மீண்டும் ஒரு காதல் – 14

மீண்டும் ஒரு காதல் – 14:

நிவேதா மறுபடியும் வாழ்க்கையை பற்றிச் சலிப்புடன் பேசுவது பொறுக்காமல், அவனையும் மீறி, அவன் கேட்டது “என்னை கல்யாணம் பண்ணிக்கறயா நிவி” என்பது தான். சில நிமிடங்கள் மௌனம் நீடித்தது இருவருக்கிடையில்.

நிச்சயமாக யோசித்தோ இல்லை திட்டமிட்டோ அவன் சொல்லவில்லை. ஆனால் இதுபோல கேட்டதற்கு அவன் வருந்தவும் இல்லை.

அவன் பேசியதை அவன் மனம் எண்ணிப் பார்க்க, ‘ஒருவேளை அவள் சம்மதித்தால், அது தன் வாழ்க்கையில் கிடைக்கப்போகும் பேரின்பம். எந்த ஓர் ஆதாயத்துக்காகவும், எதை எதிர்பார்த்தும், வந்ததல்ல அவளின் அன்பு… அக்கறை.

இன்னமும் சொல்லப்போனால் தான் யார் என்பது முழுவதுமாக கூட அவளுக்குத் தெரியாது. இருந்தும் அவளின் தன்னலமற்ற அன்பால் தன்னை முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளாள்.

ஒருவேளை இன்று இப்பேச்சு எழாமல் இருந்திருந்தால், என்றாவது ஒருநாள் தன் மனம் இதைப் பேசச்சொல்லி தூண்டி இருக்கும்’ என்ற எண்ணம் தோன்றியது.

அவளுக்காக அவன் மனதில் ஒதுக்கிய இடம்… தானாக துளிர்த்து, அழகாக வளர்ந்து, இன்று முற்றிலுமாக மனதை ஆதிக்கம் செய்கிறது. திருமணத்தில் சுத்தமாக பிடித்தம் இல்லாதவன் மணம் செய்துகொள்ளலாமா என்பதை கண்டிப்பாக மனம் ஒப்பாமல் கேட்கமாட்டான்.

மனம் முழுக்க நிரம்பியவளை திருமணம் செய்துகொள்ள எந்த தயக்கமும், யோசனையும் இல்லை அவனுள்.

அவள் பதிலுக்காக அவன் காத்திருக்க, அந்த மௌனத்தைக் கலைத்தாள் நிவேதா.

“வாட் டூ யு மீன் தேவ்? கா… காமெடி’யா இருக்கா உங்…” அவள் வாக்கியத்தை முடிக்கும்முன்… “கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன் நிவி” என்றான் மறுபடியும் அழுத்தமாக.

“ஓ கமான்! என்ன… என் கஷ்டத்தை கேட்டுட்டு… எனக்கு வாழ்க்கை தர்றீங்களா தேவ்?” இவள் அதை விட அழுத்தமாகக் கேட்டாள்.

ஒருவேளை பரிதாபப்பட்டு கேட்கிறானோ என்ற கேள்வி அவளுள். அதை நினைக்கையிலேயே கசந்தது.

“ஹாஹாஹா எனக்கு தியாகி பென்ஷன்’லாம் வேண்டாம் நிவி. எனக்கு வாழ்க்கை கொடுன்னு கேட்கிறேன். சிங்கிள் அங்கிள்’க்கு ப்ரோமோஷன் கொடுத்து உன்னோட மிங்கில் ஆக பெர்மிஷன் கொடுன்னு கேட்கறேன்” என்றான் புன்னகையுடன்.

அவன் பேசியதில் அவனின் புன்னகை, அவளுக்கும் தொற்றியது. அவள் முகத்திலும் கீற்றாகப் புன்னகை.

அடுத்த நொடி அது மறைந்து, “தேவ்… என்னை பார்த்தா இந்த மாதிரிலாம் நீங்க பேச மாட்டீங்க. ஏன் அப்புறம் சாதாரணமா பேசக்கூட யோசிப்பீங்க” வெற்றுப்புன்னகை இப்போது ஒட்டிக்கொண்டது.

அவளுக்கு எப்படி தெளிய வைப்பது என்று அவனுக்குப் புரியவில்லை.

அவன் பார்த்தது அவள் அகத்தின் அன்பை. அவன் விரும்புவது அவள் உள்ளத்தை. முகம் பார்த்து வரும் காதலை விட அகம் பார்த்து வரும் காதலின் ஆயுள் அதிகம் என்று அவளுக்கு எப்படிப் புரியவைப்பது?!

சில நொடிகள் யோசித்தான். ஒரு முடிவுக்கு வந்தான்.

மூச்சை ஆழ இழுத்து வெளியிட்டவன், “நிவி… நீ சம்மதம் சொன்னதுக்கு அப்புறம், நம்ம கல்யாணம் முடிவாகி, நான் இந்தியா வர்றவரை… உன்ன பார்க்க மாட்டேன்.

இந்த சத்தியத்திலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல. பட், நீ அதை செய்தா தான் நம்புவன்னா, உனக்காக பண்ணுவேன். இப்போ சொல்லு என் மேல நம்பிக்கை வைப்பயா?” அழுத்தம் திருத்தமாக, நிறுத்தி நிதானமாக, தெள்ளத்தெளிவாகக் கேட்டான்.

நிவேதா அதிர்ந்தாள். இப்படிக்கூட ஒருவனால் இருக்க முடியுமா? என்ற எண்ணம் அவள் மனதில். அவன் பேசியதிலிருந்து இன்னமும் மீளவில்லை.

அவள் அமைதி அவனுக்குச் சலிப்பைத் தர… “இப்போ கூட நம்ப மாட்டியா? என்ன சொன்னா உனக்கு என் மேல நம்பிக்கை வரும்?” குரலில் தொய்வுடன் கேட்டான்.

“எனக்கு… கொஞ்சம்… டைம் வேணும்” சரியாகப் பேச முடியாமல் அவள் தடுமாற, “அவ்ளோ தானே… நான் லைன்’லயே இருக்கேன் யோசிச்சு சொல்லு” யோசிப்பதற்கான வரையறையையும் அவனே வரைந்தான்.

அவள் மௌனமாகச் சிரித்தாள் அவனின் பதிலைக் கேட்டு.

அவளும் யோசித்தாள். அவளுக்கும் அவனைப் பிடிக்கும். அவனின் அக்கறை பிடிக்கும். அவனின் அணுகுமுறை பிடிக்கும். ஆண் என்ற ஆணவம் துளியும் இல்லாத அவனைப் பிடிக்கும். அவனுடன் செலவு செய்யும் நேரங்கள் மிகவும் பிடிக்கும். தன் மனதில் அவனுக்கான இடம் அதிகரித்துக்கொண்டே போவது இன்னமும் பிடிக்கும். இது போதாதா?!

அவனை மறுக்கக் காரணம் நிச்சயமாக அவளிடம் இல்லை என்பது தான் உண்மை.

சில நொடிகளுக்குப் பின், “உ.. உங்க வீட்ல ந…நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்களா தேவ்?” தயக்கத்துடன் அவள் கேட்க, அவன் முகத்தில் மறுபடியும் மகிழ்ச்சி ஒட்டிக்கொண்டது.

“தேங்க்ஸ்” என்றான் உடனே.

‘நான் கேட்ட கேள்விக்கு இது பதிலா?’ புரியாமல் அவள் விழிக்க, “‘நம்ம கல்யாணம்னு சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சதுக்கு” அவனே அவளுக்குப் புரியவும் வைத்தான்.

அவள் முகத்தில் இப்போது புன்னகை. “என்ன சத்தத்தை காணோம்?” அவள் மனநிலை புரிந்து அவன் வம்பிழுக்க… அவளும் புன்னகையுடன், “நான் கேட்ட கேள்விக்கு இன்னமும் பதில் வரல” என்றாள்.

“வீட்ல சொல்லுவோம். சம்மதிச்சா சாஸ்திரப்படி கல்யாணம்… இல்ல நீ சொன்னியே எங்கயாச்சும் ஓடி போய்டலாம் போல இருக்குனு. சோ தனியா போகாத. நானும் கூட வரேன். சேர்ந்தே ஓடி போயிடலாம்” கள்ளப்புன்னகையுடன் அவன் பேச, போலியாக முறைத்தாள் நிவேதா, கூடவே முகத்தில் சிரிப்பு.

“அம்மாக்கு நான் நல்ல குடும்பத்துல வாக்கப்படணும்னு ஆசை. அக்கா போல என் வாழ்க்கை ஆயிடக்கூடாதுனு அடிக்கடி சொல்வாங்க. சோ நம்ம கல்யாணம் சாஸ்திரப்படி தான் நடக்கணும்” ‘நம்ம கல்யாணம்’ என்பதைச் சொன்னபோது இருவர் மனதிலும் மட்டற்ற மகிழ்ச்சி.

“மொதல்ல உன் வீட்ல விஷயத்தை சொல்வோம். அப்புறம் என் வீட்ல” அவன் முடிக்கும்முன், “என்னை பார்த்துட்டு அவங்க வேணாம்னு சொல்லிட்டா?” மறுபடியும் முதல் புள்ளியில் வந்து நின்றாள்.

எல்லாப்புறமும் விழுந்த அடிகள்… அதனால் ஏற்பட்ட ரணங்கள் அவளை  நம்பிக்கையில்லாமல் பேச வைத்தது.

அது புரிந்து, “நம்ம ரெண்டு பேர் வீட்ல சம்மதம் வாங்கறது என் வேல”  மனதில் ஏற்பட்ட காயத்திற்கு, நம்பிக்கை மருந்துடன், “என்கூட ட்ரீம்’ல டூயட் பாடுறது மட்டும் தான் உன் வேலை” கூடவே காதல் மருந்தையும் சேர்த்து அவளுக்குத் தந்தான்.

இப்போது வெட்கப்புன்னகை அவள் இதழோரத்தில்.

பின், “என் குரல் கேட்டுமா டூயட் பாட சொல்றீங்க” முன்பு அவள் குரலை அவன் கிண்டல் செய்ததை ஞாபகம் வைத்து, அவள் நக்கலுடன் கேட்க, “அதுனால தான் ட்ரீம்’ல பாடச்சொன்னேன்” புன்னகையுடன் அவனும் அவளைக் கிண்டல் செய்தான்.

“அப்போ நேர்ல பார்க்கறப்ப கண்டிப்பா என்னோட ஒரு பாட்டு உங்களுக்கு பார்சல்” அவளும் விடாமல் கேலி செய்ய… “நேர்ல பார்த்தா டூயட் பாடெல்லாம் நேரம் இருக்காது நிவி” காதல் சொட்ட அவனும் விடாமல் அவளை வம்பிழுத்தான்.

அவன் பேசியதைக் கேட்டு கண்கள் மூடி நாணத்தைக் கட்டுப்படுத்தினாள். இருந்தும் நாணம் நயமாக அவள் முகத்தில் நடனம் ஆடியது.

“ஹே நிவி… நானே சொல்லணும்னு இருந்தேன். இந்த சரோஜா தேவி சாவித்திரி மாதிரி வாங்க போங்கனெல்லாம் கூப்பிட வேண்டாம். என்ன, மூணு நாலு வருஷம் தானே பெரியவன் நான். ‘வா போ’னு கூப்பிடு”

இதுவரை இருந்த நாணத் திரையைத் தள்ளிவிட்டுவிட்டு, “அப்போ வாடா போடானு கூட கூப்பிடலாமா தேவ்? மூணு வருஷம் தானே வித்தியாசம்” சிரித்துக்கொண்டே அவள் கேட்க…

“அப்போ நான் உன்ன வாடி போடின்னு கூப்பிட வேண்டியதாயிருக்கும். I leave it to you to decide” என்றான் குறும்பாக.

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல தேவா சார்” அவளும் குறும்பாகப் பேச, “அப்படியா… அப்போ சரி வேதா மேடம்” அவளுக்குப் புதுப்பெயரை, அவன் மட்டுமே அழைப்பதற்காக வைத்தான்!

“வாவ்…! தேவா வேதா! Deva Veda – Anagram வோர்ட் தேவ்” என்றாள் ஆச்சரியத்துடன்… அந்த அழகான வார்த்தை கோர்வையை சொல்லி பார்த்தபடியே!

Anagram என்பது தமிழில் பிறழ்சொல். ஒரே எழுத்துக்கள் கொண்டு உருவாக்கப்படும் வார்த்தைகள்.

பெயரிலேயே பொருத்தம் அமைந்ததை பற்றி… பின் வீட்டில் எப்படிப் பேசலாம் என்பதைப் பற்றி… இன்னமும் சில காதல் பிதற்றல்கள், என்று அவர்களுக்குள் நிறையப் பேசினார்கள்.

என்ன.. மனம் விட்டுப் பேசியும் நிவேதாவிற்கு ஒரு சின்ன கலக்கம் இருந்து கொண்டே இருந்தது. அவன் தன்னை பார்த்தால், எங்கே அவனுக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்று.

அது அவனுக்கும் புரிந்தது. வார்த்தையால் பேசி பயனில்லை. அவளை உணர வைக்க வேண்டும் என முடிவெடுத்தான்.

ஒருவரை மற்றவர் புரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொண்டனர். அவன் மனதை… காதலைத் தெளிவாக அவளுக்குக் காட்டினான். அவளும் அவன் மீதான அன்பை அளவின்றி அள்ளித்தெளித்தாள்.

இருவரும் வாழப்போகும் வாழ்க்கையைப் பற்றிப் பேசினர். இப்போது இருக்கும் பிரிவை நினைத்து வருந்தினர். இருவருக்குள்ளும் மனதளவில் நெருக்கம் அதிகமானது.

காதல் என்பது விழி வழியாகப் பார்த்து, சிலசமயம் உடல் வழியாக நெருங்கி உணர்த்தவேண்டும் என்று அவசியம் இல்லை… இதுபோல மொழி வழியாகப் பேசி, மனவழியாக நெருங்கியும்…  காதலை வெளிப்படுத்த முடியும் என்று உணர்த்தினார்கள் இருவரும்.

இதற்கிடையில் நிவேதாவின் அக்கா அனுராதாவிற்கும், மித்ரனுக்கும் பெண் குழந்தை பிறந்தது. மித்ரன் வீட்டில் இப்போதாவது இருவரையும் ஏற்றுக்கொள்வார்களா என்ற ஆசை அனுராதாவின் அம்மா கமலாவுக்கு.

மித்ரன் வீட்டில் சம்மதம் பெறுவதற்காக, குழந்தையின் பெயர்சூட்டு விழாவைக் கூட தள்ளிவைத்தார் கமலா.

மித்ரனின் தொழில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. லட்சங்களில் வருமானம் பார்த்தவர்கள், ஒரு படி மேலே சென்று கோடியைத் தொட்டனர். அந்த வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகித்தனர் தேவ் மற்றும் நிவேதா.

காதலில் மட்டும் முன்னேறாமல், மித்ரன் தொழிலில் முன்னேற இருவரும் பெருந்துணையாக இருந்தனர்.

நாட்கள் செல்ல செல்ல, நிவேதா ‘தனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. வீடியோ காலில் பேசலாமா?’ என்று சொல்லியும் கேட்காமல், அவன் கொடுத்த வாக்கில் விடாப்பிடியாக நின்றான் தேவ்.

இருந்தும் அவள் ஆசையைத் தடை செய்யவில்லை. வீடியோ காலில் பேசினான். அவள் மட்டுமே அவனைப் பார்க்கும்படி இருந்தது. அவளுடைய வீடியோ’வை அவன் ரத்து செய்திருந்தான்.

பலமுறை இருவரும் வீடியோ காலில் பேசிய போதும், ஒருமுறை கூட அவளை அவன் பார்க்கவில்லை.

இதைவிட நம்பிக்கையை அவளுக்கு எப்படித் தர முடியும் ஒருவனால்?! காதலுக்கு முகம் தேவையில்லை என்பதை அவள் உள்மனதுக்கு புரியவைத்தான். அவன் விரும்புவது அவள் மனதை மட்டுமே என்பதை உணர வைத்தான்.

‘என்ன விதமான காதல் அவனுடையது?!’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளால். அவளுக்குப் பிரமிப்பாக இருந்தது. பெருமையாகவும் இருந்தது. அவன்மேல் ஆசை பெருக்கெடுத்தது. அது பேரன்பாக வெளிப்பட்டது. அவனை அன்பால் ஆக்கிரமித்திருந்தாள்.

அவ்வப்போது வீடியோ காலில் அவனுடைய வளர்ப்புப் பிராணி ரோமியுடனும் அவள் பேசினாள். அந்த ஐந்தறிவு ஜீவனும் அதன் பாஷையில் நிவேதாவிடம் பேசியது. 

இருவருக்கிடையில் நல்ல இணக்கம், நம்பிக்கை உருவான பின், தேவ் முதலில் மித்ரனிடம் பேசினான்.

மித்ரன் அதிர்ந்தான். நண்பனுக்குக் காதல் வந்துவிட்டது என்பதை அவனால் நம்ப முடியவில்லை. இத்தனை நாட்கள் வேலை விஷயமாக நிவேதாவும் தேவ்வும் பேசுகிறார்கள் என்றுதான் நினைத்திருந்தான்.

தேவ் பற்றி நன்கு தெரியும் என்பதால்… அவனே மனைவி அனுராதாவிடமும், நிவேதா அம்மா கமலாவிடமும் பேசினான்.

கமலாவுக்கு ஒரே ஒரு ஆசை… முதல் மகளுக்கு நடக்காதது, தன் இரண்டாவது மகளுக்காவது நல்லபடியாக நடக்கவேண்டும். அது வேறு எதுவும் இல்லை… அவள் திருமணம் தான்!

மித்ரன் பேசியபின் தேவ் கமலாவிடம் பேசினான். அவருக்கு நம்பிக்கை தரும் வகையில் பேசினான். கமலாவுக்கும் அவனைப் பிடித்துவிட்டது.

நிவேதாவும் தேவ்வும் யாருக்கும் தெரியாமல் காதல் வளர்த்ததை, மித்ரனும் அனுராதாவும் கிண்டல் செய்தார்கள். தேவ் இன்னமும் நிவேதாவை பார்க்கவில்லை மற்றும் அதற்கான காரணம் தெரிந்தபோது… ஆச்சரியப்பட்டார்கள்.

இருவரும் தேவ்விடம்  சீக்கிரம் அவன் வீட்டில் பேசச்சொல்லிக் கேட்டுக்கொண்டார்கள்.

தேவ்வும் சரியான நேரத்திற்காகக் காத்திருந்து அவன் அம்மா வினோதினியிடம் நிவேதா குறித்துப் பேச ஆரம்பித்தான்.

முற்றிலுமாக மறுத்தார் வினோதினி. அதற்குப் பல காரணங்கள் அவரிடம் இருந்தது. முதல் காரணம் ஜாதி. பின் சொத்து மதிப்பு. அடுத்து அனுராதாவின் காதல் திருமணம் என சொல்லிக்கொண்டே போக, அவரை தடுத்தான் தேவ்.

“அம்மா. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது வேதா கூட தான்” அவன் அழுத்தமாகச் சொல்ல, அவரும் “உனக்கு பொண்ணு பார்த்தாச்சு.அது உன் அத்தை பொண்ணு கௌரி. ஒழுங்கா நீ கிளம்பி வர” என்று பிடிவாதமாகப் பேசினார்.

ஓர் இகழ்ச்சி புன்னகையை உதிர்த்தவன், “அம்மா ம்மா. நீங்க ஒத்துக்கலைன்னா நான் கல்யாணமே பண்ணிக்காம இருப்பேனே ஒழிய, கண்டிப்பா வேதாவை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” மறுபடியும் அழுத்தமாகச் சொல்லி அழைப்பைத் துண்டித்தான் தேவ்.

நிவேதாவிடம் நடந்த விஷயத்தைப் பற்றி தேவ் சொல்லவில்லை. சொன்னால் கண்டிப்பாக நம்பிக்கை இழந்துவிடுவாள் என எண்ணி அவளிடம் சொல்லவில்லை. அவள் வீட்டிலும் சொல்லவில்லை. எங்கே அவர்களுக்கும் நம்பிக்கை குறைந்துவிட்டால் என்ற எண்ணம்.

நாட்கள் வாரமானது. வாரங்களும் உருண்டோடியது. ஆனால் அவன் வீட்டில் சம்மதிக்கவில்லை.

இதற்கு மாறாக, மித்ரன் வீட்டில் மனஸ்தாபங்கள் மறந்து, மித்ரன் மற்றும் அனுராதவை ஏற்றுக்கொண்டார்கள். குழந்தையின் ஆறாவது மாதத்தில் பெயர் சூட்டு விழாவை நடத்த முடிவெடுத்தனர்.

தேவ் வீட்டிற்குப் பேசுவதை நிறுத்திக்கொண்டான். முன்பெல்லாம் பெரிதாகப் பாசம் இல்லையென்றாலும், பெற்றோரிடம் பேசுவான்… இப்போது அதுவும் இல்லை. தன் பெற்றோர் சம்மதம் தேவை என்று நிவேதாவின் அம்மா சொன்னதால், இதை தவிர வேறு வழியில்லாமல் காத்திருந்தான்.

இந்த அளவிற்கு, பேசாமல் கொள்ளாமல் இருப்பான் என்று வினோதினி நினைக்கவில்லை. அவனின் பிடிவாதம் தெரிந்து பெற்றோர்களே இறங்கி வந்தார்கள்.

நிவேதாவின் ஜாதகத்தைக் கேட்டு பொருத்தம் பார்த்தார்கள். ஜாதகம், ஜோசியத்தில் பெருமளவிற்கு வினோதினிக்கு நம்பிக்கை உண்டு.

தேவ் நிவேதாவிற்கு, பத்து பொருத்தங்களும் இல்லாவிட்டாலும்… சுமாராக பொருத்தம் இருந்தது. அரை மனதாகச் சம்மதித்தார் வினோதினி. நிவேதா வீட்டிலிருந்து முதலில் வந்து பேசும்படி சொன்னார்.

தேவ்விற்கு அளவு கடந்த மகிழ்ச்சி. கலிபோர்னியா’வில் இருந்து சென்னை விமான பயண நேரம் அதிகம் என்பதால், பெங்களூருக்கு விமான டிக்கெட் புக் செய்தான். நிவேதாவைப் பார்க்க வரப்போவதை… அவளிடம் சந்தோஷமாகப் பகிர்ந்து கொண்டான்.

பின் மித்ரனை அழைத்து நடந்ததைச் சொன்னான். அவனுக்கும் நிவேதாவின் வாழ்க்கையை நினைத்து சந்தோஷம், நிம்மதி.

கமலாவை தனியாக அனுப்ப மனமில்லாமல் மித்ரன் உடன் செல்கிறேன் என்றான். மித்ரன் செல்லும்போது தான் உடன் செல்லவில்லை என்றால் நன்றாக இருக்காது என எண்ணி அனுராதாவும் செல்வதாக நிவேதாவிடம் சொல்ல…

‘குழந்தையை விட்டுவிட்டுப் போகவேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று சொல்லி நிவேதா மறுத்தாள்.

அதை பொருட்படுத்தாமல், ஐந்து மாத குழந்தையை நிவேதாவிடம் விட்டுவிட்டு கமலா, மித்ரன், அனுராதா மூவரும் தேவ் ஊரான ஆம்பூருக்கு புறப்பட்டனர்.

நிவேதாவிற்கு ஏனோ அன்று மனது சஞ்சலமாகவே இருந்தது. தவறாக ஏதோ நடக்கப்போகிறது என்ற எண்ணம் வந்தவண்ணம் இருக்க… இடியாய் வந்திறங்கியது அந்த செய்தி.

பெங்களூர் ஹைவே’யில் கோர விபத்து. காரில் பயணித்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றது அந்த செய்தி!

25
3
5

2 thoughts on “மீண்டும் ஒரு காதல் – 14

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved