என்னோடு நீ உன்னோடு நான் – 9

என்னோடு நீ உன்னோடு நான் – 9

சத்தம் அருகில் கேட்டவுடன், நிலாவை அமைதியாக இருக்கச்சொல்லி சைகை காட்டிய ஆதி, அந்த சத்தத்தை கூர்மையாக கவனித்தபடி… அவன் பேக்கில் இருந்து சின்ன டார்ச் எடுத்து அடித்துப் பார்த்தான்.

மரத்திற்கு அந்தப்பக்கம் நடந்து கொண்டிருந்தது ஒரு காட்டு பூனை. அதை பார்த்தவன் சற்று நிம்மதி மூச்சு விட, திடீரென நிலா “ஆஹ்” என்று பயத்தில் கதியவண்ணம் அவன் கையை பற்றிக்கொண்டு அதில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

“நிலா, என்ன ஆச்சு?” அவன் கேட்க… “ஏதோ அந்த மரத்துல இருந்து இங்க விழுந்துச்சு” என்றாள் முகத்தை திருப்பாமல், கையை மட்டும் எதிர்புறம் காட்டி.

அங்கு டார்ச் ஒளியில் நோட்டம் விட்ட போது… ஒரு பெரிய எலி கீழே ஓடிக்கொண்டிருந்தது.

அதை பார்த்துவிட்டு நிலா பக்கம் திரும்ப, அவளோ அவன் கையிலேயே ஒடுங்கியபடி முகத்தை திருப்பாமல் நின்றிருந்தாள்.

புன்முறுவலுடன் அவளை விடுவிக்க மனமில்லாமல் “எலி மேலேயிருந்து இறங்கிருக்கு. அந்த பூனை இந்த எலிக்காக தான் வந்துருக்கு. பயப்படாத” என்றான் மெதுவாக.

“எலியா” சற்று நிம்மதியாக உணர்த்தவள், அவனுடன் இருக்கும் நெருக்கத்தை உணர்ந்து சட்டென விலகினாள்.

பின், “இன்னும் இங்க என்னல்லாம் இருக்க போகுதோ…” முகத்தில் சின்ன பயத்துடன் சுற்றிப்பார்த்தாள்.

அவன் சிரித்துவிட்டு “மலை மேல இதெல்லாம் தான் இருக்கும். நாம தான் இங்க வந்து, அதையெல்லாம் தொல்லை பண்ணிட்டு இருக்கோம். பாரு, நீ கத்துனதுல உன்னப்பாத்து அந்த எலி, பூனையெல்லாம் பயந்து ஓடிப்போச்சு. ஆனா நீ அத பார்த்து பயப்படற” என்று சொல்லிவிட்டு நக்கலாக சிரித்தான்.

அவனை பார்த்து முறைத்தாள்… பின், “கால் ரொம்ப வலிக்குது. நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்துக்கறேன்” என்று அங்கே இருந்த ஒரு பாறை மேல் உட்கார்ந்தாள்.

“ஹ்ம்ம்… எப்படியும் இருட்ட ஆரம்பிச்சிடுச்சு. பெட்டர் இங்கயே டென்ட் போட்டுடலாம். இன்னும் போகப்போக மேல எப்படி இருக்கும்னு தெரில. என்ன ஒகே தான?” கேட்டான் அவளிடம்.

“எனக்கு இதை பற்றி ஒன்னும் தெரியாது. ஐம் லீவிங் இட் டு யு ஆதி”

“சரி. சரி. ஏதாச்சும் மொதல்ல சாப்பிடுவோம்” என்று அவன் ரக்ஸாக்’யை (பையை) அன்பேக் (unpack) செய்தான்.

“மை காட் இதுக்குள்ள இவ்ளோ இருக்கா?!” ஆச்சர்யத்துடன் விழித்தவளிடம், “ஹ்ம்ம்… ஓட்ஸ். ஓகேவா? இல்லாட்டி பிரட்… எது வேணும்?” என்று கேட்டுக்கொண்டே ஒரு சின்ன அடுப்பை எடுத்தான்.

“எதுவாயிருந்தாலும் ஒகே ஆதி” என்று சொல்லும்போது மனதில்…

‘ஒருவேளை இவன் இல்லைனா நான் இங்க தனியா என்ன பண்ணியிருப்பேன்? இவ்ளோ பெரிய காடு… ஏதேதோ வருது. இப்போ தான் பாதி தாண்டிருக்கோம். மலைக்கு அந்தப்பக்கம் போக இன்னும் டைம் ஆகும். நான் தனியா போயிருக்க முடியுமா?’ அவனின் தன்னலமற்ற உதவியை நினைத்து அவனையே பார்த்தபடி யோசித்தாள்.

 “ஹே ஆர் யு ஒகே?” ஆதி அவளை உலுக்க, நிகழ்வுக்கு வந்த நிலா, “சாரி ஏதோ நினைச்சுட்டு இருந்துட்டேன்” என்றாள் அவனை விட்டு பார்வையை விலக்காமல்.

“என்ன?! நான் நல்லவனா கெட்டவனா… நம்மள ஏதாவது பண்ணிடுவானோனு பயமா?!” என்று கேட்டுவிட்டு அவள் பதில் செல்லும்முன்… “இரு இரு… நான் தான் பயப்படணும் உன்னப்பார்த்து… நீ மொறக்கறத பார்த்து. இந்த இருட்டுல பேய் மாதிரி ஏன் இப்படி முழிக்கற” சிரிப்பை அடக்கியபடி பேசினான்.

அவள் இன்னமும் முறைக்க, “சரி சரி… எல்லாம் அப்புறம் யோசிக்கலாம். மொதல்ல இதை சாப்பிடு” என்றவன், அவளிடம் பிரட் டோஸ்ட்டில் பீனட் பட்டர் போட்டு கொடுத்தான்.

அவள் ஒரு வாய் சாப்பிட்டு “தேங்க்ஸ்… டேஸ்ட்டி” எனவும்,

 “நான் செய்ததில்ல… அதான்” காலரை தூக்கினான்.

“இது யார் பண்ணினாலும் நல்லா இருக்கும். மோரோவர், எனக்கு ரொம்ப பசி. அதுனால ருசி தெரியாது” என்றாள் சாப்பாட்டில் கவனமாக.

அதை புரிந்துகொண்டு புன்னகையுடனே அவன்,  “சரி உன் பேமிலி பத்தி சொல்லு… ரொம்ப போர் அடிக்குது” பேச்சை வளர்த்தான்.

“அம்மா அப்பா… ரெண்டு பேரும் வேல பார்க்கறவங்க. சிஸ்டர் ஐடி’ல ஒர்க் பண்றா. அவ்ளோதான் வேற என்ன” என்றாள் தோள்களை குலுக்கியபடி.

“ப்ச்… உன் அம்மாக்கு போன் பண்ணினப்ப ஊட்டில இருக்கேன்னு சொன்ன. அப்போ பொய் சொல்லிட்டு வந்துருக்க இல்ல…”

“ஓ…! அதுவா. யார் வீட்ல தனியா அனுப்புவாங்க சொல்லு? ஏற்கனவே நான் சனிக்கிழமை வீட்லயே இருக்க மாட்டேங்கறேன்னு புகார். அந்த வேல இந்த வேலைன்னு சுத்தறேன்னு சொல்வாங்க. இதுல இதெல்லாம்னா முடிஞ்சேன். ஒரு வகைல நான் இப்போ அவங்க கிட்டயிருந்து தப்பிச்சு வந்துருக்கேன். இல்லாட்டி திரும்ப மாப்பிள அது இதுனு பேச்சு…” என்று சொல்லிக்கொண்டிருந்த அவள் சட்டென நிறுத்தினாள்… ‘நான் ஏன் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன்?’ என நினைத்து.

“என்ன சொன்ன?” அவளை கூர்ந்து பார்த்தான் பதிலுக்காக.

“என்ன… ஒன்னும் இல்லையே…” மழுப்பலுடன் பதில் தந்தாள்.

“இல்ல மாப்பிள அப்படினு ஏதோ” அவன் விடுவதாக இல்லை. மறுபடியும் கேட்டான்.

தனக்கு நேர்ந்த நிராகரிப்புகளை சொல்ல மனமில்லாமல், “அதெல்லாம் இப்போ வேணாமே. ப்ளீஸ்” என்றாள். கண்களில் கெஞ்சல்.

“ஐம் சாரி. கொஞ்சம் அட்வான்டேஜ் எடுத்துட்டேன். தெரியாம கேட்டுட்டேன்.” சட்டென அவன் அங்கிருந்து எழுந்தான். பின் bag இருக்கும் இடத்துக்கு சென்றுவிட்டான் ஏதோ எடுக்க செல்வது போல்.

‘ஐயோ ஹர்ட் பண்ணிட்டோமோ.?! ச்ச. நான் அவன்கிட்ட சொல்லக்கூடாதுனு நிறுத்தலை. எனக்கு கல்யாணம் தட்டிப்போகுதுனு எப்படி சொல்வேன்’ அவள் மனம் கனக்க…

‘மாப்பிள்ளைனு சொன்னாளே. அப்போ அவ வீட்ல கல்யாணம் பண்ணி வைக்கப்பார்க்கறாங்க. அத ஏன் இவ்ளோ கடுப்பா சொல்றா. அப்போ ஏதாவது லவ் அப்படினு இருக்குமோ? இருந்தா இந்நேரம் அவ லவ்வர்ருக்கு போன் பண்ணிருப்பாளே… ஸ்ஸ்ஸ்… இதெல்லாம் நான் ஏன் யோசிக்கிறேன்’ அவன் சிந்தனையை மாற்ற, திரும்பி அவளை பார்த்தான்.

அவள் சோகமாக, கைகளை கசக்கிக்கொண்டு… தலைக்குனிந்து உட்கார்ந்திருக்க, அது ஏதோ செய்தது அவனை. அவளருகே சென்று மண்டியிட்டு, அவள் கைகளை பற்றிக்கொண்டு…

“ஐம் சாரி. ஐ டின்ட் மீன் டு ஹர்ட் யு. ஏதோ கேட்கணும்னு தோணுச்சு… கேட்டேன். ப்ளீஸ் இப்படி இருக்காத நிலா”

“ஐம் ஸாரி ஆதி. டோன்ட் மிஸ்டேக் மீ. நான் அப்படி பேசியிருக்க கூடாது…” சற்று நிறுத்தி, “பட், என்னோட கடந்தகாலம் ரொம்ப கசப்பானது. இப்போ எதுவும் கேட்காத என்னை… ப்ளீஸ்” என்றாள் கெஞ்சியவாரே.

“ஹே கமான். உனக்கு கஷ்டம் தந்த கடந்தகாலத்தைப்பத்தி எனக்கு தெரிஞ்சுக்கவே வேண்டாம். நான் என்ன சொல்ல வரேன்னு புரியும்னு நினைக்கறேன். சீர் அப்” அவள் கைககளை மெல்ல தட்டிக்கொடுத்துவிட்டு எழுந்தான்.

அந்த நொடி அவளுக்கு ஒன்றும் புரியாமல் அவனை பார்க்க, பின் அவன் கூறிய வார்த்தைகள் அவளுக்குள் ஒலித்துக்கொண்டேயிருந்தது. இப்போது அதற்கு நிறைய அர்த்தங்கள் தோன்றியது அவளுக்கு.

அவனையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.

அவன் டென்ட் எடுத்து பொருத்த ஆரம்பித்தான்.

‘ஐயோ இப்போ ரெண்டு பேரும் ஒரே டென்ட்’லயா?! கண்டிப்பா என்னை உள்ள தான் இருக்க சொல்வான். நான் போய் எப்படி’

என்ன செய்வதென்று அவள் விழி பிதுங்கி யோசித்து கொண்டிருக்கும்போதே… “ஹெல்லோவ்வ்… என்ன ஆச்சு. கனவா? உள்ள போய் கனவு காணலாம். வா” என்றான் சிரிப்புடன்.

அவள் ‘ங்ஞே’ என பார்த்தபடி… என்ன சொல்வதென்று தெரியாமல் “இல்ல… நா…ன் வெளியவே இருக்கேன் நீ போய்… ரெஸ்ட் எடுத்துக்கோ” என்றாள் தயங்கியவாறே.

“ஏன் திரும்ப அந்த எலி வந்து… நீ கத்தி… நீ கத்தறத பார்த்து அது பயந்து… பாவமில்லயா அது. வாயில்லாத ஜீவன்” என்றான் மறுபடியும் அவனுடைய ட்ரேட்மார்க் சிரிப்புடன்.

‘ஐயோ விடமாட்டான் போலவே. இதுல சிரிப்பு வேற…’ என்று அந்த யோசனையுடனே ரசித்தபடி இருந்தவளிடம்… “டோன்ட் வொரி. நீ உள்ள எதெல்லாம் செய்யலாம்… செய்யக்கூடாதுனு சொல்லிட்டு நான் வெளிய வந்துடுவேன்” அவள் தயக்கம் புரிந்து, அழைத்துச்சென்றான் உள்ளே.

சில அறிவுரைகளை அவளுக்கு சொல்லிவிட்டு “கொஞ்சம் சரிவா இருக்க மாதிரி இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. ஏற்கனவே களைப்பா இருப்ப. நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. ஏதாவதுன்னா கூப்பிடு. இந்த ஃபோல்ட்டிங் லேம்ப் (folding lamp) இங்க இருக்கட்டும்.  நான் வெளிய தான் இருக்கேன். குட் நைட்” என்று சொல்லிவிட்டு அவளை பேசவிடாமல் வெளியே சென்றான்.

அவளுக்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

‘என்னால தான் இவனுக்கு இவ்ளோ கஷ்டம்?’ என்று வருந்தியவள், அன்றைய தினம் முழுதும் அயர்வுடன் இருந்ததால், எப்போது உறங்கினோம் என்றே தெரியாமல் கண்ணசந்தாள்.

சிறிது நேரத்துக்கு பின், ‘உள்ளே அவளுக்கு எல்லாம் சரியாக உள்ளதா?’ என்று உள்ளே எட்டிப்பார்க்க, அவள் உறங்குவதைப் பார்த்து ரசித்தான். மனம் உல்லாசமாக இருந்தது.

‘நான் யோசிச்சுக்கூட பார்க்கல… இந்த பயணம் இந்த மாதிரி போகும்னு’ என நினைத்தபடி, அவனுக்காக விரிக்கப்பட்டிருந்த ப்ளாங்கெட்டில் வானத்தை பார்த்தவாறே படுத்துக்கொண்டான்.

‘இதுவர என்கிட்டே இல்லாத மாற்றம்! எவ்ளோ பெண்கள பார்த்துருக்கேன். ஆனா இவகிட்ட ஏதோ ஒன்னு என்னை ஈர்க்கிறது. ஐ திங்க், ஐம் ஃபால்லிங் ஃபோர் ஹர். அவளுக்கும் அப்படி ஒரு ஃபீல் இருக்குமோ?! எப்படி தெரிஞ்சுக்கறது…’ என்று பல சிந்தனைகளுடன் உறங்கினான்.

உள்ளே அவள், திடீரென ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழ, அவசர அவசரமாக “ஆதி” என்று அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

சத்தம் கேட்டு பதறிக்கொண்டு… “என்னாச்சு நிலா? ஆர் யு ஒகே?” எழுந்து அவள் அருகில் செல்ல, “என்னமோ சத்தம் கேட்டுச்சு ஆதி. உனக்கு ஒன்னும் இல்லையே?” கேட்டாள் படபடப்புடன்.

“எனக்கென்ன… ஐம் ஒகே. ஏதாவது பறவை சத்தம் போட்டிருக்கும். இதெல்லாம் ரொம்ப காமன் இங்க. நீ போய் படு. உள்ள என்னை தாண்டி ஒன்னும் வராது” என்றான்.

அவள் இன்னமும் பதட்டத்துடன் இருப்பதை பார்த்து, அவளை அசுவாசப்படுத்த “அப்படியே ஏதாவது உள்ள வந்தாலும் உன்ன பார்த்தே பயந்து ஓடிடும்” என்றான் நமட்டு சிரிப்புடன்.

இப்போது முறைத்த நிலா “ஜோக் அடிக்கற நேரம் இல்ல ஆதி. என்னால உனக்கு எந்த கஷ்டமும் வேண்டாம். வெளிய இருக்கறது பாதுகாப்பில்ல. ப்ளீஸ் நீ உள்ள வா” என்றாள் பயம் தணியாமல்.

டென்ட் அளவில் கொஞ்சம் பெரியது தான், இருந்தும் இருவரும் எப்படி என்று நினைத்த ஆதி… “ஹே பரவால்ல நிலா.  இது கொஞ்சம் சின்ன டென்ட். நீ போய்…” என்று அவன் பேசிமுடிக்கும் முன் “இங்க என்னென்னலாம் வரும்னு தெரில. ப்ளீஸ் உள்ள வா” அவனை இழுத்துக்கொண்டு குனிந்தவாறு உள்ளே சென்றாள்.

பின், அவசரமாக பயந்தபடி வெளியே வந்து, அவன் விரித்திருந்த ப்ளாங்கெட் மற்றும் லேம்பை எடுத்துக்கொண்டு, மறுபடியும் டென்ட்டுக்குள் நுழையும் முன் அங்கிருந்த நங்கூரம் தடுக்கி கிழே விழுந்தாள்.

தடுமாறி எழுந்து உள்ளே வர, இவள் விழுந்த சத்தம் கேட்டு அவன் உள்ளேயிருந்து வெளியே வர முற்படும்போது, இருவரின் தலையும் மோதிக்கொண்டு டென்ட்டுக்குள் விழுந்தனர்.

“இதுக்கு தான் சொன்னேன். உள்ள நெரிசலா இருக்கும்னு. அடிபட்டுடுச்சா” என்று கேட்டுக்கொண்டே மேல் விழுந்த போர்வையை அகற்றினான்.

அவள் அவனிடமிருந்து சற்று தள்ளி அமர்ந்தாள்.

“நிலா நீ பயந்துருக்க. ஃபர்ஸ்ட் ரிலாக்ஸ். ரெண்டுபேரும் உள்ள இருந்தா சரி வராது. நான் கொஞ்சநேரம் இருந்துட்டு வெளிய போய்டறேன்” என்றான்.

“தட்ஸ் ஒகே. நான் மேனேஜ் பண்ணிக்கறேன். வெளிய போகாத. நீ தூங்கறப்ப ஏதாவது உன்ன” என்று பயந்து நிறுத்தியவள், “ஐயோ வேண்டாம். நினைக்கறப்பவே பயமா இருக்கு. சாரி உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டேன். நீ தூங்கு” என்று சொல்லிவிட்டு ஒரு பக்க மூலையில் ஒடுங்கி படுத்துக்கொண்டாள்.

அவன் தயங்குவதை பார்த்து… “உனக்கே கொஞ்சம் டூமச்’சா இல்ல… படு. உன்ன நான் ஒன்னும் பண்ணிடமாட்டேன்” போலியான கோபத்துடன் சொன்னவளை பார்த்து… “வர வர சேஃப்டியே இல்லாம போச்சு” என்று சிரித்துக்கொண்டே அவனும் படுத்துகொண்டான் மற்றொரு மூலையில்.

இருவரின் நடுவில் பெரிய அளவில் இடைவெளி இல்லாத போதிலும் அவர்களுக்குள் பெரிய இடைவெளியை உருவாக்கிக்கொண்டனர்.

சிலமணிநேரம் கழித்து அவள் தூக்கம் தடைபட்டு கண் விழித்து பார்த்தபோது, அவன் ஆழந்த உறக்கத்தில் இருந்தான். அதுவும் இருந்த இடத்தில் இருந்து துளியும் நகராமல்!

அவனுடைய கண்ணியம் அவளை ஈர்த்தது இப்போது.

‘நான் எதுக்காக போறேன்னு கூட சொல்லல இதுவரை. பட் நீ எனக்கு உதவி பண்ற. நீ என்கூட வரேன்னு சொன்னப்ப, எனக்கு ரொம்ப நிம்மதியா இருந்துச்சு. உன்கூட இருந்தா ஏதோ சந்தோஷமா இருக்கு. உன் கூடவே இருக்கணும்னு இருக்கு. இதெல்லாம் சரியா தப்பான்னு தெரியல. இந்த குறுகிய காலத்துல இதெல்லாம் எப்படின்னும் தெரியல.’ என்றவள் அவன் கையை பற்றி…

 “தேங்க்ஸ் ஃபோர் பீயிங் வித் மீ. ஐ ஓவ் யு மச் (I owe you much – உனக்கு நான் ரொம்ப கடமை பட்டுருக்கேன்)” என்றாள்!

********

மிகுந்த அயர்வுடன் இருந்ததால் காலை சிறிது நேரம் கழித்து எழுந்து வெளியே வந்தவள், அந்த இடத்தை பார்த்து அசந்து நின்றாள்.

பறவைகளின் இனிமையான சத்தம். இதமாக வீசும் சில்லென காற்று. அழகாக பூத்து குலுங்கிய மரங்கள் அதில் பூக்கள் மற்றும் பழங்கள்!

திரும்பிய தொலைவில் எங்கு பார்த்தாலும் பசுமை!

இரவு நேரத்தில் வந்ததால் அதன் அழகு மறைத்திருந்தது. அந்த இடத்தை ரசித்தவாறே, குளிருக்கு கைகளைத் தேய்த்துக்கொண்டு, அவள் கண்கள் அவனைத் தேடியது.

“மார்னிங் மேம்! இங்க இருக்கேன்” என்ற சத்தம் வந்த பக்கத்தில் அவள் திரும்பிப் பார்க்க, அங்கு அவன் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தான்.

“அங்க கீழ சில ஐட்டம்ஸ் இருக்கு. கோ… ஃபிரெஷ் ஆகிட்டு வா” என்றான் புஷ் அப்ஸ் செய்துகொண்டே. அவள் எடுத்துக்கொண்டு சற்று நேரம் கழித்து வந்தாள்.

“குட் மோர்னிங் ஆதி” புன்னகையுடன் சுற்றி பார்த்துக்கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள்.

முன்பே ஒப்பனை இல்லாமல் தான் இருந்தாள். இன்று இப்போது, தூக்கத்தில் லேசாக வீங்கிய கண்களுடன், கலைந்த கேசத்துடன் கூட பளிச்சென, நேர்த்தியாகத் தெரிந்தாள் அவனுக்கு!

‘உஃப்ப்! காலைலயே கொல்றாளே!’ என மனம் எண்ணினாலும், “ நல்லா தூங்கினியா?!” சாதாரணமாக அவன் கேட்க, அவனை பாராமல் அவள் ஆம் என்பது போல் தலையசைத்தாள்.

“இந்த இடம் ரொம்ப பசுமையா நல்லா இருக்குல்ல ஆதி?!” அவனோ அவளை ரசிக்க, அவள் சுற்றி இருந்த பசுமையை ரசித்துக்கொண்டிருந்தாள்.

“ஹ்ம்ம். கண்முன்ன எல்லாமே அழகா, அம்சமா இருக்கு!” என்றான் விஷமத்துடன் இரு பொருள் கொண்டு.

சட்டெனப் புருவங்கள் நெறிபட, புன்னகையுடன் திரும்பி அவனைப் பார்த்தாள். இரண்டு பொருளும் தெளிவாகப் புரிந்தது அவளுக்கு.

அவள் எதுவும் கேட்கும்முன், அவன் சுதாரித்துக்கொண்டு, “இங்க நாவல் மரம் நிறைய இருக்கு. கொஞ்சம் நேரம் கழிச்சு பழம் பறிச்சிட்டு வரேன்” என்றான்.

இப்போது தான் அவனை முழுவதுமாக கவனித்தாள்.

ஒரு ஸ்லீவ்லெஸ் டிஷரட் அணிந்து எக்ஸசைஸ் செய்தவனை, அவன் அசைவுகளுக்கு ஏற்ப  மேலும் கீழும் பார்த்துக்கொண்டே, “தினமும் எக்ஸசைஸ் பண்ணுவியா?” என கேட்டாள்.

அவள் கண்களில் தெரிந்த ரசனை பார்வையைக் கண்டுகொண்டவன், “நேரம் கிடைக்கும்போது பண்ணிடுவேன். ஜாகிங் ஆவது பண்ணலைனா எனக்கு நாளே ஓடாது” என்றான்.

சில நொடிகளுக்குப் பின், நேற்றிரவு அவன் உறங்கும்போது அவனுடன் பேசியது நினைவிற்கு வர, “நீ நைட் நல்லா தூங்கினயா?” என கேட்டாள்.

“நல்லா! கனவும் பலமா இருந்தது. நீ ஏதேதோ என்கிட்ட சொன்ன மாதிரி அப்புறம்…” திடீரென தெரிந்த அவளின் முகமாற்றதை பார்த்து அப்படியே நிறுத்தினான். 

“கனவா? அப்புறம் என்ன? உண்மையா நீ தூங்கினயா?” சின்ன பதட்டம் கலந்த சந்தேகத்துடன் இழுத்தாள்.

“ஏன்? என்ன ஆச்சு? தூங்கினா தானே கனவு வரும்…” என்றான் சிரிப்புடன்.

அவன் சிரிப்பின் பொருள் புரியாமல், ‘இவன் உண்மைய சொல்றானா இல்ல தூங்காம நான் பேசினதை கேட்டுட்டு இருந்தானா?!’ என்று நினைத்துக்கொண்டிருந்தவளை அவன் கூப்பிட, அவனைப் பார்த்தாள்.

“என்ன என்ன யோசனை?”

“இல்ல நான் நைட் ஏதாவது சொன்ன…” அவள் முடிக்கவில்லை, புஷ் அப்ஸ்’ஐ நிறுத்திவிட்டு, அவள் அருகில் வந்த ஆதி… “என்ன?! நீ ஏதாச்சும் சொன்னயா. என்ன சொன்ன…? சொல்லு சொல்லு…?” விடாமல் கேட்டான்.

இவன் விடப் போவதில்லை, தான் இன்னமும் உளறிவிடக்கூடாது என எண்ணி, இரவு அவன் உறக்கத்திலிருந்தபோது சொன்ன சிலதை மட்டும் சொல்ல ஆரம்பித்தாள்.

“நான் எதுக்காக இங்க வந்தேன்னு உன்கிட்ட இன்னமும் சொல்லவே இல்லயே ஆதி. நீ இவ்ளோ ஹெல்ப் பண்ற, சோ உனக்கு கண்டிப்பா தெரியணும்”

“நீ இவ்ளோ ரிஸ்க் எடுக்கறனா ஏதாவது இருக்கும்னு நினைச்சேன்… அதான் கேட்கல. பட், இப்போ நீயே சொல்றேன்னு சொல்லும்போது, சம்திங் ராங்! நேத்து நைட் ஏதோ நடந்திருக்கு. அதான் இந்த சேஞ்ஜோ?!” மறுபடியும் அவளை வம்பிழுத்தான்.

“ப்ளீஸ் ஷட் அப் அன்ட் லிசன் ஆதி”

அவளின் அந்த சின்ன சிணுங்கல் அவனுக்கு இன்னமும் சிரிப்பைத் தந்தது. “சரி சரி சொல்லுங்க மேடம்” என்றான்.

“எனக்கு கொஞ்ச நாள் முன்னாடி ஒரு க்ராஸ் டாக் வந்தது ஒன்னில்ல ரெண்டு தடவை. அதுல அவங்க பேசினது எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. பூங்கொடி கிராம விழால பேரழிவு. அவங்க ஆள் கிராமத்துக்குள்ள நுழைஞ்சுட்டான்னு யாரோ பேசினாங்க.

அதை கேட்டுட்டு தான், இங்க பூங்கொடி கோவிலுக்கு வந்தேன். ஏதாவது திருவிழா நடக்குதானு கேட்டேன். பட் அங்க பிரச்சனை ஆயிடுச்சு. பூசாரிகிட்ட  இதப்பத்தி கேட்டவுடனே அவர் முகம் மாறுச்சு. அப்புறம் என்ன நடந்ததுனு உன்னைக்கே தெரியும்”

அவள் பேச பேச ஆச்சரியத்துடன் பார்த்தான். கண்டிப்பாக, தானாக இருந்தால், ஒரு சின்ன கிராஸ் டாக்கிற்காக இவ்வளவு தூரம் மெனக்கெட மாட்டோம் என ஆதி எண்ணியபோது, நிலாவின் மேல் பிரமிப்பு அதிகமானது அவனுள்.

“ஒரு க்ராஸ் டாக்க வச்சிட்டு நீ இவ்ளோ தூரம் வந்துருக்க. இன்ட்ரெஸ்ட்டிங்” என்ற ஆதி,

“எதுக்கு பூசாரி ரியாக்ட் பண்ணணும்? அவங்க ஏன் உன்ன குத்த வரணும்? அப்போ ஏதோ நீ சொன்ன மாதிரி நடக்கப்போகுது. அது உனக்கு தெரிஞ்சதால உன்ன மலை அடிவாரத்துல, அட்டாக் பண்ணிருக்காங்க. ஹ்ம்ம் அங்க போறதுக்குள்ள என்னனு கொஞ்சம் கொஞ்சமா யோசிக்கலாம்.

இப்போ எனக்கு பசிக்குது. நான் அந்த பழம் பறிச்சிட்டு வரேன். நீ உள்ளேயே இரு. நான் சீக்கிரம் வந்துடறேன்” என்றான்.

“என்ன தனியாவா? நானும் வரேனே” முகத்தில் சின்ன பயம் தெரிந்தது.

“நிலா… உங்கிட்ட சொல்லணும்னு இருந்தேன்” அவளை டென்ட் பக்கத்தில் அழைத்துச்சென்றான். அங்கு, அவன் இரவே வைத்திருந்த கட்டையைக் காட்டினான்.

“யாராச்சும் உன்ன அட்டாக் பண்ண வந்தா, இந்த இடத்துல எவ்ளோ பலமா அடிக்க முடியுமோ அடி” தலையில் ஒரு பாகத்தைக் காட்டி கூறிய ஆதி, “அங்க அடிச்சா, உயிர் போகாது… பெரிய காயம் ஆகாது… ஆனா மண்டை கலங்கிடும். சோ பயப்படாத.

அப்புறம், உன்ன அட்டாக் பண்றவன் கிட்ட வரப்ப, நீ கொஞ்சம் பயப்படற மாதிரி இருந்தன்னா, நீ அவனை பார்த்து பயந்துட்டனு நினைச்சு, கொஞ்சம் லேசா அசால்ட்டா இருப்பான்.

அந்த தருணத்தை பயன்படுத்தி, உன்னோட உள்ளங்கையை வச்சு அவன் மூக்குல பலமா அடிச்சன்னா… கொஞ்சம் தடுமாறுவான். அப்போ நீ, அவனை எங்க அடிச்சா, அவனால கொஞ்ச நேரம் எங்கயும் நகர முடியாதோ, அங்க தாக்கணும்” என்று நிறுத்தி “புரிதில்ல?” என கேட்டான்.

ஆம் என்பது போல் தலையசைத்த நிலா, அவன் அருகில் வந்து… “உண்மைய சொல்லு… நீ டாக்டரா?” இதழோரம் புன்னகையுடன் கண்கள் விரிய கேட்டவுடன், அவள் கேட்ட தோரணையில் அவள் தன்னை கிண்டல் செய்கிறாள் என்று சில நொடிகள் கழித்து புரிந்துகொண்ட ஆதி…

“உன்ன!” என்று மண்டையில் கொட்ட வரும்போது, அவனிடம் இருந்து லாவகமாகத் தப்பித்து அங்கிருந்து ஓடிவிட்டாள்.

அவனும் அவளைப் பார்த்து புன்முறுவலிட்டு அங்கிருந்து சென்றான்.

‘கண்டிப்பா இவனோட ஹெல்ப்புல அந்த கிராமத்துக்கு இருக்கிற ஆபத்தை தெரிஞ்சிட்டு, அவங்கள எப்படியாவது காப்பாத்திடலாம்’ புதிதாக முளைத்த நம்பிக்கையுடன் டென்ட்டுக்குள் சென்ற நிலா, அங்கு அவன் அனைத்தையும் பேக் செய்திருந்ததைப் பார்த்தாள்.

அவனுடைய ஜாக்கெட்டை மட்டும் வெளியே வைத்திருந்ததைப் பார்த்தவளுக்கு, முந்தைய தினம் மழைக்காக அவன் அவளுக்கு அதைத் தந்தது, பின்… அவ்விடத்தில் ஒதுங்கியபோது ஏற்பட்ட நெருக்கம், பின் இரவு நடந்தது என ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தது.

அந்த ஜாக்கெட்டை அவனாகவே பாவித்து, ‘ஃபிராட்… நேத்து நீ தூங்கினயா? இல்ல… நான் சொன்னதெல்லாம் கேட்டுட்டு இருந்தயா? உன்ன என்ன செய்யலாம்?!’ தனக்குள் பேசி சிரித்துக்கொண்டு அதை விளையாட்டாகக் குத்தினாள்.

பழங்களைப் பறிக்கச் சென்ற ஆதி திரும்பி வந்தப்போது, அவள் செய்ததைப் பார்த்து. ‘அவளுக்கும் தன்னை ஏதோ ஒரு வகையில் பிடித்திருக்கிறது’ என்று மனதில் தோன்றிய கணம், முகம் மலர்ந்தது.

அவள் காதில் பட்டும் படாதவாறு, லேசாக செருமிய ஆதி, “நானே இங்க இருக்கும்போது, என் ஜாக்கெட் கூட என்ன பேச்சு?”

அவன் பேசும் சத்தம் மற்றும் அவன் சொன்ன வார்த்தைகளில் சுதாரித்துக்கொண்ட நிலா, தான் மாட்டிக்கொண்டோமோ என எண்ணி,  “ஏய்… என்ன சொன்ன…?” என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தாள்.

அவள் முன்பு சொன்னதுபோலவே, “ஒன்னும் சொல்லலையே” என்று தோள்களைக்குலுக்கி,  சிரிப்புடன் திரும்பி அவன் நடக்க… “இல்ல… நீ என்னமோ சொன்ன…” திரும்பி நடப்பவனை பின்னாலிருந்து இழுத்தாள்.

அதில் திரும்பியவனின் அருகில் அவள். முகத்தில் போலியான கோபம், அவனையே ஊடுருவிப் பார்க்கும் கண்கள், அது சொன்ன மௌன மொழிகள், அதை கண்டு… அவனை மறந்து பழங்களைத் தவறவிட்டான்.

அவளின் நெருக்கத்தில் அவன் மனமும் தடுமாற, இன்னமும் அவள் அருகில் நெருங்கினான்.

“இப்போ எதுக்கு கிட்ட வர ஆதி?” அவனிடம் இருந்து விலக எண்ணி, பின்னே கால்கள் வைக்க முயலும்போது, டென்ட் மேல் மோதி செல்லமுடியாமல் தடுமாறி நின்றாள்.

அவள் விழாமல் இருக்க, அவளின் இடையை ஒருகையால் பற்றிக்கொண்டான். அவள் விலக முயன்றாலும், அவள் கண்கள் வேறு செய்தி சொன்னது.

அவளின் ஒவ்வொரு செயலையும் ரசித்த ஆதி, அவளின் நெற்றியில் புரண்ட முடிக்கற்றை காதுக்குப்பின் தள்ளி, அவளுடைய கன்னத்தை விரல்களால் வருடியபடி, அவள் முகத்தை நெருங்கினான்.

அவனுடைய தீண்டலில் லேசாக சிலிர்த்தவளின் கண்களும் லேசாக மூட, அவன் சட்டென வலதுபுறம் திரும்பிப் பார்த்தான் ஏதோ மெல்லிய பேச்சு சத்தத்தைக் கேட்டு!

1
1
Subscribe
Notify of
6 Comments
Inline Feedbacks
View all comments
Rachell Revathi Samuel
2 years ago

Awesome ❤️❤️❤️

Indhu Sivaraman
2 years ago

Amazing naration.. Kannu munadi padam odudhu.. great work❤️❤️

Padmini Vijayan
2 years ago

Awesome narration dear 🥰

error: Content is protected !! ©All Rights Reserved
6
0
Would love your thoughts, please comment.x
()
x