என்னோடு நீ உன்னோடு நான் – Final 1
என்னோடு நீ உன்னோடு நான் – 20 (Final 1)
‘ஆதி தன்னை ஏமாற்றிவிட்டானா?!’ என எண்ணும்போதே அவளுடைய முதல் காதல் பிரதீப்பின் எண்ணங்கள் வந்து சென்றன. ஆதியையும் அவனையும் ஒப்பிட்டு அவள் மனம் ஏதேதோ யோசித்தது.
பிரதீப் அவளுடைய முதல் காதல்! அவள் எவ்வளவோ மறுத்தும், அவளை விடாமல் பின் தொடர்ந்து காதலித்தான். ஒரே அலுவலகம், தினமும் பார்க்க நேரிட, ஒருகட்டத்தில் அவனின் விடா முயற்சி அவளை ஈர்த்தது. அவள் மனதை வென்றான்.மனதும் அவன் புறம் சாய்ந்தது.
இருவரும் நன்றாகப் பழக ஆரம்பித்தனர். நிலா தன் மனதில் முழுவதுமாக அவனையே நிரப்பியிருந்தாள்! அப்போதுதான் பிரதீப்பின் இன்னொரு பக்கம் நிலாவுக்கு தெரிய ஆரம்பித்தது.
காதல் என்ற பெயரில் அவனின் பொஸஸிவ்னெஸ் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது. உடன் வேலை பார்க்கும் எந்த ஆணுடனும் பேசக்கூடாது என நிர்ப்பந்தித்தான். மீறி பேசினால் எமோஷனல் ப்ளேக்மெயில் செய்ய ஆரம்பித்தான்.
‘சில ஆண்கள் இப்படித்தான்’ என எண்ணி, நிலாவும் அவன் சொன்னதுபோல செய்தாள். அடுத்து அவள் சிறுதுளி போவதை நிறுத்தச்சொன்னான். ‘அவனுடன் இருக்க வேண்டி சொல்கிறான்’ என நினைத்து, பிடிக்கவில்லை என்றாலும் அவனுக்காக அதையும் செய்தாள்.
அவளை எந்த ஒரு முடிவையும் எடுக்க விடாமல் அனைத்தையும் அவனே முடிவு செய்தான். மீறி அவள் முடிவெடுத்தால், அது முட்டாள் தனமான முடிவு என மட்டம் தட்டினான். தன் மீதே சந்தேகம் வர ஆரம்பித்தது நிலாவிற்கு.
இது அனைத்துக்கும் மேல் நிலாவை பாடி ஷேமிங் என சொல்லப்படும் உருவக்கேலி செய்தான்.
காதலிக்க ஆரம்பித்தபோது அவள் ஒல்லியாக இருந்ததாகவும், இப்போது எடை போட்டு பெருத்துவிட்டதாகவும் கூறிக் கிண்டல் செய்தான். மற்ற பெண்களுடன் ஒப்பிட்டுப் பேசி காயப்படுத்தினான்.
இது அனைத்தையும் செய்துவிட்டு, வேடிக்கைக்காகத் தான் என்றும் சொன்னான். அப்படி பேசியபோதெல்லாம் தொண்டை அடைத்துக் கத்தி அழுகத்தான் தோன்றியது நிலாவுக்கு. முன்பு இருந்த தைரியம் துளியும் அவளிடம் இல்லை.
‘நான் எப்படி இருக்கிறேன் நீ எப்படி இருக்கிறாய்’ என அடுத்து மனம் நோகும்படி பேச ஆரம்பித்தான்.
ஏற்கனவே, திடீரென உடல் பருமன் கூடியதால் மன உளைச்சலிலிருந்த நிலாவை இது இன்னமும் அதிக உளைச்சலுக்கு ஆளாக்கியது. ஆனாலும் அவன் மேல் இருந்த கண்மூடித்தனமான காதல் அனைத்தையும் மறைத்தது.
அச்சமயம் தான் நிலாவின் வீட்டில் பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது. நிலா அவள் வீட்டில் சொன்னாள், பிரதீப்பும் அவன் வீட்டில் சொன்னவுடன், இரு வீட்டினரும் ஜாதகம் மாற்றிக்கொண்டார்கள்.
நிலாவின் கட்டம் சரியில்லை என்று பிரதீப்பின் வீட்டில் சொல்லிவிட்டார்கள். பிரதீப்பும் தன்னால் அப்பா அம்மாவைச் சமாதானம் செய்யமுடியவில்லை, இனி இந்த காதலை இப்படியே விட்டுவிடுவோம் என்று எளிதாக முடித்துக்கொண்டான். வேறு நிறுவனத்திற்கும் மாறிவிட்டான்.
நிலாவின் மனம் சுக்குநூறானது. அவளால் அவ்வளவு சுலபமாக இதை எடுத்துக்கொள்ளமுடியவில்லை.
அவன் அவளுள் ஏற்படுத்திய தாக்கம் வடுவாக மாறி அவளை குடைந்து எடுத்தது. மன உளைச்சலின் உச்சத்தில் இருந்தாள். எதையும் தெளிவாக யோசிக்க முடியாமல், எதற்கெடுத்தாலும் அழுது துவண்டு போய் தெரிந்தாள்.
அப்போது தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரதீப் தன்னை எப்படி ஆட்கொண்டு, தன் சுயத்தையே மாற்றி இருந்திருக்கிறான் என்பது புரிந்தது. தன்னிடம் இருந்த துணிவு, தைரியம், ஆளுமை எதுவுமே தன்னிடம் இப்போது இல்லை எனப் புரிய ஆரம்பித்தது.
மிகவும் கஷ்டப்பட்டு பிரதீப் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தாள்.
அப்போதும் அவன் விடவில்லை. எங்கே இவள் சந்தோஷமாக இருந்துவிடுவாளோ என எண்ணி அடிக்கடி போன் செய்து அவ்வப்போது தொந்தரவு செய்துகொண்டிருந்தான்.
அதற்கு பின் வீட்டில் வரன் பார்ப்பது, நிராகரிக்கப்படுவது என இன்னும் சில பல பாதிப்புகள்.
வயது இருபத்தெட்டைத் தொட்டது. தனக்கென ஒருவன், தன்னை புரிந்து கொள்ளும் ஒருவன் என்பதெல்லாம் கானல் நீராகிப்போன சமயத்தில் தான் ஆதியை சந்தித்தாள்.
எதையும் திணிக்காமல், அவளின் கருத்தை ஏற்று, அதை கண்டு வியந்து, உறுதுணையாக இருந்து, அவளை அவளாகவே இருக்கவிட்டான். அதையே அவனும் விரும்பினான். அந்த குணம் தான் அவளை மிகவும் ஈர்த்தது. அதுதான் அவள் மனதை அவன் புறம் சாய்த்தது.
ஆனால் இன்று கீழ்த்தரமாக பைரவி பேசியது, நிலாவிற்கு மிகவும் வேதனையை தந்தது.
இதில் முந்தைய தினம் ஆதி அவளைப் பார்க்க வரவில்லை என்றவுடன் இன்னும் காயப்படுத்துவதை போல அவள் அம்மா அவளிடம், ‘ஆதியுடன் தனியாக… தனித்து இருந்தபோது கட்டுக்கோப்பாகத்தானே இருந்தாய். தவறு எதுவும்!’ என மகளின் வாழ்க்கையை எண்ணி கேட்டது, நிலாவிற்கு உயிர்கூட்டின் உள் வரை வலி எடுத்தது..
‘அன்று நடந்தது என்ன?!’ என்று அவளுக்கே சரியாகத் தெரியாத போது, என்ன சொல்வது. பைரவியிடம் அழைப்பில் ஆதி சொன்னது வேறு சேர்ந்துகொண்டு, தன் மீதே கோபம் கொண்டாள்.
ஆதியின் அப்பா… ஆதியை எப்படியும் சரிசெய்து, அடுத்த நாளே நிச்சயதார்த்தம் வைத்து விடுவார் என்று சொன்னது, கூடவே ஆதி தன்னை தவிர்ப்பது என அனைத்தையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து யோசித்து, நொந்துபோனது அவள் மனம்.
ஒருவேளை ஆதி, யார் பக்கம் பேசுவது என்ற தெரியாமல் தன்னை தவிர்க்கிறானோ… அவனை இன்னமும் சங்கடத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்ற எண்ணம் மேலோங்க, இனி அவனுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என முடிவெடுத்தாள்.
மாலை நேரம் ஆகியிருக்க, நிலா ஆதிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். பின், தன் அப்பாவிற்கும் ஒன்றை அனுப்பிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டாள்.
——-
கருணா வீட்டைத் தேடி சென்ற அந்த SI அலைபேசி எண் இப்போது தொடர்புகொள்ள முடிந்தது. உடனே அவருக்கு அழைத்தான் ப்ரித்வி.
“என்ன ணா, உங்களை ரீச் பண்ண எவ்ளோ நேரம் ட்ரை பண்ணேன் தெரியுமா…… இன்னும் எத்தனை வருஷம் போன்ல சார்ஜ் போச்சுன்னு சொல்வீங்க. சரி விஷயத்தை சொல்லுங்க…… நான் சொன்ன மாதிரி அந்த வீட்டை போட்டோ எடுத்தீங்களா…… அது கூட கிடைச்சதா. சூப்பர்!…… அனுப்புங்க…” என்றான் ப்ரித்வி.
“கௌஷிக்! இப்போ இவன் எப்படி உண்மையை சொல்லப் போறான்னு மட்டும் பார்” என்ற ப்ரித்வி, கருணாவின் அறைக்குள் சென்றான்.
கருணாவிடம் SI அனுப்பிய போட்டோ’ஸை கட்டினான் ப்ரித்வி. அதைப் பார்த்த கருணா முகத்தில் அப்பட்டமான பதற்றம்.
“உன்னோட வீட்டை ட்ரேஸ் பண்ணியாச்சு! அங்க இருந்த டாக்குமெண்ட்ஸ் ஸீஸ் பண்ணியாச்சு. இது உன்னோட கிரெடிட் கார்ட் பில் பேமென்ட் டீடெயில்ஸ். இதுல ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒரே ஒரு வித்தியாசமான பேமென்ட் நடந்திருக்கு. அதோட செக் டீடெயில்ஸ்” என்ற ப்ரித்வி,
“இப்போ நீ தான் இந்த கேஸ்ல மோஸ்ட் வான்டெட் கிரிமினல். எப்படினு கேட்கறியா? இந்த வீடியோ பார்” ஆதி அனுப்பிய வீடியோவை காண்பித்தான்.
அதில் அந்த ஊர் மக்கள் மற்றும் பூசாரி ‘இவன் எப்படி உள்ளே வந்தான். என்னென்ன செய்தான்’ என்று வாக்குமூலம் அளித்திருந்தனர்.
“ஸோ இந்த வீடியோ கணக்குப்படி… நீ தான் எல்லாம் பண்ணிருக்க. உன்னோட ஸ்மார்ட்னெஸ்லாம் மூட்ட கட்டிவச்சுட்டு நடந்ததை சொல்லு. இல்லாட்டி உன் மனைவி… உன்னோட நாலு வயசு பையன் எல்லாரையும் கூட்டிட்டு போய் விசாரிக்க வேண்டியதா இருக்கும்!” என்றான் ப்ரித்வி வெகு சாதாரணமாக.
கருணா வரிசையாக நடந்ததைச் சொல்ல… அனைத்தையும் ரெக்கார்ட் செய்தான் ப்ரித்வி.
ஆதி அந்த கிராமத்திற்குச் சென்று, அங்கிருப்பவர்களைப் பரிசோதனை செய்துவிட்டு, சென்னை வந்துகொண்டிருந்தான்.
ஆதி திரும்பி வரும்போது பைரவி வீட்டிலிருந்தால் இன்னமும் கடுப்பாவான் என்றெண்ணிய, கௌஷிக்… ஆதி அந்த ஊரிலிருந்து கிளம்பிய சமயம், அவனை அழைத்து பைரவியை பற்றி சொன்னான்.
அதில் எரிச்சலடைந்த ஆதி, வீட்டிற்குச் செல்லாமல், நேராக தன் மருத்துவமனைக்கு சென்றான்.
அப்போது தான் நிலா அனுப்பிய குறுஞ்செய்தி வந்தடைந்தது.
‘தேங்க் யூ ஃபார் ஆல் யூ ஹேவ் டன்’ அதைப் பார்த்தபோது அவன் மனது வலித்தது. ஆசையாகப் பழகிய பெண். வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள நினைத்த பெண். இப்போது, தன்னை விட்டு வெகுதூரம் சென்றது போல ஓர் உணர்வு.
அவனுடைய கண்கள் பல வருடங்கள் கழித்துக் கலங்கியது.
‘ஐம் ஸாரி நிலா! நீ லேசா வருத்தப்பட்டாலே என்னால பார்த்துட்டு இருக்க முடியாதுனு சொன்ன நானே உன்ன ரொம்ப ஹர்ட் பண்றேன்!’ கண்கள் மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவனின் மனது முன் தினம் காலை நடந்ததை அசை போட்டது.
ஆதி தன் மருத்துவமனைக்கு சென்று பின், கௌஷிக்கை ப்ரித்விக்கு துணையாக அனுப்பி வைத்தான். OP பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு வயதானவர் உள்ளே வந்தார்.
“உட்காருங்க என்ன ஆச்சு? என்ன பண்ணுது?” ஆதி அவரை கேட்டான்.
“நான் நிலாவின் அப்பா!” என்றார் அவர்.
அதை கேட்ட நொடி, சட்டென ஏற்பட்ட லேசான படபடப்புடன், “சார்… ஸாரி … அங்கிள்… வாங்க. எப்படி இருக்கீங்க?” மகிழ்ச்சியுடன் கேட்க , அவர் அங்கிருந்த செவிலியரை பார்த்தார்.
“நீங்க கொஞ்சம் வெளிய இருங்க” ஆதி செவிலியரை அனுப்பி வைத்தான்.
“நானே ஈவினிங் உங்க வீட்டுக்கு வர்றதா இருந்தேன். எப்படி இருக்கீங்க அங்கிள்?”
“நாங்க நல்லா இருக்கறதும் இல்லாததும் உன் கையில தான் இருக்கு” என்றார்.
ஒன்றும் புரியாமல், புருவங்கள் சுருக்கி அவரை பார்த்தான்.
“என் பொண்ணு உன்னப்பத்தி சொன்னா. நீங்க வேற ஆளுங்க நாங்க வேற” என்று எந்த சலனமும் இல்லாமல் சொன்னார்.
“புரியல அங்கிள்… நீங்க என்ன சொல்றீங்க?” நிஜமாக புரியாமல் அவன் பார்க்க,
“நீங்க வேற ஜாதி நாங்க வேற ஜாதி” என்ற நிலாவின் அப்பா, “எனக்கு இன்னோரு பொண்ணு இருக்கா. உங்களால அவ வாழ்க்கை பாதிச்சிடும். அவளுக்கு நான் எப்படி கல்யாணம் பண்ணுவேன்? எனக்கு சுத்தமா இந்த சம்மந்தத்துல இஷ்டம் இல்ல”
நடப்பது எதையும் துளியும் நம்ப முடியாமல், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், அவரையே வெறித்தான் ஆதி. அவர் தொடர்ந்தார்.
“மீறி… இல்ல எங்களுக்கு எங்க வாழ்க்கை தான் முக்கியம்னு நீங்க நினைச்சிங்கன்னா… உங்க இஷ்டம் போல நடந்துக்கோங்க. ஆனா அதுக்கப்புறம் என்னை உயிரோட பார்க்க முடியாது” என்றார் இறுக்கத்துடன்.
இது அவன் எதிர்பாராதது. மனதில் எழுந்த பேரழுத்தத்துடன், “என்ன பேசறீங்க அங்கிள்? என்ன விடுங்க… நிலாவால நான் இல்லாம இருக்கறது ரொம்ப கஷ்டம். ப்ளீஸ். ஒரு அப்பாவா அவளை புரிஞ்சிக்கோங்க” கெஞ்சும் குரலில் கேட்டான்.
“இப்படித்தான் முன்னாடி ஒரு பையன லவ் பண்ணா. அவனை மறக்க அவளுக்கு டைம் எடுத்துச்சு. ஆனா அவ மறக்கல? நாங்க அதை பாத்துக்கறோம்” என்று அதே இறுக்கத்துடன் அவர் சொல்ல, ஆதிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
அவன் அமைதியாக இருப்பதை பார்த்து, “உன் கால்ல வேணும்னா விழுகிறேன். தயவு செஞ்சு என் பொண்ண இனி டிஸ்டர்ப் பண்ணாத” கண்கள் கலங்கி சொன்னார்.
வயது முதிர்ந்தவர், அதுவும் நிலாவின் அப்பா. அவரிடம் அவனால் கடுமையாக நடந்துகொள்ளமுடியவில்லை. அவரை மீறி இந்த கல்யாணம் என்பதிலும் உடன்பாடில்லை. ஆனால் நிலாவின் மேல் முழுவதுமாக நம்பிக்கை இருந்தது.
அதனால். “நான் நிலாவை நம்பறேன். அவளை பத்தி எனக்கு தெரியும். அவ கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டா. நானா இனி அவளை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” என்றான் ஆதி அவர் முகத்தை கூட பார்க்காமல்.
அவர் கைகூப்பி நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
“டாக்டர்… டாக்டர்!” என்ற செவிலியரின் சத்தம் கேட்டு நிகழ்விற்கு வந்தான் ஆதி. முகத்தில் அத்தனை இறுக்கம். தன்னிலைக்கு வந்தவன் மணி பார்க்க அது எட்டு என காட்டியது.
“சொல்லுங்க நீரஜா?” ஆதி கேட்க, “உங்கள பார்க்க நேத்து வந்தாரே, கொஞ்சம் வயசானவர்… நீங்க கூட என்னை வெளிய போக சொன்னீங்களே… அவர் வந்திருக்கிறார்” என்றாள்.
அது நிலாவின் அப்பா என உடனே புரிந்தது. “வர சொல்லுங்க” என்றான் கோபத்துடன்.
அவர் பதட்டத்துடன் உள்ளே வர, “இப்போ எதுக்கு சார் வந்திருக்கீங்க? நான் தான் டிஸ்டர்ப் பண்ணாமாட்டேன்னு சொல்லிடேனே” ஆதி வெறுப்புடன் கேட்டான்
“என்ன மன்னிச்சிடுங்க தம்பி!” அவனிடம் பதட்டத்துடன் போனை நீட்டினார். அதில் நிலாவின் குறுஞ்செய்தி.
“அப்பா நான் திரும்பவும் ஏமாந்துட்டேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பா… வீட்டுக்கு வர சங்கடமா இருக்கு. உங்களையெல்லாம் எப்படி பார்ப்பேன். நானா ஆசைப்பட்ட ரெண்டு பேருமே என்னை ஏமாத்திட்டாங்க.
எனக்கு எதுவுமே பிடிக்கல. வாழ்க்கைல பிடிப்பே இல்லாம போச்சு பா! அதுக்காக எந்த தப்பான முடிவும் எடுக்க மாட்டேன். அந்த அளவுக்கு நான் கோழையும் இல்ல பா. மனசு ரொம்ப நொறுங்கி போச்சு.
வீட்ல உங்களை எல்லாம் பார்க்கவே கூச்சமா இருக்கு. ஒரு ரெண்டு மூணு நாள்… இல்ல ஒரு வாரம் எங்கயாச்சும் போயிட்டு வரேனே! பயப்பட வேணாம் பா. கண்டிப்பா வந்திடுவேன்! ப்ளீஸ் பா…
கார் இந்த லொகேஷன்ல பார்க் பண்ணியிருக்கேன். உங்க ஆஃபிஸ் பக்கத்துல தான்… ப்ளீஸ் எடுத்துக்கோங்க பா” கூடவே லொகேஷன் தகவலுடன் வந்திருந்தது அந்த செய்தி.
இதை படித்த ஆதிக்கு இதயமே நின்றுவிட்டது போல ஓர் உணர்வு. கோபமாக பேச வரும்முன், “நானா நேத்து வந்து உங்ககிட்ட அப்படி பேசல…” என்றார் நிலாவின் அப்பா, கண்களில் கண்ணீருடன்.
“என்ன சொல்றீங்க?”
“நேத்து காலைல என்னோட ஆஃபீஸ்க்கு ஒரு பொண்ணு வந்துச்சு, கூட அவங்க அம்மாவும் வந்திருந்தாங்க. பேரு பைரவின்னு சொன்னாங்க” என்று நிறுத்த… “பைரவியா?” அதிர்ச்சியுடன் கேட்டான் ஆதி.
“ஆமாம் தம்பி. ‘உங்க பொண்ணு ஒருத்தன லவ் பண்றாள்ல. அதுக்கு நீங்க ஒத்துக்க கூடாது’ன்னு சொன்னாங்க. நான் ‘எதுக்கு ஒத்துக்கக் கூடாது மொதல்ல நீங்க யாரு’னு கேட்டப்ப, அவங்க உங்களோட அத்தை பொண்ணுன்னு சொன்னாங்க.
‘எனக்கு என் பொண்ணு சந்தோஷம் தான் முக்கியம்’னு சொன்னேன். அதுக்கு அவங்க…” சொல்லும்போதே தொண்டை கரகரத்தது. கண்ணை விட்டு கண்ணீர் விழாதிருக்க சிரமப்பட்டு, பின் தொடர்ந்தார்.
“‘அவங்க பெரிய ஆளுங்க. என்மேல ப்ரைபெரி (bribery) கேஸ் ஈசியா போடமுடியும். போட்டு உள்ள தள்ளமுடியும். ஆஃபீஸ் போற என் ரெண்டாவது பொண்ணு நைட் ஷிஃபிட் முடிஞ்சி திரும்பி வர முடியாத அளவுக்குக்கூட இறங்கி வேலை பார்க்கமுடியும்’னு சொன்னாங்க” என்றார் பாரமான மனதுடன்.
ஆதி கோவத்தின் விளிம்பில் இருந்தான்.
“நீங்களும் நிலாவும் இனி பார்த்துக்கவே கூடாதுன்னு சொன்னாங்க… அதுனால தான் நான் உங்ககிட்ட அப்படி வந்து பேசினேன்” என்று சொல்லும்போது… ஆதி அவர் அருகில் சென்று அவரை ஆசுவாசப்படுத்தினான்.
“என்னை மன்னிச்சிடுங்க அங்கிள். இவ்ளோ கீழ்தரமா இறங்குவாங்கன்னு நான் நினைக்கவே இல்ல. அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். இப்போ நம்ம வேலை நிலாவை தேடறது” என்றான் ஆதி அடுத்து என்ன செய்வது என புரியாமல்.
“முன்னாடி இதுபோல எங்கயாவது போயிருக்கறாளா அங்கிள்?” ஆதி ஏதாவது வழி கிடைக்குமா என கேட்டான்.
“போயிருக்கா பா! அந்த பிரதீப் பிரச்சனைக்கு அப்புறம் ரொம்ப மனசொடிஞ்சு போயிருந்தா. அப்போ இதுபோல எங்கயாவது போயிட்டு வருவா… ஆனா சொல்லிட்டு தான் போவா” என்றார் கரித்த கண்களை துடைத்துக்கொண்டு.
அவருடன் சென்று நிலாவின் காரை பார்த்தபோது, அதிலேயே மொபைலையும் வைத்துவிட்டு சென்றிருந்தாள்.
அவரை பத்திரமாக வீட்டிற்கு வழி அனுப்பி வைத்த ஆதி, மிகுந்த கோபத்துடன் தன் வீட்டிற்கு சென்றான்.
அவன் வருவதை பார்த்த அவன் அம்மா, “வாடா. அந்த ஊர்ல வேலையெல்லாம் முடிஞ்சதா?”
“அம்மா, எங்க அவங்க?” தேடியபடி தன் அத்தையின் அறைக்கதவை தட்டினான்.
கதவு திறக்க, “நீங்களாம் மொதல்ல டாக்டர்ஸ்ஸா? இல்ல ரௌடியிஸம் பண்றீங்களா? எப்படி இவ்ளோ கீழ்தரமா நடந்துக்க முடியுது?” ஆதி கத்த, அவன் அத்தை முகத்தில் பதற்றம் தெரிந்தது. பைரவி அவள் அம்மாவின் பின்னால் நின்றாள்.
“என்னடா… பெரியவங்கள இப்படி பேசுற?” அவன் அப்பா கேட்டுக்கொண்டே வந்தார்.
“வாங்க! இவங்க பெரியவங்களா? இவங்க என்ன பண்ணாங்கன்னு தெரியுமா?” என்று நிறுத்தி அவர்களை பார்த்து ஆதி,
“நான் லவ் பண்ற பொண்ணோட அப்பாகிட்ட போய் மிரட்டியிருக்காங்க. அவங்க பேக் அஃப் (back off) ஆகலைனா… இவங்க அவரை லஞ்ச ஊழல் கேஸ்ல உள்ள போடுவாங்கலாம். அவங்க இன்னொரு பொண்ண தூக்கிடுவாங்களாம்… என்ன பேச்சு இதெல்லாம்? அசிங்கமா இல்ல…”
அதை கேட்டு அதிர்ந்த ஆதியின் அப்பா, “ஏன்மா இவன் சொல்றதெல்லாம் உண்மையா?” அவர் தங்கையை கேட்க “ஆமாம் மாமா! எனக்கு ஆதி வேணும். அதுக்கு நான் என்னனாலும் பண்ணுவேன். அவ்ளோதான்” என்றாள் பைரவி வெடுக்கென.
“பல்ல தட்டிடுவேன்!” ஆதி அவளை முறைக்க, “நீங்க இவ்ளோ சீப்’பா நடந்துப்பீங்கன்னு நான் நினைச்சே பார்க்கலமா. ஒரு பொண்ணோட அப்பாகிட்ட போய்… அவங்க பொண்ணயே ச்ச” என்றார் ஆதியின் அப்பா வெறுப்புடன்.
“அப்பா… இவங்க அவர்மேல ப்ரைபரி கேஸ் போடறது இருக்கட்டும், அவங்க நினைச்சா இவங்க மேல கேஸ் போடலாம்… அவரை போய் மிரட்டினதுக்கு. இதெல்லாம் பத்தாதுன்னு இன்னைக்கு காலைல நிலா என்னை பார்க்க என் வீட்டுக்கு வந்தப்ப, என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?” பைரவியைப் பார்த்து முறைத்த ஆதி தொடர்ந்தான்.
“பணத்துக்காக தான் என் பின்னாடி நிலா வந்தான்னு, இன்டீசென்ட்டா பேசியிருக்கா. சீப்போ! என்ன தெரியும் உனக்கு அவளை பத்தி? உன்ன மாதிரியே அவளையும் நினைச்சுட்டயா?
வேலைக்காரன் மட்டும் இதை சொல்லலைனா எனக்கு என்ன நடந்ததுன்னு கூட தெரிஞ்சிருக்காது” பைரவியிடம் கத்தினான் ஆதி.
ஆதியின் அப்பா, “எனக்கு இவ்ளோ நடந்தது எதுவும் தெரியாது ஆதி. இன்னைக்கு ஹாஸ்பிடல்ல தான்… உன் அம்மா அந்த பொண்ண பத்தி என்கிட்ட சொன்னா. நீ வந்தவுடனே என்ன ஏதுன்னு பேசலாம்னு இருந்தேன்.
நாளைக்கு முதல் வேலையா, இவங்க பண்ணதுக்கு… அவங்க கிட்ட, அந்த பொண்ணுகிட்ட போய் மன்னிப்பு கேட்கணும்” என்றார்.
“அது முடியாதுப்பா. அவ நான் வேண்டாம்ன்னு போய்ட்டா… எங்க போனான்னு கூட தெரியல” சோபாவில் தலையைப் பிடித்தபடி உட்கார்ந்தான்.
அதைக் கேட்டு பதறிய அவன் அம்மா, “என்னடா சொல்ற? முதல்ல நிலா எங்க இருக்கான்னு கண்டிபிடிக்கற வழிய பாரு. நானும் அப்பாவும் காலைல அவங்க வீட்டுக்கு போயிட்டு வரோம்” என்றார்.
நிலாவின் வீட்டில், இரவு முழுவதும் நிலாவைப் பற்றி கேட்டறிய… தெரிந்தவர்களுக்கு போன் செய்தார்கள். ஆனால் எந்த பயனும் இல்லை.
காலை விடிந்தது.
நிலாவின் அம்மா ஒருபக்கம் அழுது கொண்டிருக்க, அவள் அப்பா தான் செய்த காரியத்தால் தான் இப்படியெல்லாம் ஆகிவிட்டதென வருந்திக்கொண்டிருந்தார்.
அதே நாள் காலையில் ஐஜி-யின் வீட்டை அடைந்தான் ப்ரித்வி.
“நான் சொல்லியும் நீ கேட்கலல ப்ரித்வி?” அவர் கோபத்துடன் சீற, “முதல்ல இதை பாருங்க” என்றான் ப்ரித்வி.
அது கருணாவின் வாக்குமூலம்.
“நான் த்ரிலோக் ஆயுர்வேத் (FMCG) வோட OTC ஹெட்(Over-The-Counter drugs product head).
நாங்க எங்க நிறுவனத்தில OTC டிவிசன் ஸ்டார்ட் பண்ணதுக்கப்புறம், மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைல இருக்கிற காடுகள், அங்க இருக்கிற ட்ரைபல் ஏரியா அண்ட் அவங்களோட மருத்துவ பழக்கவழக்கங்களை தெரிஞ்சிக்க, எங்க டீம் அங்கேயே போய் ரிசர்ச் பண்ணாங்க.
அவங்க பெரும்பாலும் அங்க இருக்கிற வளங்களை வச்சு தான் பல வியாதிகளை குணம் பண்ணுவாங்க. அப்படி எங்க ரிசர்ச்ல ரெண்டு கிராமத்தை தேர்வு செய்தோம்.
ஒன்னு வரகுமலை… மேற்கு தொடர்ச்சி மலைல இருக்கு. இன்னொன்னு நீங்க பார்த்த சோலைமலை… கிழக்கு தொடர்ச்சி மலைல இருக்கு. அவங்களோட மருத்துவ வளங்கள் எங்களுக்கு ரொம்ப பிரமிப்பா இருந்துச்சு.
சோலைமலைல பூங்கொடின்னு ஒரே ஒரு கிராமம். அங்க வெளி ஆளுங்கள உள்ள விடமாட்டாங்க. அது ரொம்பவே இடையூறா இருந்துச்சு.
எப்படியாவது உள்ள நுழையணும்னு, அவங்க எல்லை கோவிலுக்கு வர்ற கிராமவாசிகளை கவனிக்க ஆரம்பிச்சோம். அப்படி எங்க பிடியில விழுந்தவன் தான் ராமசாமி. அவனை வச்சு உள்ளேயும் நுழைஞ்சுட்டோம்.
ஆனா அவங்க அவங்களோட மருத்துவ ரகசியத்தை ராமசாமி எப்படிக் கேட்டும் சொல்லல. நாங்களா பண்ண சின்ன ரிசர்ச்ல, சின்ன சின்ன மருந்தை கண்டுபிடுச்சோம்.
அப்போ அந்த ஊர் மருத்துவர்களுக்கு எவ்ளோ தெரியும்னு யோசிச்சப்ப… பிரச்சனை பண்றவங்க இருந்தா தானே கஷ்டம், அவங்கள அழிச்சிட்டா எங்களுக்கு பிரச்சனை இல்லனு, முதல்ல அந்த ஊர்ல மீன்பிடிக்கப் போற ஆம்பளைகளை குறி வச்சோம்.
இந்த மாதிரி மக்கள் அங்க இருக்காங்கன்னே பெருசா வெளிய யாருக்கும் தெரியாது. ஏதோ சில மலைவாசிகள் இருக்காங்கனு தான் தெரியும். கடலூர் மக்களுக்கே அதிகம் தெரியாத இடம். அது எங்களுக்கு சாதகமா போச்சு.
அழிக்கணும்… ஆனா, அது இயற்கையா தெரியணும். கோகைன் அண்ட் ஓபியாய்டு ட்ராக் அதிக அளவ ஆல்கஹால்ல மிக்ஸ் பண்ணி கொடுத்தா, நெச்சுரல் ஸ்ட்ரோக் வர வாய்ப்பு அதிகம். போதை பொருள் யூஸ் பண்றவங்க, ஸ்பீட்ஃபால்னு சொல்வாங்க. மூச்சுத் திணறல் அதிகம் ஆகும். அதுவே கொடுத்துட்டே இருந்தா எப்போவேணா ஆர்கன்ஸ் ஃபெய்லியர் ஆகும்.
சோ அதை யூஸ் பண்ணிக்கிட்டோம். மொத்தமா செய்யாம கொஞ்சம் கொஞ்சமா செய்ய முடிவு பண்ணோம்.
எப்படியும் இந்த மாதிரி ஒரு ஊர் இருக்குன்னு வெளிய யாருக்கும் பெரிசா தெரியாது. அதுவும் இல்லாம அந்த ஊர்ல அரசாங்க மருத்துவமனைனு எதுவும் இல்லை.
அதுனால அவங்க எப்படி செத்தாங்கன்னு ஆராயமாட்டாங்கன்னு நினைச்சோம். அதுவும் இல்லாம ஒன்பது வருஷம் திருவிழா நடக்காம இப்போ நடத்தறதா முடிவு பண்ணாங்க. அதுல ஏதோ பிரச்சனை வரும்னு வேற ப்ரெடிக்ட் பண்ணாங்க, சோ அதையும் நாங்க யூஸ் பண்ணிக்கிட்டோம்.
அந்த ஊர் மருத்துவ குடும்பம் ரொம்ப முக்கியம்… சோ அவங்கள டச் பண்ணல. அந்த ஊர் பெண்களால எந்த ஆபத்தும் இல்ல. அவங்கள விட்டுடுலாம்ன்னு நினைச்சோம்.
அடுத்த ஜெனரேஷன் இருக்க கூடாதுன்னு, அங்க இருக்க பசங்கள டார்கெட் பண்ணோம். அவங்க அங்க விளையாடறப்ப அவங்களுக்கே தெரியாம… விளையாடுற மாதிரி கோகைன் இன்ஜெக்ட் பண்ணோம்.
எல்லாம் பிளான் பண்ண மாதிரி சரியா நடக்கறப்ப… அந்த பொண்ணு கோவிலுக்கு வந்தா. அவளுக்கு எப்படி இந்த விஷயம் தெரிஞ்சதுனு தெரியல.
அவ சொல்றதுல உண்மை இருக்குமோனு முனியரசன், அந்த ஊர் தலைவர் நினைச்சார். அவர் இருந்தா ஆபத்துனு அவருக்கும் டெட்லி ட்ரக் கொடுத்தோம். மூளைச்சாவு வந்து இறந்துட்டார்.
அந்த பொண்ணு கோவிலை விட்டு போன உடனே, அவ கூட இன்னொருத்தன் சேர்ந்து ஊருக்குள்ள வந்து எங்க பிளான்லாம் நாசம் பண்ணிட்டாங்க” என்று அவன் முடித்தான்.
“அப்போ எம்எல்ஏ எப்படி இன்வால்வ் ஆனார்?” ப்ரித்வி கேட்க,
“மொபைல் எங்களுக்கு ரொம்ப தேவையா இருந்துச்சு. அந்த மலைல மொபைல் நெட்வெர்க் சுத்தமா இருக்காது. அப்போ எங்களுக்கு அரசாங்க உதவி மறைமுகமா தேவப்பட்டுச்சு. அப்படி எங்களுக்கு உதவினவர் தான் அமைச்சர் வணங்காமுடி” என்று முடித்தான் கருணா அந்த காணொளியில்.
ஐஜி, “கிரேட் ஒர்க் ப்ரித்வி! ஸாரி… இந்த கேஸ் ஸ்டார்ட் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சு அந்த மினிஸ்டர், சிஎம் வழியா என்னை காண்டாக்ட் பண்ணி ஸ்டாப் பண்ண சொன்னார். அதான் உன்கிட்ட ஸ்டாப் பண்ண சொன்னேன்”
“தட்ஸ் ஒகே சர். நமக்கு இதெல்லாம் புதுசு இல்லையே. இந்தாங்க சார் சப்போர்ட்டிங் டாக்குமெண்ட்ஸ்” என்று சில கோப்புகளைக் கொடுத்தான்.
“இது அவனோட மொபைல்ல இருந்து எடுத்த அந்த ஊர் மூலிகைகளோட போட்டோஸ். இதை எடுக்க ஆனந்த் ஹெல்ப் பண்ணான்”
“இதெல்லாம்… கருணா சொன்னானே, அங்க போய் கண்டுபிடிச்ச மருந்துங்களோட டீடெயில்ஸ். Biochemist உதவியோட டீகோட் பண்ணோம்”
“இது, த்ரிலோக் ஆயுர்வேத் கரண்ட் அக்கௌன்ட்ல இருந்து ஒருமுறை பே(pay) பண்ண கருணாவோட கிரெடிட் கார்ட் பில்”
“இது, அவங்க யூஸ் பண்ண ஆண்டெனா வழியா வந்த கால் டீடெயில்ஸ். இதுல எம்எல்ஏ, அவர் பிஏ நம்பர்ல இருந்து வந்த கால் இருக்கு”
“இது, அவன் லேப்டாப்ல இருந்து எடுத்த த்ரிலோக் ஆயுர்வேத்ல இருந்து வந்த மெயில்ஸ்”
“இது அவன் கிட்ட இருந்து ஸீஸ் பண்ண டாக்குமெண்ட்ஸ்”
“இதுல – ஆதி அங்க இருந்தப்ப, கருணாவை எடுத்த வீடியோ, நான் கலெக்ட் பண்ண போட்டோஸ், அந்த ஊர் மக்களோட வாக்குமூலம் எல்லாம் இருக்கு”
“இது, கருணா வீட்ல இருந்து எடுத்த ட்ரக் அண்ட் மத்த ஐடம்ஸ்”
“இது அவனோட லேப்டாப் அன்ட் மொபைல் போன்ஸ்” என்று அனைத்தையும் கொடுத்து முடித்தான் ப்ரித்வி.
“சூப்பர். வி வில் டேக் திஸ் ஃபார்வேர்ட் ப்ரித்வி!” ஐஜி அதனைப் பெற்றுக்கொண்டு கைகுலுக்கினார்!