மீண்டும் ஒரு காதல் – 12A
மீண்டும் ஒரு காதல் – 12A:
கொஞ்சம் அதிக சிரத்தை எடுத்த ரிஷி, தொடர்ந்து கேட்டதால்… லேசாக விம்மிக்கொண்டு மழலை மொழியில் பேசினாள் மினு.
“இன்னைக்கு ஸ்கூல்’ல ஒரு பாய் ஏன் லேட்’னு கேட்டான். அம்மா தூங்கிட்டாங்கன்னு சொன்னேன் தேவ். ‘ஏன் உன் அப்பா எழுப்பலையா’னு கேட்டான். எனக்கு அப்பா இல்லனு சொன்னேன். அதுக்கு அவன், ‘என் அம்மாக்கு முடியலைன்னா என் அப்பா தான் ஹெல்ப் பண்ணுவார்… என்னை ஸ்கூல்’க்கு ரெடி பண்ணுவார். உனக்கு ஏன் அப்பா இல்ல’னு கேட்டான். நான் பேசாம இருந்தேன். அப்புறம் அவன் வேணும்னே என்கிட்ட அப்பா பத்தியே பேசினான் தேவ்.
அம்மாகிட்ட சொன்னா அம்மா ஃபீல் பண்ணுவாங்க. நான் ஸ்மால் பேபி’யா இருந்தப்ப அம்மாகிட்ட அப்பா பத்தி கேட்டு அழுதேன். ‘அப்பா தூரமா காணாம போயிட்டார்… இனிமே வரவே மாட்டார்’னு அம்மா சொன்னாங்க. நான் அடம் பண்ணினேன்.
அப்போ அம்மா கண்ணுல தண்ணி வந்துடுச்சு. அதுக்கப்புறம் நான் கேட்டதேயில்ல தேவ். இன்னைக்கு அவன் சும்மா ‘அப்பா உனக்கு இல்லையா’னு கேட்டுட்டே இருந்தான். ரொம்ப அழுகையா வந்திடுச்சு தேவ்” கண்களைத் துடைத்துக்கொண்டு மினு பேசியவுடன், அதைப் பார்த்த ரிஷிக்கு நெஞ்சம் பதைபதைத்தது.
ஏனோ மினுவின் இந்த விசும்பல், ஒருமுறை அவனின் வேதா அவனிடம் கண்கள் கலங்கிப் பேசியதை நினைவு கூர்ந்தது. மனதில் சொல்லமுடியாத ஒரு பாரம், தவிப்பு. வேதாவின் எண்ணங்கள் ஒரு புறம் தாக்கினாலும், மினுவின் முகம் இன்னும் வதைத்தது.
இதுபோல அவனிடம் கவலைகளை பகிர்ந்துகொண்டவர்கள் வெகு சிலரே. அதுவும் வேதாவுக்கு பின், அவன் வாழ்வில் அதிகம் யாரையும் நெருங்க விடவில்லை. ஆனால் இப்போது விதிவிலக்காய் மினுவுடன் ஏற்பட்டுள்ளது இந்த பிணைப்பு.
மினுவின் வேதனையைத் தாள முடியவில்லை. அவளை எப்படித் தேற்றுவது என்றும் தெரியவில்லை. அதற்குள் அங்கே ரஜத் அம்மா வந்துவிட, அவர் ரஜத்துடன் மினுவையும் அழைத்தார். மினு அமைதியாக அவருடன் சென்றுவிட்டாள்.
ரிஷி அமைதியிழந்திருந்தான்… மினுவை நினைத்து.
மினு வீட்டிற்கு சென்றதும் அமைதியாக நிவேதா தந்த உணவை உண்டுவிட்டு, உறங்கிவிட்டாள். அவளின் அமைதி நிவேதாவை யோசிக்க வைத்தாலும், ‘நாளை சரியாகிவிடுவாள்’ என்று நினைத்துக்கொண்டாள்.
கடந்த கால நினைவுகளுடன் முந்தைய தினம் சரியாக தூங்காத நிவேதா, தன்னையும் அறியாமல் அன்று உறங்கிவிட்டாள்.
ஸ்ரீ, மினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப்பின் நிவேதா மற்றும் மினுவை பார்க்கவேயில்லை. அவன் மனதும் பழைய நினைவுகளில் உழன்றுகொண்டே இருந்தது. உறங்கவும் மனமில்லாமல், ஏதோ சிந்தனையிலேயே இருந்தான்.
அங்கு ரிஷிக்கும் உறக்கமே இல்லை, மினுவை நினைத்து. ‘மினுவின் தந்தைக்கு என்ன ஆயிற்று?’ என்ற கேள்வி வெகுநாட்களுக்குப் பின் மறுபடியும் மனதில். இம்முறை கேள்விக்கான பதில் தெரிந்துகொள்ள மனதில் உந்துதல் வேறு!
இதை நினைக்கும்போது அழையா விருந்தாளியாக நிவேதாவின் எண்ணங்கள்… ‘அப்பா காணாம போய்ட்டார்’னா என்ன அர்த்தம்? பாவம் அதனால தான் அனைத்தையும் தனியாகச் சமாளிக்கிறாளா? என்ன ஆயிற்று அவள் கணவனுக்கு?’ என்று நினைக்கும்போது… பழைய வேதாவின் நினைவுகள்.
மினுவிற்காகவும் நிவேதாவிற்காகவும் வருந்தியவன் மனதில், இப்போது அவனின் வேதாவை குறித்த எண்ணங்களும் சேர்ந்துகொள்ள, சுழற்சியில் மாட்டிக்கொண்டதுபோல உணர்ந்தான்.
தன் வேதா தான் இந்த நிவேதா என்று எப்போது தெரிந்து கொள்வானோ? இல்லை நிவேதாவே சொல்வாளோ! பார்ப்போம்!
அடுத்த நாள் நிவேதா நினைத்ததுபோலவே மினு கொஞ்சம் சகஜமாகியிருந்தாள். சின்ன குழந்தைகளுக்கு மனதில் கோபம், வஞ்சமெல்லாம் வைத்துக் கொள்ளத்தெரியுமா என்ன!
மினு ரிஷியிடமும் முந்தைய தினம் போல இல்லாமல், கொஞ்சம் சாதாரணமாகவே இருந்தாள். அதுவே அவனுக்கு நிம்மதியைத் தந்தது.
இப்படியே சில நாட்கள் நகர, ஒருநாள் காலை குடியிருப்பின் வெளியே, பக்கத்திலிருந்த பார்க்கில், ரிஷி ஜாகிங் சென்றுகொண்டிருக்கும் போது, தூரத்தில் ஸ்ரீ யாருடனோ வாக்குவாதத்தில் இருந்ததுபோல தெரிந்தது.
அருகில் சென்று பார்த்தபோதுதான், சண்டையிட்டுக்கொண்டிருந்தான் என்று புரிந்தது. ரிஷி ‘என்ன ஆயிற்று’ என யோசனையுடன் நெருங்க, ஸ்ரீ அவனை அடிக்க வந்தவர்களை, கிட்டத்தட்டச் சமாளித்துக்கொண்டிருந்தான்.
ரிஷியும் அவனுக்கு உதவியாக சென்றவுடன், இருவரும் சேர்ந்து வந்தவர்களை விரட்டி அடித்தார்கள்.
“தேங்க்ஸ் ரிஷி” ஸ்ரீ ஓடியவர்களைப் பார்த்தபடி சொல்ல, “யாரவங்க? என்ன ஆச்சு?” ரிஷி கேட்டவுடன், ‘என்ன சொல்வது!’ என்பதுபோல பார்த்தான் ஸ்ரீ.
அதைப் புரிந்துகொண்ட ரிஷி, “பரவால்ல… சொல்லணும்னு இல்ல” புன்னகையுடன் நகர நினைக்கும்போது, “அவங்க நம்ம கம்யூனிட்டி’ல தான் இருக்காங்க” என்றான் ஸ்ரீ.
நெற்றி சுருங்க, கேள்வியுடன் ரிஷி பார்க்க, அன்று லிஃப்ட்டில் நடந்த விஷயத்தை மேலோட்டமாக சொன்னான் ஸ்ரீ.
ரிஷிக்கு இப்போது புரிந்தது, அன்று மினு தன் அம்மா அழுததாகச் சொன்னதற்கான காரணம். அவன் மனது நிவேதாவிற்காக ஒரு நொடி வருத்தப்பட்டது.
“அன்னைக்கு நான் அடிச்சதுக்கு இன்னைக்கி வந்துருக்காங்க” இருவரும் பேசியபடி நடக்க ஆரம்பித்தனர்.
“ஓ…” என்று சொன்ன ரிஷியின் மனதில் இப்போது… மினு, தந்தையைப் பற்றிப் பேசியது நினைவிற்கு வந்தது.
‘ஸ்ரீயிடம் மினு தந்தையைப் பற்றி கேட்கலாமா வேண்டாமா… சரியா தவறா?’ என்று மூளை யோசித்தாலும், அன்று மினுவின் கலங்கிய முகம் கண்டு துவண்ட மனம், அவனையும் மீறி கேட்கவைத்தது.
“மினு அப்பாக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டுவிட, நடப்பதை நிறுத்திவிட்டு ஒற்றை புருவம் உயர்த்தி ரிஷியை பார்த்தான் ஸ்ரீ, ‘எதற்கு உனக்கு?’ என்ற தோரணையில்.
அதையெல்லாம் பொருட்படுத்தாத ரிஷி, “ஃபியூ டேஸ் முன்னாடி மினு ரொம்ப டிஸ்டர்ப்ட்’ஆஹ் இருந்தா… ரொம்ப கம்பல் பண்ணி கேட்டப்ப, ஸ்கூல்’ல யாரோ அவ அப்பா பத்தி கேட்டு கஷ்டப்படுத்தினதா சொன்னா.
அப்புறம் அவளே ‘அப்பா காணாம போய்ட்டாரு…. வரமாட்டாருனு அம்மா சொல்லியிருக்காங்க’னும் சொன்னா. அம்மாகிட்ட சொன்னா வருத்தப்படுவாங்க… அதுனால சொல்லலைனு சொன்னா. அதை கேட்டுட்டு எனக்கு தான் கொஞ்சம் கஷ்டமாகிடுச்சு. அதுனால தான் கேட்டேன்” விளக்கத்துடன் பேசிமுடித்தான் ரிஷி.
ஆனால் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீக்கு அதிர்ச்சி.
ஒன்று மினுவின் பள்ளியில் இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்று. மற்றொன்று, அதை அவள் ரிஷியிடம் உரிமையாகப் பகிர்ந்திருக்கிறாள் என்று. இந்த விஷயத்தை மிகக் கண்ணியமாகக் கையாளும் ரிஷியை நினைத்தபோது, இவனிடம் சொன்னாலும் கண்ணியம் காப்பான் என்ற நம்பிக்கை வந்தது.
சற்று நேரம் யோசித்த ஸ்ரீ, “நிவேதா ஒரு டிவோர்ஸி” என்றவுடன், கொஞ்சம் அதிர்ந்து பார்த்தான் ரிஷி. அந்த அதிர்ச்சிக்குக் காரணம்… நிவேதா சொன்ன ‘காணாம போய்ட்டாங்க’ என்பதை எண்ணி!
நிவேதா சொன்னதை வைத்து… ஒருவேளை மினுவின் அப்பா இறந்திருக்கலாம் என்று நினைத்திருந்தான்.
“டிவோர்ஸ் ஆச்சுன்னா என்ன… மினு அப்பா அவளை அடிக்கடி பார்க்கலாமே?” யோசனையுடன் அடுத்த கேள்வியைக் கேட்டான் ரிஷி.
மறுபடியும் சில நொடிகள் யோசித்த ஸ்ரீ, “மினு’வோட கஸ்டடி நிவேதா கிட்ட மட்டும்தான் இருக்கு. அவ அவனையெல்லாம் பார்க்க விடமாட்டா” என்றான் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன்.
’இதென்ன அபத்தம்… மகளையும் தந்தையையும் பார்க்கவிடாமல் செய்வது?’ நிவேதாவைத் தான் தவறாக நினைக்கத் தோன்றியது ரிஷிக்கு.
“ஆக்சுவலா அதுவும் கரெக்ட் தான். ஹி இஸ் அன் அப்யூசர் (He is an abuser). எமோஷனல், வெர்பல் அப்யூசர் (emotional verbal abuser)… சில சமயம் உடல் ரீதியாகவும் டார்ச்சர் பண்ணிருக்கான்… அதோட எக்ஸ்ட்ரீம் மேரிட்டல்…” சொல்ல நினைத்ததை விட அதிகம் சொல்கிறோமோ என்று சட்டென நிறுத்திய ஸ்ரீ… “அதுனால தான் நிவி டிவோர்ஸ் பண்ணிட்டு… ஃபுல் கஸ்டடி கேட்டு வாங்கிட்டா” என்று முடித்தான்.
ஸ்ரீ சொல்வதைக் கூர்மையாகக் கவனித்துக்கொண்டிருந்த ரிஷிக்கு புரியாதா, ஸ்ரீ ‘மேரிட்டல் ரேப் (marital rape)’ என்று சொல்ல வந்து நிறுத்தியது.
அதைக்கேட்டு அப்படியே அதிர்ந்த படி பார்த்தான். நிவேதாவை தவறாக நினைத்தற்குத் தன்னையே திட்டிக்கொண்டான்.
“மினு சின்ன குழந்தை. இந்த வயசுக்கு என்ன சொன்னா புரியுமோ, அதை சொல்லியிருக்கா நிவி” என்ற ஸ்ரீ…
“ஏன் இதெல்லாம் உங்ககிட்ட சொல்றேன்னா… மினு நெக்ஸ்ட் டைம் அவ அப்பா பத்தி பேசினா, நீங்க அதிகம் பேச்சு கொடுக்காதீங்க. அது முடிஞ்ச சேப்டர். அவளை டைவர்ட் பண்ண பாருங்க. இல்ல, நிவேதாகிட்ட சொல்லிடுங்க. ஒருவேளை அது சங்கடமா இருந்தா, என்கிட்ட சொல்லுங்க. நான் பார்த்து நிவிகிட்ட சொல்லிடறேன். ஹோப் யு அண்டர்ஸ்டாண்ட். தேங்க்ஸ் ரிஷி” சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான் ஸ்ரீ.
அதற்கு பின், ரிஷிக்கு என்னவென்றே தெரியாத ஓர் அழுத்தம் மனதில். தன் மனம் நிறைந்தவளின் பெயரில் உள்ள இந்த நிவேதாவை நினைக்கும்போது ஏனோ ஒருவித வலி உள்ளுக்குள்.
நிவேதாவின் முகத்தில் மலர்ச்சியை அதிகம் காண முடியாததற்கான காரணம் இதுதானா? என்ற எண்ணம் அவனுள் தோன்ற, மனம் அவளுக்காக வருந்தியது.
அடுத்து, இந்த சிறிய வயதில் தந்தையில்லாமல் இருக்கும் மினுவை நினைக்கும்போது முன்பு வலித்ததை விட, இன்னமும் அதிகமாகவே மனதை அழுத்தியது.
அவன் வேலையில் ஈடுபட்டிருந்தாலும், அவ்வப்போது நிவேதாவை பார்க்கும்போதெல்லாம், ‘அவளின் கடந்தகாலம் மிகவும் குரூரமாக இருந்திருக்குமோ?’ என்ற எண்ணம் வந்தவண்ணம் இருந்தது. மினுவை பார்க்க, பார்க்க இன்னமும் அவன் மனம் வேதனையுற்றது.
அடுத்த சில நாட்களுக்குப் பின், ஒரு நாள் மாலை நல்ல மழை பெய்துகொண்டிருக்க, மினுவின் வருகைக்காகக் காத்திருந்தான் ரிஷி. அவள் வராமல் போக, அந்த மழைக்காற்றை உள்வாங்க பால்கனி வந்தவன், எதிர் ப்ளாக் பார்க்கிங்’கில் மினு மற்றும் நிவேதா நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான்.
அவர்கள் நின்றவிதமே சொன்னது, மழையில் இந்தப்பக்கம் வரமுடியாமல் அங்கேயே நிற்கிறார்கள் என்று. அதற்கு ஏற்றாற்போல மினுவும் ரிஷியை பால்கனியில் பார்த்தவுடன், குடை போலச் சைகை காட்டினாள்.
அப்போது நிவேதா யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தாள். மினு சைகை செய்தவுடன், ரிஷி அவசரமாகக் குடையை எடுத்துக்கொண்டு கீழிறங்கினான்.
நிவேதா அப்போதுதான் ஸ்ரீயை அழைத்து குடை வேண்டும் என சொல்லியிருக்க, அவனும் குடையுடன் முன்னமே இறங்கியிருந்தான்.
ஸ்ரீ நிவேதாவிடம், “ஒரு குடைதான் இருந்துச்சு நிவி. நான் மினுவை அந்தப்பக்கம் விட்டுட்டு உன்னை…” என்று சொல்லிமுடிப்பதற்குள் “தேவ்” என்று கையசைத்தாள் மினு.
இருவரும் திரும்பிப்பார்க்க, எதிர் திசையில் நின்றுகொண்டிருந்தான் ரிஷி குடையுடன்!
‘இவன் எப்படி வந்தான்?’ நிவேதா யோசிக்க… ‘அதானே இவன் இல்லையென்றால் தான் ஆச்சரியம்!’ மனதில் ஸ்ரீயை வறுத்துக்கொண்டிருந்தான் ரிஷி.
என்னதான் ஸ்ரீ மேல் நன்மதிப்பு இருந்தாலும் நிவேதா, அதை விட முக்கியமாக மினுவிடம் ஸ்ரீ காட்டும் அக்கறை, ஒரு சிறிய பொறாமை உணர்வை ஏற்படுத்தாமல் இல்லை.
மினுவின் தேவ் என்ற அழைப்பில், அவனும் அங்கே சென்றான்.
“அம்மா நான் தேவ் கூட போறேன்” என்று சொன்னவுடன், ரிஷி மினுவுடன் எப்பொழுதும் போல மடித்த கையோடு கை முட்ட, அவன் அவளைத் தூக்கிக்கொண்டான்.
நிவேதா ஸ்ரீயை பார்க்க, “ரொம்ப க்ளோஸ் ஆகிட்டாங்க. ஹ்ம்ம். வா போலாம்” என அவளை அழைத்துச்சென்றான். அவள் அமைதியாக வர, “ரிஷி தப்பான ஆள் மாதிரி தெரியல நிவி. பயப்படாத” ரிஷிக்காக அவளிடம் பேசினான்.
அது அவளுக்கு தெரியாதா என்ன?! வெறுமனே புன்னகைத்தாள். மினு ரிஷியின் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாவது போல முன்னமே உணர்ந்திருந்தாள்.
சிலசமயம் தடுக்க நினைத்தாலும், ‘ரிஷி இந்தியாவிலிருந்து கிளம்பிவிடுவான், அவனுக்கும் குடும்பம் குழந்தை என இருக்குமே’ என்ற எண்ணமே அவள் மனதில்.
ஆனால், அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்பதுபோல மினுவுடனான அவனின் இணக்கம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.
**********
அடுத்து வந்த சிலநாட்களில், சேர்த்து வைத்தாற்போல ஒரு வாரம் அவர்கள் அலுவலகத்தில் விடுமுறை அறிவிக்க, ரஜத் மற்றும் அவனின் பெற்றோர் அவர்கள் சொந்த கிராமத்திற்கு சென்றார்கள்.
ஸ்ரீ, ‘தன் அம்மா அப்பாவை சென்று பார்த்துவிட்டு சீக்கிரம் வந்துவிடுகிறேன்’ என்று நிவேதாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியிருந்தான்.
நவீன் குடும்பமும் சுற்றுலா சென்றுவிட, அவர்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களில், வெகு சிலரே இங்கிருந்து வேலை பார்த்தனர்.
அதில் ரிஷியும் நிவேதாவும் அடக்கம். நிவேதா அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தே வேலை பார்த்தாள்.
ஒருநாள் மழை நிற்காமல் பெய்து கொண்டிருக்க, கீழே இருந்த ஜிம்’மில் உடற்பயிற்சி செய்த ரிஷி, வீடு திரும்பும் போது, நிவேதா வீட்டின் கதவு திறந்திருக்க, கேட் (gate) மட்டும் பூட்டப்பட்டிருந்தது. கூடவே மினு பதட்டத்துடன் வெளியே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்.
அப்போது சரியாக ரிஷி வரவும், மினு அவனைப் பார்த்து அழுதுகொண்டே, “அம்மா எழுந்திருக்க மாட்டேங்கறாங்க தேவ்” என்று சொன்னவுடன் அதிர்ந்தான் ரிஷி.
விரு விருபா இருக்கு,super
Thank you sister 🙂
Super mam. Oru 15 mints read panra mathi content kudunga mam. Interestah eruku but immediateah mudinjiduthu
Thanks a lot mam 🙂 Indha story la chapters konjam chinna chinnadha irukum… Will try to increase 🙂