தனிப்பெரும் துணையே – 1

தனிப்பெரும் துணையே – 1 

விடாமல் ஒலித்துக்கொண்டிருந்த மொபைலின் சத்தத்தில் கண்விழித்தாள் இசைப்ரியா.

தூக்கத்துடன் அதை எடுத்து பார்த்தவள் அதில் தெரிந்த எண்ணை பார்த்து, முழு ரிங் முடியும்வரை அதையே கண்கொட்டாமல் பார்த்தாள். பதிலளிக்கப்படாமல் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அப்போது திரையில் அழைத்த நபரின் மிஸ்ட் கால் எண்ணிக்கை தெரிந்தது. அதை ஒரு நொடி பார்த்தவள் மொபைலை படுக்கையில் வைத்துவிட்டு காலை கடன்களை முடிக்க சென்றாள்.

முடித்து வந்து மறுபடியும் மொபைலை பார்க்க, இப்போது அந்த எண்ணில் இருந்து இன்னொரு மிஸ்ட் கால். மணி பார்த்தாள்… அது ஐந்தரை என காட்டியது.

கீழே கூடத்தில் இருந்த பால்கனியில் நின்று உதிக்கும் கதிரவனை உணர்ச்சிகள் துடைத்து வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

“மார்னிங் ப்ரியா” என்ற கவிதாவின் குரலில் அவளைப் பார்த்து புன்னகைத்து… “குட் மார்னிங் அண்ணி” என்றாள் ஆனால் அந்த புன்னகை அவள் கண்களை எட்டவில்லை.

“இன்னைக்காவது பூஸ்ட்…” ‘அவளுக்கு பிடித்த பூஸ்ட் இன்றாவது குடிப்பாளா’ என நினைத்து கவிதா கேட்க… “பிளாக் டீ குடிச்சி பழகிடுச்சு அண்ணி. நான் வரவா ஹெல்ப்’க்கு” கேட்டாள் ப்ரியா.

“இருக்கட்டும். நான் எடுத்துட்டு வரேன்” என்றுவிட்டு சிந்தனையுடனே சமையலறைக்கு சென்றாள் கவிதா.

மறுபடியும் வானத்தை பார்த்தபடி நின்ற இசைப்ரியாவின் மனது அதிகாலையில் அழைத்தவனையே நினைத்துக்கொண்டிருந்தது.

வந்ததிலிருந்து ப்ரியாவின் நடவடிக்கைகள் கவிதாவினுள் ஒரு வித குழப்பத்தையே வரவழைத்தது.

எப்போதும் துறுதுறுவென சுற்றித்திரிபவள், இப்போது அது மருந்துக்கும் இல்லை என்பது ஒருபுறம் குழப்பமாக இருந்தாலும் மறுபுறம் கவலையாகவும், பயமாகவும் இருந்தது.

அமைதியாக காலை வேலைகள் நடந்துகொண்டிருக்க… காலை உணவிற்காக ஒரு அலப்பறையை கூட்டினாள் குட்டி வாண்டு வெண்பா.

சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்த வெண்பா, ப்ரியாவை பார்த்ததும் “அத்த ஊட்டி விடுங்க” என கத்தினாள்.

புன்னகைத்துக்கொண்டே வந்த இசைப்ரியா “குடுங்க அண்ணி” என்று கவிதாவிடம் உணவை வாங்கினாள்.

கவிதாவிற்கு ‘முன்பு இதேபோல காலை கல்லூரிக்கு கிளம்பும் போது ப்ரியா செய்த செயல்கள், செய்த அட்டகாசங்கள்’ என மனதில் வந்துபோக, இப்போதிருக்கும் அமைதியான ப்ரியாவை பார்க்க பார்க்க ஏதோ நெருடலாக இருந்தது.

அதே நினைப்பில் சமையலில் ஈடுபட்டிருக்க… “ஒய் பேபி” என்ற குரல் காதின் மிக அருகில் கேட்டு திடுக்கிட்டு திருப்பினாள் கவிதா.

தன்னை யார் இப்படி கூப்பிடுவார்கள் என்று தெரியும் இருந்தாலும் தற்போதய மனநிலை அவளை திடுக்கிடச்செய்தது. திரும்பிய வேகத்தில் நிம்மதி பெருமூச்சும் வந்தது.

“எதுக்கு இப்படி ஒரு ரியாக்ஷன். உனக்கே டூ மச்’சா இல்ல” என்று கேட்டுக்கொண்டே அகிலன் அவள் கையில் இருந்த கரண்டியை வாங்கினான் அவளுக்கு உதவ.

கவிதா எதுவும் பேசாமல் அமைதியாக ப்ரியாவை பற்றி யோசனையில் இருக்க… அவள் முகம் சரியில்லை என்பது புரிந்து “என்னாச்சு பேபி. எதப்பத்தி யோசிச்சிட்டு இருக்க” என கேட்டான்.

“அகி… ப்ரியா பழைய மாதிரி இல்லல. நீ கவனிச்சயா? நான் வந்ததுல இருந்து பார்க்கறேன். ஏதோ அவ சரியில்ல அகி. பயமா… ஏதோ பாரமாகுது” மனதை அரித்தெடுத்த விஷயத்தை அவனிடம் சொன்னாள் கவிதா.

“ஹ்ம்ம்… ப்ரியா இன்னும் சின்ன பொண்ணில்ல. எதுவா இருந்தாலும் face பண்ணிடுவா. நீ இதை நினச்சு கவலைப்படாத” அகிலன் அவளை தேற்றினாலும் கவிதா அதே யோசனையில் இருக்க…

“அவ என் தங்கச்சி பேபி… இந்த அண்ணனுக்கு இருக்கற திறமைல பாதி கூடவா இருக்காது அவளுக்கு” என்று புன்னகையுடன் சொன்னவனை பார்த்து முறைத்தாள் கவிதா.

அதேநேரம்… டைனிங் டேபிளில் வெண்பாவிற்கு உணவு கொடுத்துக்கொண்டிருந்த ப்ரியாவின் மொபைல் மறுபடியும் அடித்தது.

அதில் தெரிந்த பெயரைப்பார்த்த வெண்பா ப்ரியா உணரும்முன் “அய்யா மாமா” என வந்த அழைப்பை ஏற்றாள்.

ப்ரியா திடுக்கிட்டு மொபைலை வாங்குவதற்குள், ஸ்பீக்கர்’ருக்கு மாற்றிய வெண்பா “மாமா… எப்படி இருக்கீங்க. உங்க பேச்சு கா. அத்த மட்டும் வந்துருக்காங்க. நீங்க ஏன் வரல” என ஆரம்பித்தாள்.

“வெண்பா குட்டி” அவன் குரல் கேட்டது.

அந்த நொடி அதை கேட்ட ப்ரியா கண்கள் சட்டென கலங்கியது. மனது படபடத்தது. உணவு தட்டை இறுக பற்றிக்கொண்டாள் கை நடுக்கம் அதிகமானதால்.

“சாரி குட்டி பொண்ணு. மாமா வேலைல மாட்டிட்டேன்” என அவன் பேசினான். ஆனால் எதுவும் ப்ரியாவின் காதுகளை அடையவில்லை.

இதுவரை அவன் அழைப்பை எடுக்கவில்லை. இப்போது அது எடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக வெண்பாவின் மூலம் அவன் பேச முற்படுவான்.

அதுவும் அழைப்பு ஸ்பீக்கர்’ரில் உள்ளது. அனைவருக்கும் தெரிந்துவிடும். ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கையில், அவள் நினைத்ததுபோல அவன் “அத்த இல்லையா வெண்பா” என கேட்டான்.

அதற்குள் அவசரமாக அடிவயிற்றில் இருந்து இரும ஆரம்பித்தாள் ப்ரியா.

சத்தம் கேட்டு கவிதாவும் அகிலனும் வர, ப்ரியாவிற்கு தண்ணீர் கொடுத்தாள் கவிதா. தலையை தட்டிக்கொடுத்தான் அகிலன்.

வெண்பா ப்ரியாவை பார்க்க, இதை அனைத்தையும் அழைப்பில் இருந்தவன் கேட்டுக்கொண்டிருந்தான்.

“என்னாச்சு ப்ரியா” கவிதா கேட்டவுடன், “தெரில அண்ணி. தண்ணி குடிச்சேன்… திடீர்னு இருமல் வந்துடுச்சு” கண்களில் நீர் கோர்க்க மூக்கை உறிந்துகொண்டு சொன்னாள் ப்ரியா.

அதற்குள் அடுப்பில் வைத்திருந்த ஏதோ கருகும் வாடையில் கவிதா சமையலறைக்குள் சென்றுவிட, அகிலனிடம் வெண்பாவிற்கு உணவு கொடுக்க சொல்லிவிட்டு ப்ரியா அங்கிருந்து நகரும்போது…

மொபைல் லைனில் அவன் இன்னமும் இருப்பது தெரிந்து அதை துண்டித்தாள்.

“ப்பா. பொய் சொன்னா தப்பு தானே” என வெண்பா கேள்வியாக அகிலனை பார்த்து கேட்க… “ஆமாடா பேபி. என்னாச்சு” என விசாரித்தான்.

“அத்த தண்ணியே குடிக்கல ப்பா. திடீர்ன்னு இருமினாங்க” என்றாள் யோசனையுடன் அந்த குட்டிப்பெண். அதை கேட்ட அகிலனின் புருவம் ஒரு நொடி சுருங்கி விரிந்தது.

“ஹ்ம்ம். ஏதோ ஞாபகத்துல சொல்லிருப்பாங்க பேபி. விடு” என்றவனுக்கு திடீரென ஏதோ தோன்ற “அம்மாக்கு பொய் சொன்னா பிடிக்காதில்லை. அம்மாட்ட சொல்லாத” என்றான்.

‘ஏற்கனவே ப்ரியா குறித்து கவலையில் இருக்கும் மனைவிக்கு இந்த விஷயம் தேவையில்லாமல் இன்னமும் வருத்தம் கொடுக்கும்’ என நினைத்து சொன்னான்.

அவனுக்கும் ப்ரியாவின் நடவடிக்கையில் மாற்றம் நன்றாகவே தெரிந்தது. சமாளிக்க முடியும் என்பதால் தான் ப்ரியா தன்னிடம் எதுவும் சொல்லவில்லை. அவளாக சொல்லும்வரை எதுவும் கேட்கக்கூடாது என நினைத்துக்கொண்டான்.

சில மணிநேரத்தில் அகிலன் அலுவலகத்திற்கு புறப்பட, ப்ரியா கவிதாவிடம் “அண்ணி. அம்மா எப்போ வருவாங்க? நீங்க போகலையா” என கேட்க…

“இன்னைக்கு சனிக்கிழமைல ப்ரியா… அவங்க வர கொஞ்சம் நேரம் ஆகும். நான் தீட்டு… ஆனா, நீ போவன்னு நினச்சேன்” என்றாள் கவிதா.

“அம்மா கூப்பிட்டாங்க அண்ணி. கொஞ்சம் தலைவலின்னு ரெண்டு நாளா மாத்திர போட்டுட்டு தூங்கறேன். எந்திரிக்க முடியுமோ முடியாதோன்னு போகல” என்று சொல்லும்போது தீடீரென ஒரு குறிப்பு மூளையில் பளிச்சிட்டது.

சட்டென அவள் முகம் மாறியது. பதட்டம் அடைத்தாள் ப்ரியா. கவிதாவிடம் எதுவும் காட்டிக்கொள்ளாமல், சகஜமாக இருப்பதுபோல காட்டிக்கொண்டு… மெதுவாக கடைக்கு செல்ல வேண்டும் என வெளியே புறப்பட்டாள்.

கிட்டத்தட்ட அதே பதட்டத்துடன் வீடு திரும்பியவள் அவசரமாக ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்தாள். ஒவ்வொரு நிமிடமும் ஒரு வித உணர்வுடன் கழிக்க… அந்த ப்ரெக்னன்சி கிட்’டில் மெதுவாக இரண்டாவது கோடு தெரிய ஆரம்பித்தது.

அதைப் பார்த்து சந்தோஷப்படுவதா… இல்லை வருத்தப்படுவதா… என்று புரியாமல் அதையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் ப்ரியா.

  •  
  •  
Subscribe
Notify of
2 Comments
Inline Feedbacks
View all comments
Pappu Divya
1 month ago

Aaha arambhamey terika vidareengaley preethi🥰👌👌👌

error: Content is protected !! ©All Rights Reserved
2
0
Would love your thoughts, please comment.x
()
x