என்னுள் நீ வந்தாய்-1A
என்னுள் நீ வந்தாய் – 1A
“இந்த ஸ்டேடஸ் கால் எவன் கண்டு பிடுச்சானோ… அவன் என் கைல கெடச்சான்… செத்தான் மவனே” அதிகாலை எட்டுமணிக்கு (அட ஆமாங்க எட்டுமணி அதிகாலைதான் இவங்களுக்கு) பொரிந்துகொண்டிருந்தாள் லயா.
படுக்கையில் இருந்து எழ மனமில்லாமல், வேறு வழியுமில்லாமல், படுத்துக்கொண்டே conference நம்பர்க்கு டயல் செய்தவள் “திஸ் இஸ் லயா” என்றாள் பல் கூடத் தேய்க்காமல்.
நம்ம மைண்ட் வாய்ஸ் கேட்டிருக்குமோ அவளுக்கு…?
“நான் பல் விளக்கினேனா இல்லையாங்கிறதுக்காக இந்த ஸ்டேட்டஸ் கால் இல்ல. நான் செஞ்ச வேலைய விளக்கத்தான். கடுப்படிக்கறாங்க காலைலயே இந்த கால வெச்சு” என்று பதில் சொன்னாள், அந்தப்பக்கம் காலில் விஜய் கேட்ட “பல் தேச்சயா இல்ல அப்படியே எந்துருச்சு கால் ஜாயின் பண்றயா” என்ற கேள்விக்கு.
விஜய்யும் லயாவும் ஹைதராபாதில் ஒன்றாக வேலை செய்துக்கொண்டிருந்தனர். துபாய் செல்ல ஒரு வாய்ப்புக் கிடைக்க, விஜய் செல்ல முடியாத காரணத்தால் லயா ஒப்புக்கொண்டு துபாய் வந்திருந்தாள்.
“ஆமா நீ வேல மட்டும் அப்படியே செஞ்சு கிழிச்சிட்ட” என்று விஜய் மறுபடியும் அவளை வாற “டேய் டுபுக்கு. தூரத்துல இருக்கன்னு திமிரா? வேற யாராவது call’ல இருக்கப் போறாங்கடா” என சிடுசிடுத்தாள்.
“பயந்துட்டயா. வேற யாரும் இன்னும் வரல. வந்தாலும் அப்படியே இவங்களுக்கு தமிழ் புருஞ்சுட்டாலும்” என்றவன்
“அப்புறம் உன் ஆளு எப்படி இருக்கான். உனக்கு ஓகே சொல்லிட்டானா” அவன் ஆவலுடன் கேட்க
“ஆமா சொல்லிட்டாலும்… நான் என்னச்சொன்னேன். அவனைப் பாத்தா எங்கடா லவ்வ சொல்லமுடியுது. அவன் பேசறதை மட்டுமே கேட்டுட்டு இருக்கணும்ன்னு இருக்கு. அவனை அப்படியே…” என்று பேசிக்கொண்டிருந்தவள் ஒரு பீப், அதனின் தொடர்ச்சியாக
“ஹலோ folks. பிரகாஷ் ஹியர்” என்று conference அழைப்பில் மற்றொருவர் இணைய, வாயை அப்படியே மூடிக்கொண்டாள்.
அவளுடைய டீமில் ஒவ்வொருவராக இணைய, முந்தைய தினம் செய்த வேலை மற்றும் அன்றைய தினம் செய்யவேண்டிய வேலைகளைப் பற்றிப் பேசிமுடிக்கும்போது,
அவளின் டீம் மேனேஜர் பிரகாஷ் “லயா, துபாய் டீம்’முக்கு ஒருத்தர தேர்ந்தெடுத்துருக்கோம். டூ டேஸ் பேக் தான் முடிவாச்சு. ஷி இஸ் கவிதாயினி”
“இன்னிக்கி மதியம் துபாய் வந்துடுவாங்க. ஷி வில் பி யுவர் லீட் அன்ட் அவங்க உங்ககூட சர்வீஸ் அபார்ட்மெண்ட் ஷேர் பண்ணிப்பாங்க. குக் தாமஸ் கிட்ட சொல்லிடு அவங்க வருவாங்கன்னு”
“அப்புறம் உன் ஆஃபீஸ் மொபைல் நம்பர் குடுத்துருக்கேன். ஷி வில் கால் யு. அவங்க ஆபீஸ் வந்தப்பறம் வி கேன் ஹவ் எ கால்” என சொல்ல…
“ஓகே பிரகாஷ்” என்று அவளின் பதிலைச் சொன்னவுடன், அனைவரும் போன் வைக்க லயா வாயை மூடாமல் அதிர்ச்சியில் இருந்தாள்.
சில வினாடிகள் கழித்து அவளுக்கு அழைப்பு வர, அதை எடுத்தவள் “என்னடா விஜய் எனக்கு வந்த சோதன? இப்போ எதுக்கு லீட் இங்க? ஐயோ அதுவும் என்கூடவே தங்கி” என புலம்ப மறுபக்கம் இருந்தவன் விழுந்து விழுந்து சிரித்தான்.
“வாய மூடு. நான் ஆஃபீஸ் கிளம்பறேன்” என்றாள் எரிச்சலுடன்.
“சரி சரி கோவப்படாத. எனக்கே இன்னிக்கி தான் தெரியும் இந்த நியூஸ். கொஞ்சம் கவனமா இருடி” என விஜய் சொல்ல “ஹ்ம்ம் சரி நான் கிளம்பறேன். இன்னும் என்னல்லாம் என் வாழ்க்கைல நடக்கபோகுதோ” என்றாள் பெருமூச்சுடன்.
பதிலுக்குச் சிரித்தவன் “சரி கிளம்பு கிளம்பு” என்று போனை வைக்கச் சீக்கரம் தயாரானாள் அலுவலகத்திற்கு….
**************
“என்கிட்ட நீங்க ஏதோ கொஞ்சம் தனியா பேசணும்னு சொன்னீங்களாம். ஆனா அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”
“எங்க அப்பா அம்மா சொல்லிருப்பாங்க நான் நல்ல பொண்ணு அடக்கமான பொண்ணுனு” … என்றவாறு மௌன ராகம் படம் ஐ-பேடின் திரையில் ஓடிக்கொண்டிருக்க,
கண்கள் மின்ன, இதழ்கள் விரிந்து, புன்னகையுடன் தன்னையே ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டாள் கவிதா பக்கத்தில் இருந்த பயணியின் விசித்திரப்பார்வையைத் துளியும் கண்டுகொள்ளாமல்…
இது முதல் முறையல்ல, பலமுறை தன்னையே படமெடுத்துக்கொள்வாள் இந்தத் திரைப்படம் பார்க்கும்போது…
முகம் இன்னமும் மலர்ந்திருக்க, திரையில் படம் ஓடிக்கொண்டுமட்டுமே இருந்தது. அவளின் மனமோ, கடந்த காலத்தை அசைப்போட்டது…
——–அன்று———-
“எங்க வீட்ல சொன்ன அளவுக்கு நல்ல பொண்ணெல்லாம் கிடையாது. எனக்கு இந்தக் கல்யாணத்துல இன்டெரெஸ்ட் இல்ல. நீங்க என்ன பிடிக்கலனு சொல்லிடுங்க”
அலட்டிக்கொள்ளாமல் கவிதா சொல்ல, அதற்கு எதிரிலிருந்தவனிடம் இருந்து வந்த பதிலோ…
“நேத்து நைட் கே டிவில மௌன ராகம் மூவி பாத்தீங்களா. நானும் கொஞ்ச நேரம் பாத்தேன்”
புன்னகையுடன் சொன்னவனை முறைத்தவள் “சாரி இந்த ஜோக்குக்கு இப்போ எனக்கு சிரிப்பு வரல. வரப்ப கண்டிப்பா சிரிக்கிறேன்” என்றாள் கடுப்புடன்.
இன்னமும் சிரித்தமுகத்துடன், அவன் “அப்படி சிரிக்கறப்ப கண்டிப்பா என் ஞாபகம் வரும். அத போட்டோ எடுத்து அனுப்புங்க. இந்தாங்க என் கார்டு. அதுல என் நம்பர் இருக்கு. சிரிச்சா எப்படி இருப்பீங்கனு பாக்கணும்” என்றான்.
———இன்று———
கவிதா அப்போதிருந்த மனநிலையில் அவளால் சிரிக்கமுடியவில்லை. ஆனால் இப்போது அதை நினைக்கும்போது சிரிப்பையும் அந்தச் சிரிப்புக்கு காரணமானவனயும் தவிர ஒன்றையும் சிந்திக்க முடியவில்லை …
‘நீ தந்த நினைவுகள் என்கிற துடுப்பு இருக்கும்வரை, இந்தப் பிரிவையும் கடந்து உன் கரம் சேர்வாள்… உன் இனியவள்!’
Nice start
Thanks much sister 😊