அகம் புறம் – 20

அகம் புறம் – 20:

பாலாவை வேவுபார்க்க அனுப்பியிருந்த ஆள், பாலாவை மாறுபட்ட தோற்றத்தில் பார்த்ததாகவும், முந்தைய தினம் மனநல மருத்துவரை சந்தித்ததையும் சொன்ன போது முற்றிலுமாக குழம்பினான் கௌதம்.

அவனிடம் தொடர்ந்து பாலாவை தொடர சொன்ன கௌதம் மனதில் பல யோசனைகள். ஓரிரு நாட்கள் பாலாவை தொடர்ந்தால் இன்னமும் தெளிவாக நிறைய விஷயம் தெரியவரும்… என்றெண்ணி இருந்தவனுக்கு, அடுத்து கிடைத்த தகவல் கோபத்தை கிளப்பியது.

பாலா விஷயம் தெரிய வந்த அடுத்த நாள், தன்னுடைய போலீஸ் நண்பன், ‘சென்னையிலிருந்து மறுபடியும் பாலாவின் அம்மாவுக்கு அழைப்பு வந்ததாக சொல்ல, அது கோபத்தை அதிகரித்தது.

அடுத்த நொடி அவன் சென்று நின்றது தோட்டத்திலிருந்த பாலாவின் அம்மா முன். கௌதம் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தில் அவர் முகத்தில் லேசாக பதட்டம். 

“என்ன அத்தை? எல்லாம் தெரிஞ்சு தான் நடந்திருக்கு போலயே? பாலாவ நீங்க தானே அனுப்பிவச்சீங்க? இதுல அடிக்கடி போன் வேற” என்றதும் திடுக்கிட்டார் பாலாவின் அம்மா.

அவர் பதில் பேசும்முன்… பூக்கொடி பின்னாலிருந்து வெளிவந்த அவன் அம்மா… “ஆமா கௌதம் தெரியும். இப்போ என்ன?” என்றபடி அவன் முன்னே வந்தார்.

கௌதம் முறைக்க, “நீ பண்ணின வேலைக்கு பிராயச்சித்தம் தேடிக்கிட்டோம்” எனும்போது பாலாவின் அம்மா கண்ணீருடன் அவ்விடத்தை விட்டு அகன்றார். கௌதமின் அம்மாவும்  நகர, கௌதம் மீண்டும் குழம்பி நின்றான்.

அவனுக்கு தெரியவில்லை அவன் தவறு என்ன என்று. 

அவன் அம்மா அவர்கள் அறைக்குள் நுழைய, பின்னோடு சென்ற கௌதம்… “நான் என்ன பண்ணினேன்? அவளுக்கு அந்த அருண் தானே முக்கியம்? உங்க பையனோட வாழ்க்கையை கூட பார்க்காம, நீங்களும் அனுப்பி வச்சிருக்கீங்க… அசிங்கமா இல்ல?” 

அவன் பேச்சில் அவனைவிடவும் கோபமுற்ற அவன் அம்மா, “அசிங்கத்தை பற்றி நீ பேசறயா கௌதம்? பாலா ஏன் போனான்னு தெரியுமா? அதுக்கு யார் காரணம்னு தெரியுமா? நீ!”

“அம்மா! நான் என்ன?” அவனுக்கு சுத்தமாக புரியவில்லை. அவனை பொறுத்தவரையில் அருணை தேடி சென்றிருப்பாளோ? என்ற எண்ணம் தான்.

“என்ன சொன்ன கௌதம்? உன் வாழ்க்கையை கூட பார்க்காம அவளை அனுப்பிவச்சேன்னு… ஆமா, நான் மட்டும் அவளை அனுப்பலைனா இந்நேரம் அவ செத்திருப்பா. என் கண்ணு முன்னாடியே நான் வளர்த்த பொண்ணு… கத்தியோட..” 

அதற்கு மேல் பேசமுடியாமல் அவர் தொண்டை அடைக்க, கௌதமோ அவர் சொன்ன விஷயத்தில் பேச முடியாமல் அதிர்ந்து நின்றிருந்தான். 

‘பாலா… தன் பாலா உயிரை முடித்துக்கொள்ள நினைத்தாளா? அதுவும் தன்னாலா?’ நம்ப முடியாமல் அப்படியே திடுக்கிட்டு நின்றிருந்தான்.

“நீ இவ்ளோ கீழ்த்தரமா நடந்துப்பனு நினைக்கல கௌதம். உன்ன இவ்ளோ மோசமாவா வளர்த்திருக்கேன்? இந்த வீட்ல மத்த ஆண்களைவிட உன்ன ஓரளவிற்கு நல்லா, மதிக்க தெரிஞ்ச பையனா வளர்த்திருக்கேன்னு நினைச்சுப்பேன். 

ஆனா நீ? ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம, அவளுக்கு என்ன பிரச்சனைன்னு காதுகொடுத்து கூட கேட்காம… அவளை தினம் தினம். ச்சை. சொல்லவே கூசுது. இதுல நீ அசிங்கத்தை பத்தி பேசற இல்ல?” 

கௌதம் முகம் வெளிறியது. அன்னையை பார்க்கமுடியவில்லை. இருந்தும்… “அவ என் பாலாமா. சின்ன வயசுல இருந்து பாலா தான்னு சொல்லித்தானே வளர்த்தீங்க? அந்த உரிமையை நீங்க எல்லாரும் தானே கொடுத்தீங்க” 

“உன் பாலாவா? நீ அப்படி நினைச்சிருந்தா, அவ உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்திருப்ப கௌதம். கல்யாணம் வேணாம்னு சொன்னப்ப ஏன்னு கேட்டிருப்ப. இல்ல கல்யாணத்துக்கு அப்புறமாவது அவளுக்கு என்ன பிரச்சனைன்னு கேட்டிருப்ப. உன் பாலானு நீ நினைச்சிருந்தா கேட்டிருப்ப. அது தான் உரிமை! 

ஆனா நீ உரிமையை கட்டில்ல காட்டிருக்க! அது உரிமை இல்ல… நான் ஆம்பளங்கற ஆதிக்கம், இந்த குடும்பத்துல ஊறின ஆணாதிக்கம்!” கோபத்துடன் பேசியவர், “அவ மனசளவுல உன்னால எவ்வளவுக்கு  பாதிப்பு ஏற்பட்டிருந்தா, சாக முடிவு பண்ணியிருப்பா? நான் மட்டும் அன்னைக்கு பார்க்கலைனா?!” இன்னமும் அந்த நிகழ்வு அவர் மனதை அழுத்தியது.

நடந்ததை… பாலா சொன்னதை மொத்தமாக சொன்னார். கௌதம் இன்னவென்று சொல்லமுடியாத… ஏன் பேசக்கூட முடியாத நிலையில் திக்பிரமை பிடித்ததுபோல நின்றிருந்தான்.

அவனை பார்க்கையில் ஒரு தாயாக அவர் மனம் துடித்தாலும்… அவனின் வாழ்க்கையை எண்ணி தவித்தாலும், அவன் செய்த தவறை எடுத்துச்சொன்னவர், பாலாவின் நிலைமையை எடுத்துச்சொன்னனார். 

அவன் முகம் காட்டும் உணர்வுகள் நிச்சயமாக பாலாவிற்காக வருந்துவதை காட்டியது.  

“நீ என் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பன்னா… பாலாவுக்கு ஏதாவது நல்லது செய்யணுன்னு நினச்சா, தயவு செய்து அவளை அவ விருப்பத்துக்கு வாழ விட்டுடு. அன்பு, பாசம், உரிமைன்னு அவ முன்னாடி போய் நிக்காத. 

அப்புறம் உங்க அப்பாங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும் கெளதம். உன் அப்பா, பாலா அப்பா சொன்ன மாதிரி முடிஞ்சா சீக்கிரம் வேற கல்யாணம் பண்ணிக்கோ.  

நீ சந்தோஷமா இருக்கறத பார்த்தா, பாலாவை கொஞ்சம் கொஞ்சமா மறக்க ஆரம்பிப்பாங்க. அதுதான் பாலாவுக்கு நல்லது” 

அவர் பேசிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் கௌதமால் எதையுமே ஜீரணிக்க முடியவில்லை. 

பாலாவை மிகவும் நேசித்தான். முன் இருபதுகளில் இருந்தவனுக்கு அந்த வயதுக்கே உரிய ஆசைகள் பாலா மேல் எழுந்தது.

ஆனால் திருமணம் முடிந்த போது அவன் அப்பா, பலமுறை அவனுக்கு சொன்னது… ‘பாலா உன்னுடைய மனைவி. அவள் அருணுடன் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றால், அவளிடம் எல்லை மீறுவதுதான் ஒரே வழி. குழந்தை என்ற ஒன்று வந்துவிட்டால் நிச்சயமாக பாலாவால் எதுவும் செய்யமுடியாது’ என சொல்லி சொல்லி, கௌதமை மாற்ற முயற்சி செய்து, ஓரளவிற்கு வெற்றியும் கண்டார். 

கௌதம் மனதில் ‘பாலா அருணை நேசிக்கிறாள்’ என்ற எண்ணம் மேலோங்க… அருணை காரணம் காட்டி காட்டி பாலாவை எங்கேயும் எவ்விடத்திலும் பேசவிடாமல், அவன் நேசிப்பை திணித்தான்! 

காலம் செல்ல செல்ல, அனைத்தும் மாறும் என நம்பியவனுக்கு இப்போது கேட்ட செய்தி நிலைகுலைய செய்தது. தன் தந்தை சொல்லியதை கேட்டிருக்க கூடாதோ என இப்போது யோசித்தான். 

தான் இரவில் நடந்துகொண்டதையெல்லாம் நினைத்துப்பார்த்தான். முன், அந்த செயல்கள் பாலாவுக்கு தகித்தது. இப்போது கௌதமுக்கு கூசியது. பாலாவின் பரிதவித்த முகம், இப்போது வதைத்தது. 

எவ்வளவு எதிர்ப்பு அவளிடம்? கொஞ்சம் கூட அதை பொருட்படுத்தவில்லையே என்ற குற்றவுணர்ச்சி மேலோங்கியது. எந்த திருமண சடங்கையும் சந்தோஷமாக செய்யவில்லையே என்று இப்போது மூளை குத்திக்காட்டியது. 

பாலாவுடைய மாற்றங்கள் எப்போதோ தெரிய ஆரம்பித்ததே… அதை எப்படி கவனிக்க தவறவிட்டேன் என அவன் மனம் வெதும்பியது. தான் எவ்வளவு துன்பம் தந்திருந்தால், தற்கொலைக்கு முயன்றிருப்பாள் என எண்ணும்போதே முற்றிலுமாக நொறுங்கினான்.

இப்போது என்ன செய்வது, எதை செய்வது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் முடிவெடுத்திருந்தான். பாலாவை இனியும் இம்சிக்கக்கூடாது. எக்காரணம் கொண்டும் வீட்டிற்கு பாலா இருக்கும் இடம் தெரியக்கூடாது என எண்ணி, தன் அப்பாவும் பாலாவின் அப்பாவும் நியமித்த ஆட்களை தனியாக கவனித்து, பாலாவை தேடும் வேலையை நிறுத்தச்சொன்னான். 

எவ்வளவோ செய்தவனால் பாலாவை மறந்து… தான் செய்த தவறை மறந்து வேறு திருமணம் என்பதை நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. அவனுடைய அந்த அறையில் எங்கு திரும்பினாலும் பாலாவுக்கு கொடுத்த இம்சைகள் மனதுக்குள் வந்து குடைந்தது.

ஆனால் திருமணம் பற்றி அவன் அம்மா அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். 

பாலாவின் அப்பாவுக்கு பாலாமேல் எல்லையற்ற கோபம். நேரில் பார்த்தால் நிச்சயமாக வெட்டுக்குத்தில் முடியும் அளவில் இருந்தது அந்த கோபம். குடும்ப மானம், சாதி மக்கள், கௌரவத்தை பெரிது என நினைக்கும் அவருக்கு, பாலா அனைத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டுச் சென்றுவிட்டாளே என்ற ஆத்திரம். 

இதுபோல ஒரு ஜீவன் கண்முன் தெரியாமல், திரும்ப வராமல், எங்கேயோ சென்றாலும் நல்லதுதான்… மீதமுள்ள குடும்ப மானமாவது மிஞ்சும் என எண்ணி பாலாவை முற்றிலுமாக வெறுத்தார். 

பாலாவின் அம்மா மற்றும் கௌதமின் அம்மா, இருவருக்கும் செல்லியம்மனை வேண்டுவதை தவிர வேறெதுவும் செய்ய முடியா நிலை.

ஏதோ இயந்திரம் போல நாட்களை நகர்த்தியபோது தான், பாலாவிடம் இருந்து அழைப்பு வந்தது கௌதமுக்கு.

முதலில் அதிர்ந்தாலும் யாரிடமும் சொல்லாமல் சென்னை கிளம்பினான். 

அங்கே அவனுக்காக காத்திருந்த பாலாவை, அவன் தோற்றத்தை பார்க்கையில் ஏனோ நெஞ்சம் பிசைந்தது. இருந்தும் தன்னை சமன் செய்துகொண்டு சென்றான்.

அவனை பார்த்ததும், மருந்துக்கும் புன்னகைக்காமல் அங்கிருந்து நகர்ந்தான் அருண். அவனை பார்க்கையில் கொஞ்சம் குற்றவுணர்ச்சியும் கொஞ்சம் பொறாமையும் கூட ஏற்பட்டது கௌதமுக்கு. 

அருணால் பாலாவை புரிந்துகொள்ள முடிந்துள்ளது. ஆனால் தன்னால்?! என எண்ணியபோது ஏற்பட்ட உணர்வுகள் அது. 

பாலா முதலில் கௌதமை பார்த்தபோது உள்ளுக்குள் பயம் சூழ்ந்தாலும், அவனுடன் இருந்த கொடூர நேரங்கள் உடலை கூனிக்குறுக செய்தாலும், வெளியில் காட்டிக்கொள்ளாமல் மென்னகையுடன் வரவேற்றான்.

கெளதம் பேசவேயில்லை. தான் செய்த தவறுக்கு எப்படி பேசுவது என்ற தவிப்பில் அமைதியாக இருக்க… அவனின் அமைதி பாலாவுக்கு நெருடினாலும் “எப்படி இருக்கீங்க மாமா” என ஆரம்பித்தான்.

தலையை மட்டும் அசைத்தான் கௌதம். 

“என்னால ரொம்ப அசிங்கம் ஆகிரிக்கும், மத்தவங்களை விட உங்களுக்கு நிறைய வேதனை தந்திருக்கும். ஆனா… நான்… என்னை… மன்னிச்சிடுங்க மாமா. என்னால…” எப்படி ஆரம்பிப்பது, என்ன சொல்வது என்ற பெருந்தயக்கம் பாலாவுக்கு.  

அவனை காப்பற்ற, கௌதமே… “எனக்கு நடந்ததெல்லாம் தெரியும் பாலா. உன்னை இன்னும் வருத்தக்கூடாதுனு தான் இத்தனை நாளா வரல” என்றான்  உணர்ச்சிகளற்ற முகத்துடன்.

பாலா அதிர்ந்தான்.

“அம்மா எல்லாமே சொல்லிட்டாங்க பாலா. நீ எதுக்கு மன்னிப்பு கேட்கணும்? எல்லாம்… என்னால தான்” அதைப்பற்றிப் பேச இப்போது கௌதமுக்கு ஒரு மாதிரி இருந்தது. 

இருவரிடத்தில் கொஞ்சம் நேரம் அமைதி. 

பின் பாலா, “அப்போ எனக்குள்ள என்ன நடக்குதுன்னே எனக்கு தெரியாத நிலைமை மாமா. இதுபோல எல்லாம் இருக்காங்களா… இல்ல எனக்கு தான் ஏதோ தப்பா நடக்குதானு குழம்பி இருந்தப்ப தான் ஒரு டாக்டர்’ரை பார்த்தேன். 

‘எனக்கு தான் பிரச்சனை… இதுபோலவெல்லாம் யாருக்கும் நடக்காது’னு அவங்க சொன்னது… என்னை ரொம்ப குழப்பிடுச்சு. ஒருவேளை நான் எல்லாத்தையும் மீறி… மாறினா, வீட்ல அம்மா அப்பாக்கு அவமானம் ஆகிடுமோனு பயம்.

அவங்களுக்கு இப்போ கூட என்னால அவமானம் தான். ஆனா, போனது அப்படியே போகட்டும் விட்டிருப்பாங்க. கூடவே இருந்திருந்தா எவ்வளவு கஷ்டம் இல்லையா… உங்ககிட்ட கூட எப்படியாவது சொல்லணும்னு நினைப்பேன் மாமா.

கல்யாணத்துக்கு முன்னாடி அருண் நிறைய முயற்சி பண்ணான் உங்ககூட பேச. ஆனா நீங்க அவனை பேசவே விடல. அப்போ தான் நீங்க அருணை அடைச்சு வச்சு…” என்ற பாலா அருணை பார்த்தான். கௌதமும் பார்த்தான்.

இருவர் மனதும் அவனை மெச்சுதலாக எண்ணியது. கௌதமுக்கு தன்மேல் வெறுப்பு அதிகமானது.

“அதுக்கப்புறம், எனக்கு எதுவும் பிடிக்கலனு… அதுக்கான காரணம் சொல்ல வரும்போதெல்லாம் அருணை சொல்லிக்காட்டினீங்க. அவனை என்னவேனா பண்ணுவேன்னு சொன்னீங்க. 

என்னோட ஃபிரெண்ட் அப்படிங்கற காரணத்துக்காகவே அதிகம் கஷ்டப்பட்டுட்டான். அவனும் சின்ன பையன் தான். அவனுக்கும் வாழ்க்கை இருக்கும் இல்லையா… 

அதுக்கு மேலயும், அவனுக்கு என்னால எந்த தொல்லையும் இருக்கக்கூடாதுனு எல்லாத்தையும் பொறுத்துகிட்டேன் மாமா. எப்போ அவன் ஊரை விட்டு கிளம்பிட்டான்னு தெரிஞ்சதோ, அடுத்த முடிவை எடுத்தேன்.

அப்போகூட என் வாழ்க்கையை முடிச்சுக்க தான் நினச்சேன். ஆனா அத்தை தான்” என்று சொன்னபோது பாலாவுக்கு அன்றைய நிகழ்வுகளெல்லாம் நிழலாடியது.

அவ்வளவு நல்ல மனிதர்களை விட்டு இப்போது இப்படி இருக்கிறோமே என்ற எண்ணம் அழுத்தினாலும், அருணையும் சத்யாவையும் பார்த்த நொடி அந்த எண்ணம் கூட அழிந்தது.

கௌதம் கல்லென உட்கார்ந்திருந்தான். கொஞ்சம் அசிங்கமாகவும் இருந்தது. பாலாவை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்தான். 

சில நொடிகளுக்குப் பின், “நான் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்கக் கூட எனக்கு தகுதி இல்ல பாலா. ஆனா நான் செய்த பாவத்துக்கு ஒரு கடுகளவு பிராயச்சித்தமா… என்னால ஒரே ஒரு உத்தரவாதம் மட்டும் தர முடியும். உன்ன நம்ம வீட்ல இருந்து யாரும் தொல்லை பண்ணாத அளவு பார்த்துப்பேன்” 

அவன் நிறுத்த, “என்னை புரிஞ்சிட்டதுக்கு… ரொம்ப தேங்க்ஸ் மாமா” என்றான் பாலா கண்களை எட்டாத புன்னகையுடன்.

மூச்சை மெதுவாக வெளிவிட்ட கௌதம், “நம்ம அப்பாக்கள் பத்தி உனக்கே தெரியும். அவ்வளவு சீக்கிரம் மாற மாட்டாங்க பாலா. அவங்களுக்கு சாதி, கௌரவம் தான் முக்கியம். பார்க்கலாம்… எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும். கடுமையான பாடம் சொல்லித்தரும். அதுக்கு நானே ஒரு உதாரணம்” நிச்சயமாக மனதில் வலியுடன் தான் சொன்னான் என புரிந்தது பாலாவுக்கு. 

கௌதம், நம்முள் இருக்கும் சில ஆண்களின் பிரதிபலிப்பே. மனைவி தன் உரிமை, தனக்கில்லாததா என நினைப்பவர்கள். இவன் நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை. நல்லவனாக இருந்திருந்தால் பாலாவை நல்லவிதமாக நடத்தியிருப்பான். கெட்டவனாக இருந்திருந்தால், இந்நேரம் இப்படிப் பேசிக்கொண்டிருக்க மாட்டான். 

இப்போது தன் தவறை புரிந்துகொண்டான். ஆனால் காலம் கடந்த புரிதல். 

கௌதம் மௌனமாகிவிட, பாலா “எனக்கு ஒரே குற்ற உணர்ச்சியா இருந்துச்சு மாமா. உங்க கல்யாண வாழ்க்கை இப்படி ஆக, நானும் ஒரு காரணம். என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ். அப்போ எனக்கு ஒரே குழப்பம்… மன அழுத்தம். எனக்கு சத்தியமா அப்போ வேற வழி தெரியல. இங்க வந்து டாக்டர் பார்த்தப்புறம் தான், எனக்கே ஒரு தெளிவு கிடைச்சுது”  

அன்று அருணிடமும் பாலா இதை தான் பேசினான். தன்னால், தன் செயலால் கௌதமுக்கு நிச்சயம் மனக்காயம் ஏற்பட்டிருக்கும் என்று. கௌதமிடம் பேச வேண்டும் என்றான். அருண் மறுத்தும் கேட்காமல் இப்போது மனம் திறந்து கௌதமுடன் பேசுகிறான். 

“நான் உங்க வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையா இருக்க மாட்டேன் மாமா. ஏதோ வகைல தப்பு என் பேர்ல இருந்தும், இதை நான் சொல்றது சரியில்ல தான். ஆனா ப்ளீஸ், இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க மாமா” கண்களில் கொஞ்சம் கெஞ்சலுடனும், கொஞ்சம் தவிப்புடனும் கேட்டான் பாலா.   

இப்போது நேருக்கு நேராக பாலாவை பார்த்தான் கௌதம். ஏனோ சொல்லமுடியாத வலி அவனுள். தன் மேல் பழியை போட்டுக்கொள்ளும் பாலாவை பார்க்கையில் அவனுக்குள் பாரம் அதிகமானது.  

வெற்றுப்புன்னகையுடன் தலையசைத்தான். அவ்வளவு எளிதல்ல பாலாவை மறந்து, பாலாவுக்கு செய்ததெல்லாம் மறந்து இன்னொரு திருமணம் என்பது. இருந்தும் தலையசைத்தான். 

அடுத்த சில நொடிகளுக்குப் பின், பாலாவிடம், “அருண்கிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா?” தயங்கிக் கேட்டான் கௌதம். 

பாலா அருணை அழைக்கத் திரும்ப, கௌதமே எழுந்து அருணிடம் சென்றான். பாலா அங்கேயே இருந்துகொண்டான்.

கௌதமை பார்த்ததும் அருண் புருவங்கள் சுருங்கியது. சத்யா தயக்கத்துடன் அங்கிருந்து நகர பார்க்க, “நீங்களும் இருங்க” என்ற கௌதம், 

“உன்கிட்ட ரொம்ப தப்பா நடந்துக்கிட்டோம் அருண். மன்னிப்பெல்லாம் ரொம்ப சின்ன வார்த்தை. எங்க பாலா… இப்போ நல்லா இருக்கானா நீதான் காரணம். தேங்க்ஸ்” என முடித்துக்கொண்டவன் சத்யாவிடமும் நன்றியை சொன்னான். அதிகமாக எதையும் முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. 

அருண் அமைதியாக இருக்க, இன்னமும் சிலவற்றை சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான். அருணுக்கும் சத்யாவுக்கும் கௌதம் பேசியதை எண்ணி ஆச்சரியம்.

பாலாவிடம் வந்த கௌதம், “அத்தை கிட்ட, அம்மா கிட்ட வீடியோ கால் பேசறயா பாலா?” என்று கேட்ட,

அதில் திடுக்கிட்ட பாலா,சைகையால் வேண்டாமென மறுத்தான். 

“பேசினா சந்தோஷப்படுவாங்க பாலா” 

“வேணாம் மாமா. என்னை இந்த கோலத்துல பார்த்தா… நிச்சயம் வருத்தப்படுவாங்க” முகத்தில் வெறுமை அப்பிக்கொண்டது. 

ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது கௌதமுக்கு. சில நொடிகளுக்குப் பின், “கண்டிப்பா எல்லாம் மாறும் பாலா. என்னால முடிஞ்சவரை என் சைட்ல முயற்சிப்பேன்” என்றவன் கொண்டுவந்திருந்த காசோலையை பாலாவிடம் நீட்டினான்.

பாலா புரியாமல் பார்க்க, “இது உன்னோட பணம் தான். உண்மைய சொல்லணும்னா, இது ரொம்ப கம்மி பாலா” 

பாலா இப்போது தன்னம்பிக்கையுடன் புன்னகைத்தான். 

“வேணாம் மாமா. தனியா கிளம்பி வந்த எனக்கு, தனியாவே எல்லாம் செய்ய தெரியணும். அம்மா அத்தைகிட்ட வாங்கின பணம் கூட கண்டிப்பா திரும்ப தந்துடுவேன்” 

அவனின் நம்பிக்கை இப்போது கௌதமுக்கு புன்னகையைத் தந்தது. விடைபெற்றுக்கொண்டான். 

கௌதம் எப்படி உணர்ந்தானோ… பாலா நிம்மதியாக உணர்ந்தான். 

சத்யாவும் அருணும் ஏதோ பேசிக்கொண்டிருக்க, பாலாவை பார்த்ததும் அமைதியாக அவனுடன் புறப்பட்டனர். 

………………

பாலா இந்த சில நாட்களாக மருத்துவர் சொன்ன சிகிச்சைகளை பற்றி யோசித்துக்கொண்டே இருந்தான். தற்போது செலவு செய்வது கடினம் என நினைத்துக்கொண்டான். 

அன்று காலை மஞ்சுளாவின் தோழி உதவி செய்வதற்காக வந்திருந்தார். 

அவர், பாலா, சத்யா வேலையில் ஈடுபட்டிருக்க, சத்யா அவரிடம்… “நீங்க எந்த ஊருக்கா… எப்படி சென்னை வந்தீங்க?” என பேச்சை ஆரம்பித்தாள். 

“நான் பழனி சத்யா… அம்மா இல்ல. அப்பா, சித்தி தான். அப்புறம் தங்கச்சி. எப்போ என்கிட்ட மாறுதல் தெரிஞ்சதோ, ரொம்ப கொடுமை படுத்துனாங்க. 

மாட்டுக்கொட்டாய்ல… சோறு தண்ணி இல்லாம வச்சிருந்தாங்க… குடும்ப மானம் போய்ட கூடாதுனு வெளியவே அனுப்பமாட்டாங்க. ரொம்ப வேதனை தாங்காம, வீட்ல இருந்து தப்பிச்சி, மதுரைக்கு போனேன். 

அங்கதான் மஞ்சு பழக்கம். நான் மஞ்சு லட்சுமி மூணு பெரும் சேர்ந்துதான் இருப்போம். பதினஞ்சு வயசு இருக்கும். எங்களை போலவே நிறைய பேர் இருந்தாங்க.

எங்க விருப்படி, உணர்வுகளுக்கு ஏற்ற மாதிரி இந்த உடலை மாற்ற காசு வேணும். அதுக்காக செய்யக்கூடாதனு சொல்ற வேலைய வேற வழியில்லாம… வழிதெரியாம பண்ணோம். அவ்ளோ கொடுமை அனுபவிச்சோம். 

வேதனையெல்லாம் பொறுத்துட்டு பணம் சேர்த்து மூணு பேரும் அங்கிருந்த குழுவோட சிபாரிசுல, கூவாகம் போனோம் சத்யா.

ஆனா, இவ்வளவு நாள் அனுபவிச்ச வலியெல்லாம் ஒன்னுமே இல்லனு சொல்ற அளவுக்கு உயிரை உருவர வலி அங்க… சுருக்கமா சொன்னா வாழ்வா சாவா தான்” என்றவர் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. 

பதறியபடி பாலாவும் சத்யாவும் அவரை சமாதானப்படுத்த… “நானும் மஞ்சுவும் மறுபிறவி எடுத்தோம். ஆனா லட்சுமி…” என்று அதற்குமேல் பேச முடியாமல் அழுதார். அங்கே மஞ்சுளாவின் கண்களிலும் கண்ணீர்.

தவறாக கேட்டுவிட்டோமோ என்றாகிவிட்டது சத்யாவுக்கு. அழுகையின் நடுவே அவர்… “சிகிச்சைக்கு மூனு பேரா போன நாங்க, ரெண்டு பேரா திரும்பினோம்”

WARNING!!! எச்சரிக்கை!!!!

 ***** கீழே உள்ள சில வரிகளை பலவீனமானவர்கள் தவிர்க்கவும்*****

பொதுவாகவே கூவாகத்தில் உறுப்பு நீக்க செய்யப்படும் சிகிச்சை, மறுபிறவி எடுப்பதற்கு சமம். எந்த ஒரு மருத்துவத்தின் தலையீடும் இல்லாமல், மயக்க நிலைக்குச் செல்லாமல், பிறப்புறுப்பை கயிறால் கட்டி இழுத்து, பின் வெட்டி நீக்கப்படுவது… அதனால் ஏற்படும் ரத்தப்போக்கை நிறுத்த, காய்ச்சிய எண்ணெய் மற்றும் சில மூலிகைகளை அரைத்து, அறுபட்ட இடத்தில் வைத்து கட்டுவர். ஏற்கனவே வெட்டுப்பட்ட வலி கூடவே இதுவும்… மரணவலியை விடக் கொடியது. அதற்குப் பின் பல சடங்குகள். இதுபோல செய்யும் போது… சிலரின் உடல் இதையெல்லாம் தாங்கிக்கொள்ளமுடியாமல், உயிர் அந்த உடலை விட்டு பிரிந்துவிடும்! இன்னும் சிலருக்கு சில மாதங்கள் கழித்து சிகிச்சை செய்த இடத்தல் தொற்று ஏற்பட்டு அவதிப்படுவதும் உண்டு. 

இதையெல்லாம் தடுக்கும் முயற்சியாகவே அரசாங்கம், சில அறுவை சிகிச்சைகளை பிற்பாடு ஆரம்பித்தது. 

***********

சிறிது நேரம் எடுத்துக்கொண்டு தன்னிலை திரும்பிய மஞ்சுளாவின் தோழி. “லட்சுமி இல்லாம மதுரைக்கு போகவே எங்க மனசு ஒத்துக்கல. சென்னை வந்தோம். எப்பவும் போல எங்களை யாருமே மதிக்கல. ஏதேதோ தொழில் செய்தோம். ஏன் வாழறோம்னு சில சமயம் தோணும். இருந்தும் ஒரு நப்பாசை… என்னைக்காச்சும் நல்லா வாழ மாட்டோமான்னு” என்றார் கண்ணீருடன்.

பின், “ஆனா மஞ்சு அடிக்கடி சத்யா சத்யானு சொல்வா. உனக்காகவே அந்த அடையாறு வீட்டுக்கு போறத கூட நிறுத்திட்டா. உனக்கு ஹாஸ்பிடல்’ல ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்வா. ஆனா அவ கஷ்டகாலம்… இப்படி ஆகிடுச்சு” பெருமூச்சுடன் சொன்னவர்… “நீ ஏன் ஆப்ரேஷன் பத்தி யோசிக்கல சத்யா?” என்று கேட்டார். 

சத்யா புன்னகையுடன், “அதைவிட முக்கியமான வேலைகள், கடமைகள் இருக்கப்ப, அதெல்லாம் யோசிக்கவே நேரம் இல்லக்கா. நான் ஆப்ரேஷன் அது இதுனு படுத்துட்டா, ரூபிய யார் பார்த்துப்பா” என்றாள்.

அந்நேரம் வீட்டின் கதவு தட்டப்பட்டது. வெளியே நடுத்தர வயது மிக்கவர் நின்றுகொண்டிருந்தார். 

சத்யா சென்று விசாரித்தபோது… “செந்தில் மெஸ் பக்கத்துல நான் அசைவ ஹோட்டல் வச்சுருக்கேன். உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார் அவர்.

சிறிது நேரத்துக்குப் பின், “செந்தில் சைவ மெஸ் வச்சிருந்தப்ப, என் ஹோட்டல் பிஸ்னஸ் கொஞ்சம் நல்லாவே போயிட்டு இருந்துச்சு. ஆனா, அசைவமா மாத்தினப்ப, கொஞ்சம் அடி. மதியம் கூட்டம் குறைய ஆரம்பிச்சது. 

அப்போ யாரோ அவனுக்கு பிரியாணி சப்ளை பண்றாங்கனு சொன்னதும், யாருனு விசாரிச்சப்ப… உங்களை கை காட்டினாங்க. எப்படி கேட்கறதுனு யோசிச்சப்ப தான், உங்களுக்கும் செந்திலுக்கும் பிரச்சனைன்னு கேள்விப்பட்டேன்.

‘எதிரிக்கு எதிரி நண்பன்’ சோ, நம்ம ஏன் பார்ட்னெர்ஷிப் வச்சுக்கக்கூடாது? செந்தில் எந்த விலைக்கு வாங்கினான்… அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா, நான் மார்க்கெட் ரேட் கோட் பண்றேன். உங்களுக்கு விருப்பம்னா தொடரலாம்.

மற்ற ஏரியால எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்றேன். நீங்க பிரியாணி சப்ளையர் ஆகிடலாம்” என்றவர்… வீட்டைச் சுற்றி நோட்டம் விட்டார்.

பின், “வேணும்னா, என்னோட ஒரு வீடு கொளத்தூர்ல இருக்கு. அத வேணும்னா யூஸ் பண்ணிக்கோங்க. வாடகைக்கு தான். ஆனா, இந்த வீடு வேணாம், ஏன்னா சில சமயம், உங்கள பிடிக்காத சிலர், உங்களை போட்டியா நினைக்கும் சிலர்… நீங்க தரமா, சுத்தமான இடத்துல சமைக்கலைனு கம்பளைண்ட் கொடுப்பாங்க. அதுக்கு தான்” என்றவர் சில விஷயங்களைப் பேசிவிட்டு சென்றார்.

“நான் சொன்னேனே சத்யா… திறமை இருக்கிற இடத்துக்கு, கால தாமதமானாலும்… வாய்ப்பு கண்டிப்பா தேடி வரும்னு. இப்போ நிஜம் ஆகிடுச்சு. செந்திலால இழப்புனு வருத்தப்பட்ட. இப்போ அதே செந்தில்னால எவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்கு” மென்னகையுடன் சொன்ன பாலாவை பார்த்த சத்யாவின் முகத்தில் புன்னகை. 

………………

கௌதம் பாலாவை பார்த்துவிட்டு சென்று சில நாட்கள் ஆகியிருந்தது. 

என்றைக்கும் போல் காலை வேலைகளில் பாலாவும் சத்யாவும் ஈடுபட்டிருக்க, அருண் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான்.

வந்தவன், கௌதம் அனுப்பிய பாலாவின் பன்னிரண்டாம் வகுப்பு சர்டிஃபிகேட் மற்றும் சில ஆவணங்களை பாலாவிடம் தந்து… “NEET எக்ஸாம்’க்கு ப்ரிபரேஷன் ஸ்டார்ட் பண்ணிடலாம் பாலா” என்றான்.

சத்யா புன்னகைக்க, விஷயத்தை கேட்ட பாலா அதிர்ந்து பார்த்தான்!

 

  •  
  •  
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !! ©All Rights Reserved
0
Would love your thoughts, please comment.x
()
x