என்னோடு நீ உன்னோடு நான் – 17

என்னோடு நீ உன்னோடு நான் – 17

“ஆதி டிஸ்சார்ஜ் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிஞ்சது. அப்புறம் இந்த ஸாம்பில்ஸ் கொடுத்தாங்க. ப்ரித்வி கொடுக்க சொன்னாராம்… உள்ள வச்சிடறேன்” என அனைத்தையும் பேக் செய்தாள்.

பெரிதாக எதுவும் பேசாமல் அவள் வேலையைச் செய்துவிட்டு “கிளம்பலாமா?” என்று கேட்க, “இன்னும் கோவமா? சரியாவே பேச மாட்டேங்கற” என்றான்.

“உன்மேல எனக்கு என்ன கோபம் ஆதி? ஐம் நார்மல். ஸ்ட்ரைன் பண்ணிக்காத… நாம கிளம்புவோம். நான் இந்த திங்ஸை கார்ல வச்சுட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அவள் செல்ல முற்படும்போது…

“டிரைவர் ஹயர் பண்ணியாச்சா நிலா?” அவன் கேட்க, “நான் டிரைவ் பண்றேன்” அழுத்தமாக சொல்லிவிட்டுச் சென்றாள்.

‘செம்ம கோவம் போல… கன்வின்ஸ் பண்ணு ஆதி!’ என்று தனக்கே கூறிக்கொண்டான்.

சிறிது நேரத்தில் முன்பு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலை அடைந்தவுடன், ஆதியையும் நிலாவையும் பார்த்த ரிசெப்ஷனிஸ்ட்…

“மேடம், இவ்ளோ நாள் எங்க போனீங்க? உங்கள ரீச் பண்ண எவ்வளவோ ட்ரை பண்ணோம். நீங்க நாலு நாளா வரலனு உங்க லக்கேஜ்லாம் ஸ்டோர் ரூம்ல எடுத்து வச்சிருக்கோம்”

“ஸாரி! கொஞ்சம் வேலையா போயிருந்தேன். அங்க சிக்னல் இல்ல அதான். தேங்க் யூ சோ மச்” என்றாள் நிலா.

“சார் நீங்க இவங்கள பார்த்துட்டீங்களா? சூப்பர்” என்றாள் அடுத்து ஆதியை பார்த்து.

நிலாவும் ஆதியை பார்க்க, ஆதி… “நானும் இதே ஹோட்டல்ல தான் தங்கியிருந்தேன். நீ கோவிலுக்குப்போன அன்னைக்கு இவங்ககிட்ட தான் ‘நீ எங்க போற’னு கேட்டேன்” என்றான் ஆதி.

நிலா தலையசைத்துக்கொண்டாள்.

“மேடம் உங்க திங்ஸ்-அ எடுத்துட்டு வர சொல்றேன்” என்றவளிடம்… ஆதி, “இன்னைக்கு நைட் இங்க தான் ஸ்டே. சோ ரூம்ல கொடுத்துடுங்க” என்றான்.

“கண்டிப்பா சார். நீங்க தங்கி இருந்த சூட்(Suite) ஒன்னு தான் இப்போ இருக்கு. கூட ஒரு டீலக்ஸ் இல்ல சூப்பர் டீலக்ஸ்  புக் பண்ணிடலாமா?” நிலா டீலக்ஸ் அறையில் முன்பு தங்கி இருந்ததால் அப்பெண் இதை கேட்டாள்.

எப்படியாவது நிலாவை சமாதானம் செய்ய எண்ணி, “எங்களுக்கு ஒன்னு போதும்” நிலாவை பார்த்து கள்ளப்புன்னகையுடன் சொன்னான்.

வேறொருவர் முன் ஆதியிடம் வாக்குவாதம் செய்ய  விரும்பாத நிலா அவனைப் பார்த்து முறைக்க, அந்த ரிசெப்ஷன் பெண் இருவரையும் பார்த்து புன்னைகைத்துவிட்டு, ஒரு ரூம் பிளாக் செய்தாள்.

நிலா எதுவுமே பேசவில்லை. அமைதியாகச் சென்றாள். அவனிடம் துளியும் பேசாமல், தன் வேலையை மட்டுமே செய்ய, சிறிது நேரம் கழித்து… குளித்து விட்டு வந்தவள், கண்ணாடி முன் நின்று ஈர முடியைத் துவட்டிக்கொண்டிருந்தாள்.

அவளை பின்னோடு அணைத்த ஆதி, “ஸாரி ஸாரி ஸாரி… இன்னும் கோவம் போகலையா? நீ பேசாம ஏதோ மாதிரி இருக்கு நிலா!” முகமோடு முகமிழைத்து கேட்டான். 

“நான் ஏன் கோபப்படணும் ஆதி? நான் பேசினா, உனக்கு தான் தொந்தரவா இருக்கே!”

“நிலா! ஏதோ மூட் ஆஃப். இனி அப்படி பண்ணவே மாட்டேன். என்னை இந்த ஒரு டைம் மன்னிச்சிடேன் பொஞ்சாதி!” அவனுடைய ட்ரேட்மார்க் சிரிப்புடன், அவள் கழுத்தில் முகத்தை வைத்து கண்ணாடி வழியே அவளைப் பார்த்தான்.

அந்த சிரிப்பு மட்டும் அவளுக்கு போதுமே! உடனே சமரசமாகி, “பொழச்சு போ புருஷா! உன்ன மன்னிச்சிட்டேன்” திரும்பி அவன் கன்னத்தைக் கிள்ளி சொன்னாள்.

அவளை விடாமல் சோபாவில் தன்னுடன் உட்காரவைத்த ஆதி, அவள் மேல் சாய்ந்தவாறே, மலையில் எடுத்த புகைப்படங்களைக் காட்டினான்.

“இந்த ஃபோட்டோஸ்லாம் பார்க்கும்போது எனக்கு என்னென்னமோ ஞாபகம் வருது… அங்க ஸ்பென்ட் பண்ண நைட்! ஹ்ம்ம் ஜஸ்ட் அல்லூரிங்!” அவள் கையை பற்றிக்கொண்டு அதை வருடியபடி சொன்னான், மனதில் அவளிடம் தன் காதலைக் கூறிய தருணம் ஓடியது.

ஆனால் அவளோ சந்தேகத்துடன், “எந்த நைட் பத்தி சொல்ற ஆதி?” அவள் மனதில் இன்னமும் நெருடுவது அந்த நிலா இரவு தான்!

அவள் என்ன நினைக்கிறாள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டவன், சிரித்துக்கொண்டே, “இந்த போடோஸ்லாம் எந்த நைட்ல எடுத்தோமோ அந்த நைட் பத்தி தான் சொன்னேன். போதுமா! வேற நைட்… அது வேற சமாச்சாரம்” வேண்டுமென்றே அவளை வம்பிழுத்தான்.

“ஏய் ஆதி, அந்த நைட்… அது … ஒன்னும்…” முகத்தில் லேசான தயக்கத்துடன் திணறினாள். “ஒன்னுமே இல்லையே!” பலமாகச் சிரித்தபடி சொன்னவன் மீண்டும் அவள் மேல் தலைசாய்த்தான்.

அவள் முறைக்க, அவனோ பற்றியிருந்த அவளின் கை விரல்கள் ஒவ்வொன்றின் மேல் இதழ் பதித்து, “நாளைல இருந்து உன்ன நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் நிலா! இந்த அஞ்சு நாள்… ரெண்டு பெரும் சேர்ந்தே இருந்தோம்ல… அது ஒரு டிஃப்ரண்ட ஃபீல் நிலா! என்னதான் சுத்தி பதட்டமா இருந்தாலும், மனசு சந்தோஷமாவே தான்  இருந்தது.

திடீரென முத்தமிடுவதை நிறுத்திவிட்டு… அவளை ஏறிட்ட ஆதி, “நீ என்கூடவே ஏன் சென்னைலயும் இருக்க கூடாது?” தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.

“நினைப்பு தான்! கொன்னு போட்டுடுவாங்க வீட்ல!” அவள் முறைக்க,

“ஆமா நானே கேட்கணும்னு இருந்தேன். வீட்டுக்கு சொல்லிட்டியா நிலா?”

“அம்மாகிட்ட இருந்து செம்ம திட்டு ஆதி. நாலு நாள் போன் பண்ணலைன்னு திட்டினாங்க. ஹில் ஸ்டேஷன்… சிக்னல் கிடைக்கலன்னு சமாளிச்சிட்டேன்.

பட், எப்படியும் உண்மையை சொல்லி தான் ஆகணும்ல. அப்போ தான் நீ சொன்ன மாதிரி நாம சேர்ந்தே இருக்க முடியும்” அவன் முகத்தின் அருகில் வந்து புன்னகையுடன் சொன்னாள்.

“எதுக்கு உண்மையை சொல்லணும்?” ஒன்றும் புரியாதவன் போலக் கேட்டான்.

“எதுக்கா? அடப்பாவி… அப்போ கல்யாணம்?” அவள் முறைக்க, “கல்யாணமா?” என்றான் முகத்தை மறுபடியும் தீவிரமாக வைத்து.

ஒரு நொடி என்ன பேசுவது என்று தெரியாமல் அவனையே கண்கொட்டாமல் பார்த்தவளிடம், “கல்யாணம் தானே! சீக்கிரம் பண்ணிடுவோம்!” அவள் கன்னத்தில் அவசர முத்தம் கொடுக்க நெருங்கியவனைத் தள்ளிய நிலா, “உன்ன… நான் பயந்தே போய்ட்டேன்” என்று அடித்தாள்.

அவளை இழுத்த ஆதி, தன்னோடு இறுக அணைத்து, “என்கூட இருக்கறப்ப பயமே வேண்டாம் நிலா! சும்மா விளையாடினேன்!

நீ எப்போவும் என்கூடவே இருக்கணும். உன்கூட லைப் லாங் ட்ராவல் பண்ணணும். அதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்வோம். எல்லாம் கரெக்ட்’டா நடக்கும்” என்றான். அவள் கண்கள் லேசாக கலங்கியது. அவனோடு ஒண்டிக்கொண்டாள்.

சிறிது நேரம் இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது ஆதி, “அப்புறம் நிலா.. ப்ரித்வி கால் பண்ணான். அந்த பசங்க ஸாம்பில் ரிப்போர்ட் வந்திடுச்சாம். ரெண்டு பேரோட ஸாம்பில்ஸ்’லயும் பொடென்ஷியல் அமௌன்ட் ஆஃப் ட்ரக் கன்டென்ட் இருந்திருக்கு.  என்ன மாதிரி ட்ரக் யூஸ் பண்ணியிருக்காங்க, அதோட சைட் இஃபெக்ட்ஸ் என்னனு பார்க்க, சென்னைல மறுபடியும் டெஸ்ட்டு’க்கு அனுப்பணும்” என்றான்.

“ச்ச! எப்படி தான்  சின்ன பசங்களுக்கு அதை கொடுக்க முடிஞ்சதோ ஆதி! அவனெல்லாம் மனுஷனே இல்ல” என்றாள் கோபத்துடன்.

“நாளைக்கு போனவுடனே முதல் வேல இதுதான்… அடுத்த லெவல் டெஸ்டிங்’க்கு அனுப்பணும்” என்று அவன் சொல்லும்போது… அவனுக்கு கால் வந்தது. திரையில், நியூ நம்பர் என்று காட்டியது.

போன் அழைப்பு வந்ததைப் பார்த்த நிலா, “எடுத்து பேசு” என்றாள்.

அவள் கைகளை விடாமல் அதில் கோலம் போட்டபடி, “ஏதோ நியூ நம்பர். லீவ் இட்” என்றான்.

“ஆதி… புருஷோத்தமன் சார் நாளைக்கு இல்ல நாள மறுநாள் மெடிகல் யூனிட் அரேன்ஜ் பண்ணிடலாம்னு சொன்னார். உனக்கு உடம்பு சரி இல்லைல, வேற யாரை கூட அனுப்பறது?”

“நானே போறேன் நிலா! இதெல்லாம் பெரிய காயமே இல்ல. ஒருவேளை முடியலைன்னா வேற யாரையாவது போக சொல்றேன்”

“நீ போனா… நானும் வரேன். எப்படியும் எனக்கு இந்த முழு வாரமும் லீவ் தான். என்னோட டீம் சண்டே தான் ஊட்டில இருந்து வர்றாங்க”

“ஒ ஓஹ்! ஆவ்சம்! அப்போ போயிட வேண்டியதுதான். இன்னொரு நிலா இரவு நடத்த சொல்லிடலாம்” அவன் முடிக்கும்முன், “ஐயோ அந்த நினைப்பிலேயே இரு” அவள் தள்ள…

“அந்த நினைப்புலயே இருக்கிறவன் என்ன பண்ணுவான்னு தெரியுமா?” அவளின் முகத்தின் அருகே சென்று அவளின் இரு கண்களை மாறி மாறி பார்க்க, அவளும் அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தாள்.

அவள் முகத்தை தன் கரங்களால் தாங்கிய ஆதி, அவளின் கன்னத்தை மிருதுவாக ஒற்றை விரலால் வருடி, பார்வையை இதழுக்கு மாற்றினான்.

அவனின் பார்வை செல்லும்  இடத்தை உணர்ந்தவள், அனிச்சையாக வறண்ட உதடுகளை ஈரப்படுத்த, அதைப் பார்த்த ஆதி புன்னகைத்துக்கொண்டே அவளின் இதழில் தன் இதழ் பதிக்க நெருங்கிய நேரம்,  ஆதியின் போன் சிணுங்கியது.

‘இந்த நேரம் பார்த்து வருகிறதே’ முகத்தில் தாண்டவமாடிய வெறுப்புடன் அதை அமைதிப்படுத்திவிட்டுத் திரும்ப, சிரிப்பை அடக்க முடியாமல், அவனைப் பார்த்து கிண்டலாக சிரித்தாள்.

“சிரிக்கிறயா …உன்ன…” இதுவரை மென்மையாக இருந்தவன், அவள் இதழில் வன்மையைக் கையாள, அவள் முதலில் லேசாக விலக முற்பட்டாலும், போகப்போக அவனுடன் சேர்ந்துகொண்டாள்.

இதழ் தாண்டி, அடுத்து அடுத்து என இருவரும் கொஞ்சம் முன்னேற, அழைப்பு மணி சத்தம் தொடர்ந்து கேட்டதில் இருவரும் தன்னிலை உணர்ந்து சட்டென விலகினார்.

இருவருக்கும் தங்களின் செயல் கொஞ்சம் அதிகப்படியாகவே தெரிந்தது. ஆதி லேசாகப் புன்னகைத்தாலும், நிலா முகத்தில் அப்பட்டமான குற்றவுணர்ச்சி!

ஆதி எழுந்துபோய் கதவைத் திறந்தான்.

“சார்! யுவர் ஃபூட் இஸ் ரெடி” என்றான் வெயிட்டர் கைகளில் உணவுடன்.

“ஹ்ம்ம்” மெலிதாக தலையசைத்த ஆதி, அவனை உள்ளே அழைக்க, பின் நிலா உள்ளிருப்பதை உணர்ந்து, வெய்ட்டரை தடுத்து, தானே வாங்கிக்கொண்டான்.

கதவைப் பூட்டிவிட்டு உள்ளே வந்த ஆதி, “சாப்பாடு வந்தாச்சு நிலா” என்றான்.

நிலாவிற்கு, தன் செயலை எண்ணி… தன் மீதே கோபமாக வந்தது. அவனிடம் சரியாகப் பேசாமல் சீக்கிரமாக உணவைச் சாப்பிட்டுவிட்டு, பெட்டின் ஒரு ஓரத்தில் முடங்கிக்கொண்டாள். இரவு நேரம் கூட இன்னமும் ஆகவில்லை!

அவளின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட ஆதி,  அவள் அருகே சென்று “தப்பு என் மேல தான் நிலா. என்னோட லிமிட்ஸ்-அ நான் கிராஸ் பண்ணியிருக்கக்கூடாது! எக்ஸ்ட்ரீம்லி ஸாரி! நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் சோபால படுத்துக்கிறேன்”

‘தன்மீது மட்டுமே பழியைப் போட்டுக்கொள்கிறானே!’ என அவள் பேச வரும்போது, அவளைத் தடுத்த ஆதி, அவளின் தலை முடியைக் கோதி…

“உன்ன பார்த்த நாள்ல இருந்தே, நீ ஃபீல் பண்றத ஏனோ என்னால பார்க்க முடியல நிலா. இப்போவும் அதே தான்! நீ எனக்கு கிடைச்ச ப்ரெஷியஸ் கிஃப்ட்! எதையும் யோசிக்காம தூங்கு. எல்லாம் நான் பார்த்துக்கறேன். குட் நைட்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவள் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது!

————

அதே பின் மாலைப் பொழுதில்,

“குட் ஈவினிங் சார்” என்று சொல்லிக்கொண்டே ஒருவன் ப்ரித்வி வீட்டிற்கு வந்தான்.

“வா ஆனந்த்” என்று அவனை உள்ளே அழைத்துச்சென்றான் ப்ரித்வி.

“என்ன சார்… வீட்டுக்கெல்லாம் வர சொல்லியிருக்கீங்க? எப்பவும் ஆஃபீஸ் இல்ல வெளிய வேற எங்கேயாவது தானே மீட் பண்ணுவோம்?!”

“சொல்றேன் ஆனந்த்! உட்காரு. காபி?” என்று கேட்டு, அதை எடுத்துவந்த ப்ரித்வி, அவனுக்குக் கொடுத்துவிட்டு, சோபாவில் அமர்ந்தான்.

“இது கொஞ்சம் அன்அஃபீசியல் மேட்டர். அதான்” என்று சொன்ன ப்ரித்வி, பேக் செய்து வைத்திருந்த மொபைல் மற்றும் லேப்டாப்’பை எடுத்தான்.

திரையில் கை தடம் படாமல், அதன் பக்கவாட்டில் பிடித்தவண்ணம், “இதை கொஞ்சம் பேக்ட்ராக் (backtrack ) பண்ணி பேட்டர்ன் கண்டுபிடிக்க முடியுமா?” ஆனந்த்திடம் அதைக் கொடுத்தான்.

“கண்டிப்பா பண்ணலாம் சார்” அதை வாங்கிக்கொண்ட ஆனந்த், “நீங்க எதுவும் டச் பண்ணலையே?”

“நோ நோ… நான் எதுவும் ட்ரை பண்ணல” என்ற ப்ரித்வி, “ரெண்டு போன் இருக்கு. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் வேணும்” என்றான்.

“ஒரு டூ அவர்ஸ் கொடுங்க சார். நான் வீட்டுக்குப் போய் வேலைய முடிச்சுட்டு கால் பண்றேன்” என்றான்.

“ஹ்ம்ம், இதை முடிச்சவுடனே லேப்டாப்பும் இருக்கு. பட் முதல்ல எனக்கு இந்த போன்ஸ் வேணும்” என்றான் ப்ரித்வி.

ஆனந்த் அதைப் பெற்றுக்கொண்டு கிளம்ப, ப்ரித்வி கருணா இடத்திலிருந்து எடுத்துவந்த டாக்குமெண்ட்’ஸில் பார்த்த சொற்கூற்றின் விளக்கங்களைப் பற்றி ஆராய ஆரம்பித்தான்.

எல்லாம் ஏதோ பல கெமிக்கலின் பெயர்கள் போலத் தெரிந்தது. அதனுடைய அர்த்தம் ஒன்றும் புரியாமல், ‘என்ன செய்வது’ என்று யோசித்தான்.

‘இதை நாளை ஆதியிடமே கேட்கலாம்’ என்று யோசித்தவன், பசி எடுத்ததால் இரவு உணவு சமைக்க ஆரம்பித்தான். சமைக்கும்போது அவனுடைய சிந்தனை மறுபடியும் கருணா இருந்த இடத்தை நினைவுகூர்ந்தது.

‘அவன் வீடு ஒரு பெரிய காட்டுக்குள்ள தனியா இருந்துச்சு. ஆதி அந்த ஊர்ல மொபைல் நெட்வர்க் இல்லனு சொன்னான். அப்போ கருணாக்கு மட்டும் சிக்னல் கிடைச்சிருக்கு…’

உணவுக்குத் தேவையான மசாலாக்களை கலந்து கொண்டே… ‘அந்த ஊருக்கும் கருணா இருந்த இடத்துக்கும் நிறையவே டிஸ்டன்ஸ் இருந்தது. பட், அவனுக்கும் வெளிய சிக்னல் கிடைக்கிற இடத்துக்கும் கூட கொஞ்சம் டிஸ்டன்ஸ் இருந்துச்சு’ 

மசாலாவை உணவோடு கலந்தபின், உப்பைத் தூவியவன், ருசி பார்த்தான். அப்போது திடீரென ஏதோ மூளைக்குள் தோன்ற, மெல்லிய வெற்றி புன்னகையுடன் தலையசைத்துக்கொண்டான்.

‘ஒருவேளை நான் நினைக்கிற மாதிரி இருந்துச்சுன்னா… அது ஒரு பெரிய ப்ளஸ்! நாளைக்கே போய் பார்த்திடலாம்’ என்றும் நினைத்துக்கொண்டான்.

சமைத்து முடித்த பின், அதை உண்ணும்போது அழைப்பு வந்தது. அதை அட்டென்ட் செய்த ப்ரித்வி, “சொல்லு ஆனந்த்”

“தட்ஸ் கிரேட்…… என்ன ஆச்சு?…… அஹ்ஹ் அப்படியா??……. இப்போ வர முடியுமா??…… தேங்க்ஸ் வீட்டுக்கு வா” என்று போனை வைத்தான்.

‘ஒரு படி ஏறினா, ஒரு படி சறுக்குதே! சரி ஆனந்த் வரட்டும்’ மனதில் நினைத்துக்கொண்டு சாப்பிட்டான்.

சிறிது நேரம் கழித்து, ‘நாளைக்கு ஆனந்தையும் கூட்டிட்டு போனா, உதவியா இருக்கும்’ என்று யோசிக்கும் போது, அழைப்பு மணியின் சத்தம் கேட்டு கதவைத் திறந்தான். ஆனந்த் வந்திருந்தான்.

“சாப்பிட்டாச்சா ஆனந்த்?”

“இல்ல சார் இனிமே தான். இதுக்கே டைம் ஆச்சு” என்றான்.

“உனக்கு ஏதாச்சும் செய்யவா?” ப்ரித்வி கேட்க, “இருக்கட்டும் சார். நீங்க சாப்டீங்களா?”

“முடிஞ்சுது ஆனந்த்” என்றான் ப்ரித்வி.

“ஆமா… இங்க நீங்க மட்டும் தனியா இருக்கீங்களா சார்? ஃபேமிலி?” என்று சுற்றி முற்றிப் பார்த்து கேட்க, “எஸ் தனியா தான் இருக்கேன், சரி… வந்த விஷயத்தை பத்தி பேசுவோம்” ஆனந்தை திசை மாற்றினான் ப்ரித்வி.

“ஆங்… எஸ் சார்… நான் சொன்ன மாதிரி ரெண்டு போன் அன்லாக் பண்ணியாச்சு. பட், அது எந்த அளவுக்கு உங்களுக்கு உபயோகமா இருக்கும்னு தெரியல. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், இதுல கால் டீடெயில்ஸ் எதுவுமே இல்ல…  அதுகூட வேற வழியில கண்டுபிடிச்சிடலாம்னு வச்சுக்கோங்க.

ஆனா, இந்த போன்ல எல்லா ஆப்(app)’கும் நம்பர் செக்யூரிட்டி லாக் இருக்கு. எல்லாம்னு நான் சொல்றது காண்டேக்ட்ஸ், கேலரி, ஸ்கைப், எல்லாத்துக்குமே” என்ற ஆனந்த், “ரெண்டு கேம் இன்ஸ்டால் ஆகியிருக்கு. PUBG, Clash of clans. அது ரெண்டுக்கு மட்டும் லாக் இல்ல” என்றான்.

“ஹ்ம்ம் நீ சொன்னப்பவே யோசிச்சேன் ஆனந்த். அப்போ என் கெஸ் கரெக்ட்னா மோஸ்ட்லி எல்லாத்துக்கும், இல்ல சிலதுக்கு மட்டுமாவது ஒரே மாதிரி  பாஸ்வர்ட் வச்சிருக்கணும்” என்ற ப்ரித்வியை பார்த்து…

“எக்ஸாக்ட்லி! எல்லாத்துக்கும் தனி தனி பாஸ்வர்ட் வைக்கிறது கஷ்டம்… அட்லீஸ்ட் என்ன மாதிரி ஹியூமன்க்கு” என்றான் ஆனந்த் சீரியஸ்ஸாக.

பின் ஆனந்த், “சார், இன்னும் சொல்ல போனா, ஹியூமன் டெண்டன்சி படி, ஒரு சீரிஸ் அஃப் நம்பர்ஸ் வச்சிருக்கலாம். 123 … 234 அப்படினு. இல்லாட்டி மொபைல் நம்பர்ல இருக்குற சீக்வென்ஸ் வக்கலாம்.

அதுவும் இல்லாட்டி கொஞ்சம் புத்திசாலித்தனமா ஃபோர்வேர்ட் ஆர் ரிவேர்ஸ் அல்டெர்னட் நம்பர்ஸ் (forward or reverse alternate numbers), பேலின்றோம், ஈவென் ஆட் நம்பர்ஸ் வக்கலாம். என்னோட ஃப்ரெண்ட் US’ல இருக்கான். அவன்கிட்ட இன்னைக்கு நைட் கேட்கிறேன், பாஸ்வர்ட் பிரேக் பண்ண… ஏதாச்சும் வழி இருக்கானு” என்றான் ஆனந்த்.

“சரி ஆனந்த். இந்த லேப்டாப் எடுத்துக்கோ. இதை நான் இன்னும் ஓபன் பண்ணல. பாரு… உன்னால என்ன பண்ணமுடியும்னு” என்ற ப்ரித்வி… சற்று நிறுத்தி பின்,  “அப்புறம்,  நாளைக்கு நீ ஃபிரீயா”

ஆனந்த், “நாளைக்கு ஈவினிங் எனக்கு ஒரு வெப் செமினார் இருக்கு. அது அட்டென்ட் பண்ண முடியும்னா ஓகே சார்” என்றான்.

“அப்போ நாளைக்கு மார்னிங் ஒரு ஆறு மணிக்கு இங்க வந்திடு. ஈவினிங் ரிட்டர்ன் ஆயிடலாம்”

“ஓகே சார். அப்போ நான் காலைல வரேன். இந்த லேப்டாப் இன்னைக்கு ஒர்க் பண்றது கொஞ்சம் கஷ்டம். மே பி நாளைக்கு நைட், இல்லாட்டி நாள மறுநாள் கொடுத்துடறேன்” சொல்லிக்கொண்டே எழுந்தான்.

“டேக் யுவர் டைம் ஆனந்த்” என்ற ப்ரித்வி, ஆனந்தை வழி அனுப்பிவிட்டு உள்ளே வந்தான்.

வந்தவன் கருணா போனில் இருந்த சிம் கார்ட் டீடெயில்ஸை எடுத்து, யாருக்கோ கால் செய்தான்.

“ஹலோ ப்ரித்வி ஹியர்…… ஒரு சின்ன ஹெல்ப்…… நான் சிம் டீடெயில்ஸ் அனுப்பறேன். கால் டீடெயில்ஸ் அனுப்ப முடியுமா?…… கொஞ்சம் அர்ஜெண்ட்…… தேங்க் யூ” என்று போனை வைத்தான்.

அதே போல் மற்றொரு சிம் டீடெயில்ஸ் எடுத்து இன்னொரு நெட்வெர்க் ப்ரொவைடர்’க்கு கால் செய்தான்.

போன் பேசி முடித்துவிட்டு, மறுபடியும் கருணா மொபைலை எடுத்து பார்த்தான், அதில் மெமரி கார்ட் இருந்தது.

‘அட! இத ஆனந்த்கிட்ட கொடுத்திருந்தா டீடெயில்ஸ் எடுத்திருப்பானே’ என்று எண்ணியபடி, அயர்வாக இருந்ததால் சோபாவிலேயே சாய்ந்து உறங்கிவிட்டான்.

காலை எழுந்தவன் போனை பார்க்க, ஒரு நெட்வெர்க் ப்ரொவைடரிடம் இருந்து கால் டீடெயில்ஸ் மெயில் வந்திருந்தது .

ஆர்வமாக ஓபன் செய்தவன், அதை பார்த்து அதிர்ந்தான்.

———

நிலா ஆதி… இருவராலும் இரவு சில மணி நேரம் தூங்க முடியவில்லை.

நிலா, ஆதி தூங்கிவிட்டான் என்று எண்ணி, பால்கனியில் இருந்த சோபாவில் அமர்ந்து, நடந்ததெல்லாம் நினைத்துப்பார்த்தாள்.

இரவு காற்று அவள் மேல் சில்லென வீசியது.

‘அவனை மட்டும் தப்பு சொல்ல முடியாது! நானும் தான். அவன் மட்டுமா லிமிட் கிராஸ் பண்ணான்? நானும் தானே? அந்த காலிங் பெல் மட்டும் அடிக்கலைனா?” லேசாகப் பதறியது. தன்னையே திட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

தனக்கு தானே பேசிக்கொண்டிருப்பவளைப் பார்க்கும்போது உள்ளே இருந்த அவனுக்கு மிகவும் சங்கடமாகிப்போனது. தன்னையே நொந்துகொண்டு, எழுந்து அவளிடம் வந்தான்.

அவனைப் பார்த்தவுடன், “நீ இன்னும் தூங்கலையா ஆதி?” சாதாரணமாகப் பேச அவள் முற்படுவது அவனுக்குப் புரிந்தது.

“ஐம் வெரி ஸாரி நிலா. நீ இப்படி இருக்கிறத பார்த்தா, ஐ ஃபீல் சோ கில்ட்டி. நான் அப்படி பண்ணியிருக்கக் கூடாது” கண்களே மன்னிப்பை யாசித்தது.

“ஆதி ப்ளீஸ்… தப்பு உன் மேல மட்டும் இல்ல, என் மேலேயும் தான்!” குரல் இறங்கி வந்தது. அவள் கையோடு அவன் தன் கைககோர்க்க, அவன் மேல் சாய்ந்தாள். இருவரும் சற்று நேரம் மனம் விட்டு பேசிய பின், உறங்கினார்கள்.

காலை அவள் எழுந்து தயாராக, அவனும் குளிக்கச் சென்றான். அவன் உள்ளே சென்ற சிறிது நேரத்தில், அவனுக்கு முன் வந்த அதே புது எண்ணிலிருந்து அழைப்பு வர, “ஆதி உனக்கு கால் வருது” என கத்தினாள்.

“யாருன்னு பாரு நிலா” என்றான் உள்ளிருந்து.

தண்ணீர் சத்தத்தில் அது வேறு மாதிரி நிலாவின் காதில் விழ, “என்ன… யாருன்னு கேட்கணுமா?” என்று சொல்லிக்கொண்டே, அந்த காலை அட்டென்ட் செய்து பேசினாள் நிலா.

அவனும் குளித்துமுடித்து வெளியே வர, அவள் பேக் செய்து கொண்டிருந்தாள்.

“ஆதி அந்த கால்…” என்று அவள் ஆரம்பிக்கும்போது திரும்ப அவன் மொபைல் அடித்தது. “ஒரு நிமிஷம் நிலா” என்று அவன் அட்டென்ட் செய்தான்.

“சொல்லு மா…… இன்னைக்கு வந்துடறேன்…… உன்கிட்ட சொல்லிட்டுத்தானே கிளம்பினேன்…… சரி, அவ என்ன பண்றா அங்க?…… இன்னும் ஒரு நாலு இல்ல அஞ்சு மணிநேரத்துல சென்னை வந்திடுவேன்…… வீட்டுக்கு வர்றேன் மா…… சரி பை” போனை வைத்தான் ஆதி.

“அம்மா கால் பண்ணினாங்க நிலா. சரி… சீக்கிரம் ரெடி ஆகறேன். சாப்பிட போகலாம்… செம்ம பசி. நைட் வேற சரியா சாப்பிடல” என்று கிளம்ப ஆரம்பித்தான்.

இருவரும் உணவகத்துக்குச் சென்று உணவு உண்ணும்போது, “நம்ம டிரைவர் புக் பண்ணிக்கலாமா நிலா?”

“ஏன் நான் ஓட்ட மாட்டேனா?” அவனைக் கேள்வியுடன் பார்த்தாள்.

“அதுக்கு சொல்லல நிலா. உன்ன ட்ராப் பண்ணிட்டு, நான் வீட்டுக்கு போவேன்ல. அதுக்கு தான்”

“பரவால்ல ஆதி, நான் உன்ன ட்ராப் பண்ணிட்டு டாக்ஸில வீட்டுக்கு போய்க்கறேன்” என்றாள். வாக்குவாதம் ஆரம்பித்தது.

“அதெல்லாம் வேண்டாம். அப்போ உன்ன ட்ராப் பண்ணிட்டு நான் கார் எடுத்துட்டு போய்டறேன்”

“நீ டிரைவ் பண்ணக்கூடாது. புரியுதா நான் சொல்றது?” அவனைக் கோபமாகப் பார்த்தாள்.

“உஃப் இதுக்கும் சண்டை வேண்டாம்” என்ற ஆதி, மொபைல் எடுத்து கால் செய்தான்.

“கௌஷிக்… ஆமாடா கிளம்பறோம்… ஒரு சின்ன ஹெல்ப். நம்ம டிரைவரை கொஞ்சம் தாம்பரம் வர சொல்ல முடியுமா?… அதுவரைக்கும் நிலா டிரைவ் பண்றா… அவ இறங்கினவுடனே, நான் டிரைவர் கூட வந்துடறேன்… சரிடா… ஒரு மூனு மணிநேரம்…. தேங்க்ஸ்…” என்று போனை வைத்தான்.

இருவரும் சென்னைக்குப் புறப்பட்டனர்.

அவள் வாகனத்தைச் செலுத்த, அவனுக்கு ஏதோ ஓர் அழைப்பு வந்தது. அவன் எடுத்துப் பேசும்போது, நிலாவிற்கு தான் அட்டென்ட் செய்த கால் ஞாபகம் வர, அவன் போன் வைத்தவுடன்…

“ஆதி, அப்போவே சொல்லணும்ன்னு நினைச்சேன். நீ குளிக்கிறப்ப கால் அட்டென்ட் பண்ண சொன்னல்ல… யாரோ பைரவினு கால் பண்ணாங்க. என்னை யாருனு வேற கேட்டாங்க. உன் ஃப்ரெண்ட்ன்னு சொல்லிட்டேன்” என்றாள்.

அதைக் கேட்டபின், அவன் புருவங்கள் முடிச்சிட்டது!

2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved