தனிப்பெரும் துணையே – 29
தனிப்பெரும் துணையே – Final
செழியனை போனில் அழைத்த ப்ரியா, “என்கிட்ட நீ சொல்லவே இல்லல” கோபத்துடன் ஆரம்பித்தாள்.
“புரியல இசை? என்ன ஆச்சு?”
“சரி என் இடத்துக்கு இப்பொவே வா இளா”
“கொஞ்சம் வேலையா இருக்கேனே இசை. ஒரு அரைமணி நேரம்…”
“வர முடியுமா? முடியாதா?”
“வரவர உன் அட்டகாசம் தாங்கல, வரேன்” என்று போனை வைத்துவிட்டான்.
அடுத்த ஐந்து நிமிடங்களில், “எதுக்கு இவ்ளோ அவசரமா கூப்பிட்ட? என்ன நான் சொல்லல?” கேட்டபடி வந்தான் செழியன். அவளுக்கு வந்த சர்குலர் அவள் காட்ட, அவனுக்கும் ஆச்சரியம்.
Tedx என்ற நிகழ்ச்சி ஐஐடிB உடன் சேர்த்து நடத்தும் கருத்தரங்கில் “A road to success by an aspiring PhDian from ஐஐடிB” (வெற்றிக்கான பாதை) என்ற தலைப்பின் கீழ் பேச்சாளராக இளஞ்செழியன் ஸ்வாமிநாதன் என்ற பெயர் இருந்தது.
அதே ஆச்சரியத்துடன் அவன் ப்ரியாவை பார்க்க, “சூப்பர் இளா. ப்ரவ்ட் மொமெண்ட். உனக்கே தெரியாதா?” புன்னகையுடன் கேட்டாள் ப்ரியா. அவன் மறுப்பாக தலையசைத்தான்.
“ஓ..! இப்போ நான் இங்க ஸ்டாஃப் நீ ஸ்டூடென்ட்ல” என அவள் கிண்டல் செய்ய, அவன், “ஓ! அப்படியா மேம்” கூறியபடி அவள் டேபிளில் சாய்ந்துகொண்டு, “நான் ஒரு சப்ஜெக்ட்ல ரொம்ப வீக். ப்ச், சில டவுட்ஸ் இருக்கு. இங்க கேட்கலாமா இல்ல வீட்டுக்கு போய் கேட்கலாமா மேம்? இங்க எப்படியும் யாருமில்ல” என்று சுற்றி பார்த்துக்கொண்டு புருவம் உயர்த்தினான்.
“அடிங்க, ஓடிடு. லேப் ஸ்டூடென்ட்ஸ் அடுத்த அரைமணி நேரத்துல வந்துடுவாங்க” முறைக்க முயன்று, முடியாமல் போய், புன்னகையுடன் சொன்னாள்.
“நீங்கதானே மேம் கூப்பிட்டிங்க. இப்போ போன்னு சொல்றீங்களே. சரி ப்ரவுட் மொமெண்ட் சொன்னீங்களே… ஒரு கிஃப்ட் குடுங்க… போய்டறேன்” அவன் ரசனையுடன் கேட்க,
“ஸ்டூடென்ட்… ஒழுங்கா போய்டுங்க இல்ல உங்க ஹெச்ஓடிய கூப்பிட வேண்டியதா போய்டும்” அவள் போலியாக மிரட்டினாள்.
“சூப்பர் கூப்பிடுங்க. அவர்ட்டயே நியாயம் கேட்போம். கிஃப்ட் கிடைக்காம நான் இங்க இருந்து போகமாட்டேன்” அவனும் விடுவதாகயில்லை. படாதபாடு பட்டு அவனை அனுப்பிவைத்தாள் ப்ரியா, ‘எல்லாம் வீட்டில் பார்த்துக்கொள்ளலாம்’ என்று.
அவன் சென்று அவனுடைய ஹெச்ஓடியிடம் விசாரித்தான். அவர் கல்லூரி நிர்வாகம் எடுத்த முடிவு, அவனுடைய ப்ராஜக்ட் மற்றும் தீசிஸ் பார்த்து என்றார்.
அவன் முகத்தில் சின்ன புன்னகை. பதினெட்டு நிமிடங்கள் அவனுக்கு பேசுவதற்கான நேரம். அதில் எதுபற்றி பேசலாம் என முடிவெடுத்தான். அதை அவரிடம் பகிர்ந்துகொண்டான்.
முதலில் அவர் இதுகுறித்துப் பேசவேண்டுமா? என்றார். பின் அவனின் தன்னம்பிக்கையை பார்த்து சம்மதித்தார்.
அவன் மனதில் பேச்சை பதினேழு நிமிடங்களில் முடித்துவிடவேண்டும், என யோசித்து ஏதோ முடிவெடுத்ததுபோல, சின்னதாக புன்னகைத்துக்கொண்டான்.
அன்று இரவு ஸ்வாமிநாதன் வாக்கிங் செல்ல தயாராகும்போது சென்ற செழியன், அவரிடம் அதை பகிர்ந்துகொள்ள, அவர் முதலில் சந்தோஷப்பட்டாலும் பின் முகம் வாடியது.
“இவ்ளோ நல்லா படிக்கற பையன நான் தப்பா பேசிட்டேன். மன்னிச்சுடு செழியா” அவர் கண்கள் கலங்கியதும், அவரை தழுவிக்கொண்டு சமாதானம் செய்தான். பின் அவரும் வாக்கிங் சென்றுவிட்டார்.
அவன் ப்ரியாவை தேடிச்செல்ல, கண்ணாடி முன் நின்று தன் உடல் மாற்றங்களை பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
“ஹாய் மேம். வேர் இஸ் மை கிஃப்ட்?” கேட்டபடியே அவளை பின்னோடு, கொஞ்சம் கைகளை நீட்டி இடையை கட்டிக்கொண்டான்.
“ரொம்ப வெய்ட் போட்டுட்டேன்ல இளா. குண்டாயிட்டேன்… பாரு நீ எட்டி கட்டிப்பிடிக்கற” வருத்தத்துடன் கூறினாள்.
“அதை பத்தி உங்களுக்கு என்ன மேம் கவலை? கொஞ்சம் கஷ்டம்தான்… அதை நான் பார்த்துக்கறேன். நீங்க கிஃப்ட் மட்டும் குடுங்க போதும்” குனிந்து அவள் காதோரத்தில் உரசியபடி மெதுவாக சொன்னதும்… அவள் முறைக்க, அவள் கண்கள் காட்டிய அழகில், பின்னாலிருந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
‘இப்போவெல்லாம் கொஞ்சம் ரொமான்ஸ் அதிகம் ஆகுதே’ என்ற யோசனையில் அவளையும் அறியாமல் அவள் மேலுதட்டை கடித்து யோசிக்க, அதைப் பார்த்தவன், அவள் முன்னே சென்று நின்றான்.
“நிறைய தடவ சொல்லிட்டேன். இன்னைக்கு விடமாட்டேன்” கள்ளப்புன்னகையுடன் அவன் கண்கள் அவள் இதழ்களை பார்க்க, உடனே அவசரமாக அவள் விடுவித்துக்கொண்டாள்.
அதைப் பார்த்து ரசனையுடன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி, பெருவிரலால் அவள் கன்னத்தை வருடியவண்ணம், “நீ கிஃப்ட் குடுக்கற மாதிரி தெரியல, நானே எடுத்துக்க போறேன் இசை” அவன் சொன்னதும், அவள் கண்கள் படபடத்தது. கூடவே ஆவலும் தெரிந்ததோ!?
அதைப் பார்த்து மயக்கும் புன்னகையுடன் மென்மையாக அவளை முற்றுகையிட்டான். முதலில் ஆர்வத்துடன், ஆவலுடன் அவள் எதிர்கொண்டாலும், பின், முதன் முதலாக இருவருக்கும் நடுவில் நடக்கும் இயல்பான இதழொற்றல் என்பது நினைவிற்கு வர, தன்னையும் மீறி கண்கள் கலங்கியது.
‘அவனுக்குத் தெரியவேண்டாம்’ என கண்களை மூடிக்கொண்டாள். இருவரும் தங்களை மறந்து இருக்க, பக்கத்துவீட்டுப்பெண் “தீதி” என்ற அழைப்பில் அவசரமாக தன்னிலைக்கு வந்து விலகினார்.
“அப்பா கதவை சாத்தல போல” அசட்டு முகத்துடன் அவன் சொல்ல, அவள் முறைத்துக்கொண்டே புன்னகைத்தாள். அதற்குள் அந்த குட்டிப்பெண் அவர்கள் அறைக்குள் வந்துவிட்டாள்.
“மேம், மீதி லெசன் நைட் பார்த்துப்போம்” என அவன் கண்ணடிக்க, அவள், “போடா” என்றாள் கிண்டலுடன். “என்னது டா வா, இதுக்கும் சேர்த்து இருக்கு” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு சென்றுவிட்டான்.
நாட்கள் நகர, அந்த நிகழ்ச்சி நடக்கும் நாளும் வந்தது. அந்த பெரிய ஐஐடி பாம்பே ஆடிட்டோரியதில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேலான பார்வையாளர்கள். ப்ரியா கடைசி வரிசைக்கு முன்வரிசையில் உட்கார்ந்திருந்தாள்.
செழியன் ஹெச்ஓடியிடம் பேசிவிட்டு உள்ளே வந்தான். தூரத்தில் இருந்தாலும் அவள் கண்களுக்கு அவன் மட்டுமே தெரிந்தான். தெரியும் அவனைக் கண்கள் நிறைய நிறைத்துக்கொண்டாள்.
திருத்தமான உடை, நேர்த்தியான சிகை, தேவையான உடற்கட்டு, தீர்க்கமான பார்வை, அளவான புன்னகை, தென்னிந்திய நிறம், அந்த கூட்டத்தில் இருந்த பக்கா தமிழ் மகன்.
அவன் கண்கள் அவ்வப்போது அவள் எங்கே என பார்த்தது. ‘முன்னே உட்காரச்சொன்னேனே’ என்ற கோபத்தில் அவன்.
‘தன்னைதான் தேடுகிறான்’ என்று தெரிந்த ப்ரியா உடனே அவனை அழைத்து, “லாஸ்ட்ல இருக்கேன்” என்று அங்கிருந்து கையசைக்க, “உன்ன முன்னாடி வரச்சொன்னேன்ல வா” என்றான் அவளை முறைத்தவண்ணம்.
“வேணாம் இளா, எமோஷனல் ஆயிட்டேன்னா உடனே வெளிய போக இதுதான் ஒகே வா இருக்கும். புரிஞ்சிக்கோ ப்ளீஸ்” அவள் கெஞ்ச, இதற்கு மேல் கோபத்தைக் காட்டமுடியுமா அவனால். கொஞ்சம் ஏமாற்றத்துடன் சரி என்றுவிட்டான்.
ப்ரியா அப்போதுதான் அங்கு டாக்டர் உள்ளதையும் பார்த்தாள். சந்தேகத்துடன், ‘இவர் பெயர் இல்லையே பட்டியலில் என்று யோசிக்க, புரிந்துவிட்டது, அவன் எதை குறித்துப் பேசப்போகிறான் என்று.
அவனுக்கு இல்லாத நடுக்கம் அவளுக்கு தொற்றியது.
‘இது பேசவேண்டுமா?’ என்ற எண்ணம் ஒரு பக்கம். ‘பேச முன்வந்துள்ளான் என்றால், அது அவனிடத்தில் எவ்வளவு பெரிய மாற்றம்!’ என்ற எண்ணம் இன்னொரு பக்கம்.
சில பேச்சாளர்களுக்கு பின், செழியன் அழைக்கப்பட்டான். ஆங்கிலத்தில் அவன் உரை ஆரம்பித்தது.
“குட் மார்னிங் ஆல். ரொம்ப சந்தோஷமா இருக்கு, இந்த நிகழ்ச்சில நானும் ஒரு பார்ட்னு நினைக்கறப்ப, இங்க உள்ள யாருக்கும் அதிகம் என்னை தெரியாது. சோ என்னை பத்தி முதல்ல நான் சொல்றேன்” என்று அவனைப் பற்றியும், அவன் படிப்பை பற்றியும், அவன் ப்ராஜக்ட் பற்றியும் பேசினான்.
பின், ஐஐடி பாம்பே மற்றும் அதன் ரிசோர்ஸ் (resource), தன்னுடைய கல்லூரி வாழ்வில் எவ்வளவு முடிக்கியமான பங்கு வகித்தது என்பதை பற்றி பேசினான்.
ஆசிரியர்கள், ஹெச்ஓடி அவர்களை பற்றி பேசினான். நன்றி கூறினான். அனைவரும் அமைதியாக கேட்டனர். ப்ரியா புன்னகையுடன் அவனைப் பார்த்திருந்தாள். ஏழு நிமிடங்கள் முடிந்தது.
அடுத்து, ஒரு நொடி தன்னை சமநிலை படுத்திக்கொண்டு, “நான் ஐஐடி பாம்பே வந்ததுக்கு முக்கிய காரணம் என்னோட அப்பா. எனக்கு தேவையான ஆரம்பக்கல்வி அவர் தந்தார். தேங்க்ஸ் டு ஹிம். பட், இங்க படிக்க வர்றதுக்கு அதுமட்டும் போதுமா? ஒரு உந்துதல் வேண்டாம்… இதெல்லாம் நடக்கறதுக்கு? எஸ், எனக்கும் அப்படி ஒரு உந்துதல் இருந்தது” இதை சொன்னபோது ப்ரியாவின் இதயம் தடதடத்தது.
“அந்த உந்துதல் என்னனு அப்புறம் பார்க்கலாம். சோ, இதுவரை நான் பேசினதெல்லாம், பாசிட்டிவ்ஸ், ஹாப்பி மொமெண்ட்ஸ்னு சொல்லலாம். வாழ்க்கைப் பயணத்துல ஒரு ஸ்மூத் ட்ரிப். பட், தடைகள் இல்லாம வெற்றிக்கான பாதை இருக்க முடியுமா? வேகத்தடைகள் இருக்குமே”
“எனக்கும் அதுபோல தடைகள் சிலது இருந்துச்சு. அதுல ஒரு ஸ்பீட் ப்ரேக்கர் ரொம்ப பெருசு. அதை கடக்க முடியாதுன்னு நினச்சு அப்படியே… அங்கேயே முடங்கிட்டேன். அந்த வேகத்தடையோட பேரு பைபோலார் டிசார்டர்” என்றதும் அங்கிருந்த அனைவரின் முகத்திலும் ஒரு அதிர்வு, குழப்பம்.
ப்ரியா அமைதியாக வெளியே சென்றுவிட்டாள். கண்டிப்பாக அவனைப் பார்க்கமுடியாது என்று நினைத்து! இருந்தும் அவனை விட்டு தள்ளிச் செல்ல மனமில்லாமல், வெளியில் இருந்த இருக்கையில் முகத்தை மூடியபடி உட்கார்ந்தாள்.
அவள் வெளியே செல்வதை பார்த்தபடி பேசினான் செழியன்.
“பைபோலார்… எந்த அளவுக்குனு கேட்டீங்கன்னா, என் வாழ்க்கையவே முடிச்சுக்கற அளவுக்கு” அவன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டிக்கொள்ளாமல் பேசினான். ஆனால் அங்கிருந்தவர்கள் அதிர்ந்தனர்.
“கொஞ்ச நாள் என்னன்னே புரியாத ஒரு மனநிலையோடு இருந்தேன். பட் நான் சொன்னேனே, அந்த உந்துதல்… அது என்னை எந்த தவறான காரியமும் செய்யவிடல.
அப்போதான் நம்ம ஐஐடி ஹாஸ்பிடல் டாக்டர் சர்மாவை சந்திச்சேன். அவர் இல்லைனா, இப்போ நான் இந்த நிலமைல இருந்திருப்பேனானு தெரியல. பைபோலார் பற்றி நான் சொல்றத விட அவர் சொல்றது இன்னமும் தெளிவா இருக்கும்” என்றவன் மருத்துவரை அழைத்தான்.
அவர் வந்ததும் இருவரும் தழுவிக்கொண்டபின், அவர் பேச ஆரம்பித்தார். பைபோலார் குறித்து ப்ரியாவிடம் சொன்ன விஷயங்களை சில நிமிடங்கள் பேசினார்.
“இந்த கோளாறு இருக்குனு பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்ளோ சீக்கிரம் தெரியவராது. கூட இருக்குறவங்களுக்குதான் மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சம் தெரியவரும். பட், அந்த மாற்றங்கள் பைபோலார்னால இருக்குமோனு அதிகமா யாரும் யோசிக்க மாட்டாங்க.
பிகாஸ், இதை பற்றி அதிக விழிப்புணர்வு நம்ம மக்களுக்கு இல்லை. எந்த ஒரு எக்ஸ்ட்ரீம் மாற்றமும் உடனே வருதுன்னா, அது நமக்கு ஒரு எச்சரிக்கை (alarm), அது அடிக்கடி வருதுன்னா, கண்டிப்பா அது என்னனு பார்க்கணும்.
அப்புறம் பைபோலார்னா கண்டிப்பா தற்கொலை பண்ணிப்பாங்க இல்லை சைக்கோவா மாறிடுவாங்க, அதுக்கு தீர்வே இல்ல அப்படினு ஒரு எண்ணம் நமக்குள்ள நிறைய பேருக்கு இருக்கு.
ஏன், வர்ற சில படங்கள் கூட அதுபோலதான் வருது. அது அப்படி கிடையாது. இதுக்கும் ட்ரீட்மெண்ட் இருக்கு. ட்ரீட்மெண்ட்ல இருந்து வெளிய வந்தவங்க நிறைய பேர் நல்லா… சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காங்க. அதுக்கு லைவ் எக்ஸாம்பில் இளன்”
“இளன் எங்ககிட்ட வந்தப்ப, தற்கொலை எண்ணங்கள் வருதுன்னு சொன்னார். எஸ், அதுபோல எண்ணங்கள் ரொம்ப ஆபத்தானது. உடனே ட்ரீட் பண்ணணும். ட்ரீட்மெண்ட்கு கொஞ்ச காலம் எடுக்கும். அதுபோல நாங்க அவருக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தோம்.
பட், இவ்ளோ சீக்கிரம் அவர் சரி ஆயிடுவார்னு நாங்களும் நினைக்கல. ரொம்ப ரொம்ப ரேர் கேஸ். இதுக்கு முக்கிய காரணம். அவரோட மனஉறுதி, அன்ட் அவரோட சப்போர்ட் சிஸ்டம் (சுற்றி இருக்கும் குடும்பத்தினரின் ஆதரவு) அன்பான மனைவி, அழகான குடும்பம்… அதுதான் அவரை இவ்வளவு சீக்கிரம் மீட்டுருக்கு. என்னோட பங்களிப்பு ரொம்ப ரொம்ப கம்மிதான். I wish him for a bright future” மனமார வாழ்த்தினார் மருத்துவர் அவனை தழுவிக்கொண்டு.
ப்ரியா முகத்தை மூடி உட்கார்ந்திருந்தாலும் கண்களில் கண்ணீர் நிற்கவில்லை.
உள்ளே செழியன் மணியை பார்த்தான். 90 நொடிகள் மீதம் இருந்தது. அவன் தொடர்ந்தான்,
“தற்கொலை, நம்ம வாழ்க்கையை முடிச்சுக்கணும்னு நினைக்கறப்ப, நம்மமேல உயிரையே வச்சுருக்கவங்கள ஒரே ஒரு செகண்ட் நினைச்சுப்பாருங்க. அந்த தப்பான எண்ணம் உங்ககிட்ட இருந்து கண்டிப்பா போய்டும். ஏன்னா, நம்ம போய்ட்டா, அவங்களுக்கு வாழ்க்கை முழுக்க அது ஒரு ஆறாத வடு. நம்ம உயிர் சில நிமிஷத்துல பிரிஞ்சிடும்… நம்மள நினச்சு நினச்சு அவங்க தினமும் உயிர்வதை அனுபவிப்பாங்க… அதை நாம அவங்களுக்குத் தரணுமா?
சோ இப்போ ஒரு இன்சைட் கிடைச்சுருக்கும் உங்களுக்கு. என்னோட வாழ்க்கைல இருந்த பெரிய வேகத்தடை பற்றி. அதை கடக்க ஒரு உந்துதல் இருந்துட்டே இருந்துச்சுனு சொன்னேன் இல்லையா, அதே உந்துதல்தான் என்னை மேலும் மேலும் முன்னேற வச்சு, மேல படிக்க தூண்டியது. அதே உந்துதல்தான், இப்போ என்னை இங்க நிற்கவச்சுருக்கு, இவ்ளோ பேச வச்சுருக்கு. அந்த உந்துதல் இல்லைனா, நான் இப்போ இல்ல. என்னனு நீங்க கெஸ் பண்ணிருப்பீங்க.
எஸ், அது வேற யாருமில்லை… மை பெட்டர்ஹாஃப் (better half), மை மோட்டிவேஷன்… மை லைஃப்லைன்(lifeline), இங்கதான் இப்போ அவங்க ஸ்டாஃப்(staff)” என்றதும் அரங்கை சுற்றி பார்த்தனர் பார்வையாளர்கள். யார் என்று பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம்.
இப்போது ப்ரியாவின் இதயம் நின்று துடித்தது, ‘என்ன பேசிக்கொண்டிருக்கிறான்’ என்று நினைத்து!
“எங்களோடது லவ் மேரேஜ். பட் இதுவரைக்கும் அவகிட்ட நான் ப்ரொபோஸ் கூட பண்ணினதில்ல” என்றதும் ப்ரியாவிற்கு எங்கேயாவது ஓடிவிடுவோமா என்று ஆகிவிட்டது, ‘எதையாவது சொல்லிவிடுவானோ’ என்று!
“இப்போ ப்ரொபோஸ், ஹ்ம்ம்” என்று அவன் நிறுத்த, அரங்கம் பரபரத்தது. அனைவரும் ஆவலுடன் பார்த்திருக்க, ப்ரியாவிற்கு சோகக்கண்ணீர் போய்… படபடப்புடன் கூடிய ஆனந்தகண்ணீர் வரப்பார்க்கிறதோ?!
“இப்போவும் ப்ரொபோஸ் பண்ண மாட்டேன். என்னோட காதலை வெறும் மூனு வார்த்தைல கம்ப்ரெஸ் பண்ண விரும்பல. அது ரொம்ப பெருசு” என்றவன்,
“என் வாழ்க்கையோட இந்த பயணம் முடியறவரை, என்னோட காதலை அவங்களுக்கு உணர்த்திட்டே இருக்கணும், இருப்பேன். இது வெற்றி பயணமான்னு தெரியல, பட் இதோட முதலிலும் முடிவிலும் கண்டிப்பா அவங்க இருப்பாங்க” அவன் முடிக்க, கரகோஷம் ஆர்ப்பரிக்க, மணி அடிக்க, சரியாக இருந்தது. நன்றி கூறிவிட்டு கீழிறங்கினான்.
ப்ரியா பல உணர்ச்சிகளின் பிடியில் இருந்தாள். ‘இதைவிட ஒருவன் தன் மனதில் உள்ளதை எப்படி சொல்லமுடியும்?’ கண்களில் கண்ணீர் வந்துகொண்டிருக்க, அவள் பக்கத்தில் செருமிக்கொண்டு உட்கார்ந்தான் செழியன்.
சிவந்த கண்களுடன் அவள் பார்க்க, புன்னகையுடன் அவனின் அன்பான முகம்.
அவள் முகத்தை அவன் பார்த்ததும், தவிப்புடன், “இதுக்குமா அழுவாங்க? போ இசை” என்றதும், அவள் வயிற்றில் திடீரென பல அசைவுகள்.
உடனே அவளுக்கு தோன்றியது, அவன் உணர வேண்டும் என்பதுதான். அவன் கையை பற்றி வயிற்றுக்கு அருகில் எடுத்துச்செல்லும்போது, சட்டென வலி அதிகரித்தது.
அவள், அவன் கையை பற்றியவுடன், என்னவோ என செழியன் பார்த்திருக்க, அவள் முகத்தில் தெரிந்த வலியை உணர்ந்தவன், “இசை என்னாச்சு” பதட்டத்துடன் கேட்டான்.
“இளா ரொம்ப பெயினா இருக்கு” என்றாள் தாங்க முடியாமல். அவன் பதறிக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உடனே பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.
***
‘உடனே அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை எடுக்க வேண்டும், இல்லையேல் மூவருக்குமே ஆபத்து’ என்றார் மருத்துவர். செழியன் சம்மதித்தான்.
அதற்குள் ஸ்வாமிநாதன் சென்னைக்குத் தகவல் தந்தார். அனைவரும், அடுத்து மும்பைக்கு வரும் விமானத்தில் புறப்பட்டனர்.
ப்ரியா மிகுந்த பயத்தில் இருக்க, செழியன் அதைவிட பயத்தில் இருந்தான்.
“இளா… என் கூடவே இரு இளா” அவள் பயத்துடன் கேட்க, அவன் மறுப்பானா? சரியென்று தியேட்டருள் அவனும் சென்றான்.
ப்ரியாவிற்கு ஒவ்வொன்றாக மருத்துவர்கள் செய்ய, செழியனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மயக்க ஊசி, பின், இரண்டு குழந்தைகளை வெளியில் எடுக்க அவள் உடம்பில் கத்தி வைக்கப்பட்டது. அவன் உயிர் கிட்டத்தட்ட நின்றுவிட்டது.
ப்ரியா மயக்கத்திலேயே இருந்தாள்.
சில நிமிடங்கள் கழித்து பெண் என்றபடி முதல் குழந்தையை வெளியில் எடுத்தனர். நர்ஸ் செழியனிடம் காட்ட, அவன் கண்களில் கட்டுக்கடங்காத கண்ணீர்.
அடுத்த சில நிமிடங்களில் ஆண் என்றபடி இன்னொரு குழந்தையை காட்டினர். அவனை தொடவிடவில்லை. உடனே NICU எடுத்துச்சென்றார்கள். குழந்தைகள் முப்பது வாரத்தில் பிறந்ததால்.
பிரசவத்தின் போது ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட, அதையும் கவனமாக கையாண்டார்கள் மருத்துவர்கள். ப்ரியா மயக்கத்திலேயே இருந்தாள். இன்னமும் ஒரு நாள் ஆகும் அவள் கண் விழிக்க என்றனர்.
துவண்டு போயிருந்த அவள் முகத்தைப் பார்த்தபடி வெளியே வந்தான் செழியன். அவனை தேற்றினார் ஸ்வாமிநாதன்.
அப்போது அவனை அழைத்த மருத்துவர், ப்ரியாவுக்கும், குழந்தைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. கொஞ்சம் கவனத்தோடு பார்த்துக்கொண்டால் போதும். குழந்தைகள் இன்னமும் குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் NICU இருக்க வேண்டும் என்றார்.
ப்ரியாவிற்கு கருப்பை வலுவற்று உள்ளது, இந்த கர்ப்பமே எதிர்பாராதவிதமாக நடந்ததால் குடும்பக்கட்டுப்பாடு செய்வது நல்லது என்றார். செழியன் சம்மதம் சொல்லிவிட்டு வந்தான்.
சில மணி நேரங்களில் சென்னையில் இருந்து அனைவரும் வந்தனர். குழந்தைகளை வெளியில் இருந்து பார்த்தனர். லட்சுமிக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கியது.
‘சீமந்தம் செய்யும் முன் பிரசவம் முடிந்ததே’ என்ற ஒரு சின்ன வருத்தம் மட்டுமே.
செழியன் அவர்களிடம் மருத்துவரும், அவனும் பேசியதை சொன்னான். ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒவ்வொரு உணர்வு. அது வெளிப்படையாக அவர்கள் முகத்தில் தெரிந்தது.
ஆனால் அதெல்லாம் பார்க்கும் நிலையில் செழியன் இல்லை. அவனுக்கு ப்ரியாவை கண் விழித்தவுடன் பார்க்க வேண்டும், அவ்வளவே!
ப்ரியா கண் விழிக்க அடுத்த நாள் ஆனது. லட்சுமி அவளுடன் இருக்க, முழித்ததும் அவள் தேடியது செழியனைத்தான். அவன் அங்கு இல்லை.
எங்கே என்று கேட்டதற்கு இப்போதுதான் சென்றான். வந்துவிடுவான் என்றார் லட்சுமி.
பின் குழந்தைகளை பற்றி கேட்டாள். கொஞ்சம் மயக்கத்திலேயே இருந்ததால் அவ்வப்போது முழிப்பதும் மயங்குவதும் என்று இருந்தாள்.
அடுத்த நாள் காலை மருத்துவர் அவளை பரிசோதித்தார். அப்போது விழித்த ப்ரியா, குழந்தைகளை பற்றி முதலில் கேட்டாள். பின், “டாக்டர். நீங்க முன்னாடியே ஃபேமிலி ப்ளானிங் பத்தி சொன்னீங்கல்ல. இப்பவே அதை முடிச்சிடலாமே. ஒரே வலியோட போயிடும்” என்றாள் வலுவற்ற குரலில்.
அவர் புன்னகைத்து “அதுதான் முடிஞ்சதே” என்றார். அதற்கு ப்ரியா, “ஓ! Csec பண்ணும்போதே, இதையும் பண்ணிட்டீ…” என்று முடிக்கும் முன் அவர் மறுப்பாக தலையசைத்தார்.
ப்ரியா புருவங்கள் முடிச்சிட்டு பார்க்க, அவள் வயிற்றை காட்டி, “ஆல்ரெடி உங்களுக்கு நிறைய கஷ்டம் குடுத்தாச்சாம். போதுமாம், இதுக்கு மேல உங்களை கஷ்டப்படுத்தி பார்க்க முடியதாம்… அதுனால நேத்தே உங்க கணவன் வாசெக்டமி பண்ணிட்டாரு” என்றார் அவளை பரிசோதித்துக்கொண்டே.
வாசெக்டமி (Vasectomy) என்பது ஆண்கள் செய்துகொள்ளும் குடும்பக்கட்டுப்பாடு.
ப்ரியா மனதில் ஒரு சின்ன அழுத்தம் அவனின் இந்த செயலை நினைத்து. பின் வலியில் கூட சின்ன புன்னகை. அந்த புன்னகையில் கூட கண்கள் கலங்கியது.
“எங்க டாக்டர் அவன்?” அதே கலங்கிய கண்களுடன் கேட்க, சரியாக உள்ளே வந்தான் செழியன் மெதுவாக.
“இதோ” என்றவர், அவர்களுக்குத் தனிமை கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிட, “இசை… இப்போ எப்படி இருக்க, பரவால்லயா?” என்றபடி அவள் வயிற்றை மிருதுவாக வருடினான்.
“என்கிட்ட கூட சொல்லாம ஏன்டா இப்படி பண்ண?” அவள் கண்களில் கண்ணீருடன் முறைத்துக் கொண்டே கேட்க, அவன் புரியாமல் பார்த்தான்.
பின் அதன் பொருள் புரிந்து, புன்னகையுடன், அவள் முகத்தின் அருகே சென்று, “போதும் நீ பட்டபாடு. என்னால தாங்கிக்க முடியல இசை. யார் பண்ணிட்டா என்ன” என்று சற்று நிறுத்தி, “டி” என்றான் அவள் நெற்றியில் நெற்றிமுட்டி கலங்கிய கண்களுடன்.
அவள் ‘டா’ என்று அழைத்ததற்கு ‘டி’ என்றான் எப்பொழுதும்போல் இடைவெளி விட்டு. இப்போது இருவர் கண்களிலும் கண்ணீர்! இதழ்களில் புன்னகை!
“பசங்கள பார்த்தயா இளா?” அவள் ஆசையுடன் கேட்க, “வெளிய எடுத்தவுடனே என்கிட்டதான் காட்டினாங்க… தேங்க்ஸ் இசை” நன்றியுடன் கூடிய பெருமிதத்துடன் சொன்னான்.
“மொதல்ல இனியா” அவன் ஆரம்பிக்க, “அடுத்து இன்பா வா!” புன்னகையுடன் அவள் முடித்தாள்.
அதேநேரம் ப்ரியா கண் விழித்தது தெரிந்து அனைவரும் உள்ளே வந்தனர். அங்கு அழகிய உணர்வுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
அடுத்த மூன்று வாரங்களில் ப்ரியாவின் உடல் நிலை ஓரளவு தேறி இருக்க, குழந்தைகள் NICU வில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
ப்ரியா பக்கத்தில் குழந்தைகள், குழந்தைகளின் பாதம் பக்கத்தில் செழியன் மூவரையும் பார்த்தவண்ணம்!
“என் மேல கோபம் இருக்காதில்லை இசை… பசங்களுக்கு” கண்கள் கலங்கி அவன் கேட்டான். அவன் மனதில், ‘கலைத்து விடு’ என்று சொன்னது நெருடிக்கொண்டே இருந்தது.
“லூசு மாதிரி பேசா…” என்று அவள் முடிக்கும் முன், இன்பா செழியனின் ஒரு கன்னத்தில் காலால் உதைக்க, இனியா மற்றொரு கன்னத்தில் உதைத்தாள். தற்செயலாக நடந்தாலும், அது இருவரையும் அசைத்தது.
“ரொம்ப பேசினா, உனக்கு இந்த ட்ரீட்மென்ட்தான்” நெகிழ்ச்சியுடன் ப்ரியா சொல்ல, கலங்கிய கண்களுடன், குழந்தைகளின் பாதத்தில் முகம் புதைத்தான் செழியன்!
இளாவின் இன்னிசையாக அவள்! இசையின் இளந்தென்றலாக அவன்!
அவர்கள் வாழ்வின் அடுத்த அத்தியாயம் இன்பத்துடனும், இனிமையுடனும் ஆரம்பித்தது!
***நன்றி சுபம்***
பின் குறிப்பு :
இந்தியா, தென் ஆசிய அளவில் எதில் முன்னிலையில் இருக்கிறதோ, இல்லையோ தற்போது தற்கொலை பட்டியலில் முன்னிடம் வகிக்கிறது (சமீபத்திய WHO கருத்துக்கணிப்பு).
இந்திய மக்கள் தொகையில் 6.5% தீவிர மன உளைச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் வெளிப்பாட்டால் எடுக்கப்படும் அதீத முடிவு தற்கொலை.
ஒரு தினத்தில் இந்தியாவில் 381 பேர் தற்கொலை முடிவு (அதில் மனஅழுத்தமும் அடக்கம்) எடுக்கிறார்கள் என்று WHO கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
மன அழுத்தத்துடன் கூடவே தனித்து வாழ்பவர்களின் நிலை மிகவும் ஆபத்தானது. அதுபோல நம்மிடையே இருப்பவர்களிடம், நம்மால் முடிந்தவரை, அவர்கள் பேசாவிட்டாலும் நாமே முன்வந்து பேசுவோம்! மாற்றத்தை உருவாக்குவோம்!
மன அழுத்தம் (அதில் முக்கியமாக பைபோலார்), அதன் விளைவுகள், அதிலிருந்து எப்படி வெளிவருவது, என்ற பல தகவல்கள் கீழுள்ள தளங்களில் இருந்து அறிந்துகொள்ளலாம்.
https://www.who.int/india/health-topics/mental-health
https://www.nimh.nih.gov
https://www.ncbi.nlm.nih.gov
https://www.healthline.com
https://www.webmd.com
https://www.medscape.com
https://ibpf.org
https://www.bphope.com
https://www.yourhealthinmind.org
Tamil Nadu Helpline numbers:
Sneha – 044- 24640050
State’s health helpline – 104
Fortis Stress Helpline: +918376804102