உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 19
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 19:
தங்கள் மகள் தங்களை விட்டு பிரிந்து இருந்தாலும்… அவளையும், அவள் காதலிக்கும் தீரன் குடும்பத்தையும் கண்காணித்து வந்தனர் சமீராவின் வீட்டில். அப்போதுதான் திவ்யாவின் திருமண நிகழ்வு அவர்கள் காதில் விழுந்தது.
தங்கள் வீட்டுப்பெண் இப்படி வாழும்போது, தீரன் வீட்டில் நடக்கப்போகும் நிகழ்வு உவப்பாக இல்லை. ஆகையால்… சமீராவின் அப்பா, பெரியப்பா மற்றும் சித்தப்பா மூவரும் தீரன் வேலை பார்க்கும் இடத்திற்கே சென்றுவிட்டனர்.
தீரன் ஒரு பெரிய நிறுவனத்தில், பைனான்ஸ் பிரிவில் உயர் பதவியில் வேலைக்கு நியமிக்கப்பட்டிருந்தான். இவர்கள் மூவரும் அந்நிறுவனத்தின் ரிசெப்ஷனில், ‘தீரனை பார்க்கவேண்டும்’ என செய்த அதகளத்தில் தீரன் அவசரமாக கீழே வந்திருந்தான்.
முதலில் பதற்றமடைந்தாலும், அவர்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு அழைத்துச்செல்ல நினைத்தான். ஆனால் அவர்கள் நகருவதாக தெரியவில்லை. பின் தனதறைக்கு அழைத்துச்சென்றான். அதற்குள் கிட்டத்தட்ட அந்த தளத்தில் வேலைபார்ப்பவர்களின் பார்வை முழுவதும் இவனிடத்தில் தான்.
அதுதான் வந்தவர்களின் திட்டமே! அவர்களின் செல்வச் செழிப்புக்கு இதுபோலவெல்லாம் இறங்கி செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் தீரனை எப்படியாவது அங்குள்ளோர் மத்தியில் பேசுபொருளாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வந்திருந்தார்கள்.
ஆனால் தீரனின் வயதும், திருமணம் செய்யாமலிருப்பதும், எப்போதோ அங்கே பேசுபொருள் ஆகியிருந்தது. அதையெல்லாம் தீரன் பொருட்படுத்தியதும் இல்லை.
“நீ எல்லாம் மனுஷனா?” என்று ஆரம்பித்த சமீராவின் தந்தை… நிறைய நிறைய பேசிவிட்டார். தீரன் சுயநலவாதி என்றும், சமீரா வாழ்க்கை அவனால் பாழாகிவிட்டது என்றும், தன் தங்கையின் வாழ்க்கை பற்றி எண்ணியவனுக்கு, சமீராவின் வாழ்க்கை தெரியாமல் போய்விட்டது என்றும் சாடினார்.
சமீராவுக்காக தன் சுயத்தை விட்டு, அமைதியாகவே இருந்தான் தீரன்.
சமீராவின் பெரியப்பா, “ஏன்பா எங்க பொண்ணு வாழாம, வாழ்க்கையை தொலைச்சிட்டு நிற்கறப்ப, உங்க வீட்டு பொண்ணு வாழ்க்கை மட்டும் நல்லாயிருக்குமா? பூவும் பொட்டுமோட வாழ்ந்திடுமா என்ன? நாசமா போய்டாது?” கொஞ்சமும் கூசாமல் வஞ்சமாக பேசினார்.
எதிர்த்துப்பேச அவனின் சிந்தை சிரத்தை எடுத்தாலும், மனமோ சமீராவின் வாழ்க்கை, திவ்யாவின் வாழ்க்கை என எண்ணியபோது, இதுவரை இருந்த தைரியம் முற்றிலும் வடிந்து துவண்டதுபோல உணர்ந்தான்.
சமீராவின் சித்தப்பாவோ, “அட இவன்கிட்ட போய் நியாயம் பேசறீங்களேணா! அவ்ளோ நல்லவனா இருந்தா, ஒரு பொண்ணு வாழ்க்கை அனாதரவா இருக்கப்ப, அவங்க வீட்டு பொண்ணு வாழ்க்கையை மட்டும் யோசிப்பானா? அடுத்து இவன் தங்கச்சி… அவளெல்லாம்…” அடுத்த வார்த்தை வருமுன், அது என்னவாக இருக்கும் என உணர்ந்த தீரன், அவரின் சட்டையை பிடித்திருந்தான்.
அண்ணன் வாழ்க்கையை எண்ணி திருமண பேச்சையே மறுத்த திவ்யாவை… சம்மதிக்கவைக்க எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதெல்லாம் இவர்களுக்கு தெரியுமா என்ன?
அங்கே லேசான கைகலப்பு. “உண்மையை சொன்னா கோபம் வருமோ! ஆமாம் டா உன் தங்கச்சி உன் வாழ்க்கையை யோசிக்காம அவ வாழ்க்கையை பார்த்துட்டு போறா. உன் குடும்பமே சுயநலவாதி குடும்பம்!
உன்னால என் பொண்ணு வாழ்க்கையே போச்சு. நீ நல்லா இருப்பயா இல்ல உன் தங்கச்சி தான் நல்லா இருப்பாளா” பேச்சு நீண்டுகொண்டே சென்றது. நிறுத்தச்சொல்லி தீரன் எவ்வளவோ சொல்லியும் பேசிக்கொண்டே இருந்தனர்.
தீரனால் முடியவில்லை. சமீரா, திவ்யா இருவரையும் சேர்த்துச் சேர்த்து பேசினார்கள். ஏற்கனவே சமீராவைப் பார்க்கும்போதெல்லாம் எழும் குற்றவுணர்வு இப்போது பூதாகரமாக தெரிந்தது.
அவளை ஒருவேளை காதலிக்காமல் இருந்திருந்தால் அவள் வாழ்வு நன்றாக இருந்திருக்குமோ என்ற கேள்வி அவ்வப்போது வந்து சென்றாலும் இப்போது உறுதியே செய்துவிட்டான்.
அதுவும் அவள் பெற்றோர் தற்போது கூட அவளுக்கு நல்வாழ்வு அமைத்துத்தர முடியும் என்று சொன்னதும், தன்னால் அவள் படும் துன்பங்கள் போதும் இனியாவது நிம்மதி கிடைக்கட்டும் என தன் வாழ்க்கையை மறந்து அவன் மனம் அவளுடைய நல்வாழ்விற்காக வேண்டியது.
தன் உயிராய், உயிர்நாடியை, உயிர்க்கூட்டின் சரிபாதியாய் எண்ணியவளைத் தன்னிடம் இருந்து பிரித்துக்கொள்ள முடிவெடுத்தான்.
வந்தவர்கள் பேச்சு நின்றபாடில்லை. ஆனால் அவர்கள் பேசியது எதுவும் தீரன் கருத்தினில் பதியவில்லை. உணர்வுகளின் மிகுதியில் மனம் தவித்தாலும், உணர்ச்சிகளற்ற முகத்துடன்… “இப்போ நான் என்ன செய்யணும்?!” வந்தவர்களிடம் கேட்டான்.
அவ்வளவுதான். அவர்கள் எண்ணியது நடந்தேறியது. ஒருவரை உடலளவில் காயப்படுத்திப் பின்வாங்கச்செய்வது ஒருவகை என்றால், இதுபோல வார்த்தைகளால் மனதைக் கீறி நினைத்ததைச் சாதித்துக்கொள்வது மற்றொருவகை.
சமீராவை தாங்கள் பார்த்துக்கொள்வதாகவும், அவளிடம் இருந்து விலகச் சொல்லி சொன்னார்கள். கண்களை மூடி தன்னை கட்டுபடித்துக்கொண்டு தலையசைத்தான்.
வீட்டில் பெற்றோரிடம் இதைப்பற்றி சொன்னபோது, மனதளவில் தளர்ந்தனர் சங்கரும், மீனாட்சியும். இத்தனை வருடங்கள் போராடிய மகன் மற்றும் சமீராவின் வாழ்க்கையை எண்ணி மிகவும் வருந்தினார். மனதின் வலியைக் கட்டுப்படுத்தும், தீரனின் இறுகிய முகம் இன்னமும் வருத்தியது.
தீரனின் பெற்றோர், சமீராவின் வீட்டில் பேசி பார்த்தது முதல்… எல்லாவகையிலும் முடிந்தவரை முயற்சிகள் செய்தாயிற்று. பெற்றோரின் சம்மதம் முக்கியம், அவர்களை மீறி செய்துகொண்டால் நிச்சயம் அவர்களது சுயரூபத்தைக் காட்டுவார்கள் என்பது சமீராவுன் எண்ணமாக இருக்கும்போது, வேறு எதுவும் செய்யமுடியாமல் கையறு நிலையில் இருந்தனர் இருவரும்.
அடுத்து வந்த நாட்களில் சமீராவிடம் பிரிந்துவிடலாம் என்பதை மறைமுகமாகவும் சொல்லிவிட்டான் தீரன்.
சமீராவின் வீட்டில் பேசியதை வைத்துப் பார்க்கையில்… எப்படியும் திவ்யாவின் திருமணத்துக்கு முன்… இன்னமும் ஓரிரு வாரங்களில் சமீராவுக்கு நல்வாழ்வு அமைத்துத் தந்துவிடுவார்கள் என எண்ணி, திவ்யாவின் திருமணத்தையே காரணமாக சொன்னான். அவனுக்கும் சமாளிக்க வேறு வழிதெரியவில்லை.
இதை திவ்யாவிடம் கேட்டு அவளை சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டான். இத்தனை பொய்களை அவன் சொன்னபோது அவனுள் எழுந்த அழுத்தம் தொண்டையை முட்டியது. முற்றிலுமாக நொறுங்கிவிட்டான்.
அதே நிலையில் தான் சமீராவும் இருந்தாள். பதற்றம் அதனால் ஏற்பட்ட படபடப்பு அதன் வெளிப்பாடாக சீரற்ற மூச்சு! என்ன ஏது என அவள் யோசிக்கும்முன், அடுத்த அம்பை இறக்கினார்கள் அவள் வீட்டார்.
வீட்டின் கதவு தட்டுப்பட, அங்கே தன் அப்பா மற்றும் சித்தப்பாவைப் பார்த்த சமீராவுக்கு நிச்சயம் அது மகிழ்ச்சியைத் தரவில்லை. பாட்டி மரணிக்கும் தருவாயில் உள்ளதாக ஒரு செய்தி கூடவே அவளை காணவேண்டும் என்ற பாட்டியின் ஆசை இரண்டையும் சொல்ல… சமீராவுக்கு எதையும் யோசிக்க முடியவில்லை. தீரனின் வார்த்தைகளே மனதினுள் எதிரொலித்தது.
அவளின் மனநிலையை உபயோகித்துக்கொண்டு, அவளை திருச்சி அழைத்துச்சென்றார்கள். போகும் வழியில் தான் நிதானமாக யோசித்தாள் சமீரா.
திவ்யா, அவளுக்கு தங்களின் காதலை பற்றி முற்றிலுமாக தெரியும். அப்படி இருக்கையில், ராஜீவ் வீட்டில் இப்படி ஒரு நிபந்தனை வைத்தால், திவ்யா அமைதியாகவா இருப்பாள்? அவளின் குணம் அதுவல்லவே!
அடுத்து ராஜீவ்… அவனை பற்றி தீரன் சொன்னவரையில், அதுவும் அவளைப் பற்றி ராஜீவ் நலம் விசாரித்ததில் ஆரம்பித்து… அவர்களின் காதலை அவன் மெச்சியதைப் பார்க்கையில், அவனும் தீரனின் திருமண நிபந்தனைக்கு அமைதியாக இருப்பானா?
மிகவும் குழப்பமாக இருந்தது. இதே யோசனையில் பாட்டியைச் சந்திக்க சென்றாள். மருத்துவ உபகரணங்களுடன் அவரை பார்க்கையில் கஷ்டமாகிவிட்டது அவளுக்கு.
அவர் கைகளைப் பற்றி கண்கலங்க… அவரோ ஈனக் குரலில், “சமீரா…” என கண்ணீர் வடித்தார். சமீராவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
பின், “இந்த பாட்டியை பார்க்க வந்தையா… எப்படிம்மா இருக்க… உன்னைப்பார்க்கவே சங்கடமா இருக்கு. உன் வாழ்க்கையை நினச்சா… மூச்சே நின்னுடும் போல இருக்கு” சமீராவுக்கு தீரன் தான் கண்முன் வந்தான். அவன் பேசியது இதயத்தை வலிக்கச்செய்தது.
இருந்தும், “பாட்டி… அதெல்லாம் ஒண்ணுமில்ல. மனசை போட்டு அலட்டிக்காதீங்க. நான் நல்லா தான் இருக்கேன். நீங்களும் சீக்கிரம் குணமாகிடுவீங்க”
“நீ குடும்பமா வாழறத பார்த்துட்டா இந்த கட்டை நிம்மதியா போய்டும். அதுவரை இந்த உசுர கைல பிடிச்சிட்டு இருப்பேன்” தீனமான குரலில் சொல்ல, அவரின் கையை தட்டிக்கொடுத்தாள்.
அடுத்து அவர் சொன்னதைக் கேட்டு… தட்டிக்கொடுத்த சமீராவின் கை அந்தரத்தில் நின்றது… “இந்த பாட்டுக்காக… இந்த உயிரு நிம்மதியா போகறதுக்காக… நாங்க சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கலாம்ல சமீரா” குரல் க்ஷீணமாக இருந்தாலும் ஒரு ஆர்வம் தெரிந்தது.
இப்போது அனைத்து புள்ளிகளையும் சமீராவால் சேர்க்கமுடிந்தது. தீரன் பேசியதில் ஆரம்பித்து… இப்போது பாட்டி பேசியதுவரை. மானசீகமாக தீரனை கடிந்துகொண்டு… முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டவள்… தெளிவாக பேச ஆரம்பித்தாள்.
“ஏன் பாட்டி… உனக்கும் தாத்தாக்கும் கல்யாணமாகி ஒரு இருபது வருஷம் கழிச்சு தாத்தா இறந்தாரே… நீ ஏன் வேறுயாரையாவது பார்த்து இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல? அப்போ உனக்கும் பெரிசா வயசாகிடலயே!”
அவள் முடிக்கும்போது… “அடியே… என்ன பேச்சு பேசற?!” என கத்தியிருந்தார் பாட்டி.
அவரின் பரிமாணத்தைப் பார்த்து ஏளனப்புன்னகையுடன், “உனக்கு இருபது வருஷம்னா எனக்கு பத்து வருஷம். என்ன, நீ தாத்தா கூடவே இருந்து ரெண்டுபேரும் சந்தோஷமா வாழ்ந்தீங்க… நானும் தீரனும் தள்ளி இருந்து சந்தோஷமா வாழ முயற்சி பண்ணிட்டு இருக்கோம். கேட்கவே எவ்ளோ நல்லா இருக்குல்ல!” அவள் புன்னகை விரக்தியாக இப்போது வெளிப்பட்டது.
“தாத்தாவை தவிர வேற ஆளை சும்மா பேச்சுக்கு சொன்னாகூட உனக்கு கோபம் வருதுல்ல? அதுபோலத்தான் எனக்கும். தீரனை தவிர அந்த இடத்துல வேற யாரா இருந்தாலும்… எனக்கு எரியும்!”
அழுத்தமாக அவள் சொன்னபோது, அவள் பெரியப்பா கொஞ்சமும் கூச்சமில்லாமல்… “உனக்கு எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்ல. நாங்க நினைச்சது போல நம்ம கூட்டத்து பையனோட உன் கல்யாணம் நடக்கணும். நீ இனி சென்னை போக முடியாது” என்றதும், சத்தமாக சிரித்தாள் சமீரா.
“பெரியப்பா… நீங்க காமெடி எதுவும் பண்ணலையே? நான் என் ஆஃபீஸ்க்கு தொடர்ந்து ரெண்டு நாள் சொல்லாம லீவ் எடுத்தா, இங்க வீட்டு வாசல்ல… உங்க மாமா வீட்ல இருந்து வந்து நிப்பாங்க”
அவர் முகம் குழப்பத்தைக் காட்ட… சமீரா, “போலீஸ் அக்கா கேஸ தூசி தட்டி எடுத்திருக்காங்கலாமே… அப்படியா?” நக்கலாக சிரித்து… “நான் வேலை பார்க்கிறது நீங்க சொல்றீங்களே உங்க கூட்டம், இனம்… இதுபோல இனவெறியை எதிர்க்கிற ஆளு கிட்ட தான்”
அந்த மனிதனின் பெயரை சொன்ன சமீரா… “உங்கள பத்தி அக்குவேறு ஆணிவேரா எல்லாமே அவருக்கு தெரியுமாமே… என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்னு சொல்லியிருக்கார். இந்த வீட்ல இருந்து எதை கத்துக்கிட்டேனோ இல்லயோ… தந்திரமா யோசிக்க கத்துக்கிட்டேன்”
தோள்களைக் குலுக்கி சொன்ன சமீரா… “இப்போ நினைச்சா கூட உங்கள மீறி என்னால கல்யாணம் பண்ணிக்க முடியும். ஆனா அப்படி பண்ணா, நீங்க என் தீரனை சொன்ன பொறுக்கிங்கிற வார்த்தை உண்மையாகிடும்! அப்புறம் இதுவரை நாங்க காத்திருந்த வாழ்க்கை, உங்ககிட்ட நான் குடுத்த வாக்கு எல்லாமே வீண்”
பின் பாட்டியிடம் திரும்பி, “அடுத்த தடவை உன்கிட்ட கொஞ்சம் நல்ல பெர்ஃபோர்மன்ஸ் எதிர்பார்க்கறேன் பாட்டி” சொல்லிவிட்டு வெளியேறிவிட்டாள்.
ஆட்சி மாற்றத்தால்… சமீரா சொன்னதுபோல, சமீராவின் பெரியப்பா மகள் மற்றும் அவளின் கணவன் இறந்தது குறித்து இப்போது தோண்ட ஆரம்பித்திருந்தார்கள் காவல் துறையினர். ஆதலால் எதுவும் செய்ய முடியாமல் அடங்கிப்போக வேண்டியதாயிற்று.
சமீரா நடந்தது அனைத்தையும் தன் அம்மாவிடம் பகிர்ந்துகொண்டு… சென்னைக்குக் கிளம்பினாள். தீரனை பார்க்க கொள்ளை ஆசை தோன்றினாலும், அதே அளவுக்குக் கோபமும் தலைக்கேறியது. ஆகையால் வந்ததையும் சொல்லவில்லை கிளம்பியதையும் சொல்லவில்லை.
அங்கே தீரனோ, கிட்டத்தட்ட ஜடமாக கிடந்தான். என்னதான் சமீராவிடம் பேசிவிட்டாலும், ஒவ்வொரு அணுவும் அவளை வேண்டித் தவித்தது. அவளையே சுற்றும் மனதைத் தடுக்கமுடியவில்லை.
‘எப்படியாவது அவள் தன்னிடம் வரமாட்டாளா’ என்ற தவிப்பு மேலோங்கியது. ‘தற்போது எப்படி இருக்கிறாள்’ என்ற எண்ணம் மண்டையைப் பிய்த்து தின்றது. அவனின் நிலையைப் பெற்றோரால் பார்க்க முடியவில்லை. சமீராவின் அம்மாவிடம் எப்போதாவது பேசுவார் மீனாட்சி.
மகனின் நிலையை கருத்தில் கொண்டு, சமீராவின் அம்மாவிற்கு அழைத்தார். சமீராவின் அம்மா, சமீரா வந்தது… பேசியது, சென்றது என அனைத்தையும் சொல்ல, மீனாட்சியின் கண்கள் அவளை எண்ணிக் கலங்கியது.
உடனே தீரனிடம் சொல்ல, உடைந்துவிடும் நிலையில் இருந்த அவன், மீனாட்சியை கட்டிக்கொள்ள… கண்களிலிருந்து கண்ணீர் வெளியேறியது. அவனை ஆதரவாக தட்டிக்கொடுத்தார் மீனாட்சி.
சமீராவின் எல்லையற்ற காதல், அன்பு… அவனுக்கு இன்பமாக மூச்சை முட்டியது. உடனே அழைத்தான் அவளை. அழைப்பு எடுக்கப்படவில்லை. தொடர்ந்து அழைத்தான். ஹும்ஹ்ம்! பதிலில்லை.
‘அவள் குரலைக் கேட்டே ஆகவேண்டும்’ மனதின் பெரும் ஆசையை தட்டிக்கழிக்க முடியாமல், வீட்டில் சொல்லிக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டான்.
சமீராவை எந்த வகையிலும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. திருச்சியிலிருந்து சென்னை வரை பயணம் முழுவதும் தன் எண்ணிலும், வீட்டிலுள்ளவர்கள் எண்ணிலும் தொடர்புகொள்ள முயற்சிதான். பலனில்லை.
இதுவரை இருந்த மனநிலை லேசாக மாற, அவள் அலுவலகத்துக்கு அழைத்தான். அவள் வரவில்லை என்றார்கள். பதட்டத்துடனே வீட்டிற்கு சென்றான். அங்கும் ஏமாற்றமே.
தன் மீதுள்ள கோபத்தால் தன்னை தவிர்க்கிறாளா இல்லை திருச்சியிலிருந்து வரும்போது ஏதாவது பிரச்சனையா, மனம் பலவிதமாக யோசித்து பதட்டம் அடைந்தது. கூடவே அவள் வீட்டின் ஆட்கள் மீது கடுங்கோபம் எழுந்தது.
அவனுக்கு தெரிந்த, அவர்கள் சந்திக்கும் இடத்திலெல்லாம் தேடிப்பார்த்தான், கடற்கரையைத் தவிர. இந்த வெய்யிலில் கடற்கரைக்குப் போயிருக்க மாட்டாள் என எண்ணினான். தீரன் வீட்டில் கூட கொஞ்சம் பதட்டம் அடைந்தனர்.
கடைசியாக வேறு வலி தெரியாமல் கடற்கரை சென்றான் வேர்க்க விருவிருக்க. பதற்றத்தால் கால்கள் பின்ன, முன்னேறியபடி நடந்து சென்று பார்த்தபோது… அவர்கள் எப்போதும் அமரும் இடத்தில்… கரையில் கட்டப்பட்டிருந்த படகின் நிழலில் கையில் சோளத்துடன் கடலை பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
வீட்டிற்கு அழைத்து சமீராவை பார்த்துவிட்டதாக சொல்லிவிட்டு, அவள் அருகில் அவன் செல்ல… பக்கத்தில் நிழல் தெரிந்து திரும்பிப் பார்த்த சமீரா தீரனை பார்த்தாள், பின் கவனத்தைக் கடல் அலையிலும் மக்காச்சோளத்திலும் திருப்பினாள்.
இவ்வளவு நேரம் அழைத்தும் எடுக்காமல், தன்னை சுத்தலில் விட்டவளை முறைத்தபடி அவள் அருகில் உட்கார்ந்தான். மூச்சு வாங்கியது. அது புரிந்து தண்ணீரைப் பையிலிருந்து எடுத்து கொடுத்தாள்.
அவன் வாங்காமல் இருக்க, அவன் பக்கத்தில் வைத்துவிட்டு மறுபடியும் கொறித்தாள். அவளை முறைத்தபடி, கோபத்தை புறம் தள்ளிவிட்டு அந்த பாட்டில் தண்ணீரை காலி செய்தான்.
சில நொடிகள் சென்றிருக்கும்… தன் கையை அவன் புறம் நீட்டினாள். இதழ்களில் புன்னகை. அவன் முகத்திலும் மென்னகை. ஆனால் அடி மனதினுள் அடக்கப்பட்ட கேவல் கண்களைக் கலங்கச்செய்தது.
அவளின் கையை பற்றி தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான். அவன் கைகளை இறுக பற்றிக்கொண்டாள். ‘என்ன வாழ்க்கை இது?!’ என்ற கேள்வியே இருவருள்ளும். கடல் அலையை வெறித்தனர்.
அந்த அலைகளில் மூழ்கி வெளிவரமுடியாத நிலை போல தவித்தது அவர்கள் உள்ளம். சேர்ந்திருக்கும் அந்த கனமான நேரத்தை, கணப்பொழுதும் வீணாக்காமல் அடுத்தவரின் அருகாமையில் கழித்தனர்.
****
ராஜீவ் திவ்யா நிறுவனத்தில், ஒருவழியாக லேஆஃப் எனப்படும் ஆட்குறைப்பு ஒரு முடிவுக்கு வந்திருந்தது. தினம் தினம் பார்த்த சிலரை, இனிமேல் பார்க்கவே முடியாது… அப்படியே துண்டித்து வெட்டியது போல உணர்ந்தனர் பலர்.
ஆட்குறைப்பு முடிந்தவுடன், அடுத்து அப்ரைசல் எனப்படும் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு பற்றிய பேச்சுக்கள் ஆரம்பமானது. ராஜீவ்வுக்கு மேலாளராக பதவி உயர்வு தர மேல்மட்டக் குழுவால் முடிவாகியிருந்தது.
பல வருடங்களாக ஒரே நிறுவனம் மற்றும் ப்ராஜக்ட்டில் வேலைபார்த்து, அந்த ப்ராஜக்ட் பன்மடங்காக வளர்வதற்கு அவனும் ஒரு காரணகர்த்தாவாக இருந்த காரணத்தினால் இந்த பதவி உயர்வைத் தர முடிவு செய்திருந்தார்கள்.
ராஜீவ்வுடன் இதுகுறித்து பேசவும் செய்திருந்தார்கள்.
திவ்யா அன்றொருநாள் உடன் பணிபுரிபவர்களின் பேச்சைக் கேட்டதிலிருந்து யோசனையிலேயே இருந்தாள். ‘தன் திறமைக்கு கிடைக்கும் எந்த ஒரு அங்கீகாரமும் ராஜீவ்வுடனான தன் உறவுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும், அதனால் தான் கிடைத்தது என்ற பேச்சுக்கள் வரும்’ என்பது புரிந்தது.
ராஜீவ்விடம் இதுபற்றி பேச எண்ணியிருந்தாள். ஆனால் அவள் பேசும்முன் அவனே அதைப்பற்றிப் பேச முடிவெடுத்திருந்தான். இருவரும் காப்பி எடுத்துக்கொண்டு எப்போதும் செல்லும், இருகட்டிடங்களை இணைக்கும் பாலத்திற்குச் சென்றார்கள்.
இருவர் மனதிலும் இதற்கு முன் அவ்விடத்தில் நின்ற இனிமையான தருணங்கள் வந்து சென்றது. அப்போது இருந்த அதே இடைவெளி இப்போதும் இருந்தாலும், மனதளவில் ஒன்றிய உணர்வு. மற்றவர் மீதான உரிமை அந்த இடைவெளியைக் கூட நிரப்பியது.
இப்போதெல்லாம் இருவரும் நிறைய பேசினார்கள். அவன் உரிமையுடன் அவளைச் சீண்டினான். அவள் மனம்விட்டு அவனிடம் பேசினாள்.
அப்படி இரண்டு தினங்களுக்கு முன் அவனுடன் அவள் பேசியபோது… அவள் கேட்கும் பாடல் வரிகளுடன் ராஜீவ்வை ஒப்பிட்டுப்பார்த்ததைப் பற்றி சொன்னாள்.
அதற்கு அவன், “அன்னைக்கு ட்ரெயின்ல எனக்கு குட் நைட் மெசேஜ் அனுப்பிட்டு லேசா ப்ளஷ் பண்ணியே… அப்போ என்ன லைன்ஸ் கூட என்னை இமாஜின் பண்ண?” என்று கேட்டு அவளை லேசாக தடுமாற செய்தான்.
முதலில் சொல்லமாட்டேன் என்றாள். அவன் விடவில்லை. அவளை சொல்ல வைத்தான்.
‘உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்… என் நாணங்கள் ஏன் தோற்குதோ! உன் வாசனை வரும் வேளையில்… என் யோசனை ஏன் மாறுதோ’
இதை அவள் சொன்னதும்… அதன் பொருள் புரிந்து, ரசனையுடன் அவளை பார்த்து அவன் ரசித்தது, அவளை மறுபடியும் தடுமாறச் செய்தது. இருந்தும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்க முற்பட்டாள்.
இதற்கு முன் இருவரும் சந்தித்த இடங்களுக்கு… தற்போது செல்லும் சமயமெல்லாம் அவள் முன்பு எண்ணிய பாடல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டான்.
இதோ இப்போதும் அவன் அதே கேள்வியைக் கேட்க, கள்ளப்புன்னகையுடன் பாடல் வரிகளை அவள் சொன்னாள். அவளை ஆராதிக்கும் ரசிகன் போல அவன் பார்வை இப்போதும் அவளை வட்டமிட்டது.
அத்தருணத்தை இருவரும் மனதில் நிறைத்துக்கொண்டனர். சில நிமிடங்கள் சென்றிருக்கும்… அவளிடம் கேட்க எண்ணியதைக் கேட்டான் ராஜீவ்.
“உன்கிட்ட முன்னாடியே கேட்கணும்னு இருந்தேன் ரதி. உனக்கு இந்த ப்ராஜக்ட் ஓகேவா? செட் ஆகிருச்சா?” அவள் மனதை அறிய முயன்றான்.
அவன் சாதாரணமாக கேட்கிறான் என எண்ணி, அவள்… “இதுவரை நான் வேலைபார்த்ததிலயே இதுல தான் நிறைய கத்துட்டு இருக்கேன் ராஜு. நீங்க சொன்ன மாதிரி கரியருக்கு நல்ல ஸ்கோப் கிடைச்சிருக்கு!” என்றாள்.
சிறிய இடைவெளி விட்ட திவ்யா, தன் மனதில் உறுத்திக்கொண்டிருந்ததை சொன்னாள். “இதுபோல பேச்சு இருந்துட்டே இருக்கும் ராஜு. அதுனால ஒன்னா ப்ராஜக்ட் மாறணும் இல்ல, கம்பனி மாறணும். வேற வழியில்லை” கொஞ்சம் வருத்தத்துடன் சொன்னாள்.
“இல்லையே பாரதி! இன்னொரு ஆப்ஷன் கூட இருக்கு” என்றதும் புரியாமல் பார்த்தாள்.
அவன், “நான் ப்ராஜக்ட் மாறினா நீ இங்கயே இருக்கலாம். இன்னமும் நிறைய கத்துக்கலாம். கரியர் கிராஃப் கண்டிப்பா உயரும்” சாதாரணமாக சொன்னான். ஆனால் அதைக் கேட்ட திவ்யா அதிர்ந்தாள்.
தனக்குப் பதவி உயர்வு கிடைக்கப்போவது அவனுக்கு முன்னமே தெரியும். தன்னுடன் இருப்பதால், திவ்யாவின் திறன் வெளிப்படாமல் போவதும் தெரியும். ஆகையால் திவ்யாவிற்கு இந்த ப்ராஜக்ட் பிடித்துள்ளது என்றால் தான் வேறு ப்ராஜக்ட்டுக்கு மாறிக்கொள்ளலாம் என நினைத்தான்.
படபடப்புடன் திவ்யா, “ராஜு! நோ… டோன்ட் டூ திஸ். உங்களோட இத்தனை வருஷ உழைப்பு, நீங்க ரொம்ப எதிர்பார்த்த இந்த ப்ரோமோஷன் இப்போதான் கிடைச்சிருக்கு” தனக்காக அவன் அதைப் பொருட்படுத்தாமல் மாறிக்கொள்கிறேன் என்று சொன்னது அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனதின் படபடப்பு கண்களில் தெரிந்தது.
அந்நிறுவனத்தின் வழக்கப்படி… ஒருவேளை இந்த ப்ராஜக்ட்டில் இருந்து அவன் வேறு ஒன்றிற்கு மாறிவிடும் பட்சத்தில், இந்த பதவி உயர்வு தற்போது இருக்கும் ப்ராஜக்ட்டில் வேறு ஒருவருக்குப் போய்விடும். புதிதாக செல்லும் இடத்தில் தன் திறமையை அவன் நிரூபித்துக் காட்டி… பின் பதவி உயர்வு பெறவேண்டும்! அதற்கு நிச்சயம் காலம் எடுக்கும்!
குடித்துக்கொண்டிருந்த காப்பி அவளுக்கு இறங்கவில்லை. அவளின் நிலை புரிந்து, “ரதி ரிலாக்ஸ். இந்த வருஷம் இல்லைன்னா அடுத்த வருஷம்… அவ்ளோதானே” அவளை அவன் சகஜமாக்க முயற்சிதான்.
அவன் சொல்வது போல அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை எண்ணி… “நோ நோ ராஜு, இது சரிப்பட்டு வராது. நான் ரிசைன் பண்ணிடறேன்” வார்த்தைகள் வேகமாக வந்தது.
“ஸ்டாப் இட் ரதி! சும்மா சும்மா கம்பனி மாறுறது லாங் ரன்ல உதவாது. பிளஸ், இங்க உனக்கு நல்ல ஸ்கோப் இருக்கு… புரிஞ்சிக்கோ!”
வேலை என்பது அவள் மனதிற்கு மிகவும் நெருக்கமானது, அந்த வேலையில் தன்னை உயர்த்திக்கொள்வதற்கு அவள் எடுக்கும் சிரத்தை… அவனுக்குத் தெரியும். அந்த உயர்வு இந்த இடத்தில் நிச்சயம் கிடைக்கும். எல்லா இடங்களிலும் இது கிடைப்பது கடினமே என்பதால் அவளுக்காக யோசித்து இந்த முடிவை எடுத்திருந்தான்.
இன்னமும் பல பல நிறுவனங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் உயர்வது என்பது மிகவும் குறைவே. ஒரே அனுபவமுள்ள ஆணுக்கும் பெண்ணுக்குமே ஒரே ஊதியம் கிடைப்பதில்லை. பதவி உயர்வு பற்றிச் சொல்லவே வேண்டாம்!
தனக்காக அவன் செய்யும் இந்த செயல் அவளை முற்றிலுமாக அசைத்தது. அவள் எவ்வளவு மறுத்தும் அவன் பிடிவாதமாக இருந்தான். அவளைச் சம்மதிக்கவும் வைத்தான்.
‘தன்னை திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண், குடும்பம் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள மட்டும் தான்… பணியில் அவள் உயரவேண்டும் என்ற அவசியமில்லை’ என்று எண்ணும் ஆண்கள் மத்தியில்… ‘திவ்யா மிகவும் விரும்பும் பணியிலும் அவள் சிறக்கவேண்டும்’ என எண்ணும் ராஜீவ் வித்தியாசமாக தெரிந்தான்.
*******
நாட்கள் வேகமாக நகர்ந்தது. இதோ திருமணத்திற்கான நாளும் நெருங்கியது. குவைத்திலிருந்து திலீப் அப்பா ஸ்ரீதரன் வந்திருந்தார்.
அந்த மகிழ்ச்சியான நாட்களைக் குலைப்பதுபோலவே வந்திருந்தது அந்த செய்தி… திவ்யாவின் பழைய லீட் ராகேஷ்… எடிட் செய்த திவ்யாவின் படங்களை அனுப்பிவைத்திருந்தான்!
அதை பார்த்த திவ்யாவின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தார்கள் என்றால், அதை பார்த்த திலீப்பின் தங்கை கீர்த்தியோ, ராஜீவ்வை நோகடிக்க கிடைத்த வாய்ப்பு என எண்ணி மனமகிழ்ந்தாள்!
