மீண்டும் ஒரு காதல் – 8

மீண்டும் ஒரு காதல் – 8:

மினுவின் பிறந்தநாளும் வந்தது. அன்று அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டாள் நிவேதா.

மினுவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வீட்டை மிகவும் எளிமையாக ஆனால் அழகாகத் தயார் செய்தாள். மதியம் மினு வந்தவுடன் அவள் கண்களில் அவ்வளவு ஆனந்தம். அதற்கு தானே இத்தனையும்!

பின், மினு வரிசையாக உணவு மெனு’வை சொல்ல ஆரம்பித்தாள். வரப்போகிறவர்கள் என்னவோ குறைவே, ஆனால் வருபவர்களுக்கு பிடித்த உணவு பற்றி மினு சொல்ல, நிவேதா புன்னகையுடன் தலையசைத்துக்கொண்டாள்.

மினுவை தூங்க வைத்துவிட்டு, மாலை மற்றும் இரவு உணவிற்கான வேலையில் இறங்கினாள் நிவேதா. வருபவர்கள் என்றால் அதில் ரிஷியும் அடக்கமே. அதுவும் மினு முதலில் சொன்னது ரிஷிக்கு பிடித்த இடியாப்பம் மற்றும் பூரி.

இந்த அளவு மகள் அவனுடன் ஒட்டிக்கொண்டது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும்… அவன் இருக்கப்போவது சில நாட்கள் மட்டுமே, ஆகையால் கவலை வேண்டாம் என நினைத்தாள்… அப்படி இருந்தும் அவன் சில நாட்களில் சென்றுவிடுவானே என்ற எண்ணம் ஏனோ ஒரு சின்ன வருத்தத்தைத் தந்தது.

இது தவறு என்று சிந்தை அறிவுறுத்தினாலும், ஆசையைச் சுமந்த மனம் அலைபாய்ந்தது. பின், ‘இது தேவையில்லாதது’ என அலைபாயும் மனதை அடக்கினாள்.

அவனை இங்கு காணும் முன்பு இதுபோல எண்ணங்கள் அதிகம் வரவில்லை. இப்போதோ அதைத் தடுக்க முடியவில்லை. அவ்வப்போது அவன் எண்ணங்கள் அவளைச் சூழ்ந்தாலும் ‘தன் நிலைக்கு அவனும் ஒருகாரணம்’ என்பது ஒருபக்கம் ஓடிக்கொண்டே இருந்தது.

இதே எண்ணங்களுடன் அனைத்தையும் செய்து முடித்தாள். மாலை நேரம் ஆனது. மினுவை தயார் செய்தாள்.

முதல் ஆளாக ரஜத் வந்தான். பின் மினுவின் ஓரிரு நட்புகள் என அந்த இடம் சிறுவர்களால் சூழ்ந்தது. நிவேதா சிறுவர்கள் உண்ணும் தீனியை அவர்களுக்குத் தந்தாள்.

கொஞ்ச நேரத்தில் ஸ்ரீ வந்துவிட, வந்தவனிடம் சிறுவர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, தான் தயாராகிவர சென்றாள் நிவேதா.

“மினுக்குட்டி ஹாப்பி பர்த்டே… யு லுக் சோ ப்ரைட்” கன்னத்தைக் கிள்ளி ஸ்ரீ சொன்னவுடன், நன்றி சொல்லி அழகாக புன்னகைத்தாள் மினு. அவன் வாங்கிவந்த கல்வி சம்மந்தப்பட்ட tab’பை கொடுத்தான்.

அதைப் பார்த்ததும் அவ்வளவு சந்தோஷம் மினுவுக்கு. ஸ்ரீயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு “தேங்க்ஸ் ஸ்ரீ அங்கிள்” என்றாள் சந்தோஷத்தின் மிகுதியில்.

ஒருமுறை சிறுவர்களுக்கான சாமான்கள் விற்கும் கடைக்கு சென்றபோது, மினு நிவேதாவிடம் வாங்கித்தரச் சொல்லி கேட்டாள். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றுவிட்டாள் நிவேதா.

மினு அந்த கிஃபிட்’டை பார்த்துக்கொண்டிருக்க,  சிறுவர்களுடன் ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் ரிஷி வந்தவுடன், அவனைப் பார்த்து ஸ்ரீ சின்ன புன்னகையுடன் தலையசைக்க, மினு அவனைப் பார்த்ததும் “ஹை தேவ்” அவன் அருகில் சென்று உற்சாகத்துடன் வரவேற்றாள்.

ரிஷி… மினுவின் தலையோடு தலை முட்டி  “ஹாப்பி பர்த்டே பேபி” என்றவுடன், மினு தன் வலது கை விரல்களை மூடி, குத்துவதுபோல ரிஷி முன் எடுத்துச்செல்ல, ரிஷியும் தன் கைவிரல்களை அவளைப்போலவே மடித்து அவள் முன் கொண்டு வந்தவுடன், கையேடு கைமுட்டி “தேங்க்ஸ் தேவ்” என்றாள் மலர்ச்சியுடன்.

இவர்கள் செய்வதைப் பார்க்க, ஏதோ சமவயது நண்பர்கள் போல… நெருங்கிய உறவு போல, அவ்வளவு அழகாக இருந்தது.

இதை பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீ, புருவங்கள் சுருக்கி புன்னகைத்தான். அப்போது தான் தயாராகி வந்த நிவேதா, இதை பார்த்தவுடன், அவள் மனம் அதை ரசித்தாலும், இவர்களுக்குள்ளான அதீத நெருக்கம் கொஞ்சம் கலக்கத்தையும் தந்தது.

“ரோமியை ஏன் கூட்டிட்டு வரல தேவ்?” இடுப்பில் கைவைத்து மினு கேட்க, அப்போது வந்த நிவேதாவைப் பார்த்த ரிஷி, மினுவிடம், “ரோமியைப் பார்த்து யாராச்சும் பயந்துட்டா…?” என்றவன் நிவேதாவை பார்த்து புருவம் உயர்த்தி கிண்டல் செய்வதுபோல புன்னகைத்துவிட்டு… “அதனால தான் கூட்டிட்டு வரலடா” என்றான்.

நிவேதா ஒரு நொடி ஒரே ஒரு நொடி அவனின் இந்த நையாண்டியில் விழி விரித்து பார்த்து, நீண்ட நாள் பிறகு கண்ட அந்த ரசனை புன்னகையில் லயித்து, பின்… அவன் தன்னை கண்டுகொள்ளும்முன் அங்கிருந்து நகர்ந்தாள்.

அடுத்து ரஜத் பெற்றோர், மற்றும் உடன் பணிபுரியும் நவீன் மற்றும் அவன் மனைவி என்று ஓரிருவர் வந்தபின், கேக் வெட்ட ஆயத்தமானார்கள்.

நவீனை பற்றி இரண்டாம் அத்தியாயத்தில் பார்த்தோம்!

எப்பொழுதும் நடைமுறையில் இருப்பதுபோல மெழுகுவத்தியை எல்லாம் அணைக்காமல், கேக் வெட்டப்பட்டது.

மினுவின் பக்கத்தில் நிவேதா, ரஜத் மற்றும் ஸ்ரீ நிற்க, மற்ற அனைவரும் சுற்றி நின்றார்கள். ரிஷி எதிர்புறமாக சற்று தள்ளி கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

நிவேதாவின் கண்கள் ஒருமுறை ரிஷி நின்ற இடத்தை தொட்டு மீண்டது. ஏனோ இன்று அவனை பார்க்கையில் மனதில் கோபமில்லை… மாறாக அவனின் செயல்களை மனதில் இருத்திக்கொள்ள நினைத்தது.

மினு முதலில் கொஞ்சமாக நிவேதாவிற்கு கேக் தந்த பின், நிவேதா அவளுக்கு ஊட்டினாள். ரஜத்துக்கு தந்த பின், ஸ்ரீக்கு கொடுத்தாள். ஸ்ரீ கொஞ்சம் எடுத்து மினுவிற்கும் தந்தான்.

‘அடுத்து என்ன’ என்று யோசிக்கும்முன், சற்று தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்த ரிஷியை பார்த்து, “தேவ் இங்க வா” என்று மினு அழைக்க, முதலில் மறுத்த ரிஷி, பின் புன்னகையுடன் அவர்கள் அருகில் சென்றான்.

மினு அவனுக்கு கேக்கை தந்தபின், ரிஷி தரவேண்டும் என்பதற்காக தானாக வாயைத் திறந்தாள். அந்த அன்பு ரிஷியின் மனதை அசைத்தது. அவளின் ஒவ்வொரு செயலும் அவனை மனதளவில் இன்னமும் மினுவிடம் நெருங்கச்செய்தது.

இதுபோல எந்த பந்தமும் இல்லாத ஒரு சொந்தம் அவன் எதிர்பார்க்கவில்லை இங்கே.

அவன் சீக்கிரம் கிளம்பிவிடுவான் என்ற எண்ணத்தில் நிவேதா இருக்க, அவனோ அவளின் எண்ணங்களுக்கு எதிராக எண்ண ஆரம்பித்திருந்தான்.

வற்புறுத்தலின் பேரில் தான் இந்தியா வந்தான். எப்போது இங்கிருந்து செல்வோம் என்ற எண்ணத்துடன் தான் இருந்தான். ஆனால் மினுவின் அன்பை பார்க்கும்போது, ‘இங்கேயே இருந்துவிடலாமோ!’ என்ற எண்ணம் முதல் முறை அவனுள் துளிர்த்தது.

மினு, ரிஷி… இருவரையும் தான் பார்க்கவே இல்லை என்பதுபோல… நிவேதா அனைவருக்கும் கேக் கொடுப்பதற்கு தயாரானாள்.

நவீன் மற்றும் நவீனின் மனைவிக்கு கொடுக்க, அவன் மனைவி, “என்ன நிவேதா இன்னைக்கு கூட இந்த சுடிதார் தானா…” வேண்டுமென்றே கேட்டபடி வாங்கிக்கொண்டாள்.

நிவேதா வெளியில் ஒரு சின்ன புன்னகை அவ்வளவே. ஆனால் மனதில் இதற்கு முன் இந்த பெண் சொன்னதெல்லாம் வந்து சென்றது.

ஒருமுறை சென்னை அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்வின்போது, புடவை கட்டியிருந்த நிவேதாவை மறைமுகமாக, ‘இவ்ளோ ஆம்பளைங்க இருக்கற இடத்துல இப்படி சிங்கிள் ப்ளீட்(Single pleat) தேவையா? இங்கேயே இப்படின்னா ஆஃபீஸ்’க்கு எப்படி போவாளோ? தனியா இருக்கற பொண்ணுங்க, கூட வேலை பார்க்கற ஆண்களை கவர… இதெல்லாம் ஒரு உத்தி. இவங்களே ஆண்களை தூண்டிவிட்டுட்டு, அப்புறம் ஏதாச்சும் நடந்துடுச்சின்னா… தையத்தக்கானு குதிப்பாங்க’ என்று காது படவே பேசியவள் இவள்.

அசிங்கமாகிவிட்டது நிவேதாவுக்கு. நீண்ட நாளைக்கு பின் அன்று தான் புடவையில் வந்திருந்தாள். அன்று நடந்த அச்சம்பவத்துக்கு பின், புடவை கட்டுவதையே நிறுத்திக்கொண்டாள்.

தனியாக வாழும் பெண்கள் சந்திக்கும் மற்றொரு சவால் இது. தினந்தினம் இதுபோல சுற்றியுள்ளவர்களின் பேச்சுக்களை கேட்க சகிக்காமல், தங்களையே மாற்றிக்கொள்வார்கள்.

பெண்களுக்கு பெண்களே எதிரி என்பதும் நூறு சதவிகிதம் உண்மையே. ஆண்கள் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பது தவறில்லை… தனியாக இருக்கும் பெண்கள் எதுவுமே செய்யவில்லை என்றாலும் கூட, அவர்கள் தான் ஆண்கள் செய்யும் தவறுகளுக்கு காரணம் என பழி போடும் காலமிது.

முதலில் இதுபோல பேச்சுக்களை கேட்டபோது உடல் கூசியது நிவேதாவுக்கு. ஆனால் நாட்கள் வருடங்களாக மாற மாற, அவள் பக்குவமடைந்ததுடன் சேர்ந்து மனதும் கல்லானது.

அவ்வளவு பேசிய பெண், இன்று அழையா விருந்தாளியாக வரும்போது, அவளை ‘வெளியே செல்’ என்றா சொல்லமுடியும்?!

அவள் கணவன் நவீன்… பெயரில் தான் நவீனம்! ‘பெண்கள் ஆண்களுக்கு கீழ் தான் எப்போதும்’ என்று உறுதியாக நம்பும் பழைய பஞ்சாங்கம். நிவேதா போன்ற பெண், அலுவலகத்தில் அவனுக்கு சமமான பொறுப்பில் இருப்பது பொறுக்காது அவனுக்கு!

தருணம் அமையும்போதெல்லாம் ஒன்று அவனே நேராக… இல்லையேல் மனைவியின் மூலம் நிவேதாவை இழிவுபடுத்த காத்திருக்கும் நல்ல உள்ளம்?!

மினுவிற்கு ஒவ்வொருவராக கிஃபிட் தர ஆரம்பித்தனர்.

ஸ்ரீ இதுவரை மறைத்துவைத்திருந்த, மினு கேட்ட ரிமோட் கண்ட்ரோல்ட் ஹெலிகாப்டர் அவள் முன் நீட்ட, மினுவின் சந்தோஷம் இரட்டிப்பானது.

நிவேதாவிற்கு மினுவின் சந்தோஷம் மகிழ்ச்சியைத் தர, அதைப் பார்த்துக்கொண்டே இரவு உணவிற்கு தயார் செய்துகொண்டிருந்தாள்.

மினு பிரிக்க சொன்னவுடன், ஸ்ரீ அதை பிரித்துத்தந்தான். ரிஷி மினுவின் ஆவலைப் பார்த்தபடி இருக்க, அவனுக்கு ஒரு அழைப்பு வரவும், பேசுவதற்கு வெளியே சென்றான்.

அந்த ஹெலிகாப்டர்’ரை பார்த்ததும், நவீனின் மகன் முகத்தில் சின்ன ஆசை கூடவே கொஞ்சம் பொறாமை. அவனும் சிறுவன் தானே. எட்டு வயதே ஆகிறது. உடனே தன் பெற்றோரிடம் அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

அவர்களால் அவனை சமாதானப்படுத்த முடியவில்லை. அதன் வெளிப்பாடு இதோ…

“பொண்ணுங்களுக்கு யாராச்சும் ஹெலிகாப்டர் கொடுப்பாங்களா ஸ்ரீ? இதெல்லாம் பசங்க விளையாடறது. ஏதாச்சும் கிச்சன் செட், இல்ல பியூட்டி கிட் வாங்கித் தந்திருக்கலாமே” என்றான் நவீன் ஏளனமாக.

அவனை சொல்லி தவறில்லை…. பொதுவாகப் பெண்பிள்ளைகளுக்கு கிஃப்ட் என்றால் பார்பி டால், கிச்சன் செட், மேக்கப் கிட், டெட்டிபேர் போன்றவை… அதிலும் இளஞ்சிவப்பு நிறத்தில்தான் பாதி இருக்கும்.

மினுவிற்கும் அதேபோல கிஃபிட்ஸ் தான் வந்திருந்தது. அவ்வளவு ஏன்… கூகுள் கூட இதுபோல பொருட்கள் தான் பெண்களுக்கு என்று சொல்கிறதே!

நவீன் பேசியதைக் கேட்டவண்ணம் உள்ளே வந்த ரிஷிக்கு கோபம் தலைக்கேறியது, ‘யார் வைத்தது இந்த சட்டம்’ என்பதுபோல.

“என்னங்க நவீன் சார்! எந்த காலத்துல இருக்கீங்க? நல்லவேளை நம்ம co CEO Catherine Stephen இதை கேட்கல… கேட்டிருந்தா பிங்க் ஸ்லிப் தான் உங்களுக்கு. என்ன சொல்லிடுவோமா?!” கேலி செய்தபடி, நக்கல் புன்னகையுடன் உள்ளே வந்தான் ரிஷி.

எதிர்பாராத நேரம், உடனடியாக வேலையை விட்டு நீக்குவதை, மென்பொருள் நிறுவனத்தில் ‘பிங்க் ஸ்லிப்’ என்பார்கள்.

ரிஷி பேசியதும் நவீனுக்கு முகம் வெளிறிப்போனது. 

இதுபோல பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு சலித்துப்போன நிவேதா, ஒரு பார்வையாளராக இதையெல்லாம் பார்க்க… ஸ்ரீ, ரிஷி இருவரும் சொல்லி வைத்தாற்போல நிவேதாவை பார்த்தனர்.

‘எவ்வளவு முற்போக்கு சிந்தனை உள்ள ஆண்கள்!’ என நினைத்து இருவரைப் பார்த்து சின்னதாகப் புன்னகைத்தாள்.

இதைப் பார்த்த நவீனின் மனைவி உடனே கணவனிடம் சொன்னது, “அவ பொண்ணு அந்த AVP’யோட பேரை சொல்லி கூப்பிடற அளவுக்கு, அவளுக்கும் அவருக்கும் நெருக்கம்! எல்லாத்தையும் கைக்குள்ள வச்சுப்பா போல” என்பதுதான்.

இதெல்லாம் சின்னக் குழந்தைக்கு தெரியுமா? மினு, அடம்பிடிக்கும் நவீன் மகனைப் பார்த்ததும், அவனையும் விளையாடுவதற்கு அழைத்தாள். அவன் மினு கையை உதறிவிட்டான்.

சிறுவர்கள் மனதில் நச்சுத்தன்மை ஒருபோதும் இருக்காது. பெரியவர்கள் தான் அதை விதைப்பது. அதற்கு உதாரணம் மினுவும். நவீன் மகனும்.

மினு விடாமல் அவனை அழைத்து வந்து, விளையாட ஹெலிகாப்டரை கொடுத்தாள்.

‘இந்த வயதில் மினுவின் மனப்பக்குவம் கண்டிப்பாக நிவேதாவின் வளர்ப்பால் தான் வந்திருக்கும்’ என்று நினைத்தவண்ணம் நிவேதாவை பார்த்தான் ரிஷி. அவனையும் அறியாமல் ஒரு நூலிழை புன்னகை பூத்தது அவன் இதழ்களில்.

இரவு நேரம் நெருங்க, மினு ரஜத்துக்கு பிடித்த உணவை அவனுக்கு காட்டினாள். அடுத்து ஸ்ரீக்கு பிடித்தது… பின் கடைசியாக ரிஷியிடம் அவனுக்கு பிடித்த உணவைக் காட்ட, மறுபடியும் உணர்ச்சிகளின் பிடியில் ரிஷி.

மனம் நெகிழ்ந்து மினுவின் உச்சி நுகர்ந்தவன், அவளையும் தன் பக்கத்தில் இருத்திக்கொண்டு சேர்ந்து சாப்பிட்டான். நிவேதா அழைத்தும் மினு அங்கிருந்து நகரவில்லை.

அங்கிருந்த அனைவரின் பார்வையும் ஒருமுறையேனும் ரிஷியையும் மினுவையும் பார்க்கத் தவறவில்லை.

ஒவ்வொருவராக சாப்பிட்டபின், சொல்லிக்கொண்டு கிளம்ப, ரஜத் அவனின் பெற்றோர், ரிஷி, ஸ்ரீ மட்டுமே இருந்தனர்.

அதற்குள் நிவேதாவின் நெருங்கிய தோழி அவளை வீடியோ காலில் அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்றுப் பேச ஆரம்பித்த நிவேதா முகத்தில் கொள்ளைப்புன்னகை. முகம் பிரகாசமானது.

நிவேதாவையே பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீ மனதில், திடீரென சொல்லத்தெரியாத பல உணர்வுகள் மோதிச்சென்றது.

“ஸ்ரீ… நான் பேசிட்டு வந்துடறேன். நீ கொஞ்சம் பார்த்துக்கோ ப்ளீஸ்” அவனிடம் சொன்ன பின், அங்கிருந்த அனைவரையும் பார்த்து, பொதுவாகப் புன்னகைத்துவிட்டு, அதே குதூகலத்துடன் நிவேதா உள்ளறைக்குள் சென்றுவிட, அவளைப்பார்த்த ஸ்ரீக்கு இப்போது படபடப்பு ஒட்டிக்கொண்டது.

இதுபோல ஒரு புத்துணர்ச்சியை நிவேதாவிடம்  இதுவரை பார்த்திராத ரிஷி… கொஞ்சமாக விழிகள் விரித்துப் பார்த்திட, “அம்மாவோட க்ளோஸ் ஃப்ரெண்ட் தேவ். என் பர்த்டே’க்கு கால் பண்ணிருக்காங்க. பரவால்ல நான் அப்புறம் பேசிக்கறேன்” என்றாள் மினு சாப்பிட்டுக்கொண்டே.

சிறிது நேரத்தில் ரஜத்தின் அம்மா உள்ளறைக்குள் சென்று நிவேதாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப, ரிஷி தானும் கிளம்பலாம் என நினைத்தான்.

‘ரஜத்தின் அம்மாபோல இவனும் உள்ளறைக்குள் செல்ல முடியுமா?!’ சில நொடிகள் ரிஷி காத்திருக்க, அதைப் பார்த்த ஸ்ரீ நிவேதாவை அழைக்க உள்ளே சென்ற நேரம், அவளும் கையில் போன் அழைப்பைத் துண்டிக்காமல் வெளியே வந்தாள்.

ஸ்ரீயை பார்த்த நிவேதா ஒற்றை புருவம் உயர்த்தி புன்னகைக்க, கொஞ்சம் தடுமாறிய ஸ்ரீ, ‘எதற்கு வந்தோம்’ என்பதை மறந்து, ‘ஒன்றுமில்லை’ எனத் தலையாட்டியபடி நகர்ந்தான். இன்னமும் படபடப்பு அவனுக்குக் குறையவில்லை.

நிவேதா வெளியே வருவதைப் பார்த்த ரிஷி, மினுவிடம் அவன் கொண்டு வந்த கிஃபிட்’டை நீட்டினான்.

நிவேதா லேசான புன்னகையுடன் அவர்களைப் பார்க்க, மினு ஆர்வம் தாங்காமல் உடனே அதைப் பிரித்தாள். ரிஷிக்கும் புன்னகை. ஸ்ரீ இந்த உலகிலேயே இல்லை. கண்கள் மட்டும் நிவேதா பக்கம் பட்டுப் பட்டு மீண்டது.

“வாவ் தேவ்! லவ்லி. மா இங்க பாரேன்” விழிகள் அகல சொல்லிக்கொண்டே நிவேதாவிடம் அதைக் காட்ட, அதைப் பார்த்த நிவேதாவின் இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது.

ஆங்கில எழுத்து “V” மற்றும் “D” இதயவடிவில் டிசைன் செய்யப்பட்ட பிளாட்டினம் டாலர் மற்றும் செயின். சாதாரணமாகப் பார்த்தால் அது வெறும் இதயம் போலத்தான் தெரியும்.

ஆனால் அவள் தான் அதை முன்னமே பார்த்திருக்கிறாளே! அதற்கான அர்த்தம் “Veda Deva” என்று அவள் முன் நிற்கும் அவளின் தேவா முன்பு சொல்லியிருக்கிறானே!

‘இதை இத்தனை வருடங்களாக வைத்திருக்கிறானா?!’ அவள் விழியோரம் விழிநீர் கசிந்தது!

படாதபாடு பட்டு மூச்சை உள்ளிழுத்து, கண்ணீரைத் தடை செய்த நிவேதா… மினுவை பார்த்துப் புன்னகைத்தாள்.

“தேங்க் யு சோ மச் தேவ்” மினு புன்னகையுடன் சொல்ல, அவன் தன் வலக்கை விரல்களை மடித்து அவள்முன் நீட்டினான். அவளும் அதே போல செய்ய, கையோடு கை முட்டிக்கொண்டனர். 

நிவேதா மினுவிடம், “ஆன்ட்டி லைன்ல இருக்காங்க மினு” என்றாள் கொஞ்சம் கரகரத்த குரலில்.

“தேவ் நான் ஆன்ட்டி கிட்ட பேசணும்… நாளைக்கு பார்ப்போம். பை” புன்னகையுடன் சொல்லிவிட்டு , நிவேதாவிடம் போனை வாங்கிக்கொண்டாள்.

ரிஷி தலையசைத்தவுடன், ஸ்ரீயிடம் சொல்லிக்கொண்டு மினு உள்ளே சென்றுவிட்டாள்.

மறுபடியும் ஸ்ரீ நிவேதாவை ஒரு தவிப்போடு பார்த்து, “நான் கிளம்பறேன் நிவி. நாளைக்குப் பார்ப்போம்” என்றுவிட்டு, அவள் முகத்தை அதற்கு மேல் பார்க்காமல் சென்றுவிட்டான் அதே தவிப்புடன்.

அங்கே இப்போது நிவேதா ரிஷி மட்டுமே! நிவேதா மனம் ஒருநிலையில் இல்லை. கையில் பற்றியிருந்த அந்த டப்பா, என்னவோ செய்தது அவளை. அதை இறுக பற்றிக்கொண்டாள்.

அப்போது ரிஷி கிளம்ப எத்தனிக்க, “பிளாட்டினம் எ…ல்லாம் எதுக்கு ரிஷி? இ…தெல்லாம் மினு இப்போ யூஸ் பண்ண முடியாது. அவ சின்ன பொண்ணு” கொஞ்சம் தடுமாறி, மனதில் எழுந்த கேவலைக் கட்டுப்படுத்தியபடி சொன்னாள்.

அவளுக்கோ, ‘இது தன்னிடம் இருந்தால் தன் மனம் கண்டிப்பாக அலைபாயும். தேவ்வை நினைத்து, பழையவற்றை நினைத்து மறுகும். இப்போது இதெல்லாம் தேவையில்லாதது… தேவையற்றதும் கூட…’ என்று நினைத்தாள்.

அவனுக்கோ, ‘இது பிளாட்டினம் என்று இவளுக்கு எப்படி தெரியும்? பார்க்க வெள்ளி போலத்தானே இருக்கிறது. ஓ! பெண்ணாயிற்றே… வித்தியாசம் பார்த்தாலே தெரியும் போல’ என எண்ணி…

“மினுக்கு பிடிச்சிருக்கு. ஏதாச்சும் அகேஷன்’ல யூஸ் பண்ணிக்கோங்க. நான் கிளம்பறேன்” சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.

அவன் சாதாரணமாகத்தான் சொன்னான். ஆனால் அவன் சொன்ன பன்மை “யூஸ் பண்ணிக்கோங்க” ஏனோ அவள் மனதைப் பிசைந்தது. சுவாசிக்க முடியாமல் தொண்டை அடைத்தது.

அதற்கு காரணம்… இதை அவன் அவளுக்குத் தாலியுடன் அணிவிப்பேன் என்று சொல்லியிருந்தான்!

அந்த டாலரை பார்க்கும்போதெல்லாம் பழைய நினைவுகள் அலைமோதின நிவேதாவிற்கு!  

***தொடரும்***

31
4
8
5
4
1
2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved