Preethi S Karthikஉயிர்க்கூட்டின் சரிபாதி உனதே

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே -4

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 4:

தீரன் பார்த்து சென்ற பின், சமீராவின் நிலை மிகவும் மோசமாகிவிட்டிருந்தது. அவனின் அருகாமைக்காக ஏங்கிக்கொண்டே இருந்தது அவள் மனம். 

அவள் வயது முப்பதைத் தொடும் தருவாயில் இருக்க, இருக்கும் மன உளைச்சல் போதாது என்று, உடன் வேலைப்பார்ப்பவள் சொன்ன சில விஷயங்கள் அவள் மனதை வருத்தியது. வேறு வழியில்லாமல் தீரனை அழைத்துப் பேசினாள். 

அப்போது தான் வீட்டிற்கு வந்தவன், உணவை முடித்திருக்க… சமீராவின் அழைப்பை எடுத்து பேசினான். உடன் வேலைபார்ப்பவள் சொன்ன விஷயத்தை சொல்லி கலங்கிய சமீராவை தேற்றவே பெரும்பாடாகிப்போனது தீரனுக்கு. 

மனம் முழுவதும் சமீராவின் எண்ணங்களே சூழ்ந்திருக்க, நினைவு பெட்டகத்தில், ஒன்பது வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தது அவன் மனம். 

அப்போது பார்த்த சமீராவையும், இப்போது இருக்கும் சமீராவையும் ஒப்பிடாமல் இருக்கமுடியவில்லை. கண்களிலிருந்த உயிர்ப்பு, பேச்சிலிருந்த துடுக்குத்தனம் இன்னும் பல… இப்போது அனைத்துமே மறைந்திருந்தது. எப்போதும் மனதில் அழுந்தும் அதே கேள்வி, ‘ஏன் அவளை காதலித்தோம்?!’ என்பது பூதாகரமாக எழுந்தது. 

அந்த CA பயிற்சி நிலையத்தில் சமீரா சேட்டர்ட் அக்கௌன்டன்ட் (CA) பயின்றுகொண்டிருக்க, ஏற்கனவே திருச்சியில் பிரபல அரசு கல்லூரியில் எம்பிஏ ஃபைனான்ஸ் படித்துக்கொண்டிருந்த தீரன், அதே நிலையத்தில் பகுதி நேரப் பயிற்சியாக… சேர்ட்டிஃபைட் மேனேஜ்மென்ட் அக்கௌன்டன்ட் (CMA) பயிற்சியில் சேர்ந்திருந்தான்.

அங்கே தான் சமீராவை முதல் முறை தீரன் பார்த்தான். 

அவன் மற்றும் சிலர் முதல் நாள் வகுப்புக்காக வந்திருக்க, அங்கே ஏற்கனவே சிஏ இன்டர் பயின்றுகொண்டிருந்தாள் சமீரா. 

தீரன் பார்ப்பதற்கு அமைதியாகத் தெரிந்தான். அவனை பற்றி தெரியாமல், சிஎம்ஏ தானே என எண்ணி, மற்றவர்களுடன் சேர்ந்து கலாய்த்துக்கொண்டிருந்தாள் சமீரா. அவனும் எதிர்க்காமல் அமைதியாகவே  இருந்தான். 

ஓரிரு நாட்கள் இப்படி கழிய, தீரனின் தோற்றம் சமீராவை வசீகரித்தது. அது அப்பட்டமாக அவள் உடன் படிப்பவர்களுக்கு தெரிய, அவளை ஏகத்துக்கும் ஓட்ட ஆரம்பித்தனர். சமீராவை இதுபோல நிறைய பேருடன் சேர்த்து வைத்து கிண்டல் செய்துள்ளதால், சமீராவுக்கு இது பெரிதாகத் தெரியவில்லை. விளையாட்டு தானே என விட்டுவிட்டாள்.

தீரனை பார்க்கும்போதெல்லாம், ‘சமீராஆ’ என வேண்டுமென்றே அவளை அழைப்பதும், கேலி செய்வதுமாக கடந்தது. இதெல்லாம் தீரனுக்கும் தெரிந்திருந்தது. 

முதல் நாள் அதிக வாய் பேசி கலாய்த்த சமீராவை அவனும் பார்த்திருந்தான். ‘என்ன பேச்சுடா சாமி!’ என்றே அவன் எண்ணம் இருந்தது. இருவரையும் சேர்த்து வைத்து கிண்டல் செய்தபோதெல்லாம் அவனுக்கு கோபமாக வந்தது. அதுவும், அவள் மறுக்காமல், தட்டி கேட்காமல் இருந்தது எரிச்சலாக வந்தது.  

இப்படி இருக்கையில் நடந்த ஒரு நிகழ்வு தான் இருவரையும், முக்கியமாக தீரனை அவள் புறம் சாய வைத்தது. 

கனத்த மனநிலையுடன் இருந்த தீரனை கடந்த கால இனிமையான நிகழ்வுகள் லேசாக்கியது. கூடவே, கிட்டத்தட்ட பதினாலு, பதினைந்து மணிநேரம் வண்டி ஓட்டிய அசதியால், கண்களை தூக்கம் ஆட்கொண்டது. 

அடுத்தநாள் விடிந்தும் தீரன் எழவில்லை. அவனை வீட்டில் யாரும் தொந்தரவு செய்யவில்லை. 

தீரன் திவ்யாவின் பெற்றோர் ஷங்கர் மற்றும் மீனாக்ஷி இருவருமே வாங்கி ஊழியர்கள். அந்த சனிக்கிழமை வார விடுமுறை ஆகிவிட, வீட்டில் அனைவருமே இருந்தனர். 

முகப்பில் நாளிதழை படித்துக்கொண்டிருந்த ஷங்கரின் தோளில் தூங்கி எழுந்து வந்த திவ்யா தலைசாய்த்து உட்கார, உடனே பேப்பரை மடித்துவைத்துவிட்டு மகளின் புறம் கவனத்தை செலுத்தினார்.

“ஏன்டா தூக்கம் இன்னும் போகலையா?” என அவள் முடியை வருடி அவர் கேட்க, “இல்ல பா சும்மா தான்” என்றாள் இன்னமும் அவரோடு ஒட்டிக்கொண்டு. 

“வேலையெல்லாம் எப்படி இருக்கு பாரதி” அவள் அப்பா கேட்க, விளக்கமாக அனைத்தையும் சொன்னாள். 

பின் அவர், “உன்கூட வேலை பார்த்த பொண்ணுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கலன்னு சொன்னயே… என்னடா ஆச்சு?” பொதுவாகவே அனைத்து விஷயத்தையும் தந்தையுடன் பகிர்ந்துகொள்வாள் திவ்யா. 

அவரும் அனைத்தையும் கேட்டுக்கொள்வார். இப்போது கேட்டதற்கு, “கிடைச்சுடுச்சு பா… நான் சொன்னேன்ல, என்னை ஒருத்தர் இன்டெர்வியூ பண்ணார்னு. அவர்கிட்ட ஹெல்ப் கேட்டேன், அவரும் ஹரிணியை இன்டெர்வியூ பண்ண சொல்லி, அப்புறம் செலக்ட் பண்ணிட்டாங்க” என்றாள். 

“சூப்பர் டா! சூப்பர்… யாரு அந்த ஸ்மார்டா இருந்தான்னு சொன்னயே அந்த பையனா?” என மகளின் காதில் ரகசியம் பேசினார் அப்பா. “உஷ்ஷ்! மெதுவா!” என சிரிப்புடன் சொன்ன திவ்யா, கண்களில் குறும்புடன் ஆம் என தலையசைத்தாள்.  

அவரோ சத்தமாக சிரித்தார் மகளின் செயல்களை பார்த்து!

ராஜீவ் என்ற பெயரை சொல்லாமல் அவனை பற்றி சில பல தகவல்களை அவரிடம் பகிர்ந்துகொண்டிருந்தாள் திவ்யா. 

இருவரும் சற்று நேரம் வேலையே பற்றி, பின் இதர விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, “ரொம்ப எளச்சுப்போய்ட்ட டா” மகளை வாஞ்சையாக பார்த்து சொன்னார். அப்போது குடிக்க அவளுக்கு காப்பி எடுத்துக்கொண்டு வந்தார் மீனாக்ஷி. 

“ஒழுங்கா நல்ல சாப்பாடு சாப்பிட்டா தானே! இந்த வயசுல சாப்டா தான் பின்னாடி உடம்பு நல்லா இருக்கும்” என கடிந்தபடி காப்பியை அவர் நீட்ட, “மீனு குழந்தையை திட்டாத… நம்மளையெல்லாம் விட்டுட்டு தனியா இருக்கால்ல” என மகளுக்காக பேசினார் அப்பா.  

“ஆமா மீனு திட்டாத… நான் பாவம்” என அம்மாவை, அப்பா போலவே அழைத்து, அம்மாவிடம் இருந்து காப்பியை கண்ணனடித்து வாங்கிக்கொண்டாள். 

“வரவர கொழுப்பு அதிகமாயிடுச்சு!” என மகளின் தலையில் கொட்டி, அவளின் பக்கத்தில் அமர்ந்த மீனாக்ஷி, “இவ குழந்தையாங்க? இவை கூட படிச்ச பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆகி குழந்தையே இருக்கு” என்றதும்… அம்மாவை பார்த்து முறைத்தாள் திவ்யா. 

“இவளுக்கே குழந்தை பிறந்தாலும், எனக்கு எப்பவுமே என் பொண்ணு தான் பெருசு!” ஷங்கர் சொல்லவும், அப்பாவை கட்டிக்கொண்டு ஹைஃபை செய்தாள் திவ்யா. 

“சரி சரி… போதும் உங்க கொஞ்சல். அவகிட்ட பேசணும்னு சொன்னதை பேசுவோம்” என்றார் மீனாக்ஷி. 

அண்ணன் வாழ்க்கையை எண்ணி திருமண பேச்சிற்கே இத்தனை நாட்கள் மறுத்திருந்தாள் திவ்யா. ஆனால் அவளை அப்படியே விட முடியாதே என எண்ணி அவ்வப்போது பேசி பேசி கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதை மாற்றினர். 

“என்னவாம்?” திவ்யா கேட்க, ஷங்கர்… “வேற என்ன டா… மாப்பிள்ளை பார்க்கிற வேலையை ஆரம்பிக்கலாமான்னு யோசிக்கிறோம்” என்று சொன்னது தான் தாமதம், குடித்துக்கொண்டிருந்த காப்பி புரையேறியது திவ்யாவுக்கு.

“என்ன டா” அவள் அப்பா கேட்டதும், “இப்போ என்ன பா அவசரம்? தீராண்ணா இப்படி இருக்கப்போ… அதுவும் இல்லாம இப்போ தான் புது கம்பெனில சேர்ந்திருக்கேன். கொஞ்ச நாள் போகட்டுமே” என்றாள்.

“தீரன் விஷயத்தை விடுன்னு சொல்லியிருக்கேன் பாரதி. அப்புறம்… மாப்பிள்ளை பார்த்து, உடனே என்ன அடுத்த முகூர்த்தத்துலயேவா கல்யாணம் பண்ணப்போறோம்? இப்போ ஆரம்பிச்சா… 6 மாசமோ ஒரு வருஷமா இல்லை அதுக்கும் மேல எடுக்கும்” என்றார் அவளின் அம்மா. 

அவர் சொல்வதற்கும் காரணம் இருந்தது. சமீராவை பற்றி சொல்லித்தான் திவ்யாவிற்கு மாப்பிள்ளை பார்க்கவேண்டும். எத்தனை பேர் இதை ஏற்றுக்கொள்வார்கள் என தெரியவில்லை. காலா காலத்தில் திவ்யாவிற்கு திருமணம் செய்துவைப்பது நல்லது என நினைத்தார். மகனிடமும் கணவரிடமும் கூட முன்னமே ஆலோசித்திருந்தார்.

மகளை படித்ததும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று எண்ணும் பெற்றோர் அல்ல அவர்கள். அவளால் தன் சொந்த காலில் நிற்க முடியும் என்ற தன்னம்பிக்கை வந்தபின் தான் திருமணம் என எண்ணியிருந்தார்கள். 

தன் அம்மா சொன்னதற்கு, “சரி உங்க இஷ்டம்! என்னமோ பண்ணுங்க!” என தன் சம்மதத்தை சொல்லிவிட்டாள் திவ்யா! 

அப்போது சரியாக தீரனும் எழுந்து வந்தான். அவனை பார்த்தவுடன் மீனாக்ஷி, “வாடா… இரு காப்பி கலந்து எடுத்துட்டு வரேன்” என்றதும், திவ்யா… “அம்மா நீ இரு மா! அண்ணாக்கு நான் ஸ்பெஷலா போட்டு தரேன்” என்றாள். 

உடனே தீரன், “ஐயோ! நீயா… நான் திரும்ப தூங்க போறேன்” என பயந்ததுபோல தன் அறைக்கு திரும்ப இருந்தவனை, எட்டி சென்று பிடித்து, இழுத்து வந்து சோபாவில் உட்காரவைத்த திவ்யா, “டேய் அண்ணா! இதுக்காகவே இன்னைக்கி நான் தான் உனக்கு போடப்போறேன். அது மட்டும் இல்ல… சமையலும் என்னோடதுதான்” என மிரட்டி பயம் காட்டினாள்.

“அம்மா! இன்னைக்கு நம்ம கதை காலி! ஒரு ஜெலுசில் அட்டை போதுமா? கூடவே டிசென்ட்ரி டேப்லெடும் வாங்கணுமா? அப்பா ஈனோ வேணுமா?” என தீவிரமாக கேட்பதுபோல, தங்கையை வம்பிழுத்தான். வீட்டில் அனைவருமே சிரித்தனர் திவ்யாவை தவிர.

அவளின் சமையல் திறன் அப்படி! புதிதாக ஏதாவது சமைக்கிறேன் என்ற பெயரில், எதையாவது அல்லது அனைத்தையுமே அதிகமாக போட்டு சமைத்துவிடுவாள். வீட்டிலிருப்பவர்கள் கதி அதோகதி!

“அண்ணா!” பற்களை கடித்து கத்திய திவ்யா, கைவலிக்கும்வரை தீரனை அடிக்க, அவன் அவளை தடுக்க, “இரு உனக்கு கஷாய காப்பி போட்டு எடுத்துட்டு வரேன்” என வெடுவெடுவென சமையலறைக்குள் புகுந்தாள். இருந்தும் அவனுக்கு ஒரு நம்பிக்கை. தங்கை காப்பி மட்டும் ஓரளவிற்கு போடுவாள் என்று!

மீனாக்ஷிக்கு தீரன் கொஞ்சம் சகஜமாகியுள்ளதை பார்த்து, மனம் நிம்மதி அடைந்தது.

“தீரா! பாரதி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா!” என்றார் ஷங்கர் சந்தோஷமாக.

“சூப்பர் பா! இவ தொல்லைல இருந்து… முக்கியமா இவ சாப்பாட்ல இருந்து நமக்கு விடுதலை. பாவம் எவன் மாட்டப்போறானோ!” என்றான் வேண்டுமென்றே பெருமூச்சுவிட்டபடி. 

அங்கே பக்கத்தில் முறைத்துக்கொண்டிருந்த திவ்யா வெட்டவா குத்தவா என பார்க்க, அங்கே அடுத்த போர் மூண்டது!

——

அதே காலை பொழுதில், வீட்டிலுள்ள அனைவருக்கும் காலை உணவு செய்துகொண்டிருந்தாள் பவித்ரா. திலீப் காலை ஜாக்கிங் சென்று திரும்பி இருந்தான். 

காலை எழுந்ததும், வாசலில் கோலம் போடுவதில் ஆரம்பித்து, பால் காய்ச்சுவது, காலை உணவு முதல் இரவு உணவு வரை என அனைத்தும் அவளே பார்க்கவேண்டும். முக்கியமாக வானிலை எப்படி இருந்தாலும், எழுந்தவுடன் குளித்துவிட்டு தான் வேலையை பார்க்கவேண்டும்!

ஒருவேளை முந்தைய தினம் முடியாமல் பாத்திரங்கள் கழுவ இருந்தால், அதை வேறு கழுவியாக வேண்டும். அடுத்து காலை உணவை மதியம் பரிமாறக்கூடாது. மதிய மீதத்தை இரவு போடக்கூடாது. ஃபிரிட்ஜில் வைத்து சூடு செய்து கொடுப்பது அறவே கூடாது! இப்படி பல கூடாதுகள்!

வேலைக்கு ஆள் வைப்பதெல்லாம் சரிவராது திலீப்பின் அம்மா ஜானகிக்கு. மீறி ஏதாவது அப்படி நடந்தால், வேலைக்கு வருபவரை எப்படி விரட்ட வேண்டும் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும். தான் மருமகளாக இருந்தபோது பட்ட துயரத்தை, தன் மருமகளும் படவேண்டும் என்ற எண்ணமோ என்னவோ!

பவித்ரா இப்போது கூட, காலை உணவுக்கு இரண்டு வகையான சட்னி மற்றும் கடலை கறி தயார் நிலையில் வைத்திருக்க, அப்போது சரியாக அவள் தங்கை அவளை அழைத்திருந்தாள். 

வேலை செய்த சோர்வு முற்றிலுமாக மறைந்ததுபோல தங்கையுடன் நிம்மதியாக பேசினாள்.

அவளுடன் பேசிக்கொண்டே, தாளித்து சட்னியில் போட்டுவிட்டு, ஆப்ப கல்லை அடுப்பில் போட்ட நேரம், திலீப்பின் அம்மா ஜானகியின் குரல் கேட்டது. 

அவசரமாக போனை வைத்துவிட்டு, சட்னி மற்றும் கறியை கொண்டுபோய் டைனிங்கில் வைத்துவிட்டு, பின் ஆப்பம் சுட்டு கொண்டுசென்றாள்.

அப்போது அங்கே ருதரமூர்த்தியை முறைத்துக்கொண்டிருந்தார் ஜானகி. ஒன்றும் புரியாமல் அவரை பவித்ரா பார்க்க, “இப்போ தான் சமையல் பழகறையா என்ன?” என்றதும், என்ன ஆயிற்று என அவரை பார்த்தாள் பவித்ரா. 

“இதென்ன சட்னில பருப்பு, கருவேப்பிலை எல்லாம் கருகி போயிருக்கு? இதெப்படி சாப்பிடறதாம்? ச்சை” என சட்னி ஸ்பூனை அதிலேயே கிட்டத்தட்ட எறிவதுபோல போட்டுவிட்டு… “போய் கொட்டு” என கோபத்துடன் கடலைக்கறியை வைத்து சாப்பிட்டார். 

தங்கையுடன் பேசிக்கொண்டே தாளித்துப் போட்டபோது, கொஞ்சம் கருகிவிட்டது போல!

பவித்ராவுக்கு மூக்கு சிவந்து கோபமும் கண்ணீரும் ஒருசேர வரப்பார்க்க, அமைதியாக அதைத் தடுத்து… அடுப்பங்கரைக்கு சென்றுவிட்டாள்.  

அந்நேரம் அங்கே திலீப் மற்றும் அவர்கள் மகன் தருண் இருவரும் வந்தார்கள். 

ஏதோ சத்தம் கேட்டது போல் இருந்தது ஆனால் என்ன நடந்தது என அவனுக்கு தெரியவில்லை. பவித்ராவை பார்த்தபடி தன் அம்மாவிடம், “என்னமா ஆச்சு?” என கேட்க, அவர்… “ஒன்னுமில்ல திலீ! நீ சாப்பிடு. தரு இந்தா” என மகனுக்கும் பேரனுக்கும் தட்டை எடுத்துவைத்தார்.

திலீப் அங்கிருந்த ஆப்பத்தையே தட்டில் போட்டுக்கொள்ள நினைக்க,  “இருடா” என்றவர், “பவி! சூடா சீக்கிரம் எடுத்துட்டுவா” என அதட்டி அழைத்தார். 

“இருக்கட்டும் மா. இதுவே போட்டுக்கறேன்” என்ற திலீப்பை சாப்பிடவிடாமல் பவித்ரா கொண்டுவந்ததை போட்டுக்கொள்ள செய்தார். தருணுக்கும் அப்படியே!

திலீப் சட்னி எடுத்து போட்டுக்கொள்ள பார்க்க, “இது வேணாம் டா. கருக வச்சுட்டா! கறி போட்டுக்கோ” என தடுத்தார் ஜானகி. இதை கேட்டுக்கொண்டிருந்த பவித்ராவுக்கு கண்ணீர் வெளிவரும் போல இருந்தது. 

அடுத்து அவள் சூடான ஆப்பம் எடுத்துவர, அவள் மனநிலை புரிந்ததுபோல்… “பரவால்ல விடு மா. இதுல என்ன இருக்கு?” என்றவன் அந்த சட்னி போட்டுக்கொண்டு, சொல்லப்போனால் அதை மட்டுமே போட்டுக்கொண்டு இரண்டு ஆப்பம் அதிகமாக சாப்பிட்டான். 

தருணுக்கு தன் அம்மா பவித்ரா எது செய்தாலும் பிடிக்கும். ஆனால் அவனையும் சட்னி போட்டுக்கொள்ள விடாமல் செய்தார் ஜானகி. 

திலீப் சாப்பிட்டு முடிக்க, அவன் தட்டை எடுத்துக்கொண்டு சென்ற ஜானகி, பவித்ராவிடம், “அங்கே ரெண்டு ஆப்பம் மிச்சம் ஆயிடுச்சு. அதை எடுத்துக்கோ” என்றார். அவருக்கு செய்ததில் மிச்சம் போல!

அமைதியாக தலையசைத்தாள் பவித்ரா. தருண் சாப்பிட்டு முடிக்க, அவர் பவித்ராவை அழைக்கும் நொடி, தருணே தன் தட்டை எடுத்துக்கொண்டு எழ, “என்னடா இது? எவ்வளவு தடவை சொல்றது? தட்ட வை! உன் அம்மா எடுத்துட்டு போவா!” என்றார். 

உடனே குழந்தை, “பாட்டி… எனக்கு பசிச்சா நான் தானே சாப்பிடறேன்? எனக்காக அம்மா சாப்பிட முடியுமா? அதே போல தான். நான் சாப்பிட்டேன்னா, நான் தான் தட்டையும் எடுக்கணும்! அம்மா எதுக்கு எடுக்கணும்?!” தீர்க்கமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

ஜானகிக்கு மகன் தன் சொல் பேச்சைக் கேட்காமல் மனைவிக்காக சட்னியை சாப்பிடுகிறான், பேரன் தன் சொல் பேச்சைக் கேட்க மறுக்கிறான் என கோபம் தலைக்கேறியது.  

ஆனால்  இப்போது தன் மகன் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த பவித்ராவுக்கு கண்களில் கண்ணீர் வெளியேறியது! மனமகிழ்ச்சியால்! 

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved