என்னுள் நீ வந்தாய் – 1B

என்னுள் நீ வந்தாய் – 1B

கவிதா என்கிற கவிதாயினி ஸ்வாமிநாதன்…. தற்போது துபாய்க்குப் பயணம், அலுவலக வேலையாக… அவள் நினைவுகள் முழுவதும் அவளை அப்படியே பின்னோக்கி தூக்கி சென்றன…

———அன்று———

அந்த அழகிய காலை பொழுது. காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் மிக அருகில், இரண்டு தளங்கள் கொண்ட அந்தப் பழங்கால வீடு.

“வாங்க வாங்க” என ஸ்வாமிநாதன் வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்றார்.

அனைவரும் உட்கார, அவரும் அங்கிருந்த சேரில் உட்கார்தார். அவர் பக்கத்தில் அவரின் தம்பி.

“இது என் தம்பி விஸ்வநாதன்… சொல்லிருப்பாங்களே” என்று வந்திருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினார் ஸ்வாமிநாதன்.

வந்திருந்தவர்கள் புன்னகைக்க, சமையலறையில் இருந்து வெளியே வந்த பெண்மணியை ஸ்வாமிநாதன் “இவங்க என்னோட தம்பி மனைவி மங்களம்” என்று அறிமுகப்படுத்த, அந்தப் பெண்மணி வந்தவர்களைப் பார்த்து புன்னகைத்தார்.

“நான் கவர்மென்ட் காலேஜ்’ல தமிழ் ப்ரொஃபஸரா வேல பாக்கறேன். என் பசங்கள அம்மா இல்லனா கூட, பொறுப்பா வளத்து நல்லா படிக்க வெச்சுட்டேன். பொண்ணு இப்போ சென்னைல, நல்ல வேலைல கை நிறைய சம்பாதிக்கறா”

“பையன் காலேஜ் படிச்சு முடிக்கப் போறான்” என்று குடும்பத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்தார் ஸ்வாமிநாதன்.

விருந்தாளியாக வந்திருந்தவர் “எங்க வீட்ல என் பையன் பிஸ்னஸ் பண்றான். சின்னப் பொண்ணு இப்போ காலேஜ் படிக்கறா. நான் ஸ்டேட் பேங்க்ல வேல பாத்தேன். என் மனைவி எங்க வீட்டு எஜமானி. எல்லாப் பொறுப்பும் அவங்க கைலதான்” என்று மனைவியைப் பார்த்துச் சொல்ல…

“இதுதான் பையன் நேர்ல வந்து பாக்கற மொத பொண்ணு. இத்தன நாளா கல்யாணத்துக்கு பிடிப்பு குடுக்காம இருந்தான்” என்றார் லஷ்மி மகனைப் பார்த்து.

“என் பொண்ணுக்கு இதுக்கு முன்னாடி சில இடம் பாத்தோம். ஏனோ எதுவும் சரிவரல” என்றவர் “பேசிட்டே இருக்கோமே. மொதல்ல காபி குடிங்க” என்றவர் திரும்பி தம்பி மனைவியிடம்…

“அம்மா. நீ பொண்ண காபி எடுத்து வர சொல்லு” என்றார் ஸ்வாமிநாதன்.

ட்ரேயில் காபி எடுத்துக்கொண்டு வந்தாள் அன்றைய நாயகி. அவளை மறுபடியும் பார்த்த அன்றைய நாயகன் முகம் பிரகாசமானது. ‘மறுபடியும்’ என்றால் முன்பே பார்த்திருப்பானோ அவளை? போகப் போகப் பார்ப்போம்.

ஆனால் அன்றைய நாயகியோ, எந்த ஒரு உணர்வையும் வெளிக்காட்டவில்லை.

காபி கொடுத்துவிட்டு அப்பாவின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள். அங்கு உள்ளவர்களைப் பார்க்காமல் விரல் நகங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்துக்கொண்டிருந்த நாயகன், காபி கப்பை டேபில் மேல் வைத்துவிட்டு, பேசிய முதல் வசனம் “நான் பொண்ணுகிட்ட பேசலாமா?” என்பதுதான்.

இருவரையும் அங்கிருந்த ஒரு அறைக்கு அனுப்பிவைத்தனர்.

அவள் சென்று ஜன்னல் அருகே நின்றுகொண்டு வெளியே பார்த்துக்கொண்டிருக்க… அவன் அங்கிருந்த கட்டிலில் உட்கார்ந்தான் கைகளை ஊன்றிக்கொண்டு.

“இங்க பாருங்க மிஸ்டர்…” அவன் பெயர் தெரியாமல், அவனைப் பார்க்க “ஐம் அகிலன் இல்ல அகில்… எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம் மிஸ் கவிதாயினி. ஏன் நிக்கறீங்க? உக்காந்து பேசலாமே” என்றான்.

‘நீ சொல்லி நான் கேட்கவேண்டுமா?’ என்பதுபோல் கைகளைக்கட்டிக்கொண்டு “இட்ஸ் ஓகே மிஸ்டர் அகிலன். எங்க வீட்ல சொன்ன அளவுக்கு நான் நல்ல பொண்ணெல்லாம் கிடையாது. எனக்கு இந்தக் கல்யாணத்துல இன்டெரெஸ்ட் இல்ல. நீங்க என்ன பிடிக்கலனு சொல்லிடுங்க”

அவள் சொன்னதைக்கேட்டு சற்று அதிர்ந்தவன், அதைக் காட்டிக்கொள்ளாமல், புன்னகையுடன் “நேத்து நைட் கே டிவி’ல மௌன ராகம் மூவி பாத்தீங்களா? நானும் கொஞ்ச நேரம் பாத்தேன்”.

அதைக்கேட்டு கடுப்பானவள் “சாரி இந்த ஜோக்குக்கு இப்போ எனக்குச் சிரிப்பு வரல. வரப்ப கண்டிப்பா சிரிக்கிறேன்” என சொல்ல…

“அப்படி சிரிக்கறப்ப கண்டிப்பா என் ஞாபகம் வரும். அத போட்டோ எடுத்து அனுப்புங்க. இந்தாங்க என் கார்டு… அதுல என் நம்பர் இருக்கு. சிரிச்சா எப்படி இருப்பீங்கனு பாக்கணும்,” என்றவன் கார்டை நீட்ட, அவள் அதை வாங்காமல் நிற்க, அதைக் கட்டில் மேல் வைத்தான்.

“இதுவரைக்கும் கிட்டத்தட்ட அஞ்சு பேத்துக்கு மேல பொண்ணு கேட்டு வந்தாங்க. வந்த எல்லார்கிட்டயும் எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்ல, வேணாம்னு சொல்லிடுங்கனு சொன்ன உடனே அதையே சொல்லிட்டு போய்ட்டாங்க. அதே போல நீங்க சொன்னா பரவால்ல” அவனை ஏறிட்டு அலட்சியபார்வையில் சொல்ல…

“அப்படியா? வேஸ்ட் பீப்பிள்… சரி… நான் கொஞ்சம் வேறமாதிரி சொல்றேன்” என்றவன் அவள் பேசுமுன் வெளியே சென்றான். அவளும் வெளியேவந்து அறையின் கதவருகே நின்றாள்.

மங்களம் அகிலனிடம் “எங்க பொண்ண பிடிச்சிருக்கா தம்பி?” என கேட்க “உங்க பொண்ணு விருப்பத்தைக் கேளுங்க ஆண்ட்டி” என்றான் கவிதாவைப் பார்த்து.

அதைச் சற்றும் எதிர்பார்காத கவிதா அதிர்ச்சியில் நிற்க, மங்களம் அவளைப் பார்த்து “என்ன கவி உனக்குப் பிடிச்சிருக்கா?” என கேட்க…

வார்தைகள் வெளியே வரவில்லை கவிதாவிற்கு… என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தாள்.

‘பிடிக்கலன்னு சொல்ல முடியாது. அப்பா ஆயிரம் கேள்வி கேப்பார். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைல வெச்சுட்டானே’ மனதில் அகிலனைத் திட்டினாள்.

‘இந்த மாதிரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, திரும்பக் கேள்வி கேட்டா அப்பாக்கு பிடிக்காது. இவன எப்படியும் அப்பாக்கு பிடிக்காது’ என யோசித்தவள்… “அப்பாக்கு பிடிச்சுருக்குன்னா அதுவே போதும்” என்றாள் தயக்கத்துடன்.

“அம்மாடி அப்பாக்கு ரொம்பப் பிடிச்சுருக்குமா… அவர் விருப்பத்தை சொல்லாம உன் விருப்பத்தை இப்போவே கேக்கறாரே” என்று சொல்லி அகிலனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

‘ஐயோ… அப்பா’ என்று மனதில் நினைத்து அதிர்ந்தவள், அகிலனைப் பார்க்க “அப்போ உங்களுக்கு ஓகே’னா எனக்கும் ஓகே… அங்கிள்” என்று ஸ்வாமிநாதனிடம் சொல்வது போல் கவிதாவைப் பார்த்து சொன்னான் புன்னகையுடன்.

கவிதாவுக்குத் தலையே சுற்றுவது போல் இருந்தது அங்கு நடக்கும் பேச்சைக் கேட்டு.

“என் பையனோட சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம். எங்களுக்கும் முழு சம்மதம்” என்ற லட்சுமி “கவிதா இங்க வாம்மா” என்று அழைத்துத் தட்டில் இருந்த பூவை அவள் தலையில் வைத்து…

“அப்புறம் என்ன சீக்கரம் கல்யாணத்துக்குத் தேதி குறிக்க வேண்டியதுதான். நிச்சயம் கல்யாணத்தோட பண்ணிடலாம்” என்றார்.

சிறிது நேரம் அனைவரும் பேசிக்கொண்டிருக்க “என்னம்மா… உனக்குச் சமைக்க வருமா?” என வருங்கால மாமியாராக லட்சுமி கேட்க…

அம்மாவிடம் அந்தக் கேள்வியை எதிர்பார்க்காத மகன் “அம்மா இப்போ கிட்சனுக்கு ஆள் எடுக்கவா வந்துருக்கோம்” என காதில் கடிந்தான்.

அப்போது பெண்ணின் அப்பாவாக ஸ்வாமிநாதன் “வீட்ல எல்லாரும் இருக்கப்ப அவ தான் சமைப்பா. ஆனா வேலைக்குப் போய்ட்டு அதெல்லாம் பண்றது போகப் போகப் பழகிடும்னு நினைக்கறேன்” என்றார்.

“அங்கிள் அதெல்லாம் பாத்துக்கலாம். பெரிய விஷயம் இல்ல” எனச் சொல்லும்போது மகனை பெற்ற தாயின் மனதிலோ ‘பையன் இப்போவே இப்படி ஆயிட்டானே’ என எண்ணியது.

இரு குடும்பத்தினரும் சில நிமிடங்கள் பேசிவிட்டு, மாப்பிள்ளை வீட்டார் புறப்பட்டனர். கார் சாவியை வீட்டினுள்ளே மறந்து விட்டு வந்த அகிலன் அதை எடுக்க உள்ளே செல்ல, அங்கே கவிதா தலைமேல் கைவைத்து உட்கார்ந்திருந்தாள்.

அவள் அருகில் சென்றவன் “என்ன ஸ்வீட்டி. இப்படி ஆயிடுச்சே… ப்ச். நீ வேணும்னா ஒன்னு பண்ணு. உனக்கு பிடிக்கலன்னு சொல்லி கல்யாணத்த நிறுத்திக்கோ. ஆனா நான் சொல்லமாட்டேன்” என கண்ணடித்துவிட்டு வெளியேறிவிட்டான்.

அவன் பேசியது, ‘ஸ்வீட்டி’ என்றழைத்த விதம் அதிர்ச்சியாக இருந்தாலும், அவன் கண்ணடித்தது கடுப்பேறியது கவிதாவிற்கு.

தன்னை இந்த இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்திய அஐய்யை நினைக்கும்போது இன்னமும் கொதித்தது!

———இன்று———

‘விமானம் கொஞ்ச நேரத்தில் துபாயில் தரையிறங்கவுள்ளது’ என்ற அறிவிப்பு கவிதாவை நினைவோட்டத்தில் இருந்து நிகழ்வுக்குக் கொண்டுவந்தது.

‘நினைவுகள் நிகழ்வுகளை மறித்தாலும்,

தூக்கம் கண்களைத் தழுவினாலும்,

நினைவிலும் கனவிலும்… எங்கும் என்னவனே!!!’

21
7
5

2 thoughts on “என்னுள் நீ வந்தாய் – 1B

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved