஃபோர் கமிங் இன்டு மை லைஃப் அன்ட் மேக்கிங் மீ ஸ்மைல் லைக் க்ரேஸி ஆல்வேஸ் (Thanks for coming into my life and making me smile like crazy always)” பட்டும் படாமல் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
இருந்த குளிருக்கு, அந்த போர்வையை நன்றாக இழுத்து மூடிக்கொண்டு இன்னமும் நன்றாக உறங்கினாள்.
மீதம் இருந்த டென்ட்டின் மேல்பாகத்தை கீழே போட்டு, தான் எடுத்துவந்த ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான் ஆதி. எப்போது உறங்கினோம் என்றே தெரியாமல் அவனும் உறங்கிவிட்டான்.
சிறிது நேரம் கழித்து விழித்த நிலா, அவன் குறுக்கிப் படுத்திருப்பதைப் பார்த்து என்ன செய்வது என்று யோசித்தவள், அவள் படுத்திருந்த போர்வையை நன்றாக உதறி அவனுக்குப் போர்த்திவிட்டாள்.
புன்னகையுடன் அவனையே பார்த்திருந்தவள்,அவன் முடியை லேசாகக் கலைத்து… பின், கொஞ்சம் இடைவெளிவிட்டு, மற்றொரு போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்தாள்.
இருவரும் நன்றாக உறங்க, காலையில் அவன் வைத்திருந்த அலாரம் தன் வேலையே சரியாகச் செய்தவுடன், ஆதி எழுந்தான். அவன் அருகில் அவள்.
சத்தம் கேட்டு அவளும் எழ, “நீ எப்போ இங்க வந்த?” அவன் கேட்க, “குளுர்ல உன்னை பார்க்க பாவமா இருந்துச்சு அதான்” என்றாள்.
“ஹே என்ன சொன்ன?! குளிருக்காக வந்தயா?” சத்தமாக சிரித்துக்கொண்டே மற்றொரு அர்த்தத்தை மனதில் வைத்துக் கேட்டான்.
“இதுல என்ன சிரிக்க இருக்கு? ப்ளாங்கெட் இல்லாம தூங்கின… அதான். வேறென்ன?!” என்று சொல்லும்போதே, அதன் மற்றொரு அர்த்தம் விளங்கியது. தலையில் அடித்துக்கொண்டாள்.
“காலைலயேவா?! ஆள விடு. நாம கிளம்பணும்” அவள் எழ முயல, சட்டென அவளை தன்னருகே இழுத்த ஆதி, “அடுத்த ட்ரெக் இங்கயே வருவோம் நிலா! உன்கூட இருக்கிறப்ப, நைட்ஸ் ஆர் சோ ப்யூட்டிஃபுல் ஹியர்!” என்றான் சிரித்துக்கொண்டே.
அவனைத் தள்ளிவிட்டு, “இருக்கும் இருக்கும். முதல்ல கிளம்புவோம்”
“அருவில குளிச்சுட்டு போலாமா? ஃபிரெஷ்ஷா இருக்குமே!” கண்ணடித்துக் கேட்டான்.
“நீ ஒரு மார்கமா தான் இருக்க ஆதி!” அவனைப் பார்த்து போலியாக முறைத்த நிலா, “குளிக்கலாம் ஒன்னும் வேண்டாம். முதல்ல கிளம்பலாம். போய் விஷயத்தை சொல்லிட்டு, எவ்ளோ சீக்கிரம் கிளம்புவோமோ அவளோ சீக்கிரம் சென்னை கிளம்பலாம், வீட்ல தேடறதுக்கு முன்னாடி!” என்று சொல்லிக்கொண்டே எழுந்தாள்.
இருவரும் கிளம்பி அந்த அழகான இடத்தில் சில புகைப்படங்களை எடுத்துவிட்டு, கீழே நடக்க ஆரம்பித்தனர்.
அவள் ஏதோ ஆழ்ந்த யோசனையிலிருந்தாள்.
“என்ன யோசனையெல்லாம் பலமா இருக்கே” அவன் கேட்டான்.
“அந்த வாட்ட சட்டமா இருந்தாரே. அவர் பேருதான் யோசிச்சிட்டு இருக்கேன். எப்படி மறந்தேன்னே தெரில”
“பார்த்தா உனக்கு அடையாளம் தெரியும்ல”
“ஹ்ம்ம்” என்றாள் யோசனையுடனே.
“சரி வா அங்க போய் பார்த்துப்போம்” அந்த அருவி செல்லும் பாதையில் நடந்தனர் இருவரும்.
“எவ்ளோ செடிகள் மரங்கள் இங்க இருக்கில்ல ஆதி”
“கரெக்ட்! நேச்சர் அட் இட்ஸ் பெஸ்ட். இன்னும் நம்ம ஆளுங்க எப்படி விட்டு வச்சிருக்காங்கன்னு தெரியல. இல்லைன்னா இந்நேரம் ரிஸார்ட் அது இதுன்னு வந்திருக்கும்” என்றான்.
“அதான் ட்ரெக்கிங்னு வர ஆரம்பிச்சாச்சில்ல ஆதி. இனி அவ்ளோ தான்… காலி”
“நோ நிலா! இதுவரைக்கும் இங்க ரொம்ப கம்மையா தான் ட்ரெக்கிங் வந்திருக்காங்களாம். அண்ட் NOC’ல, கண்டிஷன்ஸ் இருக்கு. மலைக்கு அந்தப்பக்கம், அதாவது இந்த சைட், அருவிக்கு கீழ போகக்கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா போட்டிருக்காங்க. இது ரெஸ்ட்ரிக்டட் பிளேஸ். நாம தான் அதை மீறி வந்திருக்கோம்.
நான் உங்கிட்ட நேத்தே சொன்னேன்… பட், நீ கேட்ட மாதிரியே தெரில. இந்த அருவி தண்ணில ரொம்ப ரொம்ப கம்மியா தான் மாசு இருக்கு. மே பி இல்லாம கூட இருக்கலாம். சிலசமயம் மீட்டர் கூட துல்லியமா கணிக்காம இருக்கலாம்.. 99.4% காட்டுச்சு” என்றான் ஆச்சரியத்துடன்.
அவளும் அதே ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டே நடக்க, இருவரும் அந்த ஊர் அருகே வந்தடைந்தனர்.
கண்ணுக்கு எட்டும் தூரத்தில், மரத்தின் அடியில் சில ஆடுகளை மேய்த்துக்கொண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவன் அதை அவளிடம் காட்டும்போது, அவர்களுக்குச் சற்று அருகில் இருவரும் வந்திருந்தனர்.
திடீரென அந்த சிறுவர்கள் ஒன்றாகக் கூடினர்.
“என்ன ஆயிற்று?” என்று இருவரும் பார்க்க… நெஞ்சைப் பிடித்தபடி வலியால் துடித்துக்கொண்டு, ஒரு சிறுவன் கீழே கிடந்தான்.
சிறுவன் துடிப்பதைப்பார்த்த ஆதி, “நிலா சீக்கிரம் வா! அந்த பையனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல” சிறுவன் இருந்த இடத்தின் அருகே ஓடுவதற்குள், அங்கிருந்த சிறுவர்கள்… “முனி……” என்று அழைத்தபடி, “என்னாச்சு இவனுக்கு? ஏய் வாங்க ஓடிடலாம்” என்று அங்கிருந்து ஓடினர்.
“முனி…” என்ற பேரைக் கேட்டவுடன் நிலாவிற்கு ஏதோ பொறி தட்டியது. ‘கோவில்ல பார்த்தவரோட பேர் முனியரசன்!’ அவள் நினைவிற்கு வந்தது.
ஆதி சிறுவனருகில் சென்று, “தம்பி… உனக்கு என்ன ஆச்சு?” என்று கேட்க, அந்த சிறுவன் பேசமுடியாமல் மயங்கினான்.
அவன் உடம்பில் அசைவிருக்கிறதா?! மூச்சு விடுகிறானா?! என்று பார்த்த ஆதி, சிறுவன் சலனமில்லாமல் இருப்பதைப் பார்த்தவுடன், மாட்டி இருந்த பேக்கை கழற்றிவிட்டு அவன் முன் மண்டியிட்டான்.
பின் தன் கைகளினால், அந்த சிறுவனின் இதயத்தில் அழுத்தம் தர ஆரம்பித்தான். சிறுவனிடம் இருந்து எந்த சலனமும் இல்லாமல் போகவே, மறுபடியும் இதயத்திற்கு அழுத்தம் தந்தான்.
பக்கத்தில் நிலா என்ன செய்வதென்று தெரியாமல் பதறிப் போயிருந்தாள்.
“ஆதி, இஸ் ஹி ஆல்ரைட்” என்று கேட்க “ஐம் ட்ரையிங்” என்று சொன்னபோது சிறுவனிடம் எந்த ஒரு அசைவும் இல்லை. உடனே CPR’ரின் (Cardiopulmonary Resuscitation) அடுத்த கட்டமாக, சிறுவனுடைய தலையைத்தூக்கி மூக்கை அடைத்து வாய் வழியே காற்றை புகுத்தினான்.
நிலா கடவுளை வேண்டியவண்ணம் அந்த சிறுவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனின் நிலை பார்த்து கண்கள் கலங்கியது.
அடுத்து அவனுடைய நாடியை ஆராய்ந்த ஆதி, அது மெலிதாக துடிப்பதைப் பார்த்தவுடன், மறுபடியும் இதயத்தை அழுத்தி, காற்றைப் புகுத்தினான்.
இப்போது சிறுவனிடத்தில் மெல்லிய அசைவுகள் தெரிய ஆரம்பித்தது.
மூச்சை நன்றாக இழுத்து வெளியிட்ட ஆதி, “நிலா ஹி இஸ் சேஃப் நவ்!” என்றவன்… சிறுவனிடம், “தம்பி நான் பேசுறது கேட்குதா?” என்று கேட்டுக்கொண்டே மெல்லமாகக் கன்னத்தைத் தட்டினான்.
அந்த சிறுவன் கண்விழிக்க “இங்க ஹாஸ்பிடல் எங்க இருக்குனு சொல்லு” என்று அவனை உட்காரவைத்தான் ஆதி. அந்த சிறுவன் எழுந்தவுடன், லேசாக மூச்சிரைக்க, “நீங்க யாரு? எப்படி இங்க வந்தீங்க?” என்றுதான் முதலில் கேட்டான்.
“உனக்கு கொஞ்சமா நெஞ்சு வலி வந்துடுச்சு. இப்போ பரவால்ல. உன்ன ஹாஸ்பிடல்ல உடனே சேர்க்கணும்” என்றான் ஆதி.
“என்ன விடுங்க நான் போறேன்” அந்த சிறுவன் திமிறி, அவனை இப்படியே விடுவது சரியில்லை என்றெண்ணிய ஆதி, “சரி உன் வீடு எங்கனு சொல்லு. அங்க சொல்லி விட்டுட்டு போறேன்” என்றான் அவனைத் தூக்கிக்கொண்டு.
சிறுவனாலும் எழுந்து நடக்க அயர்வாக இருந்ததால் மறுப்பு ஏதும் சொல்லவில்லை.
“நிலா நான் பேக்கை எடுத்துக்கவா?”
“நீ பார்த்து போ ஆதி. நான் எடுத்துட்டு வரேன்” என்றவள் பேக்கை எடுத்துக்கொண்டு பின்தொடர்ந்தாள்.
சிறு தூரம் சென்றவுடன் அருவியை ஒட்டிய வீடுகள் வந்தன. அதில் இரண்டாவது வீட்டைக் காட்டினான் சிறுவன்.
சிறுவனைத் தூக்கிக்கொண்டு வருவதைப் பார்த்த ஒரு பெண்மணி, அந்த வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தாள் “முனி முனி என்னடா ஆச்சு!” என்று பதறிக்கொண்டு.
பின், ‘அவனை எதற்குத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்?’ என்று நினைத்தவள் “நீங்க யாரு… எப்படி இங்க வந்தீங்க? என் தம்பிய என்ன செஞ்சீங்க?” என்று கோபத்துடன் நெருங்க, ஆதி அந்த சிறுவனை இறக்கி விட்டான்.
“அக்கா எனக்கு திடீர்னு நெஞ்சு வலி வந்துடுச்சு” அவன் சொல்லி முடிக்கும் முன் “என்ன சொல்ற முனி? நெஞ்சு வலியா. உனக்குமா? மாரியாத்தா!” என்று அவன் அருகில் வந்து அணைத்துக்கொண்டாள் அப்பெண்.
“பசங்க பயந்து ஓடிட்டாங்க. இவர் தான் தூக்கிட்டு வந்தாரு” என்று அந்த சிறுவன் சொல்ல… “இங்க ஹாஸ்பிடல் எங்க இருக்கு? இவனை அங்க சேர்க்கணும்” என்றான் ஆதி.
“நன்றிங்கய்யா. உங்ககிட்ட கோவப்பட்டுட்டேன். இந்த ஊருல ஆசுபத்திரிலாம் இல்லைங்க” என்றவள், “மருத்துவர் மருத்துவச்சி தான் இருக்காங்க” என்றாள்.
“என்னது ஹாஸ்பிடல் இல்லையா? அப்போ இந்த மாதிரி உடம்புக்கு வந்துச்சுன்னா…” என்று ஆதி முடிக்கும்முன்,
“எது வந்தாலும் அவங்க தான் பார்த்துப்பாங்க. நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி. நீங்க கிளம்புங்க. நீங்க இங்க இருக்கிறது தெரிஞ்சா பிரச்சனைஆய்டும்” என்று பயத்துடன் சொன்னாள்.
“இல்ல… நாங்க ஒருத்தர பார்க்க வந்திருக்கோம்” என்ற ஆதி நிலாவை பார்க்க… “ஆமா. முனியரசன் சார் பார்க்க வந்திருக்கோம்” என்று அந்த பெண்மணியிடம் சொல்லிவிட்டு அவனைப் பார்த்தாள், பெயர் என்ன என்பது நினைவிற்கு வந்துவிட்டது என்பதைச் சொல்லும் வகையில்.
“அவரையா?” என்று குழப்பத்துடன் அப்பெண் கேட்டாள்.
அதற்குள் அந்த சிறுவன், “ஐயாக்கு தான் உடம்பு” என்று ஏதோ சொல்ல வர, அந்த பெண் அவனின் வாயை மூடினாள்.
நிலாவும் ஆதியும் ஒருவரை ஒருவர் பார்த்து, பின் அந்த பெண்மணியைப் பார்த்தனர்.
“என்ன ஆச்சு அவருக்கு?” கேட்டான் ஆதி.
“அது வந்து” என்று அப்பெண் இழுக்க, “ஒரு முக்கியமான விஷயமா அவரை பார்க்க வந்திருக்கோம்” என்றாள் நிலா.
‘இவங்கள பார்த்தா தப்பானவங்க மாதிரி தெரில. தம்பிய வேற காப்பாத்தியிருக்காங்க. சொல்லலாமா?’ என்ற எண்ணங்களுடன், “சரி நீங்க உட்காருங்க” என்று பாய் எடுக்கப் போனவளை, “இருக்கட்டும் பரவால்ல” என்றான் ஆதி.
பாயை விரித்த அந்த பெண், கதவைப் பூட்டி திரும்ப, அவர்கள் இருவரும் இன்னமும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து… “யாராவது பார்த்துட்டா என்ன செய்றது? அதான் சாத்தினேன். நீங்க உட்காருங்க” என்றதும் ஆதியும் நிலாவும் உட்கார்ந்தனர்.
அவள் அடுப்பு இருக்கும் இடத்திற்குச் சென்று ஏதோ செய்துகொண்டிருந்தாள்.
“இப்போ என்ன பண்றது ஆதி?”
“ஒன்னும் புரியல நிலா” என்றான் குழப்பமாக.
“இவங்ககிட்ட திருவிழா பத்தி சொல்லலாமா?”
“சொன்னா எப்படி எடுத்துக்குவாங்கன்னு தெரியல. இப்போ இருக்கற நிலைமைல இவங்க தான் அவர்கிட்ட நம்மள கூட்டிட்டு போகமுடியும்” என்று அவன் சொல்லும் போது, அந்த பெண் சின்ன பாத்திரத்தில் ஏதோ அவர்களிடம் நீட்டினாள்.
“சுக்கு பானகம் குடிங்க” என்று கொடுக்க, தயங்கியவாறே இருவரும் பெற்றுக்கொண்டனர்.
“முனியரசன் சார்க்கு உடம்பு சரியில்லையா? நாங்க பார்க்க…” நிலா முடிப்பதற்குள், “எப்படியும் நீங்க அவரை இப்போ பார்க்க முடியாது. பார்த்தாலும் பேச முடியாது!” என்றாள் அந்த பெண்மணி.
நிலாவும் ஆதியும் அதிர்ச்சியுடன் குழம்பினர்!!