மகளிர் தினம்!
எப்பொழுதும் போல் விடிந்தது அன்றைய காலை பொழுதும்!
கணவனை எழுப்பி… பின் காலை உணவு சமைத்து, மதிய உணவையும் சமைத்து அனைத்தையும் பேக் செய்தபின்… காபி கலந்து எடுத்துக்கொண்டு, அடுப்பங்கரையிலிருந்து வெளியே வரும் நேரம், ‘அப்பா ஏழரை மணி ஆகிடுது’ என்று அவள் எண்ணும்போதெல்லாம் அவள் கண்ணில் தென்படுவது… அவள் கணவன் அவர்களின் நான்கு வயது பெண் குழந்தையைப் பள்ளிக்குத் தயார் செய்துகொண்டிருப்பது தான்.
நிலாவின் காலை வேலை, சமையல் தயார் செய்வது. ஆதியின் வேலை, அவர்களின் மகளைத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பி வைப்பது.
என்றும் இல்லாத அளவிற்கு காலையிலிருந்து நிலாவின் அலைப்பேசி நோட்டிஃபிகேஷன் வந்தவண்ணம் இருந்தது. இருந்த வேலையில் எதையும் படிக்க நேரமில்லை.
இருவரும் சரியாக எட்டு பதினைந்துக்குக் கிளம்புவார்கள். அவளை அவளின் அலுவலகத்தில் இறக்கிவிட்டுவிட்டு அவன் அலுவலகத்திற்குச் செல்வது வழக்கம்.
இன்றும் அதே போல இருவரும் புறப்பட, செல்லும் வழியில் மொபைலை பார்த்தவள், வந்திருந்த நிறைய குறுஞ்செய்திகளைப் பார்த்து சலித்துக்கொண்டாள். அலுவலகம் வந்தவுடன், ஆதியிடம் விடை பெற்றுக்கொண்டு உள்ளே செல்ல, அங்கு ஒரே கோலாகலம் போல காட்சியளித்தது.
ஆம் மகளிர் தினத்துக்காக!
பெண்கள் புடவையில் வந்திருந்தனர். பதுமையைப் போல் காட்சியளித்தனர். காரிடாரில் எப்பொழுதும் போல சில ஆண்கள் பெண்களின் பின்னால் சற்று தள்ளி நின்று… அவர்களைக் கிண்டலும், காதுகூசும் வர்ணனையும் செய்துகொண்டிருந்தனர், அவர்களின் மொழியில்.
அதையெல்லாம் கவனித்தபடி வந்துகொண்டிருந்த நிலாவை பார்த்து, “குட் மோர்னிங் நிலா! Happy Women’s day” என்றனர். “தேங்க் யூ… பட் எங்களுக்கு Happy Women’s day எப்போன்னா… நீங்க எங்கள கேவலமா கிண்டல் பண்றத எப்போ நிறுத்துறீங்களோ அன்னைக்கு தான்” ஒட்டவைத்த புன்னகையுடன், சொல்லிவிட்டு சென்றாள்.
காரிடாரில் இருந்து ஆஃபீசுக்குள் செல்லும்போது ஒரு நடுத்தர வயது ஆண் அவளிடம், ” Happy Women’s day நிலா” என்றான். “தேங்க் யூ! உங்க மனைவிக்கு சொன்னீங்களா? தயவு செய்து சொல்லிடாதீங்க. வீட்ல வேலைக்காரி மாதிரி நடத்தீட்டு சும்மா சொல்லணுமேன்னு சொல்லிடப்போறீங்க” கிண்டலுடன் சிரித்தபடி நடக்க ஆரம்பித்தாள்.
அவள் கேபினுக்குள் சென்றவுடன், ஒருவன் ஸ்வீட் பாக்ஸ் எடுத்துக்கொண்டு கதவைத் தட்டி உள்ளே வந்தான். “எனக்கு நான் நினச்ச மாதிரியே பையன் பிறந்திருக்கான்… எங்க இதுவும் பொண்ணா போய்டுமோனு பயந்துட்டேன். ஸ்வீட் எடுத்துக்கோங்க” என்று நீட்ட, “தேங்க்ஸ்!” என்று அதை எடுத்துக்கொண்டவள் மனதில் மிகுந்த கோபம். அவன் வெளியே செல்லும் முன் திரும்பி “மறந்துட்டேன்… Happy Women’s day” என்றான்.
இருக்கையிலிருந்து எழுந்த நிலா, தன் கையில் எடுத்த ஸ்வீட்டை அவன் பாக்ஸில் போட்டுவிட்டு, “எப்போ பெண் குழந்தை பிறந்தாலும் சந்தோஷம்னு சொல்றீங்களோ, அன்னைக்கு எடுத்துக்கறேன் இந்த ஸ்வீட்டும்! உங்க விஷ்’ம்” சற்று நிறுத்தி, “யூ மே லீவ் நவ்!” என்றாள் கதவை காட்டி புன்னகைத்துக்கொண்டே.
இருக்கையில் உட்கார்ந்தவளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. ‘இதுவும் Women’s Day forward ஆஹ்! ‘ என்று எடுத்துப் பார்க்கும் போது, அது ஆதியிடம் இருந்து வந்திருந்தது.
முகத்தில் புன்னகையுடன் திறந்தாள். “இன்னைக்கு women’s day’னே தெரியல. எனிவேஸ்… என்ஜோய் யுவர் டே!” என்று அனுப்பியிருந்தான்.
“தேங்க் யூ!” என்று ரிப்ளை செய்தவள், அவளின் மாமியாருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“உங்கள் மகனை ஒரு கண்ணியமான ஆண்மகனாக வளர்த்ததற்கு உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது. Happy Women’s Day அத்தை” என்றது அந்த செய்தி!!!
Unmai akka 😒
🙁 🙁