மீண்டும் ஒரு காதல் – 13

மீண்டும் ஒரு காதல் – 13

ரிஷி நிவேதா இருவரும் அவரவர் எண்ணங்களின் பிடியில் இருக்க, மினு “ம்மா பசிக்குது” என்றவுடன்…

ரிஷி, “உட்காரு மினு” என்றவன் அவன் வாங்கி வந்த உணவை எடுத்து வைத்தான்.

“உன்னையும் லைட்’டா சாப்பிட சொன்னாங்க” என்றான் நிவேதாவை பார்த்து.

அவள் வேண்டாம் என்று மறுக்க, ரிஷிக்கு மறுபடியும் கோபம்… தான் சொல்வதை மறுத்துக்கொண்டே இருக்கிறாளே என்று.

“தேவ் அம்மா எப்படி சாப்பிடுவாங்க? கைல மருந்து இருக்கே” மினு நிவேதாவின் மறுப்பிற்கான காரணத்தைச் சொன்னாள்.

இது அவன் நினைக்கவில்லை. என்ன செய்வது என்று யோசிக்க… “இல்ல அம்மாக்கு பசிக்கல மினு” என்றாள் நிவேதா.

“நீ ஒழுங்கா சாப்பிடறதே இல்லன்னு டாக்டர் சொன்னாங்க” கொஞ்சம் கரிசனையோடு சொன்னவன், இட்லியை சிறிய துண்டுகளாக்கி தட்டில் ஸ்பூன்’னுடன், அவள் சாப்பிடுவதற்கு ஏதுவாக, bed tray table மேல் வைத்து, பின் அவளைச் சாப்பிடச்சொன்னான்.

இப்போது இடது கை கொண்டு நிதானமாக அவளே சாப்பிடலாம். இந்த ஆறுதல், உதவியெல்லாம் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, அதுவும் முக்கியமாக அவனிடமிருந்து.

அவன் தன் வாழ்வில் இல்லவே இல்லை என தன்னைத்தானே தேற்றிக்கொண்டு வாழத் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது அதையெல்லாம் முறியடிப்பது போல வந்து நிற்கிறானே!

காலத்தின் போக்கில், தன் வாழ்வில், விதி விளையாடிய விளையாட்டை நினைத்து கண்கள் கலங்கியது அவளுக்கு.

அவள் அமைதியாக உண்ணாமல் இருக்க, “உன்ன தான் சாப்பிடச் சொன்னேன்” அழுத்தமாக அவன் சொல்லவும், கொஞ்சம் அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் கண்ணீரின் திரை.

அதைக் கண்டவனுக்கு என்ன என்று சொல்லத்தெரியாத ஓர் உணர்வு மனதை அழுத்தியது. அவளின் அந்த கண்ணீர் அவன் உள்ளத்தை ஏதோ செய்தது. அதைப் பார்க்க முடியவில்லை.

அதற்குள் அன்னையின் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும், உணவைப் பாதியில் விட்டுவிட்டு நிவேதாவிடம் சென்ற மினு… “அழாதம்மா… கை ரொம்ப வலிக்குதா? நான் வேணும்னா ஊட்டிவிடவா?” கனிவுடன் கேட்க, கண்களில் கண்ணீர் இன்னும் பெருக்கெடுத்தது நிவேதாவிற்கு. மினுவை கட்டிக்கொண்டு நெற்றியில் இறுக்கமான முத்தத்தைப் பதித்தாள்.

இவர்களை மென்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி. அவர்களின் அன்பு பிணைப்பு அவனுக்கு அழகாகத் தெரிந்தது. தன் தனிமையை நினைத்து ஒருவித ஏக்கமும், தன் வாழ்வை நினைத்து ஏமாற்றமும் தொற்றிக்கொண்டது.

தன் மனம் ஒருநிலையில் இல்லாமல் இருப்பதை உணர்ந்தவன், அவர்களிடம் இருந்து கண்களைப் பிரித்து மொபைலில் கவனத்தை திருப்பினான்.

இருவரும் சாப்பிட்டவுடன், நிவேதா… “நீங்க சாப்பிட்டீங்களா?” ரிஷியிடம் கேட்க, “இனி தான்” என்றான் புன்னகையுடன்.

உடனே மினு மற்றொரு சாப்பாட்டை அவனிடம் நீட்டி உடனே சாப்பிடச் சொன்னாள். நிவேதாவின் முகத்தில் புன்னகை இப்போது.

“ரோமி என்ன பண்ணும் தேவ்? தனியா இருக்குமா? சாப்பாட்டுக்கு என்ன பண்ணும்? கூட்டிட்டு வந்திடலாமா?…….” அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவனிடம் பல கேள்விகள் கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தாள் மினு.

அவன் முடித்த பிறகு, “நீங்க கிளம்புங்க ரிஷி… எதுக்கு சிரமம்? இங்க அவ்ளோ வசதி இல்ல. ஐம் ஓகே நவ்” என்றாள் நிவேதா. அவன் உடன் இருப்பது சங்கடமாகவும், சஞ்சலமாகவும் இருந்தது.

அவளுக்கு அசௌகரியமாக உள்ளது என்பதை உணர்ந்தவன்,“உனக்கு கண்டிப்பா ஒரு அட்டெண்டர் வேணும்னு டாக்டர் சொன்னாங்க. நீ ரெஸ்ட் எடு நான் வெளியே இருக்கேன்” என்றதும்… மினு, “இல்ல தேவ் உள்ளேயே இருக்கலாம். அப்போதான் அம்மாவை பார்த்துக்க முடியும்” என்று முடித்தாள்.

இருவராலும் இதற்கு மேல் பேச முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை. மினு உறங்கியதும் வெளியே சென்றுவிடலாம் என்று நினைத்துக்கொண்டான்.

தினமும் அன்னையின் அரவணைப்பில் உறங்கும் மினுவிற்கு இன்று அது முடியாமல் போக, தூங்காமல் ரிஷியிடம் தொணதொணத்துக் கொண்டிருந்தாள். நிவேதா சொல்லியும் கேட்கவில்லை.

சிறிது நேரத்திற்குப் பின் கண்களை கசக்கிய மினு, பேசிக்கொண்டே அவன் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொள்ள, ரிஷிக்கு இது அனைத்தும் புதிதாக இருந்தது… ஏனோ அது பிடித்தும் இருந்தது.

நிவேதாவிற்கு மினுவின் ஒவ்வொரு செயலும் சஞ்சலத்தை மட்டுமே ஏற்படுத்தியது. மருந்தின் பிடியிலிருந்தவள், தன்னை அறியாமல் உறங்கிவிட்டாள்.

ரிஷி மினுவின் தலையை ஆதரவாக வருடிக் கொடுக்க, சில நிமிடங்களில் தூங்கிவிட்டாள். அதற்குப் பின் அவளை மடியிலிருந்து விலக்க மனமில்லை. வருடிக் கொடுத்தபடியே இருந்தான்.

மினுவின் தடையற்ற தூக்கத்துக்காக சுவரில் சாய்ந்தவன் கண்கள் இப்போது நிவேதாவை பார்த்தது.

சிறிது நேரத்திற்கு முன் நிவேதா கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் படபடத்த அவன் உள்ளதைப் பற்றிய எண்ணங்கள் இப்போது அவன் மனதில்.

‘இவள் கண்களில் கண்ணீரைப் பார்த்தால், ஏன் என் மனம் அடித்துக்கொள்கிறது? என் வேதாவை தவிர வேறு யாரிடமும் தோன்றாத இந்த உணர்வு, ஏன் இவளிடம் தோன்றுகிறது? வெறும் பெயர் பொருத்தம் என்பதாலா?’ என எண்ணியவன் மனது, முதல் முறை அவனின் வேதா… கண்கள் கலங்கி, மனம் வெதும்பிப் பேசியது… அதற்குப் பின் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தது.

***************************************************************

தன்னை பெண் பார்த்த ஒருவன் மிகவும் கீழ்த்தரமாகப் பேசியதை பற்றி மனம் நொந்து பேசிக்கொண்டிருந்தாள் நிவேதா.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவ்வுக்கு ‘நிவேதாவை பற்றி பேசிய அந்த ஒருவன்’ மேல் ஆத்திரம் பொங்கியது… இப்படியா ஒரு பெண்ணிடம் பேசுவான் என எண்ணி.

நிவேதா தன் மனத்தாங்கல்களை பகிர்ந்துகொள்ளும் போது, அவளிடம் திடீரென விசும்பல் கேட்டவுடன்… அதிர்ந்தான் தேவ். இதுவரை தைரியமாக, தெளிவாக, நிதானமாக, இது அனைத்தையும் விட… தன்னம்பிக்கையோடு பேசும் அவளைத் தான் அதிகம் பார்த்திருக்கிறான்.

அந்த குணங்கள் அவனுக்கு அவளிடம் பிடித்தவைகள். ஆனால் இப்போது மனமுடைந்து பேசியது அவனை ஏதோ செய்தது. அவளைத் தேற்றும் வேலையைக் கையில் எடுத்துக்கொண்டான். அதைச் செய்தும் முடித்தான்.

நிவேதா கொஞ்சம் தெளிவடைந்த பின், தேவ் அவளிடம் “அவன் பேசினதுக்கு அவனை சும்மாவா விட்ட?” என கேட்டிட,

“விடுவேனா? நல்லா வெளுத்து வாங்கிட்டேன். நான் பேசினது வேற அவனுக்கு ஈகோ இஷ்யூ ஆகிடுச்சு. ஒரு பொண்ணு இப்படியா பேசவனு கேட்டு வேற என்கிட்டே வாங்கி கட்டிட்டான். இந்நேரம் வீட்ல போட்டு கொடுத்திருப்பான்” லேசான புன்னகையுடன் சொன்னாள்.

அவளின் குரல் மாற்றமே, அவள் மனநிலை மாறிவிட்டது என அவனுக்கு உணர்த்தியது. அவன் மனமும் நிம்மதி அடைந்தது. சிறிது நேரம் பேசிய பின், இருவரும் அழைப்பைத் துண்டித்தனர்.

தேவ்வுக்கு நிவேதா சொன்ன… .’நான் அழகில்ல தான். பொதுவா பசங்க எதிர்பார்க்கிற நிறம் இல்லதான். ஆனா எனக்கும் மனசிருக்கும் இல்ல தேவ்? என்ன வேணா வாய்க்கு வந்ததை பேசலாமா?’ இந்த வாக்கியம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

‘வெளிப்புற அழகெல்லாம் எத்தனை நாட்கள் இவ்வுடலில்? இளமை உள்ளவரை மட்டுமே! அதற்குப்பின்? இதுபோல அழகை எதிர்பார்த்து திருமணம் செய்துகொண்டு, குழந்தை பிறந்த பின் மனைவியின் தோற்றத்தையும், உடலையும் முன்னிறுத்தி இடைவெளியை, ஒவ்வாமையை உருவாக்கிக்கொண்டு, மனைவியை மட்டம் தட்டுவர், ஏளனம் செய்வர் சிலர்’ என எண்ணி சலித்துக்கொண்டான்.

நிவேதா மனதில் எவ்வளவு வேதனை ஏற்பட்டிருந்தால் இப்படி பேசியிருப்பாள்… அதுவும் பெண் பார்க்க வந்தவன் சொன்ன வார்த்தைகளை நினைத்தபோது… ‘ஒரு பெண்ணை பார்த்து இப்படி பேசுபவன் எல்லாம் மனிதனே அல்ல’ என்றே தோன்றியது தேவ்வுக்கு.

அவளுக்காக அவன் மனதில் ஒதுக்கிய இடம் கொஞ்சம் அதிகமாகவே விரிவடைந்ததது. அதன் விளைவு… அன்றைய தினம் முழுவதும் நிவேதாவின் எண்ணங்களே அவனுக்கு.

அங்கு நிவேதாவோ, தேவ்வுடன் பேசிய பிறகு கொஞ்சம் தெளிந்திருந்தாள். அதுவும் அவன் சொன்ன… ‘ நீ ரொம்ப ஸ்ட்ராங்’னு  நினைத்தேனே…’ என்ற வாக்கியம் அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

இதுவரை ஆண்கள் அவளிடம் சொன்னதெல்லாம்…  “கொஞ்சம் நிறம் குறைவு… ஒல்லியாக இருக்கிறாய்… புடவை கட்டியும் ஆண்மகனைப் போன்ற தோற்றம்… அதிகம் பேசுகிறாய்… வேலைக்கு செல்ல வேண்டுமா… ஓட்டம் கற்றுக்கொண்டதற்குப் பதில் “பெண்கள்” செய்யக்கூடியவற்றைக் கற்றுக்கொண்டிருக்கலாம்… திருமணத்திற்குப் பின் ஓடக்கூடாது… இப்படி இருக்கவேண்டும்… அப்படி இருக்கக்கூடாது” இதுபோல பல பல வாக்கியங்கள்.

‘முதல் முறை ஒருவன் இதையெல்லாம் சொல்லாமல், தன் குணங்களை பற்றி பேசியுள்ளானே’ என அவள் மனம் மகிழ்ந்தாலும்… அவள் மூளை ‘அதிகம் மகிழ்ச்சியடைய வேண்டாம்… தேவ் உன்னை நேராக பார்க்கவில்லை… அவனுக்கு நீ காண்பித்தது உன் அகத்தை மட்டும் தான் முகத்தை அல்ல. அதைப் பார்த்தால் அவனும் மற்ற ஆண்கள் போலத்தான் பேசுவான்’ என்றது.

இருந்தும், அவன் அவளைத் தேற்றிய விதத்தில், அவனைப் பற்றிய நல்லெண்ணங்கள் இன்னமும் அதிகமானது… அதன் வெளிப்பாடு அவனுக்காக அவள் மனதில் பிரிக்கப்பட்ட இடம் விரிவாக்கப்பட்டது. 

நிவேதா குறித்த எண்ணம் தேவ் மனதிலும், தேவ் பற்றிய எண்ணம் நிவேதா மனதிலும், அவர்கள் அறியாமலேயே நுழைந்தது… ஆக்கிரமித்தது.

அடுத்த நாள் நிவேதா சகஜமான நிலைக்கு மாறியிருக்க… அது தேவ்வுக்கு நிறைவைத் தந்தது.

இருவரும் அதிகம் குறுஞ்செய்தியில் பேசிக்கொண்டார்கள். சிலசமயம் அழைத்து பேசிக்கொண்டார்கள்.

தேவ் தனிமை என்பதை மறந்தான். நிவேதாவின் எண்ணங்கள் தனிமையை மறக்கச்செய்தது. இருவரும் கிட்டத்தட்ட அனைத்தையுமே பகிர்ந்துகொண்டனர். ஆனால் நண்பர்கள்… நெருங்கிய நண்பர்கள் என்ற வரையறைக்குள்ளேயே இருந்தனர்.

நாட்கள் அதன் போக்கில் நகர, ஒரு நாள் தேவ் நிவேதாவிடம்… இரண்டு நாட்கள் ஹைக்கிங் (Hiking) செல்வதாகச் சொன்னான். அதுவும் கொஞ்சம் அடர்ந்த காட்டுப்பகுதியில் பயணம்! பத்திரமாகச் சென்றுவரும்படி அறிவுறுத்தினாள் நிவேதா.

அந்த சின்ன அக்கறை… அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது. அடுத்த இரண்டு நாட்கள் கலிபோர்னியா’வில் இருந்த ஒரு காட்டுப் பகுதியில் ஹைக்கிங் சென்றான்.

தினமும் பேசி பழகிவிட்டதால், அந்த இரண்டு நாட்கள் அவனுடன் பேசாமல் இருந்தது, நிவேதாவிற்கு ஒருவித ஏமாற்றத்தைத் தந்தது.

அப்போது திடீரென தேவ் சென்ற காட்டுப்பகுதியில் காட்டுத்தீ பரவிவிட்டதாகச் செய்திகள் வர, நிவேதா அதிர்ந்தாள். அவன் செல்வதை அவளிடம் மட்டுமே சொல்லியிருந்தான்.

அன்று அவன் திரும்பியிருக்க வேண்டும், ஆனால் அவனிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை. அவன் நிலையை எண்ணி பதட்டம் அடைந்தாள்.

அழுகை முட்டிக்கொண்டு வந்தது ‘அவனுக்கு ஏதேனும்’ என எண்ணுகையில். குறுஞ்செய்தி அனுப்பியவண்ணம் இருந்தாள் ‘ஏதாவது ஒன்று அவனை சென்றடையும்’ என்ற நம்பிக்கையில்.

ஆனால் பலனில்லை. அவனைப் பற்றிய செய்தி எதுவும்  கிடைக்காமல் போக, சொல்லத்தெரியாத அழுத்தம் நெஞ்சத்தில். வேண்டாத தெய்வமில்லை. செய்யாத பிரார்த்தனை இல்லை.

காட்டுத்தீயில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் பணி நடந்தவண்ணம் இருந்தது.

மித்ரனிடம் சொல்லலாம் என எண்ணியபோது, அனுராதாவிற்கு லேசாக உடல் உபாதை ஏற்பட்டு அவன் அதில் பதற்றமாக இருந்ததால், அவனிடமும் சொல்ல முடியவில்லை.

கடைசியில் இது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி போல், கிட்டத்தட்ட எட்டு மணி நேரத்திற்குப் பின், அவள் அனுப்பிய குறுஞ்செய்தி அவனைச் சென்றடைந்தது.

அவன் உடனே அழைத்தான். அழைத்தவன், இவளின் தவிப்பு எதுவும் தெரியாமல், வெகு சாதாரணமாக “ஹே என்ன நிவி… இவ்ளோ மெசேஜ்?” என கேட்டிட,

“தேவ்… உங்களுக்கு…” பதட்டத்தில் அவளுக்குத் தொண்டை அடைத்தது. இருந்தும், “வைல்ட் ஃபயர்’னு நியூஸ்… உங்களுக்கு ஒன்னும் ஆகலையே” அவள்  திக்கித் திணறிக் கேட்டவுடன்… சத்தமாகச் சிரித்தான்.

நிவேதாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

“நிவி நிவி. நான் நைட்’டே வந்துட்டேன். மொபைல்’ல சார்ஜ் போச்சு. பவர் பேங்க் எடுத்துட்டு போக மறந்துட்டேன். வந்ததும் செம்ம டயர்ட். அப்படியே தூங்கிட்டேன். இப்போதான் மொபைல் ஆன் பண்ணினேன் நிவி. இதுக்குப்போய் இவ்ளோ பயந்துட்டயா… ஹாஹாஹா” தன்னிலை விளக்கம் சொல்லிவிட்டு அவன் சிரித்ததும்… இதுவரை அழுகையில் சிவந்திருந்த அவள் கண்கள் இப்போது கோபத்தில் சிவந்தது.

“ஓ! என் தப்பு தான்” வேறெதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்துவிட்டாள். இந்த சில மணிநேரங்கள் எவ்வளவு பயம் பதட்டம் அவளுள். அதை பற்றி துளியும் யோசிக்காமல் அவன் சிரித்தது கோபமாக வந்தது.

அங்கு அவனுக்கோ… முதலில் அவள் திக்கித் திணறிப் பேசியவுடன் சிரிப்புதான் வந்தது. பின் அவளின் பதட்டம் அவனுக்குப் புரிய, தன்னையே திட்டிக்கொண்டு அவளை மறுபடியும் அழைத்தான்… நிவேதா எடுக்கவில்லை.

பலமுறை மன்னிப்பு கேட்டு… நேரில் முடியாமல் போனதால், குறுஞ்செய்தியிலேயே காலில் விழுந்து… பல திட்டுகள் வாங்கி… அவளைச் சமாதானப்படுத்தினான். அனைத்தையும் பிடித்தே செய்தான். கூடவே அவளின் செயல்களை எண்ணி ரசித்தே செய்தான்.

தன்னை தொடர்புகொள்ள முடியாமல் அவள் தவித்தது, அவனுள் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அவளை நினைக்கையில் அவன் மனது லேசாக இருப்பதுபோல உணர்ந்தான். மனம் முழுக்க அவள் எண்ணங்களே நிரம்பி வழிந்தன.

சில நாட்களுக்குப் பின், அடுத்த வரன் அமைந்தது நிவேதாவிற்கு. மறுபடியும் பெண் பார்க்கும் படலம்.

முன்பு நிவேதா, வரனை நேரில் பார்க்கச் சென்றபோது…  மித்ரன் மூலம் தேவ்விற்கு அந்த விஷயம் தெரியவந்தது. அப்போது தேவ் நிவேதா இருவரும் அதிகம் பழகவில்லை.

ஆனால் இப்போது, நிவேதாவே தேவ்விடம் பெண் பார்க்க வருவதாகச் சொன்னாள். ‘தனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை… இருந்தும் தன் அம்மாவிற்காக’ என்பதையும் சொன்னாள்.

ஏன் பிடிக்கவில்லை என்பதற்கான காரணம் தெரியவில்லை. ஆராயவுமில்லை.

அவள் சொன்னதை தேவ் அமைதியாகக் கேட்டுக்கொண்டான். ‘இவர்களாவது நிவேதாவை… அவள் மனதை கஷ்டப்படுத்தக்கூடாது. அவள் சங்கடப்படுவதை, கண்ணீர் விடுவதை இன்னொரு முறை பார்க்க முடியாது’ என்பது தான் அவன் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

இந்திய நேரப்படி காலை வந்தார்கள் அவர்கள். அப்போது தேவ்விற்கு நடு இரவு. தூக்கம் வராமல் ‘என்ன நடக்கப் போகிறதோ!’ என்ற அவளின் எண்ணத்துடனே இருந்தான்.

அந்த எண்ணத்திற்கான காரணம் தெரியவில்லை. ஆராயவுமில்லை.

இந்திய நேரப்படி மதியம் ஆனது. அனைத்தும் முடிந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டு நிவேதாவை ஆவலோடு அழைத்தான். அவளும் உடனே எடுத்தாள்.

“சொல்லுங்க தேவ்” என்ற அவள் குரலே சொன்னது அவள் சரியில்லை என்று.

கொஞ்சம் படபடப்புடன் “என்ன ஆச்சு? வந்தவங்க…” அவன் தயங்கி நிறுத்த… “ப்ச். அதுவா… வேறென்ன தேவ். யோசிச்சு வீட்ல கலந்து பேசிட்டு சொல்றோம்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. கண்டிப்பா கூப்பிட கூட மாட்டாங்க” சலித்துக்கொண்டே சொன்னவள்…

“வந்தவன் கிட்ட பொண்ணு கூட பேசறயான்னு கேட்டாங்க. நல்லவேளை வேணாம்னு சொல்லிட்டான். சோ நமக்கு டேமேஜ் கொஞ்சம் கம்மிதான்” சகஜமாகச் சொல்வது போல அவள் சொன்னாலும், அன்று போலக் கலக்கம் அவளிடம் இல்லையென்றாலும், அவள் பேச்சிலிருந்த வேதனை அவனுக்குப் புரிந்தது.

அவன் பேசவில்லை. அவளே பேசினாள்.

“வெறுப்பா இருக்கு தேவ். எல்லாருக்கும் ஒரு பதுமை போல…மெழுகுப்பாவை போல… பொண்ணுங்க தான் வேணுமாம். போட்டோ பார்த்துட்டு தானே வர்றாங்க. ப்ச்… என்னமோ போங்க… எங்கயாச்சும் ஓடி போய்டலாமான்னு…”  அவள் முடிக்கும்முன்…

“என்னை கல்யாணம் பண்ணிக்கறயா நிவி?!” என்ற அவன் கேள்வியில் விக்கித்து… விழி விரித்து… அதிர்ந்தாள் நிவேதா!

7
15
21
5
4

4 thoughts on “மீண்டும் ஒரு காதல் – 13

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved