உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே -3B
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 3B:
திவ்யா ராஜீவ்வை தொடர்புகொண்டு, அவனை சந்தித்து பேசவேண்டும் என்று சொன்னதும், ரக்கை கட்டிக்கொண்டு பறந்தது அவன் மனது! சரி என பதில் அனுப்பி மணியை சொன்னான்.
எதற்காக என்னவென்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் பேசவேண்டும் என சொன்னதே அவ்வளவு இனிமையாக இருந்தது.
மதியமும் வந்தது. சற்று முன்னதாகவே வந்தவன், அவளுக்காக காத்திருந்தான். கொஞ்சம் பெரிய இடம். பேச வேண்டும் என அவள் சொன்னவுடன், எழுந்த ஆர்வத்தில்… அவளிடம் எங்கே காத்திருப்பான் என்பதை சொல்லவில்லை.
அவளும் ஒரு இரண்டு மூன்று நிமிடங்களாக அவனை தேடியபடி வந்துகொண்டிருந்தாள். ஒருகட்டத்தில் சுற்றி பார்த்துக்கொண்டு வந்தவளை அவன் கண்டுகொண்டு, எழுந்து கையசைத்தான். அவள் மட்டும் தான் வந்திருந்தாள்.
அவனை நெருங்கியவுடன், “சாரி” என்று அவளும் சொல்ல, அவனும் அதையே சொன்னான்.
“இல்ல லேட் ஆயிடுச்சு… அதான்” அவள் சொன்னவுடன், “எங்க வெயிட் பண்றேன்னு நானும் சொல்லல” என அவனும் சொன்னான். இருவரும் புன்னகைத்துக்கொண்டனர்.
“டேக் டௌன் மை நம்பர்! சோ நெக்ஸ்ட் டைம் இந்த பிரச்சனை இருக்காது” என அவனே தன் எண்ணை கொடுத்தான். பதிலுக்கு அவள் எண்ணையெல்லாம் அவன் கேட்கவில்லை. அதுவே அவளுக்கு அவன்மேல் ஒருவகையான மதிப்பை ஏற்படுத்தியது.
“ஃபிரெண்ட் வரலையா?” ராஜீவ் கேட்டதற்கு, “இல்ல” அவள் சொன்னதும்… “அப்போ வாங்க சாப்பாடு வாங்கிட்டு வந்துடுவோம்” என்றான்.
இருவரும் உணவு வாங்க வரிசையில் நின்றனர். அவள் பின்னே அவன் நிற்க, இருவருக்குள்ளும் ஒரு குறுகுறுப்பு.
ஓரளவு இடைவெளி இருந்தது. இருந்தும், நம்மனதுக்கு பிடித்த ஒருவர், எதற்கு பிடிக்கும் என்றெல்லாம் தெரியாத ஒரு நபர், எந்த ஒரு உறவுக்குள்ளும் வராத ஒருவர்… நம்முடன் இருக்கும்போது ஏற்படும் ஒரு பரபரப்பே இருவரும் உணர்ந்தனர். கிட்டத்தட்ட அட்ரினலின் ரஷ் போல!
ஏனோ ஒருமுறை அவனை திரும்பிப்பார்க்கச் சொன்னது அவள் மனம். புன்னகையுடன் திரும்பினாள். அழகாகப் புன்னகைத்தான். அவள் இருந்த மனநிலையில் அவனின் பார்வை மற்றும் புன்னகை, ஏதோ உள்ளுக்குள் செய்ய, ஏன் பார்த்தோம் என்றாகிவிட்டது.
அவனுக்கும் அவள் பார்த்ததும், இனம்புரியாத உணர்வு. இதுவரை நிறைய பெண்களை பார்த்திருக்கிறான், சிலர் அவனை ஈர்த்திருக்கிறார்கள். ஆனால் திவ்யாவுடன் இருக்கும்போது, வித்தியாசமாக உணர்ந்தான்.
உணவு வாங்கிவிட்டு இருவரும் இருக்கையில் அமர்ந்தனர்.
அமைதியாக ஓரிரு நொடிகள் கழிய, அவனே பேச்சை ஆரம்பித்தான். “நீங்க டெய்லியும் இங்க தான் சாப்பிடறதா பாரதி?”
சட்டென அவன் கேட்டதும், “ஆன்! ஆமாம். PG சாப்பாடு மதியம் வரைக்கும் நல்லா இருக்காது. மார்னிங் நைட் அங்க சாப்பிட்டுப்பேன்” என்றவள், ஏதாவது அவனையும் கேட்கவேண்டும் என்பதற்காக, “நீங்க?” என்றாள்.
“நான் சில நாள் சமைச்சு எடுத்துட்டு வந்துடுவேன்… இல்ல, ஃபுட் கோர்ட் தான்” என்றான். சமைப்பான் என்பதைக் கேட்டதும், அவன் தங்கும் இடம் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
உடனே, “எங்க ஸ்டெ பண்ணிருக்கீங்க” என அவள் கேட்க, இடத்தை சொன்னவன், “ஃபிரெண்ட் கூட வீடு எடுத்து தங்கிருக்கேன். சோ ஏதாவது சமைச்சா எடுத்துட்டு வந்துடுவேன்” என்றான் புன்னகையுடன்.
“ஓ!” அதற்கு மேல் என்ன பேச என அவளுக்கு தெரியவில்லை. பேசிவந்த விஷயத்தை அப்படியே கேட்பதற்கு தயக்கம். காரியவாதி என நினைத்துவிட்டால் என்ற எண்ணம். முன்பு இருந்த மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதுபோல இருந்தது.
சில நொடிகள் கழித்து, “ஏதோ பேசணும்னு சொன்னீங்க பாரதி!” அவனே கேட்டான்.
லேசாக தயங்கியவள், பின்… “என்…என் ஃபிரெண்ட் அன்னைக்கு பார்த்தீங்கல்ல… ஹரிணி” என்றதும், சாப்பிட்டுக்கொண்டே தலையசைத்தான்.
“வேலைக்கு சேர்ந்து த்ரீ மந்த்ஸ் ஆகப்போகுது. ப்ராஜெக்ட் எதுவும் மேப் ஆகல. பெஞ்ச்ல தான் இருக்கா… நம்ம டெக்னாலஜி தான். ரொம்ப பயப்படறா, வேலைக்கு ப்ரோப்லம் வந்துடுமோனு” என்றாள்.
பதிலுக்கு, வெறுமனே “ஓ!” என்றான்.
பெஞ்ச்/ஃப்ரீ பூல் என்பது, வேலை செய்ய ப்ராஜெக்ட் கிடைக்காமல் இருப்பதை சொல்வார்கள். பொதுவாக சில நிறுவனங்களில், சில காலம் மட்டுமே அப்படி இருக்க முடியும். காலக்கெடு முடியும் நேரம், ப்ராஜெக்ட் கிடைக்கவில்லை என்றால் வேலைக்கே ஆபத்து ஏற்படும்.
திவ்யாவுக்கு ராஜீவ்விடம் கேட்க மிகவும் சங்கடமாக இருந்தது. ஆனால் ஹரிணி வருத்தத்துடன் கேட்கச்சொல்லி சொன்னபோது மறுக்கமுடியவில்லை.
“உங்க ப்ராஜெக்ட்ல ஏதாவது ஸ்லாட் இருக்கா?” என்றாள் மிகவும் தயக்கத்துடன்.
அவளின் தயக்கம் அவனுக்கு புரிந்தது. இருந்தும் தன் நிலைப்பாட்டை சொன்னான்.
“நான் தர்ற மெயில் ID’க்கு ப்ரொஃபைல் அனுப்ப சொல்லுங்க. வினய்… கான்டெக்ட் பெர்சன். நான் இப்போ இன்டெர்வியூ பண்றதில்ல. சோ, வினய் தான் ஹேண்டில் பண்றான்” என்றவுடன் தான் அவளுக்கும் ஒரு விஷயம் பளிச்சிட்டது.
அன்று நேர்காணலுக்கு அவள் வந்தபோது, வினய் தான் நேர்காணல் எடுப்பதாக இருந்தது. ஆனால் ராஜீவ்விடம் அனுப்பப்பட்டாள்.
“ஓ! வினய்… தெரியும்! இன்டெர்வியூ அப்போ பாயிண்ட் ஆஃப் கான்டேக்ட்னு அவரை தான் சொன்னங்க” என்றாள்.
“ஹ்ம்ம்! யெஸ் ஹி இஸ். பட், ப்ராஜெக்ட் கிடைக்கும்னு அஷுரன்ஸ் தர்றது கஷ்டம் பாரதி. யூ நோ ரைட்? பிரிப்பர் பண்ணிட்டு, அவங்கள நல்லா பெர்ஃபார்ம் பண்ண சொல்லுங்க. லெட்ஸ் ஸீ!” என்றான் வெளிப்படையாக, பரிந்துரை வேலைக்கு ஆகாது என்பதுபோல!
“கண்டிப்பா சொல்றேன். தேங்க்ஸ் அண்ட் ஸாரி” என்ற சொன்னவளை கேள்வியாகப் புன்னகையுடன் பார்த்தான்.
“கேட்க ரொம்பவே சங்கடமா இருந்தது. தப்பா எடுத்துக்காதீங்க!” அவள் தயக்கத்தை அவள் முகம் வெட்டவெளிச்சமாக்கியது. ஏனோ அவளை இப்படிப் பார்க்க பிடிக்காமல், “ஹே காமான்! இதுல என்ன இருக்கு? லெட்ஸ் கிவ் இட் அ ட்ரை! அவ்ளோதான்” என்றான். லேசாக புன்னகைத்தாள்.
அவளை சகஜமாக்க, “அப்புறம் இங்க எவ்ளோ வருஷம் இருக்கீங்க பாரதி?” என கேட்டான். அவளும் சொன்னாள்.
பின், “எந்த ஊர் நீங்க?” என கேட்க, “திருச்சி… நீங்க?” என கொஞ்சம் மொஞ்சமாக சாதாரணமாக பேச ஆரம்பித்தாள்.
இருவரும் பேசிக்கொண்டிருக்க, அந்நேரம் அங்கே ஒரு பெண் வர, ராஜீவ்வின் கவனம் அங்கே திரும்பியது.
“ஹே ஆர்கே! எப்படி இருக்க?” என்றாள் அப்பெண். “நல்லா இருக்கேன் மாலினி!” என்றவன் அவளின் நலம் விசாரித்தான். பின் திவ்யாவை அறிமுகப்படுத்தினான். ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு கிளம்பிவிட்டாள்.
“அவங்க ஹெச்ஆர்! எம்ப்ளாயீ வெல்ஃபேர் கமிட்டீல ரெண்டு பேரும் இருக்கோம். ஃபன் ஈவென்ட்ஸ் ஆர்கனைஸ் பண்றது, பிரச்சனைகளை கேட்டு தெரிஞ்சிக்கறது சோ அண்ட் சோ” என்றான் திவ்யாவிடம்.
இதே மாலினி தான் ராஜீவ் ப்ராஜெக்ட்டுக்கு திவ்யாவை பின்னாளில் அனுப்பப்போகிறாள் என்பது மூவருமே அப்போது அறியவில்லை.
“நிறைய எக்ஸ்ட்ரா ஆக்டிவிடீஸ்ல இன்வால்வ் ஆகியிருப்பீங்க போல!” மனதில் தோன்றிய கேள்வியை கேட்டாள் திவ்யா.
“வேலை வேலைனு அதுமட்டுமே பார்த்தா, ஸ்ட்ரெஸ் ஆகும் பாரதி. இதுபோல டைவெர்ஷன் இருந்தா நல்லா இருக்கும்” என்றான். அதை ஆமோதிப்பதுபோல சரி என்றாள். இருவருக்கும் அழகாக அன்றைய மதியவுணவு வேளை கழிந்தது.
வினய்யிடம், திவ்யா மற்றும் அவளின் பரிந்துரை பற்றி எதுவும் சொல்லாமல், ஹரிணி என்ற பெண்ணை நேர்காணல் செய்து பொருத்தமான நபரா என பார்க்கச்சொன்னான் ராஜீவ்.
அடுத்தநாளே ஹரிணியை வினய் அழைத்திருந்தான். நேர்காணல் முடிந்தவுடன், ‘இரண்டு மாதம் தற்காலிகமாக சேர்த்துக்கொண்டு, வேலை செய்யும் திறனை பார்த்து பின் இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்ற நிபந்தனையுடன் அவளை தன் ப்ராஜெக்ட்டுக்கு எடுப்பதாக சொன்னான் வினய்.
ஹரிணிக்கு அவ்வளவு சந்தோஷம். திவ்யாவிடம் பகிர்ந்துகொண்டாள்.
அடுத்தநொடி, “தேங்க்ஸ் ராஜீவ்!” என்ற முதல் குறுஞ்செய்தியை ராஜீவ்வுக்கு அனுப்பினாள்!
——
அந்த வார, வெள்ளிக்கிழமை வேலை முடிந்து தன் அண்ணன் தீரனுக்காக காத்திருந்தாள் திவ்யா. ஊருக்கு டிரைனில் செல்ல தான் முடிவெடுத்திருந்தாள். ஆனால் தீரன் காலையில் அவளை அழைத்து, தான் ஒரு வேலையாக வருவதாகவும், அவளையும் அழைத்துச்செல்வதாகவும் சொன்னவுடன், அவனுக்காக காத்திருந்தாள்.
அவனும் வந்தான். கொஞ்ச நேரம் காத்திருந்த குறுங்கோபத்தில், முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, பையை பின் சீட்டில் கிட்டத்தட்ட எறிந்துவிட்டு, காரில் ஏறினாள்.
சமீராவைவிட்டு பிரிந்த வேதனையிலிருந்த தீரனுக்கு, தங்கையின் இம்முகத்தைப் பார்த்ததும் மனநிலை மாறியது.
“ஏன் மங்கி மாதிரி மூஞ்சியை வச்சிருக்க!” அவளை வம்பிழுத்தான். “போடா டாங்கி” என்றாள் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு.
“சரி கோபம் வேணாம்… சமியை பார்த்துட்டு வந்தேன் பாரதி. அதான் லேட்!” என்றவுடன், கோபமெல்லாம் பறந்ததுபோல… “நானே கேட்கணும்னு இருந்தேன்… அண்ணியை பார்த்துட்டு வர்றயானு. போன வாரம் அவங்கள பார்க்க போக முடியலணா. எப்படி இருக்காங்க?” என்றாள்.
“பரவால்ல டா! ஏதோ இருக்கா” என்ற அவனின் குரலே சொன்னது அவன் வருத்தத்தை.
“எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்ணா” என்றாள் எப்போதும் சொல்லும் வார்த்தையை. வெறுமையாகப் புன்னகைத்த தீரன், “சரி சொல்லு புது வேலை எப்படி இருக்கு?” என்றதும், அவளை மீறி ராஜீவ்வின் முகம் தான் முதலில் வந்தது.
சிரமப்பட்டு முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு, வேலையைப் பற்றி சொன்னாள். இருவரும் கொஞ்ச நேரம் பேசியபின், திவ்யா கண்ணுறங்கிவிட்டாள்.
நடு இரவு… திருச்சி வந்து சேர்ந்தார்கள். வீட்டில் அவளுக்காக அவர்களின் பெற்றோர் தூங்காமல் காத்திருந்தார்கள்.
தூக்கத்துடன் இறங்கிய திவ்யா, வீட்டில் தந்தையை பார்த்ததும், “அப்பா!” என அவள் அப்பா ஷங்கரை கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சினாள். மூன்று வாரம் ஆகியிருந்தது.
ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் பொதுவாகவே வந்துவிடுவாள். சிலசமயம் அவள் அப்பா ‘பார்க்கவேண்டும் போல இருக்கிறது’ என்றால், வாரக் கணக்கெல்லாம் பார்க்காமல் வந்துவிடுவாள். அப்பா செல்லம். தீரன் அம்மா பிள்ளை.
தீரன் உள்ளே நுழைந்ததும் தீரனின் அம்மா மீனாக்ஷி, அவனின் முகவாட்டத்தை வைத்தே அவன் மனநிலையை கண்டுகொண்டார். சமீராவை பார்க்கப்போவதாக சொல்லிவிட்டுத்தான் கிளம்பியிருந்தான்.
எதையும் கேட்டு அவனை சங்கடப்படுத்தாமல், உணவை எடுத்துவைத்தார். மகனின் வாழ்க்கை மற்றும் சமீராவை எண்ணி எப்போதும்போல மனதுக்குள் வருந்தினார்.

As usual superb narration😍😍
Friend kaga recommendations ah?
Dheeran and sameera ku between enna nadanthurukum..🤔🤔
Thank you so much 🙂 Dheeran Sameera poga poga reveal aagum da 🙂