என்னோடு நீ உன்னோடு நான் – 15

என்னோடு நீ உன்னோடு நான் – 15

நிலாவையும் வள்ளியையும் இழுத்து வருவதைப் பார்த்த ஆதி, கோபத்துடன்… “என்ன செய்றீங்க? மரியாதையா அவங்கள விடுங்க” என்று கத்தினான்.

அதைப் பார்த்து அங்கு வந்த சில ஆண்கள். “நீ தானா அந்த ஆளு!” என்று அவனையும் இழுத்துச்சென்றனர், அவனின் திமிறலையும் மீறி.

மாட்டிக்கொண்டோம் என உணர்ந்தவுடன், வள்ளியின் தம்பி முனியை அருகில் வரச்சொன்ன ஆதி, ஏதோ சொன்னான். அதைக் கேட்ட முனி, எதையோ எடுக்கச் சென்றான்.

மூவரையும் தலைவர் வீட்டின் வாயிலில் நிற்கவைத்து அவரின் வீட்டுக் கதவைத் தட்டினர்.

அவர் திறக்க, “என்ன ஆச்சு? ஏன் இவங்கள இப்படி கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று கேட்டார் தலைவர்.

அப்போது வள்ளியின் கணவன் வள்ளியின் முடியை விடாமல், “ஐயா! இவளே அவ ஊர்ல சொந்த பந்தம்னு யாருமில்லாம, அவ தம்பியோட தனியா தான் இருந்தா. இப்போ யாரையோ சொந்தம்னு பொய் சொல்லி ஊருக்குள்ள வச்சிருக்கா!” என்று கத்தினான்.

“என்னது இவங்க வள்ளியோட சொந்தம் இல்லையா?” அதிர்ந்தார் தலைவர்.

“நாங்க திருவிழாவுக்காக இன்னிக்கி வரலைனா இன்னும் என்னென்ன நடந்திருக்குமோ! நினைச்சாலே பயமா இருக்குயா” என்றான் அவள் கணவன்.

அப்போது தலைவர் வீட்டிலிருந்து வெளியே வந்தான் ராமசாமி.

வந்தவன், “மாமா! நான் அப்போவே சொன்னேனே… இவங்கள நம்பாதீங்கன்னு. நீங்க நான் சொல்றத எப்போ நம்பியிருக்கீங்க இவங்கள எல்லாம்…” என்று அவன் சீறிக்கொண்டு ஆதியை அடிக்கச் செல்ல, ஆதி அவனை நெஞ்சோடு தள்ளினான்.

“எங்க ஊரு ஆளையே அடிக்கறியா நீ!” என்று ஆதியைத் தாக்க சில ஆண்கள் நெருங்க, பூசாரி விஷயம் அறிந்து, அங்கே வந்திருந்தார்.

“மொதல்ல அவங்கள விடுங்க! அவங்க நம்ம ஊருக்கு எவ்ளோ உதவி பண்ணியிருக்காங்க தெரியுமா?” அவர் தன் விஷயத்தையும் சொல்ல வர, ஆதி வேண்டாம் என்பது போலத் தலையசைத்தான்.

அதைப் புரிந்துகொண்ட பூசாரி, “இவங்களால தான் நம்ம ஊரு பசங்க ரெண்டு பேரு இப்போ உயிரோட இருக்காங்க. அத மறந்துடாதீங்க” எனக் கத்தினார்.

“அதெல்லாம் இருக்கட்டும் சாமி! இவங்க எதுக்காக இந்த ஊருக்கு வந்திருக்காங்க… அத மொதல்ல சொல்ல சொல்லுங்க” இடைமறித்துக் கேட்டான் ராமசாமி பூசாரியைப் பார்த்து.

அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த வள்ளி, “அவங்க அரசனைய்யாவ பார்க்க வந்தாங்க. அவரு இவங்ககிட்ட, இந்த ஊர்ல கொஞ்ச நாளா, மர்மமா சிலருக்கு இந்த மாதிரி வலி வருதுன்னு சொல்லிருக்காரு.

அதுனால… என்னன்னு தெரிஞ்சிக்க வந்திருக்காங்க” என்றவள், “நான் அவருக்கு உடம்பு முடியாம இருக்கப்ப, எதுக்கு சொல்லணும்னு, என் சொந்தகாரங்கன்னு ஐயாகிட்ட சொன்னேன்” என்றாள்.

“அப்படியே அரசனைய்யாவே வர சொல்லியிருந்தாலும்… இவங்க ஏன் ஊர சுத்திட்டு வரணும்? அவரே கூட்டிட்டு வந்திருக்கலாமே” மடக்கினான் ராமசாமி.

‘அன்று நிலா கோவிலுக்கு வந்தபோது ராமசாமி அங்கே இல்லை. இருப்பினும் அவனுக்கு அங்கு நடந்தது முழுவதும் தெரிந்துள்ளது. இது கருணாவின் வேலை தான். அவன் தான் சொல்லியிருக்க வேண்டும்’ என நினைத்துக்கொண்டார் பூசாரி.

“இப்பவாவது நான் பேசலாமா?” ஆதி திமிறிக்கொண்டு கேட்டான்.

அதற்கு ராமசாமி, “நீ ஒன்னும் பேச வேண்டாம்! எங்களையெல்லாம் நல்லா ஏமாத்திட்ட பா. போதும் அதுவே” என்றவன் மனதில், இவனைப் பேச விடக்கூடாது’ என்றும் எண்ணிக்கொண்டான்.

அதனால் உடனே, “மாமா! முனீஸ்வரன் கோவிலுக்கு போக நேரம் ஆச்சு. இவங்கள இங்க கட்டிப் போட்டுட்டு கிளம்பலாம். பூஜை முடிஞ்சு வந்து இவங்களை பார்த்துப்போம்” என்றான் தலைவரிடம்.

“சார்… நீங்க போனீங்கன்னா அங்க கோவில்ல… இல்ல இந்த ஊர்ல ஏதாச்சும் பிரச்சனை வரலாம்” என்றான் ஆதி தலைவரிடம்.

உடனே ராமசாமி, “என்ன புதுசா பீதியை கிளப்பற? ஓ! இப்போ புரியுது மாமா இவங்க திருவிழாவை நிறுத்த வந்திருக்காங்க” தலைவரை ஏற்றிவிட்டான்.

அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த தலைவர், “ராமசாமி நீ அமைதியா இரு! அந்த பையன் தெரிஞ்சோ தெரியாமலோ நமக்கு உதவியிருக்கான். அவன் என்ன சொல்ல வர்றான்னு தான் கேட்போமே!” அவர் முடிக்கும்முன்…

அங்கிருந்தவர்கள்… “ஐயா தப்பா நினைச்சுக்காதீங்க. எங்களுக்கும் ராமசாமி சொல்றது தான் சரின்னு படுது. இவங்கள கட்டி போட்டுட்டு போகலாம். வந்து என்னன்னு பொறுமையா விசாரிப்போம். அங்க பூஜைக்கு நேரமாச்சுங்கைய்யா” என்றனர்.

“அதுவும் சரி தான். விழா நிக்காம நடக்கணும். இவங்கள அந்த ஊர்க்காத்த ஆலமரத்துல கட்டிட்டு போகலாம். வந்து பார்த்துப்போம்” என்றார் தலைவர்.

பூசாரி என்னசெய்வதென்று தெரியாமல், ‘உண்மையை சொல்லிவிடுகிறேனே’ என்பதுபோல ஆதியை பார்க்க, அவன் கண்களாலேயே ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றான்.

அங்கிருந்த ஆண்கள்,  நிலாவையும் ஆதியையும் அந்த மரத்தில் கட்டிவிட்டு… வள்ளியை வீட்டில் அடைத்துவிட்டுக் கிளம்பினார்கள்.

“ஸாரி நிலா! உன்ன தனியா விட்டுட்டு போயிருக்கக்கூடாது. ஆனா உன்ன கூட்டிட்டு போயிருந்தா ரிஸ்க் ஆகியிருக்கும்.” என்றான் மன்னிப்பை வேண்டும் விதமாக.

“நான் தான் ஸாரி கேட்கணும்… என்னால தான் எல்லாம். நீ வர நேரமானதும்… உனக்கு ஏதாவது ஆகிடுச்சோன்னு நான் பயந்தே போய்ட்டேன் ஆதி! உன்ன பார்த்த உடனே தான் என் நிம்மதியே திரும்ப வந்துச்சு” என்று சொன்னவள் கண்களில் கண்ணீர் நிறைத்திருந்தது.

“ஆல் ஒகே நிலா! பூசாரி பொண்ண அவர் வீட்ல விட்டுட்டேன்”

“நாம நினைச்ச மாதிரி நடந்துச்சா ஆதி?”

“ஹ்ம்ம் எஸ்!” என்று தன் இடுப்பைக் காட்டினான். அங்கு ஏதோ வேட்டியில் மறைத்து வைத்திருந்தது போலத் தெரிந்தது.

அதைப் பார்த்தவுடன் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலா, அந்த இடத்திற்கு மேல் உள்ளிருந்து லேசாக ரத்தம் கசிந்திருப்பதை பார்த்தாள்.

“ஆதி ரத்தம்!” அதிர்ந்து காயத்தைப் பார்த்து பதற, “அது ஒன்னுமில்ல, சின்ன காயம். பேக்ல மருந்து இருக்கு… போட்டுக்கிறேன்” அவன் சொன்னாலும் அவள் முகம் ‘தன்னால்தான்’ என எண்ணி, கலக்கமாகவே இருந்தது.

“முனி வீட்ல இருந்து கிளம்பிட்டானா… இல்ல அவனையும் வீட்ல அடைச்சுட்டாங்களானு தெரியல” யோசனையுடன் ஆதி சுற்றித் திரும்பி பார்த்தான்.

அந்நேரம் சரியாக முனி அங்கே வந்திருந்தான்.

“அண்ணா! அக்காவ வீட்ல வச்சு பூட்டிட்டாங்க. நல்லவேள நான் இதை முன்னாடியே வீட்ல இருந்து எடுத்துட்டேன்.

எடுத்துட்டு வரும் போது அக்காவை வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டிருந்தாங்க. என்னை தேடினாங்க. நான் மறஞ்சுகிட்டேன். அக்கா தான் பாவம்” என்று அழ ஆரம்பிக்க. “அழுகாத முனி. நான் உன் அக்காவ கூட்டிட்டு வரேன்” என்றான் ஆதி.

“நீங்க இதை தானே கேட்டீங்க?” என்று அவன் ஒரு பவர் பேங்க்கை காட்டினான்.

“உஃப்” என்ற ஆதி, நிலாவை பார்த்து புன்னகைத்தான். “ஆமா டா. இதுதான்” என்று சொல்லும்போது, அங்கே சில பெண்கள் வந்தனர்.

முந்தைய தினம் காப்பாற்றிய அந்த சிறுவனின் அம்மா அவர்கள் அருகில் வந்து, “தம்பி உங்களால தான் என் பையன் இப்போ உயிரோட இருக்கான். நாங்க அவுத்து விடறோம். நீங்க கிளம்புங்க” என்ற அந்த பெண், நிலாவிற்கு கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்தாள்.

ஆதி கயிற்றை நிலா அவிழ்த்துவிட, அவன்… “நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க. என்கிட்ட இப்போ ஆதாரம் இருக்கு, உங்கள காப்பாத்த” அவன் மறைத்துவைத்திருந்த போனை வெளியே எடுத்தான்.

அதை பவர் பேங்க்குடன் பொருத்தி, அதை உயிர் பெறச் செய்தான்.

அதில் ஓடிய வீடியோவை பார்த்து அதிர்ந்தனர் அங்கிருந்த அனைவரும்!

உடனே அவர்கள், “தம்பி முனீஸ்வரன் கோவிலுக்கு உடனே போகணும். அப்போதான் அவங்கள காப்பாத்த முடியும்” என்றதும் ஆதி நிலா இருவரும் சரி என்பது போல் தலையசைத்தனர்.

கோவிலுக்குச் செல்லும்முன் வள்ளியை விடுவித்து, ஆதியுடைய காயத்திற்கு மருந்து போட்டுவிட்டு கிளம்பினார்கள்.

போகும்போது நிலா அவர்களிடம், “இந்த பூஜைல என்ன பண்ணுவாங்க?” என்று கேட்டாள்.

அந்த பெண்களில் ஒருவர், “மொதல்ல சாமிக்கு, அப்புறம் படகுக்கு, வலைக்கெல்லாம் பூஜ பண்ணுவாங்க. அது முடிஞ்ச உடனே முனீஸ்வரனுக்கு பூஜ பண்ணுவாங்க. அப்போ ஊர்லயிருந்து எடுத்துட்டுப்போற சாராயத்தை முனீஸ்வரனுக்கு படைப்பாங்க.

இங்கயிருந்து கொண்டுபோற கூட்டுச் சோறை, அங்கேயே மதியம் சாப்டுட்டு, படையல் வச்ச சாராயத்தையும் அடிச்சுட்டு, பொழுது போனதும் திரும்பி வருவாங்க. அப்புறம் மாரியம்மன் பூஜைக்கு தயாராவோம்” என்று முடித்தார்.

சிறு தூர நடைப் பயணத்திற்குப்பிறகு அந்த கோவிலை அடைந்தனர்.

அங்கே படகு பூஜை நடந்துகொண்டிருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், “இவங்க ரெண்டு பேரும் எப்படி வந்தாங்க? பொம்பளைங்கள வேற கூட்டிட்டு வந்திருக்காங்க” கோபமாக அவர்களை நோக்கி…

“உங்கள கட்டிப் போட்டுட்டு தான வந்தோம்” என்று ஆதியை தாக்க வந்தனர்.

அங்கிருந்த பெண்கள், “மொதல்ல நிறுத்துங்க. இப்படி நீங்க எதையும் யோசிக்காம செய்றதால தான் ஒருத்தன் நம்மள காலி பண்ண ஊருக்குள்ள வந்திருக்கான். இதை பார்த்துட்டு யார அடிக்கணும்னு முடிவு பண்ணுங்க” என்று அந்த பெண்கள் ராமசாமியை கோபமாக பார்த்தனர்.

அந்த வீடியோ ஆரம்பித்தது.

அந்த இடம் ஓர் அறை உள்ள குடிசை போல் இருந்தது. முதல் சில நிமிடங்கள் அந்த வீட்டிலிருந்த கருணா ஏதோ செய்துகொண்டிருந்தான்.

அப்போது போன் அடித்தது. கருணை அதை எடுத்துப் பேச,

“ஹலோ… நாளைக்கு முனீஸ்வரன் கோவில்ல சார்… எல்லாம் ரெடியா இருக்கு. ராமசாமி இன்னும் வரல” ……

வீடியோ பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ராமசாமியைப் பார்த்தனர். அவன் அங்கே இருந்து மெல்லத் தப்ப முயற்சிக்க, சில ஆண்கள் அவனை விடவில்லை.

மறுபடியும் வீடியோ பக்கம் திரும்பினர்.

அதில் கருணா, “நாம நினைச்சபடி நடந்துடுச்சுன்னா, நான் ரெண்டு மூணு நாள்ல  கிளம்பிடுவேன்”…….

“அந்த பொண்ணுனால ஒன்னும் பண்ண முடியாது. அவளால பேச முடியாது” கேமராவில் தெரியாத பூசாரியின் பெண்ணை பார்த்து சொன்னான்……

பின் அவன், “5 பசங்க” …….

“என்னால இதுவரைக்கும் 8 பசங்களுக்கு ரெண்டு ரவுண்ட் செலுத்த (inject) முடிஞ்சுது. 4 பேருக்கு ஒரு ரவுண்ட் inject பண்ணியிருக்கேன். பட் அவன் ஊருக்குள்ள வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டு இருக்கான். ஒரு பையன வேற காப்பாத்தியிருக்கான்” ……

வீடியோ பார்த்துக்கொண்டிருந்தவர்கள் உறைந்து போய் இருந்தனர்.

“அவன் டாக்டரானு தெரில. ஆனா நீங்க அவங்கள முடிக்க அனுப்பினவங்கெல்லாம் வேஸ்ட் சார். அவங்கள ஒன்னும் பண்ண முடியல” ……

“அந்த பூங்கொடி கோவில் எண்ட்ரன்ஸ் CCTV பார்க்க சொன்னேனே பார்த்தீங்களா?…….. அதுவும் சரிதான் இத மொதல்ல முடிப்போம். நான் ராமசாமிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு உங்க லைன்க்கு வரேன்” என்று கட் செய்தான்.

அனைவரும் ராமசாமியை ஏறிட்டனர்.

மறுபடியும் கருணா வேலையில் மூழ்கினான். அவன் அங்கும் இங்கும் நடந்துகொண்டே ஏதோ செய்து கொண்டிருக்க, ஆதி விடியோவை கொஞ்சம் ஓட்டினான். கதவு தட்டும் சத்தத்திலிருந்து மறுபடியும் ப்ளே செய்தான்.

கருணா கதவைத்திறக்க ராமசாமி உள்ளே வந்தான்.

க: வர இவ்ளோ நேரமா?

ரா: நாளைக்கு விழா வேலையெல்லாம் இருக்குல்ல. அதான்.

க: சரி அவங்க ரெண்டு பேரும் இன்னும் ஊர்ல தான் சுத்திட்டு இருக்காங்களா?

ரா: ஆமா… இன்னிக்கி வேற ஒரு பையன காப்பாத்தியிருக்கான். அவங்க நாளைக்கி எப்படியும் காலி. வள்ளி புருஷன் வந்துடுவான். அவனை ஏத்திவிட்டுட வேண்டியதுதான்.

க: சரி. நான் சொன்னது இதுதான். நீ அந்த சாராயத்துல இதை கலக்கிடு. மொத்தமா கலக்கிடணும். பழக்க தோஷத்துல நீயும் குடிச்சிடாத!

ரா: நாளைக்கு எல்லாருமே குடிப்பாங்களே (முகத்தில் பதட்டத்துடன்)

க: என்ன இப்போ புதுசா கேட்கற?! முன்னாடி அவங்களுக்கு ஊத்தி கொடுத்தப்பெல்லாம் கொஞ்சமா கலக்கினோம். அது தாங்காமலே சிலர் காலி. இப்போ கொஞ்சம் அதிகம். நாளைக்கு நிறைய பேர் (மயங்கி விழுவது போல் சிரித்தபடியே செய்துகாட்டினான்). தப்பிக்கிற மீதி பேருக்கு வேற பிளான் இருக்கு.

வீடியோ பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் ராமசாமியிடம், “அடப்பாவி நீ மீன் பிடிக்கப் போனப்ப எல்லாம் எங்களுக்கு சாராயம் குடுத்தயே… அதுல என்னத்த கலந்த?” என்று அடித்தனர்.

“எனக்கு… எனக்கு தெரியாது. ஏதோ போதை மருந்துனு குடுத்தான்” பயந்துகொண்டே ராமசாமி சொல்ல, “துரோகி! உன்னயெல்லாம்” என்று அவனை அடித்தனர்.

“இப்போ சாராயத்துல கலந்துட்டியாடா?” என்று தலைவர் ஆத்திரத்துடன் கேட்க, ஆம் என்பது போல் தலையசைத்தான்.

“அது என்னன்னு தெரியுமா?” ஆதி அவனிடம் கேட்டான். “அதைப்பத்தி அந்த கருணா ஒன்னும் சொல்லல” என்றான் ராமசாமி.

“முனீஸ்வரா எங்கள மன்னிச்சுடு! இந்த பாவியால எப்படி இப்படி பண்ண முடிஞ்சதோ!” என்று தலைவர் மனமொடிந்து சொல்ல, அங்கிருந்த மற்றவர்கள் ராமசாமியை அடித்தனர்.

அதில் ஒருவன், “டேய் யாருடா அந்த கருணா? எதுக்கு இப்படி ஒரு காரியம் பண்ண? எதுக்கு எங்களை முடிக்கணும்னு பார்த்த? என்ன சதி பண்ணீங்க… சொல்லு சொல்லு?” என்று பலமாகத் தாக்கினான்.

“என்னால எதுவும் சொல்ல முடியாது. சொன்னா என்னை கொன்னுடுவான்” பயத்துடன் சொன்னான்.

“நீ சொல்லல, உன்ன நாங்க கொன்னுடுவோம்… சொல்லு” என்று மறுபடியும் தாக்கினர்.

“தம்பி! எங்களை நல்ல நேரத்துல வந்து காப்பாத்துனீங்க. நீங்க வரலைனா எங்களுக்கு என்ன ஆகியிருக்குமோ! என்னத்த கலக்கி இருப்பாங்க தம்பி” கேட்டார் தலைவர்.

“என்ன கலக்கியிருக்காங்கன்னு தெரில. லேப்க்கு அனுப்பினா தான் சார் தெரியும். இப்போ நீங்க பூஜ பண்ண போறீங்களா?” கேட்டான் ஆதி.

“என்ன செய்றதுனு தெரில தம்பி!” என்று சொல்லும்போது, “ஐயா நான் முன்னாடியே சொன்ன மாதிரி நிறைய தடங்கல் வந்திருச்சு. உயிர் இழப்பு வேற… இந்த வாட்டி இந்த திருவிழா வேணாமே” என்றார் ஜோசியர்.

“அந்த பாவி கருணாவை என்ன பண்ணீங்க தம்பி? அவனை எங்க கையால கொல்லணும்” என்று தலைவர் கோபத்துடன் கேட்க, “அவன் இப்போ” என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே…

அங்கே கூட்டத்திலிருந்த ஒருவன், “என் பையன் செத்ததுக்கு நீயும் தானடா காரணம்!” கத்தியபடி படகின் துடுப்பை எடுத்து சரமாரியாக ராமசாமியை அடிக்கத்தொடங்கினான்.

ரத்த வெள்ளத்திலிருந்த ராமசாமியை பார்த்து, “அவன விடுங்க. கேட்கற விதத்துல… கேட்கறவங்க கேட்டா பதில் சொல்லிடுவான்” என்று ஆதி சொல்லும்போது…

மற்றொவன், “என் அண்ணன் இவனால தான் செத்தான். இவனையெல்லாம் உயிரோட விட்டா, என்ன வேணும்னாலும் செய்வான்” கோபத்துடன் படகின் நங்கூரத்தால் ராமசாமியை நெஞ்சில் தாக்கினான். ராமசாமி சுருண்டு விழுந்தான்.

ஆதி கோபத்துடன், “என்ன பண்ணியிருக்கீங்க?” ராமசாமி அருகே சென்று நாடி பிடித்துப் பார்த்தான். மிகவும் வலுக்குறைந்து இருந்தது.

“விடுங்க தம்பி! இவனுக்கெல்லாம் இப்படித்தான் நடக்கணும்” என்றான் ராமசாமியை அடித்தவன்.

“நமக்கு அந்த உரிமை இல்ல!” என்று ஆதி சீற, “ஊருக்கு தூக்கிட்டு போனா வைத்தியர் காப்பாத்திடுவாங்க” என்றான் மற்றொருவன்.

ராமசாமியைத் தூக்கிக்கொண்டு ஊருக்குத் திரும்பலாம் என்று புறப்பட்டனர். ஊர் மக்கள் முன்னே செல்ல நிலாவும் ஆதியும் பின்னே வந்தனர்.

ஒரு வித நிம்மதி அவர்களுக்குள்!

அப்போது நிலா ஆதியின் காயத்தைப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

“ரொம்ப வலிக்குதா?” கண்ணீருடன் அவன் காயத்தை வருடியபடி அவள் கேட்க, “ரொம்ப இல்ல. பெயின் கில்லர் போட்டிருக்கேன்ல”

அவள் முகம் தெளிவடையாததைப் பார்த்த அதி, அவளைத் தேற்றினான்.

“ஆதி… நீ இல்லைனா இதெல்லாம் சாத்தியமே இல்ல! தேங்க் யு சோ மச்!” என்று அவன் கைகளைப் பற்றிக்கொண்டு நடந்தாள்.

“அப்படியா? கண்டிப்பா இல்ல! உன்னோட ஒரு உள்ளுணர்வு, அதிலிருந்த உன்னோட உறுதி அதெல்லாம் இல்லைன்னா இது நடந்திருக்காது நிலா!

எனக்கு தெரில… நான் மட்டும் இருந்திருந்தேனா இவ்ளோ முயற்சி பண்ணியிருப்பேனான்னு. உன்னோட அந்த முயற்சிக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம்” அவன் முகத்தில் லேசான பெருமை கலந்த புன்னகை.

“ஏதோ ஒன்னு ஆதி! இவங்க எல்லாம் பாதுகாப்பா இருக்காங்கல்ல… அதுவே போதும்”

“பாதுகாப்பா இருக்காங்களான்னு இன்னும் தெரியல நிலா. நீயே பார்த்தல்ல… அந்த கருணா ஏதோ இன்ஜெக்ஷன் பத்தி சொன்னான். யாரை, என்ன இன்ஜெக்ட் பண்ணான்னு தெரியல” என்றான் குழப்பத்துடன்.

“நானே கேட்கணும்னு நினைச்சேன்… என்ன ஆனான் அந்த கருணா?” கேட்டாள் நிலா.

“ஹ்ம்ம்… நம்ம பிளான் பண்ண மாதிரியே விடியறதுக்கு முன்னாடி அந்த இடத்துக்கு போனேன். கதவு ஜன்னல் எல்லாம் சாத்தியிருந்தது. அவ்ளோ சீக்கிரம் கண்டிப்பா அந்த கருணா எந்திரிக்க மாட்டான்னு நம்ம நினைச்சது சரியா இருந்துச்சு”

அங்கு நடந்ததை ஆதி விளக்க ஆரம்பித்தான்.

கதவுக்குக் கொஞ்சம் தள்ளி ஆதி நின்றுகொண்டான். கிட்டத்தட்ட ஒரு ஐம்பது நிமிட காத்திருப்புக்குப் பின், கருணா கதவைத் திறந்தான். ஆதி மறைந்திருந்தது அவனுக்கு தெரியவில்லை.

கருணாவின் பின்புறத்திலிருந்து, ஆதி அவன் கழுத்தை இறுக்கப் பிடித்து, தான் கொண்டு சென்ற இன்செக்ட் ரிபெல்லன்ட் (insect repellent) வைத்து, கருணாவின் முகத்திலும் மூக்கிலும் அடித்தான்.

கருணா கொஞ்சம் தடுமாற, ஆதி… தான் வைத்திருந்த கயிற்றை வைத்து கருணாவின் கைகளை பின்னே கட்டினான்.

கருணா ஆதியைக் கட்டவிடாமல் சீறியபடி ஆதியைப் பார்த்தான். அவனைப் பார்த்ததும், ஆதிக்கு அவனை எங்கேயோ பார்த்த ஞாபகம்.

அவன் யோசித்த அந்த நொடி, கருணா தன் கால்கொண்டு ஆதியின் விலா எலும்பில் உதைத்தான். அதில் ஆதி தடுமாறி குடிசையின் சுவரில் போய் விழுந்தான். அங்கிருந்த கூறிய பொருள் ஒன்று ஆதியின் இடுப்பைத் துளைத்தது.

ஆதியால் வலியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் எழ முயல, அவனின் வலியைப் பார்த்த கருணா, ஆதியின் காயத்திலேயே மறுபடியும் உதைத்தான். ரத்தம் வெளியேற, எழ முடியாமல் கீழே விழுந்தான் ஆதி. 

மறுபடியும் மறுபடியும் கருணா அவ்விடத்திலேயே அடித்தான். ஆதிக்கு ரத்தம் கொஞ்சம் அதிகமாக வெளியேற ஆரம்பித்தது.

அங்கே சத்தம் கேட்டு பூசாரியின் மகள் வெளியே வந்தாள். வந்தவள் கருணாவின் பின் நின்று பீதியுடன் பார்க்க, அவள் கண்களில் பட்டது… கயிற்றால் கட்டப்பட்ட கருணாவின் கைகள்.

உடனே சுதாரித்துக்கொண்டு, அங்கிருந்த கட்டையால் கருணாவின் பின் மண்டையில் அடித்தாள். ஆத்திரத்துடனும், வலியுடனும் கத்தியபடி திரும்பிய கருணாவை, முன் மண்டையில் மறுபடியும் அடித்தாள் அந்த சின்ன பெண். 

கருணா வலி பொறுக்க முடியாமல் கீழே விழுந்தான். அப்போது அந்த பெண் ஆதி அருகில் வர, ஆதி அவளுடைய துப்பட்டாவைக் கேட்டான்,

அவளும் தந்தவுடன், அதை இரண்டாகக் கிழித்த ஆதி, ஒன்றை மடித்துக் காயத்தின் மேல் வைத்து, மற்றொன்றை இடுப்பைச் சுற்றி இறுக்கமாக கட்டினான்.

வலியிருந்தாலும் ஆதி எழுந்து, கருணாவின் காலை மற்றொரு கயிற்றால் கட்டினான். மண்டையில் அடித்ததால் லேசான மயக்கத்தில் இருந்தான் கருணா.

எடுத்து சென்ற தூக்க மாத்திரையை எப்படியாவது கருணாவிற்கு கொடுத்துவிடவேண்டும் என்றெண்ணி, அவனை வீட்டினுள் இழுத்துச் சென்ற ஆதி, அங்கிருந்த நாற்காலியில் அவனை உட்காரவைத்துக் கட்டினான்.

பின் அவ்வீட்டை ஆராய்ந்த போது அவன் கண்ணில் பட்டது, நிறைய நிறைய ட்ரக்ஸ், நீடில்ஸ் மற்றும் சிரிஞஸ் (drugs, needles and syringes). ‘ஒருவேளை மருத்துவனோ?!’ என்று யோசித்தபடி மீண்டும் ஆராய்ந்தான்.

அப்போது அங்கே மற்றொன்றும் இருந்தது. மயக்க மருந்து (anesthetic drug). ‘யாருக்கு செலுத்தினான்?!’ என்று யோசிக்கும்போது, அப்பெண் தனக்குப் போட்டதாக சைகையால் சொன்னாள். அதை கேட்டு அதிர்ந்தான் ஆதி.

‘எதற்காக அந்த சின்ன பெண்ணுக்கு?’ என்று நினைக்கும்போது, ஒரு யோசனை உதயமாக… அம்மருந்தையே கொஞ்சம் அதிகமாக, ஆனால் பாதுகாப்பான அளவில் கருணாவின் நரம்பில் infuse செய்தான் ஆதி.

கருணா முற்றிலுமாக சுயநினைவை இழக்க, ஆதி அவன் கண்களையும் கட்டிவிட்டு, சுற்றி முற்றி பார்த்து, அனைத்தும் சரியாக இருந்ததைப் பார்த்தபின், ஜன்னல் அருகே சென்றான்.

முந்தைய தினம் பூசாரி மகளைப் பார்க்க சென்றபோது உடன் சென்றிருந்த ஆதி, அங்கே தன் மொபைலை ஷூட் மோடில் (shoot mode) வைத்து, ஒரு பவர் பேங்க்’கை இணைத்துவிட்டு வந்திருந்தான்.

இப்போது அது உயிர்ப்பிழந்து இருந்தது. அதை எடுத்துக்கொண்டு பூசாரி மகளுடன் அவ்விடத்திலிருந்து வெளியேறினான்.

அனைத்தையும் நிலாவிடம் சொல்லிக்கொண்டிருந்தவன், “காலைல ஸ்பேர் பவர் பேங்க் எடுத்துக்க மறந்துட்டேன். அது இருந்திருந்தா, காலைல நம்மள கட்டிபோட்டப்பவே இவங்களுக்கு போட்டு காட்டியிருக்கலாம். முனி கிட்ட பவர் பேங்க் தான் எடுத்துட்டு வர சொன்னேன்” என்று முடித்தான் ஆதி.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட நிலா, “எவ்ளோ நேரம் அவன் மயக்கத்துல இருப்பான் ஆதி? எழுந்திரிச்சிட போறான். அவன் தான் நமக்கு இப்போ  இருக்கற ஒரே ஸ்கோப்” என்றவளிடம்…

“எப்படியும் இன்னும் கொஞ்சம் நேரம் தாங்கும். ஆனா இப்போ பிரச்சனை என்னன்னா, எப்படி அவனை இவங்ககிட்ட இருந்து காப்பாத்தி கூட்டிட்டு போகறதுன்னு தான் யோசிக்கணும். செம்ம கோவத்துல இருக்காங்க” என்றான்.

அப்படியே பேசிக்கொண்டு நடந்ததால், ஊரை அடைந்தது கூட பார்க்காமல் வந்தடைந்தனர்.

அங்கே சலசலப்புடன், ஊரிலிருந்த சில பெண்கள் கூடி நின்றிருந்தார்கள். அங்கே வந்தடைந்த தலைவர் மற்றும் ஆண்களைப் பார்த்தவுடன் ஏதோ பதட்டத்துடன் சொல்ல, ஆண்கள் அவர்களை விலக்கிவிட்டு முன் சென்றனர்.

‘ஏதோ நடந்திருக்கிறது’ என்று ஆதியும் நிலாவும் அவர்கள் பின் சென்று பார்க்க… அங்கே நின்று கொண்டிருந்தான் ப்ரித்வி!

 

பின் குறிப்பு: ப்ரித்வியை பற்றி அத்தியாயம் மூன்றில் பார்த்தோம்!

3
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved