மீண்டும் ஒரு காதல் – 23

மீண்டும் ஒரு காதல் – 23:

அடுத்து பெங்களூரு நோக்கி பயணம். விமான கார்கோவில் ரோமியை அனுப்பியபின், ரிஷியும் கிளம்பியிருந்தான்.

முழுதாக ஒரு நாள் தேவைப்பட்டது அனைத்தையும் சரிசெய்து கிளம்ப.

ரஜத் அம்மா வந்து பேசியது மற்றும் தன் அத்தையிடம் பேசியது என அனைத்தையும் நினைத்துப்பார்த்தான்.

“நிவேதா, வீட்டு சாமான்லாம் எடுத்துக்க சொன்னா. எங்க கிளம்பினானு தெரியல. ஆனா அவ கிளம்பும்போது கூடவே ஸ்ரீ இருந்தார்” என்று ரஜத் அம்மா சொன்னபோது, ஸ்ரீ மேல் ஒரு நொடி கோபம் வந்தாலும், அவன் மேல் முழு நம்பிக்கையும் இருந்தது.

ரஜத் அம்மா சென்றவுடன், தன் அத்தை பக்கம் திரும்பியவன்… “வேதாகிட்ட என்ன தான் பேசுனீங்க.? சொல்லுங்க”,  பற்கள் கடித்து, கண்கள் சிவக்க, அழுத்தமாகக் கேட்டான்.

ஏற்கனவே அவன் கத்திய சத்தத்தில் கொஞ்சம் பயந்திருந்த அத்தை… இப்போது அவன் முகம் காட்டிய ரௌத்திரத்தில், சொல்ல ஆரம்பித்தார்.

“நீ ஹாஸ்பிடல்’ல அட்மிட் ஆனப்ப, அந்த பொண்ணு வந்துச்சு அப்போ…” என்றவர் சற்று தயங்கி நடந்ததைச் சொன்னார்.

ரிஷி மருத்துவமனையில் சேர்ந்த அன்றே, நிவேதா அவனைப் பார்க்க ஹாஸ்பிடல் வந்தபோது, அங்கே அவளை மறித்தார் அத்தை.

உள்ளே அவனைத் தவிப்புடன் பார்த்து, “என்னாச்சு?” கேட்டாள், மனது முழுக்க பதட்டத்துடன்.

அவளை மேலும் கீழும் பார்த்தவர், கேட்டதற்கு பதில் சொல்லாமல் “உனக்கெல்லாம் வெட்கமாகவே இருக்காதா? எப்படி இப்படி அடுத்து அடுத்து ஆம்பளைங்கள தேடி போயிட்டே இருக்க?” வார்த்தைகள் வரம்பு மீற ஆரம்பித்தது.

நிவேதா தன் கண்களை மூடி தன்னை சமன் செய்துகொண்டு, “நான் பார்க்கணும்” என்றாள் ரிஷியை பார்த்தபடி.

“இவ்ளோ சொல்றேன்… உனக்கு கொஞ்சம் கூட கூச்சம் இல்லல? அதானே… அதெல்லாம் இருந்தா, ஒரு பொண்ணுனு ஆனதுக்கப்புறமும் இப்படி ஆம்பள பின்னாடி சுத்துவியா? அவ்வளவு கேட்குது ….” எப்படியாவது அவளை நோகடித்து, அழ வைத்து அங்கிருந்து அகற்ற வேண்டும்… அப்போது தான் தன் பெண்ணிற்கு ரிஷியுடன் வாழ்க்கை மற்றும் அவனின் சொத்தை தங்களது ஆக்கிக்கொள்ள முடியும் என்ற குறிக்கோளில் பேசினார்.

இதுபோல பேச்சுகளெல்லாம் ஆயிரம் முறை கேட்டு, கண்ணாடி போல இருக்கும் இதயம் உடைக்கவே முடியாத கல்லாக ஆன பின், அதை உடைக்க முற்பட்டால்?! உடையுமா இல்லை முடியுமா?

நிவேதா அமைதியாகவே இருந்தாள். வாசல் வழியே உள்ளே அவனை பார்க்க மனது பிசைந்தது. தூக்கத்தில் இருந்தானோ, மயக்கத்தில் இருந்தானோ, தெரியவில்லை. ஆனால் பக்கத்தில் சில மருத்துவ உபகரணங்கள். ஓடிச்சென்று அவன் கைகளை பற்றிக்கொள்ள மனம் தவித்தது.

தன் பேச்சு அவளிடம் எடுபடவில்லை என்ற கோபத்தில், அவன் அத்தை…

“கல்யாணம் ஆகி எல்லாத்தையும் பார்த்து, குழந்தை வரை வந்த உனக்கு, கல்யாணம் ஆகாத ஆம்பள கேட்குதோ? உன்னைப்போல பொண்ணுகளுக்கெல்லாம் தான், புள்ளயோட இருக்க ஆட்கள் எவ்வளவோ பேர் இருப்பாங்களே! அதுபோல யாரையாவது தேடி போக வேண்டியதுதானே!” குத்தும் வார்த்தைகளைக் கொஞ்சமும் குற்றவுணர்வே இல்லாமல் பேசினார்.

இவர் மட்டுமல்ல… இது பொதுவாக, சமூகத்தின் ஒரு சாராருக்கு இருக்கும் கருத்தே!

குழந்தையோடு இருக்கும் ஆண்கள், திருமணமாகாத பெண்களை மணம் செய்துகொண்டால் அது தவறே இல்லை. ஆனால் ஒரு பெண், அதுவும் வாழ்க்கையில் பல அடிகளை, சந்தித்த பெண்… இது போல திருமணமாகாத ஆணை… மண முடிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், திரும்பிப்பார்த்தாலே அது கொலைக்குற்றம்!

ரிஷியின் அத்தை பேசப் பேச, நிவேதா முகத்தில் எந்த உணர்வும் இல்லை. அமைதியாக, “என் சொந்த வாழ்க்கை பற்றி பேசியதெல்லாம் போதும். இதுபோல நிறைய கேட்டாச்சு… உங்களை கடந்து போக எனக்கு ஒரு நிமிஷம் தான் ஆகும்… உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து நின்னுட்டு இருக்கேன்” என்றாள் நேராக, நிமிர்வாக.

அந்த பதில் அவருக்கு இன்னமும் ஆத்திரத்தைக் கூட்ட, “என் அண்ணியோட சாபத்தினால தான்… நீ இப்போ வாழாவெட்டியா நிக்கிற. கூடவே உன் ராசி… நீ அழிஞ்சி போ, இல்ல நாசமா போ! ஆனா எதுக்கு தேவ் வாழ்க்கையில விளையாடுற? உன்கூட பேசி பழக ஆரம்பிச்ச பாவத்துக்கே, இப்போ கட்டில்’ல கிடக்கிறான். இன்னும் உன் கூட வாழ்ந்தா?!” என்றவர் நிறுத்தி… கொஞ்சமும் தயங்காமல், “பாடைல தான் கிடப்பான்” என்றார் வார்த்தையில் குரூரத்தை ஏந்தி.

இதுவரை இருந்த தைரியமெல்லாம் காற்றோடு போனதுபோல, தளர்ந்து போய் கதவில் சாய்ந்துவிட்டாள். இதயம் படபடத்தது. கண்கள் தானாக ரிஷியை பார்த்தது. முன்பு ரிஷியை அலைப்புறுதலுடன் பார்த்த கண்கள், தற்போது அப்படியே நிலைகுத்தியது.

இதுவரை அவள் நடத்தை, அவளின் வாழ்க்கையை ஏளனமாகப் பேசியபோது  உண்டாகாத வலி, ‘பாடைல தான் கிடப்பான்’ என்று சொன்னது மரண வேதனையைத் தந்தது.

இத்தனை நாட்கள் அவளின் பயமே இதுதான். அனைவரும் சொல்வதுபோல, தன்னால், தன் ராசியால் அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம். அதனாலேயே ரிஷியிடம் எந்த ஒரு முடிவையும் சொல்ல முடியாமல் தயங்கினாள்… தவித்தாள்.

இன்று இவரும், ‘அவனின் தற்போதைய நிலைக்கு அவள் தான் காரணம், அவள் ராசி தான் காரணம்’ என்பதை உதாரணத்தோடு சொன்னவுடன், முற்றிலுமாக உடைந்துவிட்டாள். அவளின் கல் நெஞ்சம்… கண்களில் கண்ணீரைத் தரவில்லை, மாறாக அவனை எண்ணி, இதயத்தில் ரத்தத்தைக் கக்கியது.

‘போதும்… இதுவரை தன்னால் ஆன இழப்புக்களே போதும். அவ்வளவு காதல் கொண்ட வேதாவையே மறக்கச் செய்த மினுவின் அன்பைப் போல, பல மடங்கு அவன் மீது அன்புகொண்ட நெஞ்சத்தை அவனுக்குக் காட்டி விடு’ என்று மானசீகமாகக் கடவுளை வேண்டிக்கொண்டு… அங்கிருந்து ஒரு ஜடத்தைப் போல சென்றுவிட்டாள்.

தன் அத்தையின் தரம் தாழ்ந்த பேச்சில் கோபமுற்றவனுக்கு, நிவேதா மேலும் அந்தளவே கோபம் வந்தது… அவளின் பத்தாம் பசலித்தனமான எண்ணத்தை எண்ணி.

தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு, அவள் எப்படி பொறுப்பாகமுடியும்? புகை பிடிப்பதை அவன் குறைந்திருந்தாலும், மனம் எப்போது மினுவையும், நிவேதாவையும் நாடியதோ, மினு எப்போது ‘தேவப்பா’ என்று அழைத்தாளோ, நிவேதாவிடம் எப்போது மனம் திறந்தானோ, அன்று முடிவெடுத்தான் புகையை முற்றிலுமாக விடவேண்டும் என.

அதை அப்படி உடனடியாக விடும் நிலையை அவன் தாண்டியிருந்ததால், அதற்கான டி அடிக்ஷன் (de-addiction) சிகிச்சை எடுக்க ஆரம்பித்திருந்தான். அச்சிகிச்சை முடியும் நேரத்தில், உடலில் சிலருக்கு சில உபாதைகள் (withdrawal symptoms) ஏற்படும். காய்ச்சல், ரத்த அழுத்தம், மூச்சிரைத்தல் போன்றவை அதில் அடக்கம். இதை அவளுக்குத் தெளிவாகச் சொல்ல எண்ணியிருந்தான். ஆனால் அதற்க்குள் என்னென்னவோ நடந்துவிட்டது.

விமான அறிக்கையின் ஒலியில் நிகழ்காலத்துக்கு வந்தவனுக்கு, நிவேதா மேல் கோபம் இருந்தாலும், அவளுக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றி எண்ணும்போது… அவள் பயப்படுவது அவளைப் பொறுத்தவரையில் நியாயமே! அந்த எண்ணத்தை தான் தான் போக்க வேண்டும் என முடிவெடுத்தான்.

மினுவின் அம்மாவாக… ஸ்ரீ மூலம், அவளைப் பற்றியும், அவள் முதல் திருமணத்தில் அனுபவித்த ரணங்களைப் பற்றியும் கேட்டபோது, அன்று அவன் மனம் அழுத்தியது. இப்போது தன் வேதா தான் இவ்வளவும் அனுபவித்திருக்கிறாள் என்று எண்ணும்போது கூட அதே அழுத்தம் ஏற்பட்டாலும்… சரி அளவு ரௌத்திரமும் மேலோங்கியது விஜய்யை நினைக்கையில்!

அவனைப் பொசுக்கும், சுக்கு நூறாக்கும் அளவிற்கு மனம் கனன்றது. சில நிமிடங்கள் தேவைப்பட்டது தன்னை சமநிலைப் படுத்திக்கொள்ள.

பின், தன்னை பார்த்த முதல் நாளிலிருந்து அவளுடைய முக மாற்றங்களை, கடினப்பட்டு நினைவுகூர்ந்தான்.

எந்த இடத்திலும், அவளுக்கு நெருக்கமானவன் என்ற பார்வையை ஒருமுறை கூட அவள் பார்க்கவில்லை என்று நினைத்தபோது… ‘கல்நெஞ்சக்காரி! வருகிறேன் அதைக் கரைக்க’ என்று புன்னகையுடன் மனதில் சூளுரைத்துக்கொண்டான் .

‘தன் வேதா தான் நிவேதா என்று தெரிந்ததும், ஒரு நாளை நகர்த்துவது கூட ஒரு யுகம் போல தனக்கு இருக்க… தன்னை தெரிந்தும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், எப்போதும் சிடுசிடுவென எப்படி அவளால் இருக்க முடிந்தது?’ இதை நினைக்கும்போது… அவளின் சிடுசிடுத்த முகம் வந்து செல்ல, மந்தகாசமாகப் புன்னகைத்தான்.

வேதா தான் என்று இருந்த வாழ்க்கையில்… விதி நிவேதா என்ற பெயரில் ஒரு பெண்ணை அறிமுகம் செய்து… பின் தன்னை இங்கே அழைத்து வந்து… மினுவின் பாசத்தை தனக்கு உணர்த்தி… அந்த பாசம் என்றும் கிடைக்க, நிவேதாவை திரும்பிப்பார்க்க வைத்து… அவளை அவளாகவே தனக்குப் பிடித்துப்போகச் செய்து… புது வாழ்க்கை இந்த உறவுகளுடன் ஏற்படுத்தத் தூண்டி… புது உறவு அரும்ப காத்திருந்தபோது… இது புதிதாக முளைத்த அரும்பல்ல, என்றோ விதைத்த விதையின் கால தாமதமான துளிர் என்றுணர்த்திய விதியை நினைக்கும்போது அவன் உடல் சிலிர்த்தது.

காலத்தின் விளையாட்டிற்கு முன், மனிதர்களின் சுயநல விளையாட்டெல்லாம் எம்மாத்திரம்!

சில நிமிடங்களில் பெங்களூரு வந்தடைந்தான் ரிஷி. நேராக அவன் சென்றது அவர்கள் அலுவலகத்தின் பெங்களுரு கிளைக்கு.

அவனைப் பார்த்ததும், அதுவும் AVP என்றவுடன் கொஞ்சம் அதிகமாகவே உபசாரங்கள் நடந்தது. அவனுக்குத் தேவை அதுவல்ல. ஸ்ரீயை பார்க்கவேண்டும். அதுவும் உடனே!

முந்தைய தினம் முழுவதும் ஸ்ரீ எண்ணிற்கு அழைக்க, எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்ற செய்தியே வந்தது. இன்றும், ஸ்ரீயை தொடர்பு கொள்ள முடியவில்லை.

மாலை நேரம் கடந்தபோது, ரிஷியின் காத்திருப்புக்குப் பதில் கிடைத்ததுபோல, ஸ்ரீ அழைப்பை எடுத்தான்.

“சொல்லுங்க ரிஷி!” என்ற அவன் குரலே சொல்லியது அவனின் விருப்பமின்மையை.

“உங்களை உடனே பார்க்கணுமே ஸ்ரீ”

“மெயில் அனுப்பிட்டு தான் அங்கிருந்து கிளம்பினேன்” கொஞ்சம் அழுத்தமாகச் சொன்ன ஸ்ரீ… “நான் இப்போ நொய்டா’ல இல்ல… பெங்களுருக்கு ஷிஃப்ட் ஆயிட்டேன் ரிஷி” என்றான்.

“ஐ நோ ஸ்ரீ. இப்போ நானும் பெங்களுருல தான் இருக்கேன்” ரிஷியும் அழுத்தமாகச் சொன்னான்.

சில நொடிகள் மௌனம். பின் ஸ்ரீ அவனிருக்கும் வீட்டின் முகவரியைத் தந்து, ரிஷியை வரச்சொன்னான்.

அடுத்த நாற்பது நிமிடங்கள்… கொஞ்சம் படபடப்பும், நிரம்ப மகிழ்ச்சியும் மனதில் ஏந்திக்கொண்டு ஸ்ரீ வீட்டிற்குச் சென்றான்… நிவேதாவை, கூடவே அவனின் வேதாவை அங்கே பார்க்கப்போகிறோம் என்ற ஆவலுடன், ஆசையுடன், தவிப்புடன்.

ஸ்ரீ வீட்டின் அழைப்பு மணியை அடிக்க, அவன் இதயம்… அந்த அழைப்பு மணியின் ஓசையை மிஞ்சி ஒலித்தது… அங்கு ஏற்பட்ட பதட்டத்தின் விளைவால்.

பதின் பருவ ஆண்மகனைப் போல தன்னை உணர்ந்தான் ரிஷி. இருந்த மனநிலையிலும் அது சிரிப்பைத் தந்தது.

கதவு திறக்கப்பட, ரிஷியை வரவேற்றான் ஸ்ரீ. ரிஷியின் கண்கள் வீட்டை மேய்ந்தது, ‘எங்காவது அவள் தரிசனம் கிட்டுமா’ என்ற ஆவலில். பாவம் அங்கும் அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

குடிக்கத் தண்ணீர் கொடுத்த ஸ்ரீ, “சொல்லுங்க ரிஷி என்ன விஷயமா வந்திருக்கீங்க?” அவன் முகம் கொஞ்சம் கடுமையுடன் இருக்க, “உங்களுக்கே தெரியும் ஸ்ரீ. நிவேதா மினு…” என்று ஆரம்பிக்கும் போது…

“அவங்க எதுக்கு மிஸ்டர் உங்களுக்கு?” கேட்டபடி ஒரு பெண் வெளியே வந்தாள்.

புதிய முகம் ரிஷிக்கு. ரிஷி வந்த பெண்ணை ஏறிட்டுப் பார்க்க, “அங்க பேசி நோகடிச்சது பத்தாதா?” கேட்டபடி ஸ்ரீ பக்கத்தில் உட்கார்ந்தாள். கண்களில் கோபம் தெறித்தது.

“ஷி இஸ் மாலினி. என்னோட fiancee. நிவேதாவோட ஃப்ரெண்ட்” என்று அறிமுகப்படுத்தினான் ஸ்ரீ.

மாலினியைப் பற்றி அத்தியாயம் எட்டில்… மினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, நிவேதாவின் தோழி என்று பார்த்திருப்போம்!

ஏனென்றே தெரியாத நிம்மதி ரிஷிக்குள் ‘fiancee’ என்பதை கேட்டவுடன். இப்போது புன்னகைத்தான்.

பின், “மினு, நிவேதாவை பார்க்கணும்” என்றான் வந்த வேலையில் குறியாக.

“இங்க பாருங்க ரிஷி. அன்னைக்கு உங்க ரிலேட்டிவ் நிவேதாகிட்ட ரொம்ப கடினமா பேசினாங்க. அவ்ளோ தரக்குறைவான பேச்சு. உங்க ரிலேட்டிவ்கிட்ட இருந்து இப்படி ஒரு” எதையோ சொல்லவந்தவன் நிறுத்தி… “ எதிர்பார்க்கல ரிஷி” என்று முடித்துக்கொண்டான்.

“அதுக்கும் சேர்த்து நிவேதாகிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்திருக்கேன்” ரிஷி பதில் தந்தான்.

“ஓ! மன்னிப்பு” ஏளனமாகப் புன்னகைத்த மாலினி, “அந்த ஒரு வார்த்தை… நிவேதா கேட்ட வார்த்தைகளை எல்லாம் இல்லாம ஆக்கிடுமா?”

மூச்சை வெளியிட்ட ரிஷி, “உங்க ஃப்ரெண்ட்’காக நீங்க பேசுறது புரியுது மிஸ் மாலினி. விட்ட வார்த்தைகள் ரொம்ப அருவருக்கத்தக்கது, அபத்தமானது தான். பட்” என்று நிறுத்திய ரிஷி…

“என்னோட அன்பு உண்மையானது. உங்களுக்கு தெரியுமான்னு தெரியல. பட், அது நிவேதாவிற்கு தெரியும். எங்களோட அன்பிற்கான வயது” என்று அவன் சொன்ன வருடங்கள் கேட்டு இருவரின் புருவங்களும் முடிச்சிட்டது.

பின் மாலினி, “அவளோட பாஸ்ட் லவ்?” என்று கேட்க, ‘தன்னைப் பற்றி சொல்லியிருக்கிறாளா’ என்ற யோசனை வந்தாலும், லேசான புன்னகையுடன் இல்லை என்பதுபோல தலையசைத்தவன், “என்னோட பாஸ்ட், ப்ரெசென்ட், ஃப்யூச்சர் எல்லாமே அவ தான்” என்றவனின் குரல், கண்கள் அனைத்தும் அவன் காதலைப் பிரதிபலித்தது.

இப்போது இருவருக்கும் சின்ன அதிர்ச்சி. இந்த சில மாதங்களாக நடந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை மேலோட்டமாக சொன்ன ரிஷி, “இப்போ நம்பறீங்களா?” நேராகக் கேட்டான் அவர்களிடம்.

சில நொடிகள் மௌனத்திற்குப் பின், ஸ்ரீ “நிவியை இங்க தான் இருக்க சொன்னோம். முடியவே முடியாதுனு ஒரே ப்ராப்ளம் பண்ணிட்டா. அப்புறம், மாலினிக்கு தெரிஞ்சவங்க மூலமா…  குர்க் பக்கத்துல இருக்கிற ஒரு போர்டிங் ஸ்கூல்’ல இன்னைக்கு ஜாயின் பண்ணிட்டா. நாங்க தான் கூட போனோம். அங்கேயே ஒரு வீடு பார்த்து செட்டில் பண்ணி கொடுத்துட்டு வந்தோம்” என்றவுடன், என்னவென்று விவரிக்க முடியாத ஓர் உணர்வு ரிஷி மனதில்.

இப்போது தெளிவாகத் தெரிந்துவிட்டது அவனுக்கு அவளின் இருப்பிடம். எதிரில் இருக்கும் இருவர் மேல் கோபமும் வந்தது… நிவேதாவை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டார்கள் என எண்ணி.

“நான் உடனே கிளம்பறேன்” என்று எழுந்த ரிஷியைப் பார்த்து, ஒரு நொடி இருவரும் புன்னகைத்தாலும், “நைட் போறது சேஃப் இல்ல” என்றான் ஸ்ரீ.

ரிஷி அதெல்லாம் கேட்காமல் புறப்பட, வலுக்கட்டாயமாக அன்றிரவு தங்கச் சொல்லிவிட்டு அடுத்த நாள் விடியற்காலை புறப்படும்படி சொன்னார்கள் இருவரும்.

இரவு உணவிற்குப் பின்… மூவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஸ்ரீ, “நீங்க போன் பண்ணப்ப, உங்களை நான் அவாய்ட் பண்ணியிருக்கலாம் ரிஷி, பட், நிவி லைஃப்ல நீங்க இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. உங்களைப் பார்த்த அப்புறம், அவகிட்ட நிறைய ச்சேஞ்சஸ் நான் பார்த்திருக்கேன்” 

ஸ்ரீ சொன்னவுடன், மாலினி ரிஷியிடம்… “வாழ்க்கையில, நிறைய கஷ்டங்களை அனுபவிச்சிட்டா. அதெல்லாம் இப்போ நினைச்சாலும் மனசு பதறும்” என்ற மாலினி, நிவேதாவை பற்றி அவளுக்குத் தெரிந்ததை, நிவேதா அவளிடம் பகிர்ந்து கொண்டதை… சொல்ல ஆரம்பித்தாள்.

****************************************

பெரும்பாலான பெண்களுக்கு திருமணம் என்பது பல ஆயிரம் கனவுகளுடன், மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கும். ஆனால் சிலருக்கு எண்ணிலடங்கா துயரங்களுடன் ஆரம்பிக்கும். நிவேதா இரண்டாம் ரகம்.

கட்டாயத்தின் பேரில் நடந்த திருமணம். அது முடிந்து அனைவரும் வீடு திரும்பியிருக்க, நிவேதாவிற்குள் ஒரு சின்ன பயம் இருந்துகொண்டே இருந்தது.

குழந்தையுடன் அறையினுள்ளே இருந்தாள். அன்று இரவு நெருங்க, சொந்தங்களால் விஜய் அறையினுள் அனுப்பப்பட்டாள்.

அவளுக்கு இது கட்டாயத்தால் நடந்த திருமணம். விஜய்க்கு இது சுயலாபத்துக்காக செய்துகொண்ட திருமணம். அவளுக்கு திருமணமே பிடிக்கவில்லை. அவனுக்கு அவளையே சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால், அவனுக்கு அவளிடம் பூர்த்தி செய்துகொள்வதற்கு விஷயங்கள் இருந்தது. அதனால் இந்த இரவை உபயோகித்துக்கொண்டான்.

ஜன்னல் பக்கம் நின்றிருந்த நிவேதா மேல், லேசான பனிக் காற்று மட்டுமல்ல, தேவ்வின் நினைவுகளும் தீண்டிச் சென்றது.  மனம் முழுவதும் ரணம்.

‘என்ன ஆயிற்று தேவாவுக்கு. தன்னை ஏமாற்றிவிட்டானா? அவ்வளவுதான் காதலா? தங்கள் காதலின் ஆழம் அவ்வளவுதானா? ஒருமுறை கூட தன் நினைவு அவனுக்கு வரவே இல்லையா?’ மனதில் ஒரு வித அழுத்தம் அதிகமாக… “நிவி” என்ற விஜய்யின் அழைப்பு அவளைத் திரும்பச்செய்தது.

‘அடுத்தென்ன’ என்பதுபோல, அவள் அவனைப் பார்க்க… “நான் இன்னும் இதுக்கெல்லாம் ரெடி ஆகல. நீயும்தான்னு நினைக்கிறேன். சோ இதெல்லாம் இப்போ வேண்டாம்” என்றவுடன், சின்னதாக நிம்மதி பெருமூச்சு வந்தது அவளுக்கு. தலையசைத்துக்கொண்டாள்.

சில நிமிடங்கள் மௌனம்.

“அண்ணனோட பிஸ்னஸ்’ஸ அப்படியே விட முடியாது நிவி. அண்ணனோட கனவு அது. நாம தான் அதை நல்லா பார்த்துக்கணும்”  ‘நாம தான்’ என்பதை கொஞ்சம் அழுத்தமாக அவன் சொன்னதும், அவனை நம்பாமல் பார்த்தாள் நிவேதா.

அது புரிந்து அவளை நம்ப வைக்க வேண்டி, “நான் சிங்கப்பூர் போணும்னு தான் வேலையை ரிசைன் பண்ணேன். பட், அதுக்குள்ள இந்த கல்யாணம் அது இதுனு முடிஞ்சிடுச்சு. சோ புதுசா ஒரு இடத்துல வேலைக்கு போகிறதுக்கு அண்ணா கம்பனிலேயே வேலை செஞ்சிட்டு போறேன். நீயும் இத்தனை நாள் வீட்லயே அடஞ்சு கிடக்கிற. ரெண்டு பேரும் நாளைக்கு போகலாம். ஓகே வா?”அவன் கேட்க… அரை மனதாக தலையசைத்தாள் நிவேதா.

எதுவுமே பேசவில்லை. அவளுக்கு தற்போதைய தேவை மித்ரன் அனுராதாவின் தொழில் அல்ல… அவர்களின் குழந்தை. குழந்தை மட்டுமே!

அடுத்த நாள் முதல் வேலையாக, விஜய் மற்றும் அவன் குடும்பம் செய்தது, சட்ட ரீதியாக மித்ரன், அனுராதா குழந்தையை, இனி விஜய், நிவேதா குழந்தை என்று மாற்றுவதே. அதற்கான வேலைகள் துவங்கியது.

நிவேதாவிற்கு விஜய் இதில் இணைந்தது… வெறுப்பாகவும், பிடித்தமில்லாமல் இருந்தாலும்… ஒரு நிம்மதி. இனி சட்டப்பூர்வமாகக் குழந்தை தன்னுடையது என்று. யாரும் உரிமை போராட்டம் நடத்த முடியாது என்று.

அடுத்த நாள் இருவரும் அலுவலகம் புறப்பட, குழந்தையை எடுத்துச்செல்லலாமா என்று நிவேதா கேட்டவுடன், அனைவரும் சரி என்றனர். அதுவே பெரும் திருப்தியாக இருந்தது அவளுக்கு.

அலுவலகம் போகும்போதே, ‘தனக்கு அங்கு மரியாதை கிடைக்குமா? தன்னிடம் எப்படி நடந்துகொள்வார்கள்? தன்னை ஏற்றுக்கொள்வார்களா? நீ கொஞ்சம் அவர்களிடம் பேசுகிறாயா?’ என்று விஜய் புலம்பியபடி அவளிடம் கேட்க… நிவேதா பேசாமல் தலையசைத்தாள்.

இதில் விருப்பமில்லை தான். இருந்தாலும், போராட முடியாது என்பதை விட போராட விருப்பமில்லை என்பது தான் அவளுக்கு.

அவன் கேட்டுக்கொண்டது போலவே, ‘விஜய் முக்கியம்’ என்று அலுவலகத்தில் பேசினாள்.

அன்றைய முன் மாலைப் பொழுதில், அலுவலகத்திலிருந்து நேராக விஜய் நிவேதா மற்றும் குழந்தை மூவரும் கோவிலுக்குச் சென்றனர், விஜய்யின் அம்மா சொன்னதன் பேரில். அங்கே குழந்தைக்கு ஏதோ பூஜை என சொல்லியிருந்தார்.

நிவேதாவிற்கு மனமேயில்லை செல்வதற்கு. குழந்தைக்காக என்றவுடன் மறுக்க முடியாமல், வேறு வழியில்லாமல் சென்றாள்.

விஜய்யின் அப்பா, அம்மா, இருவரும் நேராகக் கோவில் வந்தடைய, விஜய் குழந்தையைத் தூக்கிக்கொண்டே எல்லாம் செய்தான். நிவேதா கேட்டும் கொடுக்கவில்லை.

எரிச்சலாக வந்தது அவர்கள் மேல். இது அனைத்தையும் தாண்டி, தத்த ஹோமம் (சுவீகாரம்) என்ற பெயரில் அவர்கள் செய்த சில செயல்கள் வெறுப்பின் உச்சிக்கே அவளை எடுத்துச்சென்றது.

குழந்தைக்குப் பெயர் என்ற பேச்சு வர, முன்பே நிவேதா யோசித்துவைத்த… மித்ரன் அனு இருவரின் பெயரை இணைத்து ‘மினு’ என்ற பெயரை அவள் சொல்ல, அதுவே வைக்கப்பட்டது.

விஜய் மற்றும் அவனது குடும்பம் குழந்தை என்ற துருப்புச்சீட்டை வைத்து, ஒவ்வொன்றையும் தங்களுக்கு சாதகமாக நடத்திக்கொண்டார்கள்…. அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவர்களுக்கான ஆதாயம், சுயநலம் இருப்பதை நன்றாகப் புரிந்துகொண்டாள்.

ஓரிரு நாட்கள் மெதுவாக நகர்ந்தது. அலுவலகம் வருவது, செல்வது என்பதே பெரிய சுதந்திரம் போல இருந்தது அவளுக்கு.

விஜய் தேவையென்றால் தன்னிடம் பேசுவது, இல்லையேல் ஒரு பொருட்டாகக்கூட தன்னை நினைக்காதது, அதுவும் சிலசமயம் அவனின் ஏளனப்பார்வை தெளிவாகத் தெரிந்தது அவளுக்கு. அதையெல்லாம் அவள் பொருட்படுத்தவே இல்லை. அவன் பெயருக்கு மினுவின் தகப்பன் அவ்வளவே!

இப்போது நினைத்தால் நிவேதா தேவ்வை, அவன் எண்ணை அழைக்க முடியும்… ஆனால் ஏமாற்றப்பட்ட வேதனை, அடைபட்ட வலி… அவன் அவளை நிர்கதியில் விட்டது… என அனைத்தும் சேர்ந்து அவன் மேல் கோபமாக மாறியது.

அவன் நினைத்திருந்தால், கல்யாணத்தை நிறுத்தியிருக்கக்கூடும் என்ற எண்ணம். அவன் நினைத்திருந்தால், அவன் அம்மாவை மீறி வந்திருக்கலாம் என்ற கோபம்.

தான் இப்போது இந்நிலையில் இருப்பதற்கு அவனும் ஒரு காரணம் என்று அவன் மேல் தினம் தினம் கோபம் கொண்டாலும், அவனை நினைக்காத நாளில்லை. மங்கை மனம் இப்போது கூட, ‘தேவா தன்னை தேடி வந்தால்’ என்று அவ்வப்போது எண்ணிப்பார்த்தது.

திருமணமான பின் ஒரு பெண் கடந்த கால காதலனை நினைத்தால், அவன் தன்னை தேடி வந்தால் என எண்ணினால், அது அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய வாழ்க்கை… அவளுக்கு மகிழ்ச்சியை, நிறைவை, குறைந்தபட்சம் நம்பிக்கையைக் கூட தரவில்லை என்று அர்த்தம்.

கிட்டத்தட்ட கத்தி முனையில் நடந்தேறிய திருமணம். அவளின் விருப்பம் கேட்டு நடக்காத மணம், அதை எப்படி மனம் ஒப்புக்கொள்ளும்? மஞ்சள் கயிற்றின் மாயமெல்லாம் கட்டியவனை பொறுத்தது!

நாட்கள் செல்ல செல்ல, ஒரு விடுமுறை நாளில், அடுப்பங்கரையில் விஜய் அம்மா அவனிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு நின்றுவிட்டாள்… காரணம் அவள் பெயர் அடிபட்டதால்.

“ச்சை! அவளை பார்த்தாலே கிட்டக் கூட போக தோண மாட்டேங்குதுமா. ஆளும் அவளும். நீ வேற” இதைக் கேட்டதும் இரண்டு மூன்று நொடிகள் தேவைப்பட்டது நிவேதாவுக்கு… அதன் பொருள் புரிந்துகொள்ள.

புரிந்தபோது இதழ்கள் மட்டும் புன்னகைத்தது. வலி தைத்த புன்னகை. நிறைய முறை கேட்ட ‘தன் வெளிப்புற தோற்றத்தை’ பற்றிய பேச்சுதான். இப்போது வேறு பரிமாணத்தில் கேட்கிறாள்.

ஒரு நல்ல தாயாக மகனைத் திட்டியிருக்க வேண்டும் இப்படிப் பேசியதற்கு. ஆனால் அங்கு நடந்தது… “அந்த வினோதினி மா சொன்னது ஞாபகம் இருக்கில்ல. எல்லாம் எவ்ளோ சீக்கிரம் நடக்குதோ… அப்போதான் நமக்கு நல்லது. புள்ள கிள்ள வந்தா, அடங்கி வீட்ல இருப்பா. நீ எதுக்கு அவளை பார்…” என்று அவர் பேச்சுக்கள் நாராசமாக மாற, பேசியவர்களுக்குக் கூசவில்லை. கேட்டுக்கொண்டிருந்த நிவேதாவிற்கு உடல் கூசியது, தகித்தது. காதுகளை அடைத்துக்கொண்டாள்.

நேராக தன் அறைக்குள் செல்ல, ஆளுயர கண்ணாடி அவள் முன். அவர்கள் பேச்சு மறுபடியும் ஒலிக்க… அருவருப்பாக இருந்தது. அவமானமாக இருந்தது. கண்ணீர் வரவில்லை, ஆனால் உடல் முழுக்க எரிந்தது.

உடல் சம்பந்தப்பட்ட பேச்சு… என்றதும் அவளின் தேவா நினைவுகள்! ‘எவ்வளவு ஆத்மார்த்தமான காதல் தேவாவினுடையது. ஒருவேளை அவன் தன்னை பார்த்திருந்தால் இப்படி தான் பேசியிருப்பானோ?’ ஒருபுறம் மூளை அதை யோசிக்க… ‘என் தேவா அப்படியில்லை’ என்ற மனதின் எண்ணம் மேலோங்கியது.

மனம் அதிலேயே உழன்றுகொண்டிருக்க, அன்றைய இரவு… அவன் அம்மா அவளுக்கு உணவைப் பரிமாறினார். அவர்களைப் பார்க்கும்போது அருவருப்பாக இருந்தது. அமைதியாகச் சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிட்டாள்.

பின், என்றைக்கும் இல்லாத திருநாளாக விஜய் அம்மாவே அவள் மறுத்தும் கேட்காமல் பாலை குடிக்கத் தந்து, அவள் முடிக்கும் வரை காத்திருந்துவிட்டு பின் சென்றார். 

கண்கள் தூக்கத்தைத் தழுவ, மினு பக்கத்தில் படுத்துவிட்டாள். கண்களில் ஏதோ மங்கலாகத் தெரிந்தது. ஆனால், என்ன என்று புரியவில்லை. சிறிது நேரத்தில் உடலெங்கும் ஏதோ ஓர் உறுத்தல். பின் அந்த மயக்கத்திலும் மெல்லிய வலி. மயக்கம் ஆட்கொண்டதால், அவளைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

அடுத்த நாள் சுத்தமாக எழ முடியவில்லை. உடலெங்கும் நோகியது . இதுவரை வலிக்காத இடங்களிலெல்லாம் வலி. அப்போதும் அந்த பேதை பெண்ணுக்குப் புரியவில்லை ஏன் என்று. அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை இவ்வளவு கீழிறங்குவார்கள் என்று… அதுவும் மித்ரனின் குடும்பம்.

பக்கத்தில் மினு பசியில், வயிறு ஒட்டிப்போய், உச்சஸ்தானியில் கத்திக்கொண்டிருந்தாள். மணி பார்க்க, பதினொன்று. ‘இதுவரை குழந்தை சாப்பிடவில்லையா’ என்ற பதட்டம், வலியை மீறி, கண்கள் சொருகியதையும் தாண்டி, எழுந்தாள்.

எழுந்தபோது தான் பார்த்தாள்… கால் மீது கால் போட்டு உட்கார்ந்தபடி மடிக்கணினி பார்த்துக்கொண்டிருந்த விஜய். “குழந்தை அழுகுது. கேட்டுட்டு அப்படியே உட்கார்ந்திருக்கீங்க” என்றதெல்லாம் அவன் காதினுள் சென்றதா என்று தெரியவில்லை.

தன்னிடம் தெரியும் மாற்றங்களுக்கான காரணத்தை யோசிக்கக்கூட முடியாத அளவுக்கு மினுவின் அலறல் கேட்டது. அறைவிட்டு விட்டு வெளியே செல்ல, அவன் அப்பா அம்மா இருவரும், மும்முரமாக டிவி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

‘குழந்தை அழுகும் சத்தம் கேட்டும் எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகிறது?’ அவர்களை எண்ணி ஆத்திரத்துடன் மினுக்கு பால் எடுத்துச்சென்று கொடுத்துவிட்டுத் திரும்ப, அவள் எதிரில் நின்றான் விஜய்.

கோபத்துடன் அவனைக் கடந்து, குளியலறை செல்ல நினைக்கும்போது, அவள் கரம் பற்றி தடுத்தவன்… “அவனுக்கு முன்னாடி எவன்கூடவாவது சுத்தினயா?” விஜய் இதை கேட்டவுடன், புருவம் சுருக்கி புரியாமல் பார்த்தாள்.

பின் ஒவ்வொரு வார்த்தையாக யோசிக்க, விழிகள் அதிர்ச்சியில் முழுதாக விரியவில்லை… அதற்குள், “கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் பார்த்துட்ட போலயே. யூஸ்ட் ஐட்டம்” என்றவன் அவளை மேலிருந்து கீழ்வரை, கூசும்படி பார்த்து…

“உன்னை…” அவன் சொல்லி முடிப்பதற்குள், அவனின் பேச்சு, தன் உடலில் தெரிந்த மாற்றங்கள், அவனின் ‘யூஸ்ட் ஐட்டம்’ கூற்று புரிந்து, அவள் கை அவன் கன்னத்தைப் பதம் பார்த்தது.

பெண்ணின் கற்பை… அதற்கான புனிதத்தை?! கணக்கிடும் சில வரையறை! அதில் ஒன்று… முதல் கூடலுக்குப் பின், வெள்ளை நிற படுக்கை விரிப்பு, வெள்ளை நிறமாகவே இருக்கிறதா இல்லை நிறம் மாறி இருக்கிறதா என்று பார்ப்பது!

என்று மாறும் இந்த எண்ணம்?!  இன்றைய காலத்தில் பெண்கள் விளையாட்டில் ஆரம்பித்து, தற்காப்புக்கலை, வாகனம் ஓட்டுதல் என்ற பல விஷயங்களால் உடலளவில் நிறைய மாற்றங்களைச் சந்திக்கிறார்கள்.

“என்னடா பண்ண என்னை?” தனக்கு என்ன நேர்ந்தது என்று புரிந்து அவள் சீறும் நேரம், “என்னையா அடிச்ச. ஆம்பள மேல கை வைப்பயா? உனக்கு அவ்ளோ ஆயிடுச்சா?” கொத்தாக அவள் முடியைப் பற்றி, ஆண்மகனுக்கான புதிய இலக்கணத்தைக் காட்டிக்கொண்டிருந்தான்.

நிவேதா எவ்வளவு முயன்றும் அவன் வலிமைக்கு முன் தோற்றுப்போனாள். அறைக்குள் சத்தம் கேட்டு அவன் பெற்றோர் வர, அவளின் நிலையைப் பற்றி கேட்காமல், “என்ன பண்ணி வச்சா விஜய்?” அவளையே குறையாக அவர்கள் கேட்க, தன் பத்தாம் பசலித்தனமான கண்டுபிடிப்பை, புத்திசாலித்தனம் என்ற பெயரில் பெருமையாக அவர்களிடம் சொன்னான்.

இப்போது அவன் அம்மா அப்பா இருவரும் சேர்ந்து அவளின் நடத்தையை வசைபாட, நிவேதா அருவருப்பில் கூனி குறுகிப்போனாள்.

உடலளவில் ஏற்கனவே நடந்தேறிய தாக்குதலிலிருந்து அவள் மீளவில்லை, அதற்குள் மீண்டும் உடலளவில் அவனின் தாக்குதல், கூடவே இப்போது மனதளவிலும்.

துவண்டு போய் இருந்தபோது, இந்த நிலையிலும் தேவாவின் கண்ணியம், ஏனோ கண்முன் வந்து சென்றது. இதுவரை இருந்த தைரியம், கொஞ்சம் கொஞ்சமாகத் தளர, ‘உனக்கு என் ஞாபகமே வரலையா தேவா?! வந்திருந்தா இந்நேரம் வந்திருப்பியே என்னைப் பார்க்க’ கண்களில் கண்ணீர் வெளிவந்தது.

கண்ணாடி முன் தன் உடலைப் பார்க்கையில், விஜய் ஏற்படுத்திய தடங்களைப் பார்க்கையில், அருவருப்பாக இருந்தது.

பெண்ணின் விருப்பமில்லாமல்… ஆசைக்காக ஓர் ஆண், பெண்ணை நெருங்குவது என்பது மாபெருங்குற்றம், மிகவும் கீழ்த்தரமான செயல்.

ஆனால், அந்த ஆணுக்கும் விருப்பமில்லாமல், பெண்ணிற்கும் விருப்பமில்லாமல், ஏதோ ஒரு ஆதாயத்துக்காக, தூண்டுதலின் பெயரில் நெருங்குவதை என்ன என்று சொல்வது? மிகவும் கேவலமான அருவருக்கத்தக்கச் செயல். அதை எண்ணுகையில் அசிங்கமாக இருந்தது நிவேதாவிற்கு.

அன்று முழுவதும் விஜய் ஏதோ வகையில் அவளை உடலளவில் இல்லையேல் மனதளவில் அவளை காயப்படுத்திக்கொண்டே இருந்தான். மறுபடியும் ஒற்றையறையில் அடைப்பு.

இப்படியாக இரண்டு நாட்கள் நகர்ந்தது. தினமும் ஏதோ ஒரு சாக்கிற்காக அவன் கைகள் நீளும் கூடவே பேச்சுக்களும்!

அப்படியிருக்கையில், அன்று காலை விஜய் அவள் முகத்தில் விட்டெறிந்தான் ஒரு பத்திரிகையை. அதைப் பார்த்து இன்னமுமா அவள் இதயம் துடிக்கிறது என்ற கேள்வி தான் அவளுள்.

அது தேவ்வுக்கும் கௌரிக்கும் நடக்கவிருக்கும் திருமணத்திற்கான பத்திரிகை!

9
6
2
3
2
1
1

4 thoughts on “மீண்டும் ஒரு காதல் – 23

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved