Preethi S Karthikஉயிர்க்கூட்டின் சரிபாதி உனதே

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 16

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 16:

அந்த காலை நேரம்… திலீப் பேசி சென்ற பின் ஒரு வித திகைப்பிலிருந்தாள் பவித்ரா. அதே மனநிலையில் அவள் இருக்க, மறுபடியும் ஏதோ ஒரு வேலையாக அறைக்குள் வந்த திலிப் அவள் அப்படியே நிற்பதைப் பார்த்து… 

“கெட் டுகெதர்’க்கு இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு. சீக்கிரம் கிளம்பணும்னு சொன்னேன்” என்றான். குரலில் அதட்டலோ இல்லை ஆர்வமோ… இல்லை ஆரவாரமோ… எதுவும் இல்லை. உணர்வுகள் வெளிப்படாத பேச்சு. 

அவனின் இந்த இயந்திர குரல் ஒருவித இறுக்கத்தை அவளுள் ஏற்படுத்தினாலும், அமைதியாக உடுத்த புடவையை எடுத்தாள். அவனும் வெளியே சென்றுவிட்டான். 

அவர்கள் மகன் தருண் ஏற்கனவே தயாராகி இருக்க, திலீப் சொல்லி சென்றபின் புடவையைக் கட்டிக்கொண்டு தயாராகி இருந்தாள் பவித்ரா. அவள் வெளியே வந்தபோது அங்கே புகைந்தபடி அமர்ந்திருந்தார் திலீப்பின் அம்மா ஜானகி.

மகன் இதுபோல மனைவியை வெளியே அழைத்துச்செல்வது அவருக்கு ஏனோ பிடிக்கவே இல்லை. எங்கே மகன் தன்னை ஒதுக்க ஆரம்பித்துவிட்டானோ என்ற எண்ணம் தலைதூக்கியது. 

அதன் வெளிப்பாடாக, “நல்லா மினிக்கிட்டு கிளம்பியாச்சு. யாரு சமைப்பா? கீர்த்தி வேற மதியம் வரேன்னு சொன்னா” என வேண்டுமென்றே பவித்ராவை மட்டும் சாடினார். 

“மதிய சமையல் செய்து வச்சுட்டேன் அத்த. சூடு மட்டும் பண்ணா போதும்” அவளின் பதிலுக்கு அவர் வாயைத் திறக்கும்முன், அங்கே வந்த திலீப்… “கிளம்பலாமா?” என்றவன் தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு கதவை நோக்கி சென்றுவிட, வேறுவழியில்லாமல் ஜானகி அமைதியாக இருக்க வேண்டியதாயிற்று.  

இவர்கள் இருவரும் காரில் ஏறியதிலிருந்து எதுவும் பேசவில்லை. எப்போதும் பின்பற்றும் மௌனத்தையே கடைப்பிடித்தார்கள். தருண் தான் இருவரிடமும் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். 

அவளுக்கு செல்லவே விருப்பமில்லை இருந்தும் மறுக்கும் அளவிற்கு அவனிடம் நெருக்கமும் இருந்ததில்லை. ஆகையால் கடுகடுப்புடன் இருக்க, அவனுக்கோ அங்கே நடக்கவிருக்கும் நிகழ்வு பற்றிய எண்ணம்தான். 

சில நிமிடங்களில் அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு வந்தடைந்தனர். இதுவரை இதுபோல எந்த ஒரு நிகழ்விற்கும் சென்றிருக்காததால் அவளுள் லேசாக தயக்கம் இருந்தாலும்… அமைதியாக தருணை அழைத்துக்கொண்டு திலீப்பை பின்தொடர்ந்தாள் பவித்ரா. 

உள்ளே சென்ற நொடி… அங்கிருந்த மக்கள், அவர்களின் நாகரிகம் அதையெல்லாம் பார்த்தபோதுதான்… தான் திலீப் ஸ்ரீதரன் என்ற மருத்துவனின் மனைவி என்பதை முதல்முறை உணர்ந்தாள் பவித்ரா. 

திலீப் வருவதை பார்த்ததும் அவனுடன் படித்த சிலர் ஆரவாரத்துடன் அவனருகில் வர, திலீப் சகஜமாகப் பேசி பவித்ராவை அவர்களிடம் அறிமுகம் செய்தான். கொஞ்சம் சிரத்தை எடுத்து அவள் புன்னகைத்தாள்.

அவன் படித்த கல்லூரியில் இதுவரை பயின்ற பழைய மாணவர்கள் ஒன்று திரண்டு நடத்தும் மறு சந்திப்பு எனப்படும் ரியூனியன். குடும்பம் சகிதமாக பலர் வந்திருந்தார்கள். திலீப் இன்னமும் அதே கல்லூரி மருத்துவமனையில் தான் இருக்கிறான். 

தருண் அங்கே வைக்கப்பட்டிருந்த உள் விளையாட்டு பூங்காவை பார்த்ததும், அவன் வயதை ஒத்த பிள்ளைகளை சந்தித்ததும்… பவித்ரா, திலீப்பிடம் சொல்லிவிட்டு விளையாடச் சென்றுவிட்டான்.  

அங்கு வந்திருந்த வெகு சிலர் தனியாகவும், ஜோடியாகவும்… பலர் மருத்துவ தம்பதிகளாகவும் வந்திருக்க… பவித்ராவிற்கு ஏதோ ஒரு ஒட்டாத உணர்வு. பிஏ இளங்கலை பயின்றிருந்தவளுக்கு அவர்களுடன் சகஜமாகப் பழக லேசான தயக்கம் இருந்தாலும் அவள் முகம் அதை வெளிக்காட்டவில்லை. 

ஆனால் அவள் அறியவில்லை, அங்கிருந்தவர்களுக்கு சற்றும் சளைக்காமல் அவர்களுக்கு நிகராக அவள் இருந்தாள்… தோற்றத்திலும் சரி, நடவடிக்கையிலும் சரி! 

திலீப் வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருக்க, அவனைப் பார்த்தாள். இதுவரை அவள் கண்களுக்கு அவன் மருத்துவனாகத் தெரிந்ததே இல்லை. மிகவும் சாதாரண குடும்ப பின்னணி அவனுடையது என்பதால் அவனும் பெரிதாகக் காட்டிக்கொண்டதில்லை. அந்த படிப்பு மற்றும் வேலைக்கே உரிய ஆளுமையை அவனிடத்தில் இப்போது கண்டாள். 

அப்போது திலீப்புடன் படித்த ஒரு சில பெண்கள் பவித்ராவிடம் பேச வர, திலீப் கொஞ்சம் கவனத்துடன்… இதுபோல நடக்கும் என எண்ணி, அவளுடனே தான் இருந்தான். அப்பெண்கள் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்கள். பதிலுக்கு அவன் ஏதோ சொல்லவரும்முன், பவித்ரா பேசினாள். 

திருத்தமாக, தெளிவாக ஆங்கிலத்தில் அவர்களுடன் அமைதியாக அதே சமயம் அழுத்தம் திருத்தமாகப் பேசினாள். பவித்ராவிடம் அவன் இதை எதிர்பார்க்கவில்லை. அவளை பற்றி ஏதாவது தெரிந்திருந்தால் தானே…  

ஏதோ படித்திருக்கிறாள், அதுவும் ஒரு டவுன் கல்லூரியில் என கேள்விப்பட்டிருக்கிறான். அதற்கு மேல் தெரிந்துகொள்ள முயன்றதில்லை. முதல்முறை அவள் பேசும்போது அவளிடம் ஒரு நிமிர்வைக் கண்டான். லேசாக பிடித்திருந்தது. அவ்வப்போது அவன் கண்கள் அவளிடம் ஓரிரு நொடிகள் நிலைத்திருக்க, அதை எல்லாம் பாராமல் பேசிக்கொண்டிருந்தாள் பவித்ரா. 

புன்னகை பூக்கக் காத்திருந்த நொடி, அவன் முன் தோன்றிய முகத்தைப் பார்த்தவுடன் புன்னகை விரட்டிவிடப்பட்ட உணர்வு. லேசாக எழுந்த மூச்சு தடுமாற்றத்தை கடினப்பட்டு சீராக்க முயன்றான். 

முயற்சி தோல்வியில் முடிந்ததுபோல இதயம் தாறுமாறாகத் துடித்தது. அனிச்சையாக அவன் கை பவித்ராவின் கையை இறுக பற்றிக்கொண்டது. அதில் கவனத்தை அவன் புறம் திருப்பிய பவித்ரா, அவன் பார்வையின் திசையில் கண்களைத் திருப்பினாள்.

அங்கே ஒரு பெண். அவளின் உடல்மொழியே காட்டியது அவளும் ஒரு மருத்துவர் என. அப்பெண் திலீப்பிடம் வர, புன்னகையை வரவழைத்து… “ஹை ரேகா” என்றான். அதற்கு மேல் பேச முடியவில்லை. 

அவள் முகம் கடுமையைக் காட்டுகிறதா இல்லை இன்முகமாய் இருக்கிறதா என்பதை உணர முடியாத முகபாவத்துடன், “எப்படி இருக்கீங்க திலீப்?” என்றவள் கண்கள் தானாக பவித்ராவை அளவிட்டது. 

திலீப் மேலும் கீழுமாகத் தலையசைத்தான். இதுவரை தன்னுடன் படித்தவர்களை பவித்ராவுக்கு அறிமுகம் செய்தவன் ரேகாவை செய்யவில்லை. சரியாக அதைப் புரிந்துகொண்டாள் பவித்ரா. இப்போது ரேகாவை கணக்கிட்டது பவித்ராவின் கண்கள். 

அழகும் ஆளுமையும் கலந்த கலவையாக பவித்ராவுக்கு தெரிந்தாள் ரேகா. இன்னும் ஓரிரு வார்த்தைகள் ரேகாவும் திலீப்பும் பேசும்முன், ரேகாவுடன் படித்தவர்கள் அவளை பார்த்ததும் குதூகலித்து இழுத்துசென்றுவிட்டனர். 

எதற்காக திலீப் தன் கையை பிடித்தான் என்பதை பவித்ரா யூகிக்க முற்பட்டபோது, அவள் மனதில் தோன்றிய பதில் உவப்பாக இல்லாததால், நாசுக்காகக் கையை அவனிடம் இருந்து பிரித்துக்கொண்டாள். இதுவரை ரேகாவின் எண்ணவலைகளில் பின்னிப்பட்ட திலீப், இப்போது பவித்ராவை பார்த்தான். 

அந்நேரம், பின் காலை உணவு என சொல்லி… அனைவரையும் அழைக்க, திலீப் பவித்ராவை அழைத்தான். இருவருமே காலையில் சாப்பிடாமல் தான் வந்திருந்தார்கள். உடனே அவள், “எனக்கு பசிக்கல. நான் தருணை கூட்டிட்டு வரேன். நீங்க போங்க.” அவன் பதிலை எதிர்பாராமல் தருணை தேடிச் சென்றாள். 

திலீப் நகரவில்லை. இருவருக்காகவும் காத்திருந்தான். சொல்லியும் கேட்காமல் நின்றுகொண்டிருந்த திலீப்பை முறைக்க நினைத்தும் முடியாமல் அமைதியாகப் பார்த்தாள். 

மூவரும் சேர்ந்து உணவு சாப்பிட செல்ல, திலீப் நண்பர்கள் மூவரையும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வரச்சொன்னார்கள். அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த உணவிலிருந்து திலீப் தனக்கு எடுத்துக்கொள்ள, பின்னே வந்த பவித்ரா தருணுக்கு மட்டும் எடுத்துக்கொண்டாள். 

அவளின் செயலை பார்த்த திலீப், தனக்கு போட்டுக்கொண்டு… திரும்பி அவள் உணர்ந்து மறுக்கும்முன் அவளின் தட்டிலும் வைத்தான். அவளுக்கு கோபம் வந்தது. 

“தருண் இது சாப்பிடமாட்டான்” அவள் சொன்னது அவன் காதில் விழுந்ததா இல்லை விழாததுபோல இருக்கிறானா என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்! 

ரேகாவை அவன் கண்கள் அவ்வப்போது தேடினாலும், தன்னுடன் வந்த இருவரையும் கருத்தாகப் பார்த்துக்கொண்டான்.  

உணவை வீணாக்க மனமில்லாமல் தருணுக்கு தந்தபடி பவித்ரா உணவை உண்டாள். திலீப் சரியாக அவளிடம் பேசவில்லை என்றாலும், அவனின் செயல்களிலிருந்த மாறுதலை அவளால் லேசாக உணர முடிந்தது. 

திலீப்புடன் அவன் நண்பர்கள் பேசிக்கொண்டிருக்க, தருணுடன் விளையாட்டு இடத்திற்கு சென்ற பவித்ரா, அவனை மற்ற பிள்ளைகளுடன் விளையாடச் சொல்லிவிட்டு, பக்கத்திலிருந்த செயற்கை தோட்டத்தைப் பார்த்தபடி நின்றிருந்தாள். மனதில் திலீப் ரேகா பற்றிய எண்ணங்களே. 

அதை தடுக்கும் விதமாகப் பக்கத்தில் அரவம் உணர்ந்து பவித்ரா பார்க்க, அங்கே ரேகா. 

இருவருக்குள்ளும் கொஞ்சம் தயக்கம், இருந்தும் புன்னகைத்தனர். என்ன பேச என நிச்சயமாக பவுத்ராவிற்கு தெரியவில்லை. 

சில நொடிகளுக்குப் பின், “நான் ரேகா” என தன்னை அறிமுகப்படுத்திய ரேகா, “நான் யாருனு… உங்களுக்கு” அவள் முடிக்கும் முன்… “தெரியும்” என தலையசைத்தாள் பவித்ரா. 

ஒரு சின்ன கசங்கிய முறுவல் ரேகாவிடம். அப்போது சிறுவர்களுக்குள் ஏதோ சின்ன சண்டை வந்துவிட, ‘ம்மா’ என அழுதபடி வந்தான் தருண். அவனை கொஞ்சி சமாதானம் செய்த பவித்ராவையும், தருணையும் ஆசையுடன் பார்த்தாள் ரேகா.

தருண் அப்படியே திலீப்பின் பிரதிபலிப்பு. ஆசை ஒருபுறம் ஏக்கம் ஒருபுறம் உள்ளுக்குள் இருந்தாலும், ரேகா… “குட்டிக்கு என்ன ஆச்சு?” என கேட்டபடி கையை நீட்டினாள் தருணிடம். புதியவர் என்பதால் அவன் தயங்க… ரேகாவின் கண்களில் ஆசையைக் கண்ட பவித்ரா தருணை மெதுவாக ரேகாவிடம் அனுப்பினாள்.

அவனுக்கு இணையாக மண்டியிட்ட ரேகா… “பேரென்ன?” என்று கேட்க, “தருண்… ஆண்ட்டி” என அழகாக சொன்னான். அவனை தன்னோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டபோது அவளையும் மீறி கண்கள் கலங்கி லேசாக நீர் கசிந்தது. 

அப்போது இவர்களைத் தேடி அங்கே வந்திருந்தான் திலீப். அவன் கண்ட கட்சி… தருணை அணைத்தபடி ரேகா… அவன் உள்வரை சென்று உலுக்கியது. பக்கத்திலிருந்த பவித்ராவை பார்க்கக் பார்க்க குற்றவுணர்வு மேலோங்கியது. 

அப்போது திலீப்பை பார்த்த பவித்ரா, “சரி அப்பா வெயிட் பண்றாங்க… கிளம்பலாமா தருண்” மறைமுகமாக ரேகாவிடம் சொன்னாள். உடனே அங்கே திலீப்பை பார்த்த ரேகா தருணை விடுவித்து எழுந்தாள்.

கொஞ்சம் புன்னகையுடன் பவித்ரா, “உங்க கல்யாண பத்திரிகையை பார்க்க காத்துட்டு இருக்கோம்” என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். அன்றைய மாலைப் பொழுதுவரை அந்நிகழ்வு நடந்தது. ஆனால் திலீப்பால் சகஜமாக இருக்கவே முடியவில்லை. 

ரேகாவை பவித்ராவுடன் பார்த்தது… அவனை ஏதோ செய்தது. அதற்குப்பின் பவித்ராவை பார்த்து அவள் மனநிலையைக் கணிக்க முயன்றான். அவளிடம் எப்போதும் போல அமைதி, வெறுமை மட்டுமே. 

மூவரும் கிளம்பினார்கள். தருண் விளையாண்ட களைப்பில் உறங்கிவிட, திலீப் பவித்ராவிடம் பேச முயன்றான். 

“ரேகா…” அவன் ஆரம்பித்த நொடி… “அவங்க முன்னாடி என் கையை பிடிச்சது அவங்களுக்காக தானே. எங்களை கூட்டிட்டு போய், அங்க காட்சிப்பொருள் ஆக்கினதும் அதுக்குத்தானா?” அவனிடம் இதுநாள் வரை பேசிய பெரிய வாக்கியம் இதுதான். 

மனதில் உழன்ற கேள்வியை கேட்டுவிட்டு விரக்தியில் அவனை வெறித்தாள். எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் காத்திருந்தது அவளின் பளபளத்த கண்களும்… துடித்த உதடுகளும். இதயம் தாறுமாறாக அதன் வேலையைச் செய்தது. 

அவனுக்கோ முகத்தில் அறைந்தாற்போல இருந்தது. இல்லை நிச்சயம் அவள் சொன்னது போல அவன் எண்ணவே இல்லை. அவன் மனம் அடித்துச் சொன்னது. அதை எப்படி புரியவைப்பான்? சொன்னால்தான் நம்பப்போகிறாளா? இல்லை நம்பும்படி நடந்துகொண்டானா இதுவரை? பதில் தெரியாத கேள்விகள், சொல்லில் வடிக்க முடியாத வலிகள் மட்டுமே அவனிடத்தில். 

———–

அரசாங்கத்தின் கீழ் இயங்கிக்கொண்டிருந்த அந்த வங்கி பரபரப்பாகவும் இல்லாமல் மந்தமாகவும் இல்லாமல் அமைதியாக இயங்கிக்கொண்டிருந்தது. 

ஏதோ ஒரு தைரியத்தில் காலை திருச்சி வந்திருங்கிவிட்டான் ராஜீவ். திவ்யா அவள் மனதின் எண்ணங்களை ராஜீவ்விடம் பகிர்ந்த பின்பு, அடுத்து என்ன செய்வது என ராஜீவ் யோசித்தான். 

அவள் சொன்னதை வைத்து அவன் யூகித்தது, ‘தன் மேல் அவளுக்கு பிடித்தம் இருந்தாலும், ஏற்கனவே வருத்தத்தில் இருக்கும் அவள் பெற்றோரிடம் இதை எப்படி சொல்வது’ என்பது தான்.

ஆகையால் அவனே அவர்களிடம் பேசலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். கூடவே தன் கடந்தகாலம் சொல்லி, அவர்கள் விருப்பப்பட்டால் இதைத் தொடருவோம் இல்லையேல் திவ்யாவை விட்டு விலகிவிடலாம் என்ற முடிவையும் எடுத்திருந்தான். 

திவ்யா தன் அண்ணன் அண்ணி குறித்து அன்று பேருந்தில் சொன்ன போது… அவளுடைய பெற்றோர் மட்டும் அவர்கள் வேலைபார்க்கும் வங்கியையும் சொல்லியிருந்தாளே தவிர வீட்டை பற்றி இதுவரை சொல்லவில்லை. 

அவளிடம் கேட்கலாமா என்று யோசித்தபோது, ‘ஒருவேளை தன்னை அவள் பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும் நிலையில், தான் வந்தது பேசியது எதுவுமே அவள் வரை எடுத்துச்செல்ல வேண்டாம்’ எனவும் நினைத்தான்.  

ஆதலால் இதோ அவள் அப்பா பணிபுரியும் வங்கிக்கு வந்தாயிற்று. நேராக உள்ளே சென்று, எஜிஎம் சங்கரை சந்திக்க வேண்டும் என்றான். காரணம் கேட்டார்கள். 

என்ன சொல்வான்? பெண்ணை கேட்கப்போகிறேன் என்றா?! பொய் சொல்லவும் மனமில்லாமல், வேறு வழியுமில்லாமல், ‘பாரதியின் நண்பன் ராஜீவ்’ என்றான். 

அங்கே அவரிடம் தகவலைச் சொன்னபோது, மனிதர் ராஜீவ் என்ற பெயரைக் கேட்டவுடன் திவ்யாவுடன் வேலை பார்ப்பவன் என கண்டுகொண்டார். இவன் எதற்கு வந்துள்ளான் என்பது அவர் எண்ணம். 

நேர்காணலின் போது அவனைச் சந்தித்ததில் ஆரம்பித்து, அவன் மேல் ஒரு க்ரஷ் என சொல்லி… அவனுடன் வேலை பார்ப்பது மற்றும் அவன் மதிய உணவு எடுத்துவரும் வரை அவரிடம் திவ்யா சொல்லியிருந்தாள். என்ன, அவளுக்கு அவன் மனதளவில் நெருக்கமானவன் என்பதை மட்டும் தவிர்த்திருந்தாள். 

மனைவியிடம் எதையும் மறைக்காதவர், திவ்யாவின் விளையாட்டு குறித்து மீனாட்சியிடம் சொல்லியும் இருந்தார். 

இதோ இப்போது ராஜீவ்வை பார்த்ததும், பலத்த யோசனை இருந்தாலும், கூடவே காலை பார்த்த மகளின் வாட்டமான முகம் நினைவுக்கு வந்தாலும், ராஜீவ்வின் வருகைக்கான காரணம் குறித்து ஓரளவிற்கு யூகிக்க முடிந்தாலும்… எதிரே இருக்கும் இருக்கையைக் காட்டினார். 

மகளின் அலைவரிசையில் இருந்தவருக்கு, திவ்யா சொன்னதுபோலவே தான் தெரிந்தான் ராஜீவ். 

தீரன் சமீரா விஷயத்தில் தன் பெற்றோரைப் பற்றி மிகவும் உயர்வாகவே ராஜீவ்விடம் சொல்லியிருந்தாள் திவ்யா. சங்கரின் அணுகுமுறையும் ராஜீவ்வை கொஞ்சம் இயல்பாகவே பேச வைத்தது. 

அவருக்கு காலை வணக்கம் சொன்ன ராஜீவ், லேசாகத் தன்னை சமன் செய்துகொண்டு…“சர் இது பெர்சனல் விஷயம். இங்க பேசறது ஓகேவானு தெரியல. அப்புறம் மேடமும் இருந்தா நல்லா இருக்கும். நீங்க இங்க ஒர்க் பண்றதும், அவங்க பேங்க் பக்கத்துல தான் இருக்குன்னும் பாரதி சொல்லயிருக்காங்க” என்றான். 

எதார்த்தமாகத் தான் ராஜீவ் பேசினான். ஆனால் அவன் பாரதி என அழைத்ததும்,  தன் மனைவியும் முக்கியம் என அவன் கொடுத்த அந்த மரியாதையும் அவரை கொஞ்சம் கவரச்செய்தது. 

கூடவே மகள் தாங்கள் வேலைபார்க்கும் இடம் வரை சொல்லியிருக்கிறாள் என நினைக்கையில் மகளின் மனமும் ஓரளவிற்கு புரிந்தது. ராஜீவ்வுக்கும் சங்கர் தன்னை அளவிடுகிறார் என புரிந்தது. 

அவனிடம், “ஹ்ம்ம்… ரெண்டு நிமிஷம்” என்றவர், வெளியே சென்று மனைவியை அழைத்து… நடந்ததைச் சொல்லி… வரமுடியுமா என கேட்டு, பின்… மீனாட்சியின் அலுவலகம் பக்கத்தில் இருக்கும் உணவகத்துக்கு வரச்சொன்னார். 

மீனாட்சியும் காலையில் திவ்யாவின் களையிழந்த முகத்தை பார்த்திருந்தார். ஏன் என கேட்டதற்கு… எதுவும் பேசாமல் அம்மாவின் மடியை நாடினாள் சில நிமிடங்கள். 

மீனாட்சி, சங்கர்… இருவரும் பிள்ளைகளின் சந்தோஷத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்கள். அவர்களின் தேர்வு சரியாக இருக்கும் பட்சத்தில், அதை நிச்சயமாக பரிசீலனை செய்வர். 

மீனாட்சியிடம் பேசிவிட்டு, ராஜீவ்வை அழைத்துச்சென்றார் சங்கர். இருவரும் அவன் முகத்தைப் பார்த்திருக்க… ராஜீவ்வுக்கு லேசாக பதட்டம் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் பேச ஆரம்பித்தான். 

திவ்யாவை சந்தித்ததில் ஆரம்பித்து கடைசியாக அவள் பேசியது வரை அனைத்தையும் சொன்னான். மீனாட்சி அவனிடம், “அப்போ இதுக்காகத்தான் நீங்க பாரதியை அவ இருந்த ப்ராஜக்ட்ல இருந்து, உங்க ப்ராஜக்ட்க்கு மாத்திட்டீங்களா பா? இந்த ப்ரான்ச் ரொம்ப தூரம் அலைச்சல்னு சொன்னா. அதான் கேட்டேன்” சரியாக ஞாபகம் வைத்துக்கேட்டார்.  

ஓரிரு நொடிகள் தேவைப்பட்டது ராஜீவ்வுக்கு, பதில் தர. திவ்யா, அவளுடைய பழைய லீட்’டால் ஏற்பட்ட இடைஞ்சலை  இவர்களிடம் சொல்லவில்லை என்பது புரிந்தது. தான் அதை சொன்னால் பதறிவிடுவார்கள் என்பதும் புரிந்தது.

நிலைமையை சமாளிக்க… “பாரதியோட பழைய ப்ராஜக்ட்ல நைட் ஷிஃப்ட் அதிகம். பொண்ணுங்க அதுக்கு வேணாம்னு யோசிச்சு, அவங்கள இன்டெர்வியூ பண்ண எங்க ப்ராஜக்ட்கே அனுப்பிட்டாங்க” ஒருவழியாக நம்பும்படி சமாளித்தான். 

அடுத்து சங்கர் அவன் வீட்டினர், மற்றும் அப்பா அம்மாவைப் பற்றி கேட்டபோது… ஒரு நொடி தன்னை நிதானித்துக்கொண்டவன்… “எனக்கு அப்பா அம்மா இல்ல. சித்தப்பா சித்தி தான் வளர்த்தாங்க” என சொன்னபோது இருவருமே அதிர்ந்தனர். 

மனதில் எழுந்த அழுத்தத்தைச் சரிசெய்ய, எப்போதும்போல மூச்சை ஆழயெடுத்து வெளியிட்ட ராஜீவ் தன் கடந்தகாலத்தை அவர்களிடம் சொல்ல ஆரம்பித்தான். 

——–

கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியிலிருந்த அந்த ஊரில் தான் ராஜீவ் அவன் பெற்றோருடன் வசித்துவந்தான்.

ராஜீவ்வின் அப்பா கிருஷ்ணன் அரசாங்க உத்தியோகத்தில் இருக்க, வீட்டு நிருவகத்தைக் கவனித்துவந்தார் ராஜீவ் அம்மா அனுராதா. பல வருடங்கள் தவமிருந்து பெற்ற பிள்ளையே ராஜீவ். மூவரும் மற்றவர்களின் அன்பு பிடியில், ஒரு அழகான குருவிக்கூட்டைப் போல் வாழ்ந்துவந்தனர்.

மிக சிறிய வீடு என்றாலும், சுற்றி வெற்றிடம் இருக்கும் இடத்தை தன் வருமானத்தில் வாங்கி இருந்தார் கிருஷ்ணன். 

கிருஷ்ணனின் தம்பி ஸ்ரீதரன் மற்றும் ஸ்ரீதரனின் மனைவி ஜானகி… திலீப் மற்றும் கீர்த்தியின் பெற்றோர். கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீதரனின் அம்மா, ஸ்ரீதரன் வீட்டில் சில நாட்கள், கிருஷ்ணன் வீட்டில் சில நாட்கள் என வாழ்ந்துவந்தார். 

பாட்டிக்கு மற்ற இரு பேரன் பேத்தியை விட ராஜீவ் என்றால் கொள்ளை பிரியம். தன்னை போலவே உருவத்தில் வசீகரத்தைக் கொண்டுள்ளான் என்ற பெருமை அவருக்கு. எல்லாப்பிள்ளைகளை போல ராஜீவ்வுக்கும் பாட்டி மேல் பிடித்தம்.  

ராஜீவ்வுக்கு ஐந்து, ஆறு வயது இருக்கும். முழு ஆண்டு விடுமுறைக்கு கிருஷ்ணன் குடும்பத்தினர் பூர்வீக வீடான தம்பி ஸ்ரீதரனின் வீட்டிற்கு சென்றிருந்தார்கள். விடுமுறை தினங்கள் அழகாகக் கழிய, வேலை நிமித்தம் ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்திலிருந்தார் கிருஷ்ணன். 

பேரனை பிரிய மனமில்லாமல்… பாட்டி அவர் மகனிடம், “கிருஷ்ணா, ஜீவாக்கு தான் லீவ் ஆச்சே. அவன் கொஞ்ச நாள் இங்க இருக்கட்டும். இங்கயும் பசங்க இருக்காங்க. அவனுக்கும் நல்லா பொழுது போகும்” என்றார். 

அவர் சொல்வதும் சரியென பட்டது ராஜீவ் அப்பாவுக்கு. மகனுக்கும் இந்த மாற்றம் தேவை என நினைத்தவர், மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். ஆனால் அதுவே மகனை அவர்கள் பார்த்த கடைசி தருணமாகிவிட்டது. 

அதிக மழையால், மேற்குத் தொடர்ச்சி மலையில் சில இடங்களில் பெரும் மலைச்சரிவு ஏற்பட, கிருஷ்ணன் மற்றும் அனுராதா சென்ற பேருந்து அதில் மாட்டிக்கொண்டு, மலைச்சரிவில் சரிந்தது. அதிக உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்க, ராஜீவ் என்ற ஒற்றைத் துளிரைத் தனிமரமாக்கிவிட்டு இறைவனடி சேர்ந்தார்கள் அவன் பெற்றோர்.

அடுத்த இரண்டு நாட்கள் கழித்துத்தான் கிருஷ்ணன் தம்பி ஸ்ரீதரனுக்கு விஷயம் தெரியவந்தது. பதறியடித்து சென்றபோது… மட்கி, மிகவும் சிதைந்திருந்தது அவர்களின் சடலங்கள். 

ராஜீவ் அந்நிலையில் அவன் பெற்றோரைப் பார்ப்பதற்கு ஸ்ரீதரன் மனம் ஒப்பவில்லை. மனதில் எழுந்த பெரும் பாரத்தை தூரம் வைத்துவிட்டு இறுதிச் சடங்குகளை முடித்தபின் தன் வீட்டிற்கு சென்றார். 

அங்கே மகனை பிரிந்த சோகத்தில் பாட்டி வாடி வதங்கி இருக்க, இது எதுவும் தெரியாத ராஜீவ் திலீப், கீர்த்தியுடன் விளையாடிக்கொண்டிருந்தான். அவனை பார்க்க ஸ்ரீதரனுக்கு பதைபதைத்தது. அவர் மனைவி ஜானகிக்கும் மனம் தாளவில்லை. பார்த்துப் பார்த்து ராஜீவ்வை கவனித்துக்கொண்டார். 

ஆனால் எத்தனை நாட்கள் மறைத்துவைக்க முடியும்? அம்மா அப்பாவைத் தேடியது ராஜீவ்வின் உள்ளம். அவர்களை வரச்சொல்ல வேண்டும் என அடம் பிடித்தான். 

பெரியவர்கள் தங்களுக்குள் பேசியதை… ராஜீவ்வை விட குட்டிப்பெண்ணான கீர்த்தி கேட்டிருப்பாள் போலும். ராஜீவ் தன் பெற்றோரைக் கேட்டு அடம் பிடித்த நேரம், ‘அவர்கள் இனி வரவே மாட்டார்கள்’ என்று சொல்லிவிட்டாள்.

அதை கேட்டு அச்சிறிய மனம் துடிதுடித்துப்போனது. கீர்த்தியிடம், ‘இல்லை வருவார்கள்’ என அழுது வாதிட்டான். ஏற்கனவே ராஜீவ்வுக்கு பேச்சு வளம் தாமதமாக வந்திருக்க, இச்செய்தி அவனின் பேச்சுத்திறமையை இன்னமும் மோசமாக்கியது. பேச்சில் திணறல் வர ஆரம்பித்திருந்தது. 

கீர்த்தி தன் அம்மாவிடம் ஒண்டிக்கொள்ளும்போதெல்லாம், அம்மாவின் அருகாமையை வேண்டித் தவித்தான் ராஜீவ். திலீப் தன் அப்பாவிடம் பேசும்போதெல்லாம், தந்தையின் அரவணைப்பை நாடினான். ஆனால் எதுவுமே கிடைக்கவில்லை, எல்லாமே பொய்த்துப்போனது. பெற்றோரை எண்ணி அழுது கரைந்தான்.   

அவன் உணர்வுகளைப் புரிந்துகொண்ட ஸ்ரீதரன்… ஜானகியை அம்மா என்றும், தன்னை அப்பா என்று அழைக்கச் சொன்னார். ராஜீவ் முயற்சிதான். ஆனால் முடியவேயில்லை. பழகிக்கொள்ள மிகவும் திணறினான். 

போதாததற்கு கீர்த்தி, ‘அது தன் பெற்றோர்’ என்று நிறைய முறை சொல்லிக்காட்டினாள். மனதளவில் மிகவும் நொறுங்கினான் ராஜீவ். ஆனால் அவளும் சிறுபிள்ளை தானே. தன் அம்மா அப்பா ராஜீவ்வுக்கு அளிக்கும் முன்னுரிமை அவளுக்குப் பிடிக்கவில்லை.  

மகன் பிரிந்த சோகத்திலிருந்து… பேரனுக்காக கொஞ்சம் கொஞ்சமாக மீண்டிருந்தார் பாட்டி. அந்த உறவு மட்டுமே தனக்கு நிலைத்தது போல உணர்ந்தான் ராஜீவ். பாட்டியும் தன்னை போலவே உள்ள ராஜீவ்வுக்கு தேவையானது கிடைக்க, எந்த அளவிற்கும் இறங்கி வேலை செய்தார். 

ஸ்ரீதரன், வீட்டின் நிலையை உயர்த்த… வளைகுடா நாடான குவைத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டார். மூன்று இல்லை நான்கு வருடத்திற்கு ஒருமுறை தான் இந்திய வருகை என ஆகிவிட்டது. 

திலீப்புக்கு வயது கொஞ்சம் அதிகம் என்பதால் ராஜீவ்வின் நிலை நன்றாகப் புரிந்தது. ராஜீவ்வுக்கு ‘தான் அண்ணன்’ என்பதை அவன் மனதில் பதிய வைக்கப் போராடினான். அதில் வெற்றியும் கண்டான். ராஜீவ்வுக்கு திலீப்பை மிகவும் பிடித்துவிட்டது. பெயர் சொல்லித்தான் அழைப்பான். திலீப் அதற்கு மறுப்பு தெரிவித்ததே இல்லை. இருவருக்குள்ளும் அழகிய இணக்கம் உருவானது.  

ஆனால் கீர்த்திக்கு ஆரம்பத்திலிருந்தே ராஜீவ் மேல் ஒரு காழ்ப்புணர்ச்சி வந்திருக்க, அவன் பேச்சில் திணறுவதைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தாள். பள்ளியிலும் அதே நிலை தான். ராஜீவ் தன் கூட்டிற்குள் முடங்கிக்கொள்ள, தேவதையாய் வந்தார் ஆங்கில மொழி கற்பிக்கும் ஆசிரியர். 

அவனுக்கு தேவையான தெரபிகள் கிடைக்க வழிவகுத்தார். கூட்டிற்குள் அடைபட்டவனை வெளியே வரச்செய்து, பேச்சில் கெட்டிக்காரனாக்கினார். படிப்போடு சேர்த்து, வாழ்க்கை பாடத்தையும், எதையும் கடக்கும் வலிமையையும் அவனுக்குக் கற்றுத்தந்தார். 

அதனால் தானே என்னவோ, அவன் மனம் சஞ்சலமடையும் போதெல்லாம், எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து… அருகில் கிடைக்கும் நேர்மறை எண்ணங்களை உள்ளெடுத்துக்கொண்டு, தன்னை துரிதமாக மீட்டுக்கொள்வான். அவனிடம் கோபம் என்பது அறவே கிடையாது. 

பாட்டி வயதின் காரணமாகக் காலமாகிவிட, ராஜீவ் தன்னை தானே பார்த்துக்கொள்ளும் நிலைக்கு மெருகேற்றிக்கொண்டான். படிப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, மிகவும் குறைந்த கட்டணத்தில் பெரிய கல்லூரியில் படித்தான். படித்து முடிக்கும்முன்பே வேலையும் கிடைத்தது. 

வேலையிலும் தன் திறமையால் குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சியடைந்தான். என்னதான் இப்போது அனைத்தும் இருந்தாலும், ஒரு சிறிய வெற்றிடம் அவனிடம் இல்லாமல் இல்லை. 

ஜானகியை ஜானுமா என்றும் ஸ்ரீதரனை அப்பா என்றும் அழைத்துப் பழகிக்கொண்ட நாள் முதல், தன் கடந்த காலத்தை யாரிடமுமே பகிர்ந்ததில்லை ராஜீவ். ஆனால் திவ்யாவிடம் சொல்ல மனது உந்தியது. சொன்னான். தற்போது அவள் பெற்றோரிடம் சொல்லக் கடமைப்பட்டதால் சொல்லிமுடித்தான்.

ராஜீவ் சொல்லி முடிக்க, கேட்டுக்கொண்டிருந்த சங்கர் மற்றும் மீனாட்சி கிட்டத்தட்ட உரைந்திருந்தார்கள். அன்று திவ்யாவிடம் ராஜீவ் இதைச் சொன்னபோது, அவளும் இப்படியே தான் உணர்ந்தாள். 

இருவரின் உணர்வுகளையும் உணர்ந்த ராஜீவ், “வெறும் சூப் மட்டும் தான் எடுத்துட்டோம். சாப்பாடு ஏதாவது ஆர்டர் பண்ணலாமா சர்? மேடம்க்கு என்ன பிடிக்கும்…” மெனு கார்ட் பார்த்து இயல்பாக கேட்டான். 

இவ்வளவு பேசிய பின், அவனின் அந்த சர், மேடம் ஏதோ ஒன்றாமல் இருப்பது போல தோன்றியது மீனாட்சிக்கு. உடனே, “சர், மேடம் வேண்டாமே” என்றார். புன்னகைத்தான் ராஜீவ். 

உணவை ஆர்டர் செய்தபின், “எனக்கு பெரிய சொத்தெல்லாம் இல்லை ஆன்ட்டி. இப்போ நாங்க இருக்க வீடு, அப்பா கஷ்டப்பட்டு குடும்பத்தை விட்டுட்டு சம்பாதிச்ச பணத்துல கட்டினது. அது திலீப், கீர்த்திக்கு தான் சேரணும்னு சொல்லிட்டேன்” என்றான். 

தன் வீட்டில் இந்த சொத்துக்காக நடந்த பிரச்சனையை சொல்ல மனமில்லை. கீர்த்தியின் துருப்புசீட்டே ‘ராஜீவ் தன் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டான். அவனின் தற்போதைய நிலைக்கு தன் குடும்பம் தான் காரணம் ஆகையால் எதையும் கேட்கலாம்’ என்பதுதான். 

ராஜீவ், தான் இருந்த நிலையில் இதுபோல குடும்பம் என்ற ஒன்று அவனுக்குக் கிடைத்ததே பெரிய வரப்பிரசாதம் என்று நினைக்க, ஜானகி மற்றும் கீர்த்தியின் கோரிக்கைக்கு அவன் மறுத்ததே இல்லை. விரும்பியே அவர்களுக்கு நிறைய செய்வான். 

பொதுவாக அனைவரிடமும் இருக்கும் சில விஷயங்கள், முக்கியமாக பெண்வீட்டார் எதிர்பார்க்கும் தகுதிகள் தன்னிடம் குறைவே என்ற எண்ணம் அவனுள் லேசாக எழுந்தது.  

ஆகையால், “சொத்து இல்லைனாலும், குடும்பத்தை நல்ல விதமா நடத்துற அளவுக்கு கைநிறைய சம்பாதிக்கிறேன் அங்கிள். ஆன்சைட் போய் கொஞ்சம் சேவ் பண்ணிருக்கேன். சின்ன வீடு வாங்கணும்னு ஆசை. 

பாரதி வேலைக்கு போறதும் போகாததும் அவங்க இஷ்டம். பட், என்கிட்ட அபிப்பிராயம் கேட்டா, கண்டிப்பா முடியுற வரை போக சொல்வேன். பணத்துக்காக இல்ல, இண்டிபெண்டண்ட்டா இருக்கறதுக்கு. என் கெஸ் கரெக்ட்னா, அவங்களும் அதைத்தான் விரும்புவாங்க” திவ்யாவை பற்றி சரியாக சொன்னான்.  

“என்னோட வீட்டு அட்ரஸ், திலீப் சேட்டா நம்பர்… எல்லாம் ஷேர் பண்றேன். உங்களுக்கு பிடிச்சிருந்தா ப்ரொசீட் பண்ணலாம். இல்லை, நான் வந்து பேசினதை அப்படியே விட்டுடலாம். ஒருவேளை நீங்க பார்த்திருக்க மாப்பிள்ளைக்கு பேசி முடிச்சா, பாரதியோட ப்ராஜக்ட் சேஞ்’கு கண்டிப்பா ஹெல்ப் பண்றேன்” புன்னகையோடு அவன் முடித்தபோது… அவன் பேச்சில் தெரிந்த முதிர்ச்சி… ஆளுமை, இருவருக்குமே பிடித்துவிட்டது. 

சில நொடிகள் அமைதியாக சென்றிருக்கும். சங்கர், “உங்கள பத்தி தெரிஞ்சுக்கிட்டதுல ரொம்ப சந்தோஷம் பா. வெளிப்படையா பேசுனீங்க. எங்களுக்கு பிடிச்சிருக்கு. இருந்தாலும் கொஞ்சம் நேரம் வேணும், வீட்ல பேசி முடிவு பண்ணி சொல்றோமே”

“நிச்சயமா அங்கிள். முடிவுங்கிறது பாஸிட்டிவா இருக்கணும்னு இல்லை. பாரதிக்கு நீங்க நல்லதுதான் செய்வீங்க… சோ, உங்க முடிவு எதுவா இருந்தாலும், நிச்சயமா அதை மதிச்சு ஏத்துப்பேன். கண்டிப்பா இந்த விஷயம் பாரதி வரை போகாது” என்றான் திடமாக.

சங்கருக்கு மகளின் மனம் பற்றி தெரியவேண்டும். அவளுக்கு ‘தி பெஸ்ட்’ என்பார்களே அதை தரவேண்டும் என்பதில் மிகவும் சிரத்தை எடுப்பவர். ஆகையால் நேரம் கேட்டார். ராஜீவ் தன் பக்க தகவல்களை அவர்களிடம் பகிர்ந்துகொண்டான். 

தம்பதிகள் இருவரும் வீட்டிற்கு வரும்வரை ராஜீவ் பற்றியே தான் பேசினார்கள். அவனை மறுக்க காரணமில்லை என்றாலும், எல்லா பெற்றோர்கள் போல ஒரு வித படபடப்பு இல்லாமல் இல்லை. மகள் வாழப்போகும் குடும்பம். மகளின் மனநிலையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

வீட்டிற்கு சென்றபோது, திவ்யா ஏதோ யோசனையிலேயே இருக்க… இவர்கள் வந்ததை கூட கவனிக்கவில்லை. தீரன் ஊரில் இல்லாததால், தனியாகத் தான் இருந்தாள். மகளிடம் சகஜமாக சங்கர் “என்னடா ஆச்சு?” என ஆரம்பிக்க… இதுவரை யோசித்து முடிவு செய்ததை சொல்ல ஆரம்பித்தாள் திவ்யா. 

“ப்பா… நான் ஒன்னு சொல்வேன் தப்பா எடுத்துக்க கூடாது” கொஞ்சம் தயக்கத்துடன் ஆரம்பித்து… “இந்த மாப்பிள்ளை வேண்டாம் பா” என்றாள். 

மீனாட்சியும் அங்கே வந்திருக்க… அம்மாவின் கையை பற்றிக்கொண்டு… “இப்போவே ரொம்ப டாமினேட் பண்ற மாதிரி இருக்குமா” என்றாள். இருவரும் ராஜீவ்வை பற்றி சொல்வாள் என்று எதிர்பார்க்க… திவ்யா அந்த வரனைப் பற்றி பேசினாள். 

“என்ன பேசவே விடல. நான் அப்படி இருக்கணும்னு இப்படி இருக்கணும்னு ஒரே லெக்ச்சர். ஸாரி ப்பா எனக்கு ஒத்துவரல” என்று சொல்லிவிட்டாள். பெற்றவர்கள் இருவரும் அவளுக்கு தெரியாமல் புன்னகைத்துக்கொண்டனர். 

“சரி டா… உனக்கு பிடிக்காதது வேண்டாம். நான் அவங்ககிட்ட சொல்லிடறேன்” என்றார் சங்கர். 

மீனாட்சி, “பாரதி… கல்யாணங்கறது வாழ்க்கைல முக்கியமான திருப்பம். மனசுக்கு பிடிச்சு செய்துக்கணும். கல்யாணத்துக்கு முன்ன பின்ன ஆயிரம் தடங்கல், பிரச்சனைனு வரும். விரும்பி ஏத்துக்குற வாழ்க்கை தான்… அந்த பிரச்சனைகளை சமாளிக்கிற திடத்தை, நம்பிக்கையை தரும். 

பிடிக்காம பண்ணிட்டா, சின்ன பிரச்சனை கூட பூதாகாரமா தெரியும். என்னடா இந்த வாழ்க்கைனு தோணிடும். தீரனுக்கு இதை தான் சொன்னேன். உனக்கும் சொல்றேன். உன்னோட விருப்பு வெறுப்புக்கு கண்டிப்பா நாங்க மதிப்பு கொடுப்போம்” என்றதும்… அம்மாவின் மடியில் கலங்கிய கண்களுடன் தஞ்சம் புகுந்தாள். 

இந்த வரன் அமையவில்லை என்பது நிம்மதியைத் தந்தாலும், ராஜீவ் பற்றி சொல்ல ஏனோ ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. 

சிறுது நேரம் கழித்து, மீனாட்சி உள்ளே சென்றுவிட, மகளிடம் கிசுகிசுவென… ராஜீவ் பற்றி கேட்டார் சங்கர். சாதாரணமாக எப்போதும் வம்பிழுப்பது போல கேட்க, தானாக விரிந்தது திவ்யாவின் விழிகள். இதுவரை இல்லாத ஒளிர்வு அவள் முகத்தில்.  

உள்ளேயிருந்து பார்த்த மீனாட்சிக்கும், கண்ணெதிரே பார்த்துக்கொண்டிருந்த சங்கருக்கும்… அவளின் முகம் அவள் மனதை வெட்டவெளிச்சமாக்கி காட்டியது. உடனே சுதாரித்துக்கொண்ட திவ்யா, “ப்பா… ஷ்ஷ்! அம்மா காதுல கேட்கப்போகுது” என கடிய, சங்கருக்கு சிரிப்பு தாளவில்லை. 

“ஐயோ அப்பா… சிரிச்சு மாட்டி விட்டுடாதீங்க” என்ற திவ்யா… “ராஜீவ்வுக்கு என்ன… ஹி இஸ் குட். எப்பவும் போல நான் சைட் அடிச்சிட்டு இருக்கேன்” கடினப்பட்டு அவள் சாதாரமாக சொன்னாலும்… அவனின் ‘ரதி ராஜு’ என்ற பிறந்தநாள் பரிசு கண்முன்னே வந்து சென்றது. 

இருவரின் ஆசை நிறைவேறுமாநிறைவேறாதா என்பதை நினைத்து மனதில் ஒரு வித அழுத்தம் எழுந்தாலும், அவனின் முகத்தை எண்ணியபோது மனம் அமைதியானது.

ராஜீவ் திலீப்பை அழைத்து, நடந்ததை பகிர்ந்துகொண்டான். திலீப், தான் பார்த்துக் கொள்வதாகவும், நல்லபடியாக அனைத்தும் நடக்கும்… கவலை வேண்டாம் என்றான். அது ராஜீவ்வுக்கு நிம்மதியை தந்தது. 

—–

திங்கள் கிழமை காலை, திவ்யா சென்னை வந்து சேர்ந்தாள். தன்னுடன் தான் ராஜீவ் அன்றிரவு ரயில் பயணம் செய்தான் என்பது தெரியாமல்… வந்திறங்கினாள். 

‘ராஜீவ்வை எப்படி அலுவலகத்தில் எதிர்கொள்ள?!’ என்ற எண்ணத்துடன், பாட்டு கேட்டபடி பிளாட்பார்மில் பையை தூக்கிக்கொண்டு அவள் நடக்க… அவள் அறியும் முன்னே… தன் கையிக்கு அதை மாற்றிய ராஜீவ்… குனிந்து அவள் காதில் ஆழ்ந்த குரலில், வசீகரிக்கும் பார்வையில் சொன்ன… “மார்னிங் பாரதி” நிஜமாகவே அவளை இன்பப்படபடப்பில் ஆழ்த்தியது!

செவியில்… ‘மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்… மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வாா்த்தை தான்!’ என்ற பாடல்!  

13
4
5
4
3
1
2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved