மீண்டும் ஒரு காதல் – 18

மீண்டும் ஒரு காதல் – 18:

ரிஷியின் அத்தைக்கு நிவேதாவை பார்க்கும்போது வெறுப்பாக இருந்தது. அதுவும் இப்போது அந்த குழந்தை தேவப்பா என்று அழைப்பது வேறு பிடிக்கவில்லை.

அடுத்து அவர் மனதில் தோன்றியது, ‘இவனை அப்பா என்று அழைத்தால், அவள் கணவன் எங்கே? திருமணம் ஆகிவிட்டது என்று சொன்னார்களே. ஒருவேளை இது அவள் அக்காவின் குழந்தையோ?! தேவ்வுக்கு அந்த பெண்தான் இந்த பெண் என்று தெரியுமா’ என்பதுதான்.

யோசனையுடனே இருந்தார். அன்று நிவேதாவின் வீட்டிலிருந்து தேவ் ஊரான ஆம்பூருக்கு, நிவேதாவின் குடும்பம் வந்தபோது…. நடந்த நிகழ்வுகள் மனதில் ஓடியது.

அதே நேரம் நிவேதா மினுவை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு வீடு வந்து சேர, மனதில் ‘ரிஷியின் சொந்தம்’ வந்துள்ளதாக மினு சொன்ன விஷயமே ஓடிக்கொண்டிருந்தது.

‘வந்தது யாராக இருக்கும்? அவன் அம்மாவா?’ என்று நினைக்கையில் அவளின் எண்ணவோட்டமும் பின்னோக்கிச் சென்றது வினோதினியை நினைத்து.

*************************************

நிவேதாவின் அம்மா கமலா, அக்கா அனுராதா மற்றும் அனுராதாவின் கணவன் மித்ரன்… ஆம்பூரில் இருந்த தேவ் வீட்டிற்கு வந்தடைந்தனர்.

அந்த வீடே அவர்களின் செல்வச் செழிப்பைக் காட்டியது. அது போதாதென்று, ‘தேவ் வீட்டிற்கு வழி தெரியவில்லை’ என்று விசாரித்தபோது, தேவ் வீட்டின் பெயரை வைத்தே… அங்கிருந்தவர்கள் வழியைச் சொன்னார்கள்.

அவ்வளவு பெரிய… பெயர்போன குடும்பம்.

இவர்கள் மூவரையும் சம்பிரதாயத்திற்காக வரவேற்றார் வினோதினி. தேவ் அப்பா, ஜெயகுமார் எதிலும் அதிகம் ஈடுபடாமல் இருந்தார்.

அவர்களுடன், ஜெயகுமாரின் தங்கை… தேவ்வின் அத்தை மற்றும் அவர் கணவர் உடனிருந்தார்.

தேவ் வீட்டில் உள்ளவர்கள் நடந்துகொண்ட விதமே… நிவேதா வீட்டினருக்கு எடுத்துக்காட்டியது, அவர்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என.

நிவேதாவின் புகைப்படத்தை அவர்களிடம் தந்தார் கமலா. அதைப் பார்க்கக்கூட இல்லை வினோதினியும்… ஜெயகுமாரும். அது அப்படியே தேவ் அத்தையிடம் கைமாறியது.

“இந்த கல்யாணத்துக்கு நாங்க ஒத்துக்கிட்டதே, தேவ்காக மட்டும் தான். எங்க மகளுக்கு என்ன செய்யணுமோ அதைவிட அதிகம் செய்து… கல்யாணம் பண்ணி வச்சிட்டோம். இப்போ ஒரே பையன்… அவன் விருப்பத்துக்கு கல்யாணம் நடக்கட்டும்னு விட்டுட்டோம். உங்கள பார்த்தா, நாங்க எதிர்பார்க்கிற மாதிரி பெரிய அளவுல கல்யாணம் பண்ணி வைக்க முடியுமான்னு தெரியலயே”

வினோதினியின் பார்வை… நிவேதா அம்மாவை கொஞ்சம் அசௌகரியமாக உணரச் செய்தது. வினோதினி தொடர்ந்தார்.

“சுத்து வட்டாரத்துல இருந்து… எங்க ஆளுங்க மட்டுமே ரெண்டாயிரம் பேர் கிட்ட வருவாங்க. எல்லாரும் பெரிய பெரிய ஆளுங்க. மண்டபமே பெரிய அளவுல பார்க்கணும். அதெல்லாம் உங்களுக்கு கஷ்டம். நீங்க பார்க்கிற துக்கடா மண்டபம் எல்லாம் சரிவராது. சும்மா கல்யாணத்துல கலந்துக்கோங்க போதும். மத்தத நாங்க பார்த்துக்கறோம்” கொஞ்சம் ஏளனம் கலந்த குரலில் பேசினார் வினோதினி.

அந்த பேச்சு சுரீரென்றது மூவருக்கும்.

தேவ் அத்தையை சுட்டிக்காட்டிய வினோதினி.  “இதோ… இவங்க பொண்ண தான் தேவ்க்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருந்தோம். பொண்ணு டாக்டர் . பத்துக்கு ஒன்பது பொருத்தம். இருநூத்தி அம்பது பவுன் நகை மட்டுமே போடுவாங்க. அதில்லாம ரொக்கம், தொழில், சொத்து அது இதுன்னு… ப்ச்! உங்ககிட்ட அவ்ளோலாம் எதிர்பார்க்க முடியுமான்னு தெரியல.

கல்யாணத்துக்கு முன்னாடி எங்க அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி அதையும் நாங்களே தர்றோம்… வேறென்ன செய்ய. ஜாதக பொருத்தம் கூட ரெண்டு பேருக்கும் அவ்ளோ இல்ல… ஆனா தேவ் ஆசைப்பட்டுட்டானே” சலித்தபடி வந்தது அவர் வார்த்தைகள்.

அது கமலாவின் இதயத்தைத் தைத்தது. இப்படிப்பட்ட இடத்தில் தன் மகளுக்குத் திருமணம் நடக்க வேண்டுமா என்ற எண்ணம் அவருள்.

அவர் பேச்சில் வெகுண்ட மித்ரன், “அதென்ன ஆண்ட்டி அவ்ளோ இளக்காரமா பேசறீங்க? எங்களால முடியாதுனு நீங்க எப்படி முடிவெடுக்க முடியும்? பெரிய மண்டபம், நிறைய நகை அவ்ளோ தானா… இல்ல வேற ஏதாச்சும் இருக்கா? நாங்களும் பிஸ்னஸ் பண்றோம் ஆண்ட்டி. நீங்க கேட்கறத செய்ய முடியும். எங்க வீட்டுப்பொண்ணு ஒன்னும் இறங்கி போய்டல; நாங்க யாருக்கும் சளச்சவங்களும் இல்ல” என்றபோது… அனுராதாவும், கமலாவும், ஒரு வித கலக்கத்துடன் மித்ரனை பார்த்தார்கள்.

இப்போது கால் மேலே கால் போட்டபடி வினோதினி மித்ரனிடம், “அட! பிஸ்னஸ் பண்றீங்களா தம்பி… நல்லது. யாருக்கும் சளச்சவங்க இல்ல நீங்க… ஹ்ம்ம்…

எங்க நிலத்துல வேலை பார்க்கறவங்க, எங்க மில்’ல வேலை பார்க்கறவங்களுக்கு மட்டுமே நாங்க தர்ற மாத சம்பளம் எவ்ளோ தெரியுமா?” என்றவர் நிறுத்தி ஒரு தொகையைச் சொன்னார். அது மித்ரன் தொழிலின் ஆண்டு வருமானத்தை விட, பலமடங்கு அதிகம்!

பின், “இந்த மில், விவசாயம் எல்லாம் காலம் காலமா தலைமுறை தலைமுறையா நாங்க செய்றது. அதில்லாம என் கணவரும் நானும் செய்ற தொழில்… அதோட டெர்ன் ஓவர் என்னனு தெரியுமா தம்பி?” என்றவர், அதையும் சொன்னார் புன்னகையுடன். சொன்னபோது அவ்வளவு கர்வம் அவரிடத்தில்.

கமலாவிற்கு தலை சுற்றியது. அனுராதாவிற்கு அதிர்ச்சி. காரணம் தேவ்விடம் பேசியபோது… அவனுடன் பழகியபோது, ஒருமுறை கூட தற்பெருமையோ அல்லது தலைக்கனத்துடனோ அவன் இருந்ததில்லை.

கற்பூரம் அடித்துச் சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள் இவ்வளவு சொத்து அவனுக்குப் பின்புலமாக இருக்கும் என. மித்ரனை பார்த்தபடி வினோதினி தொடர்ந்தார்.

“இது எல்லாத்துக்கும் ஒரே வாரிசு எங்க மகன். தேவ்! எவ்ளோ கனவு வச்சிருப்போம்… அவன் கல்யாணத்துல? சரி, நீ கேட்டயே… ‘என்ன செய்யணும்னு சொல்லுங்க’ன்னு… சொல்றேன்! உங்க தகுதிக்கு ஏத்த மாதிரியே சொல்றேன்!” என்றவர் ஒரு பட்டியலைச் சொல்லி முடிக்க, கமலாவுக்கு மூச்சு முட்டியது.

மனதில் பெருத்த போராட்டத்துக்குப் பின் கமலா, “எங்களால இவ்ளோலாம் முடியுமான்னு தெரியலைங்க” என்று தடுமாறி முடிப்பதற்குள், “அத்த! சும்மா இருங்க” என்று கர்ஜித்த மித்ரன், “நீங்க சொன்னதை எல்லாத்தையும் செய்யறோம்” என்றான் திடமாக.

அதைக்கேட்டு நக்கலாகத் தலையசைத்த வினோதினி, “இங்க நடந்ததையெல்லாம் சில்லற தனமா தேவ்கிட்ட சொல்ல மாட்டீங்கன்னு நினைக்கிறேன். சொன்னாலும் எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல” கொஞ்சமும் குறையாத ஆணவத்துடன் சொன்னார்.

அதற்குப் பின் அவர்களிடம் பேச எதுவுமில்லை என அங்கிருந்து கிளம்பினார்கள் மூவரும்.

அவர்கள் சென்றவுடன், “என்ன அண்ணி நீங்க அவங்களுக்கு சாதகமா பேசிட்டீங்க?” சலித்துக்கொண்டே தேவ்வின் அத்தை வினோதினியிடம் கேட்க…

புன்னகை கொஞ்சமும் குறையாத வினோதினி, “நான் பேசினதே அவங்களோட தன்மானத்தை சீண்டத் தான். எப்படி பொங்கினான்… பார்த்தல்ல.

இப்போ கேட்டதே அவங்களால முடியாது… பார்ப்போம். நாள் இருக்கே இன்னும். போக போக கொடுக்கற குடைச்சல்ல, அவங்களே ஓடிடுவாங்க. தேவ் கொஞ்ச நாள் காதல் தோல்வி அது இதுனு சுத்துவான். அப்புறம் நம்ம வழிக்கு வந்துடுவான்” குரூரமாகச் சிரித்தார் வினோதினி.

அடுத்த ஒரு மணி நேரத்தில், அவர்களுக்கு வந்த செய்தியைக் கேட்டு நிச்சயமாக வருந்தவில்லை அவர்கள். அந்த செய்தி பெங்களூர் – ஆம்பூர் – சென்னை ஹைவே விபத்து. சம்பவ இடத்திலேயே மூவரும் பலி!

இந்த செய்தி நிவேதாவை அடைந்தபோது, முற்றிலுமாக நிலைகுலைந்து விட்டாள்.

என்ன அங்கு நடந்தது… எப்படி இப்படி ஆனது என்று எதுவும் புரியவில்லை. புரிந்துகொள்ளும் நிலையிலும் இல்லை. அவளின் இழப்பு அப்படி.  உடல் செயலிழந்து, உயிர் பிரிந்தததுபோல உணர்வு.

தேவ்வை அழைத்து விஷயத்தைச்சொன்னபோது, அடி வயிற்றிலிருந்து அழுகை பீறிட, உடைந்து அழுதாள்.

“எல்லாமே என்னால தான் தேவா. என்னால தாங்க முடியல தேவா” நடந்ததை அவள் சொன்னபோது, உடைந்து போனான் தேவ். இதயம் பிளக்கும் வலி. மூச்சு விடமுடியாமல் திணறினான்.

இருந்தும் செய்யவேண்டியவை அதிகம் உள்ளனவே! கனத்த மனதுடன், நிவேதாவை சமாதானம் செய்ய முயற்சித்தான். மூன்று உடல்களும் சென்னைக்கு வருவதற்கான வேலையில் இறங்கினான்.

அடுத்த சில மணிநேரங்களில் சடலமாக மூவரும் கொண்டுவரப்பட்டார்கள், வினோதினியின் உபயத்தால்!

அந்த வீட்டில் அப்போதிருந்தது நிவேதா மட்டுமே. யாரை அழைக்க வேண்டும்… அழைக்க வேண்டுமா? என்ன செய்யவேண்டும்? என்று எதையும் யோசிக்கும் மனநிலையில் இல்லை.

சடலத்தின் பக்கத்தில் கிடந்து கதறினாள். அருகில் தவழக்கூடத் தெரியாத பச்சிளம் குழந்தை, தன் அம்மாவின் முகத்தை மட்டும் பார்த்ததும், வீறிட்டு கதறியது. வேறெதற்காக? தாயிடம் தன் தாகம்… பசி தீர்க்க.

அதைப் பார்க்க முடியாமல், நிவேதா தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். ‘தன்னால் தான், தன் திருமண பேச்சிற்காகச் சென்றதால் தான், மூவருக்கும் இப்படி ஆகிவிட்டது’ என்றெண்ணி அவள் மனம் வெதும்பியது.

அப்போது சரியாக அவளை தேவ் அழைக்க… மூச்சிரைக்க அழும் குரலைக் கேட்டு, பரிதவித்துப்போனான்.

பக்கத்தில் குழந்தையைப் பார்த்தவண்ணம்… “அந்த சின்ன பிஞ்சு… என்ன பாவம் செய்தது தேவா? எல்லாம் என்னாலதான். எனக்கு கட்டமே சரியில்லனு எல்லாரும் சொல்றது உண்மை தான் போல தேவா. எனக்கு கல்யாணம் ஒரு கேடா? ஐயோ குழந்தையை பார்க்கறப்ப நெஞ்செல்லாம் அடைக்குது தேவா எனக்கு” தொண்டை வறண்டதையும் மீறி, வெடித்து அழுதாள்.

அவளை தேற்ற முடியாமல் தவித்தான் தேவ். அவனுக்கே இந்த இழப்பு பெரியது என்ற போது… நிவேதாவிற்கு?! அவன் நெஞ்சம் பிசைந்தது.

“என்ன செய்யணும், யாரை கூப்பிடணும்னு கூட தெரியலயே எனக்கு. என்ன இப்படி நிற்கதியா விட்டுட்டு போய்ட்டாங்களே தேவா. பாலுக்காக அக்காவை பார்த்து அழுகுது தேவா … பாப்பா” பக்கத்தில் அழும் குழந்தையைப் பார்த்து மனம் நொந்து கதறினாள்.

குழந்தையின் அழு குரல் கேட்டு அப்படியே சரிந்தான் தேவ். கண்களில் கட்டுக்கடங்காத கண்ணீர் சரசரவென வழிந்தது. சில நொடிகள் அவனுக்குத் தேவைப்பட்டது நிலைமையைக் கையில் எடுக்க.

“வேதா இங்க பாரு. நடந்தது பெரிய இழப்பு தான். கண்டிப்பா கடினமானதும் கூட. ஆனா இப்போ மித்ரன் குழந்தைக்கு நம்ம மட்டும் தான் இருக்கோம். குழந்தை பசியால அழுகுதுல. மொதல்ல பாப்பாக்கு வயித்துக்கு ஏதாச்சும் குடு. நான் லைன்’லேயே இருக்கேன்” என்று பொறுமையாக அவன் சொன்னதும், அடித்து பிடித்து ஓடினாள் நிவேதா.

குழந்தைக்குப் பால் உள்ளே சென்றதும், தூக்கம் தழுவியது. கண்ணீருடனே பாலை தந்தாள் நிவேதா.

பின் தேவ் அவளிடம், “மித்ரன் வீட்டுக்கு தகவல் சொல்லணும் வேதா” என்றவன் அடுத்து, யார் யாரை அழைக்கவேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று அவளுக்குச் சொன்னான்.

“நான் அம்மாக்கு விஷயத்தை சொல்லிட்டேன். அவங்களும் உன்னை பார்க்க நாளைக்கு வரேன்னு சொல்லியிருக்காங்க. நீ கவலை படாத. அவங்க வந்தா உனக்கு உதவியா இருக்கும்!” என்றான் வினோதினியின் எண்ணம் தெரியாமல்.

அடுத்து, கொஞ்ச நேரத்தில் மித்ரன் வீட்டிலிருந்து அவன் அம்மா, அப்பா, தம்பி என அனைவரும் வந்து சேர்ந்தார்கள்.

அவன் அம்மா, மகனைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

“இந்த பாவிய கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்படி அற்பாயுசுல போய்ட்டானே” சடலமாய் கிடக்கும் அனுராதாவைச் சாடினார்.

வெறித்த முகத்துடன் ஒரு மூலையில், மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள் நிவேதா.

‘இதே வீட்டில் எவ்வளவு சந்தோஷமாக நாட்கள் கழிந்தது, ஆனால் இப்போது?’ கண்கள் மூவரின் உடலை விட்டு அகலவில்லை. கண்களில் கண்ணீர் வற்றலாம்… ஆனால் இதயத்தில் வழியும் கண்ணீரும் ரத்தமும் வற்றுமோ! சிலையென நடப்பைகளை பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தாள். மனம் எதிலும் பதியவில்லை.

தேவ், ‘இறுதிச் சடங்கு சேவை நிறுவனம்’ (funeral service) ஒன்றிடம், இறுதிச்சடங்கிற்கான வேலையைத் தந்திருந்தான்.

அவர்கள் அவர்களின் வேலையை பார்த்தனர். வந்தவர்களைக் கவனிப்பதிலிருந்து… அவர்களே அனைத்தையும் செய்தனர்.

அன்றிரவு நிவேதாவை அழைத்த தேவ்… அவளைத் தேற்றும் வேலையில் இறங்கினான்.

“நடந்தது நடந்துடுச்சு வேதா. நம்மளால எதையும் மாற்ற முடியாது. குட்டி பொண்ண நம்ம பார்த்துக்கலாம். அவளுக்கு இனிமே வேதா தான் அம்மா; தேவா தான் அப்பா. நான் சீக்கிரம் கிளம்பி வரேன். நீ தைரியமா இரு… ப்ளீஸ்டா”

நிவேதா கேட்டாள் அவ்வளவே. மனதில் ரணம் சற்றும் குறையவில்லை.

“இங்க நாளுக்கு நாள் காட்டுத்தீ அதிகம் ஆயிட்டே இருக்கு வேதா. நெட்வர்க்… சிக்னல் எப்போ வேணும்னாலும் கட் பண்ணிடுவாங்க போல. நாளைக்கு காலைல அம்மா அங்க இருப்பாங்க. நான் இல்லைனாலும் அவங்க எல்லாத்தையும் பார்த்துப்பாங்க டா” அவளைச் சமாதானம் செய்தான்.

ஆனால் பாவம் அவனுக்கும் தெரியாது; அவளுக்கும் தெரியாது… தேவ்வின் வீட்டில் என்ன நடந்தது! வினோதினியின் பேச்சுக்கள்! இது எதுவும்!

தெரிந்திருந்தால் அவன் அம்மாவை வரச்சொல்லி இருக்க மாட்டானோ?! பொல்லாத விதி, பாயை விரித்து உட்கார்ந்துவிட்டது அவர்கள் வாழ்வில்.

அடுத்த நாள் வினோதினி மற்றும் தேவ்வின் அத்தை, நிவேதாவின் வீட்டிற்கு வந்தனர். அவ்வளவு விலை உயர்ந்த… மிகவும் உயர்ரக காரில் வந்த பெண்களைப் பார்த்து, மித்ரன் வீட்டினர் வாயைப் பிளந்தனர்.

நிவேதாவின் கருத்தில் அதெல்லாம் பதியவே இல்லை.

வினோதினி  நிவேதாவிடம் சென்றார். பாவம் சின்ன வயதில் உடன் இருப்பவர்கள் அனைவரையும் பிரிந்து, துயரத்திலிருந்த நிவேதா, தேவ் அம்மா என்ற நம்பிக்கையில், உரிமையில்… அவரைப் பார்த்ததும்…

“அத்தை” என அவரின் கரம் பிடித்து அழ ஆரம்பித்துவிட்டாள். அவர் முகத்தில் அற்பமான ஒன்று தன்னை தீண்டியதுபோல ஒரு பாவம் காட்டினார்.

இதை நிவேதா பார்த்தாளோ இல்லையோ, மித்ரன் வீட்டினர் அனைவரும் பார்த்தனர்.

நாசுக்காக கைகளைப் பிரித்துக்கொண்ட வினோதினி, நிவேதாவின் தோளை தட்டிக்கொடுத்து, அடுத்து நடக்க வேண்டியவற்றைச் சொன்னார். மித்ரன் வீட்டினில் அனைவரும் ‘கப்சிப்’ வினோதினியின் ஆளுமையைப் பார்த்து.

வினோதினியும் மித்ரன் வீட்டினரைப் பார்க்கத் தவறவில்லை. மனதில் பல கணக்குகளைப் போட்டுக்கொண்டே நடப்பைகளை நோட்டம் விட்டார்.

பின், நிவேதா அறியாவண்ணம், தேவ் அத்தையை அவளிடம் விட்டுவிட்டு, மித்ரன் குடும்பத்துடன் பேசுவதற்கு, கீழ்த்தளம் சென்றுவிட்டார்.

நேற்றைய தினத்தில் ஆரம்பித்து, இன்று காலை வரை நேரம் அவருக்கு போதுமானதாக இருந்தது… மித்ரன் குடும்பத்தையும், அவன் தொழிலையும்… மற்றும் நிவேதா குடும்பத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு.

மித்ரன் குடும்பம் சில நாட்களுக்கு முன்… மித்ரன் மற்றும் அனுராதவை ஏற்றுக்கொண்டதே, அவன் தொழில் நன்றாக வளர ஆரம்பித்துவிட்டது என்பது தெரிந்தபின் தான்.

‘மித்ரனை இப்படியே விட்டால், மனைவி வீட்டிற்கு அனைத்தையும்  தாரை வார்த்து விடுவான்’ என எண்ணி இருவரையும் ஏற்றுக்கொண்டார்கள்.

இது வினோதினிக்கு தெரிய வர, எடுத்ததும் மித்ரன் வீட்டினரிடம் அவர் தந்தது…  ஒற்றை எண்ணைத் தொடர்ந்து பல பூஜ்ஜியங்களுடன் இருக்கும் ஒரு காசோலையை.

“மித்ரன் ஏதோ பிஸ்னஸ் செய்தானாமே. அதோட ஷேர்ஸ்… மித்ரன், அனுராதா, நிவேதா அண்ட் அவங்க அம்மா பேர்ல தான் இருக்கு. அது முழுசும் உங்களுக்கு வரணும்னா, இந்த செக்’ல இருக்கிற பணமும் உங்களுக்கு வரணும்னா, அந்த நிவேதாவை உங்க மகனுக்கு கட்டி வைக்கணும். அதுவும் சீக்கிரம்” என்றார் நிதானமாக, ஆனால் நடந்தாகவேண்டும் என்ற தொனியில்.

‘கரும்பு தின்ன கூலியா?! தொழில் மட்டுமே அவர்கள் எதிர்பார்த்திருக்க, இப்போது கூடவே கணம் மிக்க காசோலை’ மித்ரன் பெற்றோர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

ஆனால் மித்ரன் தம்பி விஜய் முகம் அதிர்ச்சியை அப்பிக்கொண்டது. நிவேதாவின் முகம் வந்து சென்றது.

மனதில்… ‘தன் அழகென்ன… ஆளுமை என்ன? பக்கத்தில் அவள் நின்றால்?’ அவன் முகம் கருகியது. அவனுக்கு இதில் சுத்தமாக உடன்பாடில்லை. ஆனாலும் அண்ணனின் தொழில்?! அதை விட மனமில்லை.

ஆக, இவர்கள் அனைவரும், முன்னமே நொந்து துவண்டிருக்கும் நிவேதாவை, இன்னமும் உருட்டி பிரட்டி நோகடிக்கக் காத்திருந்தார்கள்.

இது எதுவும் தெரியாத நிவேதா, தேவ்விற்கு அழைத்தாள். அவன் சொன்னது போலவே காட்டுத்தீயால் அவனைத் தொடர்புகொள்ள முடியாமல் போனது. முயற்சி செய்து செய்து தோற்றாள். அழுது கரைந்தாள்.

அப்போது அங்கே வந்தார் வினோதினி.

அவரை பார்த்ததும், “தேவாக்கு லைன் கிடைக்கல அத்த. வைல்ட் ஃபயர் அதிகம் ஆயிடுச்சுபோல” மனதில் வருத்தத்துடன் பேச,  “ஓ…! உனக்கு அவன் மேல அக்கறை எல்லாம் இருக்கா மா நிவேதா?” கேட்டவர் குரலில் அத்தனை ஏளனம்.

கலங்கிய கண்களுடன் மலங்க மலங்க பார்த்தாள் நிவேதா.

“அதெப்படி… பணக்கார பசங்களா பார்த்து பார்த்து, வலை வீசி பிடிப்பீங்களோ? நீ மட்டும் தான் இதை செய்தயா… இல்ல குடும்பமே கூட்டு சதியா?” வார்த்தைகள் பொறுமையாக வந்தாலும், இதயத்தைக் குத்தி கிழிப்பது போல கூர்மையாக வந்தது.

அதிர்ந்து பார்த்தாள் நிவேதா. அவளுக்கு அவன் பெரிய பணக்காரன் என்பதெல்லாம் தெரியாது. மித்ரன் ஒருமுறை சொன்னபோது கூட அதைப் பெரிதாகவும் எடுத்துக்கொள்ளவில்லை.

நல்ல குணமுடையவன். தன்னை அப்படியே ஏற்றுக்கொண்டவன். கண்களில் கண்ணீர் வரவிடாமல் பார்த்துக்கொண்டவன். நண்பனுக்காக எதையும் செய்யும் நல்லவன். இதுபோல தேவ்வின் குணங்கள் தான் அவளுக்கு தெரியும்.

“அது சரி. தகுதி தான் இல்ல. பார்க்கவாவது நீ நல்லா…?!” அவர் அப்படியே நிறுத்திவிட்டார். நிவேதாவிற்கோ, இல்லை நமக்கோ புரியாதா என்ன?!

அவர் அகராதியில் ‘நல்லா’ என்பதன் பொருள்… பல படங்களிலும், பல கதைகளிலும்… வரும் அழகு பதுமை! ஆப்பிள் கன்னம், மீன் விழிகள், வில்லெனப் புருவம், பிறை நெற்றி, கூர் நாசி, நிலவின் அழகு!

ஆம்! இதனைத்தும் நிவேதாவிடம் கொஞ்சம் குறையாகவே இருந்தது. அவள் மட்டுமல்ல, இவ்வுலகில் நிறையப் பெண்கள் அவளை போலத் தான்! ஆனால் அவளும் பெண் தானே! அதை மறந்துவிட்டாரே!

புரிந்துவிட்டது அவளுக்கு, அவர் பேசும் பொருள்… மற்றும் எதை நோக்கி செல்கிறது இந்த பேச்செல்லாம் என்பது! கேட்டுப் பழகிய பேச்சுதான். பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வெறும் வெற்றுப்புன்னகை அவள் முகத்தில்!

அவரும் விடுவதாய் இல்லை. “சரி, அந்தஸ்து இல்ல. பக்கத்துல நிற்கிற தகுதியும் இல்ல… ஆனா, ராசியும் இல்லையே மா உனக்கு!” என்றவுடன், அவள் மூக்கு விடைத்து, அழுகை வரக் காத்திருந்தது.

“உன் அப்பா நீ பிறந்த ஒரு வருஷத்துல போய்ட்டாராமே. நீ வயசுக்கு வந்தப்புறம், உங்களை பார்த்துகிட்ட உன் அம்மா வழி பாட்டியும்…”, போய்விட்டார் என்பதை சைகையில் காட்டியவர்… “உன் கல்யாண பேச்சை பேசிட்டு அப்போதான் கிளம்பினாங்க… ஆனா, உன் மொத்த குடும்பத்தையும் இல்ல காவு வாங்கிடுச்சு உன்னோட ராசி”

மிகவும் நோகடிக்கும் வார்த்தைகளை, வெகு சாதாரணமாகச் சொன்னார். இதை கேட்டவுடன் முகத்தை மூடி அழுதாள்.

ஏற்கனவே, ‘தன்னால் தான் இது அனைத்தும்…’ என நினைத்து மருண்டவள், இதைக் கேட்டவுடன் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

மடியிலிருந்த குழந்தையைப் பார்த்து நெஞ்சம் பிசைந்தது… அதனுடைய இன்றைய நிலைக்கும் தான் தான் காரணம் என நினைத்து!

வினோதினி தொடர்ந்தார். “கல்யாண பேச்சுக்கே இந்த நிலைமைன்னா… கல்யாணம் ஆச்சுன்னா? என் பையனை கூட உன் ராசி முழிங்கிடும்” என்றதும், அதிர்ந்து காதை கையால் மூடிக்கொண்டாள்.

தன்னால் மற்றவர்களுக்கு நேர்ந்ததெல்லாம் போதும். ‘தேவாவுக்கும்?!’ என நினைக்கையில், கழுத்தை நெரித்து, தொண்டையை அடைத்தது ஏதோ ஒன்று. மூச்சு விடக்கூட சிரமப்பட்டாள்.

கைகூப்பி அழுதவண்ணம், ‘போதும்’ என்பதுபோல அவள் கெஞ்ச, வினோதினி விடுவதாக இல்லை போல.

“அப்படியே நீங்க நல்லா இருந்தாலும்… இதோ உன் மடியில இருக்கே… யாரோ போட்ட மிச்சம்! அதுக்கு என் பையன் அப்பான்னு அவனே சொல்றானே! இந்த மிச்சம் எங்க சாம்ராஜ்யத்துடைய வாரிசா?!” கோபத்தில் உச்சத்தில் வினோதினியின் கண்கள்.

நிவேதா கண்கள் மூடி…. காதை அடைத்துக்கொண்டு மூலையில் உட்கார்ந்துவிட்டாள். அவளால் எதையும் கேட்க முடியவில்லை. வீட்டில் நடந்த துர்மரணங்களின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் அவர்களைக் குதறுவது மிகவும் கொடிய செயல்!

“இதுக்கப்புறமும் என் மகன் வேணும்னு நீ நினைச்சா… அதுக்கு பேர் காதல் இல்லை” என்றவர்… தேவ் அத்தையை அங்கிருந்து அழைத்துக்கொண்டு… மித்ரனின் வீட்டினரிடம் கண்களால் கட்டளையிட்டபடி அங்கிருந்து கிளம்பிவிட்டார்!

வினோதினி பேசிய பேச்சில் குத்துயிரும் கொலையுயிருமாக கிடந்தாள் நிவேதா!

17
11
6
4
2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved