மீண்டும் ஒரு காதல் – 12B

மீண்டும் ஒரு காதல் – 12B:

மினு ரிஷியைப் பார்த்ததும் “தேவ்… அம்மா முடியலன்னு பெட்’ல படுத்தாங்க. அப்புறம் எவ்ளோ எழுப்பியும் எழுந்திருக்கவே இல்ல… பயமா இருக்கு தேவ்” அழுதுகொண்டே சொன்னவுடன், அதிர்ந்தான் ரிஷி.

“அழக்கூடாது டா மினு. கண்ணத்தொட” என்றவன் பூட்டியிருந்த கேட் வழியே உள்ளே பார்த்தான்.

பின், “சாவி எங்க இருக்கும்னு தெரியுமா?” அவன் கேட்டவுடன், கண்களைத் துடைத்துக்கொண்டு, தெரியும் என தலையாட்டிய மினு, உடனே அதை எடுத்து வந்து ரிஷியிடம் தர, அவனும் அவசரமாகப் பூட்டை திறந்து உள்ளே சென்றான்.

பெட் ரூமிற்குள் செல்ல, ஒரு சின்ன தயக்கம். இருந்தும் வேறு வழியில்லை என எண்ணி சென்று பார்க்க, அங்கே அசைவின்றி படுத்திருந்தாள் நிவேதா.

முதலில் அவளை அழைத்து எழுப்ப, அவள் எழவில்லை. கன்னத்தைத் தட்டி எழுப்ப, ஹும்ஹூம்… எழவில்லை. மினுவிடம் தண்ணீர் கேட்டுத் தெளித்துப் பார்த்தான்… பலனில்லை.

“என்னாச்சு தேவ் அம்மாக்கு?” அழுதுகொண்டே மினு கேட்க, “ஒன்னுமில்லடா. இரு நான் ஹாஸ்பிடல்’க்கு போன் பண்றேன்” என்றவன் ஆம்புலன்ஸ் ஒன்றை அழைக்க, அந்த மழையில் அடுத்த இருபது நிமிடத்தில் ஹாஸ்பிடல் வந்தடைந்தனர்.

நிவேதாவிற்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ரிஷி மினுவுடன் வெளியில் காத்திருந்தான்.

‘இவளுக்கு உடம்பு முடியவில்லை என்று யாருக்கு சொல்லவேண்டும்? மினுவிடம்  கேட்டால் தெரியுமா?’ என்று யோசிக்கும்போது, ஸ்ரீ சொன்ன ‘மினுவிடம் தந்தை குறித்துக் கேட்க வேண்டாம்’ என்பது நினைவிற்கு வந்தது.

‘எதையாவது கேட்டு மினுவை கஷ்டப்படுத்த வேண்டாம்’ என்று நினைக்கும்போது…

“உங்க வைஃப்’க்கு லோ பிபி’யா (low bp) இருக்கு, அதுல டிஹைட்ரெட் (dehyderate) ஆகியிருக்காங்க. அதுதான் காய்ச்சல். இப்போதைக்கு இதுதான் ரீசன்’னா இருக்க முடியும்னு நினைக்கறேன்” நிவேதாவிற்கு முதலுதவி செய்த பெண் மருத்துவர் வெளியே வந்தபடி சொல்ல, அவர் பேச ஆரம்பித்தபோதே ரிஷி திடுக்கிட்டான்.

‘ஒரு பெண்ணை, அதுவும் குழந்தையுடன் அழைத்து வந்தால், பொதுவாக யாராக இருந்தாலும் கணவன் என்றே நினைப்பார்கள்’ என்று புரிந்தது அவனுக்கு.

மருத்துவர் சொன்னதெல்லாம் அவன் உள்வாங்கிக்கொள்ளும் முன்… “வீட்ல ஒழுங்கா கவனிச்சுக்கறீங்களா இல்லையா? சாப்பிடறதே இல்ல போல” என்று அவர் சொல்லிக்கொண்டே போக, “அவங்க என்னோட ஃப்ரெண்ட் டாக்டர்” என்றான் ரிஷி அழுத்தமாக ‘அந்த பேச்சை வளரவிடாமல்’.

“ஓ!” என்ற மருத்துவர் அவனையும், அவன் கையை பற்றியிருந்த மினுவையும் பார்த்து, “ஸாரி… அவங்களுக்கு எதுனால இப்படி ஆச்சுன்னு நாளைக்கு அவங்ககிட்ட பேசிட்டு, டெஸ்ட் எடுத்தா தான் தெரியும். இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்திடுவாங்க. நான் காலைல வரேன்” சொல்லிவிட்டு நகர்ந்தவர், மறுபடியும் திரும்பி, “நைட் அவங்க ரிலேட்டிவ் யாரையாச்சும் வர சொல்லிடுங்க. மழைனால லிமிடெட் ஸ்டாஃப் வச்சு, ஹாஸ்பிடல் ஆப்ரேட் பண்றோம்” என்றார்.

ரிஷி தலையசைத்தான்.

‘உறவுக்காரர்களுக்கு எங்கே செல்வது?!’ அவன் யோசிக்க, “அம்மாவை போய் பார்க்கலாமா தேவ்” மினு கேட்டவுடன், ரிஷி அவளை உள்ளே அழைத்துச்சென்றான்.

மினு, ரிஷி பற்றியிருந்த கையை விட்டுவிட்டு, தன் அம்மாவின் முகத்தைப் பற்றி “அம்மா எந்திரி ம்மா. எனக்கு பயமா இருக்கு. எந்திரி மா. என்கிட்டே பேசுமா” என்று அழுக, மினுவின் அழு குரல், கண்ணீரில் தொய்ந்த முகம், ரிஷியின் மனதை முற்றிலுமாக அசைத்தது.

அவளை மெதுவாக நிவேதாவிடம் இருந்து விலக்கியவன், “அம்மா கொஞ்ச நேரத்துல எழுந்திடுவாங்க மினு” என்று சமாதானப்படுத்தினான். இருந்தும் அவள் அழுகை நிற்கவில்லை.

ரிஷி மினுவை தூக்கிக்கொண்டதும், “அம்மாவை சீக்கிரம் எந்திரிக்க சொல்லு தேவ்”, அழுதபடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். அவன் அவளைத் தட்டிக்கொடுத்தான். மினு அந்த அரவணைப்பில், அதுவும் அழுததால் சில நிமிடங்களில் கண்ணுறங்கிவிட்டாள்.

அவள் உறங்கியதும், அங்கிருந்த படுக்கையில் படுக்க வைத்த ரிஷி, அவள் சாப்பிடாமல் உறங்கிவிட்டாள் என்பதை உணர்ந்து உணவு மற்றும் பால் வாங்கச் சென்றான்.

சென்றவன் மனதில் நிவேதா மட்டுமே. ‘நிவேதாவிற்கு துணை என்று யாரேனும் இருக்கிறார்களா? மினு ஒருமுறை கூட யாரைப் பற்றியும் சொன்னதில்லையே. எப்படி யாருமில்லாமல் தனியாகக் குழந்தையைச் சமாளிக்கிறாள்? தாய் தந்தை கூட இல்லையா?’ இதுபோல பல கேள்விகளுடன் உணவு வாங்கச் சென்றான்.

அதே நேரம் நிவேதா கண்விழித்தாள். ‘எங்கு இருக்கிறோம்… மினு எங்கே…’ என்று சுற்றிப்பார்க்க, அங்கே படுக்கையில் மினு படுத்திருந்தாள்.

‘எப்படி இங்கு இருவரும் வந்தோம்? யார் அழைத்து வந்தார்கள்? தனக்கு என்ன ஆயிற்று? மினு எப்படி உறங்கினாள்? சாப்பிட்டாளா?” என்ற கேள்விகள் தலைக்குள் குடைந்தது.

எழுந்திருக்கக் கூட முடியாத அளவிற்கு சோர்வு. வலது கையில் venflon மூலம் ட்ரிப்ஸ் இறங்கிக் கொண்டிருந்தது.

யாரை கேட்பது, யாரேனும் வருவார்களா… என்று வாயிலையே பார்த்துக் கொண்டிருக்க, சரியாக அந்நேரம் உள் நுழைந்தான் ரிஷி.

அவனை அங்கு பார்த்ததும் அதிர்ந்தாள் நிவேதா. இப்போது அவளுடைய கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்தது.

அவனின் களைப்பான தோற்றம், கையில் தங்களுக்கு வாங்கிவந்த உணவு, மினுவிடம் எடுத்துக்கொள்ளவும் உரிமை என எண்ணுகையில், மனதின் ஆசை எதன் பின்னோ ஓடுவது போல ஒரு தவிப்பு. கூடவே படபடப்பு.

எதற்காக இதெல்லாம் தன் வாழ்வில் நடக்கிறது? இவன் எதற்காக இவ்வளவு செய்கிறான்?  என்று எண்ணும்போது மினுவை வைத்து முன்பு இருவரும் பேசியதெல்லாம் காதில் ஒலித்தது. பதட்டம் அதிகரிக்க, அவள் உதடும் கூட லேசாகப் படபடத்தது.

‘ஒருவேளை அவனுக்குத் தான் தான் நிவேதா என்று தெரிய வந்தால்?!’ ஏனென்றே தெரியாமல் மனதில் இந்த எண்ணம் துளிர்க்க, ஒரு நொடி ஒரே நொடி, ஆசையாக அவனை பார்த்தாலும், உடனே கட்டுப்படுத்திக்கொண்டாள். உணர்வுகளின் போராட்டம் அவளுள்.

அவனின் இந்த உதவியை ஏற்கவும் முடியவில்லை. நிராகரிக்கவும் மனமில்லை. அவனையே பார்த்தபடி அவள் கண்கள் நிலைத்திருந்தாலும், மனதினுள் அழுத்தம் அதிகமானது.

அவள் பார்வையின் பொருள் புரிந்து, “நான் ஈவினிங் வொர்க் அவுட் முடிச்சு வர்றப்ப, உனக்கு முடியலன்னு சொல்லி… மினு அழுதுட்டு இருந்தா. அப்புறம் இங்க அட்மிட் பண்ண சொன்னாங்க. அதான்” என்று சற்று நிறுத்தியவன்…

“உனக்கு தெரிஞ்சவங்க யாருக்காச்சும் இன்ஃபார்ம் பண்ணணுமா?” கேள்வியோடு நிறுத்தினான்.

இதுவரை இருந்த மனதின் அலைப்புறுதல் எல்லாம் முற்றிலுமாக வடிந்தது, அவனின் அந்த கேள்வியால்!

‘தனக்கு யாருமில்லை’ என்ற நிதர்சனம், ‘நானும் உட்பட’ என்று சொல்லாமல் சொல்லிய அவனின் கேள்வி… அவன் கேட்ட கேள்விக்கே பதிலாய் தெரிய, ஆசையாய் பார்த்த அவளின் கண்கள் இப்போது வெறுமையைப் பூசிக்கொண்டது.

நொடிப் பொழுதில் தன்னை மீட்டெடுத்து, “தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப் ரிஷி. நீங்க கிளம்புங்க. நான் இனி பார்த்துக்கறேன்” என்று அவள் சொல்லும்போதே செவிலியர் உள்ளே வந்தார்.

ட்ரிப்ஸ் அளவை பார்த்துவிட்டு ரிஷியிடம், “இன்னும் டூ த்ரீ அவர்ஸ் வரும். நான் ஒரு எமெர்ஜென்சி கேஸ்’க்கு ஹெல்ப் பண்ண போறேன். முடிஞ்சதும் வரேன். அதுவரை கவனமா பார்த்துக்கோங்க. சாப்பிட லைட்’டா ஏதாச்சும் குடுங்க” என்றுவிட்டு அந்த பெண்மணி சென்றுவிட்டார்.

ஏற்கனவே தான் கேட்ட கேள்விக்கு நிவேதா பதில் சொல்லாமல் நன்றி கூறியதில் கோபத்துடன் இருந்தவன், செவிலியர் சென்றவுடன், கைகளைக் கட்டிக்கொண்டு ‘என்ன செய்வது’ என்றபடி பார்வையால் கேட்டான்.

நிவேதா அவளின் இயலாமையை, தற்போதைய நிலைமையை நினைத்து நொந்து அவன் முகம் பார்க்கத் தயங்க, அவளின் அந்த தயக்கம் அவனுக்குப் புரிந்தது. அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேசாமல், மினுவை மெதுவாக எழுப்பினான்.

மினு கண் விழித்தவுடன் நிவேதா முழித்திருப்பதைப் பார்த்து ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள்.

“அம்மா” என்று அழைத்தபோதே அழுகையும் சேர்ந்துகொண்டது மினுவிற்கு.

“அம்மாக்கு ஒன்னுமில்ல மினு. அழக்கூடாது” என்று கண்களில் கண்ணீருடன் நிவேதா மினுவை வருடிக்கொடுக்க, அமைதியாகப் பார்த்தான் ரிஷி. அவன் கண்களுக்கு இருவரின் அன்பும் இதமாக இருந்தது.

சில நிமிடங்கள் அம்மாவிற்கு முத்தங்கள் பரிசளித்து, செல்லம் கொஞ்சிவிட்டு, கொஞ்சம் மீண்டிருந்த மினு… “நான் ரொம்ப பயந்தேன்… தேவ் தான் ம்மா இங்க கூட்டிட்டு வந்தான்” என்ற மினு…

சிறிதும் யோசிக்காமல், அங்கு அமர்ந்திருந்த ரிஷியிடம் சென்று, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு “தேங்க்ஸ் தேவ். லவ் யு சோ மச்” என்று சொன்னபடி கன்னத்தில் முத்தமிட்டாள்!

அந்த அன்பில் ஒரு நொடி ரிஷி அதிர்ந்தான். கண்கள் சட்டெனக் குளமானது.

இந்த அன்பு… இதற்காக ஏங்கிய தருணங்கள், பல ஏமாற்றங்கள், இழப்புகள் மட்டுமே அதிகம் பார்த்திருக்கிறான்.

வெளியிலிருந்து அவனைப் பார்ப்பவர்களுக்கு, அவன் உள்ளுக்குள் படும் துயரங்கள் பற்றித் தெரிய துளியும் வாய்ப்பில்லை. ஒருவனுக்கு நல்ல வேலை, கை நிறைய பணம், பெரிய பதவி, சமுதாயத்தில் நன்மதிப்பு மட்டும் இருந்தால் போதுமா என்ன?

அன்பைக் காட்டவோ, அக்கறை செலுத்தவோ, பாசமாக பழகவோ, மனதில் உள்ளதை பகிரவோ… யாருமில்லை எனும்போது பணம், பதவி, மதிப்பு இருந்து என்ன பயன் வாழ்க்கையில்?

ஏனோ இதுவரை இழந்தது, தவறவிட்டது, அனைத்தும் மினுவின் வடிவில் அவனுக்கு திரும்பக் கிடைத்தது போல உணர்ந்தான்.

அவளை ஆரத்தழுவிக்கொண்டு கண்களை மூட, சில சொட்டு கண்ணீர் வெளியேறியது. திடீரென கிடைத்தபாசத்தால் அவன் உள்ளம் திக்குமுக்காட, கைகளில் லேசான நடுக்கம்.

இந்த அன்பு காலத்திற்கும் கிடைத்தால்?! என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றிய அடுத்த நொடி கலங்கிய கண்களுடன் நிவேதாவை பார்த்தான்.

ரிஷிக்கு மினுவின் பேரன்பில் இன்ப அதிர்ச்சி என்றால், நிவேதாவிற்கு பேரதிர்ச்சி. கண்டிப்பாக அதில் இன்பம் இம்மியளவும் இல்லை.

இதுவரை யாரிடமும், அவ்வளவு ஏன்… மிக நெருக்கமாகப் பழகிய ஸ்ரீயிடம் கூட சற்று தள்ளி நிற்கும் மினு, ரிஷியிடம் காட்டும் இந்த நெருக்கம், கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தியது.

இது எங்கு சென்று முடியுமோ என்ற பயம். இந்தியாவிலிருந்து ரிஷி புறப்படக் காத்திருந்தவளுக்கு, இப்போது அடுத்த கலக்கம் மனதில்… ஒருவேளை அவன் சென்றுவிட்டால் மினுவின் நிலைமை? அந்தப் பிரிவை இந்த சின்ன மனது ஏற்றுகொள்ளுமா?

அடுத்து, ரிஷியின் மனைவி என்ற எண்ணம்… அவனை முதலில் இங்கு பார்த்தபோது நிவேதா மனதில் தோன்றினாலும், தனக்குத் தேவையில்லாத ஒன்று என நினைத்து, அதற்கு மேல் அதுகுறித்து யோசித்ததில்லை. ஆனால் இப்போது யோசிக்க ஆரம்பித்தாள்.

இவன் மனைவி எங்கே?! இவன் வாழ்க்கை என்ன ஆயிற்று?! ஒருவேளை அவள் வந்தால்… மினுவுடன் இப்படியே இவன் பழகுவானா?

மனதில் இந்த கேள்விகள் அனைத்தும் மினுவிற்காக மட்டும் தோன்றியது.

மினு என்கிற ஒரு புள்ளி… இவ்விரு கோட்டையும் இணைக்குமா இல்லை, காலத்தால் பிரிக்கப்பட்ட இவ்விரு கோடுகள் காலம் முழுக்க பிரிந்தே இருக்குமா?! பார்ப்போம்!!

21
5
4
3
3
5

4 thoughts on “மீண்டும் ஒரு காதல் – 12B

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved