thaniperum-thunaiye-9
தனிப்பெரும் துணையே – 9
அந்த சின்ன அறையில், மூன்று மானிடர் (ட்ரிபிள்) கொண்ட ஒரு கம்ப்யூட்டர் செட்டப். கூடவே ஒரு லேப்டாப். கிட்டத்தட்ட நூற்றை தொடும் புத்தகங்கள். ஒரு ஆர்ம் சேர். இதுவே முக்கால்வாசி இடத்தை நிரப்பி இருந்தது.
“இது ஸ்டடி கம் ஒர்க் ரூம்” என்று செழியன் சொன்னவுடன் அதிர்ந்து புரிந்தும் புரியாமலும் அவள் பார்க்க…
“நான் மாஸ்டர்ஸ் பண்றேன். IITB’ல… ” என்றான்.
“அப்போ வேலை” அவளுக்கு இன்னமும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம்.
” கம்பெனி ஹாஃப் ஸ்பான்செர்ஷிப். வாரத்துல தெர்ட்டி அவர்ஸ் ஆஃபீஸ் ஒர்க். மிச்ச நேரம் காலேஜ்ல இருப்பேன். காலைல சீக்கிரம் காலேஜ் போய்ட்டு அப்பறம் ஆஃபீஸ் போவேன்” என்றான்.
“இன்னைக்கு?” அவள் கேட்க… “காலேஜ்ல இருக்கப்ப தான் நீ கால் பண்ண. சோ ஆஃபீஸ் போகல. வீக் எண்ட் ஒர்க் பண்ணிப்பேன்” என்றான் சின்ன புன்னகையுடன்.
ஏனோ இன்னுமும் அவன் மேல் ஈர்ப்பு அதிகமானது. அவளும் புன்னகைத்தாள்.
” ஹ்ம்ம்… அண்ணிக்கு தெரியுமா?” … மறுப்பாக தலையசைத்தான் செழியன்.
“ஏன்” புரியாமல் கேட்டாள். “என்கிட்டே யாரும் கேட்கல. நானும் சொல்லல” என்றவுடன், புருவங்கள் உயர்ந்தது ப்ரியாவிற்கு.
“அதென்ன எப்போ பார்த்தாலும் யாரும் கேட்கலன்னு சொல்ற? நீ படிப்பன்னு அவங்களுக்கு எப்படி தெரியும்?” கொஞ்சம் கோபத்துடன் தான் கேட்டாள்.
“நான் சொல்றதுனால அவங்களுக்கு என்ன யூஸ்? மேல் படிப்புன்னு சொன்னாலே… அப்பா, பையன் வேலை போறது தான் லட்சணம்னு லெக்ச்சர் எடுக்க ஆரம்பிச்சிடுவாரு. பிடிச்சதை செய்ய விடமாட்டாங்க. அதான் சொல்லல” என எங்கோ பார்த்து பதிலளித்தான்.
முதல் முறை ஒரு சிறு பிள்ளை அடம் பிடிப்பது போல இருந்தது அவளுக்கு அவனை பார்க்கும் போது.
“ஹ்ம்ம் நான் போய் சொல்லிட்டேன்னா?” புன்னகையுடன் புருவம் உயர்த்தி கேட்க… கொஞ்சம் அதிர்ந்து அவளைப்பார்த்தான்.
பின்… “சொல்லமாட்ட நீ” என்றான் புன்னகையுடன்.
“இதுக்காகவே சொல்வேன்” கைகளை கட்டிக்கொண்டு அவனை ஏறிட… “அப்போ நீ இங்க வந்ததை சொல்லபோறயா?” என அவன் கேட்டவுடன், இருவர் முகத்திலும் சிரிப்பு.
“பிளாக் டீ குடிப்பயா?” அவன் கேட்டவுடன்… அவள் முகத்தை அஷ்ட கோணலாக காட்ட… “அதுதான் நான் குடிப்பேன். அதான் இருக்கு இப்போ” என்றான்.
“ஹ்ம்ம். ஓகே…” அவள் சொன்னவுடன் அவன் சமையலறைக்குள் சென்றான்.
சில நிமிடங்கள் கழித்து அவளும் சென்று கதவில் சாய்ந்தபடி நின்றாள் அவனை பார்த்தவாறு.
அவளை பார்த்து புன்னகைத்த செழியன்… “அக்கா எப்படி இருக்கா? வெண்பா குட்டி நல்லா தவழுறாளா? அவங்கள பார்த்து ரொம்ப நாள் ஆச்சு” சின்ன வருத்தத்துடன் கேட்டான்.
‘ஹ்ம்ம் அதான… அக்கா பத்தி பேசினா மட்டும் ரெண்டு மூனு சென்டன்ஸ் சேர்த்து பேசுவான். பாசத்துல உருகுவான்’ என மனதில் நொடிந்துகொண்டாலும்…
“ஹ்ம்ம் நல்லா இருக்காங்க. வெண்பா தவழ்ந்தே மும்பை வர்ற அளவுக்கு தேறிட்டா. எங்க அண்ணா பொண்ணாச்சே. எல்லாத்துலயும் ஃபாஸ்ட்” தோள்கள் குலுக்கி சொன்னவளை பார்த்து முறைத்த செழியன்…
“ஒன்னுமில்ல. அவ எங்க அக்கா போல. செம்ம ஸ்மார்ட்” என்றான் பெருமையாக.
அவன் டீ போட்டுமுடிக்க… அவள் இதுவரை தனக்கு பின்னால் மறைத்துவைத்திருந்த ஒரு சின்ன பெட்டியை அவன் முன் நீட்டினாள்.
அவன் என்ன என்பதுபோல பார்த்தபடி அதை வாங்கினான். அவன் முகத்தில் புன்னகை அரும்பாக மலர்ந்தது.
அந்த பெட்டிக்குள் இரண்டு ஈக்கோ ஃபிரண்ட்லி காஃபி கப்ஸ் இருந்தது. அழகாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்க, அந்த இரண்டு கோப்பையிலும் ஒரு பெய்ண்டிங் வரையப்பட்டிருந்தது.
முகம் மலர அவன் “பியூட்டிஃபுல்” என்றான். அவள் புன்னகைத்தாள்.
“இது என்ன பெய்ண்டிங்? நீ வரைந்ததா?” அதை பார்த்தவாறு அவன் கேட்க… ஆம் என்பதாக தலையாட்டி, “என்னன்னு நீ தான் கண்டுபிடிக்கணும்” என்றாள்.
“ஹ்ம்ம்… எதுக்கு ரெண்டு? நான் மட்டும் தானே இருக்கேன்” அடுத்த கேள்வியை தொடுக்க…
‘ஒன்னு உனக்கு ஒன்னு எனக்கு’ என நினைத்தாலும்… “ஒன்னு உனக்கு ஒன்னு உன் future wife’க்கு” அதை சொன்னபோது அவள் கண்களில் காதல் அப்பட்டமாக தெரிந்தது. ‘அவன் என்ன இதற்கு சொல்வான்’ என தவித்தது அவள் மனம்.
அவனும் அவளை பார்த்தான். சில நொடிகள் கழித்து… கோப்பையை பார்த்தான். புன்னகைத்துக்கொண்டே அதை மேடையில் வைத்துவிட்டு… “டீ சூடு ஆறியிருக்கும்” என சொல்லி மறுபடியும் சூடு செய்தான்.
அவன் எண்ணவோட்டத்தை அவளால் புரிந்துகொள்ளமுடியவில்லை. டீயை அவன் வேறு குவளையில் ஊற்ற, அவள் நெஞ்சம் கொஞ்சம் வருத்தியது.
இருந்தும் விடாமல் “இப்போ நீ புதுசுல குடிக்கலாம்ல” அவன் மனநிலை பற்றி தெரிந்துகொள்வதற்காக கேட்டாள்.
“நீ சொன்ன இதுக்கு சொந்தமானவங்க அந்த உரிமையோட வர்றப்ப, நான் இதை யூஸ் பண்றேன்” என்றான்.
‘ஒன்னும் விளங்கல. ஒருவேளை பேசினா இப்படி புரியாத மாதிரி பேசுவானோ???’ என எண்ணி பெருமூச்சு விட்டாள். எதற்கு கேட்டோம் என்றாகிவிட்டது ப்ரியாவிற்கு.
அவன் அவளையே பார்த்தவாறு டீயை அவளுக்கு கொடுத்தான்.
அதை கொஞ்சம் ருசிபார்க்க, சுத்தமாக பிடிக்கவில்லை அவளுக்கு. ஆனால் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல் ஏதோ தனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதுபோல குடித்தாள்.
“நீ சமைப்பாயா?” அடுத்த டாபிக்கை ஆரம்பித்தாள்.
“ப்ச். அதுதான் வராது. டீ மட்டும் போடுவேன்” என்றவுடன்… “அப்போ சாப்பாடு” அவள் கேள்வியோடு பார்க்க…
“இங்க கிரௌண்ட் ஃப்ளோர்’ல ஒரு சின்ன மெஸ் மாதிரி நடத்தறாங்க. அங்க தான் ரெண்டு வேலையும் வாங்கறது. மதியம் காலேஜ்ல இல்ல ஆஃபீஸ்ல சாப்பிட்டுப்பேன்” என்றான்.
“வெளியவே சாப்பிட்டா உடம்பு என்ன ஆகறது… பழகிக்கலாம்ல சமைக்க… அட்லீஸ்ட் பேசிக் குக்கிங்”
“ஹ்ம்ம். ஈசி’யா சாப்பாடு கிடைக்கறதுனால ட்ரை பண்ணதில்ல. பாப்போம்… உனக்கு வருமா சமைக்க?” அவன் கண்களில் வித்தியாசம் தெரிந்ததோ இதை கேட்கும்போது?
“தோசை, சப்பாத்தி திருப்பி போடுவேன். அம்மா எப்பவும் சொல்லிகுடுப்பாங்க. பட் மைண்ட்ல படிப்பைத்தவிர எதையும் உள்ள சேர்த்துட்டதில்ல. நான் கொஞ்சம் படிப்ஸ்” முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு பதில் தந்தாள் ஆனால் குறும்புப்பார்வையுடன்.
அதைக்கேட்டவுடன் சத்தமாக சிரித்தான். முதல் முறை அதை அவள் பார்க்கிறாள்.
மனம் விட்டு சிரித்தால் எவ்வளவு பிரகாசமாக தெரிகிறது அவன் முகம். அவனையே பார்த்தாள். அவளால் புன்னகைக்கவோ சிரிக்கவோ முடியவில்லை. மாறாக இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. முன்புபோல வயிற்றில் கடகடவென சத்தம்.
“சமைக்க தெரியாதுன்னு நேராவே சொல்லியிருக்கலாம். இதுல எனக்கு அட்வைஸ் வேற” என்றான் அதே சிரிப்புடன்.
“தெரியாதுதான். பட் தேவைன்னு வந்தா தேவைக்கேற்ப என்னை மாத்திக்க முடியும். எதையும் பழகிக்க முடியும். அதுக்காக எந்த எக்ஸ்ட்ரீம்’கும் போவேன்” என்றாள் பல பொருள்கொண்டு.
இப்போது அவளையே பார்த்தான் அவன். சில நிமிடங்கள் மௌனம் நிலவியது.
அவன் எப்படியும் பேசமாட்டான் என நினைத்து… “ஹால்’லயே பெட் இருக்கே. யாராச்சும் வந்தா ஆக்வேர்ட்’டா இருக்காது?” அவள் கேட்க…
“இதுவரைக்கும் என்னை பார்க்க யாரும் இங்க வந்ததில்லை. நான் போய் பார்த்துட்டு வர்றதோட சரி” என்றான். சிரிப்பெல்லாம் தூரம் சென்றதுபோல.
அவனின் அந்த முகம் பார்த்தபோது ஏனோ அவள் மனம் தவித்தது. அவனுக்கு ஆறுதலாக இருக்க ஆசைப்பட்டது. ஆனால் அமைதியாக பார்த்தாள் அவனை.
நேரம் சென்று கொண்டே இருக்க… அவள் பையில் இருந்து இன்னொரு பெட்டியை எடுத்தாள்.
அதை அவனை பிரிக்கச்சொன்னாள். அவனும் செய்தான். அதில் அழகான ஒரு டேபிள் லாம்ப் இருந்தது.
“இது என்னோட ஜுனியர்ஸ் செய்தது. Faraway lamp. WIFI கூட கனெக்ட் பண்ணனும். இதோட இன்னொரு லாம்ப் என்கிட்ட வீட்ல இருக்கு. இங்க இந்த லாம்ப் டச் பண்றப்ப, எனக்கு அங்க சிக்னல் கிடைக்குதான்னு பார்க்கணும். சென்னை டு செங்கல்பட்டு ஒர்க் ஆச்சு. சோ இங்க இருந்து டெஸ்ட் பண்ணலாம்னு” தெளிவாக ‘லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் லாம்ப்’ என சொல்லாமல் ‘faraway lamp’ என்றாள்.
அவன் புரியாமல் பார்க்க… “வெயிட். இங்க wifi டீடெயில்ஸ் சொல்லு” என கேட்டு, ஏதோதேதோ அதில் செய்தாள். பின்… “கன்னெக்ட் பண்ணிட்டேன். நான் ஊருக்கு போனப்பறம் நீ இதை டச் பண்ணா போதும். ஒவ்வொரு டைம் பண்றப்பவும் வித்தியாசமான கலர்ஸ் அன்ட் மைண்ட்’க்கு ரிலாக்சிங் இமேஜ் பேட்டர்ன்ஸ் வரும்” என்றாள்.
அவனுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் தலையை ஆட்டினான்.
கிளம்புவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டே இருக்க… இதுவரை இருந்த மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது அவளுக்கு. அவனுடனே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கிறது என நினைத்தாள்.
ஆனால் அவனோ எதுவும் வெளிப்படையாக பேசவில்லை. நன்றாக பேசவே யோசிக்க… அவ்வப்போது பார்ப்பது மட்டும் தான் என்று எண்ணும்போது கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.
இருவரும் புறப்பட்டனர். அவள் எதற்கு அலைச்சல்… தானே சென்றுகொள்வதாக சொல்ல, அவன் அதை மறுத்து அவனும் கிளம்பினான் அவளுடன்.
இருவரும் கொஞ்சம் இடைவெளிவிட்டு, தரை தளத்தில் நடக்க, அங்கு சிறுவர் சிறுமியர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர்.
ப்ரியா கிளம்பும் சோகத்தில் எங்கோ பார்த்து நடக்க, திடீரென ப்ரியாவை நோக்கி பந்து வருவதை பார்த்த செழியன், “ஹே பால்” சட்டென அவளை தன் புறம் இழுத்தான், பந்து அவளை தாக்காமல் இருக்க…
அதை எதிர்பார்க்காத ப்ரியா கொஞ்சம் தடுமாறி அவன் கையின் மேலே மோதி நின்றாள். அந்த சின்ன நெருக்கத்தால் அவள் உடல் லேசாக சிலிர்த்தது. அவனை பார்த்தாள். அவனும் புன்னகைத்துவிட்டு நடந்தான்.
அவன் அவள் கையை பற்றியிருக்க, இப்போது இருவருக்கும் இடையில் பெரிய இடைவெளியில்லை. இடைவெளி விடவும் மனம்மில்லை போல…!
