Preethi S Karthikமறந்துபோ என் மனமே - 1

maranthupo en maname1-17

மறந்துபோ என் மனமே(1) – 17

“நம்ம இப்போ எங்க போறோம்” என்று நந்தினி கேட்க “கொஞ்ச நேரத்துல தெருஞ்சுடும். சரி பாட்டு கேக்கலாமா?” என்று கேட்டான். “ஹ்ம்ம் கண்டிப்பா” என்றாள்.

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் பாடல் ஆரம்பிக்க “இந்த கிளைமேட்க்கு ஏத்த சாங்” என்றாள். “ஹ்ம்ம், இன்னும் அடுத்த மாசமெல்லாம் பனி பொழியும் இருக்கும். கொஞ்சம் கஷ்டம் தான் மேனேஜ் பண்ணறது” என்று அவன் சொல்ல

“எனக்கு இப்போவே இங்க நடுக்கமா இருக்கு இந்த கிளைமேட்ல. பனின்னா அவ்ளோதான்னு நெனக்கிறேன்” என கைகளை மடித்தவாறு சொன்னாள்.

அவன் சிரித்துக்கொண்டே அவளை பார்த்துக்கொண்டு வண்டியை செலுத்தினான். “நீ ரொம்ப வசீகரமா டான்ஸ் ஆடின. பாட்டும் பாடுவியா?” அவன் கேட்க “கொஞ்ச நாள் கத்துகிட்டேன் பட் டான்ஸ் ரொம்ப பிடிச்சதுனால அத மட்டும் கண்டிநியூ பண்ணேன்” என்றாள்.

“உன்கிட்ட ரொம்ப நாளா கேட்கணும் னு இருந்தேன். என்னைத்தான் கல்யாணத்துக்கு முன்னாடி உன்கிட்ட பேசவிடல. உனக்கு பேசணும்னு தோனலயா?” அவன் கேட்க

“தோணுச்சு. பட் நீங்க ரொம்ப ரிசெர்வ்ட் டைப். கூட, அம்மா வேற நம்ம சைடுல பேசலாம் மாட்டாங்கனு ஒரு சில்லி ரீசன் குடுத்தாங்க. அவங்களுக்கு உடம்பு சரி இல்லனு சீக்கரம் முடிச்சிட்டாங்க” வருத்தத்துடன் அவள் சொல்ல “ஹ்ம்ம்” என்றான்.

“எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி நல்லா பழகி கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை. ஆனா பாருங்க எப்படி ஆயிடுச்சுனு” சலித்துக்கொண்டே அவள் சொல்ல “சரி இப்போ பழகிக்கோ” என்றான் நமட்டு சிரிப்புடன், அவள் திரும்பி முறைப்பதுபோல் பார்த்து பதிலுக்கு சிரித்தாள்.

இப்படியே பேசிக்கொண்டு சிறு தூர பயணத்திற்கு பின் ஒரு அமைதியான இடத்தை வந்தடைத்தனர். அவன் சார்க் பார்க் செய்ய அவள் கண்ணாடி வழியே வெளியே எட்டிப்பார்த்தாள்.

பளிங்கு போல் பளப்பளத்தது அந்த கோவில். அவள் நினைத்து பார்க்கவில்லை அவன் கோவிலுக்கு கூட்டிக்கொண்டு வருவானென.

“ஹ்ம்ம் வா” என்று அவன் கதவை திறக்க அவள் கண்களில் கண்ணீர் ததும்பியது. “கம்” என்று அவன் கையை நீட்ட, அவள் தயங்கியவாறே பிடித்துக்கொண்டு இறங்கினாள் எதற்கு அழைத்துவந்திருப்பான் என்று நினைத்துக்கொண்டு.

அவன் அவளை உள்ளே அழைத்துச்செல்ல, அங்கே ஒரு சாஸ்திரிகளை பார்த்து எல்லாம் ஒகே வா என்று வினவினான்.

பின் அவளை அழைத்துக்கொண்டு வெளியே குளம் போல் அமைந்த இடத்திற்கு கூட்டிச்செல்ல, அங்கே பூஜை நடந்துகொண்டிருந்தது. அவள் அவனை பார்க்க, அவன் ஆம் என்பதுபோல் கண்ணசைத்தான்.

அவள் கண்களில் கட்டுக்கடங்காமல் கண்ணீர் கொட்டியது. அவன் அவள் அருகில் வந்து தோள்சுற்றி அணைத்தவாறே, வேண்டாம் என்பது போல் தலையசைத்தான்.

அவள் தலையை குனிந்து விம்மினாள், அவள் கண்களை துடைத்துவிட்டான். அடுத்த சிறிது நேரம் பூஜை முடிந்தது. அவள் அவனை பார்க்க, “வா போய் சாமி கும்பிடலாம்” என்று சொல்லி கூப்பிட, “தேங்க்ஸ்” என்றாள் கண்ணீருடன்.

“கோவில்ல அழக்கூடாது. வா உள்ள போலாம்” என்று அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

“வாடா ராம். கல்யாணம் ஆயிடுத்துனு சொல்லவே இல்ல. நேத்து தான் ரமேஷ் சொன்னாரு நீ இன்னிக்கு பூஜ பண்ண வரனு. வா இப்போ தான் அபிஷேகம் முடுஞ்சுது” என மற்றொரு சாஸ்திரிகள் அவர்களை அழைத்து சென்று அர்ச்சனை செய்துவிட்டு பிரசாதம் தந்தார்.

இருவரும் படியில் வந்து அமர “உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று தலை குனிந்து கண்களில் கண்ணீருடன் கேட்க “அம்மா சொன்னாங்க தீவாளி அன்னிக்கி” என்றான்.

“ஹ்ம்ம், அப்பாவுக்கு நான்னா உயிரு. நான் அழுதா தாங்கமாட்டாரு. எனக்கு என்ன வேணும்னு கேட்டு கேட்டு செய்வாரு”

“அந்த தீவாளி மறக்கவே முடியாது இதேபோல வெள்ளிக்கிழமை தான் வந்துச்சு. எல்லாம் நல்லாப் போச்சு. சண்டே காலைல அம்மா அவரை எழுப்ப போறப்ப அவரு எழுந்திரிக்கல. அப்பறம் தான் தெரிஞ்சுது கார்டியாக் அர்ரெஸ்ட்னு. எங்க யாருக்கும் தெரியல” என்று சொல்லும்போது அவள் தேம்பி தேம்பி அழத்தொடங்கினாள்.

அவன் அவள் தோள்மீது கைவைத்து ஆசுவாசப்படுத்தினான்.

“அதுக்கப்பறம் எல்லாமே மாறிப்போச்சு. ரொம்ப ஸ்ட்ரிக்ட், நிறைய ஏமாற்றம். நான் நினச்சாமாறி ஒண்ணுமே நடக்கல இந்த கல்யாணம் உட்பட” என்று சொல்லும்போது அவளால் அழுகையை தாங்க முடியாமல் இன்னும் அழ

அவன் அவள் காலடியில் அமர்ந்து அவள் கண்களை துடைத்துவிட்டு, அவள் கைகளை அவன் கைகளுக்குளே வைத்து “நந்தினி ப்ளீஸ் அழாத. நான் இருக்கேன்… நீ இனிமே எந்த வகைளயும் ஏமாறாம, எப்பவுமே உன்ன சந்தோஷமா பாத்துக்க நான் முயற்சி பண்றேன்” என்று அவள் கண்களை பார்த்து சொன்னான்.

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved