Article – 1

வணக்கம் தோழமைகளே!

அகம் புறம் எழுத முக்கிய காரணங்கள்…  அதிகம் வெளியே தெரியாத திருநம்பிகளையும்… மற்றும் Gender Dysphoria குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற ஒரு உந்துதல்.

திருநங்கைகளை பற்றி சில கதைகள், படங்கள் வெளிவந்தால், மற்றும் நம் வாழ்வில் அவர்களை சந்தித்திருப்பதால், ஓரளவிற்கு அவர்களை பற்றி நமக்கு தெரியும். இந்த கதையின் மூலம் திருநம்பிகளை… அவர்களின் உணர்வுகளை தர முயற்சித்துள்ளேன். 

கதையின் ஒரு எக்ஸ்ட்டெண்க்ஷனாக… பல தடைகளைத் தாண்டி முன்னேறிய சில திருனர்கள்/திருநர்கள் (டிரான்ஸ்ஜெண்டர்ஸ்) பற்றி பார்ப்போம். 

சில ஆண்டுகளுக்கு முன், திருநங்கைகளை பற்றி நான் செய்த ஒரு வெகு சிறிய ஆராய்ச்சியில், எனக்குள் உதித்தது… ஆணாகப் பிறந்து பெண்ணாக உணர்ந்து, மாறுபவர்களை திருநங்கைகள் என்கிறோம். ஆனால் பெண்ணாகப் பிறந்து ஆணாக உணர்பவர்களை எப்படி அழைக்க வேண்டும்? அப்படி யாரேனும் இருக்கிறார்களா?! என்ற என் வலைத்தள தேடலில், நான் அறிந்துகொண்டது தான் திருநம்பிகள். ஆங்கிலத்தில் ட்ரான்ஸ் மேன் (Trans Man).

ஆங்கிலத்திற்குப் பிறகு, தமிழில் தான் இவர்களுக்கு முதலில் திருநம்பி என்ற பெயர் வைக்கப்பட்டது. 

பல்வேறு இழிவான பெயர்களைக் கூறி மாற்றுப் பாலினத்தவர்களை இழிவாக அழைத்த காலத்தில், 2006’ல் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள், ‘திருநங்கை’, ‘திருநம்பி’ என பெயரிட்டு சட்டம் இயற்றினார்.  

சமுதாயத்தில் அவர்களுக்கென ஒரு அங்கீகாரத்திற்காகத் திருநங்கைகள் பல வருடங்களாகப் போராடும் நிலையில், இன்னமும் வெளி உலகிற்கு அதிகம் தெரியாமல் இருப்பவர்களே திருநம்பிகள். 

அப்படி நான் முதலில் ஸ்க்ரால் என்ற ஆங்கில வலைத்தளத்தில் முதலில் தெரிந்துகொண்ட திருநம்பி யார் என்று பார்ப்போம்! 

………………

இன்று நாம் பார்க்கவிருப்பது, திருநம்பி Gee Imaan Semmalar. திருநம்பிகளின் உரிமைக்காக, மூன்றாம் பாலினத்தவரின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் சமூக செயல்பாட்டாளர்/ஆர்வலர், நாடக கலைஞர் மற்றும் எழுத்தாளர். 

பிரபல இந்திய மட்டும் அயல்நாட்டுப் பத்திரிகைகளில் இவருடைய கட்டுரைகளும், எழுத்துக்களும் பிரசுரமாகியிருக்கிறது. 

இவர் Kent Law School’லில் Graduate Teaching Assistant ஆக உள்ளார். இவருடைய ஆராய்ச்சிகள் பொதுவாகவே பாலினம், இனம், குடியுரிமை, சாதி ஆகியவற்றைச் சார்ந்து இருக்கும். 

கேரளா மாநிலத்தில் பிறந்த இவர், தன்னை பற்றிய தகவல்களை சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் A. ரேவதி அவர்கள் எழுதிய “A Life in Trans Activism” என்கிற புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

அதிலிருந்து அவரை பற்றிய சில வரிகள்! 

வலைத்தளங்கள் மற்றும் அதில் செய்திகள்/தகவல்கள் என தோன்றிய காலத்திற்கு முன்னே தன்னுடைய மாற்றங்களை உணர்த்த இவருக்கு, கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகியுள்ளது மற்ற திருநம்பிகளை பற்றித் தெரிந்து கொள்வதற்கு.

ஒற்றை பெற்றோர் (சிங்கிள் பேரண்ட்) ஆன இவர் தாயார், இவருடைய மாற்றங்களை உணர்ந்து இவருக்கு அனைத்து கட்டத்திலும் துணையாக இருந்தார் என கூறியுள்ளார்.

தன்னை போன்ற திருநம்பிகளை சந்தித்தபோது, அவர்களுள் பலர் மருத்துவ முறைப்படி தங்களை மாற்றிக்கொள்ள விரும்பியதாகக் கூறிய இவர், அந்த ட்ரான்ஷிஷன் (Transition) பற்றிய தகவல்களை தன் அண்ணன் உடன் சேர்ந்து தேடியதாகக் கூறியுள்ளார். 

இந்த காலகட்டத்தில், பல உடல் ரீதியான அத்துமீறல்களைச் சந்தித்துள்ளதாகவும், தான் மட்டுமில்லை தன்னை போன்ற பலரும் இதை அனுபவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

அதில் கொடிய ஒன்று, பதினாறு வயதில், சிறிய அறுவை சிகிச்சைக்காக சென்ற போது பாலியல் ரீதியாக மருத்துவரே தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்றும், அதற்கு அந்த மருத்துவர் தந்த காரணம் ‘தான் பெண்ணாக தெரியவில்லை’ என்று சொன்னதும்… அதனால்  அதற்குப்பின் பெண் மருத்துவர்களிடம்  சென்றதாக கூறியுள்ளார். 

அச்சமயம், தன் திருநம்பி நண்பன் தீபக்குடன் தானும்,சில மாதங்களாக testosterone ஹார்மோன் டிரீட்மென்ட் எடுத்துக்கொண்டுள்ளார். 

பிகு: துரதிஷ்டவசமாக தன் நண்பன் மனஉளைச்சல் காரணமாக, சில ஆண்டுகளில் ஓடும் ரயிலில் இருந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ளார்.

Testosterone ஹார்மோன் டிரீட்மென்ட் மேற்கொள்ள, இரண்டு மனநல மருத்துவர்களிடம் இருந்து சான்று பெற வேண்டும். அதாவது சிகிச்சை மேற்கொள்ளப்போகும் நபருக்கு “Gender Identity Dysphoria” என்ற பாதிப்பு உள்ளதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்ற சான்றிதழை தரவேண்டும் என்று தகவலை கூறியுள்ளார். 

இச்சான்றிதழ் பெறுவது அவ்வளவு எளிதல்ல என்றும், சில மருத்துவர்கள் திருநம்பிகளிடம் மாற்றங்கள் தெரிந்தாலும், உடலுடன் ஒத்து வாழ் என்ற அறிவுரையைத் திணிப்பார்கள் என்றும், அதனால் தன்னைப்போன்றவர்களுக்கு இன்னமும் மனஉளைச்சல் ஏற்படும் என்பதையும் பகிர்ந்துள்ளார்.

இதில் இன்னமும் பெரிய கொடுமை என்று இவர் கூறியுள்ள தகவல், ‘சில திருநம்பிகளுக்கு மருத்துவர்கள் Electroshock Therapies (மனநோயாளிகளுக்குத் தரும் எலக்ட்ரிக் ஷாக் டிரீட்மென்ட்), Estrogen எனப்படும் பெண்களுக்கான ஹார்மோன் வலுக்கட்டாயமாக செலுத்தி திருமணம் செய்தால் சரியாகிவிடும் என்றும் பரிந்துரை செய்வார்களாம்.

இவர் Testosterone ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்ட சில மாதங்களில், தன்னை மருத்துவ முறைப்படி மாற்றிக்கொள்ள எண்ணி, மும்பையில் Dr Neeta Patel என்பரிடம் சிகிச்சைக்குச் சென்றுள்ளார். 

அதன் படி அவருக்கு முதலில் மார்பகங்களை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டது. 

அந்த சிகிச்சை தன் வாழ்நாளில் மறக்க முடியாது என்றும், தன்னை பிரபல மருத்துவராக காட்டிக்கொண்ட Dr. Neeta Patel, தனக்கு மார்பகங்களை அகற்றிய பின், அது சரியாக செய்யப்படாததால்… அவ்விடத்தில் ஏற்பட்ட தொற்று, சதை வெளிவருதல் மற்றும் ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ள இவர், அதற்கு பின் மறுபடியும் அம்மருத்துவர் தனக்கு சிகிச்சை செய்ததாகவும், அதுவும் தோல்வியில் முடிந்ததாகவும் கூறியுள்ளார். 

தன் சிதைந்த உடலை பார்க்கும்போதெல்லாம் அது பெரும் மனவுளைச்சலை ஏற்படுத்தியது எனவும்…

ஏன் எதற்காக இப்படி என விசாரித்தபோதுதான், அம்மருத்துவர் பற்றி பல தகவல்களை தெரிந்துகொண்டதாகவும், பணத்திற்காக இதுபோல அவர் இதற்கு முன் பல திருநம்பிகளுக்கு செய்துள்ளதாகவும் புரிந்துகொண்டுள்ளார் இமான். 

எந்த மாறுதலுக்காக வருடக்கணக்காகக் காத்திருந்தாரோ, அதுவே இப்படி முடிந்தது… தனக்கு மரணிக்கும் வலியை தந்ததாகவும், தன் உடலைப் பார்க்கும்போதெல்லாம் பெரும் வேதனை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

தன்னை போல மீண்டும் யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காகவே இதை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதாகக் கூறியுள்ளார் இமான்.

தன்னை மாற்றிக்கொள்ள அறுவைசிகிச்சை மேற்கொள்ள எண்ணியது, அதை மேற்கொண்டது தவறில்லை ஆனால் சரியான மருத்துவரைத் தேர்ந்தெடுக்காதது தான் தவறு என்றும் பகிர்ந்துகொண்டுள்ளார். 

இந்நிகழ்வுக்குப் பின், சரியான தரமான மருத்துவர் மற்றும் எவ்விடத்தில் சரியான அளவில் பணம் பெற்று சிகிச்சை செய்கிறார்கள் என்ற தகவல்களைச் சேகரித்து மற்றவர்களும் உதவியுள்ளார். 

தனக்கு இப்படி ஆனதே தவிர, தனக்குப் பின் சரியான மருத்துவர்களின் உதவியுடன் திருநம்பிகள் வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். 

தன் தாய் தனக்கு எல்லாவிதத்திலும் துணை இருந்ததால், இச்சிகிச்சையை மேற்கொள்ள பணம் தடையாக இல்லாததால், சிகிச்சையை (தோல்வியோ வெற்றியோ) தன்னால் செய்துகொள்ள முடிந்ததாகவும்… 

குடும்பத்தின் ஆதரவு இல்லாமல், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், தலித், ஆதிவாசி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இவ்வகையை சிகிச்சைகளை பெறுவது இன்னமும் கடினமாகவே உள்ளது என்றும் கூறியுள்ளார். 

தன் உணர்வுகளை ஒற்றிய உடல் மாற்றங்களை பார்க்க ஆரம்பித்த பின், பழைய மற்றும் புதிய வலிகளை மறந்து, தன்னை தானே நேசிக்கத் துவங்கியதாகவும், அந்த நேசிப்பைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்ததாகவும் கூறியுள்ளார். 

Information Credits: இவரை பற்றிய தகவல்கள் பெரும்பாலானது ‘scroll.in’ என்ற வலைத்தளத்திலும், இன்னமும் சில வலைத்தளங்களிமும்,  மற்றும் A. ரேவதி அவர்கள் எழுதிய “A Life in Trans Activism” புத்தகத்தில் இருந்தும் எடுக்கப்பட்டது. 

Image Credits: Google.

*************************************************

அகம் புறம் கதையில் முதலில் நான் எழுத எண்ணியது திருநங்கை ஆங்கில இலக்கிய ஆசிரியராக அல்லது விரிவுரையாளராக வளருவது போல் தான். 

ஆனால் கதை மனதில் உதித்து அதற்கு வடிவம் கொடுக்கும்போதுதான், இதுபோல ஆசிரியர் ஆக, சில வருடங்கள் எடுக்கும்… கதையின் போக்கில் அது கொஞ்சம் சாத்தியமற்றது என்றும் தோன்றியது. 

வேறு துறையை எடுக்க எண்ணிய போது தான், ஒருவரை பற்றி அறிய நேர்ந்தது. அவர் தான் திருநங்கை தொழிலதிபர் சங்கீதா அவர்கள். 

மனதை பாதித்த கதை இவருடையது. கண்டிப்பாக இவரை பற்றி மேலோட்டமாக கதையில் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணி எழுதியது தான் சத்யா கதாபாத்திரம். 

குறிப்பு: சத்யா கதாபாத்திரம் முழுவதுமாக சங்கீதா அவர்களைத் தழுவி எழுதப்படவில்லை. அவருடைய தொழிலை மட்டும் ஆங்காங்கே எடுத்துக்கொண்டு எழுதியுள்ளேன். 

இப்போது சங்கீதா அவர்களைப் பற்றி நான் சேகரித்த சில தகவல்கள் இதோ உங்களுக்காக. இப்பகுதி முடியும் போது சிலருக்கு சங்கடத்தைத் தரலாம். ஆகையால் கடைசி சில வரிகளை வேண்டுமென்றால் தவிர்த்துவிடவும். 

சங்கீதா அவர்கள் கோவையில் மாவட்ட திருநங்கைகள் சங்கத்தின் தலைவராக 2006 முதல் 2020 வரை இருந்தவர். 

ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி.

Thebetterindia தளத்திற்கு தந்த பேட்டியில் அவர் தந்த தகவல்கள். 

படிக்காத பெற்றோராக இருந்தாலும், அவர்கள் தனக்கு நல்ல குழந்தைப் பருவத்தைத் தந்ததாகக் கூறியுள்ளார். தான் பதின் பருவத்தை எட்டியபோது, சில மாறுதல்கள் தன்னுள் தெரிந்ததாகவும்…. 

அது பெரியதாக வெளியில் தெரியவில்லை எனவும், ஆனால் அச்சமயத்தில் திருமண பேச்சுக்கள் எழுந்தபோது… தன்னை பற்றி வீட்டில் கூறியுள்ளார். 

அதில் எழுந்த சர்ச்சையால், குடும்பத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

தன்னை போன்றவர்களுடன் இருக்க எண்ணி, தனக்கு நேரும் மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும் 1985 ஆம் ஆண்டு, கோயம்புத்தூர் வந்தபோது அவருக்கு வயது 25. 

திருநங்கைகளுக்கான குழுவில் சேர்ந்து தன்னை மீட்டுக்கொண்டதாகக் கூறிய இவர், ஆரம்ப காலகட்டத்தில்… பெரும்பாலான திருநங்கைகள் அனுபவிக்கும் பல கஷ்டங்களைக் கண்டுள்ளார்.  

அனைத்தையும் தாங்கிக்கொண்டு வெற்றிக்கான வழியை அவர் கண்ட ஆண்டு 2010. நண்பர்கள் மற்றும் சிலர் உதவியுடன் அவினாசிலிங்கம் கல்லூரியில் சமையல் கலை படிப்பைப் படித்து முடித்து, 2014’ல் மூன்று லட்சம் கடன் தொகையாகப் பெற்று சமையல் தொழிலை ஆரம்பித்தார். 

குடும்ப நிகழ்ச்சிகளுக்கு, திருமணத்திற்கு, வயதானவர்களுக்கு என பல நிகழ்வுகளுக்கு கேட்டரிங் சர்வீஸ் செய்துள்ளார். 

இவரது மெனுவில் அதிகம் பெயர்பெற்றது பிரியாணியே ஆகும். கேரளாவிலிருந்துகூட பிரியாணிக்கு பல ஆர்டர் வந்துள்ளதாகக் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் குறைந்தது மாதம் ஐந்து ஆர்டர்கள் என தொழிலில் முன்னேறிய இவர், 

தன்னைப்போன்ற நிறைய திருநங்கைகளுக்கு சமையல் கலை கற்றுத்தந்து, சுய வேலைவாய்ப்புக்கு வழிவகுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. 

தான் இந்த நிலைக்கு வருவதற்கு நிறைய கஷ்டங்களை வலிகளை தாண்டி வந்ததாகவும், ஆரம்பக்காலத்தில் அவர் செய்த உணவுகள் மறுக்கப்பட்டதாகவும், பல இடங்களில் நிராகரிக்கப்பட்டதாக கூறிய அவர்…

இவ்வாறான நிராகரிப்புகள் தன்னை முடக்கவில்லை என்றும், அதையெல்லாம் தகர்த்து முன்னேறி….தன்னை நிராகரித்தவர்களே தன்னை புகழும் படியும், நேசிக்கும்படியும் மாற்றியதாகப் பெருமையாகக் கூறியுள்ளார். 

2020’தில் கொரோனா தொற்று காலத்தில், தன் சொந்த செலவிலும், நிதிகள் சேகரித்தும் … தினமும் கிட்டத்தட்ட 300 பேருக்கு உணவு கிடைக்கும்படி செய்துள்ளார். 

தன்னுடைய வீட்டில், கேட்டரிங் செய்துவந்த இவர், கடந்த வருடம் ‘கோவை ட்ரான்ஸ் கிட்சன்’ எனப்படும் உணவகத்தை நிறுவி… அதில் நிறைய திருநங்கைகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித்தந்தார். 

கொரானா தடைகளையும் தாண்டி நன்றாக தொழில் நடந்துகொண்டிருந்த சமயம், திடீரென அக்டோபர் 21 2020 அன்று அவருடைய வீட்டில் சடலமாகக் கிடந்ததாகச் செய்திகள் வெளியானது. 

****வார்னிங்… பலவீனமானவர்கள் தவிர்க்கவும்****

உடலில் பலகாயங்களுடன், கழுத்து அறுபட்ட நிலையில் அவருடைய சடலத்தை மீட்டெடுத்தனர் காவல் துறையினர். 

பின்பு விசாரித்தபோது, அவரிடம் வேலை கேட்டு வந்த 23 வயது ஆணுக்கு சங்கீதா அவர்கள் வேலை தந்ததாகவும், அவன் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஒருகட்டத்தில் சங்கீதா போலீசை நாடப்போவதாகச் சொல்ல, அவன் அவரை கொலை செய்ததாக அவன் விசாரணையில் ஒப்புக்கொண்டான். 

******

திருநங்கைகளுக்கு பெரும் இழப்பாக மாறியது இச்சம்பவம். அனைவராலும் அம்மா என்று அழைக்கப்பட்ட சங்கீதா அவர்கள், கடந்த வருடம் இவ்வுலகைவிட்டு பிரிந்தார்.

பின் குறிப்பு: இத்தகவல் அனைத்தும் பல வலைத்தளத்தின் உதவியுடன் எடுக்கப்பட்டது. பெரும்பாலான செய்திகள் சங்கீதா அவர்களால் பகிரப்பட்டது. 

********

கடந்த வருடம் இச்செய்தி என்னை மிகவும் பாதித்தது. 60 வயது நிரம்பிய ஒருவரை எவ்வாறு தவறான கண்ணோட்டத்தில் பார்க்க முடிந்தது அவனால்!?! சமூகத்தில் பல இன்னல்களைத் தாண்டி வந்த ஒருவர் இவ்வாறு மரணித்தது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

ஆதலால் அகம் புறம் கதையில்… சத்யா கதாபாத்திரம், இவரை மேலோட்டமாக தழுவி எழுதப்பட்டது. 

நன்றி,

ப்ரீத்தி S. கார்த்திக்

4 thoughts on “Article – 1

  • June 17, 2021 at 7:18 am
    Permalink

    Great Preethi..
    Ur doing a very good work.. Continue it.. Hope ur story gives them the due respect among us ..
    Hats off to u..

    • June 20, 2021 at 4:38 pm
      Permalink

      Thank you so much dear… It means alot to me… Yes da, happy if they get their place in this society…

    • June 20, 2021 at 4:38 pm
      Permalink

      Achoo… Aduthu article konjam okay va kuduthudalam.. Cheers 🙂

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved