மீண்டும் ஒரு காதல் – 7

மீண்டும் ஒரு காதல் – 7:

 நிவேதாவின் கண்கள் கலங்கினாலும், அதை வெளிவர விடாமல் தடுத்து அமைதியாக அவர்கள் தளம் வந்ததும் மினுவுடன் வெளியேறினாள்.

ரிஷிக்கு அந்த இளைஞர்கள் என்ன பேசினார்கள் என்று புரியவில்லை. ஏதோ அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள் என நினைத்து, அவனும் வெளியேறினான்.

கொஞ்சம் பயந்த சுபாவத்துடன் இருக்கும் ரஜத்தின் அப்பா, அசௌகரியத்துடன் ரஜத்தை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

ஸ்ரீ மட்டும் வெளியேறாமல் உள்ளேயே இருந்தான் முகம் முழுவதும் கோபத்துடன். இவர்கள் அனைவரும் வெளியேறிய பின், லிஃப்ட் மூடிய அடுத்த நொடி, அங்கிருந்த இருவரின் மீதும் பாய்ந்தான்.

“இந்த வாய் தானே தப்பா பேசினது” என்று ஹிந்தியில் கூறியபடி தவறாகப் பேசியவன் முகவாயில் முதலில் அடித்தான். அந்த இளைஞர்கள் அடிக்க நினைத்தும், ஸ்ரீயின் கோபத்திற்கு முன் எதுவும் எடுபடவில்லை.

லிஃப்ட் மேல் தளம் சென்று, மறுபடியும் ஸ்ரீ இருக்கும் தளம் வரும் வரை அவன் விடவில்லை.

“இன்னொரு முறை இப்படி பேசறதையோ… இல்ல அவங்க இருக்கிற பக்கமோ பார்த்தேன், நடக்கிறதே வேற” என்று அடித்தபடி எச்சரித்துவிட்டு வெளியேறினான் ஸ்ரீ.

அவனுக்கு நிவேதாவை உடனே பார்த்தாக வேண்டும் என்று தோன்றியது. 

வீட்டிற்கு வந்த நிவேதாவுக்கு அந்த இளைஞர்கள் பேசியதே மனதில் வந்து செல்ல, அருவருப்பாக இருந்தது.  எவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகள்?

‘இவளை எப்போதாவது பெண்களுடன் பார்த்திருக்கிறாயா? உடன் எப்போதும் ஆண்கள்! அதில் இப்போது புதியவன் வேறு. எல்லோரையும் எப்படி சமாளிக்கிறாள்? கை தேர்ந்தவளாக தான் இருப்பாள்.  நாமும் முயற்சித்து பார்ப்போமா?’

‘தனியாக இருக்கிறாள்… துணை தேவைப்படுமே. நாமும் விண்ணப்பிக்க வேண்டியதுதான். நம்மை போன்ற இளையவர்களை வேண்டாம் என்பாளா என்ன?’

இரட்டை பொருள் கொண்டு நிவேதாவை ஏற இறங்கப் பார்த்து, சில இடங்களில் கண்கள் நிலைத்து… அவர்கள் பேசியது, அருவருப்பாக இருந்தது.

தனியாக குழந்தையுடன் வாழும் பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான் இந்த சமூகத்தில்!

முன்பு இதுபோல பேச்சுக்களைக் கேட்ட போதெல்லாம், யாருக்கும் தெரியாதவண்ணம் கதறி அழுதிருக்கிறாள்.

அதுவும் அலுவலகத்தில், தனியாகத்தான் இருக்கிறாள் என்று தெரிந்த போது, சில ஆண்கள் அவளிடம் நடந்துகொண்ட அணுகுமுறைகள், பேச்சில் பொதிந்திருக்கும் பொருள்கள், பார்வைகள் எடுத்துக்கொண்ட உரிமைகள் என நிறைய முறை அவளை துவளச்செய்திருக்கிறது.

மனம்விட்டு யாரிடமேனும் சொல்லலாம் என்றால், அதற்கும் வழியில்லாமல் மூச்சு முட்டும். அடைபட்ட உணர்வை உணர்ந்திருக்கிறாள்.

ஆனால் இப்போது நிவேதாவிற்கு அழுகையெல்லாம் வரவில்லை.

முதலில் கண்கள் கலங்கியது. ஆனால் ‘இதென்ன முதல் முறையா?’ என்று நினைக்கையில், மனம் தளர்ந்து, ஒரு வித ஆற்றாமை, நெஞ்சம் முழுவதும் வேதனை… இவை தான் மிஞ்சியது

‘தனக்கு ஏன் இந்த நிலைமை’ என மனது நினைத்த அடுத்த நொடி, மனக்கண்ணில் ரிஷி தான் தோன்றினான். ‘தன் தற்போதைய நிலைக்கு அவனும் ஒரு காரணம்’ பழித்தது அவள் உள்ளம். 

அவள் மறக்க நினைக்கும் ஒரு விஷயம். ஆனால் ‘தனியாக இருக்கிறோம்… இதுபோல பேச்சுக்கள்…’ என்று நினைக்கையில் இப்போது மட்டும் இல்லை, எப்போதுமே மனதில் வருபவன் ரிஷி.

அவனை சாடக்கூடாது என்று எண்ணினாலும், முடியவில்லை. இதுபோல அவனை மனம் குறைகூறும் தருணங்கள் குறைவே. எப்போதாவது தன் நிலைமை அவளை வருத்தினால், தேவ்வின் மேல் அளவு கடந்த கோபம் வரும். ஏமாற்றப்பட்ட வலி, அடிபட்ட வேதனை மனதில் எழும்.

இப்போதும் அதே கோபத்தைத் தந்தது. மனம் இறுகியது.

அந்நேரம் சரியாக மினு அவளிடம், “ம்மா பால் தா மா. குடிச்சிட்டு நான் தேவ் வீட்ல ரோமி கூட விளையாடிட்டு வரேன்” என்றதும்…  தன் முன் நிற்கும் மகளைப் பார்த்து, மனதில் அடுத்த விஷயம் ஓட ஆரம்பித்தது நிவேதாவுக்கு.

இதுபோல பேச்சுக்களிலிருந்து எப்படி மினுவை காப்பாற்றுவது? அவளும் வளர்கிறாள். இந்த பேச்சின் பொருள் புரிந்துகொள்ளும் வயது வரும்போது அது எவ்வளவு மன உளைச்சலை அவளுக்குத் தரும்?

பல உணர்வுகளின் பிடியிலிருந்தவளுக்கு… அந்த இளைஞர்கள் பேசியதில் கூட வராத விழிநீர், மினுவை… அவள் எதிர்காலத்தை நினைத்தபோது அவளையும் மீறி வெளிவந்தது.

மினுவிற்காக என்று தன் வாழ்க்கையைக் கூட பொருட்படுத்தாமல் வாழ்கிறாளே!

தன் அம்மாவின் கண்களில் கண்ணீரைப் பார்த்தவுடன், அந்த சின்ன மனம்  தாங்கிக்கொள்ள முடியாமல்… “ம்மா ஏன் மா அழற… அழாதம்மா ப்ளீஸ்” என மினுவும் விம்மிக்கொண்டே, நிவேதாவின் கண்களைத் துடைத்துவிட்டாள். சேய் தாயான தருணம்!

மினுவின் செயலில் அவளை தழுவிக்கொண்ட நிவேதாவுக்கு… அழுகை இன்னமும் அதிகரித்ததே தவிரக் குறையவில்லை.

அப்போது சரியாக ஸ்ரீயின் குரல்… ‘மினு’ என்று அழைத்தபடி கதவைத் தட்டி உள்ளே பார்க்க, அவன் குரல் கேட்டதில் அவசரமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டாள் நிவேதா.

எப்போதும் உள்ளே அழைப்பவள் இன்று கதவருகில் சென்றாள். மினுவும் உடன் சென்றாள்.

“அழறியா நிவி” பெரும் வருத்தத்துடன் அவன் கேட்க… வெற்று புன்னகையை பதிலாகத் தந்த நிவேதா, “மூட் சரியில்ல. நாளைக்கு பார்ப்போமா ஸ்ரீ”

அவள் சொல்லும்போது அவளின் காலை மினு கட்டிக்கொண்டு… “அம்மா அழறாங்க ஸ்ரீ அங்கிள்” என்றாள் உதடுகளைப் பிதுக்கி.

மினு முன் மண்டியிட்ட ஸ்ரீ, “அச்சோ! மினுக்குட்டி அழக்கூடாது. நீ அழுதா அம்மாவும் ஃபீல் பண்ணுவாங்க… கம் ஆன் சீர் அப்” என அவளை தேற்ற, மினு அதே முகத்துடன் தலையசைத்தாள்.

“ஏதாச்சும்னா உடனே கால் பண்ணு நிவி. எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத ப்ளீஸ்” என்றான் ஆதரவாக. இப்போது நிவேதா தலையசைத்தாள்.

தன் வீட்டிற்கு சென்ற ஸ்ரீயின் மனம் அமைதியடையவே இல்லை. சூடாகக் காப்பி போட்டுக்கொண்டு உட்கார்ந்தவன் மனதில் நிவேதாவின் எண்ணமே.

சமீபகாலமாக அவள் அழுது அவன் பார்த்ததில்லை. இத்தனை வருடங்களில்… அவளையே அவள் செதுக்கிக்கொண்டதை அவன் கண்கூடாகப் பார்த்திருக்கிறான். அவன் மனதில், முதல் முறை சந்தித்த நிவேதா இப்போது வந்து சென்றாள்.

கூடவே அந்த காலத்திற்கு பயணப்பட்டது அவன் நினைவுகள்!

ரிஷியின் வீட்டிலோ… இரண்டு ஜீவன்கள் மினுவின் வருகைக்காக, வாசலையே பார்த்துக்கொண்டிருந்தன,.

‘ஏன் மினு வரல… போய் கேட்கலாம்னா, அவ அம்மா மூஞ்சியைக் காட்டுவா. வெளிய வச்சே பேசி அனுப்பிடுவா… யாருக்கு தெரியும், வேணும்னே கூட மினுவ அனுப்பாம இருப்பா’ என்று நிவேதாவை மனதில் திட்டிக்கொண்டிருந்தான்.

‘இந்த பேர வச்சுட்டு இவ்ளோ சிடுமூஞ்சியா இருந்திருக்க வேண்டாம்’ அவளை சொல்லிவிட்டு இவன் சிடுசிடுத்தான்.

பெயர் என்றதும்… இப்போது அவனுடைய நிவேதாவின் எண்ணங்கள் அவன் மனதை சூழ்ந்தது. இரண்டு நிவேதாவும் ஒன்றே என்ற விஷயம் இவனுக்கு இன்னமும் தெரியாதே!

அன்றைய தினம் மினு, விளையாட செல்லவேண்டும் என்று நிவேதாவை தொல்லை செய்யவில்லை. ரஜத்தும் இரவு உறங்கும் போது தான் ‘குட் நைட்’ சொல்வதற்கு வந்தான்.

நிவேதா இறுக்கத்துடனே இருந்தாள். மினுவை தூங்க வைத்தவள் மனம் ஒரு நிலையில் இல்லை.

‘தன் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்துவிட்டது. இன்னும் என்னென்ன தாங்கிக்கொள்ள வேண்டுமோ’ என நினைத்து… ‘எது வந்தாலும் மினுவை நல்லபடியாக வளர்க்க வேண்டும்’ என்று எப்போதும் போல உறுதி எடுத்துக்கொண்டாள்.

பூஜை அறைக்குச் செல்ல, அங்கிருந்த படங்களை வெறித்து பார்த்தாள்.

மறுபடியும் ரிஷியின் எண்ணங்கள் மனதில். முன்பெல்லாம் இது போல எண்ணங்கள் வரும்போது, மனதின் அழுத்தம் அதிகமாகும்.

சிலசமயம் ‘உன்னால் தான் எனக்கு இந்த நிலை’ என கோபத்தில் மனதார அவனைத் திட்டுவாள்… இல்லையேல் ‘தன் வாழ்வில் அவனை இழந்து விட்டேனே’ என அழுது கரைவாள்.

ஆனால் தற்போது காலம் செய்த விளையாட்டால் பக்கத்திலேயே இருக்கிறான். இது அவள் கனவிலும் நினைத்திராத ஒன்று. 

அவனைப் பார்த்து ‘சட்டையை பிடித்து கேள்வி கேட்க வேண்டும்’ என்று இப்போது தோன்றியது. ‘கேட்டுவிட்டு அடுத்தென்ன? போன வாழ்க்கை திரும்பி வந்துவிடுமா?’ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

தலை பாரம் அதிகமாவது போல் ஓர் உணர்வு. மாத்திரை போட்டுக்கொண்டாள்.

தூக்கம் சுத்தமாக வராமல் போக, மனம் பழைய எண்ணங்களையே சுற்ற, அலுவலக வேலை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள்.

அடுத்த நாளும் விடிந்தது. மினுவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டாள்.

ரிஷிக்கு ‘ஏன் மினு வரவில்லை’ என்று நிவேதாவிடம் சண்டையிடும் அளவுக்குக் கோபம் வந்தது. அந்த கோபம் அர்த்தமற்றது என்பது புரிந்தாலும் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

மதியம் மினு வந்ததும் அவன் கண்கள் ஆசையாக கண்ணாடி தடுப்பு வழியே மினுவை பார்க்க, அது புரிந்தது போல மினுவும் அவன் பக்கம் திரும்பினாள்.

பின் நிவேதாவிடம், “ம்மா நான் தேவ் கிட்ட பேசிட்டு வரவா?” கெஞ்சுவது போல் கேட்க, நிவேதாவால் மறுக்க முடியவில்லை.

“இன்னும் நீ சாப்பிடல மினு. சீக்கிரம் வந்துடணும்” என்று சொல்லி அனுப்பினாள்.

மினுவையே பார்த்துக்கொண்டிருந்த ரிஷி, அவள் வெளிவருவதை… அதுவும் தன் அறைக்கு வருவதைப் பார்த்து அவசரமாக எழுந்தான்… அவளுக்குக் கதவைத் திறக்க. அதை நிவேதாவும் பார்த்தாள்.

அந்த அவசரமே அவளுக்கு புரியவைத்தது அவனின் காத்திருப்பை… ஆசையை.

“மினு” என அவளை ஆசையாகத் தூக்கி அவன் மேசை மேல் உட்கார வைத்தான்.

“உனக்காக நானும் ரோமியும் வெயிட் பண்ணினோம். ஏன் நேத்தி வரல?” உரிமையுடன் அவளிடம் கேட்டான். மினுவின் முகம் சுருங்கிவிட்டது.

அதை கண்ட ரிஷி… பதட்டத்துடன், “என்னாச்சு டா” என கேட்க… “அம்மா நேத்தி அழுதாங்க தேவ். ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நானும் அழுதுட்டேன். ஸ்ரீ அங்கிள் வந்தப்ப கூட சரியா அம்மா பேசல” என்று கிட்டத்தட்ட அழுகும் நிலையில் பேசினாள் மினு.

அந்த மழலைப் பேச்சில் மனமுருகிய ரிஷி, அவளை தோளோடு அணைத்தபடி தட்டிக்கொடுத்தான்.

பின் அவன் கண்கள், ‘அழுதாளா?!’ என நினைத்து தானாக நிவேதாவை பார்த்தது. அவள் முகம் எப்போதுமே அவனுக்கு கடுகடுவென இருப்பதுபோல தான் தெரியும். இப்போதும் அப்படித்தான் தெரிந்தது.

அந்த நேரம் பார்த்து அவள் அறைக்குள் வந்தான் ஸ்ரீ. அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள் நிவேதா.

அவளின் முகமாற்றத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ரிஷி, மினுவின் அழைப்பில் அவள் பக்கம் திரும்ப, அவளுடன் பேச்சில் இணைந்தான்.

அங்கே ஸ்ரீ நிவேதாவை பார்க்க, அவள் முகம் கொஞ்சம் தெளிவாக இருந்தது நிம்மதியைத் தந்தது.

“அந்த வேலை இனிஷியல் வொர்க் முடிஞ்சதா நிவி” பொதுவான பேச்சை ஆரம்பித்தான்.

“ஆமா ஸ்ரீ. முதல் கட்ட வேலை ஓவர். வேலையை முடிச்சிட்ட டீம்’க்கு, ரிஷி சொன்ன புது ப்ராஸஸ் ட்ரைனிங் ஸ்டார்ட் பண்ண சொல்லியிருக்கேன். நெக்ஸ்ட் டீம், அவங்க வொர்க் முடிச்ச உடனே அவங்களுக்கும் ட்ரைனிங் ஸ்டார்ட் பண்ண பண்ணனும். நம்ம AVP மிஸ்டர் ரிஷி தேவ் சொன்ன டெட்லைன்’குள்ள முடிச்சிடலாம்” என புன்னகைத்தாள் நிவேதா.

ஸ்ரீயும் புன்னகைத்தான். அவர்கள் பேசி வைத்தது இதுவே. ரிஷி சொன்ன புதிய முறையை வைத்து அந்த ப்ராஜக்ட் செய்யாமல், பழைய முறையில் சீக்கிரம் முடித்துவிட்டு, புதிய முறைக்கான பயிற்சியை ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே.

பயிற்சிக்குப் பின் வரும் எந்த வேலையானாலும், புதிய முறையை உபயோகிக்கலாம் என்பது இருவராலும் முடிவெடுக்கப்பட்டது.

இதுபோல சின்ன சின்ன மாற்றங்களை இருவரும் சேர்ந்து செய்வது, பலவகையில் அவர்களின் நிறுவனத்திற்குப் பெரிதும் உதவியாக இருந்திருக்கிறது.

எதையும் தடாலடியாகச் செய்யாமல், பொறுமையாகச் செய்வார்கள். அதுவே அவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

**********

நாட்காட்டியில் நாட்கள் நகர்ந்தது. ரிஷி அவன் அபார்ட்மெண்டில்… வாரயிறுதியில் சிறுவர்களுக்குத் தற்காப்புக் கலை பயிற்றுவித்தான். அதில் மினுவும் ரஜத்தும் இல்லாமலா? அவர்களும் இருந்தார்கள்.

நிவேதாவுக்கு ரிஷியை எதிர்கொள்ளும்போதெல்லாம் ஒருவித உணர்வு போராட்டமாய் இருக்க, நேரில் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்தாள்.

ஆனால் அவன் வீட்டிற்கே சென்று பேசும் நாளும் வந்தது… மினுவின் பிறந்தநாளிற்கு அழைப்பதற்காக!

மினு, நிவேதாவை தொல்லை செய்து ரிஷியை அழைக்கச்சொன்னாள். நிவேதா எவ்வளவு மறுத்தும் மினு கேட்காமல் போக, வேறு வழியில்லாமல் ரிஷி வீட்டிற்குச் சென்றார்கள் இருவரும்.

மினுவுடன் நிவேதாவை பார்த்ததும் ஒரு நொடி அவன் புருவங்கள் முடிச்சிட்டாலும், உடனே உள்ளே அழைத்தான் ரிஷி. ரோமி நிவேதாவை பார்த்தவுடன் குறைக்க ஆரம்பித்தது. அதை கண்களாலேயே அடக்கினான் ரிஷி.

அவன் வீட்டினுள் சென்றவுடன், நிவேதாவுக்குள் சொல்ல முடியாத பல உணர்வுகள். ஒருபுறம் மனம் அதை விரும்பினாலும், மற்றொருபுறம் முள்ளின் மேல் நிற்பது போன்ற உணர்வு.

“காபி டீ ஏதாச்சும்?” அவன் சொல்லி முடிக்கும் முன், “வியாழக்கிழமை மினு பர்த்டே. இன்வைட் பண்ணலாம்னு தான் வந்தேன்” என்றாள்.

ஏனோ அவன் வீட்டில், பேச்சு கூட சரியாக வராத உணர்வு அவளுக்குள்.

“எஸ் தேவ். மினு பர்த்டே” என்று முகம் மலர புன்னகையுடன் சொன்னாள் மினு. அவளைப் பார்த்து அவனும் புன்னகைத்தான்.

“எங்க பர்த்டே பார்ட்டி?” அவன் கேட்டிட,

“வீட்ல. செலக்ட்டிவ்’வா தான் இன்வைட் பண்றோம். வந்துடுங்க” சின்னதாகத் தலையசைத்துவிட்டு மினுவை அழைத்துக்கொண்டு  வெளியேறிவிட்டாள்.

ஏதோ ஓர் இயந்திரம் அவனுடன் பேசியதுபோல இருந்தது அவனுக்கு.

‘மினுவின் பிறந்தநாளுக்கு என்ன வாங்கி தரலாம்’ என்று அவன் யோசிக்க, மனதில் மின்னலென ஒரு பொருள் வந்து சென்றது.

அவனின் நிவேதாவிற்காக அவன் வாங்கியது. அவளுடைய ஞாபகமாக இன்னமும் வைத்திருப்பது!

ஆனால் நிவேதாவுக்கு பின்… தன் வாழ்வில் இழந்த சந்தோஷத்தை மீட்டுத்தந்த மினுவிற்கு அதைத் தர வேண்டும் என்று இப்போது தோன்றியது!

ஆனால் அவன் அறியாதது… விதி, அந்த பொருளைச் சேர வேண்டிய இடத்தில் தான் கொண்டு சேர்க்கப்போகிறது என்று!!!

 

***தொடரும்***

28
4
8
5
4
1
2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved