மீண்டும் ஒரு காதல் – 15

மீண்டும் ஒரு காதல் – 15:

மித்ரன், அனுராதா மற்றும் கமலா மூவரும் தேவ் ஊரான ஆம்பூர் புறப்பட, நிவேதாவிற்குள் சின்ன சஞ்சலம் இருந்துகொண்டே இருந்தது.

அப்போது பார்த்து சரியாக அவளை அழைத்தான் தேவ். அவன் மனதில் ஆயிரம் ஆசைகள். சில பல ரிங் சென்ற பின் நிவேதா எடுத்தாள்.

“ஓய் மேரி ப்யார்! போன் எடுக்க இவ்ளோ நேரமா… என்ன டூயட் பாடிட்டு இருக்கியா?” எடுத்தவுடன் அவளை வம்பிழுத்தான்.

அவன் பேச்சை ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை. “தேவா!” என்ற குரலில் அது அவனுக்கும் புரிந்தது.

“என்னடா ஆச்சு? ஏன் ஒரு மாதிரி பேசற?” அவன் கேட்டவுடன்… கண்ணீர் துளிர் விட்டது அவளுக்கு.

“வேதா என்னாச்சு?” மறுபடியும் அவன் கேட்க… “தெரியல தேவா. மனசு ரொம்ப அடிச்சுக்குது. ஏதோ சரியில்லாத மாதிரியே தோணுது. உன் வீட்ல சம்மதிச்சிடுவாங்கல்ல?” ‘ஒருவேளை அவர்கள் சம்மதிக்காவிட்டால் என்னாகும் என்ற எண்ணம் தான் தன்னை வருத்துகிறதோ’ என்று எண்ணிக்கொண்டு கேட்டாள்.

மறுபடியும் அவள் நம்பிக்கை இழக்க ஆரம்பித்துவிட்டாள் என்றுணர்ந்த தேவ்… “வேதா… வீடியோ கால்’க்கு வா. ஐ ஹவ் சம்திங் டு ஷோ யூ” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான். அடுத்த நொடி வீடியோ கால் வந்தது.

அவள் அழைப்பை ஏற்க… திரையில் அவள் பார்த்தது ஒரு அழகிய டாலர் மற்றும் சங்கிலி.

‘தான் இருக்கும் மன நிலையில் இப்போது இது எதற்கு?’ அவள் யோசிக்கும்போதே…

“வீட்ல கண்டிப்பா சம்மதிப்பாங்க. அடுத்து நம்ம கல்யாணம் தான். அப்போ தாலிகூட இந்த செயின உன் கழுத்துல நான் போடுவேன். இதே போல இருக்கிற இன்னொன்ன நீ எனக்கு போடணும் ஓகே வா?

அது என்னோட தாலி. எனக்கு தாலி வரம் கொடுத்து அருள் புரியணும் என் வேதா தெய்வமே!” அவன் திரையில் கைகூப்பி வேண்டுவதுபோல கேட்க… வேதா கண்களில் கிட்டத்தட்ட கண்ணீர். கூடவே புன்சிரிப்பு!

“என்ன சாமி அமைதியா இருக்கே… வரம் கிடைக்காதோ” அவள் முகத்தைப் பார்க்காததால், அவன் அவளைச் சீண்ட, கண்களைத் துடைத்துக்கொண்டு… “இப்போவே உன்ன நேர்ல பார்க்கணும் போல இருக்கு தேவா. சீக்கிரம் கிளம்பி வாயேன்” என்றாள் காதல் பெருக்கில்.

“எதுக்கு என்னை உடனே பார்க்கணும் வேதா?! ஏதாவது தரணுமா?” மறுபடியும் அவளை வம்பிழுக்க, அவள் முகத்தில் லேசான நாணம்!

“என்ன சத்தத்தையே காணோம்? எனக்கும் உன்னை உடனே பார்க்கணும்னு ஆசைதான் வேதா. ஆனா வைல்ட் ஃபயர் அதிகமானதால ஃபிளைட் சர்வீஸ் ஸ்டாப் பண்ணிருக்காங்க டா. நானும் flexi டிக்கெட் தான் புக் பண்ணியிருக்கேன். எப்படியும் நேரம் எடுக்கும்னு சொல்றாங்க. பார்க்கலாம்.

எவ்ளோ சீக்கிரம் கிளம்ப முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கிளம்பி வந்து…” என்று நிறுத்தியவன்… “வந்து?!” என திரையில் அவன் ஒற்றை புருவம் உயர்த்த, நிவேதாவிற்கு மறுபடியும் வெட்கம் வெட்ட வெளிச்சமானது அவள் முகத்தில்.

அவள் அமைதியே அவளின் நிலையை அவனுக்கு உணர்த்த, அவள் கலக்கம் கொஞ்சம் தீர்ந்தது என எண்ணி நிம்மதி அடைந்தான்.

“இந்த டாலர்ல வேற எதுவும் உனக்கு புரியலையா வேதா?” என்றவன், “இதுல “V” அண்ட் “D” னு ரெண்டு இதயங்கள் ஒன்னுக்குள் ஒன்னு சேர்த்து பின்னப்பட்டிருக்கு. நம்ம ரெண்டு பேரும் இதுபோல ஒன்னா காலம் முழுக்க சேர்ந்திருக்கணும் வேதா” குரலில் ஆசையை… காதலை… தேக்கி வைத்துக்கொண்டு சொன்னவனைப் பார்த்தவளுக்கு மறுபடியும் கண்கள் கலங்கியது.

“தேவா…” என்றாள் குரலில் கரகரப்புடன். அவன் முகத்தில் மென்னகை. அடுத்துப் பேசும்முன்… அனுராதாவின் குழந்தை சிணுங்கல் சத்தம் கேட்டவுடன், அவசரமாக தேவ்விடம் பேசிவிட்டு போனை வைத்தாள்.

தேவ் அவளின் மனநிலையை மாற்றியிருந்தாலும் ஒரு சின்ன கலக்கம் இருந்துகொண்டே இருந்தது.

தேவ் வீட்டிற்கு சென்ற மூவரும், பேசிவிட்டுக் கிளம்பியிருந்தார்கள். தேவ் மற்றும் நிவேதாவிடம், இப்போது எதுவும் சொல்ல வேண்டாம், பிறகு பொறுமையாக நடந்ததைச் சொல்லலாம் என்றெண்ணியவர்கள், ஆம்பூரை கூட தாண்டவில்லை.

எதிர்திசையில் அதி வேகமாக வந்த கண்டைனர் லாரி கட்டுப்பாடு இழந்து, இடையிலிருந்த தடுப்பில் இடித்து மோதி, மறுபக்கம் மூவரும் வந்துகொண்டிருந்த காரின் மேலே ஏறியது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உடனே ஆம்புலன்ஸ்சை அழைக்க, அவர்களைக் காப்பாற்றும் முன், மூவரின் உயிரும் பூலோகம் விட்டுப் பிரிந்தது.

செய்தி நிவேதாவை அடைந்ததும், மூச்சு கிட்டத்தட்ட நின்றேவிட்டது அவளுக்கு. சுத்தமாக நிலை குலைந்துவிட்டாள்!

அது தேவ்வை அடைந்தபோது, முற்றிலுமாக அதிர்ந்தான். வேதாவின் நிலை… மித்ரனின் குழந்தை… என்று நினைக்கையில், இதயம் துடிக்க மறந்தது போல உணர்ந்தான்!

************************************************

கண்கள் மூடி தன் வேதாவின் நினைவலைகளில் இருந்தவன், நிவேதாவின் கட்டிலில் அசைவு தெரிந்து, கண் திறந்தான். கண்கள் சிவந்திருந்தது.

எதிரே நிவேதாவின் கட்டிலைப் பார்க்க, ‘தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பி விட்டோமோ’ என்ற எண்ணத்துடன் அவனைப் பார்த்தாள்.

“ஏதாச்சும் வேணுமா?” மினுவை தலையணைக்கு மாற்றியபடி அவன் கேட்க… நிவேதா கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தாள் அவனிடம் சொல்வதற்கு.

அது புரிந்ததுபோல, “இரு நான் நர்ஸ்’ஸ கூட்டிட்டு வரேன்” என்றவன் சென்ற  வேகத்தில் செவிலியருடன் திரும்பி வந்தான்.

அவர் நிவேதாவை பாத்ரூமிற்கு அழைத்துச்சென்றார்.

‘இதற்கெல்லாம் கூப்பிடுவார்களா?’ என்று சலித்துக்கொண்ட செவிலியர், நிவேதா வெளி வந்தவுடன்… அவளுக்கு ட்ரிப்ஸ் மாற்றிய பின், ரிஷியை வெளியே அழைத்துச்சென்று, “சார் இதுக்கெல்லாம் கூப்பிடுவாங்களா? அவங்க ரிலேட்டிவ் யாரும் வரலையா? சீக்கிரம் வர சொல்லுங்க. எல்லாம் எங்களால செய்ய முடியாது” கொஞ்சம் கறாராக சொல்லிவிட்டு சென்றார்.

ஏற்கனவே வேதாவின் நினைவுகளிலிருந்தவன், இப்போது இதைக் கேட்டவுடன்… கோபம் கொஞ்சம் எட்டிப்பார்த்தது.

‘எதையும் சொல்ல மாட்டேன் என்று இருக்கிறாள். இவர்களோ சொந்தம் சொந்தம் என என் உயிரை எடுக்கிறார்கள்’ மனதில் இருவரையும் கருவிக்கொண்டு கோபத்துடன் உள்ளே செல்ல, தலை கவிழ்த்து உட்கார்ந்திருந்தாள் நிவேதா.

அவளின் அந்த முகம் பார்த்தபின், ஏனோ அவளிடம் கோபப்படவும் அவனால் முடியவில்லை.

வெளியில் அவர்கள் பேசியது இவளுக்குக் கேட்டிருக்கும் போல.

“ஸாரி இப்போ நான் இருக்கிற நிலைமைல சொந்தம்னு யாரையும் கூப்பிட முடியாது. நாளைக்கு மார்னிங் கேர் டேக்கர்’கு அரேஞ் பண்ணிடறேன்” அவள் உணர்வுகள் துடைத்த குரலில் சொன்னவுடன், அவன் மனதின் ஓரத்தில் சின்ன பாரம் அவள் பேசியதைக் கேட்டு.

எதுவும் பேசாமல் மினு பக்கத்தில் உட்கார்ந்துகொண்டான்.

யாருமில்லாமலோ, யாரும் வேண்டாமென வாழ்வதோ எவ்வளவு கடினம் என்பது அவனுக்குத் தெரியாதா என்ன?

‘ஏன் இந்த நிலைமை இவளுக்கு…?! இவளுக்கு யாருமில்லை என்றால் மினுவிற்கும் யாருமில்லை…! எவ்வளவு நாட்கள் யாரும் வேண்டாம் என வாழ முடியும்?!’ என்ற கேள்விகள் தோன்ற… ‘ஏன் நீ தனியாக இல்லையா?’ என்ற கேள்வியும் அவனுள் எழுந்தது.

மறுபடியும் வேதாவின் நினைவுகள் அவனுள்.

நிவேதா தூங்க முயன்றும் முடியாமல் ஓர் அழுத்தம் அவளைச் சூழ்ந்தது. தன்னை நினைத்து கழிவிரக்கத்தினால் வந்த அழுத்தம் என்று சொல்லமுடியாது…  ஆனால் தற்போதைய இயலாமை அழுத்தத்தை ஏற்படுத்தியது.

‘இதுபோல உடல் உபாதைகள் வந்தால், யாரையேனும் சார்ந்துதான் இருக்க வேண்டுமா? எப்படி இதைச் சமாளிப்பது’ யோசிக்க யோசிக்க அழுத்தத்தின் அளவு அதிகரித்தது.

சில நிமிடங்கள் சென்றிருக்கும்… திடீரென ஏதோ சின்ன அசைவு அவளிடம். அவன் எழுந்து சென்று அவளைப் பார்த்தபோது, மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்து பதற்றமடைந்த ரிஷி, மறுபடியும் செவிலியரை அழைத்து வந்தான். அவரும் நிவேதாவை பார்த்துவிட்டு டியூட்டி டாக்டரை அவசரமாக அழைத்து வந்தார்.

அவளை சிறிது நேரம் பரிசோதித்த மருத்துவர், அவளுக்கு இதயத்துடிப்பு சீராக இல்லை என்பதை உணர்ந்து அதற்கு தேவையான மருந்துகளைத் தந்த பின், தூக்க மருந்தையும் செலுத்தினார்.

அந்த டியூட்டி டாக்டருக்கு தெரியாது ரிஷி நண்பன் என்று!

அவரும் அவனிடம், “இதுபோல அடிக்கடி வருமா? ஷி லுக்ஸ் டூ வீக். அனீமியா’வா இருக்க சான்செஸ் இருக்கு. ஐ கெஸ், அதுனால வர்ற பேல்பிடேஷன்ஸ் (Palpitation – இதயம் சீராக துடிக்காமல், அதிவேக/விடுபட்ட துடிப்பால் ஏற்படும் படபடப்பு) தான் இது. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும், மார்னிங் டெஸ்ட் எடுப்போம்” சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். 

அவர் சென்றவுடன், நிவேதாவை நித்திரை முற்றிலுமாக ஆட்கொண்டது. தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டான் ரிஷி. இதை எப்படிக் கையாள்வது என்று புரியவில்லை. ஒரே குழப்பம்.

தன்னை எப்போதுமே தள்ளி நிறுத்திப் பார்க்கும் அவள். தன்னை அனைத்திலும் இழுத்துப் பிடித்து, அவளைப் பற்றி தன்னிடம் சொல்லப்படும் விஷயங்கள். இரண்டும் இரு வேறு திசை. இது போக அவளைப் பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஓர் இனம் புரியாத உணர்வு. இதை அனைத்தும் எண்ணியவனுக்கு மண்டையே வெடிப்பது போல ஓர் உணர்வு.

அப்போது சரியாகத் தூங்கிக்கொண்டிருந்த மினு திரும்பி அவன் கையை பற்றிக்கொள்ள, இன்னொன்றும் அவன் குழப்பத்தில் சேர்ந்துகொண்டது. அது மினுவின் அன்பிற்காகத் துடிக்கும் அவன் உள்ளம்!

‘வேதாவிற்கு பின் யாரையும் தன்னிடம் நெருங்க விடாமல், யாருடனும் உறவு கொண்டாடாமல் இத்தனை வருடங்கள் கடந்தாகிவிட்டது. ஆனால் இப்போது எதற்காக தன் வாழ்க்கையில் இப்படியொரு ஆட்டம் ஆடுகிறது இந்த விதி’ என்ற கேள்வி அவனுள்.

எதற்காகத் தான் புது நிறுவனத்தில் சேர வேண்டும்? எதற்காக இந்தியா வரச் சம்மதிக்கவேண்டும்? எதற்காக தன் மனம் நிறைந்தவள், தன் மனதைப் பாதித்தவளின் பெயரில் ஒருத்தியைச் சந்திக்கவேண்டும்? எதற்காக சம்மந்தமேயில்லாமல் அந்த ஒருத்தியின் மகள் மீது அதீத அன்பு ஏற்பட வேண்டும்? எதற்காக அந்த ஒருத்திக்காகத் தான் இவ்வளவு மெனக்கெட வேண்டும் அதுவும் அவள் மறுத்தும் கேட்காமல்? எதற்காக அவள் சிந்தும் கண்ணீர் தன்னை வலிக்கச் செய்யவேண்டும்?

இது அனைத்தும் தன் வாழ்க்கையில் புது அத்தியாயத்தைத் துவங்குவதற்கான அடித்தளமா?!

மனது இது அனைத்தையும் யோசிக்க… ‘தேவையில்லாமல் அனைத்தையும் சம்மந்தப்படுத்துகிறாய். அனைத்தும் தற்செயலாக நடந்ததே… எதையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் வேலை முடிந்ததும் இவ்விடத்தை விட்டு உன் இடமான அமெரிக்காவிற்கு செல்’ அவன் அறிவு அறிவுறுத்தியது.

மனதின் இருப்பிடத்திற்கும்… அறிவின் இருப்பிடத்திற்கும் இடையில் நடக்கும் வாக்குவாதத்தில் சுத்தமாகக் குழம்பிப்போய் இருந்தான் ரிஷி. முதல் முறை, அவன் வாழ்வில் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்தான்.

வேதாவிடம் ‘திருமணம் செய்துகொள்ளலாமா?’ என்று நொடிப்பொழுதில் கேட்டவனா இவன்?!

அவனுக்குள் அடுத்த கட்ட யோசனைக் கொடிகள் முளைக்கத்தொடங்கியது.

‘ஒருவேளை புது அத்தியாயம் துவங்க இது அனைத்தும் நடந்ததாக வைத்துக்கொண்டாலும், இது நடக்கக்கூடியதா? சாத்தியமா?’ இந்த கேள்விக் கணை தலைதூக்க… மினுவை பார்த்தான்.

அழகாக தன்னிடம் பொருந்திக்கொண்ட அந்த குட்டி தேவதையைப் பார்க்கும்போது… ‘தொலைத்துவிடாதே இந்த அன்பு பொக்கிஷத்தை’ என்றது அவன் உள்ளம். இதழ்கள் சின்னதாக விரிந்தது.

‘இந்த பொக்கிஷத்தை தன் வாழ்க்கையில் இணைத்துக்கொள்வது என்பது அவ்வளவு சுலபமான ஒன்றா? இது நடக்குமா? அவ்வாறு நடந்தால் மினு மட்டுமா தன் வாழ்வில் வர முடியும்?’ இந்த கேள்விக்கொடி முளைக்க… நிவேதாவை பார்த்தான்.

ஏதோ ஒன்று நெருடியது. ஆழமாக யோசிக்க ஆரம்பித்தான். மினுவிற்கு அத்தனை ஆழமான யோசனை தேவையிருக்கவில்லை. ஏனெனில், மினுவை அளவிற்கு மீறி பிடித்திருந்தது. ஆனால் நிவேதாவை பற்றி நினைக்கையில் யோசிப்பது அவசியமாகியது.

அவன் யோசிக்க ஆரம்பிக்க, ‘அவளின் கடந்த கால திருமண முறிவா தன்னை தடுக்கிறது?!’ என்ற எண்ணம் வர, ‘இல்லை… நெருடலுக்கான காரணம் அது இல்லை’ என்றது அவன் மனம்.

இன்னமும் அவன் யோசிக்க… ‘ஒருவேளை அவளின் அணுகுமுறை… எப்பொழுதும் தன்னிடம் மட்டும் சிடுசிடுவென இருப்பாளே! அது நெருடுகிறதோ? ’ என்ற கேள்வி தோன்ற… இல்லை என்று முந்திக்கொண்டு பதில் வந்தது அவள் மனதில்!

ஆரம்பத்தில் அதுபோல தோன்றினாலும், நாட்கள் செல்ல செல்ல தனக்கு அது பெரிதாகத் தெரியவில்லை. அப்படியே அவள் இருந்தாலும் அதில் தவறென்ன இருக்கிறது? சுற்றியுள்ள சமூகம் பலவாறாகப் பேசிய பேச்சுக்கள்… அவளை அதுபோல தன்னிடம் அணுக வைத்திருக்கும் என எண்ணி.. இந்த யோசனையையும் புறம் தள்ளினான்.

அடுத்தென்ன என்ற யோசனையின் விடை, ஸ்ரீ! ‘ஸ்ரீ, நிவேதா பேசிக்கொள்ளும்போது சின்ன கோபம், சிறிய பொறாமை தலை தூக்கம். அதுவோ நெருடலுக்கான காரணம்?’ என்று அந்த கோணத்தில் யோசிக்க… அவனுக்கே சிரிப்பு வந்தது. சம்மந்தமே இல்லாதவளிடம்… சம்மந்தமே இல்லாமல் வரும் பொஸஸிவ்நெஸ். உரிமை! அது எதற்காக என்று அவனுக்கே தெரியவில்லை.

அடுத்து அடுத்து என யோசிக்க… அவளின் தோற்றம், அழகு, நிறம், மிச்ச சொச்சம், சொச்ச மிச்ச வெளிப்புற அம்சங்கள் என்ற யோசனை வர, ‘தெளிவான பாதையில் யோசி! உன் சரிபாதி என்றெண்ணிய வேதாவிடமே இதெல்லாம் நீ எதிர்பார்க்கவில்லை! அது உன் கருத்தினில் என்றுமே தோன்றியதில்லை’ என்று அவன் மனது அறிவுறுத்த… சட்டெனப் பளிச்சிட்டது அடுத்த யோசனை!

வேதா! ஆம்! இத்தனை வருடங்கள் வேதா மட்டுமே என்று எண்ணிய அவன் மனம், நிவேதாவை ஏற்றுக்கொள்ளுமா?! புது பந்தம் ஏற்படுத்திக்கொள்ள, மனதளவில் தயாராக முடியுமா?! வேதாவை முற்றிலுமாக மறந்து நிவேதாவை ஏற்றுக்கொள்ள முடியுமா?!

புரிந்துவிட்டது அவன் நெருடலுக்கான காரணம். வேதா இருந்த இடத்தில் இந்த நிவேதாவை பொருத்திக்கொள்ள முடியுமா என்ற நெருடல் அது.

‘மினுவிற்காக என்று புதிய பந்தத்தில் இணைந்தால் அத்துடன் அது நின்றுவிடுமா? அப்படிச்செய்தால் அது நிவேதாவிற்கு… அவள் வாழ்விற்கு இழைக்கப்படும் அநியாயம்’ என்றே தோன்றியது. 

ஸ்ரீ சொல்லியும் சொல்லாமல் நிறுத்திய ‘எமோஷனல் அபியூஸ்… பிஸிக்கல் அபியூஸ்… கடைசியாக மேரிட்டல் ரேப்’ இப்போது நினைவிற்கு வந்தது.

‘முன்பே திருமண வாழ்வு முறிந்து, தனியாக வாழும் பெண்ணிடம்… மினுவிற்காக மட்டும் என்று சொல்லி தானும் இதுபோல அநியாயம் இழைப்பது மாபெரும் தவறு!’ என்று தோன்றியது.

இப்போது நிவேதாவை பார்த்தான். கொஞ்சம் பிரமிப்பு அவனுள் எட்டிப்பார்த்தது.

உடலளவில், மனதளவில் இத்தனை துன்பங்களையும் கடந்து, சமூகத்தில் ஒரு சாரார் செய்யும் இகழ்ச்சிகளை எல்லாம் முறித்து, கேட்கவே காது கூசும் பேச்சுக்களைப் புறம் தள்ளி, எவ்வளவு அழகாக மகளுடன் தனித்து வாழ்கிறாள்!

எவ்வளவு நிமிர்வு அவளிடம்! தனியாகவே… தானாகவே எவ்வளவு விஷயங்களைச் சமாளிக்கிறாள்! வேலை, வீடு, மகள், என்று அனைத்தையும் நேர்த்தியாகக் கையாள்கிறாள்!

யார் துணையும் வேண்டாம்… என்னால் தனித்து நின்று வாழ முடியும் என்ற அவளின் தன்னம்பிக்கை! தற்போது கூட ‘உன் உதவி வேண்டாம்… என்று வெளிப்படையாகச்  சொல்லாமல், நாளை நான் உதவிக்கு ஆள் வைத்துக்கொள்கிறேன்’ என்றாளே!!!

இதை எல்லாம் நினைக்கும்போது அவன் முகத்தில் பிரமிப்புடன் சேர்ந்த மென்னகை!

ஏற்கனவே அவள் மேல் நல்ல எண்ணங்கள் தோன்றியிருந்தாலும், இப்போது அது அதிகமானது. இரட்டிப்பானது.

மனதில் இந்த நிவேதா… அவன் அறியாமலோ, அறிந்தோ உள்ளே நுழையக் காத்திருக்கிறாள்! அவளுக்கான இடம் அவன் மனதில் கூடிய விரைவில் கிடைக்குமா?!

‘தன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்கான சுய அலசல்’ இம்முறை அவனுக்குக் கொஞ்சம் அதிகமாகவே தேவைப்பட்டது!

வேதாவை மறந்து புது வாழ்க்கை கஷ்டம் என்று புரிந்தாலும், முடியவே  முடியாது என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதும் தோன்றியது!

அவன் எண்ணிய விதியின் ஆட்டம் தான்… அவன் வேதாவும் இந்த நிவேதாவும் ஒன்றே என்பதை சொல்லாமல் இன்னமும் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது என அவனுக்கு இப்போது தெரியவில்லை! அந்தோ பரிதாபம்! அனைத்தையும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமே!!!

************

அடுத்த நாள் விடிந்தது. நிவேதாவிற்கு காலை நெருங்கும் பொழுது தான் தூக்க மருந்து தரப்பட்டதால், அதன் தாக்கம் குறையக் கிட்டத்தட்ட மதிய நேரத்திற்கு மேல் ஆகும் என்றார் செவிலியர்.

மினுவும் எழுந்துகொண்டாள். செவிலியரிடம் நிவேதாவை பார்த்துக்கொள்ளச் சொல்லி ‘கொஞ்சம் தனியா கவனித்த’ பின், ரிஷி மற்றும் மினு, பிரெஷ் அப் ஆக, வீட்டிற்கு புறப்பட்டனர்.

மினுவிற்கு அனைத்தையும் அவனே செய்துவிட்டான். காலை உணவு சாப்பிடும்போது… “தேவ் இன்னைக்கு ஸ்கூல்’ல PT மீட்டிங். நான் தான் என்னோட கிளாஸ் மானிடர் (Class Monitor). சோ, எனக்கு இன்னைக்கு எல்லாருக்கும் முன்னாடி பேட்ச் (badge) தருவாங்க. என்னை ஸ்கூல்’கு கூட்டிட்டு போறயா தேவ்?” உரிமையுடன் கேட்டாள் மினு.

ரிஷி மறுப்பானா?! அழைத்துச்செல்ல ஆசைதான். இருந்தும், ‘நிவேதா எழுந்துவிட்டால், அவளுக்குத் தெரிய வந்து… அதற்குக் கோபம்கொண்டு குதித்தால்?’ என்ற கேள்வி தோன்ற, பார்த்துக்கொள்வோம். அவள் எழ மதியம் ஆகுமே! என எண்ணி மினுவுடன் புறப்பட்டான்.

பள்ளிக்குச் சென்றவுடன்… அன்றொரு நாள் மினுவிடம் அவள் வகுப்பு சிறுவன் ஒருவன், அவளுடைய தந்தையைப் பற்றி வம்பு வளர்த்தானே, அவன் இவர்கள் முன் நின்று ரிஷியை அண்ணாந்து பார்க்க… ‘நீ யாரடா?’ என்பது போல ரிஷியும் அச்சிறுவனைப் பார்த்தான்.

“யாரிது மினு… உன் அப்பாவா?” என்று அவன் மறுபடியும் வம்பை ஆரம்பிக்க… ரிஷிக்கு இந்த சில்வண்டு யார் என்று புரிந்துவிட்டது.

மினுவிற்கு, ‘அப்பா என்று இச்சிறுவன் அன்று சொன்ன உவமைகள்’ இப்போது ஞாபகம் வந்தது.

‘அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத போது… அப்பாதான் அம்மா செய்யும் அனைத்தையும் பார்த்துக்கொள்வார். உணவு கொடுப்பார். பள்ளிக்கு அழைத்து வருவார்’ என பல விளக்கங்களைத் தந்திருந்தான்.

அவன் ரிஷியை பார்த்து, ‘அப்பாவா?’ என்று மினுவிடம் கேட்டவுடன்… தன் அம்மாவிற்கு நேற்று உடல்நிலை சரியில்லாதபோது ஆரம்பித்து, இதுவரை ரிஷி செய்ததெல்லாம், அச்சிறுவன் சொன்ன விளக்கங்களுடன்… சரியாக ஒத்துப்போனது போல இருந்தது மினுவிற்கு.

உடனே ரிஷியை பார்த்து “ஆமா… என்னோட தேவ்வப்பா!” என்றாள் முகத்தில் மலர்ச்சியுடன்.

ரிஷி ஒரு நொடி அந்த பதிலில் அதிர்ந்தான். ஆனந்தமாக அதிர்ந்தான்! மனது சந்தோஷத்தில் திளைத்தது! கண்களில் கண்ணீர் கரித்தது! சில நொடிகள் அவனுக்குத் தேவைப்பட்டது, தன்னிலைக்கு வர!

அதற்குப் பின் நேரம் எடுத்துக்கொள்ளவில்லை… சிறுவர்களுக்கு இணையாக மண்டியிட்டவன், மினுவையும் அந்த சிறுவனையும் ஒரு முறை பார்த்தான்.

பின், மினுவை தோளோடு அணைத்துக்கொண்டு… “யெஸ்… தேவ்வப்பா! மினுவோட தேவ்வப்பா!” என்றான் பெருமையாக! கர்வமாக!

இதோ ஆரம்பித்துவிட்டது… அடுத்த ஆட்டம்! தேவ்… தேவா… இப்போது தேவ்வப்பா!

26
4
10
3

8 thoughts on “மீண்டும் ஒரு காதல் – 15

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved