என்னுள் நீ வந்தாய் – 2

என்னுள் நீ வந்தாய் – 2

———இன்று———

அவசரமாக அலுவலகம் வந்தாலும், பொறுமையாகவே வேலையை ஆரம்பிப்பது லயாவின் பாணி.

கொடுத்த வேலையைக் கேட்கும் முன்பே முடித்துவிடுவதில் வல்லவள். ஆனால் என்ன ஒன்று… அவளின் அவன் பற்றித் தகவல் வந்தால், எந்த வேலையும் இரண்டாம்பக்ஷமே!

அவனைப் பற்றிய தகவலுக்காகக் காத்திருந்தாலும், வேலையிலும் ஒரு கண் இருந்துகொண்டே இருந்தது.

‘மதிய உணவும் முடிந்தது. இன்னமும் நேரம் அமையவில்லையே அவனின் தரிசனம் பெற’ வெறுப்புடன் நேரத்தைக் கடத்த நினைத்தவள் நினைவிற்கு வந்தது கவிதாயினி.

‘மதியம் வர்றதா பிரகாஷ் சொன்னாரே. இன்னும் கால் பண்ணலையே’ என்று நினைத்த போது போன் மணியடித்தது. இது அவள் முதலில் எதிர்பார்த்த அவனைக் காணுவதற்கான அழைப்பு. சட்டெனப் பறந்தாள் கேன்டீனுக்கு.

“எப்போ வந்தான்?” எனச் சைகையில் கேன்டீனில் இருந்த டீ ஷாப்பில் வேலைப் பார்ப்பவனிடம் லயா கேட்க, அவனோ “இப்போ தான்” என்றான் அதே சைகையில்.

அவனிடம் ஒரு டீயை வாங்கிக்கொண்டு சென்றாள் மனம் கவர்ந்தவனைக் காண.

இந்த டீக்கடை மனிதரே நம் லயா’வின் ஸ்பை. மனம் கவர்ந்தவனின் வருகையை அவளுக்குத் தெரியப்படுத்த பதினைந்து dirham (துபாய் கரண்சி) ஒவ்வொரு முறையும்.

‘அவளின் அவன்’ அங்கே இருக்கும் நிமிடங்கள் குறைவு எனத் தெரியும் அவளுக்கு. ஆகவே கிட்டத்தட்டப் பறந்தாள் அந்த ரெக்ரியேஷன் சென்டருக்கு …

அவனை உள்ளே பார்த்தவுடன் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டு அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்தாள்.

அங்கே அவன்…! ஆங்காங்கே முகத்தில் வியர்வைப் பூத்திருக்க, இன்னொருவனுடன் கூடை பந்து ஆடிக்கொண்டிருந்தான். அவனும் அவள் வந்ததை, உட்கார்ந்ததைக் கவனித்தான்.

நல்ல உயரம். ஆறடி உயர்த்திக்கு ஓரிரு சென்டிமீட்டர் மட்டுமே குறைவு. அதனால் தானே பேஸ்கெட் பால் விளையாட முடியுதுனு நீங்க சொல்றது கேக்குது… சும்மா ஒரு இன்ட்ரோ கொடுக்கலாமேன்னு தான்… வேறென்ன…

நன்றாகக் குதித்துக் குதித்துக் கூடையில் பந்தைப் போடும் அளவிற்கு உடற்கட்டு. ‘ஜிம் போவானோ?’ என்ற கேள்வி கூட வரலாம்… எப்பொழுதும் முகத்தில் கொஞ்சமாகக் குடிகொண்டிருக்கும் அளவான நேர்த்தியாக வெட்டப்பட்ட தாடி.

மற்ற வர்ணனைகளைப் போகப் போகப் பார்க்கலாம்.

அவன் அணிந்திருந்த டீ-ஷர்ட் மீறி, கையில் கொஞ்சமே வெளியே தெரிந்த அந்த டாட்டூ…

“அந்த டாட்டூ அது… அது தான் என்னனு இதுவரைக்கும் முழுசா பாக்கமுடியால” இப்போது கண்ணுக்குத் தெரிந்த அளவுக்கு அவனை லயா ரசிக்க, அவனுடைய டாட்டூ’வை பார்க்கமுடியவில்லை என்று வருந்தும் போது போன் அழைப்பு வந்தது.

புது எண்கள். அவனைப் பார்க்கக் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் ‘யாரிந்த கரடி?’ என்றே அவள் மனம் அப்போது திட்டியது!

“ஏன் உன் பாய் ஃபிரன்டோட சண்டையா? கால் அட்டென்ட் பண்ணமாட்டேங்கற” எனக் கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்து உட்கார்ந்தான் அவன்.

அவன் பேச்சைக் கேட்டதும் போன் அழைப்பையும் மறந்து… அவள் மனதில் ‘என்னோட பாய் ஃபிரன்டே நீ தானே…’ என நினைத்தவள்

“ஏதோ நியூ நம்பர். சரி சொல்லு ரெண்டு நாள் ஏன் வரல?” உரிமையுடன் கேட்டாள்.

“உன்னோட முப்பது dirham சேவ் பண்ணி குடுத்துருக்கேன்” என்றான் இதழோரம் புன்னகையுடன்.

“தெரிதுல்ல… என் நம்பர் உன்கிட்ட இருக்கு. ஒழுங்கா நீயே கால் பண்ணி, நான் இங்கதான் இருக்கேன்னு சொன்னா நான் ஏன் எவனுக்கோ தண்டம் அழப்போறேன்” என்றாள் புருவத்தை உயற்றி தோள்களைக் குலுக்கி.

அவன் பதில் பேசும்முன் மறுபடியும் அதே நியூ நம்பரின் அழைப்பு. ‘ஒரு நிமிஷம்’ என அவனுக்கு சைகையால் சொல்லிவிட்டு, அட்டென்ட் செய்தாள்.

“ஹலோ…… எஸ்…… ஹே ஸாரி…… ஓ…… கமிங் நௌவ்” அழைப்பை வைத்தவுடன் அவனிடம் திரும்பி

“நல்லா மாட்டிட்டேன். இன்னிக்கி என்னோட புது லீட் வந்துருக்கா. அவ கால் தான் மிஸ் பண்ணிட்டேன். செக்யூரிட்டி டெஸ்க் கிட்ட வெயிட் பண்றாலாம். சீ யு லேட்டர்” எனச் சொல்லிக்கொண்டே ஓடிவிட்டாள் அங்கிருந்து…

அவள் சிறுபெண்ணைப்போல் பறந்தடித்து ஓடியதைப் பார்த்தவனுக்குச் சிரிப்புதான் வந்தது.

***************

ரிசெப்ஷன் சோபா’வில் உட்கார்ந்தபடி “ஷப்பா. எவ்ளோ நேரம்… என் நிலைமை. இவளுக்காகலாம் வெயிட் பண்ண வேண்டியதா போய்டுச்சு” சலித்துக்கொண்டாள் கவிதா.

வலது கையில் கட்டியிருந்த கடிகாரத்தை இரண்டு நொடிக்கு ஒரு முறை பார்த்துக்கொண்டே அங்கே வைக்கப்பட்டிருந்த புத்தகம் ஒன்றை புரட்டியபடி இருக்க “ஹாய் கவிதாயினி” என்ற அழைப்பில் நிமிர்ந்தாள்.

“ஹலோ” என கவிதா எழ “ஸாரி… பிரேக் போயிருந்தேன். அதான் லேட்டாயிடுச்சு” என்றாள் லயா.

“தட்ஸ் ஓகே. கெட் மீ அக்ஸஸ்” என லயாவை கடந்து செக்யூரிட்டி அருகே கவிதா செல்ல “சிடுமூஞ்சியோ?” என முகத்தைச் சுளித்துக்கொண்டு அவள் பின்னால் சென்றாள் லயா.

கவிதாவுக்கு இடத்தைக் காட்டிய லயா, அவளிடம் “நீங்க கெஸ்ட் ஹவுஸ் போவீங்கன்னு நினச்சேன்” என சொல்ல

இடத்தில் உட்கார்ந்துக்கொண்ட கவிதா, “கெஸ்ட் ஹவுஸ் போய்ட்டு வந்தா லேட்டாயிடும். வேல இருக்கு. அதான் நேர வந்துட்டேன் இங்க”

அதற்கு லயா, “ஓகே. என் சீட் அடுத்த க்யூபிகள்’ல இருக்கு. ஏதாச்சும்னா கூப்பிடுங்க.”

சரி என்பதுபோல் தலையசைத்தாள் கவிதா.

சிடுசிடுத்தபடி அவள் இருக்கைக்குச் சென்ற லயா “என் தலையெழுத்து. இவகிட்ட மாட்டிட்டேனே” கடுப்பாக இருந்தாலும் வேலையை விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்த்தாள்.

அன்றைய வேலை முடிந்தவுடன் இருவரும் சேர்ந்து அலுவலகக் கெஸ்ட் ஹவுஸ் புறப்பட்டனர்.

“கவிதாயினி நீங்க ஹைதராபாதா?” லயா கேட்க…

“இல்ல. சென்னை… அன்ட் யு கேன் கால் மீ கவிதா” என்றாள் புன்முறுவலுடன்.

லயா போன் அலற “ஓகே கவிதா. ஒரு நிமிஷம்…” எனச் சொல்லிவிட்டு அட்டென்ட் செய்தாள்.

கவிதா… கவிதாயினி… என்ற பெயர் சுருக்கம் பற்றிப் பேசியபோது, தன் மனதில் நிறைந்தவன் முன்பு அனுப்பிய குறுஞ்செய்தி…

“என் இனியவளே… என் வாழ்க்கையை இனிமையாக்க வரப்போகும் என் கவிதையே… எப்படி இருக்கு என் கவிதை மை ஸ்வீட்டி”

அவள் நினைவிற்கு வர தனக்குள் புன்னகைத்தாள்.

‘நீ சொல்லும் அளவுக்கு இனியவளா நான்??? தெரியவில்லை… ஆனால் நீ உச்சரித்ததை நினைக்கையில் உணர்கிறேன் அதன் இனிப்பை!!!’

அன்று பெண் பார்த்துவிட்டு அகிலன் சென்றவுடன் நடந்த நிகழ்வுகள் அவளை ஆட்கொண்டது…

 

———அன்று———

அன்று பெண் பார்த்துவிட்டு, அகிலன் சென்றவுடன்…

“கல்யாணத்த நிறுத்துன்னு சொன்னா… ஸ்வீட்டியாம் … அதுபத்தாதுன்னு கண்ணடிச்சுட்டுப் போறான். ச்சை. இவனைத் திட்டி என்ன பிரயோஜனம்? இதுக்கெல்லாம் காரணம் அந்த அஜய் அவனை”

போன் எடுத்தவள் அஜய்யை அழைக்க முடிவு செய்தாள்.

“ஹலோ இன்னும் நீ என்ன எவ்ளோ நாள் காத்திருக்கச் சொல்லப்போற அஜய்” சீறினாள் மறுபக்கம் போன் அட்டென்ட் ஆனவுடன்.

“இனி… என்ன ஆச்சு? வந்தவன் பிடிக்கலன்னு சொல்லிட்டானா?” கேட்டான் அஜய் நடந்தது எதுவும் தெரியாமல். (அவளுடைய அஜய்க்கு கவிதாயினி செல்லமாக இனி)

“என்ன? பிடிக்கலன்னு சொல்லிட்டானா? வந்தவன் என் வாயாலேயே கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்ல வெச்சுட்டு போய்ட்டான்” என்றாள் எரிச்சலாக.

“ஐயோ என்ன சொல்ற. முடிவாய்டுச்சா? என்ன இனி… நீ கொஞ்சம் பொறுமையா இருந்துருக்கலாமே?”

“என்ன அஜய் நான் தான் காரணம் மாதிரி பேசற? உனக்காக நான் காத்துட்டு இருக்கேன். ஆனா நீ?” கண்கள் கலங்கப் பார்த்தது கவிதாவிற்கு.

“இனி… ப்ளீஸ். நான் முன்னாடியே சொன்னேன். என்னால இப்போ இந்தியா வர்றது கஷ்டம்ன்னு. காண்ட்ராக்ட்ல லீவு கிடைக்காதுடி. அதுவும் இல்லாம தங்கைக்குக் கல்யாணம் பண்ணிட்டு தான் நான் பண்ணிக்க முடியும். இதெல்லாம் உனக்கே தெரியுமே கவி” என்றான் மெல்லிய குரலில்.

‘இனி’ இப்போது ‘கவி’யானாள். அப்படியென்றால் அவன் இனிமையான மூடில் இல்லை என்பதே அர்த்தம். அதைப் புரிந்துகொண்டாள் கவிதா.

“நான் கேக்கறது என்ன அஜய்? எப்படியாச்சும் நான் அப்பாகிட்ட சம்மதம் வாங்கிடறேன். ஆனா… கண்டிப்பா உன் வீட்லயிருந்து வந்து பேசணுமே அதுக்கு. உறுதி பண்ணிட்டோம்னா கூடப் போதும் அஜய். கல்யாணம் மெதுவா பண்ணிக்கலாம்”

“நீ சொல்றது சரி தான் கவி. ஆனா வீட்ல நம்ம விஷயம் தெரிஞ்சு இப்போ இதப் பத்தி பேச வேணாம்ன்னு சொல்லிருக்காங்கல”

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும் அஜய்? நீ பேசணும் அவங்ககிட்ட. என் அப்பா மட்டும் நான் சொன்னவுடனே சரினு சொல்வாரா? நானும் பேசி தான் சம்மதம் வாங்கணும். எல்லாம் கைய மீறி போறமாதிரி தெரியுது அஜய்” இப்போது கண்களில் கண்ணீர் துளிர் விட்டது.

“சரி நான் பேசறேன்” அழுத்தமாகச் சொல்லிவிட்டு “வெக்கட்டுமா…? வேல இருக்கு” என்றான்.

“ஓ என்கூட சாதாரணமா பேசக் கூட முடியலல? நீ நல்லா பேசி ரொம்ப நாள் ஆச்சு அஜய்” அவள் குரலில் அவள் மனதின் வலி தெரிந்தது.

“நீ எப்போ பாரு கல்யாணம் கல்யாணம்னு பேசிட்டே இருக்க கவி. நான் என்ன பண்ணமுடியும்? ஆசையா பேசலாம்னா… உடனே கல்யாணப் பேச்சு. வர வர என்னடா வாழ்க்க இதுன்னு தோணுது கவிதா”

‘இனி’ கவியாக, ‘கவி’ கவிதாவாக மாறியதை ஏற்க முடியாமல், அவன் பேசப்போவதைக் கேட்க மனமில்லாமல், அழைப்பைத் துண்டித்தாள்.

‘நான் பேசறது அவளோ கஷ்டமா இருந்தா நான் பேசவே இல்ல அஜய்’ தலையணையில் முகத்தைப் புதைத்துச் சத்தம் வெளியே வராமல் வீறிட்டு அழுதாள்.

சில நிமிடங்கள் கழித்துக் கதவு தட்டும் சத்தம் கேட்க, வெளியே “அம்மாடி கண்ணம்மா தூங்கிட்டயாடா?” அவள் அப்பாவின் குரலைக் கேட்டவள், அவசரமாக முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு கதவைத் திறந்தாள்.

“என்னடா ஆச்சு? முகம் ஒரு மாதிரி இருக்கு?” அவள் முகம் பார்த்துப் பதறிக்கொண்டு கேட்க “இல்லப்பா… ஒன்னும் இல்லையே” என சமாளித்தாள்.

“என்ன அத்தான்… உங்கள எல்லாம் விட்டுட்டுக் கல்யாணம் பண்ணி போப்போறோமேன்னு சங்கடம் இருக்காதா?” என்று அவள் சித்தி அறைக்குள்ளே வர, சித்தப்பாவும் உள்ளே வந்தார்.

அனைவரும் அவளின் படுக்கைக்குப் பக்கத்தில் தரையில் உட்கார்ந்தனர். கவிதா மனம் பொறுக்காமல் அவள் அப்பாவின் மடியில் படுத்துக்கொள்ள “அம்மாடி இதுக்குப்போய் கண்கலங்கிட்டு” என பாசமாக அவள் முடியைக் கோதிவிட்டார்.

“அண்ணா நல்ல சம்பந்தமா இருக்கு. சீக்கரம் முடிச்சிடலாம். அண்ணிவழி தூரத்து சொந்தமாக்கூட போனதுனால விசாரிக்கறதும் கொஞ்சம் சுலபமா போச்சு. அடுத்து என்ன… சீக்கரம் கெட்டிமேளம் தான் கவிக்கண்ணுக்கு” என்றார் அவளின் சித்தப்பா.

“ஆமாம் விச்சு. பையன் படு கெட்டிக்காரன் போல. பெரிய இடமாயிருக்கேன்னு விசாரிச்சப்பத் தான் தெரிஞ்சுது…”

“நாலு வருஷத்துக்கு முன்னாடி நம்மள மாதிரி தான் இருந்துருக்காங்க. இந்தப்பையன் பிஸ்னஸ் ஆரம்பிச்சு… ஆரம்பத்துல ரொம்பக் கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு அப்புறமா அவங்க குடும்பம் இப்போ இருக்க நிலைமைக்கு ஒசந்துருக்காங்களாம்”

“சென்னைல வீடு. அதில்லாம அவங்க அப்பா அம்மா வீடு செங்கல்பட்டுல இருக்காம். கவி கூட வேலைக்குப் போகணும்னு அவசியம் இல்ல, அது அவ விருப்பம்னு சொல்லிட்டாரு” என வரப்போகும் மருமகனின் புகழை மாமனார் பாட…

“அப்போ நம்ம கவி குடுத்துவெச்சவன்னு சொல்லுங்க” அண்ணனுடன் சேர்ந்துகொண்டார் சித்தப்பா. இது எதுவும் கவியின் காதுகளுக்குச் சென்றால் தானே??? அவள் மனமோ அஜய்யை மட்டுமே சுற்றிக்கொண்டிருந்தது.

நாட்கள் அதன் வேகத்தில் நகர… ஒரு மாதம் கடந்திருந்தது. 

‘நீ இன்னிக்கி வருவ… நாளைக்கி வருவனு ஒரு மாசம் போச்சு. நீ என்ன நெனச்சுட்டு இருக்கனு எனக்குப் புரியலடா அஜய். இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம். அந்தக் கிறுக்கன் கல்யாணத்தையும் நிறுத்த மாட்டேங்கறான் எவ்ளோ சொல்லியும்’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தவள், அவளுடைய மொபைல் பீப் அடித்தவுடன் எடுத்துப் பார்க்க…

“என் இனியவளே… என் வாழ்க்கையை இனிமையாக்க வரப்போகும் என் கவிதையே… எப்படி இருக்கு என் கவிதை மை ஸ்வீட்டி” என்று அந்தக் கிறுக்கன் அனுப்பிய மெசேஜை பார்த்தவளுக்கு இன்னும் கடுப்பேறியது.

‘கவிதைங்கிற பேர்ல என் பேர கொத்துப்பரோட்டா மாதிரி பிச்சுப்போட்டு வெச்சுருக்கானே. எவ்ளோ சொன்னேன் பொண்ணு பாக்க வந்தப்ப. என்ன பிடிக்கலன்னு சொல்ல சொல்லி… இப்போ இனியவளே கவிதையேனு டார்ச்சர் வேற’

———இன்று———

“கவிதா கவிதா……” என்று லயா உலுக்கியதில் நினைவிற்கு வந்தவள் அவளைப் பார்த்தாள்.

“என்ன கண்ணத்திறந்துட்டே தூக்கமா?” அவள் கேட்க, புன்னகையைப் பதிலாக்கினாள் கவிதா.

‘நடமாடும் கவிதையாய் நீயிருக்கும்போது, எதற்கடா எழுதுகிறாய் எனக்காக ஒரு கவிதை!!’

அவளின் மனது அகிலனைச் சுற்றிவந்தாலும், அவ்வப்போது லயா உடனிருப்பது அவனைச் சற்று மறக்கச்செய்தது.

“இதுதான் உங்களோட ரூம் கவிதா. இந்தாங்க சாவி” சாவியைக் கொடுத்தவள் தொடர்ந்து…

“இப்போதைக்கு இந்தச் சர்வீஸ் அபார்ட்மெண்ட்’ல நாம ரெண்டு பேர் மட்டும்தான். அப்புறம் குக் (cook) தாமஸ் அண்ணா. அவரு வெளிய போயிருப்பாரு போல. டீ காபி ஏதாச்சும்?” கேட்டாள் லயா.

“கிட்சன் எங்க இருக்கு? நான் ஒரு பிளாக் காஃபி போட்டுக்கறேன். நீ என்ன குடிப்ப?” எனக் கவிதா கேட்க…

“என்னது பிளாக் காஃபி’யா? அத நீங்கெல்லாம் எப்படித் தான் குடிக்கறீங்களோ” எனச் சலித்துக்கொண்டு…” எனக்கு தாமஸ் அண்ணாவோட இஞ்சி டீ தான்” என்றாள்.

லயாவைப் பார்த்துப் புன்னகைத்தவள், வெந்நீர் வைத்துத் தனக்கு பிளாக் காஃபி போட்டுக்கொண்டாள்.

“எனக்கு இங்க ஒரு க்ளோஸ் இந்தியன் ஃபிரண்ட் இருக்கான். இன்னிக்கி நைட் ரெண்டுபேரும் டின்னர் சாப்பிட வெளிய போறோம். தாமஸ் அண்ணா வந்ததும் உங்களுக்கு இன்ட்ரோ குடுத்துட்டு நான் கிளம்பறேன்” என்றாள் லயா.

அதற்கும் புன்னகையையே பதிலாக அளித்தாள் கவிதா.

அதைப் பார்த்த லயா கடுப்புடன் மனதில் ‘வாயிலருந்து வார்த்தை வராது போலயே. அவன்கிட்ட மட்டும் தான் லொட லொடன்னு பேசுவன்னு பாத்த… இவகிட்டயுமாடி லயா… என்ன செய்ய… நம்ம வாய் டிசைன் அப்படி” என நினைத்துக்கொண்டு…

லயா மொபைலில் பிஸி’யாக, கவிதா கனவில் பிஸி’யாக, சிறிது நேரத்தில் அங்கே வந்தார் தாமஸ். அறிமுகப்படலத்தை ஆரம்பித்தாள் லயா.

“தாமஸ் அண்ணா மலையாளீ… நல்லா சமைப்பாரு. தமிழ் அருமையா பேசுவாரு. தாமஸ் அங்கிள்னு தான் சொல்லணும் ஆனா அவருக்குப் பிடிக்காது அப்படிச் சொன்னா” என்று அவரைப் பார்த்துக் கண்சிமிட்டினாள் லயா.

“ஹாய் அண்ணா… நான் கவிதா…” என்றவளுக்கு எனோ அவரைப் பார்க்கும் போது ஒரு தந்தையின் கனிவு தெரிந்தது. லயா அவர்கள் பேச ஆரம்பித்தவுடன் அங்கிருந்து நழுவினாள்.

அவர் கவிதாவிடம், “உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு சொல்லுமா… அதுக்கேத்த மாதிரி சமைக்கறேன்” எனச் சொல்ல…

“எனக்கு இப்போல்லாம் சாப்பாடுன்னு ஒன்னு தட்டுல இருந்தா போதும் ண்ணா. ஸ்பெஷலாலாம் வேணாம்”

“அட என்ன பொண்ணுமா நீ… மத்தவங்க சமைச்சுப்போடும்போதே நல்லா சாப்பிடுமா” என்றவுடன் அண்ணாவைக் கவிதாவிற்கு மிகவும் பிடித்துப் போனது.

சிலநிமிடங்களில் லயா புறப்பட்டுத் தயாராகி வர, “டீ குடிக்கறயா லயா?” கேட்டார் தாமஸ்.

“இல்லணா. இன்னிக்கி என் ஆளோட எஸ்ப்ரெஸ்ஸோல காஃபி, அப்புறம் மால்’ல பர்ச்சஸ்” என்றாள் கண்ணடித்து… “நைட் டின்னர்?” அவர் கேட்க

“அதுவும் முடிச்சுட்டு தான் வருவேன். பை ண்ணா. பை கவிதா” சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து பறந்தாள்.

“சின்னபொண்ணாவே இருக்கு” என்ற தாமஸ் உள்ளே சென்றுவிட, கவிதாவைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? மறுபடியும் இந்த நிகழ்வுடன் ஒன்றிய அகிலன் புராணம் படிக்க அவள் மனது சென்றுவிட்டது…

———அன்று———

கல்யாண தினம் நெருங்கிக்கொண்டே இருந்தது… என்ன செய்வதென்று தெரியாமல் பித்துப்பிடித்தவள் போல் இருந்தாள் கவிதா…

“அம்மாடி எப்படி மா இருக்க?” எனப் போனில் அழைத்த தந்தையிடம் “இருக்கேன்பா. நீங்க எப்படி இருக்கீங்க?” என விசாரித்தாள்.

“என்னமா ஆச்சு… குரல் ஒரு மாதிரி இருக்கே?”

“ஒன்னுமில்லப்பா. இப்போ தான் எந்திருச்சேன்” என்று அழுதக் கண்களைத் துடைத்துக்கொண்டு பொய் சொல்ல…

“சரிடா. பத்து நாள்ல கல்யாணத்த வெச்சுட்டு இன்னும் வராம இருக்கயேடா… சீக்கரம் கிளம்பிவா மா” என்று அவளிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

அவள் எதிர்பார்த்ததை விட அனைத்தும் துரிதமாக நடந்தது.

‘இருவரின் ஜாதகத்துக்கு இன்னும் நாப்பது நாட்களுக்குள் திருமணம் நடக்காவிடில் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டும்’ என்று இருவீட்டு ஜோசியர்களும் சொல்லிவைத்தாற்போல் ஒரே விஷயத்தைச் சொன்னார்கள்.

இப்படிச் சொன்னதற்குக் காரணம் யார்? அதுவும் போகப் போகப் பார்ப்போம் ….

இந்த அவசரக் கல்யாணத்தை ஏற்க மறுத்தது ஒரேயொரு இதயம். அது கவிதாவினுடையதே…

“இப்படி வந்து நிக்க வெச்சுட்டாங்களே என்ன. அஜய்’ட்ட சொன்னா ஏதாச்சும் பண்ணுனு சொல்றான். அதுவும் ஒரு வாரம் ஆச்சு அவன் கூடப் பேசி… என்ன ஆனான்.. ஏதாச்சும் பிரச்சனையான்னு தெரியல” என நினைத்து நினைத்துத் தூக்கம் தொலைத்தது மட்டுமே மிச்சம் கவிதாவுக்கு.

நாட்கள் நெருங்க நெருங்க, இதற்கு ஒரே தீர்வு, அகிலனைச் சந்தித்து… அனைத்தையும் சொல்லி… நிறுத்த சொல்ல வேண்டியது தான் என்று நினைத்துக்கொண்டாள்.

காலதாமதமாகச் செய்யும் காரியங்கள் பெரும்பாலும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை மறந்தாள் கவிதா.

***************

“ஓ மை காட். ஆர் யு ஓகே மிஸ் கவிதாயினி” என்றான் போலியான அதிர்ச்சியுடன் அகிலன், அவள் போன் செய்திருந்ததைப் பார்த்து.

“ஐம் ஓகே. ஏன் கேக்கறீங்க?” தீவிரமாக பதில் கேள்வி கேட்க “இல்ல நீங்க கால் பண்ணிருக்கீங்களே. சுயநினைவோட இருக்கீங்களான்னு செக் பண்ணேன்” என்றவுடன் எரிச்சலின் உச்சிக்கே சென்றுவிட்டாள் கவிதா.

மூச்சை இழுத்து, ‘பொறுமையா பேசு கவி’ என மனதைச் சாந்தபடுத்திக்கொண்டு… “நீங்க சென்னைல தான இருக்கீங்க? நான் உங்ககிட்ட நேர்ல பேசணும்” என்று சொன்னவுடன் அகிலனுக்கு அதிர்ச்சியுடன் சந்தோஷமும் தொற்றிக்கொண்டது.

அந்த சந்தோஷத்தில் “எங்க மீட் பண்ணலாம்னு நீயே சொல்லு” என்று உரிமையுடன் பேச ஆரம்பித்தான். அதை உணர்ந்தவள், அதைப் பெரிதுபடுத்தாமல்…

“பிரெஸ்டிஜ் மால்? ஸ்டார்பக்ஸ்? நாளைக்கி மார்னிங் 10?” அவள் கேட்டவுடன் “டன். சி யு ஸ்வீட்டி” என்று அவள் திட்டுமுன் அவசரமாகச் சிரித்துக்கொண்டே அழைப்பைத் துண்டித்தான்.

அதே மாலில், அந்த காபி ஷாப் எதிரில் அவனுடைய நண்பன் அரவிந்தின் ஐஸ் கிரீம் பார்லர் இருந்தது.

அரவிந்தும் அகிலனும் நண்பர்கள். பள்ளியில் தொடங்கி, கல்லூரியைக் கடந்து… இப்போது வரை தொடர்கிறது. இதே அரவிந்த் வரும்காலத்தில்… முக்கியமான தருணத்தில் ‘நண்பேன்டா’ என அகிலனுக்கு உதவும் தருணமும் வரும்!

“டேய் இங்க என்னடாப் பண்ற? உன் fiancé அங்க காபி ஷாப்’ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க… நீ இங்க அவங்கள பாத்துட்டு உட்கார்ந்துருக்க” அரவிந்த் கேட்க…

“மச்சி அவ முகம் போறப் போக்கப்பாத்தா க்யூட்டா இருக்குடா. நான் இன்னும் வரலன்னு எவ்ளோ டென்ஷன் ஆறா பாரு” அவளை ரசிக்கும் நண்பனைப் பார்த்து

“டேய் நீ என் ஃபிரண்ட் அகில்தானே? டவுட்டா இருக்கு மச்சி” என்றவுடன் அவனைப் பார்த்து அசடுவழிந்தான் அகிலன்.

“ஆவி கீவி பூந்துடுச்சாடா? பொண்ணுங்கள பாத்தாவே காண்டாவ. பத்தடி தள்ளி நிப்ப… இப்போ இப்படி வழியரயே… தொடச்சுகோ… சகிக்கல” எனத் தலையில் அடித்துக்கொண்டான்.

“டேய் டேய். அவ எந்துருச்சுட்டா டா… கோவிச்சுகிட்டான்னு நினைக்கறேன்… நான் கிளம்பறேன்” சொல்லிக்கொண்டே எதிரே இருந்த ஸ்டார்பக்ஸ்’க்குள் பத்தே அடியில் நுழைய…

அவனுக்காகக் காத்திருந்து ‘கிளம்புவோம்’ என்றெண்ணிய கவிதா, அவன் வருவதைப் பார்த்ததும் அமிலத்தைக் கண்களால் உமிழ்ந்து, மறுபடியும் இருக்கையை நோக்கிச் சென்றாள்.

“ஹே ஸ்வீட்டி ஸாரி. ரொம்ப நேரம் வெயிட் பண்றயா…” எனக் கேட்டுக்கொண்டே அவள் எதிரில் உட்கார்ந்தான் முகத்தில் டன் கணக்கில் பிரகாசத்துடன்.

அதற்கு எதிர்மறையாக முகத்தில் எரிச்சலுடன்… “மொதல்ல இந்த ஸ்வீட்டி’ன்னு கூப்பிடறத ஸ்டாப் பண்ணுங்க. இரிடேட் ஆகுது” என கவிதா சொல்ல…

“ஓகே ஸ்வீட்டி… உன்ன இனி ஸ்வீட்டினு கூப்பிடமாட்டேன் ஸ்வீட்டி” என்றவன் கடைசியில் கண்ணடித்து நிறுத்தினான்.

வந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு பொறுமையாக… “இங்க பாருங்க அகிலன். நான் முன்னாடி சொன்னமாதிரி இந்தக் கல்யாணத்துல எனக்கு சுத்தமா இன்டெரெஸ்ட் இல்ல. மீறி நீங்க பண்ணிக்கணும்னு நினச்சா கல்யாணத்துக்கு முன்னாடி நான் அஜய் கூடப் போகவேண்டியதா இருக்கும்”

“நானே அப்பாக்கிட்ட சொல்லிடுவேன் ஆனா அப்பா எமோஷனல் பிளாக்மெயில் பண்ணிடுவாரோன்னு தான் உங்கள சொல்ல சொல்றேன்” என்று படபடவெனக் கொட்டிவிட்டாள் பேச நினைத்ததை.

அதைக் கேட்டவன் சலமில்லாமல் அவளையே பார்த்திருந்தான் …

‘எப்பொழுதும் மலர்ந்திருக்கும் உன்முகம், தளர்ந்து போன தருணம். அதற்குக் காரணமான ‘நீ விரும்பிய’ என்னை, வெறுக்கிறேன் இத்தருணம்’

 

 

18
7
5
3

2 thoughts on “என்னுள் நீ வந்தாய் – 2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved