மீண்டும் ஒரு காதல் – 6
மீண்டும் ஒரு காதல் – 6:
அன்றைய தின மதியம், மினுவை அலுவலகத்திற்கு அழைத்து வந்துவிட்டாள் நிவேதா.
பின் அவன் அறையில் மினுவும், ரிஷியும் எப்பொழுதும் போல கொஞ்ச நேரம் பேசினர். மாலை வீட்டிற்கு சென்ற பின், ரிஷியின் வீட்டில் மினுவும் ரஜத்தும் ரோமியுடன் விளையாடிக் குதூகலித்தனர்.
இவ்வாறே நாட்கள் நகர்ந்தது.
ரஜத் எப்போதும் அமைதியாக விளையாடுவான். ஆனால் மினு ரிஷியுடன் மிகவும் சகஜமாக பழகினாள். அவளிருக்கும்போது அவன் தனிமையை அது மறக்கச் செய்தது.
இத்தனை நாட்கள் பழகியதில், மினு அவள் அப்பாவை பற்றி பேசியதேயில்லை. அதை ரிஷியும் கவனித்திருந்தான்.
ஒரு குழந்தை தந்தையைப் பற்றி பேசுவதே இல்லை என்றால்… ஒன்று தந்தையைப் பிரிந்து இருக்க வேண்டும்… இல்லை தந்தையே இல்லாமல் இருக்க வேண்டும்.
இதை யோசிக்கும்போது நிவேதாவின் முகம் வந்து செல்லும்… ‘தனியாக அனைத்தையும் சமாளிக்கிறாளே’ என்று. அவள் மேல் கொஞ்சம் மரியாதையும் கூடியது.
ரிஷியை சந்திப்பதற்கு நிவேதாவும் மினுவிற்கு அதிகம் தடை போடவில்லை.
‘அவன் தனியாக இருக்கிறான். மினுவால் அவன் மனம் கொஞ்சம் நிம்மதி அடையும் என்றால் அதை தடுக்க வேண்டாம்’ என எண்ணினாள். இது ஒரு காரணம் என்றால், மற்றொன்று…
‘ரிஷி இந்திய கிளை விரிவாக்கத்திற்கே வந்திருந்தான். அதிக நாட்கள் இருக்க வாய்ப்பேயில்லை. இருக்கும் வரை மினுவுடன் சந்தோஷமாக இருக்கட்டும்’ என்ற எண்ணம்.
இது ஒருபுறம் இருந்தாலும், அவள் தான் உண்டு தன் வேலையுண்டு என்று தான் இருந்தாள். ரிஷியிடம் சகஜமாகவெல்லாம் பேசமாட்டாள்.
ஆனால் அவ்வப்போது மினுவுடன் அவன் நெருக்கத்தைப் பார்க்கும்போதெல்லாம் மனதில், பழைய நிகழ்வுகளால் எழும் அழுத்தங்கள், இதயத்தின் மேல் பாரத்தை இறக்கிவைத்தது போல இருக்கும். அது மூச்சு முட்டவும் வைக்கும்.
நிவேதாவுக்கு இப்படி என்றால், இந்த சில நாட்களில், ரிஷி ’மினு இல்லாத மாலைப் பொழுதைக் கழிப்பது மிகவும் கடினம்’ என்ற நிலையிலிருந்தான். அந்த அளவுக்கு மினு அவன் மேல் அன்பாகவும் அக்கறையுடனும் இருந்தாள்.
அவன் அமெரிக்காவில் இருந்தபோதே அங்குள்ள சிறுவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்றுவித்தான். இங்கேயும் அபார்ட்மெண்ட் அஸோஸியேஷன்’னில் பேசி சிறுவர்களுக்கு இலவசமாகக் கற்றுக்கொடுக்க முடிவெடுத்தான்.
நாட்கள் இப்படியாக செல்ல, ஒரு நாள் ரிஷியின் வீட்டில் ரோமியுடன் விளையாடிய பின், ரஜத் வீட்டிற்கு கிளம்பிவிட, அதிகம் விளையாடிய மினு மிகவும் சோர்வாக இருந்ததால், ரிஷியை தூக்கச்சொல்லி, நொடிப் பொழுதில் அவன் தோள் மேலே சாய்ந்து உறங்கிவிட்டாள்.
ஆதுரமாக அவளின் முதுகை வருடிக்கொடுத்தான். மெல்லிய உணர்வு அவனுள் எழாமல் இல்லை. ஏதோ ஒரு இணக்கம் ஏற்பட்டிருந்தது மினுவின் மேல். அது மனதுக்கு இதமாகவும் இருந்தது. இது இப்படியே நீட்டிக்கக் கூடாதா என்று ஒரு க்ஷணம் மனதில் தோன்றாமல் இல்லை.
அவள் உறக்கம் கலையாமல் மெதுவாக எழுந்து அவள் வீட்டிற்கு ரிஷி செல்ல, கதவு திறந்திருந்தது. உள்ளே ஸ்ரீயுடன் அலுவலக வேலையில் இருந்தாள் நிவேதா. மினுவும் ரஜத்தும் ரிஷியின் வீட்டில் விளையாடுகிறார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தார்கள் நிவேதாவும், ஸ்ரீயும்.
ஆனால், ரிஷி மினுவை தூக்கி வந்திருப்பதைப் பார்த்ததும், ‘என்ன ஆயிற்று’ என பதறிய நிவேதா அவன் அருகில் செல்ல, ரிஷி மெதுவாக ‘தூங்கிவிட்டாள்’ என்றான்.
‘உள்ளே செல்லலாமா வேண்டாமா?’ அவன் யோசிக்கும் போது, அது புரிந்தது போல்… நிவேதா, “ஸ்ரீ… கொஞ்சம் மினுவ வாங்கி சோஃபா’ல படுக்க வச்சுடறயா?” என கேட்க, ஸ்ரீயும் ரிஷியிடம் இருந்து மினுவை வாங்கிக்கொண்டான்.
‘ஒரு மரியாதை நிமித்தம் உள்ளே அழைப்பாளா?!’ ரிஷி அவளைப் பார்க்க, அவளோ, “தேங்க்ஸ் ரிஷி. நான் ரோமி கூட விளையாடறான்னு நினைச்சேன். இனி அவ தூக்கம் வருதுன்னு சொன்னா, அனுப்பி வச்சுடுங்க. எதுக்கு உங்களுக்கு சிரமம்” என்றாள் ‘அவ்வளவுதான்… பேச எதுவும் இல்லை’ என்பதுபோல.
பதிலுக்கு தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ரிஷி.
‘உள்ளே கூப்பிடும் அளவுக்குக் கூட தனக்கு தகுதி இல்லையா?’ என்ற ஒரு புது உரிமை வேறு மனதில் வந்து சென்றது அவனுக்கு.
அதை எதிர்பார்ப்பது அபத்தம் என்று புரிந்தது. இருந்தும் மனம் தன்னை ஸ்ரீயுடன் ஒப்பிட்டுப் பார்த்தது. மினுவுடனான நெருக்கம் அவனை நிறைய இதுபோல அவ்வப்போது யோசிக்கச் செய்தது. எதிர்பார்க்கச் செய்திருந்தது.
இது இப்படி இருக்க… அலுவலக வேலை என்று வரும்போது முற்றிலும் மாறுபட்ட ரிஷியாக மாறியிருப்பான்.
‘தனக்கு எது தேவையோ, எது சரியோ… அனைத்தும் அப்படியே நடக்க வேண்டும்’ என்று நினைப்பவன். ஆனால் இவன் குணம் இதுவல்ல என்பதும் நிவேதாவுக்கு மட்டும் தான் தெரியும். எதையுமே திணிக்கமாட்டான். இப்போது முற்றிலுமாக மாறி இருந்தான்.
இப்போது இருக்கும் ரிஷிக்கு நேர் எதிர் ஸ்ரீயும், நிவேதாவும். மற்றவர்களின் கருத்துக்களை கேட்டு, அதில் நல்ல கருத்துக்கள் இருந்தால், ஏற்றுக் கொள்ளும் ரகம் இவர்கள் இருவரும்.
ஓர்கனைசேஷன் ஹைரார்க்கி’யில் (organization hierarchy) இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருக்க, இவர்களை விட ஒரு படி மேல் இருந்தான் ரிஷி. ஆக ‘ரிஷி சொல்வதைத் தான் இவர்கள் கேட்கவேண்டும்’ என்றது அந்த வரிசை.
நிவேதா நிர்வகிக்கும் ப்ராஜக்ட்’டில் ஒரு ஆறு வார சின்ன பணிக்காக (அசைன்மென்ட்) அவர்களுடைய கிளைன்ட் அவளிடம் விளக்கப்படம், மற்றும் அந்த வேலைக்கான தோராயமான பண மதிப்பு (billing quote) கேட்டிருக்க, நிவேதா அதை தயார் செய்தாள்.
அதை ரிஷியிடம் காண்பித்து, ஒப்புதல் பெற்ற பிறகே கிளையண்ட்’டுக்கு அனுப்ப முடியும்.
அந்த வேலை வரும்போதே ரிஷி அவளிடம் புதிய முறையைக் கையாளப் போகிறோம் என்பதை குறிப்பிடும்படி சொல்லியிருந்தான்.
அதில் நிவேதாவுக்கு உடன்பாடு இல்லை.
‘வேலையே வெறும் ஆறு வாரம். அதை நேரத்திற்குள் முடிப்பதே மிகவும் இக்கட்டான விஷயம். இதில் புதிய முறையை வேலை செய்பவர்களுக்குச் சொல்லித்தந்து, வேலை வாங்க வேண்டும் என்றால் நேரம் அதிகம் தேவைப்படும். இப்போது அந்த முயற்சி வேண்டாம். இது மிகவும் முக்கியமான வேலை. தவறவிட்டால் நம்பிக்கை போய்விடும்’ என்பது அவள் எண்ணம்.
ரிஷியோ, ‘இப்படி குறைந்த காலக்கெடுவில் இருக்கும் வேலைக்கு, புதிய முறையை உபயோகித்தால், குறுகிய காலத்தில் கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஊழியர்களுக்கு தோன்றும்’ என நினைத்தான்.
அங்கே வந்தது அடுத்த பிரச்சனை.
நிவேதா அவள் நினைத்ததைச் செயல் திட்டமாக வடிவமைத்திருந்தாள். அதை ரிஷிக்கு அனுப்பிவிட்டு, மினுவை அழைத்து வந்தாள்.
அவள் அனுப்பியதை சில நிமிடங்களுக்குப் பின் பார்த்தான் ரிஷி.
‘அவன் சொன்னதை அவள் செய்யாதது’ கோபத்தைத் தர, அவளுக்கு ஆஃபீஸ் மெஸென்ஜரில் செய்தி அனுப்பினான்.
அதை அவள் பார்த்தும் பதிலளிக்கவில்லை. பின் அலுவலக எண்ணிற்கு அழைத்தான்… அவள் ஏற்கவில்லை.
‘உனக்கு சளைத்தவள் இல்லை நான்’ என்று அவள் இருக்க, அவளைப் பார்த்து முறைத்துக்கொண்டு அவள் அறையின் கதவைத் திறந்தான்.
அவன் கண்களில் முதலில் பட்டது அங்கே உட்கார்ந்திருந்த மினு. கையில் உணவு பாக்ஸ் வைத்திருந்தாள். வேலையில் மூழ்கியிருந்ததால், அவன் மினு வந்ததைக் கவனிக்கவில்லை.
“ஹாய் மினு” என்று சிறியவளைப் பார்த்து ஒரு பேச்சுக்கு சொல்லிவிட்டு, நிவேதாவின் மேசைக்கு எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தவன்…
“நான் உனக்கு மெசேஜ் அனுப்பினேன். யு டின்ட் ரெஸ்பாண்ட். கால் பண்ணேன் எடுக்கல” என அவன் அடுத்து சொல்ல வரும்முன்…
“எக்ஸ்க்யூஸ் மீ? இது என்னோட லஞ்ச் டைம். சோ…” என்று சாப்பிடும் உணவை காட்டினாள்.
தன் கருத்துக்களை ஏற்க மறுக்கிறானே என்ற கோபம் மட்டுமே அவளிடம் இருந்தது. பழைய தேவ்வாக அவன் இல்லை என்பது கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது.
அவளது பதில் மற்றும் செய்கையில் எரிச்சலடைந்தவன் எழும் சமயம், இதுவரை இருவரும் பேசுவதை மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்த மினு, அவன் எழப்போவதைப் பார்த்து…
“தேவ்… இரு… சாப்பிட்டியா? இந்தா சப்பாத்தி ரோல். சாப்பிட்டு போ” என ஒன்றை நீட்ட… அதுவரை கோபத்திலிருந்தவன், முற்றிலும் விழுந்தான், கரைந்தான், குளிர்ந்தான் அந்த அன்பில்.
“இல்லடா மினு. நீ சாப்பிடு. நான் அப்புறம் கேன்டீன்ல சாப்பிட்டுக்கறேன்” என்று சொன்னபோது ‘பொண்ணு எவ்ளோ அழகா கேட்கறா. ஆனா அவ அம்மா ஒரு பேச்சுக்கு வீட்டுக்குள்ள கூட கூப்பிட மாட்டா’ மனதில் நிவேதாவை வசை பாடினான்.
ஆனால் அவன் அப்போது மறந்தது ‘இவ்வளவு அக்கறையாக, அன்பாக மினுவை பேச வைத்தது நிவேதாவின் வளர்ப்பே’ என்று.
“தேவ்… அம்மா சொல்லியிருக்காங்க. ஷேர் பண்ணி சாப்பிடணும்ன்னு. இந்தா பிடி. எனக்கு இன்னும் இருக்கு. நீ வாங்கிக்கலைனா நானும் சாப்பிட மாட்டேன்” மினு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் கோபித்துக்கொண்டது போல.
மினுவின் உரிமை நெகிழச்செய்தாலும். அதை வாங்க வேண்டுமா வேண்டாமா என அவன் யோசிக்க… அது புரிந்தது போல நிவேதா… “நான் எப்பவும் எக்ஸ்ட்ராவா தான் எடுத்துட்டு வருவேன். வாங்கிக்கோங்க” என்றாள்.
மினுவின் கோபத்தைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே அவளிடம் வாங்கிக்கொண்டு மறுபடியும் இருக்கையில் உட்கார்ந்தான்.
மினு முகத்தில் அன்பான புன்னகை. ரிஷி முகத்தில் ஆனந்த புன்னகை.
அவனின் கோபம் போய், மினுவின் அன்பினால் அவனிடம் எழுந்த புன்னகையைப் பார்த்த நிவேதாவுக்கு, இப்போது கோபம் இறங்கி மனபாரம் ஏறியது. ‘இவன் குடும்பம் எங்கே?’ என்ற கேள்வி மீண்டும் மனதில்.
பல நாட்கள் கழித்து வீட்டு உணவு. சாப்பிடும்போதே இன்னமும் கிடைக்காதா என ஏங்கியது அவன் மனம். மினு ரிஷியுடன் பேசிக்கொண்டே சாப்பிட… நிவேதா சாப்பிடாமல் காத்திருந்தாள்.
அப்போது அங்கே வந்தான் ஸ்ரீ.
ரிஷி உள்ளே இருப்பதைப் பார்த்து ஸ்ரீ தயங்க, “வா ஸ்ரீ” என்றாள் நிவேதா. அவளைப் பார்த்துப் புன்னகைத்தபடி ஸ்ரீ உள்ளே வர, ரிஷிக்கு இப்போது புரிந்தது எதற்காக அவள் காத்திருந்தாள் என்று.
“ஹாய் ஸ்ரீ அங்கிள். இன்னைக்கு என்ன சாப்பாடு?” கேட்டாள் மினு ஆர்வத்துடன்.
“உனக்கு பிடிச்ச தக்காளி சாதம்… வத்தல் மினுக்குட்டி” என்றுவிட்டு “ஹாய் ரிஷி” என்றான் ஸ்ரீ. சின்ன தலையசைப்புடன் ரிஷி புன்னகைத்தான்.
“அய். எனக்கு சப்பாத்தி விட தக்காளி சாதம் தான் பிடிக்கும். தேவ் இந்தா இந்த பாக்ஸ் நீ எடுத்துக்கோ. நான் ஸ்ரீ அங்கிள் கொண்டு வந்ததை சாப்பிடறேன்” என்றதும்…
“இல்ல இல்ல மினு. நீங்க சாப்பிடுங்க. எனக்கு வேல இருக்கு. ஈவினிங் பார்க்கலாம். பை” என்றவன் வெளியேறும் போது திரும்பி… மினுவையும் நிவேதாவையும் பார்த்து “தேங்க்ஸ்” என்றான் நன்றி கலந்த சின்ன புன்னகையுடன்.
அந்த புன்னகை மற்றும் நன்றி இன்னமும் வதைத்தது நிவேதாவை. அமைதியாக எதையும் காட்டிக்கொள்ளாமல் புன்னகைத்தாள்.
அவன் சென்ற சில நிமிடங்களில் ஒரு மெயில் அவனிடமிருந்து வந்திருந்தது. அதுவே சொன்னது வேலை வேறு… தனிப்பட்ட விஷயங்கள் வேறு என்று.
‘தான் சொன்னது போல செயல் திட்ட ஆவணம் இல்லாமல் பழைய முறையைப் பின்பற்றும் படி இருப்பதால், அதற்கு அவன் ஒப்புதல் தேவையில்லை, இதில் தனக்கு உடன்பாடும் இல்ல… விருப்பம் போல செய்து கொள்ளவும்’ என தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல பதில் அனுப்பியிருந்தான்.
அதை அவள் பார்த்ததும், இதுவரை அவன் மேல் இருந்த இலகுத்தன்மை மாறி… ‘இப்போ தானே சிரிச்சிட்டு போனான். அதுக்குள்ள முசுடு மோட்’க்கு மாறிட்டான்’ என சலித்துக்கொண்டாள்.
அந்த மெயிலைப் பார்த்த ஸ்ரீ… “நீ ஏன் நம்ம டிஸ்கஸ் பண்ணினதை இன்க்ளூட் பண்ணல நிவி? அத போட்டிருந்தன்னா அப்ரூவ் ஆகியிருக்கும்”
“இப்போ அதை நான் சேர்த்துட்டு, ஒருவேளை அதை செய்ய முடியாம போச்சுன்னு வச்சுக்கோ… அதுக்கு ஒரு பிரச்சனை வரும். வேலைய முடிச்சிட்டு சொல்லிப்போம் ஸ்ரீ” என்றாள்.
இருவரும் சாப்பிட்டு முடிக்க, மினுவை தூங்க வைத்துவிட்டு, வேலையில் இறங்கினாள் நிவேதா.
ரிஷியின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல், அவள் நினைத்தது போலவே அந்த புதிய வேலையை ஆரம்பித்தாள். நிச்சயமாக நம்பினாள் தன்னால் முடியுமென.
**********
ஒரு நாள் அவர்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவரும், அபார்ட்மெண்ட் கம்யூனிட்டி ஹாலில் நடந்த சின்ன பார்ட்டி’யில் கலந்துகொண்டனர்.
அது முடிந்ததும், நிவேதா மற்றும் மினு, ஸ்ரீ, ரஜத் மற்றும் அவன் அப்பா, ரிஷி என அனைவரும் லிஃப்ட்’டில் ஏற, கூடவே இன்னும் இரண்டு இளைஞர்களும் ஏறினார்கள்.
நிவேதாவை பார்த்தவண்ணம் அவர்களுக்குள் ஹிந்தியில் ஏதோ பேசிக்கொண்டே இருந்தனர் அந்த இளைஞர்கள்.
மினு மற்றும் ரிஷிக்கு மட்டும் அவர்கள் பேசுவது புரியவில்லை. ரஜத்துக்கு பேசிய வார்த்தைகள் புரிந்தாலும், அர்த்தம் புரியவில்லை. ஆனால் இவர்களைத் தவிர்த்து, மற்ற அனைவருக்கும் புரிந்தது.
நிவேதா ஒருமுறை மூச்சை ஆழ இழுத்து தன்னை சமநிலை படுத்துக்கொண்டாள். அது கண்களில் கண்ணீரை கூட தடுத்ததோ?!
ஆனால் அதைக்கேட்ட ஸ்ரீயின் முஷ்டி இறுகியது!
***தொடரும்***