மீண்டும் ஒரு காதல் – 10

மீண்டும் ஒரு காதல் – 10:

அவள் இருந்த மனநிலையில் யாரிடமேனும் சொல்லவேண்டும் என்று நினைத்தாள்.

அந்நேரம் தேவ் அழைத்ததும், ‘அவன் தன்னிடம் என்னவாயிற்று என்பதை கேட்கவில்லை’ என்ற கோபம் எழுந்தாலும், ‘இந்த கோபம் அபத்தம் அவன் எதற்காக கேட்க வேண்டும்?’ என்ற கேள்வியும் அவள் மனதில் வந்துசென்றது.

அங்கே அவனுக்கு நிவேதா மனது சரியில்லை என்று சொன்னதும், ‘என்ன ஆயிற்று?’ என அவள் எதிர்பார்த்ததையே அவன் யோசித்தாலும், ‘அதை எப்படி கேட்கமுடியும்? தனிப்பட்ட விஷயங்களை கேட்கும் அளவிற்கு இருவரும் இதுவரை அவ்வளவு பேசவில்லையே’ என்ற தயக்கமும் இருந்தது.

இருந்தும் மறைமுகமாகக் கேட்க எண்ணி ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்.

அவனிடம் இருந்து அதை அவள் எதிர்பார்க்கவில்லை. யோசனையுடன் போனை பார்க்க… ‘ஹோப் ஆல் ஓகே?! நான் ஒரு மெயில் அனுப்பியிருக்கேன். நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்’ என்றது அந்த செய்தி.

‘இருக்கும் மனநிலையில் வேலையாவது பார்க்கலாம்’ என எண்ணி அவன் அனுப்பிய ஈமெயில்’ஐ பார்த்தாள். வேலை சம்மந்தப்பட்டது.

‘அவள் பதில் மெசேஜ் அனுப்புவாளா?’ என்று அவன் யோசிக்க, அவள் வேலை செய்வதற்கு லாகின் செய்திருப்பதைப் பார்த்தான்.

வேலையைச் செய்ய அவள் ஆரம்பிக்கும்போது, மெஸென்ஜரில்…

‘ஹே! நாட் சோ அர்ஜென்ட். நானே முடிச்சிடறேன். மீதம் இருப்பதை நாளைக்கு பார்த்துப்போம்’ அவன் செய்தி அனுப்பினான்.

‘இன்னமும் தூங்கவில்லையா?!’ என எண்ணி அதையே அவனிடம் கேட்டாள்.

‘நாளைக்கு சண்டே தான்’ என்று அவன் பதில் அனுப்ப, ‘ஹ்ம்ம்’ என்று மட்டும் அனுப்பிவிட்டு வேலையில் மூழ்கினாள்.

அதற்கு மேல் பேச ஏனோ இன்று மனம் ஒப்பவில்லை. காரணம் நேற்றைய நிகழ்வு.

சில நிமிடங்களுக்குப் பின்… ‘ஆர் யு ஓகே நௌ?’ மறுபடியும் அவனே ஆரம்பித்தான்.

புன்னகை வரவில்லை, இருந்தும் அவன் கேட்டவுடன், இதழ்கள் சின்னதாக விரிந்தது. ‘ஓகே’ என்றாள் பதிலுக்கு.

பின், அவள் வேலையில் கவனம் செலுத்த, சுலபமான வேலை தான், ஆனால் அவள் செய்தது தவறாகிப்போனது. அவன் அங்கே அதைப் பார்த்திருப்பான் போலும்…

‘ஸ்க்ரீன் ஷேர் பண்ணு நிவி. நான் சரி பண்றேன்’ மறுபடியும் அவனே கேட்டான்.

அவன் சொன்னதைச் செய்தாள். அவளுடைய மடிக்கணினி அவன் கட்டுப்பாட்டினுள் வந்தது. அவள் கணினியில் என்ன செய்தலும், அவனால் இப்போது பார்க்கமுடியும். அவன் அவள் செய்த தவறை சரி செய்தான்.

பின் அவளிடம்…’சம்திங் இஸ் ராங். ஏதாச்சும் பிரச்சனையா?’

மிகச் சுலபமான வேலை, இதில் நிச்சயமாக தவறு செய்பவள் அல்ல அவள்… என்பது இவ்வளவு நாட்கள் அவளுடன் வேலை செய்யும் அவனுக்குத் தெரியாதா என்ன?! வேறு ஏதோ ஒன்று அவளைக் கவனம் சிதறச்செய்கிறது என்பதை உணர்ந்து கேட்டான்.

கேட்டுவிட்டு அவன் தண்ணீர் குடிக்க…

அவளுக்குள் ஏதோ ஒரு உந்துதல்.

‘ஹ்ம்ம்… எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு, அம்மா நேத்து கோவில்ல அங்கப்பிரதக்ஷனம் பண்ணியிருக்காங்க தேவ்… ஷி இஸ் சிக்ஸ்டி. அதை கேட்டுட்டு மனசே சரியில்ல தேவ். அதுனால தான் மாரத்தான் போனேன்’ என்று அவனுக்கு அனுப்ப நினைத்து…

பின், ‘எதற்கு அவனிடம் சொல்லவேண்டும்’ என எண்ணி, எழுதியதை அனைத்தையும் அழித்தபின், ‘நத்திங். ஐம் ஓகே’ என்பதை மட்டும் அனுப்பினாள்.

அதற்குள் அவனின் கட்டுப்பாட்டிலிருந்த அவள் லேப்டாப் திரையில், அவள் அடித்தது, பின் அழித்தது என அனைத்தையும் அவன் பார்த்துவிட்டான்.

அவன் அவளிடம் கேட்டபோது அவன் உணரவில்லை, அவனின் கட்டுப்பாட்டில் அவளின் திரை இருக்கிறது என்று. தண்ணீர் குடித்துவிட்டு அவன் திரையைப் பார்க்கும்போது, அவள் அனுப்ப நினைத்த செய்தியை அவன் பார்த்துவிட்டான்.

அறியாமல் பார்த்திருந்தாலும், அவளுடைய செய்தியைப் பார்த்தது தவறு என எண்ணி, அவசரமாகக் கட்டுப்பாட்டை அவனே துண்டித்தான்.

அவள் ஒன்றுமில்லை என்று அனுப்பியபின், தோண்டித்துருவ அவனுக்கு விருப்பமில்லை. அதற்கு மேல் பேசாமல் விட்டுவிட்டான். ஆனால் அவள் வார்த்தைகளின் வலியை அவனால் உணர முடிந்தது.

அவன் துண்டித்தவுடன் ‘அச்சோ பார்த்துட்டானா?!’ என எண்ணி தலையில் அடித்துக்கொண்டாள் நிவேதா. 

இதற்கு முன், நிவேதாவை பற்றி மித்ரன் எப்போதாவது தேவ்விடம் பேசுவான். பெரும்பாலும் அவள் திருமணம் தடை படுவதைப் பற்றி பேசுவான். கடைசியாக பெண் பார்த்துவிட்டு சென்றவுடன், தேவ் மித்ரனுக்கு அழைத்தபோது, மித்ரன் இந்த இடமும் சரிவரவில்லை என்பதை மேலோட்டமாக சொல்லியிருந்தான்.

அதுவும் இப்போது, அவள் அம்மாவைப் பற்றி மனவருத்தத்துடன் சொல்லவந்து, அதைச் சொல்லாமல் விட்டது… ஏனோ அவளைப் பற்றி யோசிக்க வைத்தது. மனதில் ஒரு மூலையில் நிவேதா பற்றி ஓடிக்கொண்டே இருந்தது. அது வருத்தமாகவும் இருந்தது.

அதற்கு பின் நிவேதா மனம் ஒட்டாமல் வேலை செய்தாள். அவனும் எதுவும் கேட்காமல், சிறிது நேரத்தில் உறங்கிவிட்டான்.

நிவேதா நடந்ததைப்பற்றி யோசித்தாலும், பின் தன்னையே  சமாதானப்படுத்திக்கொண்டு வேலையில் முழுவதுமாக மூழ்கினாள் .

அவன் காலையில் விழித்தெழுந்து, காலைக் கடன்களை முடித்துவிட்டு, ஜாக்கிங், காலை உணவு வரை முடித்தபின், மடிக்கணினியை பார்க்க, அவள் இன்னமும் வேலை செய்வதாகக் காட்டியது.

உடனே அவளை அழைத்தான்.

“ஹே இன்னமுமா வேலை பார்க்கிற?” அவன் ஆரம்பிக்க… “ஆமாங்க பாஸ். என்னை நம்பி ஷேர்’லாம்  குடுத்துருக்காங்க. அதுக்காச்சும் வேலை பார்க்கணுமே” என்று இப்போது பழைய நிவேதாவாக பேசினாள்.

அவள் பாஸ் என்று விளித்தவுடன் அவன் புன்னகைத்தான்.

அவள் சகஜமாக மாறிவிட்டாள் என்றவுடன், மனதின் ஒரு மூலையில் அவளை பற்றிய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்த இடத்தில், வருத்தம் போய் இப்போது நிம்மதி பரவியது. காரணம் அவனுக்குத் தெரியவில்லை.

“இப்போ நிவி ஓகேவா?” அவன் புன்னகையுடன் கேட்டது, அவன் குரல் வைத்தே அவளுக்குப் புரிந்தது.

“ஹ்ம்ம் எஸ் தேவ். பெட்டர் நௌ” என்றாள் புன்னகையுடன்.

“தட்ஸ் குட்! நமக்கு நடக்க வேண்டியது நடக்க வேண்டிய நேரத்துல கண்டிப்பா நடக்கும். அதுக்கு முன்னாடி தலைகீழா நின்னாலும், நடக்காதுனு ஆன்ட்டிகிட்ட சொல்லு நிவி” அவன் சொன்னவுடன், அவள் புருவங்கள் விரிந்தது.

அவனின் இந்த பேச்சு… அவள் மனதிற்குள், ஒரு மூலையில் அவனைக் குறித்த நல்ல எண்ணங்களை ஏற்படுத்தியது. ஏன் என்று அவளும் யோசிக்கவில்லை.

பின் புன்னகையுடன், “ஹ்ம்ம் சொன்னா எங்க கேட்கறாங்க தேவ். அத விடுங்க… சாப்பிட்டாச்சா? என்ன டிஃபன்?”

“ஹ்ம்ம் முடிஞ்சது நிவி… இங்க ஒரு ஹோட்டல்’ல மெம்பர்ஷிப் வச்சுருக்கேன். சோ, அங்க என்ன மெனு’வோ அது தருவாங்க. இன்னைக்கு ஊத்தப்பம்” என்றான் கொஞ்சம் அதிக தகவலுடன்.

‘கல்யாணம் ஆகவில்லையோ?!’ என்ற கேள்வி மனதில் எழுந்தாலும், அதை அவள் கேட்கவில்லை.

“ஓ சமைக்கத் தெரியாதா?” அவள் கேட்க, தெரியாது என்றான்.

“மாம்ஸ் ஃப்ரெண்ட்’டா இருந்துட்டு சமைக்க தெரியாதுன்னு சொல்லலாமா? அவர் அருமையா சமைப்பார். சின்ன சின்ன டிஷ் செய்ய கத்துக்கலாமே. அட்லீஸ்ட் உடம்பு ஸ்பாயில் ஆகாம இருக்கும்ல” அவளும் கொஞ்சம் அதிகம் பேசினாள்.

அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. அவளின் இந்த பேச்சால் இப்போது மனதில் நிவேதாவிற்காக ஒதுக்கப்பட்ட அந்த சிறிய மூலையின் அளவு கொஞ்சம் விரிவடைந்தது…

“சரிங்க மேடம்… சொல்லித்தாங்க… செய்து பார்க்கிறேன்”  என்றான் புன்னகையுடன்.

“ஹாஹா அவ்ளோ தானே! ஓகே பாஸ். இப்போதைக்கு நைட்’க்கு மாவு, இட்லி பொடி வாங்கிக்கோங்க. சில யூடியூப் லிங்க்ஸ் அனுப்பறேன். ட்ரை பண்ணிப்பாருங்க… மார்னிங் பார்ப்போம்” என்று கூறி வைத்துவிட்டாள்.

அடுத்த நாள் பேசி வைத்தாற்போல, அவள் அழைக்க… அவன் செய்ததை அவளுக்கு அனுப்பினான். அதைப்பார்த்து நன்றாகச் சிரித்தாள் நிவேதா. அவ்வளவு மோசமாக இருந்தது!

அடுத்த வந்த சில நாட்கள் வேலை நிமித்தமாகவே அதிகம் பேசினர். இருந்தும் சில சமயம் கொஞ்சம் அதிகமாகவே பேசினார்கள்.

அப்படி ஒரு நாள், பேசும்போது…

“உனக்கு மாரத்தான் ரொம்ப பிடிக்குமா நிவி?”

“ஆமா தேவ். சின்ன வயசுல இருந்தே நல்லா ஓடுவேன். ரிலே’ல (relay running) நான் தான் லாஸ்ட்… ஆங்கர் லெக் (anchor leg). ஸ்கூல் படிக்கிற வர ப்ராக்டிஸ், காம்பெடிஷன்’னு இருந்தேன். அப்புறம் காலேஜ் வந்தவுடனே, அம்மா வேணாம்னு சொல்லிட்டாங்க. சோ, மாரத்தான் ப்ராக்டிஸ் எடுத்துக்கிட்டேன். அப்பப்போ போவேன்… நிறைய வின் பண்ணிருக்கேன்” ஆர்வமாகப் பதில் தந்தாள்.

“வாவ் சூப்பர் நிவி! அப்பப்போ என்ன… அடிக்கடி கலந்துக்கோ” அவனும் அவளைப் பாராட்டினான் கூடவே ஊக்குவித்தான்.

“ஹுக்கும். இதுக்கே வரன் வீட்ல… ஓடற பொண்ணு, ஆடற பொண்ணுலாம் வீட்டுக்கு ஆகாது… வீடு ஆட்டம் காணும்… அது இதுனு சொல்றாங்க. இதுல அடிக்கடினா அவ்ளோதான் பாஸ். பொண்ணுங்க சில விஷயங்கள் தான் செய்யணும், சில விஷயங்கள் செய்யவே கூடாதுனு அகராதியே இருக்குன்னா பாருங்களேன்” சலித்துக்கொண்டே பேசினாள்.

அவன் மௌனமாகக் கேட்டான்.

“காலம் மாறிட்டே இருக்கு தேவ். இன்னமும் ஏன் பழைய ரீல்’லே சுத்திட்டு இருக்காங்கனு தெரியல. சமைக்க வருமா… பாடத் தெரியுமானு…” 

“என்னது பாடத் தெரியுமாவா? இதெல்லாமா இன்னமும் கேட்கறாங்க நிவி?” 

“அந்த கொடுமையை ஏன் கேட்கறீங்க. என்கிட்ட ரெண்டு வரன் வீட்ல கேட்டாங்க… என்னமோ தினமும் நான் பாடித்தான் அவங்க வீட்ல எல்லாரையும் தூங்க வைக்கணுங்கிற மாதிரி” நொடிந்துகொண்டாள் நிவேதா.

“ஆமா… உன் குரலை கேட்டுட்டா இந்த கேள்வியை கேட்டாங்க?”அதி தீவிர கேள்வியுடன் அவளை அவன் சீண்ட, அவள் முறைத்தாள்… பின் புன்னகைத்தாள். இங்கே செய்வதெல்லாம் அவனுக்குத் தெரியுமா? அவன் தான் பல ஆயிரம் மைல் தள்ளி இருக்கிறானே!

“பாஸ்! நான் பாடி நீங்க…” அவள் முடிக்கும் முன், அதற்கு மேல் அவளை பேசவிடாமல், “போதும்… தயவுசெய்து பாடறேன்னு சொல்லி என்னைய Body ஆக்கிறாத… மித்ரன் பாவம் என்னை நம்பி இருக்கான்” மறுபடியும் அவளைச் சீண்டினான்.

இதழ்கள் விரியப் புன்னகைத்தவள், “உங்களுக்கெல்லாம் காதுல கீச் கீச்சுனு சத்தம் போடற மனைவி தான் தேவ். இது என் சாபம்! சரி உங்களுக்கு எப்போ கல்யாணம்?” என்றதும், “ஏம்மா? நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா? நானெல்லாம் முரட்டு சிங்கிள்ன்னு சுத்துற ஆள் தெரியுமா?” என்றான் கொஞ்சம் கெத்தாக.

“பாஸ் கல்யாணம் ஆகாத பாதி பசங்க சொல்லி சமாளிக்கிற டயலாக் இது… விடுங்க விடுங்க… சரி உங்க பொண்ணு பார்க்கிற படலம் எல்லாம் எப்படி நடந்துச்சு…?” அவள் அவனை விடுவதாக இல்லை.

“இதுவரை நான் யாரையும் போய் பார்த்ததெல்லாம் இல்லைங்க நிவி மேடம். பட், என் அம்மாக்கு நான் ஒரு ப்ராபர்ட்டி… நல்ல விலைக்கு பேசிட்டு இருக்காங்க… அவங்க எதிர்பார்க்கிறது இன்னமும் கிடைக்கல போல. அப்படியே கிடைச்சாலும் எனக்கு கல்யாணத்துல இப்போ இன்ட்ரெஸ்ட் இல்ல” என்றவுடன், “ஒத்துக்கறேன் தேவ்! நீங்க முரட்டு சிங்கிள் தான்னு…” என்றாள்  நிவேதா சிரிப்புடன்.

“அப்படிவா வழிக்கு… சிங்கிள் பசங்க ஆல்வேஸ் கெத்து” பெருமையுடன் அவன் சொல்ல, “பாஸ் ஒரு சின்ன திருத்தம்… நீங்க சிங்கிள் அங்கிள். மாம்ஸ் வயசு தானே உங்களுக்கும்” இப்போது அவனை அவள் சீண்டினாள்.

அவனும் முறைத்தான்… பின் சிரித்தான். அவன் கண்கள் கூட அதைப் பிரதிபலித்தது. இருவரும் சிறிதுநேரம் பேசிவிட்டு வைத்துவிட்டனர்.

ஏதோ வெகுநாட்களுக்குப் பின் மனமார பேசி சிரித்ததுபோல உணர்ந்தான் தேவ். மனதில் அவளுக்கான இடம் கொஞ்சம் அதிகமானதுபோல இருந்தது.

அப்பா, அம்மா என்று இருவர் இருந்தும், அவனுக்குப் பெரிதாக அவர்களுடன் ஓட்டுதல் இல்லை. அவர்கள் வீடு அவனுக்கு ஒரு விடுதி அவ்வளவே.

காரணம், பெற்றோர்கள் இருவரும் பணம் சேர்ப்பதிலும், அந்தஸ்தைத் தக்க வைத்துக்கொள்வதிலும் மட்டுமே அதிக கவனம் செலுத்தினார்கள்.

ஒன்றை நான்காக்க அவர்கள் எடுத்த சிரத்தையில், கொஞ்சம் பிள்ளைகள் மேல் காட்டியிருந்தால், அது குடும்பமாக அவனுக்குத் தெரிந்திருக்கும். தங்கை ரேவதி மட்டுமே அவன் உலகம்… அதுவும் அவளுக்குத் திருமணமாகும்வரை.

அவள் திருமணத்திற்குப் பின், இருவருக்கிடையில் இருந்த சின்ன இடைவெளி அவன் அமெரிக்கா வந்தவுடன் அதிகமானது… இருப்பிடத்தில் மட்டுமில்லை, இருவர் உறவிலும்.

என்னதான் தாய் தந்தையுடன் ஒட்டாவிட்டாலும், பெற்றவர்களாயிற்றே. விடவா முடியும்?! அவ்வப்போது பேசுவான். அதில் வாய் பேச்சு மட்டுமே இருக்கும்!

அவன் வாழ்வில் அவன் தங்கைக்குப் பின், அதிகம் அவன் ஒட்டிக்கொண்டது வெகு சில நண்பர்களிடம் மட்டும் தான். அதில் மித்ரனுக்கு தனியிடம். மித்ரன்… பெயருக்கு ஏற்றாற்போல, சினேகமாகப் பழகுபவன். தேவ்வின் தனிமையை உணர்ந்து, கல்லூரி நாட்களில் எப்போதும் அவனுடனே இருப்பான்.

அது இப்போதும் தொடர்கிறது. ஆனால் முன்பு போல மித்ரனுடனும் அதிகம் பேச முடியவில்லை. ஒன்று…மித்ரனுக்கு என ஒரு குடும்பம் வந்துவிட்டது. மற்றொன்று… அவன் தொழிலில் முற்றிலுமாக இறங்கிவிட்டான்.

அவ்வப்போது தனிமை கொடுமையாகிப்போக, ஒரு வளர்ப்புப் பிராணியைத் தத்தெடுத்துக்கொண்டான். அது தான் ரோமி!

இன்று நிவேதா அவனுடன் மிகவும் சகஜமாகப் பேசியது, மனதில் ஒரு சின்ன மாற்றம். என்ன மாற்றம் என்று புரியவில்லை. ஆனால் அது பிடித்திருந்தது!

சில நாட்களுக்குப் பின், நிவேதாவை பெண் பார்க்க… தூரத்துச் சொந்தம் வருவதாக கமலா சொன்னதும், நிவேதா மறுத்தாள்.

“இனி யாரும் வீட்டுக்கு வரவேண்டாம் ம்மா. மொதல்ல நாங்க எங்கயாச்சும் பார்த்து பேசுறோம். அப்புறம் அந்த பையனுக்கு பிடிச்சிருந்தா… அவனோட குடும்பத்தை கூட்டிட்டு வரச்சொல்லலாம்” என்றாள்.

மித்ரனுக்கும் அது சரி எனப் பட்டது. கமலாவை சமாதானம் செய்துவிட்டு, நிவேதாவை அனுப்பிவைத்தான்.

தேவ் நிவேதா பற்றி மித்ரனிடம் கேட்டபோது, மித்ரன் நடந்ததைச் சொன்னான்.

‘தன்னிடம் சொல்லவில்லையே’ என்ற எண்ணம் தேவ் மனதில் தோன்றினாலும், ‘சொல்வதற்கு அவசியம் என்ன இருக்கிறது!’ என்ற எண்ணமும் தோன்றியது.

அன்று முழுவதும் நிவேதா வேலைக்கு வரவில்லை. அவளைப் பற்றி அடிக்கடி ஞாபகம் எழவில்லை என்றாலும் ஓரிருமுறை, தேவ் மனதில் அவளுக்கான அந்த இடத்தில் எட்டிப்பார்த்தாள் அவள்!

பேசச் சென்றவனுடன் மதியமே பேசி முடித்திருந்தாலும், வீட்டிற்கு வர மனமில்லாமல், மாலை வரை கடற்கரையில் இருந்தவளது மனது, இலக்கில்லாமல் எதை எதையோ எண்ணியது.

இரவு நெருங்கும் போது வீட்டிற்கு திரும்பினாள். முன்னமே நேரமாகும் என்பதையும் சொல்லியிருந்தாள்.

கமலாவின் முகம் சோகத்தை ஏந்தி நின்றது. ஏற்கனவே மனதில் வேதனையை சுமந்து வந்த நிவேதாவால் எதுவும் பேசமுடியவில்லை.

அனுராதா எதுவோ பேசவர, “கொஞ்சம்… இல்ல க்கா. ரொம்பவே மனசு சரியில்ல. நாளைக்கு பேசலாம்… ப்ளீஸ். எனக்கு சாப்பாடு வேணாம்மா”

யாரையும் பார்க்காமல் உள்ளே சென்றுவிட்டாள். கதவை தாழிட்டவளுக்கு காலை நடந்தது ஓடிக்கொண்டே இருந்தது.

உயிர்ப்பிழந்த போனை உயிர்ப்பித்தாள். சில பீப்’கள். எடுத்துப்பார்க்க மனமில்லை. இருந்தும் அதிலிருந்த ஒரு செய்தி அவளைத் திறந்து பார்க்கவைத்தது. காரணம், தேவ்விடம் இருந்து வந்ததால்!

‘ஹோப் யு ஹேட் அ கிரேட் டைம். நாளைக்கு சில வொர்க்ஸ் அசைன் பண்ணியிருக்கேன். டீம்’க்கு நீ அசைன் பண்ணிடு’ என்றது அந்த செய்தி.

அவனின் முதல் வாக்கியத்தைப் பார்த்து, வெற்றுப் புன்னகை அவள் முகத்தில்.

அவள் குறுஞ்செய்தியை பார்த்தது அவனுக்கு தெரியவர, ‘இப்போது தான் வந்தாளா? இந்த சம்பந்தம் அமைந்ததா? அவள் அம்மாவிற்கு இப்போது நிம்மதியா?’ என்ற பல கேள்விகள் அவனுள்.

இதை மித்ரனிடம் கேட்டால் தவறாக நினைப்பான் என யோசித்து.. இதோ குறுஞ்செய்தியில் நிவேதாவிடமே கேட்டான்.

‘நாள் எப்படி போச்சு?’ அவன் அனுப்ப, அவள் கையில் தான் மொபைல்  இருந்தது. அவள் அதைப் பார்த்தவுடன் ‘ஓகே. நான் நாளைக்கு வொர்க் பண்றேனே?’ அவள் கேட்டாள்.

‘நோ நோ அவசரமில்ல. ஆர் யு ஓகே? எங்க மீட் பண்ணீங்க… ’ அவள் பதில் சரியில்லை என்று உணர்ந்தவன், ஏன் என்றே தெரியாமல் அவளை அமைதிப்படுத்தும் வேலையில் இறங்கினான்.

‘ஹ்ம்ம் பீச்!’ என்றாள் பதிலுக்கு.

‘என்ன நடந்துச்சு?’ அவன் கேட்க, எதற்கு இவன் இதெல்லாம் கேட்கவேண்டும் என நினைத்து கொஞ்சம் கோபம் எட்டிப்பார்த்தது அவளுக்கு.

அதன் வெளிப்பாடு, ‘தெரிஞ்சிட்டு என்ன பண்ண போறீங்க தேவ்?’ என்று எரிந்துவிழுந்தாள்.

அந்த செய்தியை பார்த்தவன், கொஞ்சம் திடுக்கிட்டான்… அதிகம் பேசுகிறோமோ என நினைத்து.

இருந்தும், இந்த குறுகிய காலத்தில் அவனிடம் ஓரளவிற்கு நன்றாகப் பேசிவளை அப்படியே விட மனமில்லை.

‘தான் அனுப்பிய மெசேஜை அவன் பார்த்தும், அவன் பதில் தரவில்லை’ என்பதைப் பார்த்தாள் நிவேதா.

அவனுக்காக அவள் மனதில் ஒதுக்கப்பட்ட இடத்தில் சின்ன வருத்தம். தவறாக எடுத்துக்கொண்டானோ என எண்ணி, ‘ஸாரி’ என்று அனுப்பும் நேரம், அவனிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

ஒரு நொடி புருவம் உயர்ந்து, விழிகள் விரிந்தது. அழைப்பை எடுத்தவுடன் “ஸாரி” என்றாள்.

அதெல்லாம் காதில் வாங்காமல், “ஆர் யு ஓகே நிவி?” கனிவுடன் வந்தது அவன் வார்த்தைகள் .

அவள் கண்கள் கொஞ்சமே கொஞ்சம் கலங்க, மறுப்பாகத் தலையசைத்தாள். அவனுக்குத் தெரியுமா இவள் இங்கே தலையசைப்பது?

“நிவி… என்ன ஆச்சு, பதில் சொல்லு” மறுபடியும் கேட்டான் அழுத்தமாக. லேசாக அவனுக்குள்ளும் சின்ன படபடப்பு. 

‘அம்மாவிடம் சொன்னால் நொந்துவிடுவார்கள். அக்காவிடம் சொன்னால் அவளிருக்கும் நிலையில் மனவேதனை அதிகரிக்கும்’. யாரிடமேனும் சொல்லி மன பாரத்தைக் குறைக்கவேண்டும் என்றே அவளுக்கு அப்போது தோன்றியது.

அது ஏன் தேவ்வாக இருக்கக்கூடாது என்று தோன்ற, “அவன் ரொம்ப ஸ்ட்ரைட் ஃபார்வர்ட்’னு சொன்னான் தேவ்” உணர்ச்சிகள் துடைத்த புன்னகையுடன், கீழிறங்கிய குரலில் சொன்னவள்…

“அவனுக்கு ஹோம்லி பொண்ணு தான் பிடிக்குமாம்… நான் ஸ்கின்னி (skinny), மேன்லி’யா (manly) இருக்கேன்னு சொன்னான்” இப்போது தொண்டை அடைத்தது. எச்சிலை விழுங்கி தன்னை சமன் செய்துகொண்டு…

“இன்னமும் என்னென்னமோ சொன்னான். ஒரு மாதிரி ஆயிடுச்சு தேவ். அதிகம் விளையாட்டுல இருந்ததுனாலவோ என்னவோ, என் உடல் வாகே இப்படி தான். நான் அழகில்ல தான்; பொதுவா பசங்க எதிர்பார்க்கிற நிறம் இல்ல தான்; ஆனா, எனக்கும் மனசிருக்கும்ல தேவ்? என்ன வேணா வாய்க்கு வந்ததை பேசலாமா?

என்னோட ஸ்ட்ரென்த், டிடெர்மினேஷன், மெண்டல் எபிலிட்டி, இதுபோல இன்னர் பெர்சனாலிட்டி யாருக்குமே தெரியல… என்னோட வெளிப்புறத்தை மட்டுமே பார்க்கறாங்களே, ஏன் தேவ்? ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னோட கான்ஃபிடென்ஸ் லெவல் கொறஞ்சுட்டே இருக்கு தேவ்” உடைந்து அழும் நிலையிலிருந்தாள்.

என்னதான் அழுகையைக் கட்டுப்படுத்தினாலும், கண்களில் சில துளி கண்ணீரைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.

மனம் விட்டுப் அவள் பேசுவதை அவன் கேட்டிக்கொண்டிருக்க… அவள் பேசி முடிக்கவும், அவளின் வார்த்தைகள் வெளிப்படுத்திய வலி, அவன் நெஞ்சை பிசைந்தது. அதுவும் கடைசியில் அந்த விசும்பலைக்  கேட்டவுடன், “அழறியா நிவி…?”  அதிர்ந்து கேட்டான்.

அவன் கேட்டவுடன், அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, விசும்பல் அதிகமானது. ஏனோ அந்த விசும்பலை அவனால் தாளவே முடியவில்லை.

“லூசா நீ நிவி???  நீ ரொம்ப போல்ட், ஸ்ட்ராங்’னு நினைச்சேனே… இவ்ளோதானா நீ? மொதல்ல கண்ணைத்தொட” அவன் அதட்ட, கண்ணீருடன் இருந்த அவள் கண்கள் விரிந்தது…. முதல் முறை ஒருவன் அவள் அகத்தை பார்த்திருக்கிறான்… வெளி அழகை அல்ல என்று நினைத்து!

***தொடரும்***

32
10
13
4
3
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved