உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 18
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 18:
திவ்யா ராஜீவ் இருவருக்கும் அலுவலகத்துக்கு திரும்பி ஓரிரு நாட்கள் கடந்திருந்தன. அவர்களின் ப்ராஜக்ட்டில் இருவருக்கும் திருமணம் பேசி முடித்திருக்கிறார்கள் என்ற செய்தி ஓரளவிற்கு பரவியும் இருந்தது.
இவ்விஷயம் தெரிந்தபோது, அவளுடன் வேலைபார்க்கும் கவின் முதலில் அதிர்ந்தாலும்… அவன் கொஞ்சம் எதிர்பார்த்தது தான். இருந்தும் அவன் மனம் அவளின் திருமணத்தை எண்ணி மிகவும் வருந்தியது.
அன்றைய தினம் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, ராஜீவ், வினய் மற்றும் சில லீட்ஸ்… மேனேஜருடன் முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். வெகுநேரம் ஆகியும் முடிந்தபாடில்லை.
அரசல் புரசலாக விஷயம் லேசாக கசிந்திருந்தது. அந்நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பள உயர்வை எதிர்பார்த்திருக்க… அந்நிறுவனமோ ஆட்கள் குறைப்பு பற்றிய முடிவை எடுத்திருந்தது. அதற்கான ஒரு முடிவை எடுக்கத்தான் ராஜீவ் மற்றும் அனைவரும் கூடியிருந்தனர்.
மென்பொருள் நிறுவனங்களில் லேஆஃப் (Layoff) எனப்படும் ஆட்குறைப்பு… நிரந்தர பணிநீக்கம் மிகவும் சகஜமான ஒன்று. அதற்கு நிறைய காரணிகள் இருந்தாலும், முக்கியமாக குறிவைக்கப்படுவது இடைநிலை மற்றும் உயர்நிலை ஊழியர்கள் தான். முக்கிய காரணம் அவர்களின் ஊதியம்.
அவ்வூதியத்திற்கு அவர்கள் தகுதியானவர்களா என சில நிறுவனங்களில் பார்த்தாலும் பெரும்பாலான நிறுவனங்களில் அவ்வளவு அதிகமான ஊதியம் தருவதற்குப் பதில் குறைத்த சம்பளத்தில் கடைநிலை ஊழியர்கள் போதும் என எண்ணுவார்கள். வெகுசில நிறுவனங்களில் வேலைத்திறனை வைத்து ஆட்குறைப்பு செய்வார்கள்.
அவ்வாறு நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவோருக்கு ஒரு குறிப்பிட்ட பணத்தைக் கொடுப்பதாகச் சொல்லி… பணிநீக்கம் செய்வார்கள். ஒருவேளை அவ்வூழியர் இதற்கு மறுத்தால், ஒன்று பேரம் பேசுவார்கள் இல்லை… ‘டெர்மினேஷன்’ என சொல்லி மறைமுகமாக மிரட்டுவார்கள். ஒரு ஊழியர் பணியிலிருந்து டெர்மினேட் செய்யப்பட்டால் அடுத்த வேலை கிடைப்பது மிகவும் கடினம்!
திவ்யாவுக்கு இச்செய்தி கிடைத்த போது மனதில் லேசான ஒரு நெருடல் இருந்ததென்னவோ உண்மை தான். அவளின் வேலை நேர்த்தியாகத் திருத்தமாக இருக்கும் என அனைவரும் அறிந்ததே.
இருந்தும் அவள் காதுபடவே பேசிய சில பேச்சுக்கள் அவளை கொஞ்சம் வருந்தச்செய்திருந்தது. அவளுடைய வேலையின் திறனை பின்தள்ளி… ராஜீவ்வின் காதலி மற்றும் வருங்கால மனைவி என்ற புதிய பட்டம்… அவளின் வேலையை உறுதி செய்யும் என சிலர் கிசுகிசுத்தனர்.
திவ்யா சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியிருந்த நிலையில், பதவி உயர்வை அவள் எதிர்பார்க்காவிட்டாலும், சம்பள உயர்வை எதிர்பார்த்தாள். ஆனால் இவர்களின் பேச்சைக் கேட்டவுடன், ஒருவேளை தன் திறமைக்கு அது கிடைத்தாலும்… இவர்கள் நிச்சயம் வேறுதிசையில் கதைகட்டி விடுவார்கள் என்பது புரிந்தது.
ராஜீவ் அவனிடத்திற்கு வந்தபோது அவன் கண்டது எதையோ யோசித்துக்கொண்டிருந்த திவ்யா. அவளிடம் வினவுவதற்கு முன் முக்கியமான வேலை இருந்ததை உணர்ந்த ராஜீவ், அவர்களுடன் பணிபுரியும் நடுத்தர வயது மிக்கவரை மேனேஜரிடம் அழைத்துச்சென்றான்.
அவருக்கு பின்… வினய் இரண்டு பேரை ஒவ்வொருவராக அழைத்துச் செல்ல காத்திருந்தான்.
சில நிமிடங்கள் கடந்த பின், அவ்வூழியர் பேயறைந்தாற்போல வெளியே வந்தார். கண்கள் லேசாக கலங்கி இருந்தது. அவரின் முகமே அவரின் நிலையை அனைவருக்கும் வெட்டவெளிச்சமாகியது. அவர் தன்னிடத்தில் இருந்து தன் சொந்த பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு தயக்கத்துடன் அனைவரையும் பார்க்க… திவ்யாவுக்கு உள்ளுக்குள் படபடத்தது.
வராத புன்னகையை வரவழைத்து, அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அம்மனிதர் வெளியே செல்ல… அவரை வழியனுப்பும் பொருட்டு கனத்த மனதுடன் உடன் வேலை பார்ப்பவர்கள் சென்றார்கள். அதே நிலை தான் வினய் அழைத்துச்சென்ற இருவருக்கும்.
ராஜீவ் திவ்யாவை உடன் அழைத்துக்கொண்டு வெளியே அவர்களுக்காகக் காத்திருக்க… வினய்யும், அந்த நடுத்தர வயதுமிக்கவரும் அவர்களிடம் வந்தனர். திவ்யா கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டாள்.
அவரின் முகம் பார்த்த ராஜீவ் “ஒண்ணுமே பண்ண முடியலண்ணா… எவ்வளவோ பேசினேன்… ஏற்கனவே முடிவு பண்ணிட்டாங்க… எங்களுக்கும் வேற வழி தெரியலணா!” மனம் வருந்திச் சொன்னான்.
“நீ என்ன பண்ணுவ ஆர்கே!” என்றவர் சற்று தொண்டையை செருமிக்கொண்டு… “ரெண்டு பசங்கடா… படிக்கிறாங்க. என்னனு போய் என் மனைவிகிட்ட சொல்வேன்?” என்றவர் கண்கள் முழுவதும் கண்ணீர்.
மாதாமாதம் வரும் சம்பளம் அப்படியே நின்றுவிட்டால்? அடுத்தென்ன செய்வது என யாருக்குமே ஒரு பதட்டம் ஏற்படும். எதிர்காலத்தை எண்ணி பயம் ஏற்படும். குடும்பத்தை எண்ணி பரிதவிப்பு உண்டாகும். அந்நிலையில் தான் அவர் இருந்தார்.
“அண்ணா!” வினய் இப்போது அவரை சமாதானம் செய்ய, “சேர்த்துவச்ச பணமெல்லாம் போட்டு ஊர்ல வீடு கட்டினோம் வினய். தங்கச்சிக்கு வேற கல்யாணம் முடிவு ஆகியிருக்கு டா… இப்போ போய்… இப்படி”
வார்த்தைகள் தடுமாறி, விட்டால் உடைந்துவிடும் நிலையில் பேசினார். அவர் நிலையைப் பார்த்து யாருக்குமே நெஞ்சம் அடைக்கும்.
மென்பொருள் நிறுவனத்தில் வேலைசெய்பவர்களை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு… பளபளப்பாக மின்னும் கண்ணாடி போல தெரியும்! ஆனால் எப்போது வேண்டுமானாலும் உடையும் நிலை தான் அவர்களின் நிலை. அதிக ஊதியம்… ஆடம்பர வாழ்க்கை என்பது பொதுவான கண்ணோட்டம். ஆனால் வாழ்க்கையில் கடினப்பட்டு… படித்து, முன்னேறி இதுபோன்று வேலை பார்ப்பவர்கள் தான் அதிகம்!
அவர் பேச கேட்டுக்கொண்டிருந்த திவ்யாவால், அதற்கு மேல் அங்கு நிற்கமுடியவில்லை.
அவளை ராஜீவ் பார்த்தாலும்… அவரிடம், “அண்ணா… ப்ளீஸ். இதோட வாழ்க்கை முடிஞ்சுடாதுணா. வேற ஏதோ ஒன்னு நமக்காக காத்திருக்குனு நினைச்சுக்கோங்க” அவன் சொல் கேட்டு அவர் சலித்துக்கொண்டார்.
“என்னோட ஃபிரெண்ட் கம்பெனில டெக்னிகள் சைட்ல ஓபனிங் ஒன்னு இருக்குண்ணா. நீங்க ரேஸுமே அனுப்புங்க. நல்லா பிரிப்பர் பண்ணிட்டுப்போங்க… கண்டிப்பா அங்க கிடைக்கும்” ராஜீவ் உறுதியாக சொல்லி அவரை தேற்றி அனுப்பிவைத்தான். சொன்னதுபோலவே அவருடைய விவரங்களை நண்பனிடம் பகிர்ந்துகொண்டான்.
திவ்யா முகமாற்றத்தைப் பார்த்திருந்தவன், வினய்யிடம் சொல்லிவிட்டு… ‘நாயர் டீ கடைக்கு செல்லலாம்’ என அவளை அழைத்துச்சென்றான்.
எதுவும் பேசாமல் அவள் நடக்க… “பாரதி” என்ற அவன் அழைப்பிற்கு ஹ்ம்ம் மட்டுமே பதிலாக வந்தது. அடுத்து அவன், “ரதி!” என்று அழைக்க… “நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்குனு சொன்னாரே… எப்படியும் வேலை கிடைச்சுடும்ல ராஜு? ரொம்ப டெடிகேடட்டா வேலை பார்ப்பார்!” அவளின் ஆதங்கம் புரிந்தது அவனுக்கு.
மென்மையாக அவள் கையை பற்றிக்கொண்டு, “லவ் யுவர் ஜாப் பட் நாட் யுவர் கம்பெனி சொல்வாங்களே… அதுபோல தான் பாரதி. இந்த வேலை இல்லைனா இன்னொன்னு! பாரதிக்கு இதெல்லாம் சொல்லனுமா என்ன?” அவள் முகம் இன்னமும் தெளிவடையாமல் இருப்பதைப் பார்த்தவன் சற்று நிறுத்தி…
“சரி இதெல்லாம் இருக்கட்டும். கிஸ்ஸஸ் அக்ரிமெண்ட் ஞாபகம் இருக்கா? எங்க என் கிஸ்ஸஸ்?” என்றதும் அவள் இப்போது முறைத்தாள். கூடவே புன்னகையும் எட்டிப்பார்த்தது.
அவன் விடாமல், “ப்ராஜக்ட்ல மட்டும் இல்ல, இதுலையும் டெட்லைன் எனக்கு ரொம்ப முக்கியம் பாரதி! மிஸ் ஆச்சு… வட்டியோட சேர்த்து மொத்தமா வாங்கிடுவேன்” இதழோரத்தில் புன்னகையுடன் சொன்னதும்… “அப்படியா லீட்! எப்படி என்கிட்ட இருந்து வாங்கறீங்கன்னு நானும் பார்க்கிறேன்” குறும்புப்புன்னகையுடன் சவாலிட்டாள்.
இருவரின் எண்ணங்களும் ஒருசேர இந்த கிஸ்ஸஸ் அக்ரிமெண்ட் நடந்த தினம்… திவ்யாவின் வீட்டிற்கு அவன் வீட்டினருடன் வந்து பார்த்த தினத்திற்குச் சென்றது.
‘பெண் பார்க்க வருகிறார்கள்’ என்று திவ்யாவிடம் மீனாட்சி சொன்னவுடன், அதிர்ந்தாள் திவ்யா. ராஜீவ்விடம் பேசவேண்டும் போல இருந்தது. இருந்தும் அவன் தன்னிடம் அவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்து… பழகியது கடுங்கோபத்தைத் தந்தது.
அதே கோபத்துடன் வெளியே வந்து பார்த்தவளுக்கு இன்ப படபடப்பைத் தந்தான் ராஜீவ். ராஜீவ், திலீப், பவித்ரா, மற்றும் ஜானகி வந்திருந்தார்கள்.
ஜானகியிடம் முதலில் திலீப் தன் தங்கை கீர்த்தி இல்லாத நேரம் பார்த்து இதுகுறித்து சொன்னபோது, கத்தினார்… குதித்தார். ஆனால் திலீப் பொறுமையாகப் பேசினான்.
“நம்மகிட்ட இதுவரைக்கும் தனக்கு இதுவேணும்னு அவன் ஏதாவது கேட்டிருக்கானா இல்ல ஆசைப்பட்டிருக்கானா மா? அவன்கிட்ட இருந்து பிடுங்க முடிஞ்ச அளவுக்கு கீர்த்தி வாங்கிட்டா. ஆனா அதை கூட அவன் சந்தோஷமா தானே கொடுத்தான்.
அப்படிப்பட்டவனுக்கு இன்னமும் எவ்ளோ சங்கடத்தை கொடுக்கணும்மா? அந்த சின்ன வயசுல அப்பா அம்மாவை இழந்துட்டு எவ்ளோ தவிச்சான். அப்போல்லாம் நீங்க அவனை எப்படி பார்த்துட்டீங்க? பாவம் மா அவன்”
திலீப் பேச பேச அவருக்கு லேசாக கண்கள் கலங்கியதென்னவோ உண்மை. ஒன்றுமறியா சிறுவயதில் பெற்றோருக்காக ராஜீவ் ஏங்கியது அவர் கண் முன்னே வந்தது. வேறு எதுவும் அவருக்கு இப்போது தெரியவில்லை. அவர் மனதை மாற்ற கீர்த்தி இல்லை. தெளிவாக ஓரிரு நொடிகள் யோசிக்க முடிந்தது.
உடனே, “ஆமா டா. நம்ம ஜீவாக்கு அவனுக்கு பிடிச்ச நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுப்போம். பிள்ளை பாவம் நிறைய அனுபவிச்சுட்டான்” என்றார் மனம் வருந்தி.
திலீப்புக்கு நிம்மதியாக இருந்தது. இருந்தும் கீர்த்தியிடம் அவர் பேசினால் பிரச்சனை செய்வாளே என தோன்ற, “கீர்த்தி ஏதாவது சொல்வா… தயவுசெய்து அதை கேட்டுட்டு மனசு மாறிடாத. இந்த ஒரு விஷயத்துல என் பேச்சை கேளுமா.
பொண்ணு வீட்ல நம்ம வீட்டை பத்தி ரொம்ப பெரிசா நினைச்சுட்டு இருக்காங்க. நீ ராஜீவ்வை சொந்த பிள்ளை போல பார்த்துட்டனு பெருமையா சொன்னாங்க. நம்மளே அதை கெடுத்துக்க வேணாம்மா” அவரை பெருமை பேசிவிட்டார்கள் என்றதும் மிகவும் சந்தோஷமாகிவிட்டது ஜானகிக்கு.
கீர்த்திக்கு விஷயம் தெரிந்து ஏதேதோ செய்துபார்த்தாள். ராஜீவ்வுக்கு நல்லது என்றால் அவளுக்கு பொறுக்காதே. ஆனால் ஜானகி அதற்கு இசைந்துகொடுக்கவில்லை. இதோ திலீப்புடன் கிளம்பி வந்தாயிற்று.
இவர்கள் அனைவரையும் பார்த்த திவ்யாவுக்கு திகைப்பு. ராஜீவ்விடம் அவளுக்கு தீர்க்கவேண்டிய கணக்கு வேறு இழுவையிலிருந்ததால் அதை பற்றி தான் அவள் மனம் முதலில் எண்ணியது.
அவன் லேசாக புருவம் உயர்த்தி, அவளைப் பார்த்து மென்னகை உதிர்க்க… அந்த புன்னகை மொழியில் கோபமெல்லாம் கரைவதுபோல இருந்தது அவளுக்கு. திவ்யாவின் திகைப்பைப் பார்த்து… ஜானகியைத் தவிர அனைவரும் முகத்தில் புன்னகை.
“எப்படி சர்ப்ரைஸ்!” தீரன் அவள் காதில் கிசுகிசுக்க… “இதெல்லாம் உன் வேலை தானாடா அண்ணா?” என முறைத்தாள் திவ்யா. தோள்களைக் குலுக்கி ஒத்துக்கொண்டான் அண்ணன்.
அவள் கண்கள் அவ்வப்போது ராஜீவ்வை தொட்டு மீண்டது. உடனே, “சரி சரி சைட் அடிச்சது போதும்! தொடச்சுக்க ஹேன்கி வேணுமா?” தீரன் கிண்டல் செய்ய, யாரும் அறியாவண்ணம் அவனை கிள்ளிவைத்தாள்.
வந்தவர்களுக்கு முதலில் குடிக்க கொடுத்த மீனாட்சி, அடுத்து ஏதோ செய்ய உள்ளே செல்ல, பவித்ராவும் சகஜமாக அவருடன் உள்ளே சென்றாள். அவளின் எளிமை மிகவும் பிடித்துவிட்டது மீனாட்சிக்கு. இருவரும் உணவை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.
திலீப்பும் தான் ஒரு மருத்துவர் என பெருமை பேசாமல் மிகவும் சாதாரணமாகப் பேசினான். அது சங்கருக்கு பிடித்தது. ஜானகியின் அமர்த்தலான பேச்சு லேசாக யோசனையைத் தந்தாலும், மகளின் விருப்பத்திற்கு முன் அது பெரிதாக தெரியவில்லை.
திலீப் அப்பா பற்றி சொன்னார்கள். இன்னமும் ஓரிரு வருடங்கள் அங்கே வேலைபார்த்துவிட்டு திரும்பிவிடுவார் என்று ஜானகி சொல்லவும், திலீப்… ‘தானும் ராஜீவ்வும் எவ்வளவோ சொல்லியும் அவர் வேலையை விட மறுக்கிறார்’ என்றான். திருமணத்திற்கு முன்பு நிச்சயம் வருவார் என்ற வாக்குறுதி தரப்பட்டது.
தீரன் திவ்யாவை வம்பிழுப்பதில் தீவிரமாக இருந்தான். ஏற்கனவே ராஜீவ் மேல் கடுப்பிலிருந்தவள், அதை கொட்டித்தீர்க்க எண்ணி… “தீராண்ணா” என்றாள்.
இவள் மரியாதை நிமித்தமாக அழைக்கிறாள் என்றாலே ஏதோ எதிர்பார்க்கிறாள் என்று அந்த அண்ணனுக்குத் தெரியாதா என்ன!
“மங்கி மரியாதையா பேசுதே! என்ன காத்திருக்கோ… ஹ்ம்ம் சொல்லு” அவன் வேண்டுமென்றே அவளை சீண்ட… “ஒன்னும் தேவையில்ல” என அவள் முகத்தைத் திருப்பிக்கொள்ள, இதை பார்த்துக்கொண்டிருந்த ராஜீவ்வுக்கு இதனைத்தும் அழகாக தெரிந்தது.
“சரி சொல்லு” என அவளை இடித்து தீரன் கேட்க, இன்னமும் முறுக்கிக்கொள்ளாமல்… “அவர்கிட்ட பேசணும்ணா” என்றாள் ராஜீவ்வை பார்த்து. அவனுக்காக பார்த்து பார்த்து செய்யும் தங்கைக்கு இதுகூட செய்யாமல் இருப்பானா அண்ணன்.
உடனே சங்கரிடம், “ப்பா, பாரதியை ராஜீவ்வுக்கு தோட்டத்தை சுத்திக்காட்ட சொல்லுங்க” என்றான். மகனின் கூற்று, அதாவது மகளின் ஆசை புரிந்தது அப்பாவிற்கு.
“ஆமாம் ஆமாம் மாப்பிள்ளையை கூட்டிட்டு போடா பாரதி” என்றார். மீனாட்சி ராஜீவ்விடம், “போயிட்டு வாங்கப்பா” என்றார். இது திவ்யாவின் திட்டம் தான் என அவனுக்குத் தெரிந்தது.
இரண்டு நாட்களாக எவ்வளவோ அவளைத் தொடர்பு கொள்ள முயற்சிதான் ஆனால் அவள் பேசவேயில்லை. அவனுக்கும் காரணம் தெரியவேண்டும்.
அங்கிருந்த செடியைப் பார்த்து அவள் நிற்க, அங்கிருந்த நித்யமல்லியின் வாசம் அவன் நாசியை துளைத்தது. அவளின் கோபம் பார்த்துப் புன்னகைத்தவாறே, அவள் அருகில் சென்றவன்…
எப்போதும்போல் பின்னாலிருந்து… “என்ன கோபம் பாரதிக்கு?” என்றான் மெல்லிய குரலில். கோபத்துடன் தான் அவள் திரும்பினாள்… ஆனால் அவனின் முகத்தை அருகில் பார்த்ததும், மனதினுள் மத்தாப்பு.
அவன் பின்னே செல்லும் மனதைக் கடிந்தவாறே… நேராக விஷயத்திற்கு வந்தாள்.
“ராகேஷ் விஷயம் தெரிஞ்சும் ஏன் என்கிட்ட சொல்லல ராஜீவ்?” இதை அவன் எதிர்பார்க்கவில்லை.
சில நொடிகள் எடுத்துக்கொண்டான். பின் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன், அவளை உட்கார சொல்ல, அவள் மறுத்தாள். அவள் கரம் பற்றி உட்காரச்செய்தவன்…
“என்ன சொல்லணும் பாரதி? நானா வந்து எப்படிச் சொல்ல முடியும்? மோரோவர் சொல்ற அளவுக்கு அதென்ன அவ்ளோ பெரிய விஷயமா?” தீர்க்கமாக கேட்க… “எவ்ளோ கேவலமான எடிட்ஸ்! உங்களுக்கு அது பெரிசில்ல. ஆனா எனக்கு அப்படியில்ல. ” என்றாள் வெடுக்கென.
அவளின் இந்த கோபம் அவனை இன்னமும் மயக்கச் செய்தது. அவளின் ஒவ்வொரு பரிமாணத்தையும் ரசித்து உள்ளெடுத்துக்கொண்ட ராஜீவ், புன்னகையுடன்… “ஹ்ம்ம் அப்படியா…? நான் தான் பார்த்தேனே பாரதி… சும்மா அசால்ட்டா நீ அவனை ஹாண்டில் பண்ணினத” அவளை குறுகுறுவென பார்த்துச் சிரித்தான்.
‘எல்லாம் பார்த்திருக்கிறான். அதுதெரியாமல் முட்டாளாக இருந்திருக்கிறேனா!’ என்ற தேவையில்லாத வீம்பு எழ, அதை வார்த்தைகளினால் வெளிப்படுத்தினாள்.
“ஓ! அப்போ விஷயம் தெரிஞ்சு… அப்புறம் தான் இந்த லவ் எல்லாம்ல” அவள் முடிக்க… “******!” ஒரு ஆங்கில பீப் வார்த்தை அவனிடமிருந்து வந்தது. அவள் முறைத்தாள். அதையெல்லாம் சட்டை செய்யாமல்…
அன்று அலுவலகத்தில், அவள் குரலைக் கேட்ட முதல் நாள்… நடந்த விஷயங்களைச் சொன்ன ராஜீவ், அவள் விழிகளின் மாற்றங்களை விழியெடுக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டே…
“மொதல்ல அந்த பொண்ண நான் பார்க்க கூட இல்ல. யாருனு கூட தெரியாது. பட், அவங்க பேசினது அந்த டைம்ல ஒரு சில் ஃபீல் கொடுத்துச்சு. டேக் இட் ஈசி மாதிரி தோணுச்சு!” என்றதும் திவ்யா புன்னகைத்தாள்.
“அப்புறம் நடந்தது பாரதிக்கே தெரியுமே! சோ அந்த நாள் எனக்குள்ள வந்த மாற்றம் தான் வளர்ந்து வளர்ந்து, இப்போ இங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு! வேற *** எந்த ரீசனும் இல்ல” என்றான் புரிகிறதா என்ற பார்வையில்.
அவளுக்குள்ளும் அன்று தானே ராஜீவ் நுழைந்திருந்தான். இப்போது அவன் அவள் பேச்சால், தன்னிலை விளக்கம் கொடுத்தபின் வேண்டுமென்றே அமைதியாகிவிட… திவ்யாவிற்கு தான் அவனின் மௌனம் இம்சித்தது.
‘தான் அப்படி பேசியது தவறோ’ என யோசித்தாள். பின், அவனிடம் மன்னிப்பு வேண்டினாள், அதுவும் மெல்லிய ராகமான குரலில்!
இதுவரை அவள் இப்படிப் பேசியதில்லை, இப்போது பேசி கேட்கையில் அவனுள் ஏதேதோ புதுவித ரசாயன மாற்றங்கள். அதை காட்டிக்கொள்ளாமல். “உன் மன்னிப்பு யாருக்கு வேணும்!” என்றான் முதல் முறை உரிமை பேச்சுடன்.
அது அவளுக்கு புரிந்தது. புன்னகைத் தானாக இதழில் குடிகொண்டது. வேண்டுமென்றே வம்பிழுக்கிறான் என்பதும் புரிந்தது.
“ நமக்குள்ள ஒரு அக்ரீமெண்ட் பாரதி! இனிமே நோ ஸாரிஸ்! அதுக்கு பதிலா ஒன்லி கிஸ்ஸஸ்! சோ ஐ நீட் ஒன்!” என்றான் ஏதோ முக்கிய விஷயம் பேசுவதுபோல முகத்தை வைத்துக்கொண்டு.
திவ்யா ‘பே’ என விழிக்க… சட்டென வந்த சிரிப்பை அடக்கிய ராஜீவ், “நான் சொன்னது சாக்லேட்!” அழுத்தமாக சொல்ல… “பார்றா! இன்னும் கிஸ்ஸஸ் இந்தியாவுக்கு வரவே இல்லையாம்” என்றாள் என்னிடமேவா என்பது போல்.
“ரதி… ரதி! கொஞ்சம் மெனக்கெடணும். கிடைக்காத பொருள் இல்லை அது” என்றான். பின், “ஒருவேளை நான் கேட்ட கிஸ்ஸஸ் கிடைக்கலைனா, நீ நினச்சா கிஸ்ஸஸ் தான் சப்ஸ்டிடியூட்! பட் கண்டிப்பா வேணும்” கண்ணடித்துச் சொன்னது, அவளை முறைக்கவைத்தாலும்… வயிற்றினுள் பட்டாம்பூச்சி எஃபெக்டால் ஏற்பட்ட பூகம்பம்!
அவளின் மனநிலையைச் சரியாக கணித்தான் அந்த லீட்! இதோ இப்போதும் அதைத் தான் அவளிடம் கேட்கிறான்… ‘அதுவும் தன்னுடைய வேலையுடன் ஒப்பிட்டு’. திவ்யாவும் ஏதேதோ சொல்லி இதுநாள் வரை சமாளித்துக் கொண்டிருக்கிறாள்.
——–
நாட்கள் அதன் வேகத்தில் நகர்ந்தது.
சமீரா வேலை நிமித்தம் ஒரு மலைப்பிரதேசத்துக்குச் சென்றிருந்து… அன்று தான் திரும்பி இருந்தாள்.
கிட்டத்தட்ட ஒருவாரம் தீரனிடம் பேசமுடியவில்லை. அவன் குரல் கேட்க ஆர்வத்துடன் அழைக்க… அழைப்பு எடுக்கப்படவில்லை.
சிறிது நேரம் கழித்து அழைத்த தீரன் அவளிடம் நலம் விசாரித்த பின்… “சமி! இதை நான் சொல்லுவேன்னு நினச்சு கூட பார்க்கல. ஆனா இப்போ எனக்கு வேற வழி தெரியல சமி. நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துட்டேன். ஆனா எல்லாம் கையை மீறி போய்டுச்சு!” என்றவன்… அடைத்த தொண்டையைச் சரி செய்துகொண்டு,
“பாரதி கல்யாணத்தோட என் கல்யாணமும் பண்ணியே ஆகணும்னு, பாரதி மாப்பிள்ளை வீட்ல சொல்றாங்க. ஏதோ அவங்க நெருங்கிய சொந்தமாம் அந்த பொண்ணு. முடியாதுனு சொன்னா பாரதி கல்யாணம் நடக்காதுனு மிரட்றாங்க. என்ன செய்றதுன்னே தெரியல. என் ஆசைக்காக பாரதி வாழ்க்கையைப் பணயம் வைக்கணும். இல்ல அவங்க சொல்றத கேட்கணும் சமி” என்றபோது… கிட்டத்தட்ட உறைந்து நின்றிருந்தாள் சமீரா.
இதை சொல்லிவிட்டு அப்படியே சரிந்தான் தீரன். சமீரா இவன் சொல்வதை நம்புவாளா மாட்டாளா?! அவனுக்கு தெரியவில்லை. ஆனால் சமீராவின் வீட்டில் உள்ளார்கள் விருப்பம் இதுவே எனும்போது… அதுவும் காரண காரியத்துடன் அவர்கள் சொன்னபோது… தீரனால் மறுக்க முடியவில்லை. இருந்தும் தன் காதலின் மீது அவனுக்கு கடலளவு நம்பிக்கை இருந்தது!
