வாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் – 28
செம்மையின் செழிப்பு – 7(2)
அந்த அரங்கம் முழுவதும் மக்கள். சமூக நலத்துறை அமைச்சர் மற்றும் அந்த பிரிவில் இருக்கும் பெரிய அலுவலர்கள் அங்கே கூடி இருந்தனர்.
அழகாக படிய கட்டிய ஒரு லினன் புடவை மற்றும் தூக்கிக்கட்டியிருந்த போனி டைல். எந்த ஆபரணமும் இல்லை. ஒரு சின்ன பொட்டு. கண்ணிற்கே தெரியாத கம்மல். இவ்வளவே காட்சியளித்தாள் மிதுலா. அவளுடன் வக்கீல், மற்ற சில ஆலோசகர்களும் இருந்தனர்.
மிதுலா அனைவருக்கும் ஒரு சுருக்கமான விளக்கவுரை அளிக்க, அங்கிருந்தவர்கள் சில சந்தேகங்களை கேட்டனர். பொறுமையாக அனைத்திற்கும் விளக்கமளித்தாள். சில உரையாடலுக்குப்பின், இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அவளின் திறமையை அமைச்சர் பாராட்டினார். அதுவும் ‘பெரிய பிரதிபலனேதும் இல்லாமல், எளிய குடும்பத்தினருக்கும் நல்ல சேவைகள், மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வி சென்றடையவேண்டும் என நினைத்து இதை செய்ய முன்வந்தது பாராட்டுக்குரியது’ எனப் புகழ்ந்தார்.
‘எந்த உதவி வேண்டுமென்றாலும் அவரை அணுகலாம்’ என்று உறுதியளித்தார்.
அனைத்தும் நல்ல படியாக முடிய, மிதுலா பத்திரிக்கையாளர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.
அவளுடன் துணைக்கு இருக்கிறேன் என சொன்ன வக்கீலை வேண்டாமென மறுத்துவிட்டு அவர்கள் முன் தனியாக அமர்ந்தாள்.
அவளுக்கு நன்றாக தெரியும் உண்மையான பரீட்சையே அங்கே தான் துவங்கப்போகிறது என.
********
அனைவரின் பாராட்டு படலத்துடன் ஆரம்பித்தது அந்த சந்திப்பு.
முதலில் ஒப்பந்தம் குறித்த சில கேள்விகளை முன்வைத்தனர். பொறுமையாக அனைத்துக்கும் பதிலளித்தாள்.
சற்று நேரம் கழித்து ஒரு பத்திரிகையாளர்: “மேடம். நீங்க இந்த ஒர்க் எடுத்து ஆரம்பிச்சது ஒரு மூணு நாலு வருஷத்துக்கு முன்னாடின்னு கேள்விப்பட்டேன். அதுக்கு முன்னாடி நீங்க பெருசா இன்வோல்வ் ஆகல. அப்போ என்ன பண்ணிட்டு இருந்தீங்க? நீங்க எப்படி இவ்வளோ பெரிய வேலைக்கு உங்கள தயார் பண்ணிடீங்க?”
மிதுலா மூச்சை இழுத்துவிட்டு தன்னை அசுவாசப்படுத்திக்கொண்டாள்.
பின், தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் சுருக்கமாக சொல்லிமுடிக்க, அந்த அரங்கமே நிசப்தத்தை கையிலெடுத்திருந்தது.
சிறிதுநேர மௌனத்துக்கு பின் ஒரு பத்திரிகையாளர்: “மேடம். நீங்க இவளோ வெளிப்படையா பகிர்ந்ததுக்குப் பாராட்டுக்கள். ஆனா இவளோ வெளிப்படையா சொன்னதுக்கப்பறம், உங்கமேல இருக்க நம்பிக்கை அப்படியே இருக்கும்ன்னு நினைக்கறீங்களா?”
அவள் அவரையே பார்க்க… ‘அவளுக்கு புரியவில்லை’ என நினைத்த அந்த பத்திரிகையாளர்… “அதுதான் நீங்க செய்த தொழில்… ப்ராத்தல்… அது உங்களுக்கு தடையா இருக்கும்ன்னு தோனலயா…?”
அவரைப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்தவள், “உங்க கேள்வி எனக்கு புரிஞ்சது. இங்க இருக்க எல்லாருக்கும், இத பாக்கறவங்களுக்கும் புரியனும் இல்லையா… இப்போ எல்லாருக்கும் புருஞ்சுருக்குன்னு நினைக்கறேன்”
“நீங்க கேட்ட கேள்விக்கு பதில்… ‘நீங்க சொன்ன, நான் செய்த அந்த தொழில்…’ அத நான் எனக்காக பண்ணலனாலும், அந்த தொழில் என்னோட முன்னேற்றத்துக்கு தடையா இருக்கிற அளவுக்கு கீழ்த்தரமான தொழில் கிடையாது”
“இந்த தொழிலுக்கு வந்தவங்கள்ல தொன்னூறு சதவிகிதம்… அவங்களுக்கு பிடிக்காம, நிர்பந்தத்தால, சமூகத்தினால ஒதுக்கப்பட்டு, முத்திரை குத்தப்பட்டு, வேற வழியில்லாம, இன்னும் சிலபேர், எப்படி வெளிய வர்றதுன்னு தெரியாம… இத செய்றாங்க”
“அதுனால, நீங்க சொல்ற அளவுக்கு என்னோட முன்னேற்றத்தை பாதிக்கற தொழில் கிடையாது “
இதை கேட்ட மற்றொரு பத்திரிகையாளர்: “அப்போ விபச்சாரம் பண்றது தப்பில்ல. சமூக சீர்கேடில்ல’ன்னு சொல்றீங்க. இல்லையா?”
அவர் கேட்ட கேள்வியில், அவளின் புருவங்கள் உயர்ந்தது, உதடுகள் கீழ் நோக்கி வளைந்தது. “உங்க கிட்ட நான் ஒரு கேள்வி கேக்கறேன். அதுக்கான பதில் நீங்க தந்தீங்கன்னா, உங்களோட கேள்விக்கும் அதுலயே பதில் இருக்கும்” என்றவள் நிறுத்தி
“நீங்க சொல்ற சமூக சீர்கேடான வேல செய்றவங்ககிட்ட, ஆம்பளைங்களுக்கு என்ன வேலை? அவங்க ஒழுக்கமா இருந்தா, கட்டுப்பாடோட இருந்தா… நீங்க சொல்ற இந்த சீர்கேடான வேலய ஏன் பெண்கள் பண்ணப்போறாங்க?”
அவர் பேசவில்லை. “உங்ககிட்ட உங்க கேள்விக்கே பதில் இல்லை…” என்றவள் “நெஸ்ட் க்வெஸ்டின்” என்றாள் புன்னகையுடன்.
அவருக்கு பதில் இன்னோரு பத்திரிகையாளர் “அவர் கேட்ட கேள்வியை நான் சரியா கேட்கறேன்… விபச்சாரம்ன்னு ஒரு தொழில்” என்று அவர் ஆரம்பிக்கும்போது, அவள் கையைக் காட்டி அவரைத் தடுத்து
“ஃபோர் யுவர் இன்போர்மேஷன்… இதுக்கு பெயர் பாலியல் தொழில்… அண்ட் பாலியல் தொழிலாளர்கள்’ன்னு சொல்லுங்க. இந்த ப்ராத்தல்… விபச்சாரி… தாசி… வேசி… சரக்கு… ஐட்டம்… இப்படி சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. பாத்து மான நஷ்ட வழக்கு கூட போடலாம்” என்றாள் அசால்டாக.
“நம்ம நாட்ல தான்… மாற்றுத் திறனாளிகள்’ன்னு சொல்லாம… ஊனமுற்றவர்கள்’ன்னு அவங்களோட குறைய சொல்லிக்காட்டுவோம்… அதுமாதிரியே தான்… ரெண்டுங்கேட்டான்… ஒம்போது… அப்படினு அவங்களோட ஊனத்தையும், குறைபாட்டையும், தொழிலையும் வெச்சு கூப்பிடற பழக்கம் இருக்கு”
“உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்களே இப்படி பேசறது தான் ஆச்சர்யமா இருக்கு” என்றாள் ஒரு ஏளனப்பார்வையுடன்.
மறுபடியும் மௌனம்…
அதைக் கலைத்தார் ஒருவர். “நீங்க என்ன சொன்னாலும்… இது உடலை விற்று செய்யும் தொழில். அதை அரசாங்கம் வேணும்னா லீகல் பண்ணலாம். அதுக்காக எல்லாரும் ஏத்துக்கணும்ன்னு இல்ல. சிலபேருக்கு தப்பான தொழிலா தெரியலாம்”
மிதுலா ஒரு நொடி அவரைப் பார்த்துவிட்டு “ஹ்ம்ம்… உடலை விற்று… யாரு உடலை? அவங்களோட உடம்ப தானே?”
“தையல் வேல செய்றவங்க… அவங்க கை கால் மூலதனமா வெச்சு… வேல பாக்கறாங்க… கூலித் தொழிலாளி… அவங்களோட உடல் உழைப்பை மூலதனமா வெச்சு வேலைபாக்கறாங்க… அது மாதிரி தானே இதுவும்? மத்தவங்க அவங்க சுகத்துக்காக வர்றாங்க. பாலியல் தொழிலாளிகள் அவங்களோட உடம்பை மூலதனமா வெச்சு சம்பாதிக்கறாங்க. இதுல என்ன தப்பு?”
“இதுல இன்னமும் சரியா சொல்லனும்னா, பிம்ப் அப்படின்னு சொல்ற ப்ரோக்கர் ***** மத்தவங்க உடம்ப வித்து, அவங்க சம்பாரிக்கறாங்க… ரொம்ப சிலர் தான் வேற வழியில்லாம அவங்களே இத செய்றாங்க…”
“மத்தவங்க வாழ்க்கையை அடிச்சு ஒலைலபோடாம, துரோகம் நினைக்காம, கஷ்ட படுத்தாம, செய்ற எந்த தொழிலுமே தப்பான தொழில் கிடையாது”
“நீங்க சொல்ற கேட்டகிரி’ல டெரரிஸம்… போதைத் தொழில்… கடத்தல்… கள்ள கடத்தல்… ஆள் கடத்தல்… இன்னமும் சொல்லணும்ன்னா… சிகரெட் உற்பத்தி… மது உற்பத்தி… Drugs இந்த மாதிரி தொழில் கூட ஒருவகைள சேர்த்துக்கலாம். அவங்கெல்லாம் எந்த குற்றவுணர்வும் இல்லாம செய்றப்ப, பாவம் அம்பதுக்கும் நூறுக்கும் உடம்ப வருத்திட்டு வேல செய்றவங்கள இதுல இழுக்காதீங்க. ப்ளீஸ்”
கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞன் “உங்கள சின்னவயசுல கடத்திட்டு போனவங்கள உங்களால கண்டுபிடிக்க முடிலயா?”
இவ்வளவு நேரம் நன்றாக பதில் சொல்லிக்கொண்டிருந்தவள், சற்று மௌனமாகி, பின் “அப்போ நான் இருந்த நிலமைல எனக்கு ஒன்னுமே தெரியாது. எந்த இடத்துல இருந்தேன்னு கூட தெரியாது” என்றவள்
“ஆனா நம்ப நாட்ல தான் சின்ன பசங்கள இந்த தொழில்ல ஈடுபடுத்தறத ரொம்ப சுலபமா பண்றாங்க. பல கருத்துக்கணிப்புல சொல்லிருக்காங்க”
“நம்ம நாட்ல கிட்டத்தட்ட இருவதுல இருந்து முப்பது லட்சம் பேர் இந்த தொழில் பண்றாங்க. அதுவும் இதுல தொன்னூறு (90%) சதவிகிதம்… கட்டாயப்படுத்தி உள்ள இழுக்கப்பட்டவங்க”
“எண்பத்து ஒன்பது (89%) சதவீதம், இந்த தொழில்ல இருந்து வெளிய வரணும்ன்னு நினைக்கறாங்க… ஆனா வேற வழி தெரியாம, கட்டாயத்துல செய்யறாங்க”
“இதுல அதிகபட்சம் சின்ன வயசுலயே இந்த தொழில்ல தள்ளிவிடப்பட்டவங்க. சிறார் வன்கொடுமை (Child abuse) நம்மள மாதிரி வளரும் நாட்ல ரொம்பவே அதிகமாம்”
“தொன்னூறு சதவிகிதம் (90%) பாலியல் தொழில் செய்றவங்களோட பொண்ணுங்களும் சின்னவயசுலயே இதுல இழுக்கப்படறாங்க”
“சில வருஷத்துக்கு முன்னாடி நம்ம அரசாங்கத்தால நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புல நூத்துல, நாற்பது சதவிகிதம் (40%) இந்த தொழில்ல குழந்தைகள் தான் இருக்காங்கன்னு சொல்லிருக்காங்க”
“அந்த குழந்தைகளெல்லாம் தெரிஞ்சே இது செய்றாங்கன்னு நீங்க நினைக்கிறீங்களா? இல்ல அவங்க ஒப்புதலோட (consent) நடக்கற விஷயம்ன்னு நினைக்கிறீங்களா? இவங்க பெருசாரப்ப எந்த நிலைமைக்கு தள்ளப்படறாங்கன்னு தெரிமா?”
“சரி… இதை விட்டுட்டு வேற வேலைக்கு போலாம்னாலும், அங்க ‘முன்னாடி என்ன வேல பண்ண’ன்னு கேட்பாங்க. அப்போ இந்த தொழில் பண்ணேன்னு சொன்னா… வேலைக்கு கூப்பிடமாட்டாங்க… ஹோட்டல்க்கு தான் கூப்பிடுவாங்க”
“இதுல இன்னொரு விஷயம் என்னன்னா… இந்த தொழில்ல இருந்து தப்பிச்சோம் பொழச்சோம்ன்னு வெளிய வந்தா, அதன் தாக்கத்தால ஏற்படற மன அழுத்தம்… அதுனால வர்ற டிஸ்ஸார்டர்…”
“ஒன்பது வளரும் நாடுகள்ல எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புல, எழுபதுல இருந்து தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் (70-95%), பெண்கள் உடல் ரீதியா தவறான முறைல தாக்கப்படறாங்க. பாலியல் வன்கொடுமை (sexual abuse)… அதுல கிட்டத்தட்ட எழுவது சதவிகிதம் (70%), இந்த மாதிரி மன அழுத்ததுல பாதிக்கப் படறாங்க”
“அதுல நானும் ஒருத்தி. எனக்கு சக்தியா கூட சக்திவேல் இருந்தாரு. அதுல இருந்து வெளிய வந்துட்டேன். ஆனா மத்தவங்க?”
“உங்க எல்லாத்துட்டேயும் நான் சொல்லவர்ரது என்னன்னா… நீங்க கண்டிப்பா அவங்கள மதிக்கணும், அவங்க தொழிலை மதிக்கணும்… அப்படின்னு சொல்லல…”
“அவங்கள அவமதிக்காதீங்க… அசிங்கப் படுத்தாதீங்க… அவங்களோட கடந்தகாலத்தை உங்களுக்கு சாதகமா பயப்படுத்திக்காதீங்க… அவங்களும் மனுஷங்க தான்… நீங்கல்லாம் உண்மையான ஆண்மகனா இருந்தா … இருப்பீங்கன்னு நம்பறேன்”
“ப்ளீஸ் டோன்ட் பை செக்ஸ் (Please Don’t Buy Sex)… அது பலவிதத்துல பெண்களைக் காப்பாற்றும்…” என நிறுத்தியவள்
“வேற ஏதாச்சும் கேள்வி இருக்கா?” என கேட்க, அங்குள்ளவர்கள் புன்னகையுடன் இல்லை என்று தலையசைத்தனர். அவளும் பதிலுக்கு புன்னகையை உதிர்த்தாள்.
அனைவரும் அங்கிருந்து கலைந்தனர்.
———————-
மிதுலா வெளியே சென்றிருந்த வக்கீலுக்காக காத்திருக்க, ஏதோ ஒரு உந்துதல். யாரோ வாசலில் நின்று தன்னைப் பார்ப்பதுபோல்.
எழுந்து அந்த அறையின் கதவருகே வந்து பார்க்க, வாசல் கதவில் கைகளைக் கட்டிக்கொண்டு, சாய்ந்து நின்றிருந்தான் சக்தி.
அவளின் மனது படபடத்தது. இவ்வளவு நேரம் நிமிர்வாக பேசியவள்… கால்கள் தள்ளாட, அறையின் கதவில் தலைசாய்த்து அவனையே பார்த்தாள். அவளுக்கு அது அவனின் பிம்பமா…? இல்லை நிஜமாக நிற்கிறானா…? யோசிக்க முடியவில்லை… மூளையும் இயங்கவில்லை…
கண்களில் மட்டும் கோடாக கண்ணீர்… அவனையே பார்த்திருந்தாள். ஆனால் அவளுக்கு தெரியாத ஒன்று, தூரத்தில் நின்றுகொண்டிருந்தவன் கண்களிலும் கண்ணீர் கரை புரண்டு வந்துகொண்டிருக்கிறது என்பது!!! அது பிம்பம் இல்லை என்பது!!!
மிதுலா அவன் காதலை ஏற்றுக்கொண்டாளா? சக்தியின் இத்தனை நாள் காத்திருப்பு வென்றதா? அவர்கள் சேர்வார்களா? இது காலம் முடிவெடுக்கட்டும் இல்லை வாசகர்களான உங்களிடமே விட்டுவிடுகிறேன்!!!
மாற்றம் ஒன்றே மாறாதது.
மிதுலா மனம் மாறியிருக்கலாம்!!!
இல்லை காலம் அவளை கண்டிப்பாக மாற்றும் என்ற மனநம்பிக்கையுடன்!!!
வண்ணப்பக்கங்கள் முடிவுற்றது!!!!
பின் குறிப்பு: இதில் வரும் கருத்துக்கணிப்பு விவரங்கள் அனைத்தும் கூகுளின் உதவியுடன் எடுக்கப்பட்டது!!!
