மீண்டும் ஒரு காதல் – 11

மீண்டும் ஒரு காதல் – 11:

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த நிவேதா, இரவு தூங்கத் தாமதமாக, காலை மினு தொடர்ந்து எழுப்பிய பின் கண்விழித்தாள்.

கஷ்டப்பட்டு நிவேதா எழ, “அம்மா இன்னைக்கு ஸ்போர்ட்ஸ் டே. மேம் எயிட் தர்ட்டி’க்கு வரச்சொன்னாங்க” என்றாள் மினு.

மணியைப் பார்த்த நிவேதாவிற்கு அதிர்ச்சி. மணி பத்தை நெருங்கியிருந்தது.

பின், மினுவை பார்க்க… “சீக்கிரம் மா. நான் ரன்னிங்’ல இருக்கேன். கிளம்பலாம்” என்றாள் பரபரப்பாக.

நிவேதாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எப்படி கிளம்பினாலும் கிட்டத்தட்ட பதினோரு மணி ஆகிவிடும் பள்ளிக்கூடம் செல்வதற்கு.

அவசரமாக எழுந்தவள், எவ்வளவு சீக்கிரம் தயார் ஆகமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் தயாராகி மினுவை அழைத்துச்சென்றாள்.

மணி பார்க்கத் தெரியாத சிறுமிக்குத் தெரியவில்லை தாமதமாகிவிட்டது என்று. எப்படியும் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தாள் மினு.

காரில் செல்லும்போதே மினுவிற்கு பிரட் தந்த நிவேதா, காரை விரட்டினாள். சரியாக பதினோரு மணி பள்ளியை அடைந்தபோது. உள்ளே பார்த்த மினு அதிர்ந்தாள். அனைத்துமே கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது.

மினு அழும் நிலையில் இருக்க, நிவேதாவிற்கு அவளை எப்படிச் சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை.

“ஸாரி டா மினு. லேட் ஆயிடுச்சு” என்று எவ்வளவு சொல்லியும், கெஞ்சியும் மினுவின் அழுகை நிற்கவில்லை.

அவள் வகுப்பு ஆசிரியரைப் பார்த்து நிவேதா போட்டி குறித்துக் கேட்க, முடிந்துவிட்டது என்றார். மினுவின் அழுகை அதிகமானது.

அப்போதுதான் நிவேதாவிற்கு நினைவு வந்தது, ‘இன்று விபி மற்றும் ரிஷியுடன் மீட்டிங் இருக்கிறது’ என்று.

ஒருபக்கம் மினுவின் அழுகை, மற்றொருபக்கம் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது…  நிவேதா பதற்றமடைந்தாள். தலை வெட்டுவதுபோல வலி வேறு.

மினுவை, வகுப்பு ஆசிரியர் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னவுடன், அவசரமாக அங்கிருந்து புறப்பட்டாள்.

‘தேவையற்ற பழையதுகளை நினைத்து, நிகழ்காலம் பாழாகிவிட்டதே’ தன் மேலேயே கோபம் வந்தது நிவேதாவிற்கு. கூடவே கோபம், வேதனை என ரிஷியின் மேலும் பொங்கியது.

அவசரமாக மீட்டிங் அறைக்குள் சென்றவளை பார்த்தவுடன், இருந்த நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினான் ரிஷி, அவன் மணிக்கட்டிலிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்து.

அதைப்பார்த்து எழுந்த கோபத்தை, கண்கள் மூடி கட்டுக்குள் கொண்டுவந்த பின், “ஸாரி விபி. கொஞ்சம் உடம்பு முடியல… அதான் லேட்” என்றதும்… “தட்ஸ் ஓகே நிவேதா. அல்மோஸ்ட் முடிஞ்சது. மினிட்ஸ் ஆஃப் மீட்டிங், நவீன் அனுப்புவார்” என்றார் விபி.

ரிஷி எதுவுமே பேசவில்லை. அடுத்த ஓரிரு நிமிடங்களில் அனைவரும் கலைந்தனர்.

முந்தைய நாள் இரவு… ரிஷி அந்த டாலர் கொடுத்த அதிர்ச்சியில், பழைய நினைவுகளுடன் இருந்த நிவேதா, மினுவை  உறங்கவைத்தபின், சாப்பிடத் தோன்றவில்லை. காலையில் நடந்த களேபரத்தில் சாப்பிடவுமில்லை.

தலை ஒருமாதிரியாகச் சுற்ற, அப்போதுதான் ஸ்ரீயின் ஞாபகம் வந்தது. மீட்டிங் அறையில் அவனைப் பார்க்கவில்லை. காலையிலிருந்த மனநிலையில் அவனைப் பற்றி யோசிக்கவும் இல்லை.

மொபைலில் அவனை அழைக்கலாம் என்று பார்த்தபோதுதான், அவனிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்தாள்.

தலைவலி அதிகமானதால் விடுப்பு எடுத்துக்கொள்வதாக அனுப்பியிருந்தான்.

அவனின் தலைவலிக்கான காரணத்தை ஓரளவிற்குத் தெரிந்திருந்த நிவேதா, அவனிடம் உடலைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி பதில் அனுப்பினாள்… பின் தன் உடல் ஒத்துழைக்க மறுக்க, மேசை மேல் சாய்ந்துகொண்டாள்.

“என்ன நிவேதா… தூக்கமா? இன்னமும் லாகின்(login) பண்ணலையா?” கிண்டல் தொனியில் கேட்டபடி உள்ளே வந்தான் நவீன்.

நிவேதா நிமிர்ந்து அவனைப் பார்க்க, “முன்னமே டிஸ்கஸ் பண்ண நியூ ஆர்டர் பற்றி மீட்டிங்ல இன்னைக்கு பேசினோம். அதுக்கு உன்னோட நோ அப்ஜெக்க்ஷன் வேணும். சைன் பண்ணித்தா” என்று ஒரு பேப்பரை நீட்டினான்.

‘இதற்கு ஏன் இவனே வரவேண்டும்?!’ என்று யோசித்தபடி, அவள் வாங்கி படித்துக் கையெழுத்திட…

“பாரேன் நிவேதா. நீ இன்னைக்கு லேட்டா வந்த… ஆனா உன்னை யாருமே எதுவுமே சொல்லல. அன்னைக்கு என்னமோ ரிஷி என்கிட்ட ‘பி பங்ச்சுவல்’னு சொன்னார். ஹ்ம்ம், பரவால்ல எல்லாரையும் ஈஸி’யா கரெக்ட் பண்ணிடற. ” புன்னகையுடன் அவளை கேலி செய்வதுபோல பேசினாலும், அதன் பொருள் புரியாதா அவளுக்கு.

‘இதைச் சொல்லி, குத்திக்காட்டத்தான் நீயே வந்தியா?!’ அவனை நினைத்து எரிச்சல் வந்தாலும், எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல், அவனிடம் பேப்பரை நீட்டினாள்.

நவீன் மனதில், ‘எதற்கும் அசரமாட்டாள் போல’ என்று எண்ணிக்கொண்டே சென்றுவிட்டான்.

மறுபடியும் தலை சுற்ற, மேசை மேல் தலைசாய்த்தவள் தன்னையும் அறியாமல் கண்ணுறங்கிவிட்டாள்.

பக்கத்து அறையிலிருந்த ரிஷி கண்ணாடி தடுப்பின் வழியாக எதேச்சையாகப் பார்க்க, நிவேதா தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தான்.

எப்பொழுதும் போல காலை அலுவலகத்திற்கு நிவேதா வராமல் இருக்க, ரிஷிதான் விபி’யிடம் ‘நேற்று மினுவின் பிறந்தநாள். தாமதமாகத் தான் முடிந்தது. அதனால் முடியவில்லை போல’ நிவேதாவை மனதில் எண்ணி சொல்லியிருந்தான்.

‘முடியலைன்னா லீவ் எடுத்துக்கலாமே…’ இப்போது மனதில் நினைத்தவன், ‘சொன்னா அதுக்கும் சுட்டெரிக்கிற மாதிரி பார்ப்பா. நமக்கென்ன’ என்றெண்ணி வேலையில் மூழ்கினான்.

நேரம் செல்ல செல்ல, பசியின் பிடியிலிருந்த நிவேதா கண்விழிக்காமல் போக, ரிஷி மணியைப் பார்த்தான். உடனே அழைத்தான் நிவேதாவை.

டெஸ்க் போன் அலறலில் கண்விழித்த நிவேதா, அதைப் பார்க்க… அது ரிஷியின் பெயரைக் காட்டியது.

‘ஐயோ தூங்கிட்டேனே… இவன் வேற கேள்வி கேட்டே கொல்வானே!’ அவனைப் பார்த்தபடி எடுத்தாள். அவனும் அவளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

“மினு ஸ்கூல்’க்கு போயிருக்காளா? வேன் வந்திடுமே” என்றான் அவளைப் பார்த்தவண்ணம்.

நேரத்தைப் பார்த்த நிவேதாவிற்கு பகீர் என்றது. தலையில் அடித்துக்கொண்டு… “தேங்க்ஸ் ரிஷி… இதோ போறேன்” என்றவள், அவசரமாக எழுந்தாள்.

இவ்வளவு நேரம் தூங்கியது… கூடவே பசி என சேர்ந்துகொள்ள, கொஞ்சம் தடுமாறி மறுபடியும் சேரிலேயே சரிந்தாள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரிஷி ஒருநொடி அவள் தலை சுற்றிச் சரிவதைப் பார்த்து அதிர்ந்து, சட்டென அவளறைக்கு விரைந்தான்.

அதற்குள் தன்னை சமநிலை படுத்திக்கொண்டு அவள் எழ…. “என்னாச்சு… ஆர் யு ஓகே?” என்று கேட்டபடி உள்ளே வந்தான் ரிஷி.

சட்டென இதயத்தை கீறிட்ட வலி, கூடவே கண்களில் கண்ணீர் திரண்டது அவளுக்கு.

நேற்று அவனைப் பற்றி நினைத்தபோது, அந்த நினைவுகளில் அவன் அடிக்கடி அவளிடம் கேட்ட வாக்கியம் ‘ஆர் யு ஓகே நிவி!’ என்பது தான். அது இப்போது நினைவிற்கு வர, ‘தேவ்’ என்று அவள் உள்ளம் மானசீகமாக அரற்றியது.

இருந்தும், “ஒன்னுமில்ல. கொஞ்சம் தலை சுத்துது. வேற ஒன்னுமில்ல” என்றாள் அவன் முகம் பாராமல் ‘எங்கே கண்கலங்கியதை’ அவன் பார்த்துவிட்டால் என நினைத்து.

“முடியலைன்னா, நான் போய் கூட்டிட்டு வரவா? நீ ரெஸ்ட் எடு”

அவன் கேட்டவுடன்… அந்த குரல்… பரிவை, கரிசனத்தைச் சுமந்த குரல்… அவள் செவிவழி சென்று இதயத்தை வலிக்கச் செய்ய, ‘ஐயோ போதும் தேவ்! என்னால முடியல!’ அவள் உள்ளம் ஓலமிட்டது. பழைய நினைவுகளுடன், தற்போதய நிகழ்வுகளும் சேர்ந்து கொள்ள, மிகுந்த வலியை உணர்ந்தாள் உள்ளுக்குள்.

சில நொடிகளில், “நான்… போனா தான் விடுவாங்க ரிஷி. ஒன்னும் பிரச்சனை… இல்லை” கொஞ்சம் தடுமாறி சொல்லிவிட்டு, தண்ணீரை அவசரமாகக் குடித்தாள். பசியைக் கட்டுப்படுத்தவா? கண்ணீரைக் கட்டுப்படுத்தவா?! அவளுக்கே தெரியவில்லை.

உள்ளே சென்ற தண்ணீர் ஓரளவிற்கு அவளை நிதானப்படுத்தியது.

“தேங்க்ஸ் ரிஷி… ரிமைண்ட் பண்ணதுக்கு” ஒட்டவைத்த புன்னகையுடன், முடியவில்லை என்றாலும் அவசரமாகச் சென்றாள்.

அவள் செல்வதையே பார்த்தவன் மனதில் சில தினங்களாகத் தோன்றும் அதே எண்ணம்… ‘தனியாக அனைத்தையும் சமாளிப்பது எவ்வளவு கடினம்!’ மின்னலென அவனுக்குள் அந்த சிந்தனை இப்போதும் வந்து சென்றது.

ஏதோ ஓர் உந்துதலில் புகைபிடிக்கும் ஏரியா சென்று காத்திருந்தான், புகை பிடிக்காமல். ஓ… ஆம்! அதைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டான் மினு அவனிடம் அதிகம் பேச ஆரம்பித்தபின்.

எந்த சிரமமும் இல்லாமல் இருவரும் வருகிறார்களா என்பதைப் பார்க்கவே காத்திருந்தான். மினுவை நிவேதா அழைத்து வருவதைப் பார்த்தபின், அங்கிருந்து நகர்ந்தான்… அவர்கள் அவனைப் பார்க்கும்முன்.

மினு நிவேதாவுடன் பேசாமலே இருந்தாள்.

“அம்மா மேல கோபமா? ஸாரி டா” மகளிடம் மன்னிப்பு கேட்டாள். ஆனால் மகளோ பேசவே இல்லை. இருந்த மனநிலையில் முற்றிலுமாக தளர்ந்து போய்விட்டாள் நிவேதா.

காலை கிளம்பும் அவசரத்தில் எதுவுமே செய்யாததால், மினு நிவேதா இருவரும் கேன்டீன் சென்றனர்.

அங்கே, ரிஷி சாப்பாடு வருவதற்காகக் காத்திருந்தான். இவர்களைப் பார்த்தவுடன், அதுவும் மினுவை பார்த்தவுடன், முகம் பளிச்சிடக் கையசைத்தான் மினுவை பார்த்து.

“மினு ஹாய் மட்டும் தான். நம்ம வேற இடத்துல உட்காந்து சாப்பிடுவோம்” நிவேதா சொல்லிக் கொண்டிருக்கையிலே, அதைக் காதில் வாங்காத மினு, அவன் பக்கத்திலிருந்த இருக்கையை விட்டுவிட்டு ஓர் இருக்கை தள்ளி அமர்ந்தாள்.

ஸ்ரீ இருந்திருந்தால், தன் அன்னையிடம் கோபித்துக்கொண்டு ஸ்ரீயிடம் அன்னையை பற்றி புகார் வாசித்திருப்பாள். இன்று ஸ்ரீ இல்லாமல் போகவே, ரிஷியிடம் வந்து அமர்ந்துகொண்டாள் மினு.

நிவேதாவால் போராட முடியவில்லை. மலைப்பாய்  இருக்க, அமைதியாக மினுவின் பக்கத்தில் அமர்ந்தாள்.

ஒரு பக்கம் ஆற்றாமை அதனால் ஏற்பட்ட ரணம்… மற்றொருபக்கம் கோபம் ஏன் தனக்கு மட்டும் இப்படி என்ற எண்ணம் தந்த ரணம் இரண்டும் சேர்ந்து கண்களை கலங்கச்செய்தது. பெரும்பாடு பட்டு சாதாரணமாக இருக்க முற்பட்டாள்.

“மினு சாப்பாடு எடுத்துட்டு வரலையா?” ரிஷி கேட்க, மறுப்பாகத் தலையசைத்த மினு, “அம்மா தூங்கிட்டாங்க” என்றாள் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு. ரிஷி புன்னகைத்தான்.

“என்ன மினு சாப்பிடற? சொல்லு வாங்கிட்டு வரேன்” நிவேதா கேட்க, மினு அமைதியாக இருந்தாள். “கேட்கறேன்ல!” கொஞ்சம் அழுத்தமாகக் கேட்க, அது ரிஷியின் காதிலும் பட்டது.

“மினுக்கு கோபமா?” ரிஷி கேட்டவுடன், ‘ஆம்’ என்று தலையசைத்தாள் மினு. நிவேதாவிற்கு சுள்ளென்று கோபம் வந்தது… ‘தான் கேட்டு சொல்லாமல் அவன் கேட்டதும் பதில் தருகிறாளே’ என்று.

“மினுக்கு என்ன கோபம்?” ரிஷி கேட்க…

“இன்னைக்கு ஸ்போர்ட்ஸ் டே தேவ். லேட் ஆனதுனால ரன்னிங் ரேஸ் மிஸ் பண்ணிட்டேன்” என்றாள் குனிந்த முகத்துடன்.

மினுவின் முகம் பார்த்து, நிவேதாவிக்கு சங்கடமாகிவிட்டது. ‘ஏதாவது நாமே வாங்கிவருவோம்’ என நினைத்து அவள் எழ…

அப்போது ரிஷிக்கு சாப்பாடு எடுத்து வந்தவனிடம்… ரிஷி, “ரெண்டு சாஃப்ட் பட்டர் ரொட்டி… குழந்தை சாப்பிடுவதற்கு… ” என்றான் ஆங்கிலத்தில் மினுவை காட்டியபடி. அதுவும் ‘சாஃப்ட்’ என்பதை அழுத்தமாகச் சொல்லி.

வந்தவன் சரி என்று சென்றுவிட, நிவேதாவை கேட்கவில்லையே என்று அவனுக்கு தோன்றியது. இருந்தும் ‘என்ன சாப்பிடுகிறாய்?’ என்று கேட்க ஒரு தயக்கம்.

ரிஷி மினுவிற்கு ஆர்டர் செய்ததை பார்த்த நிவேதாவிற்கு… ‘இதையெல்லாம் எப்படி தடுப்பது’ என எண்ணி கோபம், இயலாமை, தவிப்பு சரிவிகிதத்தில் அவளைத் தாக்கியது. ஸ்ரீ இல்லாததை நினைத்து நொந்துகொண்டாள்.

நிவேதா எதுவும் சொல்லாமல், வாங்காமல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவனுக்கு…  கேட்க வேண்டுமா? கேட்டால் முகத்தைக் காட்டுவாளா? என்ற எண்ணங்கள் மனதில் எழுந்தாலும், ‘எதற்கு இவ்வளவு அழுத்தம்? சாப்பிடாமல் இருக்கப்போகிறாளா என்ன?!’ என்ற கோபம் கலந்த அக்கறையும் எழுந்தது.

பக்கத்திலிருந்த மினு இன்னமும் உர்ரென்று இருக்க… அவள் நடுவில் விட்ட இருக்கைக்கு வந்தமர்ந்த ரிஷி, அவளிடம்…

“நேத்து மினு பர்த்டே’காக அம்மா நிறைய வேலை பார்த்தாங்கல்ல… அந்த டையர்ட்’ல லேட்டா எழுந்திருச்சிருப்பாங்க டா. அதுக்கு கோபப்படலாமா… ஹ்ம்ம்? இந்த டைம் மிஸ் பண்ணா என்ன… நெக்ஸ்ட் டைம் சேர்த்து வச்சு பின்னிடலாம் சரியா…” என்றான் மினுவை தேற்றும் விதமாக.

மினுவை தேற்ற நினைத்த வார்த்தைகள், நிவேதாவை அமைதியிழக்கச் செய்தது.

தனக்காக அவன் பேசியது, மினுவை சமாதானம் செய்வது, கொஞ்சம் உரிமை எடுத்துக்கொள்வது… அவளுள் ஏதோ ஒரு சின்ன உறுத்தல்… நெருடல்… அது கேட்க இனிமையாக இருந்தாலும், ஏனோ மனம் ஒப்பவில்லை. எல்லைகள் மீறிக்கொண்டே போவதுபோல ஒரு உணர்வு. பசியெல்லாம் எங்கோ பறந்துவிட்டது.

மினுவிற்கு உணவு வந்துவிட… “கொஞ்சம் வேலை இருக்கு… நாங்க எங்க இடத்துக்கு போறோம்… தேங்க்ஸ் ரிஷி” என்ற நிவேதா, உணவு கொண்டுவந்தவனிடம் பணத்தைத் தந்துவிட்டு மினுவை இழுத்துச்சென்றுவிட்டாள்.

செல்லும் அவர்களையே பார்த்த ரிஷிக்கு, ‘ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும்?’ என்று அவள் மேல் கோபம் தான் வந்தது.

தன்னறைக்கு வந்த நிவேதா, மினுவின் கோபத்தை பொருட்படுத்தாமல் அவளுக்கு உணவைத்தந்து உறங்க வைத்தபின், காபி மட்டும் குடித்துவிட்டு வேலையைப் பார்த்தாள்.

******

மாலை வீடு வந்து சேரும்வரை மினு பேசவில்லை. நிவேதாவிற்கு இருந்த சோர்வில், இதுவும் சேர்ந்துகொண்டது.

ரஜத் விளையாட வந்தும், மினு அமைதியாகவே இருக்க… ரஜத் நிவேதாவிடம், “ஆன்ட்டி நானும் மினுவும் ரோமி கூட விளையாடிட்டு வரோம்” என்றான்.

ரிஷியுடன் மினு பழகுவது ஏற்க முடியவில்லை தான், ஆனால் இப்போது ரோமியுடன் விளையாடினால் மினுவின் மனநிலை மாறும் என்று நினைத்த நிவேதா… சரி என்றாள்.

கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணிநேரம் சாப்பிடாதவளுக்கு, பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. சமைக்க ஆரம்பித்தாள்.

மினு ‘வரவில்லை’ என்று மறுத்தும், அதைக் கேட்காமல் ரஜத் அழைத்துச்சென்றான்.

‘தாமதமாகப் பள்ளிக்குச் சென்றது தான் கோபம்’ என்று நினைத்துக்கொண்டாள் நிவேதா. வேறு காரணம் இருக்கக்கூடும் என்று யோசிக்கவில்லை.

மினு அமைதியாகவே இருப்பதைப் பார்த்த ரிஷி… ‘என்ன ஆயிற்று’ என்று பலமுறை கேட்டும் அவளிடமிருந்து பதில்வரவில்லை.

கொஞ்சம் அதிக சிரத்தை எடுத்து அவன் கேட்க, மினு சொன்ன விஷயத்தை கேட்டு
அதிர்ந்தான் ரிஷி!

25
7
6
1
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved