மீண்டும் ஒரு காதல் – 1

மீண்டும் ஒரு காதல் – 1:

காலை விடிந்தது கூட தெரியாமல் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவளை வாசல் அழைப்பு மணியின் சத்தம் எழுப்பியது.

‘யாரு இப்படி பெல் அடிக்கிறது’ என கோபத்துடன் கதவைத் திறக்க, வெளியே பக்கத்து வீட்டு ரஜத்தின் அம்மா.

“என்ன நிவேதா இன்னும் எந்திரிக்கலயா? ஸ்கூல் பஸ் வர இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு” அவர் ஹிந்தியில் சொல்ல…

திரும்பிக் கடிகாரத்தை பார்த்தவள் “அஹ்ஹ் திதி இன்னைக்கும் லேட். நீங்க ரஜத்’தை அனுப்பிடுங்க. நான் மினு’வ ரெடி பண்ணி ஸ்கூல்ல ட்ராப் பண்ணிடறேன்” பதிலை ஹிந்தியில் சொல்லிவிட்டு நன்றி கூறி கதவை அடைத்தாள்.

திரும்பி அறைக்குச் சென்றவள் மொபைலை பார்த்து “இந்த அலாரம் அடிக்குதா இல்லையா? என் காதுக்கு கேட்கவே மாட்டேங்குது” என்று சலித்துக் கொண்டு கட்டிலை பார்த்தாள்.

பூப்போல் உறங்கிக் கொண்டிருந்த மகளின் முடியைக் கோதிவிட்டு சமையலறைக்குச் சென்றாள்.

அரிசியைக் கழுவி குக்கரில் வைத்துவிட்டு, பால் எடுத்து மில்க் குக்கரில் ஊற்றிவிட்டு, அடுப்பை மெலிதாக வைத்தவள், அடுத்து குளியலறைக்குள் நுழைத்தாள்.

அடுத்த பத்து நிமிடம், பால் குக்கரின் அலறலில் பாத்ரோப்’புடன் வெளியே வந்தவள், பால் அடுப்பை நிறுத்திவிட்டு, அரிசி வைத்த அடுப்பின் நெருப்பை அதிகம் செய்தாள்.

பக்கத்துக்கு அடுப்பில் இட்லித் தட்டில் மாவை அவசரமாக ஊற்றி வைத்தாள் காலை இட்லிக்காக.

பின் நேற்று இரவு நறுக்கி ஃப்ரிட்ஜ்’ஜில் வைத்த காய்கறிகளை எடுத்து ஒரு க்ரேவி செய்தபின், சமைத்த அரிசியை அதன் மேல் கொட்டி கிளறி, கலவை சாதம் செய்துவிட்டு, வெள்ளரிக்காய் ராய்தா செய்துமுடித்தாள்.

‘மதிய சமையல் முடிந்தது’ என்று பெருமூச்சு விட்டவள், இட்லி பாத்திரத்தில் ஆவி வந்தவுடன், அதையும் அனைத்துவிட்டு, பின் ஒரு கப்பில் காய்ச்சிய பாலில் சர்க்கரை கலந்து எடுத்துக் கொண்டாள்.

“மினு மா… எந்திரிடா. ஸ்கூல்க்கு நேரம் ஆச்சு” மகளின் அருகில் சென்று பட்டும் படாமல் உலுக்கினாள். “அம்மா 5 மினிட்ஸ். தூக்கமா வருது” மகள் முணுமுணுத்தாள்.

“மினு… ஸ்கூல் பஸ்’ஸே போய்டுச்சு. ரஜத் கிளம்பிட்டான். நம்ம இன்னும் ரெடி ஆகவே இல்ல. எந்திரிடா” என்று அவளின் முடியை கோதி எழுப்ப…

“என்னது… ஸ்கூல் பஸ் போச்சா? ரஜத் போய்ட்டானா? ப்ச்” என்று சட்டென எழுந்த மகளைப் பார்த்துச் சிரித்த நிவேதா…

“அம்மா லேட்’டா எந்திரிச்சிட்டேன் டா ஸாரி… சரி சரி… ஸ்கூல்க்கு சீக்கிரம் கிளம்பலாம்” என மகளை அழைத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

மினு, ரஜத் இருவரும் நெருக்கமான நண்பர்கள். இவளைவிட வயதில் கொஞ்சம் பெரியவனாக இருந்தாலும், அவனுடன் தான் விளையாடுவது, படிப்பது என அனைத்தும்.

காலை, பள்ளிப் பேருந்தில் அவனுடன் செல்வது… அரட்டை அடிப்பது என்றிருக்க… அது இன்று முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் அவளுக்கு.

அடுத்த பத்து நிமிடம் மகளைக் குளிப்பாட்டி, சீருடை போட்டுவிட்டு, பாலைக் கொடுத்து, குடிக்கச் சொன்ன நிவேதா, அவளும் தயாரானாள்.

“போலாமா மினு?” என கேட்டுக்கொண்டே மினுவுடைய பேக் மற்றும் அவளுடைய லேப்டாப் பேக் மற்றும் சாப்பாடு பைகளையும் எடுத்துக்கொண்டு… இருவரும் கிளம்பி வெளியே வந்தனர்.

“மினு நீ போய் லிஃப்ட் ப்ரஸ் பண்ணு” என்றவள், அவசரமாக கதவைப் பூட்டிவிட்டு லிஃப்ட்’டை நெருங்கும்போது, மினு அங்கு ஒருவனுடன் பேசிக்கொண்டிருக்கவும்… இவள் செல்லவும்… லிப்ட் வரவும்… சரியாக இருந்தது.

அங்கிருந்தவன் லிஃப்ட்’டின் குறுக்கே கையை நீட்டி, அது மூடாமல் தடுத்தபின், மினுவையும் நிவேதாவையும் உள்ளே செல்லும்படி கண்களால் கண்ணசைத்தான்.

உள்ளே இருவரும் செல்ல… நிவேதா அவனிடம்,“தேங்க்ஸ் ஸ்ரீ” என்றாள்.

அவனும் உள்ளே புகுந்து, “இன்னைக்கும் லேட்டா?” என்று புன்னகைக்க, மினு அவள் அம்மாவைப் பார்த்துச் சிரித்தாள்… நிவேதா மகளை செல்லமாக முறைத்தாள்.

“ஆமா ஸ்ரீ… தூங்கிட்டேன். நான் அவளை ஸ்கூல்ல ட்ராப் பண்ணிட்டு ஆஃபிஸ் வரேன்” என்றவுடன் ‘சரி’ என்பது போல் புன்னகையுடன் தலையசைத்தான்.

பின் அவனுக்கு ஏதோ ஞாபகம் வர, அவளிடம், “நிவி… இன்னிக்கி ரிஷி தேவ் வரான். சீக்கிரம் வந்துடு. அவன் US’ல இருந்து கிளம்பரத்துக்கு முன்னாடியே

ரெண்டு பேரும் மெயில்’ல சண்டை போட்டீங்க. அவனோட ஃபர்ஸ்ட் மீட்டிங் மானேஜர்ஸ் கூட தான். விபி’யும் இருப்பார். சீக்கிரம் வந்துரு” என்று ஸ்ரீ சொல்ல, புன்னகைத்துக்கொண்டே “சரி” என்றாள்.

ஸ்ரீ என்கிற ஸ்ரீஜித், மற்றும் நிவேதா இருவரும் நல்ல நண்பர்கள். இன்னும் சொல்லப்போனால் ஸ்ரீ அவள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நபர் என்றே நினைப்பவள்.

இப்போது இருவரும் இந்தியத் தலைநகரத்துக்குப் பக்கத்தில் உள்ள நொய்டா’வில் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கின்றனர்.

இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது. வயதுக்கு சற்று மீறிய பொறுப்பை, கடும் உழைப்பால் அடைந்திருந்தனர்.

அந்த வளர்ந்துவரும் பன்னாட்டு நிறுவனத்தில் சீனியர் மேலாளர்களாக இருவரும் வேலை பார்க்க, கிட்டத்தட்ட இருபதிலிருந்து முப்பது பேர் இவர்கள் கீழ் வேலை பார்க்கின்றனர்.

லிஃப்ட் தரைதளத்தில் திறக்க, மினு தலையை பிடித்துச் செல்லமாக ஆட்டியவன், இருவருக்கும் “பை” சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

நிவேதா, மினுவை அழைத்துக்கொண்டு நடக்க, மனதில் ஏதோ நெருடல்.

‘சீக்கிரம் போகணும். இல்லாட்டி அவன்கூட மறுபடியும் மல்லுக்கட்ட முடியாது’ என நினைத்துக்கொண்டு காரைக் கிளப்பும் முன், மகளிடம் இட்லி வைத்திருந்த டப்பாவை கொடுத்து உண்ணச்சொன்னவள், காரை கிளப்பினாள்.

“யாருமா அந்த ரிஷி? ஸ்ரீ அங்கிள் சொன்னாரே” சாப்பிட்டுக்கொண்டே கேட்ட மகளின் கற்பூர மூளையை நினைத்துச் சிரித்த நிவேதா…

“அதுவா… புதுசா அமெரிக்கா’ல இருந்து வந்திருக்கார். ரொம்ப பேட்(bad). அம்மாக்கும் அவருக்கும் ஒரே டிஷ்யூம். இன்னிக்கி ஆஃபிஸ்’க்கு வராரு மினு… அதான் ஸ்ரீ அங்கிள் சீக்கிரம் வரச்சொன்னார்” நிவேதா சொல்ல, மினுவும் புரிந்தது போல தலையாட்டினாள்.

‘இவன் தேவ் தானானு பார்க்கலாம்னா… நமக்கு சோசியல் மீடியா’ல ப்ரொஃபைல் (profile) இல்ல… ஆனா, அப்பவும் தேடிப்பார்த்தேன்… ஒன்னுமே உதவல. ஆஃபிஸ் ப்ரொஃபைல்’லயும் புதுசா சேர்ந்ததுனால போட்டோ இல்ல’

‘இவன் என் ‘தேவ்’வா கண்டிப்பா இருக்க முடியாது. தேவ் மத்தவங்க கருத்துக்கு எப்பவுமே மதிப்பு கொடுப்பான். ஆனா இவன்…’

‘நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் தான், அத நீ நம்பு… இல்ல நம்பாம போ. ஆனா வேல செய்றப்ப… முயலுக்கு மூணு கால் தான்னு நினைச்சுட்டு வேல செய்ன்னு சொல்ற கேஸ்’ என முணுமுணுத்துக்கொண்டே இருக்க, ஸ்கூல் வந்தது.

மகளை இறக்கி வழி அனுப்பிவிட்டு ஆஃபீஸ்’க்கு விரைந்தாள்.

‘ஒரு நிமிடம் தாமதமாக சென்றால் கூட, அவன் வாயில் அவல் பொரி போட்டதற்கு சமம்’ என நினைத்துக்கொண்டு அவசரமாகச் சென்றாள்.

நான்கு நாட்களுக்கு முன் அவளுடைய அணியில் இருப்பவன் கான்ஃபெரென்ஸ் (conference) அழைப்புக்குத் தாமதமாக இணைந்ததால்… பத்து நிமிடம் அவனைத் துவைத்து, காயப் போட்டுவிட்டான் ரிஷி.

‘ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு முக்கியம்’ என அவன் எடுத்த லக்ச்சரில் பத்து நிமிடங்கள் வீணாகிவிட்டது என்றே நினைக்கத் தோன்றியது நிவேதாவுக்கு.

அனைவரிடமும் ‘மிக நன்றாக’ என்று சொல்ல முடியாவிட்டாலும்… ஓரளவிற்கு நன்றாகப் பேசுபவன், தான் என்று வரும்போது ஏதோ எரிச்சலுடன் பாரபட்சமாகப் பேசுவது போல இருந்தது அவளுக்கு.

இத்தனைக்கும் அவனுடன் பேச ஆரம்பித்து ஐந்து நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது.

ஒரு வாரத்திற்கு முன் புதிதாக அவள் அலுவலகத்தில் சேர்ந்திருந்தான். இந்தியக் கிளையில் சில மாறுதல்களையும், மற்றும் புதிய திட்டங்களைச் செயல்படுத்த இந்தியா வருவதாக… தகவல் அவளுக்குத் தரப்பட்டிருந்தது.

அனைத்தையும் மனதில் அசை போட்டுக்கொண்டு, விரைந்து அலுவலகம் சென்றாள்.

மீட்டிங் ஆரம்பிக்க ஒரு நிமிடம் இருக்கும்போது, ஓடிச்சென்று கதவைத் திறந்தவள்… அங்கிருந்தவனைப் பார்த்து ஒரு நொடி அப்படியே சிலையென நின்றாள்.

அவள் யாராக இருக்கக் கூடாது என்று நினைத்தாளோ அவனே அச்சு அசல் மாறாமல் அங்கு உட்கார்ந்திருந்தான். அவன்தான் ரிஷி தேவ். அவளுக்கு தேவ்… தேவா!

இத்தனை வருடத்தில் துளியும் மாறவில்லை தோற்றத்தில். அரை நொடியில் கண்டுகொண்டாளே அவனை.

‘தேவ் பேரு கூட முழுசா தெரியாமலா இருந்திருக்கேன்?’ லேசான கோபம் தன்மேலேயே வந்தது. மனதும் அழுத்தியது.

கண்களை மூடி மூச்சை உள்ளிழுத்து, தன்னை சமநிலைப் படுத்தி, அவனைப் பார்த்த பின் நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்டு உள்ளே வந்தாள்.

அவனோ அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு, ‘சரியான நேரத்திற்கு வந்திருக்கிறாளா?!’ என மணிக்கட்டைப் பார்த்தான்.

அவன் சைகையில் கடுப்பானவள், “ஹலோ… மார்னிங் விபி…. ஹோப் ஐ’ம் ஆன் டைம் (Hope am on time)” ஓர் ஏளன புன்னகையை, ரிஷியை பார்த்து உதிர்த்தவள், ஸ்ரீ பக்கத்திலிருந்த சேரை இழுத்து உட்காரும்போது…

“ஷார்ப்” என்றார் விபி.

பக்கத்திலிருந்த ஸ்ரீயைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, மடிக்கணினி எடுத்து வைக்க, “நவீன்க்காக வைட்டிங்” என்றார் விபி…

அவள் செட்டில் ஆகும்வரை காத்திருந்து, “நிவேதா… ஹி இஸ் ரிஷி. அண்ட் ரிஷி, ஷி இஸ் நிவேதா (Nivetha, He is Rishi and Rishi, She is Nivetha)” என்று அவர் அறிமுகப்படுத்த, இருவரின் கண்களும் ஒரு நொடி சந்தித்தது.

அந்த ஒரு நொடி பார்வையில்… அவள் மனதில் பல ஆயிரம் நினைவுகள் ஓட, அடுத்த நொடியே ‘ஹலோ’ என பகிர்ந்துகொண்டு பார்வையை விலக்கிக் கொண்டாள்.

“உங்க ரெண்டு பேருக்கும் இந்த அறிமுகமே போதும். அதான் இதுக்கு முன்னாடியே உங்க சண்டையை ஆரம்பிச்சுட்டீங்களே” என்று சொல்லிவிட்டு விபி சிரிக்க, இருவரும் அவரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, மடிக்கணினியில் மூழ்கினர்.

****************

‘ரிஷி’ என்று அலுவலகம் மற்றும் வெளி வட்டாரத்தில் அழைக்கப்படும் ‘ரிஷி தேவ்’… நட்பின் வட்டத்தில், சொந்தங்களுக்கு நடுவில் ‘தேவ்’. நெருங்கியவர்களிடம் தன்னை தேவ் என்றே அறிமுகம் செய்துகொள்வான். அவர்களும் அப்படிதான் அழைக்க வேண்டும் என்பது அவன் கட்டளை.

நெருங்கியவர்களுக்கு தேவ் என்றால், அவளுக்கு மட்டும் அவன் ‘தேவா’.

அமெரிக்காவில் ‘கிரீன் கார்ட்’ எனப்படும் குடியுரிமை பெற்றவன். கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகள் அங்கேயே வசித்தவன். இப்போது வேலை நிமித்தமாக இந்திய வருகையை ஏற்றிருந்தான்.

இப்போது ரிஷி வேலையில் கவனம் செலுத்தினாலும், அவன் மனதில்…

‘நிவேதான்னு ஒரு பொண்ணு கூட கருத்து வேறுபாடு இருந்துச்சு. அண்ட் அந்தப் பேர மெயில்’ல பார்த்தப்பவே கொஞ்சம் நெருடலா இருந்துச்சு. ஆனா இவளைப் பார்த்ததும் அந்த நெருடல் சுத்தமா போச்சு’

‘என்ன ஒரு திமிர் முதல் பார்வைலயே. ஆனால் பரிச்சயமான குரல்போல இருக்கு… ஒருவேளை வேதாவா இருக்குமோ…? லூசா தேவ் நீ…? கண்டிப்பா இது வேதாவா இருக்க முடியாது. என்னோட வேதாவின் குரல் ஒரு முறை கூட கடுமையா இருந்ததில்லையே. மொதல்ல வேதா கூட இவளை கம்பேர் பண்றத நிறுத்து’

இதை அவன் நினைக்கும்போது இன்னும் சில வாக்கியங்கள் மனதில் கரைபுரண்டு ஒலித்தது.

‘தேவ் மிஸ்ஸிங் யு சோ மச். சீக்கிரம் வாயேன். பார்க்கணும் போல இருக்கு’

‘உன்னோட கனவுலயே வாழ ஆரம்பிச்சுட்டேன் தேவா’

‘எல்லாமே என் கைய விட்டு போச்சு தேவா, எதுவுமே இல்ல இப்போ என்கிட்ட’

ஏனோ அந்தக் கடைசி வாக்கியம்… அதைச் சொன்னவளுக்கு மட்டும் கையை விட்டுப் போகவில்லை… தன் வாழ்விலும் இப்போது எதுவுமே இல்லையே… என்று நினைக்கும்போதே அவன் மனதில் அழுத்தம் அதிகமானது.

“ரிஷி. ஆர் யு ஓகே?” என்ற விபி’யின் உலுக்கலில் தன்னிலைக்கு வந்தவன் “ஓ எஸ் ஸாரி… சொல்லுங்க” என்றான்.

“ஹி இஸ் நவீன்” என அப்போது வந்தவனை அறிமுகப்படுத்தினார் விபி.

நவீன், ‘குட் மார்னிங்’ சொல்ல… “மார்னிங் நவீன். நைஸ் மீட்டிங் யு. பட் நெக்ஸ்ட் டைம் பி பன்சுவல் (but next time be punctual)” இறுகிய புன்னகையை உதிர்த்தவன் இருக்கையிலிருந்து எழுந்தான் ரிஷி.

பழைய நினைவுகள் ஏற்படுத்திய அழுத்தத்திலிருந்து இப்போது மீண்டிருந்தான்.

இரு கைகளையும் குறுக்கே கட்டிக்கொண்டு, நேராக அனைவரையும் பார்த்து “வெல்… என்னை பத்தி தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். உங்க நியூ எவிபி. ப்ராஜக்ட்ஸ் டிவிசன் (new AVP – Projects division).

இதுக்கு முன்னாடி US’ல ஒரு ஸ்டார்ட்அப்’ல எவிபி’யா இருந்தேன்… உங்க co-CEO ரெக்வஸ்ட் பண்ணி கேட்டுட்டதுனால இந்தியா வந்திருக்கேன்”

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட அந்த வளரும் மென்பொருள் நிறுவனத்தின் co-CEO (co-chief executive officer), ரிஷியை இந்தியக் கிளைகள் விரிவாக்கத்திற்கு நியமனம் செய்திருந்தார்.

இந்த நொய்டா கிளை திறந்து சில வருடங்களே ஆன நிலையில், அங்கு வேலை பார்ப்பவர்கள் பலர் சென்னையிலிருந்து இட மாற்றம் பெற்றவர்களே.

ரிஷி மடித்த கைகளை விடுவித்து, அவன் உட்கார்ந்திருந்த இருக்கையில் கைகளை ஊன்றி… 

“நான் முன்னாடியே கேட்ட… நீங்க பார்த்துக்கற ப்ராஜக்ட்ஸ் SOW, RFP அண்ட் ரிலேடட் ரிப்போர்ட்ஸ், டீம், டீம் billing, wages’னு எல்லா ரிப்போர்ட்ஸ்ம் எனக்கு இமீடியட்’டா வேணும். நோ எக்ஸ்க்யூஸஸ் (No excuses)” என்றவன் நிவேதாவிடம் திரும்பி …

“நீங்க முன்னாடி அனுப்பினது, எனக்கு திருப்தியா இல்ல” என சொல்லும்போது நிவேதா ஏதோ சொல்ல வாய் திறந்தாள்.

“நோ ஆர்க்யுமெண்ட்ஸ் (no arguments). அதுக்கெல்லாம் எனக்கு டைம் இல்ல. நான் சொன்ன திருத்தங்கள பண்ணி, நான் கேட்ட வடிவத்துல, எனக்கு திரும்ப அனுப்புங்க” அவள் என்ன சொல்லவருகிறாள் என்பதைக் கூடக் கேட்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

மென்பொருள் நிறுவனத்தில் ஒரு ப்ராஜக்ட் வேலை எடுத்து அவர்கள் செய்வதற்கு… பெரும்பாலும் தேவையான ஆவணங்கள் Statement of work, Request for proposal, billing wages. நிவேதா முன்பு அனுப்பிய ஆவணங்கள் அவன் கேட்டபடி இல்லை. அவள் எப்பொழுதும் கையாளும் வடிவத்திலே (ஃபார்மெட்) அனுப்பியிருந்தாள். அதற்குத் தான் வாக்குவாதம்!

‘அவனா இப்படி பேசியது? அதுவும் தன்னிடமே’ என்ற ஏமாற்றம் அவளுக்கு ஒரு பக்கம், ‘தான் சொல்லவருவதை அவன் கேட்கவில்லையே’ என்ற கோபம் மறுபக்கம்.

அவனுக்குக் கீழ் இப்படி வேலை பார்க்கும் நாள் வருமென, அவள் துளியளவும் நினைத்ததில்லை! அவ்வளவு ஏன், ‘அவனைப் பார்க்கவே மாட்டோம், பார்க்கவே கூடாது’ என்று எண்ணி இருந்தாள்.

ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாய் ஆனது. கோபம் தலைக்கேற, அவனைப் பார்த்து எவ்வளவு முறைக்கமுடியுமோ, அவ்வளவு முறைத்தாள். ஆனால் அவன் கண்டுகொண்டால் தானே!

அந்த சிலமணி நேரத்தில் பல அறிவுரைகள், சில ஆணைகளைப் பிறப்பித்து… பேசி முடித்தவன் விபி இடம் “உங்களுக்கு ஏதாச்சும் சொல்லணுமா?” என்று கேட்க… “நத்திங். நீங்களே எல்லாம் சொல்லிட்டீங்க ரிஷி” என்று முடித்தார் விபி.

“கிரேட். உங்க ஒத்துழைப்பு முழுசா கிடைக்கும்னு நம்பறேன். தென் லெட்ஸ் ராப் அப் (Then lets wrap up)” என்று இருக்கைகளையும் அவன் சற்று உயர்த்தி சொன்னவுடன், அங்கிருந்தவர்கள் புன்னகைத்து வெளியேற ஆயத்தமானார்கள்.

அதுவரை அவன் முகத்தைப் பார்க்காமல் கடுகடுவென இருந்தவளை, ஸ்ரீ மெல்லிய குரலில் ஆசுவாசப்படுத்த முயற்சிக்க, அவள் கோபத்தை ரிஷியும் பார்க்கத் தவறவில்லை.

ரிஷியை திரும்பி நிவேதா பார்க்க… அவன் முகத்தில் ‘என்கிட்டயேவா…’ என்றஆணவம் தெரிந்தது போல் இருந்தது அவளுக்கு!

‘நான் யார் என்று உனக்கு காட்டுகிறேன்!’ என்ற கர்வம் அவள் கண்களில் அவன் பார்த்தானோ?!

 

***தொடரும்***

39
6
16
7
5
5
5

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved