Article – 2

வணக்கம் தோழமைகளே!

அகம் புறம் எழுத ஆரம்பித்த போது திருநம்பிகள் என்ற ஒரு சாரார் இருக்கிறார்கள் என்று தெரியும் என சொன்னவர்கள் சிலர். பலருக்கு இது புது தகவலாகவே இருந்தது. 

முதலில் திருநம்பிகள் குறித்து நான் படித்தபோதும் கூட (2017), தகவல் மிகவும் குறைவாகவே இருந்தது. அயல்நாட்டு திருநம்பிகள் சிலர் தகவல்கள் இருந்ததே தவிர, இந்தியர்கள் குறித்த தகவல்கள் அதிகம் இல்லை என்பதே உண்மை.

இதை ஆழ்ந்து யோசிக்கும்போது, என் அளவு அறிவுக்கு எட்டியது சில விஷயங்கள்!

சமுதாயத்தில் காலம் காலமாக, அந்தந்த காலகட்டத்திற்கேற்ப… ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கென சில உரிமைகள், எல்லைகள் இருக்கும். அதில் பெண்களுக்கான உரிமையின் அளவு சிறியது, எல்லைகள் குறுகியது. 

பருவமடைந்த பின், பள்ளிப் படிப்புக்கு பின், அவ்வளவு என் கல்லூரி படிப்பு முடித்து, வேலைக்கு சென்றால் கூட பல குடும்பங்களில்/சமுதாயத்தில் பெண்களுக்கான உரிமைகள் என்பது பல இடங்களில் கேள்விக்குறியே. 

அப்படியிருக்கையில் அவர்கள் மனதளவில் ஏற்படும் மாற்றத்தை எவ்வாறு வெளிப்படையாக தைரியத்துடன் பகிரமுடியும்? அப்படியே பகிர்ந்தாலும், ஏற்றுக்கொள்வது என்பது அவ்வளவு எளிதா என்ன?

ஆணாக பிறந்து தங்களை பெண்ணாக உணர்பவர்களையே, அதாவது ஓரளவிற்கு கொஞ்சம் சுதந்திரம் உள்ளவர்களையே… குடும்பங்களும் சமுதாயமும் ஆதரிப்பதில்லை. குடும்பத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

அதுவே பெண்ணாக பிறந்து, ஆணாக உணர்பவர்களின் நிலை? ஏற்கனவே பல கோட்பாடுகள் வகுக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு, தைரியம் வந்து வீட்டில் பகிர்வதே பெரிய விஷயம். ஒருவேளை, அவர்களின் உணர்வுகள் வீட்டில் மதிக்கப்படாமல் போகும் பட்சத்தில், துணிச்சலாக வெளியேறுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அப்படி வெளியேறினால், பெண்ணாகத் தோற்றம் கொண்டுள்ள இவர்களுக்குப் பாதுகாப்பென்ன அவ்வளவு சுலபமா நம் சமூகத்தில்? அதன் விளைவுகளை பற்றி ஒரு சிறிய பாகமாக அகம் புறம் கதையில் எழுதியுள்ளேன். இது போல சம்பவங்கள் திருநம்பிகளுக்கு நடக்காமல் இருக்கலாம் … அப்படி நடக்கவில்லை என்றால் மிகவும் மகிழ்ச்சியே! 

ஆனால் வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் முன்… தங்களின் பாதுகாப்பு குறித்து, அவர்கள் கண்டிப்பாக யோசித்துத்தான் முடிவெடுக்கத் தள்ளப்படுகிறார்கள். ஆகையால் நிறைய முட்டுக்கட்டைகள் ஒரு முடிவெடுப்பதற்கு!

அந்த முடிவெடுப்பதற்குள் சில குடும்பங்களில், பெண்களுக்கான ஹார்மோன் (எஸ்ட்ரோஜன்) செலுத்தி, திருமணம் செய்துவைக்கும் முடிவுகள் கூட எடுக்கப்பட்டுள்ளது. அப்படி செலுத்தினால், பெண்மைக்கான மாறுதல்கள் உடலளவில் வரலாம்! ஆனால் அவர்களுக்குள் இருக்கும் உணர்வுகள்?! காலம் முழுக்க சகித்துக்கொண்டல்லவா வாழ வேண்டும்? அப்படி முடியாமல் போகும் பட்சத்தில் அவர்களுக்கு நடப்பது? அவர்களில் சிலர் எடுக்கும் முடிவு? நான் சொல்லித் தெரியவேண்டுமா?!

பெண்ணாக பிறந்ததால் அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவது மிகவும் எளிது. காலம் காலமாக நடப்பவை ஆயிற்றே! இதையெல்லாம் தகர்த்து வெளியே வருவதென்பதே இமாலய சாதனை. இதனால் தான் இன்னமும் திருநம்பிகள் வெளியில் அதிகம் வராமல் இருக்கிறார்களோ என்பது என் கூற்று. இது முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட கருத்து. 

பெண்களுக்கான உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் தளர்வாக்கப்பட்டு வருகிறது. பார்ப்போம் இனி வரும் காலங்களில் நடப்பதென்ன என்பதை!

பெண்ணியம் பேசுகிறேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் நடைமுறையை பேசுகிறேன். ஆணும் பெண்ணும் சமம் என்பதே எப்போதும் என் கருத்து. அதேபோல மற்ற பாலினத்தவர்களும் ஆண் பெண்ணைப்போல சமமானவர்களே. யாரும் யாருக்கும் உயர்ந்தவர்கள் அல்ல. தாழ்ந்தவர்களும் அல்ல. அதையே தான் என் கதைகளும் முன்னிறுத்தும்!

சரி… அடுத்து இன்றைய தொகுப்புக்கு செல்லலாம்.

********************

இன்று நான் பேசப்போகும் திருநம்பி ஆர்யன் பாஷா. இவர் இந்தியாவின் முதல் திருநம்பி பாடிபில்டர், வழக்கறிஞர், சமூக ஆர்வலர். 

இவர் Indiatimes பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, சிறு வயதிலிருந்து ஆண் பிள்ளையாகவே தன்னை நினைத்து, அதுபோலவே வாழ்ந்ததாகவும், தான் மற்ற ஆண் பிள்ளைகளை விட மாறுபட்டுள்ளதாக அவர் பருவமெய்த போது தான் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

பொதுவாக ட்ரான்ஸ்பெர்சன்ஸ், 13 அல்லது 14 வயதில் மாற்றங்களை உணர்வார்கள். பெரும் தயக்கத்திற்கு பின், சில பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டு வீட்டில் சொல்வார்கள். ஆனால் தனக்கு முன்னமே மாற்றங்கள் தெரிந்ததாகவும், தெரிந்தவுடன், வீட்டில் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்றெல்லாம் யோசிக்காமல், வீட்டில் பகிர்ந்து கொண்டதாகக் கூறியுள்ளார்.

மூன்று சகோதரிகளுடன் 1991 ஆம் ஆண்டு பெண்ணாக பிறந்த இவர், இரண்டாம் வகுப்பு படிக்கும்போது, பெண் குழந்தைகளுக்கான சீருடையில் செல்ல பிடிக்கவில்லை என்ற அவர் தந்தையிடம் பகிர்ந்துள்ளார். 

முதலில் அவர் தயங்கினாலும், ஆர்யன் அவர் முடிவில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்ததால், வேறு பள்ளியில் சேர்த்துள்ளார் அவர் தந்தை. ஆண் பிள்ளைகளுக்கான சீருடையில் செல்ல ஆரம்பித்த ஆர்யன், அதையே பள்ளி முடிக்கும்வரை தொடர்ந்திருக்கிறார். 

பத்தாம் வகுப்பு வரை அவரை ஆண் மாணவனென்றே உடன் படிப்பவர்கள் நினைத்ததாகவும், பத்தாம் வகுப்பு படிக்கையில் தான், தன்னுடைய ஆவணங்களில் பாலினம் ‘பெண்’ என்று குறிப்பிட்டுள்ளதை ஆசிரியர்கள் பார்த்ததாகக் கூறியுள்ளார்.

பள்ளியில் இருக்கும் நேரம் ஆர்யனை ஒரு ஆண் பிள்ளையாகவே நினைத்து உடன் படிப்பவர்கள் பழகியதால்… பள்ளியில், மற்றும் மைதானத்தில் அதிக நேரம் செலவு செய்யப் பிடிக்கும் எனவும், ஆனால் வீட்டில், அன்னையைத் தவிர மற்றவர்களுடன் பழக மிகவும் சிரமப்பட்டதாகவும், வீட்டில் இருக்கும் சமயம் மனவுளைச்சல்களால் அதிகம்  பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

முதலில் ஆர்யனை பற்றி தெரிந்துகொண்டது அவர் அன்னையே. அவர் அரியனுக்கு, பக்கபலமாக இருந்தது மட்டுமல்லாது, ‘இதெல்லாம் காலப்போக்கில் மாறிவிடும்’ என்று சொன்ன ஆர்யனின் தந்தையிடம் கூட,  அவர் தான் அவருக்காகப் பேசியதாகவும் கூறியுள்ளார்.

அவர் அன்னை, ஆர்யனின் பதினாறு வயதில் பால் மாற்று அறுவை சிகிச்சை பற்றி ஆர்யனிடம் சொல்ல, அன்று தான் வாழ்நாளில் மிக மகிழ்ச்சியான நாளாக உணர்ந்ததாக மகிழ்வுடன் தெரிவித்துள்ளார் ஆர்யன்.  

2011 ஆம் வருடம், பத்தொன்பது வயதை எட்டியபோது, ஆர்யனுக்கு பால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. 

சிகிச்சைக்குப் பின் உடலளவில் மிகவும் நிறைவாக, மகிழ்ச்சியாக உணர்ந்ததாகவும், அது மனதளவில் ஒரு பெரிய நிம்மதியைத் தந்தது எனவும்… அதனால் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றதாகவும் சொல்லி இருக்கிறார்.

ஆனால், பள்ளிக்குப் பின் கல்லூரி என வந்தபோது, பிரபல டெல்லி பல்கலைக்கழகங்களில் இடம் கொடுக்க மறுக்கப்பட்டதாகக் கூறியுள்ள ஆர்யன்,  கடைசியில் மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கச் சேர்ந்ததாக பகிர்ந்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு, NALSA தீர்ப்பு வரும்வரை, தங்களைப் போன்றவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானதாகக் கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டு தான் உச்சநீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவருக்கு சிலசலுகைகளை விதித்துத் தீர்ப்பளித்தது.  

உண்மையில் தனக்கு சமூகவியல் படிக்க ஆசை, சட்டம் படிக்க அப்போது விருப்பம் இல்லை, ஆனால் அதே சட்டம் இப்போது, LGBT சமுதாயத்திற்கு மிகவும் பயன்படுகிறது என்று கூறியுள்ளார்.

படிக்கும் வயதிலேயே தனக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் ஏற்பட்டதாகவும், ஸ்பீட் ஸ்கேட்டிங்’கில் கலந்துகொண்டு இந்திய அளவில் பதக்கங்கள் வாங்கியுள்ளதாகக் கூறியுள்ள ஆர்யன், தன் ஸ்போர்ட்ஸ் டீச்சர்’க்கு மட்டுமே தான் ஒரு பெண் என்று தெரியும் மற்றவர்களுக்கு தான் ஒரு ஆண் என்றே தெரியும் என்றுள்ளார்.

ஆனால் போட்டிகளில் பங்குபெறும் போது பெண்ணிற்கான பிரிவில் தான் பங்குகொள்ள முடியும் என ஆர்யனிடம் சொன்னதாகவும்… எவ்வளவு மறுத்தும், வேறு வழியில்லாமல் அதில் பங்குகொண்டு வெற்றிபெற்றதாகவும் கூறியுள்ளார்.

அப்போது தான் பள்ளியில் அவர் நிலை பற்றி மற்ற மாணவர்களுக்குத் தெரியவந்து, ‘ஆணை போல உள்ள ஒருவர்… பெண்ணிற்கான பிரிவில் கலந்துகொள்ளக் கூடாது’ என பல பேர் மறுப்பு தெரிவித்ததாதல், மனவுளைச்சல் அதிகம் ஏற்பட்டு, ஸ்பீட் ஸ்கேட்டிங் விளையாடுவதை அத்துடன் விட்டுவிட்டதாகவும் ஆர்யன் கூறியுள்ளார்.

அதற்குப் பின், பதினாறு வயதில் ஜிம் சென்று பாடி பில்ட்ங்  கற்றுக்கொள்ள ஆரம்பித்ததாகக் கூறியுள்ள ஆர்யன், பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அதிலிருந்து முழுவதுமாக குணமடைந்த பின், முதலில் அட்லாண்டா அமெரிக்காவில் நடைபெற இருந்த திருநம்பிகளுக்கான பாடி பில்ட்ங் போட்டியில் தான் கலந்துகொள்ள முடிவு செய்திருந்தார்.

ஆனால், அச்சமயம் விசா அவருக்கு மறுக்கப்பட்டதால், இந்தியாவில் நடக்கும் மற்ற போட்டிகளில் பங்குகொள்ள முடிவு செய்துள்ளார். விசா மறுக்கப்பட்டது தான், தன் வாழ்வில் பெரும் திருப்புமுனையாக மாறியதாகவும், இல்லையேல் ‘திருநம்பிகளுக்கென’ என தன் வட்டம் குறுகியிருக்கக்கூடம் என்று கூறியுள்ளார்.

நிறைய இந்திய பாடி பில்ட்ங் ஃபெடெரேஷன்-ஐ தொடர்புகொண்டு தன் நிலையைப் பற்றி முன்னமே கூறி, போட்டியில் கலந்துகொள்வதற்காக தன் விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார். 

அப்போதுதான் Musclemania என்கிற போட்டியில் கலந்துகொள்ள, அதுவும் ஆண்களின் பிரிவின் கீழ் கலந்துகொள்ள ஒப்புதல் அவருக்குக் கிடைத்தது. 2018 ஆம் ஆண்டு நடந்த போட்டியில், ஆண்கள் பிரிவின் கீழ் பங்கெடுத்த ஆர்யன், இரண்டாம் பரிசை வென்று சாதனை படைத்தார்.

பொதுவாகவே சுற்றி உள்ளவர்கள் கேட்கும் சில அபத்தமான கேள்விகள், உதாரணத்திற்கு ‘உங்களுக்கு மாதவிடாய் இன்னமும் வருகிறதா?’ தங்களை போன்றவர்களை மிகவும் பாதிக்கும் எனவும், தனக்கு தன்னை முற்றிலுமாக புரிந்துகொண்ட பெற்றோர்கள் கிடைத்ததால் அனைத்தையும் சமாளிக்க முடிந்ததாகவும், பலருக்கு அதுபோல அமைவதில்லை என கூறி வருத்தம் தெரிவித்துள்ளார். 

தன்னை போல உள்ளவர்களுக்கு, தன்னைக்கு கிடைத்த பெற்றோர்கள் போல அமைந்து, அவர்கள் வாழ்வும் சிறக்கவேண்டும் என்பதே தன் ஆசை என பகிர்ந்துள்ளார் ஆர்யன் பாஷா.

கொரோனா தொற்று ஆரம்பித்த சமயம், பல திருநம்பிகளுக்கு அடிப்படை வசதிகளில் ஆரம்பித்து, டெஸ்டெஸ்டிரோன் தெரபி எடுத்துக்கொள்ள முடியாத நிறைய பேருக்கு, அது சுலபமாகக் கிடைக்க வழிவகுத்துள்ளார் ஆர்யன்!

********************

திருநம்பிகள் குறித்து ஆழமாக தெரிந்துகொள்ள நிறைய படித்தேன். அப்போதுதான்  A ரேவதி அவர்கள் எழுதிய ‘A Life in Tran Activism’ புத்தகம் பற்றி தெரியவந்தது. 

அச்சமயம் தான் A ரேவதி அவர்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பி, அவரை குறித்த தகவல்களை தேடினேன். இதோ அதன் தொகுப்பு!

I did not purchase these emotions; nor did I borrow them. I was made thus by nature. Respect that. Recognize me as a woman and give me all the rights due to a woman. This plea for equality and human rights for transgender people has been the pivotal point of my transgender activism.

— A. Revathi Writer, Activist, Theatre Artist 

தமிழ்நாட்டின் நமக்கல் மாவட்டத்தில் ஆண் பிள்ளையாக பிறந்த ரேவதி அவர்கள், சிறு வயதில் தன்னிடம் மாற்றங்களை கண்டுள்ளார். பெண் போல உடை அணிவதும், பெண்ணிற்கான உடல்மொழிகளும் அவரிடம் தெரிந்துள்ளது.

அந்த வயதில், தன்னுடன் படிக்கும் சிறுவர்களை விட, சிறுமிகளுடன் விளையாடுவது, தனது தாயின் உடைகளை அணிவது என இருந்தவர், ஒரு ஆண் உடலில் மாட்டிக்கொண்ட பெண் போல தன்னை உணர்ந்து மிகவும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டார். 

அவரின் இம்மாற்றத்தால், பள்ளியில் நிறைய வன்முறைகளை அனுபவித்த இவரை வீட்டிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. 

அவருடைய மாற்றங்கள் தெரியவந்தபின், வீட்டில் அவரை அடித்து துன்புறுத்தி, அவருடைய மாற்றங்கள் தவறானது, அபத்தம் என கூறியுள்ளார்கள். 

இதனால் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டு, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியாமல் போனது.

அச்சமயம் பள்ளி சுற்றுலாவுக்காக நாமக்கல் சென்றபோது, இவரை போன்ற திருநங்கைகளை அங்கு சந்தித்துள்ளார். அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியேறி அவர்களுடன் டெல்லி சென்றுள்ளார் ரேவதி. 

அங்கே டெல்லியில் ஹஜ்ரா எனப்படும் சமூகத்தை சந்தித்து, அவர்களுடன் சேர்ந்து வாழ, அந்நேரம் பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு அங்கேயே வாழ்ந்துள்ளார்.

ஹஜ்ராவாக வாழ்ந்த சமயத்தில் மிகவும் கஷ்டப்பட்ட இவர், திருமணங்களில் நடனமாடுவது, கடைகேட்டலில் ஈடுபடுவது, மற்றும் பாலியல் தொழிலும் தள்ளப்பட்டுள்ளார். வன்கொடுமைகள் அங்கே அதிகமாக, திரும்பி தன் வீட்டிற்கே சென்றுள்ளார் ரேவதி.

ஆனால் அவரை அவர் குடும்பத்தில் ஏற்கவில்லை. அவருக்கு சொத்திலும் பங்கு தராமல் மறுக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் மும்பைக்கு சென்ற ரேவதி, அங்கேயும் பல இன்னல்களை சந்தித்துள்ளார். ரௌடிகளால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பாலியல் தொழில் என பல துன்பங்களுக்கு பின், பெங்களூரு சென்ற ரேவதிக்கு அங்கேயும் ஆரம்பத்தில் நிம்மதி கிடைக்கவில்லை.

பெங்களூரு காவல் நிலையத்தில் அவரை மிகவும் மோசமாக நடத்தி, உடைகளை அகற்ற சொல்லி தாக்கியுள்ளனர். இதுதவிர, கொடிய வார்த்தைகளாலும் நிறைய சங்கடங்களை அனுபவித்துள்ளதாகக் கூறியுள்ளார் ரேவதி. 

சில நாட்களுக்கு பின், பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகப் போராடும் சங்கமா என்ற NGO-வில் அவருக்கு பியூன்-ஆக வேலை கிடைக்க, அதை நன்றாக பற்றிக்கொண்டார் ரேவதி. பின், படிப்படியாக முன்னேறி, இறுதியில் அதே இடத்தில் இயக்குனராக மாறினார்.

2004 ஆம் ஆண்டு ஹஜ்ரா சமூகத்தைச் சேர்ந்த பல திருநங்கைகள் குறித்து, ‘உணர்வும் உருவமும்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். மேலும் 2010 ஆம் ஆண்டு, தன் சுயசரிதையோடு, மற்ற திருநங்கைகள் குறித்து ‘The Truth about Me: A Hijra Life Story’ என்ற புத்தகத்தை வெளியிட்டார் ரேவதி. இதே புத்தகம் 2011 ஆம் ஆண்டு ‘வெள்ளை மொழி’ என்ற பெயருடன் தமிழில் வெளியானது. இதற்கு பின், 2016 ஆம் ஆண்டு திருநம்பிகள் பற்றிய  ‘A Life in Tran Activism’ என்ற புத்தகம் அவர் எழுதி வெளியானது. 

தினமணி நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘1999- வாக்கில் பெங்களூருவில் செயல்படும் “சங்கமா’ அமைப்பில் அபயம் தேடினேன். அங்கேயே வேலையும் தேடிக் கொண்டேன். என்னுள் நான் கண்ட “ரேவதியை’ செதுக்கியது சங்கமாவில் இருக்கும் நூலகம்தான். ஒழுங்காக வாசிக்கத் தெரியாத… வாசிப்பதில் விருப்பம் இல்லாத ரேவதி நூல்களின் பால் ஈர்க்கப்பட்டாள். பலதரப்பட்ட நூல்களை வாசித்தேன். அப்படி வாசிக்கும் போது வெளிநாட்டு திருநங்கைகள், திருநம்பிகள் அனுபவிக்கும் சித்திரவதைகளை வெளிநாட்டு எழுத்தாளர்கள் விவரித்திருக்கும் நூல்களையும் வாசித்தேன். இந்திய திருநங்கைகள் திருநம்பிகள் படும் பாடு குறித்து இந்திய எழுத்தாளர் எழுதிய நூல் ஒன்றும் கண்ணில் படவில்லை. விசாரித்ததில் அப்படி ஒரு நூல் கூட எழுதப்படவில்லை என்று தெரியவந்தது. “ஏன் நாமே நமது அனுபவத்தை நூலாக எழுதக் கூடாது..’ என்று தோன்ற.. எழுத்தாளர் பாமா தடம் காட்டி தட்டிக் கொடுத்தார். நான் எழுத்தாளினியானேன்’ என்று கூறியுள்ளார் ரேவதி.

அவரின் எழுத்துலக பணியை கௌரவித்து, அவரின் பெயரை நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தின், பட்லர் நூலகத்தில் சேர்க்கப்பட்டது. அவரின் பெயர் மற்ற பிரபல பெண் எழுத்தாளர்கள் Maya Angelou, Toni Morrison உடன் அங்கே சேர்க்கப்பட்டுள்ளது. 

இதுதவிர இவர், பல மாநிலங்கள், பல நாடுகள் பயணித்து, ‘வெள்ளை மொழி’யை அடித்தளமாக வைத்து நாடகங்களும் நடத்தி, நடித்து வருகிறார்.

தற்போது பெங்களூருவை அடிப்படையாக கொண்டு ட்ரான்ஸ்ஜெண்டர் உரிமை ஆர்வலராக செயல்பட்டுவருகிறார்!

 ********************

இப்போது நாம் பார்க்கப்போகிறவரை பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என நினைக்கிறன். சில நாவல்களில் அட்டைப்படமாக பார்த்த ஞாபகம்.

பத்ம ஸ்ரீ விருதுபெற்ற, தேசத்தின் சிறந்த நடன கலைஞர்களில் ஒருவரான நர்த்தகி நடராஜ். பல போராட்டங்களை கடந்து, தடைகளை தகர்த்து… இந்த உயரத்தை அடைந்தவர்.  

பரத நாட்டியத்திற்காக பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது, கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்றவர், சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது தீராத காதல் கொண்டவர்.  

பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து, சில தகவல்கள் இதோ!

மதுரை அனுப்பானடி பகுதியில், வசதியும் அரசியல் செல்வாக்கும் மிகுந்த குடும்பத்தில், அவரது பெற்றோருக்கு ஐந்தாவது பிள்ளையாக பிறந்தவர் நடராஜ். 5-6 வயதிலேயே தான் மற்றவர்களைப் போல அல்ல என்று உணர ஆரம்பித்தார். எதிர்பார்த்தபடியே வீட்டில்  உள்ளவர்களுக்கு இது அதிச்சியை தந்துள்ளது. 

அனுப்பானடியில் உள்ள தியாகராசர் முன்மாதிரி பள்ளியில் படித்து வந்தவர், உடலளவில் மாற்றங்களை சந்திக்க ஆரம்பித்துள்ளார்.

வீட்டிலும் வெளியிலுமாக தங்கியிருந்தபடி, 12ஆம் வகுப்புவரை படித்தவர், அதற்கு பிறகு பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் நடனம் என்ற கலை அவரை முழுமையாக ஆக்கிரமித்தது. 

அவரைப் போலவே உணர்ந்த பாஸ்கரும் (இப்போது சக்தி) நடராஜும் செவ்வியல் நடனத்தை நோக்கி வெகுவாக ஈர்க்கப்பட்டார்கள்.

திரைப்படங்கள்தான் அவரது முதல் நடன குருவாக இருந்தன. அதில் நாயகிகள் ஆடிய நடனங்களை பார்த்தே, நடனத்தையும் அவர்கள் பேசிய வசனங்களைக் கேட்டு மொழியையும் செழுமைப்படுத்திக் கொண்டார் நடராஜ். அதற்குப் பிறகு, கோவில் திருவிழாக்களில் தொடர்ந்து ஆடிவந்தார்.

ஆனால், முறைப்படி நடனம் கற்க வேண்டுமென்ற ஆசைமட்டும் தீரவில்லை. அந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூர் பாணி பரதக்கலையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த பி. கிட்டப்பா பிள்ளையிடம் பரதம் கற்க முடிவுசெய்தார் நடராஜும் அவரது தோழியான பாஸ்கரும்.

பரத நாட்டியத்தில் புகழ்பெற்ற தஞ்சை நால்வரில் ஒருவரான சிவானந்தத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர்தான் கிட்டப்பா பிள்ளை.

17வது வயதில் கிட்டப்பா பிள்ளையிடம் சேர்ந்த நடராஜும் பாஸ்கரும், அதற்கு அடுத்த 15 வருடங்கள் அவருடனேயே இருந்தனர். தொடர்ச்சியாக நட்ராஜுக்கும் பாஸ்கருக்கும் கற்பித்தார் கிட்டப்பா பிள்ளை. நட்ராஜிற்கு நர்த்தகி என்று பெயர் சூட்டியவரும் அவர்தான்.

சாதித்தே ஆக வேண்டுமென்பதுதான் அவரது இலக்காக இருந்தது. “குடும்ப ஆதரவு, சமூக ஆதரவு போன்ற எதுவுமே இல்லை. ஆகவே நடனத்தை வெறித்தனமாகக் காதலிக்க ஆரம்பித்தேன். எதிர்ப்புகள், அவமானங்கள் ஆகியவை தொடரவே செய்தன. ஆனால், வெற்றியடைய வேண்டும் என்ற கொள்கை மட்டுமே என்னை நடத்திச் சென்றது” என நினைவுகூர்கிறார் நர்த்தகி.

எந்தத் தருணத்திலும் நர்த்தகியும் சக்தியும், தாங்கள் திருநங்கைகள் என்பதைச் சொல்லி வாய்ப்புகளைப் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

“ஆகவே பேய் தனமாக உழைத்தோம். கலையை, கஷ்டங்களைக் காதலித்தேன். அடுத்தடுத்த வெற்றிகள் எனக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்தன. எனக்கு வெற்றிகள் மிகத் தாமதமாகக் கிடைத்தன, ஆனால், கிடைத்தன. நான் கடந்த வந்த பாதையைப் பார்த்தால், நான் மிக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறேன். ஆனால், என்னுடைய திறமைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை ஒரு திருநங்கை என்பதால் கிடைத்த அங்கீகாரமாகச் சொல்லும் போக்கு வலிக்கிறது. பத்ம ஸ்ரீ விருது எனக்குத் தரப்பட்டபோதுகூட, அது எனது கலைக்காகத் தரப்பட்டது என சொல்லப்பட்ட நிலையிலும் ஒரு திருநங்கைக்கு பத்ம ஸ்ரீ, ஒரு திருநங்கைக்கு பத்ம ஸ்ரீ என்றுதான் குறிப்பிட்டார்கள்” என்கிறார் நர்த்தகி.

நர்த்தகியின் அனைத்துப் பயணங்களிலும் துணையாக இருக்கிறார் சக்தி. “சக்தி என்னோடு இருப்பது என்பது, தெய்வம் என்னோடு இருப்பதைப் போல. தன்னலமற்றவர். அவரிடம் சிறிது நேரம் பேசினாலும் அந்தப் பேச்சு என்னைப் பற்றித்தான் இருக்கும். ஒரு நாணயத்தின் முன் பக்கம் நான். பின் பக்கம் அவள்,” என்கிறார் நர்த்தகி.

தற்போது தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவின், உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நன்றி!!!

பின் குறிப்பு – இதில் சேர்க்கப்பட்டுள்ள தகவல்கள், புகைப்படங்கள் இணையத்தளத்தில் இருந்தும், பல பத்திரிகைகளில் இருந்தும் எடுக்கப்பட்டது. 

1

2 thoughts on “Article – 2

 • August 27, 2021 at 7:46 pm
  Permalink

  Wow..
  Ivlo struggles laum they succeed..
  Ivangala mariye Ellaroda life um maranum..

  Excellent writeup👏👏👏

  • October 13, 2021 at 7:02 pm
   Permalink

   So true… Thank you so much dear 🙂

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved