என்னுள் நீ வந்தாய் – 21
என்னுள் நீ வந்தாய் – 21
அவளின் முதல் முத்தம். கண்கள் விரித்து அவளைப் பார்த்தான்.
அவனை பார்த்து கலங்கிய கண்களுடன், போலியாக கோபித்துக்கொண்டு “இதுவர ஒருதடவ கவின்னு கூப்பிட்டிருப்ப? எப்போப்பாரு பேபி ஸ்வீட்டி தான்”
“ஹாஹாஹா இப்போ என்ன கவி’ன்னு கூப்பிடணுமா?” அவன் கேட்க… “வேணாம். பேபி’னே கூப்பிடு” ஆசையாகச் சொன்னாள்.
“யாரோ சண்டை, பெட்’லாம் கட்டினாங்க. பேபி’ன்னு கூப்பிடாதன்னு சொல்லிட்டு” அவளை அவன் சீண்ட… “அதான் தோத்துட்டேனே. உங்கிட்ட!” இரட்டை பொருள் கொண்டு பதில் பேசினாள்.
கொஞ்சம் அழுகை நின்றிருக்க… கவிதா, “சரி சொல்லு. எதுக்கு அவ்ளோ அவசரமா நீ துபாய் கிளம்பின? நான் ரொம்ப ஏமாந்து போய்ட்டேன்” கேட்டாள் அவனிடம்.
“தெரியல பேபி. எனக்கு என் மேலயே கோவம். நீ, ‘யு ஆர் ஹர்டிங் மீ’ன்னு சொன்ன பாரேன்… அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு. உன்ன வேற யாராச்சும் ஹர்ட் பண்ணாலே தாங்கமாட்டேன். ஆனா நானே, எதையெதையோ நினைச்சு உன்ன கஷ்ட படுத்திட்டேன்.
என்னோட லவ், பாசம்லாம் உன்மேல திணிக்கற மாதிரி தோணுச்சு. எங்க நான் அங்கேயே இருந்தா உனக்கு இன்னும் கஷ்டம் குடுத்துருவேனோன்னு கிளம்பினேன்.
ஆனா நான்… நீ துபாய் வந்தப்பறம் சென்னை போனேன். லயா சொல்லிருப்பாளே… என்கூட ஏர்போர்ட் வர வந்தா லயா. நான் வீட்டுக்கு போனப்ப நீ வேல விஷயமா ஹைதெராபாத் போயிருக்கன்னு அம்மா சொன்னாங்க. நான் பண்ணின தப்புனால தான் என்கிட்ட சொல்லாம கிளம்பி போய்ட்டயோன்னு நினைச்சேன்.
அப்புறம் உன்ன துபாய்ல அஜய் கூட பார்த்த உடனே, நீ அஜய் கூட தான் வந்திருக்கன்னு நினைச்சேன்” அவன் முடிக்கவில்லை… அவள் முறைத்து…
“நம்ம சண்டை வீட்ல தெரியாது. அப்போ நான் எப்படி துபாய் போறேன்னு சொல்லிட்டு வர முடியும்? அதான் ஹைதெராபாத்’ன்னு சொன்னேன். நீ மட்டும் அவசரப்பட்டு கிளம்பாம இருந்திருந்தா இவ்ளோ நடந்திருக்கவே இருக்காது. இதுல நான் அஜய் கூட வந்தேன்ன்னு வேற நெனப்பு” கோபப்பட்டாலும் அவன் கைவளைவிற்குள்ளேயே இருந்து கோபப்பட்டாள்.
“சரி. சாரி. தப்பு தான். ஆமா அங்க எப்படி அஜய்?” மனதில் தோன்றிய கேள்வியைக் கேட்டான்.
“அவன் ஃப்ரெண்ட் கூட டின்னருக்கு வந்திருந்தான் போல. தற்செயலா மீட் பண்ணேன். நான் இருந்த மனநிலைல அன்னைக்கு அவன்கிட்ட சரியா பேசக்கூட முடியல. ஆனா அதுக்கு முன்னாடி நான் அஜய்ய பாத்தேன். பேசினேன். நீ இங்க கிளம்பி வந்த அன்னைக்கு”
அகிலன் ஆர்வமாக அவளை பார்த்தான். அஜய்யை சந்தித்தபோது நடந்ததையெல்லாம் அவள் சொன்னாள்.
“அவனோட பேசினப்ப தான் ஒரு விஷயம் புரிஞ்சது அகில். அவன் உண்மைய சொல்லியிருந்தா, அவனுக்காக நான் ஆயுசு முழுக்க காத்துட்டு இருந்திருப்பேன். ஆனா, என்னோட நல்லதுக்காகன்னு சொல்லி என் வாழ்க்கைய அவன் டிசைட் பண்ணிருக்கான்… அதுவும் எனக்கு தெரியாம. அவன் உன்கிட்ட பேசினது, உன்ன கல்யாணம் பண்ணிக்க சொன்னது தப்பு அகில்.
நீ நல்லவனா இருக்க போக, என்னை புரிஞ்சுக்கிட்ட. ஒருவேளை, பழசை குத்தி காமிச்சு, காயப்படுத்துற மாதிரி ஆளா இருந்திருந்தா? என்ன ஆகியிருக்கும்? எல்லாம் முடிஞ்சு இப்போ வந்து நான் நல்லா இருக்கேனான்னு கேட்கறான். நல்லா இல்லைனா என்ன பண்ணிருப்பான்?
ஆனா ஒன்னு அகில்… நீ நெனச்சிருந்தா, கல்யாணம் ஆகிடுச்சு, இனி உன்னோட தான் வாழணும்ன்னு என்கிட்ட சொல்லிருக்கலாம். பட், நீ என்னை முடிவெடுக்க சொன்ன… என்னோட உணர்வுகளை மதிச்சு.
இந்த உலகத்துல முக்கால்வாசி ஆண்கள், பெண்களோட முடிவையும் சேர்த்து அவங்க தான் எடுப்பாங்க. ஆனா நீ? பெண்களுக்கும் உணர்வுகள் இருக்கும்ன்னு நினச்சு என்னை டிசைட் பண்ண சொன்ன. அங்க நீ தனியா தெரிஞ்ச” அவன் முகம் பார்த்து புன்னகைத்தாள். அவனும் புன்னகைத்தான்.
“இருந்தாலும் அவன் பாவம் அகில். அவன் நிலைமை அவனை அந்த முடிவை எடுக்க வச்சுருக்கு. அவன் இன்னமும் பழசை நினைச்சுட்டு இருக்கான். அவன்கிட்ட பேசினப்பறம் எனக்கு கொஞ்சம் கில்ட்டி’யா கூட இருந்துச்சு. நான் சந்தோஷமா இருக்கேன். ஆனா அவன்? அவன் எல்லாத்தையும் மறக்கணும் அகில்” இப்போது மறுபடியும் அவள் கண்கள் லேசாகக் கலங்கியது.
அவளை இறுக்கமாகக் அணைத்துக்கொண்டு, “கண்டிப்பா பேபி! அஜய் சந்தோஷமா இருப்பாரு. நீ பார்க்க தான் போற. கடவுள் எல்லாருக்கும் எப்பவும் கஷ்டத்தை மட்டும் குடுக்க மாட்டாரு. சந்தோஷமான பாதையையும் காட்டுவார். அஜய் லைஃப் நல்லா இருக்கும் பாரு” அவன் சமாதானம் சொன்னாலும் அவள் மனநிலை கொஞ்சம் கனமாக இருந்தது.
“ஹ்ம்ம்…. கடவுள் மேல எனக்கு ரொம்பல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை அகில். ஏதோ கும்பிடுவேன் அவ்ளோ தான். கைலாசநாதர் கோவிலுக்கு போனாலும் எப்பவாச்சும் தான் சாமி கும்பிடுவேன். அவர் மேல கோவம் எனக்கு… என் அம்மாவை அவர் கூப்பிட்டுக்கிட்டாருன்னு.
அம்மா போனதுக்கப்பறம், சித்தி சித்தப்பா பார்த்துக்கறேன்ன்னு சொன்னாங்களாம். ஆனா அப்பாக்கு யாரும் உதவி பண்ணா பிடிக்காதுன்னு என்னை ஹாஸ்டல்ல சேர்த்துட்டாரு. அப்பாமேல கோவம்… கடவுள் மேல கூட கோவம்…. எதுக்காக அப்பா மனச கடவுள் மாத்தலன்னு. அப்போ சின்ன பொண்ணு இல்லையா… கிட்டத்தட்ட பத்து வயசு. கடவுள்னால எல்லாம் முடியும் ஆனா எனக்கு மட்டும் அவர் எதுவுமே செய்யலன்னு கோவம் அவர்மேல.
ஹாஸ்டல்ல இருக்கப்ப, மாசம் ரெண்டு தடவ பேரன்ட்ஸ் வந்து பசங்கள பார்க்கலாம். நிறைய பசங்களோட அம்மா அப்பாலாம் வருவாங்க. ஆனா என்னை பார்க்க யாரும் வரமாட்டாங்க. அப்பா ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ தான் வருவாரு. வந்தாலும் ஒரு மணி நேரம் தான் இருப்பாரு.
என்ன வேணும்ன்னு கேட்டு கேட்டு வாங்கிக்கொடுப்பாரு. எனக்கு கோவம் வரும்… கத்தணும்ன்னு இருக்கும். ‘எனக்கு இந்த உயிரில்லாத பொருள் எல்லாம் வேணாம். அம்மா தான் இல்ல. உயிரோட இருக்குற உங்ககூட இருக்கணும். தம்பிகூட இருக்கணும். எல்லார போல நானும் வீட்ல இருக்கணும்ன்னு’. ஆனா எதுவுமே சொல்லமாட்டேன்.
அவர் போனதுக்கப்புறம் ரூம்ல வந்து எவ்ளோ அழுத்துருக்கேன் தெரியுமா… சில பசங்க வீட்டு சாப்பாடுன்னு சாப்பிடுவாங்க… எனக்கு குடுப்பாங்க. அத ஆசையா சாப்பிடுவேன். சாப்டுட்டு அழுவேன். ‘ஏன் அம்மா என்னை விட்டுட்டு போனாங்க? அம்மா தான் போய்ட்டாங்க. அப்பா இருந்தும் இல்லாம போய்ட்டாரு’ன்னு”
அவள் இதை அகிலனிடம் சொல்லும்போது அவள் உடலின் நடுக்கத்தை அவனால் உணர முடிந்தது. அவளை உச்சி நுகர்ந்து, உச்சியில் முத்தமிட்டான். அந்த அரவணைப்பால் அவனுள் இன்னமும் ஒடுங்கிக்கொண்டு மீண்டும் தொடர்ந்தாள். மேலும் தன் மனம் திறந்தாள்.
“அப்பாக்கு எங்க மேல ரொம்ப அக்கறை அதிகம். எங்களுக்கு எல்லாம் நல்லதா கிடைக்கணும்னு நினச்சாரு. ஆனா எங்களுக்கு அந்த வயசுல அவரோட பாசமும் தேவைன்னு புரியல போல. அந்த சமயத்துல ஆரம்பமான கோபம் தான், எல்லாத்துக்கும் கோபப்படுவேன். கோபம் வந்ததாலோ என்னவோ அழுகையெல்லாம் சுத்தமா போய்டுச்சு. ‘எல்லாத்தையும் நானே தான் ஃபேஸ் (face) பண்ணனும். எனக்கு வேற யாருமில்ல’ன்னு இருந்துட்டேன். எனக்கு அது தைரியத்தை கொடுத்துச்சு. ஒன்னு வேணாம்னா அது எப்பவுமே வேணாம் அப்படினு கேர் ஃபிரீயா இருந்தேன்.
தனியாவே இருந்து பழகிட்ட எனக்கு பெரிய வடிகாலா அஜய் வந்தான். லைஃப் ரொம்ப கலர்ஃபுல்லா இருந்துச்சு. எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா இருந்தேன். ஊருக்கு போகக்கூட மாட்டேன்… போனா சோகமாயிடுவேன்னு.
என்னை பத்தி எல்லாமே தெரிஞ்ச அஜய்… எனக்காக அவன் மட்டும் தாம் இருக்கான்னு தெரிஞ்ச அஜய்… என்ன காரணம்ன்னு சொல்லாம என்னை நிர்கதியா விட்டது, அவ்ளோ வலி தந்துச்சு.
பலவருஷமா அழுகாத நான் அவனால திரும்பவும் அழுதேன். என்னை அழவெச்சுட்டானேன்னு கோவம். என்னை ஏமாத்திட்டானேன்னு கோவம். எனக்குன்னு இருந்த ஒருத்தன் போய்ட்டான்னு கோவம். எனக்குன்னு இனி யாரும் இல்லங்ற கோவம். இதெல்லாம் சேர்ந்து அவன ரொம்ப வெறுத்தேன்.
ஆனா அவனோட நினைவுகளை மறக்கவே முடியல. அது அழுகையை தான் தந்துச்சு. என்னை பத்தி எல்லாம் தெரிஞ்ச அஜய் என்னை விட்டுட்டான்… என்னை பத்தி ஒன்னுமே தெரியாத நீ, எனக்காக ஒன்னொன்னும் பார்த்து பார்த்து செஞ்ச. மொதல்ல கோவம் வந்துச்சு… நீ எதுக்கு இதெல்லாம் பண்ணனும்னு. ஆனா எந்த பிரதிபலனும் இல்லாம நீ பண்றன்னு புரிஞ்சுக்கிட்டேன். நான் முழுசா உன்ன உணர்ந்துக்கிட்ட தருணம்… எது தெரியுமா…” என சொல்லி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
அவள் வலிகளைக் கேட்டு அவன் மனம் துடித்தாலும், அதை அவளிடம் காட்டி இன்னமும் வருத்தப்பட வைக்கவேண்டாம் என நினைத்து புன்னகைத்துக்கொண்டே அவளைப் பார்த்தான்.
“PMS ‘னால உடம்பெல்லாம் வலிக்குதுன்னு நான் சொன்னவுடனே துளியும் யோசிக்காம, நான் செஞ்சதெல்லாம் நெனச்சு பார்க்காம, எனக்கு நீ குடுத்த அந்த வலி நிவாரணம். உடல் வலிக்கு மட்டுமில்ல அகில்… என் மனசோட வலிக்கும் சேர்த்து அது மருந்தா இருந்துச்சு. புருஷன பிடிக்காத மனைவிக்கு எந்த புருஷன் அத செய்வான்னு சொல்லு?” அவன் முகத்தைக் கலங்கிய கண்களுடன் பார்த்தாள்.
“நீ கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னியே… கடவுள் கஷ்டத்தை மட்டும் குடுக்க மாட்டாரு… சந்தோஷமான பாதையும் காட்டுவாருன்னு. அதிகமா சந்தோஷத்தை பார்க்காத, நிறைய ஏமாற்றங்கள பார்த்த எனக்கு, கடவுள் காட்டின பாதை நீதான்னு இப்போ புரியுது. கடவுள் இருக்காரு.
என்னைவிட்டு எல்லாரும் போன மாதிரி நீயும் போயிடாத அகில். நான் சண்டை போடுவேன். கோவ படுவேன். என்னடா வாழ்க்கைன்னு கூட சிலசமயம் நினைக்க வைப்பேன். ஆனா நீயும் என்னை விட்டுட்டு போய்ட்டா, அந்த வேதனை என்னால தாங்க முடியாது அகில்” உதடுகள் துடிக்க, அவள் கைவளைவிற்குள் இருந்தவள் அவனைக் கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.
அழுதால் மனபாரம் குறையும் என நினைத்து அவள் முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுத்தான். அவள் விசும்பல் நின்றபாடில்லை. அவன் கண்களிலும் கண்ணீர் தேங்கியது.
அவளை மீட்டெடுக்க… “பேபி! ஒரு தடவ உன்ன தனியா விட்டுட்டேன்… தப்பு தான். ஆனா இனி என் ஆயுசு இருக்க வரைக்கும்… இல்ல உன் ஆயுசு இருக்க வரைக்கும்… நான் உன்னைவிட்டு எப்பவும் போகமாட்டேன். நீயே போடானு சொன்னாலும்… முடியாதுன்னு உன்கூடவே இருந்து உன்ன படுத்தி எடுக்கப்போறேன்” ஆறுதலாகப் பேச ஆரம்பித்துக் குறும்புடன் முடிக்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள் கண்ணீர் கலந்த புன்னகையுடன்.
‘இது போதும் எனக்கு’ என்பதுபோல மறுபடியும் கைமேல் தலைசாய்த்து… “அப்போ அஜய் மேல கோவம் இருந்துச்சு அகில். ஆனா இப்போ நினச்சா கஷ்டமா இருக்கு. அவனுக்குன்னு ஒரு லைஃப் அமையனும். நான் கடவுள்ட்ட வேண்டிப்பேன். எனக்கு அகில் கிடைச்ச மாதிரி அவனுக்கு ஒரு நல்ல பொண்ண… அவனை புரிஞ்சுக்கற பொண்ண காட்டுன்னு”
அவனும் ஆமோதித்தான். அவள் மனநிலை கொஞ்சம் மாறி இருந்ததது.
மறுபடியும் அவனிடம், “என்னை ஏன் உனக்கு பிடிக்கும் அகில்? நீ யாரையுமே லவ் பண்ணலயா? நான் அப்படியென்ன ஸ்பெஷல் உனக்கு” அவன் முகத்தை ஆசையாகப் பார்த்துக்கொண்டு கேட்டாள்.
அவனும் புன்னகையுடன், “யாரு சொன்னா நான் லவ் பண்ணலன்னு? நானும் லவ் பண்ணேன்” என்றவுடன், கண்கள் விரிந்து அவனைப் பார்த்தவள், “வாட்? ப்ரியா நீ அதெல்லாம் பண்ணலன்னு சொன்னா… சரி சரி சொல்லேன். உன்ன மிஸ் பண்ண அந்த அன்லக்கி யாருன்னு” ஆர்வமாகக் கேட்டாள்.
“ஹ்ம்ம் அவ அன்லக்கி தான் பாவம்” என்றவன்… மர்மப்புன்னகையுடன் ஆரம்பித்தான்.
“அவளை நான் ஒரு கல்யாணத்துல பார்த்தேன். புயல் மாதிரி மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்ட சண்டை போட்டா… அவங்க கல்யாணத்தப்ப டௌரி கேட்டாங்கன்னு. ஆனா அது அவ கல்யாணமில்ல., அவ சொந்தக்காரங்க கல்யாணம்” என சொல்லிவிட்டு குறும்பாக அவளை பார்த்தான்.
புன்னகையுடன் அவள் புருவங்கள் சுருங்கியது. அவன் தொடர்ந்தான்.
“அவ்ளோ கோவக்காரி… மூக்கு மேல கோவம். அப்புறம், அவளை ஒருத்தன் இடிச்சுட்டான்னு அவன வச்சு செஞ்சா பாரேன். பாஹ்! அவனுக்கு விழுந்த அறை எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கு” என்றவன் அவள் அறைந்த கையை எடுத்து உள்ளங்கையில் முத்தமிட்டான்.
இப்போது கண்ணீர் கோர்த்தது அவள் கண்களில். ஆனால் புன்னகையும் தவழ்ந்தது.
அவள் கையை விடாமல் கன்னத்தோடு வைத்துக்கொண்டு, “இடிச்சவன் அம்மாகிட்ட பேசின ஒன்னொன்னும் நெத்தியடி! ஆச்சர்யமா இருந்தது எனக்கு. எவ்ளோ தெளிவா பேசினா தெரியுமா… அவளோட அழக அந்த தைரியத்துல பார்த்தேன்” இப்போது பற்கள் காட்டி புன்னகைத்தாள்.
“அப்புறம் நைட் ஒரு அட்டகாசம் பண்ணா பாரேன்… சமையல்காரர் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாரு” இப்போது அவளுக்குப் புரிந்தது… அவளுக்கு நடு இரவு பசிக்கும், இனிப்பு பிடிக்கும் என்று அவனுக்கு எப்படித் தெரிந்தது என்று.
முறைத்துக்கொண்டே புன்னகையுடன் அவனைப் பார்த்தாள்.
“அவ்ளோ சுட்டித்தனமா இருந்த முகம், சட்டுனு அம்மான்னு சொன்னவுடனே மாறுச்சு. அவ வலி என்னை என்னமோ பண்ணுச்சு பேபி” இப்போது அவன் குரல் கரகரத்தது.
“அவ கஷ்டப்படறத என்னால பார்க்க முடியல… ஏதோ ஒரு பாரம் மனசுக்குள்ள. கல்யாண பொண்ணு மூலமா அவளை பத்தி தெரிஞ்சுட்டேன். அவளை பொண்ணு பார்க்க வராங்கன்னு சொன்னாங்க. ஏதோ என்னை விட்டுட்டு போனமாதிரி இருந்துச்சுடா” அவன் கண்கள் கலங்கியது.
அவன் கன்னத்தில் இருந்த அவள் கை விரல்களால் அவனை மெல்ல வருடினாள். அவள் கண்களும் கலங்கியது.
“அப்புறம் அந்த சம்பந்தம் சரிவரலன்னு தெரிஞ்சவுடனே அம்மா அப்பாட்ட சொல்லி… அவ வீட்டுக்கு பொண்ணு பார்க்க போனேன். அவளுக்கு என்னை கல்யாணம் பண்ண பிடிக்கலன்னு சொல்லிட்டா. இருந்தும் நான் ப்ரொசீட் பண்ணேன்… கண்டிப்பா futureல அவளுக்கு என்னை பிடிக்கும்ன்னு நம்பினேன்.
கொஞ்ச நாள் கழிச்சு அவ வேற ஒருத்தர லவ் பண்றேன்னு சொன்னா பாரேன்… ப்ச். மனசுக்குள்ள அவ்ளோ வலி. அதைவிட அவ அழுததை என்னால தாங்கிக்க முடியல… அவ சந்தோஷமா இருக்கணும்னு நினச்சேன்.
ஆனா அவ வாழ்க்கைல என்னனெமோ நடந்துருச்சு டா. எங்களுக்குள்ள கல்யாணமும் முடிஞ்சுருச்சு. அப்போ முடிவு பண்ணேன்… என் கூட இருக்கறவரைக்கும் அவளை சந்தோஷமா… கண்ல கண்ணீர் வராம, பழசை நினைக்கவிடாம பார்த்துக்கணும்னு நினைச்சேன். ஆனா என்னாலேயே அவ ரொம்ப கஷ்ட…” அவன் சொல்லிமுடிக்கும்முன், கலங்கிய கண்களுடன் மறுப்பாகத் தலையசைத்து, அவனைப் பேசவிடாமல் கைக்கொண்டு வாயை மறித்தாள்.
“அவ உன்ன நினைச்சு சிந்தனை கண்ணீர் எல்லாம் சந்தோஷத்துல வந்தது. அவ ரொம்ப லக்கி அகில். உன்னைவிட அவளை வேற யாராலும் சந்தோஷமா வச்சுக்க முடியாது. அவளோட உயிர் நாடி இப்போ நீதான்” என்றதும் அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான். இப்போது அவள் அவனை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தாள்.
சில மணித்துளிகள் கடந்தது… அப்போதுதான் இருவரும் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை உணர்ந்தனர்.
அவன் அதை உணர்ந்த சமயம், ஆசையுடன் அவளைப்பார்த்து… அழைத்த ‘பேபி’ என்ற வார்த்தையே பல அர்த்தங்களைக் காட்டியது அவளுக்கு. கொஞ்சம் வெட்கமும் எட்டிப்பார்த்தது.
“அகி…” அவள் அழைக்க… அவன் முற்றிலுமாக விழுந்தான்.
அவளையே ஆர்வமாகப் பார்க்க… “நம்மளோட அன்யோன்யமான வாழ்க்கை, நம்ம ரூம்… நம்ம கட்டில்… நம்ம பால்கனி… நம்ம விண்டோ சீட்டர்… அங்கதான் ஆரம்பிக்கணும்ன்னு பல கற்பனைகள் செஞ்சுவச்சுருக்கேன்…” அவள் விருப்பத்தைச் சொன்னாள்.
‘நம்ம…’ என்ற வார்த்தைக்கு அவள் கொடுத்த அழுத்தம்… அதையும் தாண்டி கற்பனை செய்யும் அளவிற்கு தன்னை நினைத்துள்ளாள் என்று புரிந்தபோது, கொஞ்சம் ஏமாற்றம் கூட பறந்துபோனது.
திரும்பவும் இருவரும் பேச ஆரம்பித்தனர்…
அவன் அவனுடைய சொந்தக்காரப்பெண் ப்ரேமா பேசியது… அவளுக்கு தன் அம்மா விஷயத்தையெல்லாம் சொன்னது… அம்மாவுக்கும் அப்பாவிற்கும் கவிதாவின் கடந்தகாலம் தெரியும் என்பதையும் பகிர்ந்துகொண்டான்.
“அப்பா எப்பவுமே சொல்வாரு பேபி… கவிதாவுக்கு கல்யாணம் வேணா பிடிக்காம பண்ணிருக்கலாம், ஆனா எங்ககிட்ட ஒரு தடவ கூட முகம் சுழிச்சதில்ல. அம்மா எவ்ளோ பேசினாலும் அமைதியா ஒரு சின்ன ஸ்மைல்’லோட இருந்துப்பா. இந்த காலத்துலயும் இப்படி ஒரு அனுசரணையான பொண்ணு. அவ கோவத்தை உன்கிட்ட காட்டறான்னா, அது உன்மேல அவளுக்கு இருக்க உரிமைன்னு சொல்வாரு ஸ்வீட்டி” இதை சொல்லும்போது அவன் கண்களில் பெருமிதம்.
அவள் புன்னகைத்துக்கொண்டே, “எனக்கு தெரியும் அவங்க ரெண்டு பேருக்கும் விஷயம் தெரியும்ன்னு அகில்.
நான் வந்த கொஞ்ச நாள்லயே புரிஞ்சிக்கிட்டேன்… மாமா போல தான் நீன்னு. அத்தை பேசிகலி நல்ல டைப். ஒரு அம்மாவா பையன நல்லா வளர்த்துருக்காங்க. எனக்கு நீ எவ்ளோ டைம் சமைச்சுபோட்டுருக்க… பட் ஒரு தடவ கூட ஏன்டா இதெல்லாம் அவளுக்கு செய்றன்னு சொன்னது கிடையாது.
நான் வேலைக்கு போறதைக்கூட ஏன் வேண்டாம்ன்னு சொல்லிருப்பாங்கன்னா… நான் வீட்ல இருந்தா, அவங்களோட… உன்னோட இன்னமும் ஒரு இணக்கம் வரும்ன்னு நினச்சுருப்பாங்க. நான் முடியாதுன்னு சொன்னவுடனே எனக்கிட்ட மனவருத்தம். அதனோட வெளிப்பாடுதான் ஏன் இப்படி டிரஸ் பண்ற… ஏன் அப்படி இருக்கன்னு சொல்றதெல்லாம்.
அவங்க பையன் வாழ்க்கை என்னால பாழாகிப்போய்டுச்சுன்னு நினைக்கறாங்க. அந்த வருத்தம் அவங்களுக்கு போகணும். எப்படி போக்கறது?” அவனைப் பார்த்து சிந்தித்திக்கொண்டே கேட்டாள்.
யோசிப்பதுபோல யோசித்தவன், “இதேபோல அவங்க முன்னாடி ரெண்டு மூணு வாட்டி கட்டிபிடிச்சோம்ன்னா போதும் பேபி. அவங்களே புரிஞ்சுப்பாங்க!” இன்னமும் இறுக்கமாக அணைத்துக்கொண்டு குறும்பாகச் சிரித்தான்.
அவனைப் பார்த்து முறைத்தவள், அவனை அடிக்க, அவள் கையைப் பற்றி தன் கையுடன் கோர்த்து, சின்னச் சின்ன முத்தங்கள் பதிக்க… அவள் உடல் சிலிர்த்தது.
இருந்தாலும்… அவள் இழுக்க முற்பட, மறுபடியும் கெஞ்சலாகப் பார்த்தான். அவளோ கண்களால் அதை மறுத்தாள்.
வாயாடும் இதழ்கள் மௌனமொழி பேச,
மௌனமான விழிகள் வாய்மொழி பேசியது…