மீண்டும் ஒரு காதல் – 9

மீண்டும் ஒரு காதல் – 9:

அந்த டாலரை பார்க்கும்போதெல்லாம் பழைய நினைவுகள் அலைமோதின நிவேதாவிற்கு.

********************

அந்த நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு பரபரப்பாக இருந்தது.

“ஏய் நிவி இன்னைக்காச்சும் கொஞ்சம் டச் அப் பண்ணிக்கோ டி” நிவேதாவின் அக்கா அனுராதா, நிவேதாவிடம் கேட்டபடி அவளை தயார்செய்தாள்.

“இந்த முகத்தை பார்த்து சரின்னு சொல்றவன் போதும். எப்படியும் வர்றவன், வீட்ல பேசிட்டு சொல்றேன்னு தான் சொல்லப்போறான்” நிவேதா சலித்துக்கொள்ள, இருபத்தி ஆறு வயதை நெருங்கிய தன் தங்கையைப் பார்க்கக் கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது அனுராதாவிற்கு.

நிவேதாவுக்கு செவ்வாய் தோஷம் என்று ஒன்பது கட்டங்கள் சொல்வதால், பொருத்தம் அமையும் வரன்கள் குறைவு. அப்படியே அமைந்தாலும் ஏதாவது ஒரு தடை வந்துகொண்டே இருந்தது.

இதற்கு முன் பெண் பார்க்க வந்த ஒருவன், ‘பெண்ணின் அக்கா நல்ல நிறமாக… அழகாக இருக்கிறாளே, தங்கை கொஞ்சம் நிறம் குறைவு’ என்று சொல்லி… ‘வீட்டில் பேசிவிட்டு சொல்கிறோம்’ என சென்றவன் தான். அதற்குப்பின் அழைப்பே வரவில்லை.

அடுத்து, பெண் பார்க்க வந்தவனின் அம்மா நிவேதாவிடம், ‘உனக்கு பாடத்தெரியுமா, சமைக்கத்தெரியுமா?’ என்று வேலைக்கு ஆள் எடுப்பது போல கேட்டார்.

நிவேதாவோ, ‘கொஞ்சம் நல்லாவே சமைப்பேன். பாடத் தெரியாதும்மா. ஆனா நல்லா ஓடத்தெரியும்’ என்று சொல்ல, அது வந்தவர்களுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை.

ஆனால் நிவேதா சொன்னது உண்மையே! அவள் ஒரு அதெலெட் (வீராங்கனை). நிறைய மாரத்தான்’னில் பங்கெடுத்திருக்கிறாள்.

அடுத்து வந்த சில வரன்கள் வீட்டில், ‘பெண்ணின் அக்கா காதலித்து திருமணம் செய்துகொண்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்று மறுத்து விட்டார்கள்.

இதோ இப்போது அடுத்தவன், ‘இவன் அல்லது இவன் வீட்டில் என்ன சொல்ல போகிறார்களோ’ என்ற வருத்தம் அனுராதாவிற்கு.

அனுராதா, நிவேதா இருவரும் தந்தையில்லாமல், அவர்கள் அம்மா கமலாவின் கடின உழைப்பால் வளர்ந்தவர்கள்.

ராதா எனும் அனுராதா… மித்ரனை காதலித்து திருமணம் செய்துகொண்டவள். அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தந்தது அனுராதாவின் அம்மா கமலா மட்டுமே. மித்ரன் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை.

“சரி நிவி. மேக்கப் எல்லாம் செய்துக்க வேண்டாம்… ஆனா வர்றவங்ககிட்ட நீ எதுவும் பேசக்கூடாது. நான் பார்த்துக்கறேன்” என்றார் கமலா, அக்கா தங்கை பேசியதைக் கேட்டபடி.

“என்கிட்ட ஏதாச்சும் அவங்க கேட்டா கூட, ஜிப்(zip)… ஓகேவா” வாயை ஜிப் போடுவதுபோல செய்து காட்டினாள் நிவேதா. கமலா புன்னகைத்தார்.

சில நிமிடங்களில், பையன் வீட்டில் இருந்து பெண் பார்க்க வந்தார்கள். மித்ரன் அழைத்து வந்திருந்தான்.

வந்து உட்கார்ந்ததிலிருந்து பெண்பார்க்க வந்தவன், போனில் இருந்து தலை தூக்கவில்லை. அவன் அம்மா மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். அப்பா அமைதியாகவே இருந்தார்.

பேச்சின் நடுவில் நிவேதாவை பார்த்த அந்த அம்மையார், பின் அனுராதாவையும் பார்த்தார். பின் அவள் பக்கத்திலிருந்த மித்ரனையும் பார்த்தார்.

மனதில் ஏதோ கணக்குப் போட்டபடி, “எங்களுக்கு பொண்ணு ஓகே தான். என்ன என் மகனைவிட கொஞ்சம் கலர் கம்மி. பரவால்ல. கலரா முக்கியம்” என்றதும், நிவேதாவின் அம்மா கமலா வெறுமனே புன்னகைத்தார்.

‘அட! எவ்வளவு பெரிய மனது இந்த அம்மாளுக்கு. கலர் மேட்டர் இல்லன்னா எதுக்கும்மா அதைப் பற்றி முதல்ல பேசணும்?!’ மனதில் மட்டுமே நினைத்துக்கொண்டாள் நிவேதா, அம்மாவின் பேச்சை மீறக்கூடாது என நினைத்து.

அனுராதா நிவேதாவின் மனதை படித்ததுபோல நிவேதாவை பார்த்தாள். மித்ரன் யாருக்கும் தெரியாமல் ‘தம்ஸ் டௌன்’ காட்டினான் நிவேதாவிடம். நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டாள் நிவேதா.

“அக்கா காதல் கல்யாணம் கூட பெரிய விஷயம் இல்லைங்க” என்றார் அந்த அம்மையார் பெரிய மனதுடன்?!

அமைதியாக இருந்தனர் நிவேதாவின் வீட்டில்.

“காதல் கல்யாணம்… பையன் வீட்ல ஒத்துக்கல. அப்போ கண்டிப்பா வரதட்சிணை எல்லாம் இருந்திருக்காது இல்ல?” அந்த அம்மையார் கொக்கியைப் போட, ‘அதானே… காரணம் இல்லாமல் இருக்குமா’ இதுவும் நிவேதாவின் மைண்ட் வாய்ஸ்.

“அதனால பொண்ணுக்கு பேசினதை விட ஒரு முப்பது பவுன் அதிகம் போட்டுடுங்க. ரொக்கம் மொத்தமா ஒரு மூணு லட்சம் போதும்” என்றார் மிகவும் பெருந்தன்மையாக?!

‘இதுபோதுமா இல்லை இன்னமும் ஏதாவது?!’ இது மித்ரனின் மைண்ட் வாய்ஸ்.

“அப்புறம் கல்யாண செலவை நீங்க பார்த்துப்பீங்க. அதுவும் பிரச்சனை இல்ல” என்று அவர் முடிக்க… அவர் மகன் போனில் இருந்து தலையைத் தூக்கவில்லை.

“எல்லாம் பண்ணிடலாங்க” கமலா சொல்லி முடிக்கும்முன்… “ஆமா பண்ணிடலாம். நீங்க கேட்கிறது எல்லாமே செய்திடலாம்” நிவேதா இப்போது பேசினாள்.

அவள் ‘என்ன பேசப்போகிறாள்’ என்று புரிந்த கமலா “நிவி…” என அவளைத்தடுக்க… “இரும்மா” கமலாவிடம் சொல்லிவிட்டு, வந்தவர்களிடம்…

“நீங்க கேட்ட எல்லாமே பண்ணிடலாம்… ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் உங்க பையன பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துட்டு, எங்க வீட்டுக்கு வர சொல்லிடுங்க. அதான் விலை கொடுத்து வாங்கறோமே. எங்களுக்கு தான் அந்த பொருள் சொந்தம்”

‘பொருள்’ என்ற வார்த்தையை அழுத்தமாகச் சொல்லி, கைகளைக் கட்டிக்கொண்டு, அசால்டாக சொன்னவளை, இதுவரை போனில் மூழ்கி இருந்தவன் அதிர்ந்து பார்த்தான். கூடவே முறைத்தான்.

“என்ன பேச்சு பேசற?…” அந்த அம்மையார் வரிசையாக நிவேதாவை வசைபாடிவிட்டு, கிளம்பிவிட்டார்.

கமலாவிற்கு தான் மனவருத்தம்… இன்னமும் எத்தனை வரன்கள் இப்படித் தட்டிப்போகுமோ என நினைத்து.

அவர் கழுத்தைக் கட்டிக்கொண்ட நிவேதா “அம்மா… இப்போவே இவ்வளவு கேட்கறாங்க. இன்னமும் தல தீபாவளி, தல பொங்கல், தல ஆடி, தல அமாவாசை, தல பௌர்ணமின்னு… சப்பா, கேட்டுட்டே இருப்பாங்க” என்றதும், அவளைப் பார்த்து முறைத்தார் கமலா.

“அத்தை! அவ சொல்றதும் சரிதானே. ஏதோ சந்தைல பேரம் பேசுற மாதிரி பேசறவங்கள இப்படி தான் டீல் பண்ணணும்” மித்ரனும் சேர்ந்துகொண்டான்.

அதேநேரம் மித்ரனுக்கு அழைப்பு வர, “சொல்லுடா தேவ்” என்றபடி வெளியே சென்றான். அச்சமயம் ‘தேவ்’ என்ற பெயர் மித்ரன் அனுராதாவுக்கு மட்டுமே தெரியும்.

“எனக்குன்னு எவனாச்சும் ஒருத்தன் மாட்டாமலா போய்டுவான் கம்மு” கமலா கம்முவாக மாறிப்போக, மகளின் தலையை ஆதரவாக வருடினார் கமலா கண்களில் நீருடன்.

நிவேதா வெளியில் இவ்வளவு சாதாரணமாகப் பேசுகிறாள், ஆனால் மனதில் எவ்வளவு வருத்தம் இருக்கும் என்பது அவருக்கு நன்றாக புரிந்தது.

“ஐயோ அம்மா… இப்போ எதுக்கு ஃபீல் பண்ற? ஆல்ரெடி அங்க ஒருத்தி ஏதோ இடி விழுந்த மாதிரி உட்கார்ந்திருக்கா பாரு” என்று அனுராதவை காட்டினாள் நிவேதா.

அப்போது போன் பேசிவிட்டு உள்ளே வந்த மித்ரன்,  “இங்க பாருங்க. மொதல்ல இந்தமாதிரி இருக்கறத நிறுத்துங்க. இவ்ளோ ஃபீல் பண்ற அளவுக்கு இப்போ என்ன நடந்துடுச்சு? அடுத்து என்னன்னு பார்ப்போம்… ” என கடிந்துகொண்டான்.

அதற்குப் பின் அனைவரும் சகஜமாக இருக்க முற்பட்டனர்.

“அனு, தேவ் போன் பண்ணினான். அவன் அங்க பேசி ஒரு ப்ராஜக்ட் எடுத்து கொடுத்துருக்கான். அந்த வேலை ஸ்டார்ட் பண்ணணும்” மனைவியிடம் சொன்னான் மித்ரன்.

மித்ரன்… படித்து முடித்து, கொஞ்ச நாட்கள் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்தான். அப்போது அனுராதாவுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலில் முடிந்தது.

பின்… சில வருடங்களில், அனுராதாவுடன் இணைந்து பத்து பேரை மட்டும் சேர்த்துக்கொண்டு ஒரு சிறிய அளவிலான, மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பித்தான்.

நிவேதாவும் முதுகலை படிப்பு முடித்தவுடன், ஒரு வேலையில் அமர்ந்தாள். அவளையும் தங்களுடன் சேரச்சொல்லி அனுராதா கேட்க, நிவேதா மறுத்துவிட்டாள்.

மித்ரன் புது நிறுவனம் ஆரம்பித்த போது தான், தேவ் என்கிற ரிஷி தேவ் மற்றவர்களுக்கு அறிமுகம் ஆனான். மித்ரனின் நெருங்கிய கல்லூரி நண்பன்… அமெரிக்காவில் L1A என்கிற வொர்க் விசாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.

மித்ரன் தேவ்விடம் உதவி கேட்க, தேவ்வும் அவனால் ஆனவரை மித்ரனுக்காக ஏதாவது வேலை ஏற்படுத்தித் தர முயற்சித்தான். ஆனால் முதலில் ஓரிரண்டு முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தது. இருந்தும் தேவ் விடவில்லை.

மித்ரன், அனுராதா, தங்கள் தொழிலை உயர்த்த எண்ணினாலும், நிவேதாவின் வயதை மனதில் கொண்டு, சீக்கிரம் கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

அவன் வீட்டில் சம்மதம் கிடைக்காமல் போகவே, அவர்களை மீறி திருமணம் செய்துகொண்டனர்.

பின், அனுராதாவும் கருவுற்றாள். நிவேதாவிற்கு வரன் பார்க்க ஆரம்பிக்க, இன்றுவரை எதுவும் சரியாக அமையவில்லை.

கணவன் புது ப்ராஜக்ட் குறித்து பேச, “சூப்பர் மித்து. எப்படியோ தேவ் முடிச்சிட்டாரு. ஒழுங்கா வேலை பார்க்கிறது நம்ம கைல தான் இருக்கு” என்றாள் அனுராதா.

“ஹ்ம்ம் அதுல ஒரு சிக்கல். அவங்க கேட்கிற டெக்னாலஜி’க்கு நம்மகிட்ட ஆட்கள் இல்ல. புதுசா எடுக்கணும்” என்று சொல்லும்போதே, “என்ன… என்ன சிக்கல் மாம்ஸ்” கேட்டபடி டீ எடுத்துவந்தாள் நிவேதா.

“ஆமா சொன்னா மட்டும் சரி பண்ணிடுவயா” அனுராதா கோபத்துடன் சலித்துக்கொள்ள… “ஹலோ என்ன ஓவரா பேசற… என்ன விஷயம் மாம்ஸ்?” மித்ரனிடம் கேட்டாள்.

மித்ரன் அவன் நிலையைச் சொல்லி, “அந்த டெக்னாலஜி’ல தானே நீ வேல பார்க்கிற. அதுதான் அனுவுக்கு கோபம்” என்றான்.

“ஓ. அதுதானா… அப்போ சரி கோவிச்சுக்கோ” என்றாள் குறும்புடன்.

“ப்ச் நிவி… சீரியஸா கேட்கிறேன். இப்போ இதுக்கு வெளிய ஆள் எடுத்தா சம்பளம் அதிகம் கேட்பாங்க” அனுராதா சொல்லி முடிக்கும்முன், “ஹலோ… என்னை என்ன சம்பளம் இல்லாத அடிமையா சேர்த்துக்க பார்க்கறியா” நிவேதா அனுராதாவைக் கேட்டபடி முறைத்தாள்.

அதில் கோபம்கொண்ட அனுராதா பக்கத்திலிருந்த அவள் வீட்டிற்கு சென்றாள். நிவேதா அவள் அம்மா ஒரு வீட்டில் இருக்க, மித்ரன், அனுராதா பக்கத்தில் மற்றொரு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.

“நிவி இந்த சமயத்துல கூட அனுவை வம்புக்கு இழுப்பியா?” சமையலறையில் இருந்து கடிந்துகொண்டார் கமலா.

அதையெல்லாம் கண்டுகொள்ளாத நிவேதா, அனுராதா போவதையே பார்த்தபடி, “செம்ம கோபம் போல மாம்ஸ். ப்ச்… எனக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கு, அங்க வந்து வேலை செய்ய. எப்படி சொல்றது… எனக்கு கொஞ்ச…” அவள் பேசும்போது, எதிரே ஒரு பத்திரத்தை வைத்தாள் அனுராதா.

“என்னது இது” நிவேதா அதை எடுத்துப்பார்க்க… “உன்ன நாங்க அடிமை மாதிரி நடத்துவோமா நிவி? இது கம்பனி’ல உன்னுடைய, அம்மாவுடைய ஷேர்ஸ். நீ, இந்த கம்பனி ஸ்டார்ட் பண்றப்ப, இன்வெஸ்ட்மென்ட்’க்கு ஹெல்ப் பண்ண. அப்போவே இதை நாங்க பண்ணிட்டோம். இதோட ஒர்த் இப்போ நாலு லட்சம். போகப் போக அதிகம் ஆகும். நாங்க உன்ன ஏமாத்திடுவோமா நிவி?” கண்களில் கண்ணீர் துளிர்க்கப் பேசினாள் அனுராதா.

நிவேதா இருவரையும் அதிர்ந்து பார்த்தாள். அவள் ஒரு சிறிய அளவிற்கு, சிறிய தொகை தந்து உதவினாள். அவ்வளவே! அதுவும் இதுபோல எதிர்பார்த்தெல்லாம் அவள் செய்யவில்லை. இப்போது இதை எதிர்பார்க்கவும் இல்லை.

“ஹே ராதுக்கா… நான் விளையாட்டுக்கு பேசினேன்” நிவேதா அனுராதாவை சமாதானப்படுத்த, அனுராதா முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“இப்போ என்ன… நான் வரணும் அவ்ளோதானே… வரேன். வந்துதொலையறேன். அதுக்குத்தானே இவ்ளோ சீன்” நிவேதா போலியான கோபத்துடன் அனுராதாவைப் பார்த்து முறைக்க… அனுராதா கண்களைத் துடைத்துக்கொண்டு புன்னகைத்தாள்.

பின், “நீ  வேலையை விட வேண்டாம் நிவி. இந்த ப்ராஜக்ட் ஒரு மாசம் தான். உன் ஆஃபீஸ்ல கொஞ்சம் லாங் பிரேக் எடுத்துக்கோ. இங்க பிடிச்சா கன்டினியூ பண்ணு. இல்ல வேண்டாம்” என்றாள் அனுராதா.

“மாம்ஸ்… உங்க பொண்டாட்டி கில்லாடி! செம்ம ஆள் தான் போங்க. இப்போ தெரியுது இவ எப்படி கிளைன்ட்’கிட்ட பேசி பேசியே சரி பண்றான்னு” நிவேதா அனுராதாவைக் கிண்டல் செய்து… மண்டையில் குட்டும் வாங்கிக்கொண்டாள்.

“ஆமா, இந்த பேப்பர்ஸ்’ல நான் சைன் போட்ட மாதிரி ஞாபகமே இல்லையே” நிவேதா யோசிக்க, இப்போது அனுராதா குறும்புடன் கண்ணடித்தாள்.

“அடிப்பாவி… உன் வேலை தானா இது… உன்கிட்ட கொஞ்சம் கவனமா தான் இருக்கணும்” என்றவள்… “மாம்ஸ் அப்புறம் இந்த ஷேர்ஸ்’லாம் எனக்கு வேண்டாம். நாலு லட்சம் தேறும்னு சொல்றாளே… இதை உங்களுக்கே வித்துடறேன். கம்பனி லாபமா போறப்பவே காசு பார்த்துடலாம்ல” என்றதும், இப்போது மித்ரனிடம் குட்டு வாங்கினாள்.

……..

அடுத்த ஒரு வாரத்தில் மித்ரன், அனுராதா நிறுவனத்தில் வேலை பார்க்கச் சென்றாள் நிவேதா.

முதலில் அங்கு வேலை பார்க்கும் ஆட்களுக்கு புதிய டெக்னாலஜி’யை (தொழில்நுட்பம்) கற்றுக் கொடுத்தாள். அதற்குள் அந்த ப்ராஜக்ட் வேலை உறுதி ஆனது. அதற்கான வேலைகளை ஆரம்பிக்க ஆயத்தமானார்கள்.

தேவ் அமெரிக்காவிலிருந்து உதவுவதாகச் சொல்லியிருந்தான். அவன்தான் கிளைன்ட் மற்றும் இவர்களுக்கு பாலமாக இருந்தான். அதனால் அவனுடன் ஒரு கான்ஃபெரன்ஸ் அழைப்பை, வேலை செய்பவர்களோடு ஏற்பாடு செய்திருந்தான் மித்ரன்.

தேவ் தன்னைப்பற்றி முதலில் அறிமுகம் செய்து கொண்டபின், வேலை பார்ப்பவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டான். அப்போதுதான் நிவேதா தன்னையும் அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

“ஓ நிவேதா… அனுராதா’ஸ் சிஸ்டர். உங்கள இன்வால்வ் பண்ண ரொம்ப கஷ்டப்பட்டதா அனுராதா சொன்னாங்க. தேங்க்ஸ் டு யுவர் ஹெல்ப். உங்க ப்ரசன்ஸ் எங்களுக்கு கண்டிப்பா உதவும்” என்றான்.

“ஐ ஹோப். தேங்க் யு” என்றாள் நிவேதா. அவ்வளவுதான் அவர்களின் பேச்சு இருந்தது.

அடுத்து அனைவரும் வேலையில் முழுமையாக இறங்கினர். தேவ் நிவேதா இருவரும் வேலை நிமித்தம் எப்போதாவது பேசுவார்கள்.

அப்படி ஒருமுறை இந்திய நேரப்படி காலை பதினோரு மணிக்கு தேவ் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அது அவனுக்கு நடு இரவு ஒன்றரை மணி.

அவனைப் பார்த்ததும், ஆஃபீஸ் மெஸென்ஜரில்… ‘இன்னும் நீங்க தூங்கலையா?’ ஒரு செய்தியைத் தட்டிவிட்டாள் நிவேதா.

‘கொஞ்சம் வேலை இருக்கு நிவேதா’ பதில் தந்தான் தேவ்.

‘எதுக்கு இவ்ளோ ஸ்ட்ரைன் பண்ணிக்கிறீங்க’

‘இதுல என்ன இருக்கு? எப்போவாவது தானே’ புன்னகைக்கும் ஸ்மைலியை சேர்த்து பதில் தந்தான்.

‘ஹ்ம்ம்… ஏதாச்சும் செய்யணும்னா சொல்லுங்க. நான் செய்றேன்’ என்றதும், கொஞ்சம் வேலையை அவளுக்குத் தந்தான்.

அப்போது கையில் போனுடன் மித்ரன் அங்கே வர, “மாம்ஸ் இதெல்லாம் அநியாயம். ஷேர்ஸ் கொடுத்து என் அருமை அக்கா என்னை உள்ள இழுத்த மாதிரி, உங்க ஃப்ரெண்ட்’டயும் ஏமாத்திட்டீங்களா? தூங்காம வேலை பார்க்கிறார்” போலியாக முறைத்தவண்ணம் கேட்டாள்.

“ஹாஹா நிவி… அவன் என் தேவா… நான் அவனோட மித்ரா” தளபதி படம் அளவிற்குப் பேசிய மித்ரன், “நான் அதெல்லாம் பண்ணேன்னா… ‘உனக்கு போய் ஹெல்ப் பண்ணேன் பாரு’னு கெட்ட வார்த்தைல திட்டிட்டு போயிட்டே இருப்பான். அவன் நினைச்சா இதைவிட பெரிய ஸ்டார்ட் அப்’பே ஆரம்பிக்கலாம் நிவி. அதுல எல்லாம் அவனுக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல” என்றவன்…

“அட! அவன் ஏதோ உன்கிட்ட பேசணும்னு சொன்னான்… லைன்’ல தான் இருக்கான்… பேசு” போனை நிவேதாவிடம் தந்துவிட்டு சென்றான் மித்ரன்.

“ஹலோ சொல்லுங்க தேவா ஸார்” என்றதும்…. “தேவாவா” அந்தப்பக்கம் தேவ்வின் ஆச்சரிய குரல்.

“ஆமா ஸார். இப்போ தான் உங்க சூர்யா… ஸாரி ஸாரி மித்ரா செம்ம பில்ட்டப் குடுத்துட்டு போனார்” என்றதும், சத்தமாக சிரித்தான் தேவ்.

“இன்னமும் தூங்கலையா தேவா ஸார்?”அவளும் விடாமல் கேலி பேச, “இதோ தூங்கப் போறேன். அதுக்கு முன்னாடி என்ன செய்யணும்னு இன்னொரு டைம் சொல்லிடலாம்னு நினைச்சேன் நிவி” என்றான்.

“என்னது நிவியா?” இப்போது விழிகள் விரித்து அவள் கேட்டாள்.

பெரிய நட்பு வட்டம் இல்லாத நிவேதாவை, வீட்டிலும் மற்றும் ஓரிரு தோழமைகள் மட்டுமே நிவி என்று உரிமையுடன் அழைப்பார்கள். அவளும் அதிக உரிமையுடன் எவருடனும் பேசியதில்லை. இன்று ஏதோ மித்ரன் சொன்னதால் தேவா என தேவ்வை வம்பிழுத்தாள்.

“என் சூர்யா இல்ல இல்ல மித்ரா அப்படித்தானே உன்ன கூப்பிட்டான் நிவி” ‘நிவி’யை மட்டும் வேண்டுமென்றே கொஞ்சம் இழுத்துச் சொன்னான். இப்போது அவள் புன்னகைத்தாள்.

பின் இருவரும் வேலை நிமித்தம் பேசிவிட்டு வைத்துவிட்டனர். ஆனால் ஒரு மெல்லிய நல்லுணர்வு இருவருள்ளும் அவர்கள் அறியாமலேயே அரும்பியது.

அவ்வப்போது வேலையைப் பற்றிப் பேசும்போது, இதுபோலவும் பேசிக்கொண்டார்கள். பின் இருவரும் எண்களை மாற்றிக்கொண்டனர். சிலசமயம் பேசிக்கொண்டார்கள்.

அப்படி ஒரு நாள் ஞாற்றுக்கிழமை மதிய நேரம், தேவ் ஒரு முக்கிய வேலையாக நிவேதாவை அழைத்தான்.

“சொல்லுங்க தேவ்” கொஞ்சம் கலக்கத்துடன் வந்தது அவள் வார்த்தைகள். அதைப் புரிந்துகொண்டவன் போல, “என்னாச்சு?” என்று விசாரித்தான்.

“ப்ச். ரொம்ப நாள் கழிச்சு மனசு சரியில்லைன்னு இன்னைக்கு மாரத்தான் போனேன் தேவ்” என்றாள். தவறி அதிகமாக வெளி வந்த வார்த்தைகள் புரிந்து ‘ஐயோ என்ன நினைப்பானோ?!’ என அவள் எண்ண…

அவனோ, “ஓ… ஓகே. இல்ல… ஒரு வேலையை பத்தி பேசலாம்னு கூப்பிட்டேன். சரி நாளைக்கு பேசிப்போம்” என்று வைத்துவிட்டான்.

அவனிடம் ‘மனது சரியில்லை’ என தேவையில்லாமல் அதிகம் பேசிவிட்டோமே என எண்ணியவள்… இப்போது அவனின் பதிலில், ‘ச்ச ஒரு கர்ட்டஸி’க்கு என்னனு கேட்டா என்னவாம்!’ எதற்கு என்று தெரியாமலேயே ஒரு கோபம் அவன் மேல் வந்தது.

அடுத்த சில நிமிடங்கள் கழித்து மொபைலில் ஒரு பீப் சத்தம்.

“Message from Dev” என்ற வாக்கியம் திரையில் மின்னியது!

 ***தொடரும்***

28
4
10
6
3
1
2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved