என்னோடு நீ உன்னோடு நான் – 16

என்னோடு நீ உன்னோடு நான் – 16

வேற்று ஊர்வாசி மற்றும் அவனுடன் சில ஆட்களை பார்த்தவுடன் கிராம மக்கள் ப்ரித்வியுடன் சென்று வினவும் முன், “ப்ரித்வி!” என அழைத்தபடி ஆதி, அவனருகில் வேகமாகச் செல்ல முயன்றும் முடியாமல் நிலாவின் உதவியுடன் சென்றான்

“ஹேய் ஆதி! என்ன ஆச்சு? ஆர் யு ஒகே?” என்று கேட்டுக்கொண்டே ப்ரித்வி ஆதியை பிடித்துக்கொண்டான்.

“தேங்க் காட், யூ ஆர் ஹியர். ஐ வாஸ் வைட்டிங் ஃபோர் யூ! கௌஷிக் இன்ஃபோர்மேஷன் பாஸ் பண்ணானானு யோசிச்சிட்டே இருந்தேன்”

“கௌஷிக் சொன்னான் ஆதி. நீ சொன்ன மாதிரி மூணு நாள்ல அவனை ரீச் பண்ணலைனா, என்னை உன் துணைக்கு கிளம்பச்சொன்னான். வெல்… இங்க ஏதோ ப்ராப்ளம்னு நினைக்கிறேன். உனக்கும் அடிபட்டிருக்கும் போலயே”

“சொல்றேன் ப்ரித்வி! ஷி இஸ் நிலா. நிலாவுக்கு வந்த கிராஸ் டாக் வச்சு தான், இங்க வந்தோம். அண்ட் நிலா நான் சொன்னேனே… என் ஃப்ரெண்ட் ப்ரித்வி, சென்னை க்ரைம் ப்ரான்ச் டிஎஸ்பி, இவன் தான்” ஆதி அறிமுகப்படுத்த, நிலாவும் ப்ரித்வியும் புன்னகைத்துக்கொண்டனர்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தலைவர்,  “தம்பி உங்களுக்கு தெரிஞ்சவங்களா?” ஆதியிடம் அவர் கேட்க, “ஆமா சார். என் ஃப்ரெண்ட், அது…  என்னோட நண்பன்” என்ற ஆதி,

“இப்போ இவர் இங்க வந்தது கூட நல்லதா போச்சு. இவர் சென்னைல போலீசா இருக்கார். இவர்கிட்ட உதவி கேட்கலாம், உங்க ஊர்க்கு, யாரால என்ன ஆபத்துனு தெரிஞ்சுக்க” என்றான் ஆதி.

“என்னது… போலீசா… மன்னிச்சிடுங்க தம்பி. எங்க ஊரு பிரச்சனையை நாங்க பார்த்துக்கறோம். இவங்கெல்லாம் வேண்டாம்” என்றான் கூட்டத்தில் ஒருவன்.

“இப்படி நாங்க பார்த்துக்கறோம் பார்த்துக்கறோம்னு சொல்லி தான் இந்த அளவுக்கு வந்து நிக்கிறோம். நமக்குள்ள இருந்த ஒருத்தன் நம்மளயே அழிக்க நினைச்சுருக்கான். இப்பவும் இப்படியே இருந்தோம்னா, நம்ம கூட்டமே அழிஞ்சிடும்” கோபமாகச் சொன்னான் அங்கிருந்த ஒரு பெண்.

“ஒன்னும் வேண்டாம். ஏதோ பெரிய ஆள் மாதிரி, பொம்பளைங்கெல்லாம் வாய் பேச ஆரம்பிச்சுட்டீங்க. ஐயா, மொதல்ல இந்த தம்பி படம் புடுச்ச ஆள எங்க வச்சிருக்காருனு கேளுங்க. அவன முடிச்சிட்டா இந்த பிரச்சனையெல்லாம் முடிஞ்சிடும்” என்றான் முன் பேசியவன் தலைவரிடம்.

அவன் பெண்களைத் தரம் தாழ்த்தி பேசுவதைப் பார்த்த நிலா, “அவனை முடிச்சிட்டா, எல்லாம் முடிஞ்சதா? புரிஞ்சு தான் பேசறீங்களா? அவன் உங்க ஊருல இருக்கிறவங்களுக்கு ஏதோ குடுத்திருக்கான். அது எந்தளவுக்கு உங்களுக்கு பாதிப்பு ஆகும்னு யோசிச்சீங்களா?

இல்ல அது என்னனு தான் உங்களுக்கு தெரியுமா? எங்களுக்கு என்னங்க… அவனை உங்ககிட்ட குடுத்துட்டு போயிட்டே இருப்போம். ஆனா திரும்ப உங்களுக்கு ஒன்னுனா யாரவது வருவாங்களானு யோசிங்க” என்றாள் கோபத்துடன்.

அவள் முடிக்க அப்போது மருத்துவர் அங்கே வந்து, “ஐயா ராமசாமிக்கு நிறைய ரத்தம் போய்டுச்சு. காப்பாத்த முடியல” என்றவுடன்,

கூட்டத்தில் முன்பு பேசிய பெண், “கேட்டுக்கோங்க… உங்க அவசர புத்தியினால அவன் போய்ட்டான். மிஞ்சின ஒருத்தனையும் காலி பண்ணிடுங்க. திரும்ப வேற எவனாவது வருவான்… எல்லாரும் போய் சாவலாம்” கத்திக்கொண்டு அவ்விடத்தை விட்டுச்  சென்றாள்.

“ஐயா” மற்றொருவன் கூட்டத்திலிருந்து பேசத் தொடங்க, அவனைக் கையசைத்து நிறுத்தினார் தலைவர், பேசவேண்டாம் என்று.

பின் அவர், “எங்க ஊர்ல ஒருத்தன அவன் பக்கம் சாய்ஞ்சிருக்கான். ஏதோ வியாதி வர வச்சிருக்கான். அவன சும்மா விடக்கூடாது. நீங்க என்ன சொல்றீங்களோ… செய்றோம்! எனக்கு இந்த ஊரு ஜனங்க எந்த ஆபத்துமில்லாம இருக்கணும்” என்றார் நிலாவையும் ஆதியையும் பார்த்து.

காயத்தின் வலி தாங்காமல், ஆதி அங்கிருந்த ஓர் இடத்தில் உட்கார்ந்தபின், தலைவருக்கு நன்றி சொல்லிவிட்டு ப்ரித்வியிடம் திரும்பினான்.

“ப்ரித்வி, ப்ராப்ளம் என்னன்னா …” என்ற ஆதி, நிலாவிற்கு கிராஸ் டாக் வந்ததிலிருந்து அனைத்தையும் ப்ரித்வியிடம் சொன்னான்.

அனைத்தையும் கேட்ட ப்ரித்வி, “சோ, இதுவரைக்கும் பசங்க பெரியவங்கனு இறந்திருக்காங்க. முனியரசன் மர்மமான முறைல இறந்திருக்கார். அண்ட் நீ ரெண்டு பசங்கள காப்பாத்தியிருக்க. ரைட்?”

“எஸ் ப்ரித்வி! அவங்க ரெண்டு பேருக்கும் இன்னும் மெடிக்கல் அசிஸ்டன்ஸ் வேணும், அதில்லாம அவன் வீடியோல மொத்தமா 12 பேருக்கு இஞ்செக்ட் பண்ணியிருக்கேன்னு சொன்னான்” என்று சொல்லிவிட்டு தலைவரிடம் திரும்பிய ஆதி,

“சார், யாரு அந்த பசங்கனு தெரில. அதுனால இங்க இருக்க பசங்களுக்கு எல்லாம் ஒரு மெடிக்கல் செக்கப், அதாவது மருத்துவ பரிசோதனை பண்ணணும்”

“சரிங்க தம்பி. இங்க மொத்தம் 25 குடும்பம். அதுல ஒரு 15 பேரு சின்ன பசங்க இருப்பாங்க” என்றார் தலைவர்.

“எப்படி இவங்கல கூட்டிட்டு போகறது?” ஆதி யோசிக்கும் போது, ப்ரித்வி “ஆதி… நீ ஏன் மொபைல் மெடிக்கல் யூனிட் (MMU) ட்ரை பண்ண கூடாது? டிபார்ட்மென்ட்ல கேட்கலாம்… ஆனா இப்போ கேட்க முடியாது. திடீர்னு போய் இது தான் பிரச்சனை, குடுங்கனு கேட்டா… ஆயிரம் கேள்வி வரும். வேற எங்கேயாவது ட்ரை பண்ண முடியுமா?”

“ஹ்ம்ம் ஐ அண்டர்ஸ்டாண்ட் ப்ரித்வி! நார்மல் எமெர்ஜென்சி யூனிட்னா, நான் மேனேஜ் பண்ணி கொண்டுவந்திடுவேன். பட், இதுக்கு MMU வேணும்ல” ஆதி யோசிக்க… 

அப்போது நிலா, “நான் புருஷோத்தமன் சார்கிட்ட பேசறேன். நாங்க ஒரு டைம் மெடிக்கல் வேன் எடுத்துட்டு ஜவ்வாது மலைக்கிட்ட இருக்கிற ஒரு ரிமோட் வில்லேஜ்க்கு போயிருக்கோம். NGO வழியா கேட்டா சீக்கிரம் கிடைக்கும்” என்றாள்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த ப்ரித்வி புருவத்தை உயர்த்தினான் ஆச்சரியத்துடன். பின், “வாவ் சௌண்ட்ஸ் கிரேட் மிஸ் நிலா! நீங்க எங்க வேல பார்க்கறீங்க?” என்று கேட்க…

ஆதி புன்னகையுடன், “லிஸ்ட் ரொம்ப பெருசுடா ப்ரித்வி! போறப்ப பொறுமையா லிஸ்ட் பண்றேன்!” என்றான் நிலாவை பார்த்து. நிலா முறைக்க முயன்று முடியாமல், அவளும் புன்னகைத்தாள்.

ஆதிக்கு காயம் மீண்டும் வலிக்க, அங்கே கைவைத்துப் பிடித்தவாறே, “பட், முனிக்கும் அந்த இன்னொரு பையனுக்கும் சீக்கிரம் மருத்துவம் பார்க்கணும். அந்த கருணாவையும் சீக்கிரம் கூட்டிட்டு போகணும். இல்லாட்டி” என்று சொல்லும்போதே அவனுக்கு மெல்லியதாகத் தலை சுற்றியது.

அதைக் கவனித்த நிலா, “ஆதி! ஆர் யூ ஒகே?” பதறியபடி அருகில் செல்லும்போதே, அவன் காயத்திலிருந்து ரத்தம் கொஞ்சமாகக் கசிய ஆரம்பித்தது.

“நத்திங் டு வொரி நிலா! லேசா மயக்கம்” அவன் மெல்ல சாயும்முன், அவனைத் தாங்கிய ப்ரித்வி… “வி மஸ்ட் ஸ்டார்ட் ஸூன்” அவசரமாக அவன் அழைத்து வந்த கான்ஸ்டபிலை அழைத்தான்.

அவர்கள் வந்தவுடன் தலைவரிடம் திரும்பிய ப்ரித்வி, “அந்த ரெண்டு பசங்கள அனுப்பி வைங்க. நான் கடலூர் ஹாஸ்பிடல்ல சேர்த்திடறேன்” என்றவுடன், அவர்கள் முகத்தில் மெல்லிய தயக்கம். இதுவரை இதுபோல அனுப்பியதெல்லாம் இல்லை. அதனால் வந்த தயக்கம்.

அதைப் பார்த்த ஆதி, ஏதோ சொல்ல வர, நிலா அவனைத் தடுத்து, தலைவரிடம், “சார்! நீங்க அனுப்புங்க இல்ல விடுங்க. உங்கள காப்பாத்த தான் இவ்ளோ கஷ்டப்பட்டிருக்கார். நாங்க இவரை சீக்கிரம் கூட்டிட்டுப்போகணும். ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க” என்றாள் சற்று பொறுமை இழந்து.

“தனியா எப்படிமா அனுப்புறது… அதான்” என்று தலைவர் தயங்க, உடனே வள்ளி, “ஐயா! நான் அவங்க கூட போறேன். எனக்கு போய்ட்டு திரும்பி இங்க வர வழி தெரியும்” என்றாள் அவள் தம்பி உடல்நிலையில் அக்கறைகொண்டு.

அவள் கணவன், “அதுவும் சரிதான்யா. நானும் வேணும்னா கூட போய்ட்டு வரேன். அப்போ தான் என்ன ஆச்சுனு நமக்கும் தெரியும்” என்றான்.

தலைவர் சரி என்று சொன்னவுடன், ப்ரித்வி கான்ஸ்டபிலிடம் “நீங்க இவங்கள கூட்டிட்டு ஜீப்ல வாங்க… நாங்க அந்த கருணா இருக்கிற இடத்துக்கு போய், அவனையும் தூக்கிட்டு வந்துடறோம்” என்றான்.

நிலா வள்ளியிடம் அவர்களின் பைகளை எடுத்து வர வேண்டினாள். ப்ரித்வி ஊர்க்காரர்களிடம் சாராய ஸாம்பில்ஸ் வாங்கிக்கொண்டான்.

 

ப்ரித்வி மற்றும் நிலாவின் உதவியுடன் ஆதி காரில் ஏற முற்படும்போது, “நாங்க உங்களுக்கு ரொம்ப கடமை பட்டிருக்கோம். எங்களால உங்களுக்கு ரொம்ப கஷ்டம் ஆகிடுச்சு” என வருந்தினார் தலைவர்.

அதற்கு நிலா, “பரவால்ல சர். நீங்க கவனமா இருங்க. நான் ஒரு ரெண்டு நாள்ல திரும்ப வர ட்ரை பண்றேன். உங்க செக் அப்க்கு” என்றாள். ஆதியும் மெலிதாக புன்னகைத்துவிட்டு காரில் ஏறினான்.

அடர்ந்த மரங்களின் நடுவிலிருந்தது கருணாவின் குடிசை. ஆதி வண்டியிலிருந்து இறங்க முயற்சிக்க, நிலா… “இங்கயே இரு ஆதி! உன்னாலேயே முடியல” என்றவுடன், ப்ரித்வியும் அதையே சொல்லிவிட்டு அந்த குடிசையுள் சென்றான்.

அங்கே கருணா நாற்காலியில் கட்டியபடியே இருந்ததைப் பார்த்து, அவனை நாற்காலியிலிருந்து அவிழ்த்து, கை கால்கள் கட்டியவாறே வெளியே இழுத்து வந்தான்.

ப்ரித்வி வருவதைப் பார்த்த நிலா, அவனுக்கு உதவினாள். இருவரும் அவனை காரின் பேக் சீட்டில் போட்டனர்.

கருணாவின் நிலையைப் பார்த்த ப்ரித்வி… ஆதியிடம், “என்னடா பண்ண? ஆள் மூச்சு பேச்சே இல்ல”

ஆதியில் பேச முடியாமல், நிலாவை பார்த்தான். கண்கள் லேசாகச் சொருகியது.

நிலா,  “அனஸ்தீஷியா ட்ரக் போட்டேன்னு சொன்னான்… இல்ல சொன்னார்” என்றாள்.

ப்ரித்வி அவள் வார்த்தையைச் சரி செய்ததைப் பார்த்து புன்னகையுடன் மீண்டும் வீட்டிற்குள் சென்றான்.

ஆதி முடியாமல் சீட்டில் சாய்வதைப் பார்த்த நிலா, “ஆதி முடியலைன்னா சீக்கிரம் கிளம்புவோம். நான் அவரை வர சொல்றேன்” என்று செல்ல முயல, அவன் அவள் கையை பற்றி நிறுத்தினான்.

மெல்லிய குரலில், “அவன்கிட்ட, அங்க இருக்கிற எல்லாத்தையும் போட்டோ எடுத்துக்க சொல்லு. அந்த ட்ரக்ஸ்லாம் எடுத்துக்க சொல்லு” என்றான்.

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் ஆதி. மொதல்ல கிளம்பலாம். யூ டோன்ட் லுக் வெல்!” 

உடனே உள்ளே சென்ற நிலா, அங்கு ப்ரித்வி ஏற்கனவே புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, “கொஞ்சம் சீக்கிரம்… அவருக்கு முடியல போல” என்றாள் படபடப்புடன்.

“நான் ரெண்டே நிமிஷத்துல வந்துடறேன். நீங்க அவனுக்கு துணையா இருங்க” என்று சொல்லிவிட்டு, அவன் அங்கிருந்த தேவையான பொருட்கள் அனைத்தையும், அங்கிருந்த ஒரு பையில் போட்டுக்கொண்டு உடனே வெளியேறினான். பின் அங்கிருந்து புறப்பட்டனர்.

சிறு தூரப் பயணத்துக்கு பின் கடலூர் வந்தடைந்தனர். வள்ளி, அவள் கணவன், மற்றும் சிறுவர்களும் போலீஸுடன் வந்திருந்தார்கள்.

ஆதியின் நண்பன் கௌஷிக் பரிந்துரை செய்த ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். ஆதியை பரிசோதித்த மருத்துவர், அவனுக்கு ரத்தம் வெளியேறியதால் அவனை அட்மிட் செய்து அதற்கான மருத்துவ உதவிகளைச் செய்தார்.

அருகிலிருந்த நிலாவிடமும் ப்ரித்வியிடமும், “ஸ்டிட்ச் போட்டிருக்கேன்… ரத்தம் கொஞ்சம் தான் வெளியேறியிருக்கு, ஆனா இன்னிக்கி ஒழுங்கா சாப்பிடல போல… அதுனால தான் மயங்கிட்டார். ஃபியூ அவர்ஸ்… ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்”

அவரிடம் ஆதி, “அந்த பசங்களுக்கு எல்லாம் நார்மலா இருக்கான்னு, கொஞ்சம் ECG எடுத்து பார்க்கிறீங்களா?. கூடவே அவங்களோட பிளட் அன்ட் யூரின் ஸாம்பிள்ஸ் எடுத்துக்கறீங்களா?” என்றான்.

‘“ஏற்கனவே ECG எடுக்க அனுப்பியாச்சு. ரிப்போர்ட் வந்தவுடனே சொல்லி அனுப்பறேன். நீங்க சொன்ன மத்த டெஸ்டஸ் எடுத்திடலாம்” என்ற மருத்துவர் அங்கிருந்து வெளியேறினார்.

ஆதி ப்ரித்வியிடம், “தேங்க்ஸ் டா. நல்ல நேரத்துக்கு நீ வந்த!”

 “இவ்ளோ சீரியஸ் இஷ்யூல நீ மாட்டியிருப்பன்னு நான் நினைக்கல ஆதி” என்றான் ப்ரித்வி.

அப்போது அங்கே வந்த செவிலியர், “உங்கள டாக்டர் வரச்சொன்னார்” என்றதும், ப்ரித்வி மற்றும் ஆதி பேசுவதைப் பார்த்த நிலா, அவள் செல்ல நினைக்க, ப்ரித்வி “நான் போயிட்டு வரேன்” என்று செவிலியருடன் சென்றான்.

அவனுடனான தனிமையான தருணத்திற்காகக் காத்திருந்த நிலா, ப்ரித்வி சென்றவுடன் “நீ மயங்கினவுடனே, நான் ரொம்ப பயந்துட்டேன்” கண்களில் கண்ணீர் கசிய, அவன் தோள்மேல் சாய்ந்துகொண்டாள்.

அவள் தோளோடு அணைத்துக்கொண்ட ஆதி, “ பயம் எதுக்கு? நான் தான் சொன்னேனே நிலா! ஐ வில் பி ஒகே ஸூன்” அவள் கையை பற்றி முத்தமிட்டு, “உன்ன விட்டுட்டு நான் எங்கயும் போக மாட்டேன்.

சீக்கிரம் சென்னை போறோம்! போய்ட்டு” பாதியில் நிறுத்தி… குனிந்து அவளைப் பார்த்து புருவத்தை ஏற்றி இறக்கி சிரித்தவனை, அவன் மேல் சாய்ந்தபடி செல்லமாக அடித்தாள்.

ப்ரித்வி உள்ளே வரும்போதே செருமிக்கொண்டே வந்தான், ஏடாகூடமாக இருப்பார்களோ என எண்ணி!

அவன் நினைத்ததுபோலவே, நிலா தன்னை ஆதியின் பிடியிலிருந்து விடுவிக்க முயல, ஆதி இன்னமும் இறுகப் பற்றிக்கொண்டான். முகத்தில் அவ்வளவு கள்ளம்.

‘டேய், அதான் சவுண்ட் குடுத்துட்டே வந்தேனே!’ நிலா இருந்ததால் மனதில் மட்டுமே திட்டியபடி முறைத்தான் ப்ரித்வி.

அவன் முறைப்பின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட ஆதி சிரித்துக்கொண்டே, “என்ன சொன்னார் டாக்டர்?” என்று கேட்க “ஒரு குட் நியூஸ். ஒரு பேட் நியூஸ்” என்றான் ப்ரித்வி.

ஆதி நிலாவை விடுவித்து, “என்ன சொல்ற ப்ரித்வி? என்ன ஆச்சு?”

“குட் நியூஸ்… அந்த பசங்க ECG சேஃப். அவங்களும் சேஃப். அண்ட் பிளட், யூரின் ஸாம்பில்ஸ் எடுத்தாச்சு” என்று சொல்ல… நிலாவும் ஆதியும் பெருமூச்சு விட்டனர்.

“அப்போ பேட் நியூஸ்” ஆதி கேள்வியுடன் பார்க்க,

“பேட் நியூஸ் என்னன்னா… நீ பிடிச்சு வச்சிருந்தவன் கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டான். நீ அவனுக்கு என்ன இன்ஜெக்ஷன் போட்டன்னு தெரில. நினைவு எப்போ வரும்னும் தெரில” என்றான் நம்பிக்கை கொஞ்சம் குறைந்தது போல.

“டேய்! நான் அவனுக்கு ஜென்ரல் அனஸ்தீஷியா தான் போட்டேன். அதுவும் நார்மல விட கொஞ்சம் அதிகமா… அவ்ளோதான்” குழப்பத்துடன் சொன்னான்.

“வேணும்னா நம்ம அனஸ்தடிஸ்ட்’கிட்ட (anesthetist) செக் பண்ணலாம். இங்க ஃபெசிலிட்டிஸ் அவ்ளோ இல்ல. அவன் இங்க இருக்கறத விட, நான் சென்னைக்கு கூட்டிட்டு போய்டறேன்” என்றான் ப்ரித்வி.

“அப்போ அவன் யாருகிட்ட போன் பேசினான்…? என்ன கலந்தான்னு எப்படி கண்டுபிடிக்கிறது?” என்றாள் நிலா குழப்பத்துடன்.

“அந்த சாராய ஸாம்பில்ஸ் வச்சு, என்ன கலந்தான்னு கண்டுபிடிச்சிடலாம். பட் பர்ப்பஸ் என்னனு எப்படி கண்டிப்பிக்கறது… அதான் யோசிக்கிறேன்…” என்றான் ப்ரித்வி.

பின், “அந்த பசங்ககிட்ட இருந்து எடுத்த ஸாம்பில்ஸ்ஸ டெஸ்ட்க்கு கொடுத்திருக்கேன். அவங்க ரிப்போர்ட் அனுப்பிடுவாங்க. வந்தவுடனே நான் என்னன்னு உனக்கு சொல்றேன்” ப்ரித்வி சொன்னதற்கு, சரி என்றான் ஆதி.

“சரிடா ஆதி. நான் கிளம்பணும். நீ மேனேஜ் பண்ணிப்பியா?” ப்ரித்வி கேட்க,

“நான் பார்த்துக்கறேன் டா. அப்புறம் நீ நிலாவை கூட்டிட்டு போயிடறயா சென்னைக்கு?” என்றவன், அவளைப் பார்த்து “நீ வரலனு உன் வீட்ல பயந்துடுவாங்க… நிலா” என்றான்.

ப்ரித்வி நிலாவின் பதிலுக்காக அவளைப் பார்க்க… “நான் வீட்ல பேசிக்கறேன் ஆதி” என்றவள் ப்ரித்வியிடம், “நான் ஆதிக்கு ஹெல்ப்பா இங்கயே இருக்கேன்” என்றாள்.

“அதுவும் சரிதான். அப்போ நான் கிளம்பறேன். ஆம்புலன்ஸ் புக் பண்ணி அந்த கருணாவ உன் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடறேன். அப்போதான் ஈசியா மானிடர் பண்ண முடியும்”

“தட்ஸ் பெட்டர் ப்ரித்வி. நான் நாளைக்கு சென்னை வந்துடறேன்” என்றான் ஆதி.

“ஆல்ரைட்! ஏதாச்சும்னா கால் பண்ணு. என்னோட கார்-அ இங்க விட்டுட்டு போறேன். டிரைவர் அரேன்ஞ் பண்ணிக்கோ… தயவுசெய்து நீயே டிரைவ் பண்ணாத ஆதி இந்த நிலைமைல” என்று சொல்லி சாவியைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான் ப்ரித்வி.

“ஆதி என் லக்கேஜ் இன்னும் அந்த ஹோட்டல்லயே இருக்கு. அப்புறம் என்ன கோவிலுக்கு கூட்டிட்டு போன டிரைவர்க்கு நான் பே (pay) பண்ணனும்”

“ஹ்ம்ம் sure. எப்படியும் இன்னிக்கி நைட்டுக்குள்ள டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. அந்த ஹோட்டல்’கே போய்டலாம்” என்றான்.

“சரி நான் புருஷோத்தமன் சார்க்கு கால் பண்ணி மெடிக்கல் யூனிட் கொஞ்சம் சீக்கிரம் ரெடி பண்ண முடியுமானு கேட்கிறேன்” என்ற நிலா, வெளியே சென்று அவளுடைய போனில் கால் செய்தாள்.

ஆதி, கருணாவிற்கு கொடுத்த அந்த அனஸ்தேடிக் ட்ரக் (anaesthetic drug) பற்றி அவனுடைய மொபைலில் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது அவனுக்கு கௌஷிக்கிடம் இருந்து அழைப்பு வந்தது.

“சொல்லுடா கௌஷிக்…… ஆமா டிரஸ்ஸிங் பண்ணியாச்சு…… இன்னிக்கி ஈவினிங்க்கு மேல டிஸ்சார்ஜ்…… ஆமா, ப்ரித்வி கிளம்பிட்டான். அங்க கருணாவ அட்மிட் பண்ணிடுவான்…… நீ கொஞ்சம் பார்த்துக்கோ கௌஷிக். முடிஞ்சா நம்ம அனஸ்தடிஸ்ட் (anesthetist) வந்து பார்க்க சொல்றியா…… நான் நாளைக்கு வந்துடறேன்……”

“வாட்? இப்போ எதுக்கு அவளை பத்தி பேசற…… அவ எங்க இருந்தா எனக்கென்ன…… மூட் ஸ்பாயில் பண்ணாத டா கௌஷிக்…… நான் உன்கிட்ட அப்புறமா பேசறேன்……” கோபத்துடனும், வெறுப்புடனும் அழைப்பைத் துண்டிக்க, புருஷோத்தமனுடன் பேசிவிட்டு  நிலாவும் உள்ளே வந்தாள்.

“ஆதி நான் பேசிட்டேன். நடந்தது எல்லாம் சொல்லிட்டேன். ஒரு ரெண்டு நாள்ல அரேன்ஞ் பண்ணிடலாம்னு சொன்னார்” என்றவளிடம், “ஹ்ம்ம்” என்றான் அவள் முகம் பாராமல். மனதில் வேறு ஏதோ ஒன்றை நினைத்தவனாய்.

அதைக் கவனித்த நிலா, “என்ன ஆச்சு? ஏன் டிஸ்டர்ப்டா இருக்க?” என்று கேட்க, “ஒன்னும் இல்ல” என்றான்.

அவன் சரியில்லை என்பதை உணர்ந்த நிலா, அவன் அருகில் சென்று… “ரொம்ப முடியலைனா ரெஸ்ட் எடுத்துக்கோ ஆதி” என அவனைப் படுக்க வைக்க உதவ, வேண்டாம் என்பது போல தடுத்தவன், “இல்ல பரவால்ல” என்றான் ஏதோ சிந்தனையுடன்.

மறுபடியும் போன் எடுத்து, அதில் அந்த ட்ரக் பற்றிப் பார்க்க ஆரம்பித்தான்.

‘என்ன ஆயிற்று இவனுக்கு?’ என்ற எண்ணத்துடன், நிலா அவன் அருகில் உட்கார்ந்துகொண்டாள்.

“ஆதி அப்புறம் சீக்கிரம் ஊருக்கு போகணும்னு, வள்ளி அவங்க ஹஸ்பன்ட் ரெண்டு பேரும், பசங்கள கூட்டிட்டு கிளம்பிட்டாங்க”

அதற்கும் ஒற்றை வார்த்தையில் “ஒகே” என்றான் மொபைல் பார்த்தபடி.

அதில் கடுப்பான நிலா, “எதுக்கு இப்போ மொபைல்? ரெஸ்ட் எடுக்கலாம்ல” கோபத்துடன் கேட்டாள்.

“ஹ்ம்ம்” என்று சொல்லிவிட்டு, அவன் மறுபடியும் மொபைல் பார்த்துக்கொண்டிருக்க, தான் பேசுவது அவனுக்கு இடையூறாக இருக்கிறது என்று எண்ணி, அவள் ஜன்னல் அருகில் சென்று வெளியே வெறித்தாள்.

சிறிதுநேரம் மௌனமே நிறைந்திருக்க, அவளைப் பார்த்தான். அவள் வெளியே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்து தன்னையே திட்டிக்கொண்டான்.

‘எங்கயோ இருக்கிற சங்கடத்தை நான் ஏன் நிலாக்கிட்ட காட்டணும்? ச்ச… ஐம் ஸாரி நிலா’ மனதில் மன்னிப்பு கேட்டுவிட்டு, “நிலா எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும். ஹெல்ப் பண்றியா?” என்று கேட்டான்.

அவளும் அவனுக்கு உதவினாள். இருவரிடையே மறுபடியும் மௌனமே நிறைந்திருந்தது.

மாலை நேரம் கடந்துகொண்டிருக்க, செவிலியர் அவனுடைய ட்ரிப்ஸ்’ஸை அகற்றிவிட்டு, “டிஸ்சார்ஜ் பண்றது பத்தி, டாக்டர் கொஞ்ச நேரத்துல வந்து சொல்றேன்னு சொன்னார்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

நிலா ஏதோ செய்துகொண்டிருந்தாள். ஆதியும் ஏதோ செய்து கொண்டிருந்தான். இருவரும் இதுவரை இல்லாத ஏதோ ஒரு வெறுமையை உணர்ந்தனர்.

——

ப்ரித்வி கருணா வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்த பொருட்களை ஒவ்வொன்றாகப் பார்த்தான்.

பழைய சிரிஞ் நீடில்ஸ் (syringe needle) எல்லாம் பரிசோதனை செய்வதற்காக, தனியாக எடுத்து வைத்தான். எல்லா ட்ரக்ஸ்ஸையும் தனியாக எடுத்துவைத்தான்.

அதில்லாமல் அங்கே இருந்த இரண்டு போன், சில டாக்குமெண்ட்ஸ், லேப்டாப் எல்லாம் எடுத்து வந்திருந்தான்.

இரண்டு போன்களும் பேட்டர்ன் லாக்கில் (pattern lock) இருந்தது. ஒன்று ஐபோன் மற்றொன்று ஆண்ட்ராய்ட் (andriod) போன்.  போன் ஸ்க்ரீனை சின்ன டார்ச்சின் வெளிச்சத்தில் பார்த்தான்.

பின் கவனமாகத் திருப்பி பின்பாகத்தை கழற்றிப்பார்த்தான்… உள்ளே சிம் இருந்தது. அதைப் பார்த்தவன், இரண்டு போன்களையும் தனித்தனியாக பேக் செய்தான்.

லேப்டாப்க்கும் லாக் இருக்கும் என்று நினைத்து அதையும் பேக் செய்தவன், போன் எடுத்து கொஞ்ச நேரம் யாருடனோ பேசினான்.

பின்பு எடுத்துவந்த அந்த பேப்பர்ஸில், நிறைய விளக்கப்படங்கள் மற்றும் அதன் விளக்கங்களைப் பார்த்தான். அதை பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவனுக்கு அழைப்பு வர, அதை அட்டென்ட் செய்தான்.

“ஹலோ… எஸ் ப்ரித்வி ஹியர்… ரிப்போர்ட்ஸ் ரெடி ஆகிடுச்சா! குட்… ஏதாச்சும் லீட்ஸ் (leads)?… வாட்? நிச்சயமா சொல்றீங்களா?… எஸ், இந்த நம்பர்க்கு அனுப்புங்க…

மிச்ச ஸாம்பில்ஸ்ஸ அங்க ஆதிகிட்ட குடுத்துடறீங்களா?… எஸ் அவன் அங்க தான் இருக்கான்… தேங்க் யூ” போனை கட் செய்த ப்ரித்வியின் முகத்தில் குழப்ப ரேகைகள்!

 

1
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved