என்னோடு நீ உன்னோடு நான் – 10

என்னோடு நீ உன்னோடு நான் – 10

அவளை விடுவித்து சற்று விலகிய ஆதி… “நிலா! யாரோ பக்கத்துல இருக்காங்க” என்றான் மிகவும் மெல்லிய குரலில்.

சட்டென்று தன்னிலைக்கு வந்தவள், அவன் பார்க்கும் திசையில் பார்த்தாள். யாரும் தெரியவில்லை.

அவசரமாக டென்ட் உள்ளே சென்றவனிடம், “நீ என்ன பண்ற ஆதி?” என்று அவன் போவதையும் அவர்கள் வருகிறார்களா என்றும் பார்த்தவண்ணம் கேட்டாள்.

“இன்னும் கொஞ்சம் உள்ள வைக்க வேண்டியது இருக்கு. ரெண்டு நிமிஷம்” என்று ப்ளாங்கெட் லேம்ப்  மற்றும் சில பொருட்களை எல்லாம் உள்ளே வைத்து பேக் செய்தான்.

அவள் சுற்றியும் முற்றியும் பார்க்க யாரும் தென்படவில்லை… ஆனால் பேசும் சத்தம் மட்டும் கேட்டவுடன், “ஆதி… ஆமா! யாரோ இருக்காங்க. எனக்கும் பேசற சத்தம் கேட்குது” கொஞ்சம் பதட்டத்துடன் மெதுவாகச் சொன்னாள்.

ஆதி வெளியே வர முற்படும்போது, இரண்டு ஆட்கள் அவளின் மறுபக்கம் அவளை நெருங்கினார்கள். 

ஆதியும் வெளியே வந்ததைப் பார்த்ததும், ஒருவன் ஆதியைத் தாக்க செல்ல… மற்றொருவன் நிலாவை நெருங்கினான்.

“நிலா! நான் சொன்னேனே அதை செய்” என்ற ஆதி, கீழிருக்கும் கட்டையைக் காட்டியபடி, தன்னை நெருங்கியவனைத் தாக்க தயாரானான்.

நிலா சுதாரித்துக்கொண்டு கீழே இருந்த கட்டையை எடுத்து அவளை நோக்கி வந்தவனை, ஆதி சொன்ன இடத்தில், பலமாக மண்டையில் அடித்தாள். இரண்டு முறை! அவளைத் தாக்க வந்தவன் சுருண்டு கீழே விழுந்தான்.

ஆதியிடம் எதுவும் இல்லாமல் போக, வந்த மற்றொருவன் ஆதியை மண்டையில் அடித்தான்.

அதில் தடுமாறிய ஆதி, டென்டின் மேல் விழ, டென்ட் கட்டப்பட்டிருந்த நங்கூரத்தை எடுத்து வந்தவனின் கையில் குத்தினான். வலி தாங்காமல் அலறியவன், மறுகையால் ஆதியை அடிக்கவர… அந்த கையிலும் குத்தினான். பின் அதை அவன் பாதத்தில் குத்த வலி உயிர் போனது.

அவனை குத்தியபின் ஆதி, “கமான் ஃபாஸ்ட் நிலா!” என்று அவசரமாக டென்டின் மேல் பாகத்தை இழுத்தான். அது வரவில்லை.

“அந்த பக்கம் போய் ரிலீஸ் பண்ணு” என்று கத்த அவள் டென்டின் பின் சென்று, அதை விடுவித்தாள். முடிந்தவரை கைக்கு வந்த சில பாகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து ஓடினர்.

மூச்சு இறைக்கக் கொஞ்ச தூரம் ஓடியபின், அடர்ந்த செடிகள் நிறைந்த இடம் வந்ததும் இருவரும் நின்று சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டனர்.

அப்போது திரும்பி அவனைப் பார்த்த நிலா, பதறினாள்.

“ஆதி தலைல காயமா இருக்கு. பிளட் லீக் ஆகுது” பதட்டத்துடன் அதைத் தொட்டு பார்த்தாள்.

“ஆஹ்! அவன் அடிச்சான்ல, அதான்” என்றான் வலியில்.

அவனின் வலி, அதுவும் தன்னால் தான் என்பதை எண்ணும்போது கண்கள் கலங்கியது. 

“என்னால தான் இவ்வளவும். சாரி ஆதி”

இதுவரை இருந்த தைரியம், தெளிவு அவளிடம் மறைந்து, அவள் கண்களில் கண்ணீரைக் கண்டவுடன், அதை காண முடியாமல், “ஹே கமான்! பெரிய காயம் ஒன்னும் இல்ல. சும்மா வீங்கியிருக்கு. அவ்ளோதான்”

அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கண்களில் கண்ணீர் வெளியேறியது.

“நம்ம வேணும்னா திரும்ப போய்டலாமா ஆதி?”

தனக்கு அடிபட்டதால் தான் இதை சொல்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது. “ப்ச் நிலா!” அவளை தோளோடு அணைத்துக்கொண்டான், அவளைத் தேற்றும் விதமாக.

“தேங்க் யு ஆதி. நீ இல்லைனா நான் என்ன செய்திருப்பேன்னே தெரியல”

“அதெதுக்கு இப்போ? அதான் நான் இருக்கேனே!”

“என்கூட இருக்கறதுனால தான் உனக்கு இந்த கஷ்டம்” அவன் மேல் சாய்ந்து கொண்டாள் லேசான விம்மலுடன். 

“டோன்ட் ஃ பீல் பேட் நிலா. லெட்ஸ் ஃபேஸ் இட். அந்த ஊர்ல ஏதோ பெரிய ப்ராப்லம் இருக்கு. அதுனாலதான், நம்மள ஸ்டாப் பண்ண வந்துட்டே இருக்காங்க.

நான் என் ஃபிரண்ட் ப்ரித்விக்கு கால் பண்ணலாம்னு நினைச்சேன். பட், நேத்துல இருந்து சிக்னலே இல்ல. மே பி, அந்த ஊருக்கு போனா கிடைக்கும்னு நினைக்கறேன்”

“என்ன நடக்கப்போகுதுன்னே தெரில ஆதி. எப்படி, எந்த டிரெக்ஷன்ல யோசிக்கறதுன்னும் தெரில”

அவளை விடுவித்த ஆதி, “ஹ்ம்ம் கொஞ்சம் கொஞ்சமா யோசிப்போம். ஏதாவது ஐடியா கிடைக்காம போய்டுமா என்ன” என்றவன், “சரி மிச்சம் உள்ள டென்ட் பார்ட்ஸ்-அ உள்ளே வைப்போம். எதுக்காவது யூஸ் ஆகும்” என்று அதை மடித்து பேக்கில் வைத்தான்.

“முதல்ல காயத்துக்கு மருந்து போடணும் ஆதி” 

அவன் கிட்டை எடுத்து மருந்து போட்டுக்கொண்டிருக்கும்போது, “நான் அடிச்சவனுக்கு ஏதாச்சும் ஆகியிருக்குமா?” கவலையுடன் கேட்டாள்.

“ஒன்னும் ஆகியிருக்காது நிலா. நீ அவன அடிக்கலனா, அவன் உன்ன போட்டு தள்ளிட்டு போயிருப்பான். இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாத”

“அவங்களுக்கும் நல்லா அடிபட்டிருக்கும் ஆதி. அதோடயே தான் கீழ போகணும்ல”

“வாட்? ஏம்மா மதர் தெரசா! வேணும்னா நம்ம போய் அவங்கள பார்த்து, காயத்துக்கு மருத்துபோட்டுட்டு ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு வந்திடலாமா. ஆள பாரு” என்று சிரித்தவனைப் பார்த்து முறைத்தாள்.

சற்று நேரம் கழித்து, “அவங்க ரெண்டு பேர் மட்டுமா இல்ல, நிறைய பேர் இருப்பாங்களா ஆதி?” யோசனையுடன் கேட்டாள்.

“நிறைய பேர் தேடுறாங்கனு தான்  நினைக்கறேன். அதான் வந்துட்டே இருக்காங்க. கொஞ்சம் கவனமா தான் இருக்கணும் நிலா. இந்த புதர் மாதிரி இருக்கிற இடத்துல கொஞ்ச நேரம் பாதுகாப்பா இருக்கலாம்” என்றான் சுற்றி பார்த்துக்கொண்டு.

பின், “உனக்கு பசிக்கல? என்னால பசி தாங்க முடியல” என்ற ஆதி, “எடுத்த பழங்கள அங்கேயே போட்டுட்டேன்” என்று சொல்லும்போது அவன் அவளை நெருங்கியது நினைவிற்கு வந்தது. 

அந்த நினைவுகள் அவளுக்கும் வர… ஏதோ எடுப்பதுபோல் போல் தலை குனிந்து புன்னகைத்தாள். அதை அவன் பார்க்கத் தவறவில்லை.

“நெக்ஸ்ட் டைம் மிஸ் ஆகாது” என்றான் இரட்டை அர்த்தத்துடன்.

அவன் சொல்லும் பொருள் புரிந்து, புருவங்கள் உயர்த்தி “அதையும் தான் பார்ப்போமே!” என்றாள் இதழோரம் புன்னகையுடன்!

 

4

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved