மீண்டும் ஒரு காதல் – 16

மீண்டும் ஒரு காதல் – 16:

பள்ளியில் மினுவின் ஆசிரியர் ரிஷி குறித்து விசாரிக்க, அவரிடமும் மினு ‘தேவ்வப்பா’ என்றாள்.

அவர் கேள்வியாக ரிஷியைப் பார்த்தவுடன், ரிஷி அவரிடம் நிவேதாவிற்கு உடல்நிலை சரியில்லாததால், தான் வந்துள்ளதாகச் சொன்னான். அன்றைய மீட்டிங் ஓரிரு மணி நேரங்களில் முடிய, அப்படியே ஹாஸ்பிடலுக்கு சென்றனர் இருவரும்.

அப்போதும் நிவேதா மருந்தின் பிடியிலிருந்து மீளவில்லை.

ரிஷி, மினு நேரத்தைக் கடத்த, அவர்களுக்குள் பேசிக்கொண்டும் ஏதோ விளையாடிக்கொண்டும் இருக்க, கொஞ்ச நேரம் கழித்து… அரைகுறையாக கண்விழித்தாள் நிவேதா. மயக்கம் முழுதாக தெளியாமல் இருப்பதுபோல இருந்தது.

அந்த நேரம் அவள் கண்ணில் பட்டது, மினு – ரிஷி… இணக்கமாக விளையாடிக்கொண்டிருந்தது. அழகாக இருந்தது அதைப் பார்ப்பதற்கு. ஆசையாக… அமைதியாக அவள் பார்த்துக்கொண்டிருக்க, இவள் எழுந்துவிட்டதை ரிஷி பார்த்துவிட்டான்.

பார்த்ததும் முகம் மலர்ந்த ஒரு புன்னகை அவனிடம். இத்தனை நாட்கள் இல்லாதது… இன்று! அதுவும் பல வருடங்கள் கழித்துப் பார்க்கிறாள். அரை கண்களை கடினப்பட்டு முழுதாக திறக்க… மினு ஓடி வந்து நிவேதாவை கட்டிக்கொண்டாள்.

இப்போது ரிஷி அவர்களை ஆசையாகப் பார்த்தான். ‘கூடிய விரைவில் இந்த கூட்டில் தானும் சேர்ந்தால்?!’ என்ற எண்ணம் கொஞ்சம் வலுப்பெற்றது அவனுக்கு. அவன் முகத்தில் மந்தகாச புன்னகை.

மினுவை கட்டிக்கொண்ட நிவேதாவின் கண்கள் ஒருமுறை ரிஷியை பார்க்க, இவர்களைப் பார்த்து அவன் உதிர்த்த புன்னகை முற்றிலுமாக, வேறாக இருந்தது.

கடந்தகாலத்தில் அது அவளுக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தாலும், இப்போது அதைப் பார்த்து அவள் குழம்ப, அதே நேரம் மருத்துவர் உள்ளே நுழைந்தார்.

அவர் அவளைப் பரிசோதித்துவிட்டு அவனிடம், “ரிலேட்டிவ் யாரையாச்சும் வர சொன்னேனே? அவங்க ஹெல்த் கண்டிஷன் பத்தி பேசணும்” நிவேதாவை காட்டி அவர் கேட்க… நிவேதா பதில் சொல்ல வரும்முன்…

“அவங்க ரிலேட்டிவ்ஸ் வர டைம் ஆகும் போல டாக்டர். என்கிட்டயே சொல்லுங்க…  நான் இன்ஃபர்மேஷன் பாஸ் பண்ணிடறேன்” என்றான் நிவேதாவை பார்த்தவண்ணம்.

மினு மும்மரமாக மொபைலில் மூழ்கிவிட்டாள்.

‘இதுவரை இருந்த ஒதுக்கம் இப்போது இல்லாமல், இவன் பேச்சில் ஏதோ மாற்றம் தெரிகிறதே?!’ என்றெண்ணிய நிவேதா… “ஸாரி டு இன்டரப்ட் டாக்டர்! அவருக்கு சிரமம் வேண்டாம்… என்கிட்டயே சொல்லிடுங்க” என்றாள் ரிஷியை பார்த்தபடி.

இருவரையும் மாறி மாறி பார்த்த மருத்துவர், “ஆல்ரைட்… நேத்து எடுத்த பிளட் சாம்பிள் ரிசல்ட்ஸ் வந்துடுச்சு. எக்ஸ்பெக்ட் பண்ண மாதிரி உங்களுக்கு அனீமியா இருக்கு நிவேதா. பட், ஸ்டார்டிங் ஸ்டேஜ்’லாம் தாண்டி போயாச்சு” நிவேதாவை பார்த்து கொஞ்சம் கடுமையாகச் சொன்னவர்…

“உங்க பொண்ணுதானே. அவங்களுக்காக நீங்க நல்லா இருக்கணும் இல்லையா?” என்றதும், அதிர்ச்சியில் நிவேதாவின் புருவங்கள் விரிய… ரிஷியின் புருவங்கள் சுருங்கியது.

“அயர்ன் (Iron) ரொம்ப ரொம்ப குறைவா இருக்கு. எந்த டைப் ஆஃப் அனீமியா அண்ட் இதுனால என்னென்ன பாதிப்புகள் உங்க உடம்புல ஆகியிருக்குனு டெஸ்ட் பண்ணணும்” என்றவுடன் நிவேதாவின் முகத்தில் பீதி அப்பட்டமாகத் தெரிந்தது.

“உங்கள பயப்படுத்தணும்னு சொல்லல” பேசிக்கொண்டிருந்த மருத்துவரைப் பாதியில் நிறுத்திய ரிஷி, “அனீமியா அவ்ளோ ரிஸ்கி’யா டாக்டர்?” சந்தேகத்துடன் அவன் கேட்க… “எதுவுமே ஆரம்பத்துல பார்த்துட்டா, குணப்படுத்திடலாம். பட், இவங்க பிளட் கவுன்ட்ஸ் ரொம்ப கம்மியா இருக்கு” என்று விளக்கம் தந்தவர்…

“இதுபோல இதுக்கு முன்னாடி அன்கான்ஷியஸ் ஆகியிருக்கீங்களா?” நிவேதாவிடம் கேட்டார்.

நிவேதா கொஞ்சம் தயக்கத்துடன், “D&C பண்ணப்ப, இதுபோல ஆச்சு” என்றாள் மெல்லிய குரலில். அதன் பொருள் என்ன என்று புரியாமல் ரிஷி அவளைப் பார்க்க… “அதுக்கு அப்புறம் இதுபோல?” மருத்துவர் கேட்டவுடன்… நிவேதா உணர்ச்சிகளற்ற முகத்துடன், தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

“அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்தீங்களா?” அடுத்த கேள்வியை அவர் கேட்க, இடம் வலமாகத் தலையை ஆட்டினாள் இப்போது. ரிஷி கொஞ்சம் கோபத்துடன் அவளைப் பார்த்தான்.

இருவரின் பார்வையும் தன் மீது இருப்பதை உணர்ந்த நிவேதா, தலையை நிமிராமல்… “சில சமயம் வேலை அதிகம் இருந்தா, உட்கார்ந்தே ரொம்ப நேரம் வேலை செய்வேன். அப்போ தலை சுத்தும். உடனே படுத்துடுவேன். அப்புறம் ஒன்னு ரெண்டு நிமிஷத்துல நார்மல் ஆயிடுவேன். இந்த டைம் கூட அது போல தான்னு நினைச்சு படுத்துட்டேன்” என்றாள் கண்களை மூடித்திறந்து.

இது இவ்வளவு பெரிதாகும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. நிவேதா மட்டுமில்லை. நம்மில் இருக்கும் பல பெண்கள் நிவேதாவை போலத் தான். உடலில் ஏற்படும் மாற்றங்கள், உபாதைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சமாளித்து விடலாம் என்று கை வைத்தியம், இல்லை ஓய்வு எனக் கடந்துவிடுவார்கள்.

“ஹ்ம்ம். படிச்சவங்க தானே நீங்க?” மருத்துவர் கேட்டவுடன், நிவேதா இருவரையும் எதிர்கொள்ள முடியாமல் கண்களை மூடிக்கொள்ள… ரிஷிக்கு அவளைப் பார்க்க, பார்க்க கோபமும், ஆதங்கமும், ஆற்றாமையுமாக இருத்தது.

“முன்னாடி இதுபோல ஆனப்ப, செக் பண்ணிருக்கலாம். ப்ச்… இப்போ பேசி வேஸ்ட். இதை இப்படியே விட்டா… அடுத்து போன் மேரோ (எலும்பு மஜ்ஜை – bone marrow) இல்ல, உங்க இதயத்துக்கே பாதிப்பு வரலாம். நான் சொல்ற டெஸ்ட் எடுங்க. அடுத்து என்ன ட்ரீட்மெண்ட்னு டிசைட் பண்ணுவோம்” அவளிடம் சொல்லிவிட்டு…

ரிஷியிடம், “நேத்து சொன்னதுதான் மிஸ்டர் ரிஷி. கூட ஒருத்தங்க கண்டிப்பா இருக்கணும். அதுக்கு வழி பண்ணிடுங்க” என்றவர், செவிலியரிடம் குறிப்புகள் கொடுத்துவிட்டுச் சென்றார்.

அடுத்த நொடி நிவேதா மொபைலில் ஏதோ பார்த்துவிட்டு, உடனே யாரையோ அழைத்தாள். ரிஷி புரியாமல் பார்த்தான்.

நிவேதா ஹிந்தியில்… “கேர் டேக்கர் சர்வீஸ் வேண்டும்……” என்று கொஞ்ச நேரம் பேசினாள்.

அவள் ‘கேர் டேக்கர்’ என்றவுடனே அவனுக்கு புரிந்துவிட்டது. கோபத்துடன் அவளை முறைத்தான். அதெல்லாம் அவள் பார்த்தால் தானே. ஓரிரு நொடிகள் பேசிவிட்டு, பின் மருத்துவமனை பெயரைச் சொல்லி அங்கேயே வரச்சொன்னாள்.

பின், “நான் அரேஞ் பண்ணிட்டேன் ரிஷி. கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. மினுவையும் சேர்த்து பார்த்துக்க சொல்லிட்டேன். உங்களுக்கு எதுக்கு சிரமம்” அவள் முடிக்கும்முன்… “தேவ்வப்பா” என்ற மினுவின் அழைப்பு நிவேதா செவியின் வழியே நுழைந்து நெற்றிப்பொட்டைத் தட்டியதுபோல ஓர் உணர்வு.

இதயம் துடிக்க மறக்க, அதிர்ந்தாள். சட்டேன, “மினு! என்ன இதெல்லாம்?” என்று கத்திவிட்டாள். சிறுமிக்கோ ஒன்றுமே புரியவில்லை.

அவளைப் பொறுத்தவரை அம்மாவின் இயலாமையில், அம்மாவின் வேலைகளைப் பார்த்துக்கொள்பவர் அப்பா!

இதுவரை அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத போது… ஸ்ரீ சிலசமயம் இருந்திருக்கிறான். ஆனால் அம்மாவின் வேலைகளையெல்லாம் செய்ததில்லை. அதைச் செய்தது ரிஷி… அதாவது மினுவின் தேவ். ஆகவே தேவ்வப்பா!

நிவேதா  திட்டியவுடன்… “என்னம்மா ஆச்சு?” மினு பாவமாகக் கேட்க…

“அதென்ன மினு…” நிவேதாவால் ‘தேவ் அல்லது தேவ்வப்பா’ என்று சொல்லமுடியவில்லை.

“அதென்ன… அப்படி கூப்பிடறது மினு? ரொம்ப தப்பு” கண்டிப்புடன் சொன்னாள்… ‘தேவ்… தேவப்பாவை’ தவிர்த்து.

ஆனால் உள்ளுக்குள் ஒருவித புழுக்கம். அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பழைய ஞாபகங்கள், பழைய பேச்சுக்கள்… மனதில் அழுத்தத்தைக் கூட்டியது.

அவளுக்குள் நடக்கும் போராட்டம் தெரியாமல், “எதுக்கு மினு கூப்பிட்ட?” மினுவை தூக்கிக்கொண்டு மிகவும் சகஜமாக கேட்டான் ரிஷி … நிவேதாவின் அதிர்ச்சி, மறுப்பு, முக மாற்றம் எதையும் பொருட்படுத்தாமல்.

நிவேதாவிற்கு மூச்சு முட்டியது. கண்களில் ஒருபுறம் கண்ணீர் வரவா என்பதுபோல இருந்தது.

ரிஷி கேட்டவுடன், மினு… ‘எதற்கு அவனை அழைத்தோம்?’ என யோசித்தாள். நிவேதா அதட்டியதில் அழைத்ததற்கான காரணம் மறந்துவிட்டது சிறியவளுக்கு.

“மறந்துடுச்சு தேவ்வப்பா” என்றாள் பாவமாக. ஒவ்வொரு முறையும் அந்த அழைப்பு ஈட்டியால் இதயத்தை பதம் பார்ப்பது போல உணர்ந்தாள் நிவேதா.

“ஹ்ம்ம். மினுக்குட்டி… மினு அம்மாகிட்ட சொல்லு… தேவ்வப்பா’கு சிரமமெல்லாம் இல்லையாம். யார் வந்தாலும் இங்கேயே மினு கூடவும், மினு அம்மா கூடவும் தான் இருப்பேன்னு சொல்லு” என்றான் வேண்டுமென்றே ‘தேவ்வப்பா, மினு அம்மாவை’ அழுத்தமாகச் சொன்னபடி.

இப்போது தன்னையும் அறியாமல், கட்டுப்பாட்டையும் கருத்தில் கொள்ளாமல், மூக்கு விடைக்க, இதழ் துடிக்க… கண்ணீர் வெளிவந்து விட்டது.

‘நடந்தது நடந்திடுச்சு வேதா. குட்டி பொண்ண நம்ம பார்த்துக்கலாம். அவளுக்கு இனிமே வேதா தான் அம்மா; தேவா தான் அப்பா. நான் சீக்கிரம் வரேன். நீ தைரியமா இரு டா ப்ளீஸ்’

மித்ரன் அனுராதா இறந்தபின், நிவேதாவை சமாதானப்படுத்திய வார்த்தைகள் இதெல்லாம். சொன்னது அவள் முன்னே இப்போது நிற்கும் ரிஷி தேவ் அதாவது அவளின் தேவா!

கடந்தகால நினைவுகள் அவளைச் சுழற்றி அடிக்க… இப்போது நடப்பவை மனதை அழுத்த, இதயத்துடிப்பு அதிகமாகத் துடிக்க, மறுபடியும் மூச்சு விடச் சிரமப்பட்டாள்.

அழுத்தம் அவளை ஆட்கொள்ள, மயக்கம் அவள் கண்களை உள்ளிழுக்க, பேச முடியாமல் கையை மட்டும் ரிஷியை நோக்கி நீட்டினாள். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியதை அவள் முகம் அப்பட்டமாகக் காட்டியது.

அவள் மௌனத்தை உணர்ந்து, அந்நேரம் சரியாக அவளை அவன் பார்த்த நொடி, பதறிக்கொண்டு விழப்போனவளை பிடித்து… கட்டிலில் படுக்க வைத்தான்.

“நிவி…” அவனுடைய பதறிய குரல், செவிவழி சென்று அவள் இதயத்தை அடைய… கண்கள் மூடும்முன், அவன் முகம்… அதில் தெரிந்த பதட்டம், அவள் கண்ணீர் திரையையும் மீறி… விழிவழி சென்று அதுவும் இதயத்தை அடைந்தது.

இவ்விரண்டும் இதயத்திற்கு மருந்தாக மாறிப்போக… அங்கே ஏற்பட்டிருந்த அழுத்தத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்தியது. இதயத்துடிப்பு லேசாக சீரானது. மனதில் ஒருவித நிம்மதி பரவியவுடன், அவள் கண்கள் மூடியது மயக்கத்தில்.

உடனே மருத்துவர் வரவழைக்கப்பட்டார். மறுபடியும் மூச்சுக்குச் சிரமப்பட்டதால், அதற்கான உபகரணங்கள், மற்றும் மருந்துகள். அதைத் தொடர்ந்து சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டது.

நிவேதாவை அப்படிப் பார்த்தவுடன் மினு மிரண்டுவிட்டாள். ரிஷியை விட்டு இறங்கவில்லை. பயத்தில் அழுதவண்ணம் அவன் கழுத்தை கட்டிக்கொண்டே இருந்தாள். அதற்கு பின் மினுவை தன்னுடனே வைத்துக்கொண்டான் ரிஷி.

நிவேதாவை விட்டும் எங்கும் நகலவில்லை. வேலைக்கு வந்த பெண்மணியிடம் தன் எண்ணைக் கொடுத்து, அழைக்கும்போது வரச்சொல்லி அனுப்பி வைத்தான்.

அவளின் ஒதுக்கம் முதலில் அவனை சங்கடப்படுத்தினாலும், ‘அதில் தவறேதும் இல்லை’ என்று நினைத்தான்.

‘புதிகாக ஓர் ஆணிடம் நெருக்கம் காட்ட முடியுமா என்ன?’ என அவளுக்காகப் பரிந்து பேசி, மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

அவளுக்கு எடுத்த சோதனை முடிவுகள் வந்தவுடன், அவனை அழைத்தார் மருத்துவர்.

“போன் மேரோ டெஸ்ட் நார்மலா இருக்கு. சோ அத ரூல் அவுட் பண்ணிட்டோம். அனீமிக்’கா இருக்கறதுனால, இரும்பு சத்து ரொம்பவே கம்மியா இருக்கு. வெரி வெரி லோ.

அதுனால ரத்ததுல இருக்கிற ஆக்சிஜென் அளவு ரொம்ப குறைவா இருக்கு. அதை சரி செய்ய, ஹார்ட் அதிகம் ரத்தம் பம்ப் பண்ணும். அப்படி அதிகம் பம்ப் பண்ணும்போது,  ஏற்படற மூச்சு திணறல்… அதுனால வர்ற ஹார்ட் பீட் வேரியேஷன் ரொம்ப அதிகமா இருக்கு. அப்போ தான் palpitations அவங்களுக்கு வருது.

இதுக்கு ட்ரீட்மென்ட் இங்க வச்சு ஒரு டூ டேஸ் தான். பட், அதுக்கப்புறம் ஒழுங்கான முறைல உடம்ப பார்த்துக்கணும். இல்லைன்னா இதய கோளாறு வர்ற வாய்ப்புகள் ரொம்பவே அதிகம். இதுபோல அடிக்கடி அதிகம் ஹார்ட் பம்ப் பண்றப்ப, உயிருக்கே ஆபத்தா முடியலாம்” என்றார் மருத்துவர்.

பின், “இதுக்கு முன்னாடி D&C ஆனப்ப கூட இதுபோல ஆகியிருக்குனு சொன்னாங்கல?” மருத்துவர் கேட்டதும் … D&C என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியவில்லை. தெரியாது என்றால் தவறாக எடுத்துக்கொள்வாரோ என நினைத்து… ஆம் என்பதுபோல தலையசைத்தான்.

உடனே அவர், “ஹ்ம்ம். அப்போ ரத்தப்போக்கு அதிகமா இருந்திருக்கும். பொதுவாவே மாதவிடாய் நேரத்துல லேடீஸ்’கு பிளட் லாஸ் அதிகம்… சோ ஐயன் ரிச் சாப்பாடு எடுத்துக்கணும்” மருத்துவர் சற்று நிறுத்தி… யோசனை ரேகைகளுடன், “நீங்க யார் அவங்களுக்கு? வெறும் ஃப்ரெண்ட்?” சந்தேகத்துடன் நிறுத்தினார்.

ஒரு நொடி தான் யோசித்தான். பின் நிதானமாக, “இப்போ ஒரு நல்ல ஃப்ரெண்ட் தான் டாக்டர். பட், எதிர்காலத்தை பற்றி, வி ஹாவ் டிஃபரென்ட் ப்ளான்ஸ்” என்றான்.

அதன் பொருள் அவருக்கு புரிந்துவிட்டது போல, “குட். டூ டேஸ் இங்க கண்காணிப்புல இருக்கட்டும். அப்புறம் எல்லாம் அவங்க கைல… ஹ்ம்ம்… இல்ல. உங்க ரெண்டு பேர் கைல தான் இருக்கு. டேக் கேர்” என்றார்.

புன்னகையுடன் தலையசைத்துவிட்டு வெளியேறினான்.

மனதில் D&C மட்டும் ஒருபுறம் ஓடிக்கொண்டே இருந்தது. அதைப் பற்றி தெரிந்துகொள்ள மொபைலை நாடி… அதை தெரிந்துகொண்ட நொடி, அதிர்ந்தான்.

வயிற்றில் உருவான கரு, வளராமல்… கருச்சிதைவு ஏற்படும்போது அறுவை சிகிச்சை மூலம், கருச்சிதைவின் கழிவுகளை முழுமையாக கர்ப்பப்பையில் இருந்து வெளியேற்ற D&C செய்வார்கள். அவ்வாறு செய்யும்போது ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்.

அவள் பட்ட இன்னல்களை நினைத்த போது, ஏதோ சொல்லமுடியாத வலி அவன் இதயத்தில். யார் என்றே தெரியாத… அவளை இந்த நிலைக்குத் தள்ளியவன் மீதி கடுங்கோபம் பொங்கியது.

வெளி உலகில் அவளைப் பார்ப்பவர்களுக்கு, அழுத்தமான பெண், கடினமான பெண், சிலசமயம் திமிரான பெண் என்ற தோற்றமே தரும். ஏன் அவனும் அப்படிதான் நினைத்தான். அவளும் தன்னை அப்படிதான் காட்டிக்கொண்டாள்.

ஆனால், அந்த அழுத்தத்துக்குள்… அழுந்தியுள்ள வலிகள், அந்த கடினத்துக்குள்… கடந்து வந்த துன்பங்கள் யாருக்குத் தெரியும்?

அவைகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அவளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். புதிரான அவளைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தான்.

மினு மட்டும் தான் இந்த புதிய அத்தியாயத்திற்கான அடித்தளம்… அவளுக்காகத் தான் என்று நினைத்த உள்ளம்… நிவேதாவை பற்றியும் யோசிக்க ஆரம்பித்தது. சிலசமயம் அவளுக்காக.. அவள் பட்ட துன்பங்களை எண்ணிப் பார்த்தது.

ஆக… இந்த முடிவை அவன் முந்தைய தினம் எடுத்த பின், பழைய வேதா அவன் கருத்தினில் அதிகம் வரவில்லை. இந்த புதிய நிவேதா கொஞ்சம் அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தாள்.

அடுத்த இரண்டு நாட்கள் மருந்தின் பிடியில் அதிக நேரம் இருந்த நிவேதா, கிளம்பும் நாள் அன்று கொஞ்சம் தெளிந்திருந்தாள்.

மினுவை மதிய உறக்கம் ஆட்கொண்டிருந்தது.

கட்டிலில் சாய்ந்தவண்ணம் நிவேதா நடப்பவற்றை நோட்டம் விட… அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்த ரிஷியைப் பார்த்தாள்.

முதல் நாள் நொய்டா வந்திருந்த ரிஷியை பார்த்ததற்கும், இப்போது பார்ப்பதற்கும், நிறைய மாற்றங்கள் தெரிந்தது.

இப்போது அவளின் தேவாவாக தெரிந்தான். சட்டென அடுத்துத் தோன்றிய விஷயம்… ‘இவன் முழுப்பெயர் கூட தெரியாமலா இருந்திருக்கிறோம்? தன்னிடம் அவன் சொன்னதெல்லாம் தேவ் என்ற பெயர் மட்டும் தானே…’ புருவங்கள் யோசனையில் சுருங்கியது.

மினுவை பார்த்தாள். அவளின் தேவப்பா விளிப்பு, நினைவிற்கு வர, ‘இவனுடைய மனைவி! அந்த அத்தை மகள் கௌரி எங்கே? திருமணம் என்ன ஆனது? முறிந்துவிட்டதா? இல்லை வருவாளா?’ என்ற கேள்விகள்.

ஒருவேளை அப்பெண் வந்தால் மினுவின் நிலை? என்று எண்ண, மனம் பதறியது. சிறுபிள்ளையின் உள்ளம் சிதைந்துவிடுமே! மனம் பாரமானது. அவனைத் தள்ளி நிறுத்த நினைத்தாள்.

இப்போது அவனைப் பார்த்தபோது… அவன் ஏதோ ரிப்போர்ட்ஸ், பில்ஸ் வாங்கிக்கொண்டிருந்தான்.

மூன்று நாட்கள் மருத்துவமனை வாசம், ‘கண்டிப்பாக அவனைத் தவிர யார் பணம் தந்திருப்பார்?’ என்ற யோசனை அடுத்து.

அவன் வேலைகள் முடிந்து அவளிடம் வந்தவுடன், “உங்க அக்கௌன்ட் டீடெயில்ஸ் மெசேஜ் பண்ணுங்க ரிஷி. எவ்ளோ ஆச்சு?” அந்த ரசீதைப் பார்த்தபடி, “சொன்னா நான் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுவேன்” என்றாள்.

அவளைப் பார்த்து மென்னகையுடன், “உன்னோட இன்சூரன்ஸ் வச்சு தான் எல்லாம் நடந்துச்சு. நான் செலவு பண்ணவே இல்லை” என்றான்.

அதை நம்பவில்லை அவள். “ஓ ப்ளீஸ். என் இன்சூரன்ஸ் நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்? டோன்ட் ட்ரை டு ஃபூல் மீ ரிஷி… கடன்காரி ஆக்கிடாதீங்க. என்னோட செலவை யாரும் பார்க்கவேண்டாம்” முகத்தைச் சுளித்தபடி சொன்னாள்.

அவளின் பேச்சு ஒவ்வொன்றிலும் ‘தனித்தே என்னால் முடியும்! யார் உதவியும் தேவையில்லை. எனக்கு உதவி செய்ய நீ யார்?’ என்று தள்ளி நிறுத்துவது நன்றாகவே தெரிந்தது.

கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்தான். அவனின் கண்கள் காட்டிய இலகுத்தன்மை அவளை ஏதோ செய்ய, “நீங்க தரலைன்னா நான் அக்கௌன்ட்ஸ் டிபார்ட்மென்ட்’ல வாங்கிப்பேன்” என்றாள். இதிலும் ‘என்னால் முடியும்’ என்ற தோரணையில்.

அவள் பேசுவது இப்போது ரசிக்கும்படி சுவாரசியமாக இருந்தது அவனுக்கு. அட… இதே ரிஷிக்கு தானே முன்பெல்லாம் அவள் பேசினாலே கடுப்பாகும்?!

அவள் அருகில் வந்தவன், புருவங்கள் உயர்த்தி… “சீனியர் மேனேஜர்’க்கு அக்கௌன்ட்ஸ் டிபார்மண்ட்ல AVP’யோட அக்கௌன்ட் நம்பரே… கிடைக்கும்போது, ஒரு AVP’க்கு மேனேஜரோட இன்சூரன்ஸ் நம்பர் கிடைக்காதா என்ன?” என்றான் புன்னகையுடன் கொஞ்சம் கிண்டல் தொனியில்.

அவள் முறைத்தாள். ஆனால் உள்ளுக்குள்… ‘ஐயோ இதுபோல தானே முதலில் இருவரும் கிண்டல் செய்துகொண்டு பேசினோம். இப்போவும் அப்படியே இருக்கிறானே’ என்ற எண்ணம்.

“இந்தா இன்சூரன்ஸ் பேப்பர்ஸ்” அவளிடம் தந்தவன்… சற்று நிறுத்தி… பின் அவள் பக்கத்தில் சேரை இழுத்துப்போட்டு உட்கார்ந்தான்.

நிவேதாவிற்கு ஏனோ சின்ன படபடப்பு. ‘என்ன பேச போகிறானோ’ என்ற எண்ணம். ‘எப்படி தப்பிப்பது’ என்ற யோசனை.

அவள் பேச வரும்முன்… “என்னை மினுவோட அப்பாவா ஏத்துப்பியா நிவேதா?” பட்டெனக் கேட்டுவிட்டான்.

அட இதுவல்லவா தேவ்!

திகைப்பில் விழிகள் விரிந்தது அவளுக்கு. கால சக்கரம் பின் நோக்கிச் சென்று… அவன் சொன்ன “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா நிவி?” இப்போது அவள் காதில் கேட்டது.

ஒரு சில நொடிகள் மட்டுமே யோசித்தான்.

பின் குரலை சரிசெய்து கொண்டு , “என்னோட வாழ்க்கைல இதுக்கு முன்னாடி ஒரு நிவேதா இருந்தா. என்னோட வேதா! இப்போ இல்ல” வலி அவன் மனம் முழுவதும். பக்கத்திலிருந்த தண்ணீரைக் குடித்து தன்னை சமன் செய்துகொண்டான்.

நிவேதாவின் இதயம் நின்று துடித்தது. கண்கள் அலைபாய… அவள் மனம் அலறியது. உதடுகள் ‘தேவா’ என்று சொல்லத் துடிக்க… அதற்கு அணை போட்டாள். கண்களில் கண்ணீர் ஊற்று மடைதிறக்க காத்திருந்தது.

“வயசு முப்பத்தாறு ஆனது தான் முன்னேற்றமே தவிர, என் வேதா நினைவுகள் சுமந்த என்னோட இதயம் அப்படியே தான் இருக்கு. அவளை மறக்க முடியாம அப்படினு சொல்றத விட… மறக்கக் கூடாதுனு வாழ்ந்துட்டு இருந்தேன்” அவன் கண்களில் அவன் வேதாவிற்கான காதல் நர்த்தனம் ஆடியது.

இதை பல முறை வீடியோ காலில் பார்த்திருக்கிறாள்… இன்று நேராகப் பார்க்கிறாள்.

அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவ்வளவு வருடங்களாக துளியும் மாறாமல் அதே காதலுடன் இருக்கிறானே… இவனுடன் வாழும் பாக்கியம் தனக்கு கிடைக்கவில்லையே என்று அவள் மனது ஓலமிட்டது. கைகளை இறுக மூடி, உதட்டை உள்கடித்து அழுகையைக் கட்டுப்படுத்தினாள்.

சில நிமிடங்கள் மௌனமாய் கழிந்தாலும், இருவர் உள்ளமும் மௌனமற்றிருந்தது.

ஒருவேளை அவள் முகம் பார்த்திருந்தால், அவளின் மாற்றங்கள் அவனுக்கு தெரிந்திருக்குமோ? அவனோ வேதாவினால் ஏற்பட்ட உணர்வுகளுக்கும், இந்த நிவேதாவினால் ஏற்படும் உணர்வுகளுக்கும் நடுவில் கிடந்து தவிக்கிறானே!

அவனை இப்படி பார்க்கவே முடியவில்லை. ‘இவன் கல்யாணம் செய்துகொள்ளவே இல்லையா? ஏனடா!’ என்ற கேள்வி அவள் மனதில் முள்ளாய் குத்த, மனம் பொறுக்காமல் குரல் கமர கேட்டுவிட்டாள்.

அவனோ வெற்றுப்புன்னகையுடன், “கல்யாணமா?அப்படி பண்ணியிருந்தா, அது அந்த பொண்ணுக்கு நான் செய்ற துரோகமா தான் இருந்திருக்கும். என் வேதா தவிர யாரையும் என் மனசு நினைச்சதில்ல. ஏத்துக்கிட்டதில்ல.

யாருமே வேணாம்னு தான் இருந்தேன்… மினுவை பார்க்கிற வரை. என்னென்னே சொல்லத் தெரியாத ஒரு பிணைப்பு அவளோட எனக்கு ஏற்பட்டுடுச்சு. அவளோட பாசத்துக்காக மனசு ஏங்குது. நான் விருப்பப்பட்டு ஏத்துக்கிட்ட இந்த தனிமை கூட, இப்போ எனக்கு பிடிக்கல.

என் வேதாவை மறந்து புது வாழ்க்கை ஆரம்பிக்கிறது கஷ்டம் தான். பட், முயற்சி பண்றேன்” தயங்கி அவள் முகம் பாராமல் பேசினான். வேதாவை மறந்து இந்த நிவேதாவுடன் வாழ, அவனுக்கு கொஞ்ச காலம் தேவைப்பட்டது.  அதனால் தான் இந்த தயக்கம்.

அவன் ஒவ்வொரு முறை ‘என் வேதா’ என்று சொல்லும்போது… மகிழ்ச்சியில் அவள் மனம் திளைத்தாலும், வலித்தது. உள்ளுக்குள் பிசைந்தது.  

‘தேவா… நான் தான் வேதா’ என்று சொல்ல அவள் மனம் ஏங்கினாலும்… தவித்தாலும்… கதறினாலும்… ஓலமிட்டாலும்… எதையும் காட்டிக்கொள்ளாமல் சிலையென உட்கார்ந்திருந்தாள்.

‘ஏன் என்னை விட்டுச்சென்றாய்? அப்படியாவது நன்றாக வாழ்ந்தாயா? இல்லையே!’ அவன் சட்டையைப் பிடித்து, தன் வேதனைகளை அவனுக்குக் கடத்தி, கதறி அழுது, அவனுள் தஞ்சம் புகை ஆசைதான். ஆனால் முடியவில்லை!

கடந்து வந்த வருடங்கள், அது தந்த காயங்கள், அதனால் ஏற்பட்ட வலிகள், வலி மறந்தாலும் காயங்கள் கொடுத்த சுவடுகள் அழியவில்லையே! கேட்ட வார்த்தைகள், பழிச்சொற்கள் மாறப்போவதில்லையே! இறுகிய இதயம் இன்னமும் இளகவில்லையே!

உணர்வுகளின் போராட்டம் மனதின் உள்ளே. ஆனால் உணர்வுகளற்ற முகம் வெளியே!

“என்னடா இவன் இப்படி சட்டுனு பேசறானேன்னு யோசிக்காத ப்ளீஸ். எனக்கு எல்லாம் உடனே சொல்லிடணும். உடனே நடக்கணும்”

‘எனக்கு தெரியாதா என்ன?!’ அவள் மனது அரற்றியது.

“பட், இந்த விஷயம் உடனே நடக்கணும்னு எதிர் பார்க்க முடியாது, இல்லையா. யோசி… யோசிச்சிட்டு சொல்லு” என்றான்.

முன்பு காதலைச் சொல்லி…  அவன் யோசிப்பதற்கான நேரம் அவளுக்குத் தந்தது இருவருக்குமே நினைவிற்கு வந்தது! மனதில் ரணம் இருந்தாலும், மனதினுள் முறுவல் இருவருக்கும்!

சில நிமிடங்கள் மௌனம் இருவருக்கிடையில். அந்த நேரமே போதுமானதாக இருந்தது நிவேதாவிற்கு உணர்ச்சிகளின் பிடியிலிருந்து வெளிவருவதற்கு.

இதெல்லாம் தேவையில்லாதது என எண்ணி, “என்னை பத்தி என்ன தெரியும் ரிஷி உங்களுக்கு?” என கேட்டிட…

“நீ டிவோர்ஸி. ஏன் எதுனால… ஏன் இப்படி நடந்துச்சு… அந்த கேள்வியெல்லாம் எனக்கு இல்ல. இப்பவும் எப்பவும் இருக்காது”

அவன் முடிக்கும்முன், அவளையும் மீறி அடுத்த கேள்வி… “ஓ… அது தெரிஞ்சுட்டு தான் வாழ்க்கை தர்றீங்களோ?” அவள் முடிக்கும்போது இருவருக்கும் பழைய நினைவுகள்.

‘ஏன் இதைக் கேட்டோம்?!’ என்று மானசீகமாகத் தலையில் குட்டிக்கொள்ள… அவன் முகத்தில் கீற்றாகப் புன்னகை. முன்பு இந்த கேள்விக்கு பதிலாக, அவளிடம் ‘எனக்கு வாழ்க்கை கொடு’ என்றான். ஆனால் இப்போது…

“யாரும் யாருக்கும் வாழ்க்கை தரவேண்டாம் நிவேதா. இருக்கிற இந்த நிமிஷம்… இந்த வாழ்க்கையை மினு, நீ, நான்னு சந்தோஷமா வாழணும்னு நினைக்கிறன்” மினு என்ற வார்த்தை முன்னே வந்தது. அவன் யோசித்துச் சொல்லவில்லை. அது அவளுக்கும் புரிந்தது.

“நாளை எப்படி இருக்கும்னு தெரியாது நிவேதா. இன்னைக்கு இருக்கவங்க நாளைக்கு இல்லாம  கூட போகலாம். இப்போ… இந்த நிமிஷம் வாழற வாழ்க்கை தான் நிரந்தரம்… முக்கியம். அந்த வாழ்க்கையை உங்ககூட பகிர்ந்துக்கணும்னு நினைக்கிறேன். நீ யோசிச்சு உன் முடிவை சொல்லு”

இப்போது இருவர் மனதிலும் மித்ரன் அனுராதாவின் எண்ணங்கள். இருவர் மனதிலும் அழுத்தம். கண்களில் கண்ணீர். மற்றவருக்குத் தெரியாமல் மறைத்துக்கொண்டனர்.

அந்த நிமிடம் மினு தூக்கத்திலிருந்து எழ… இவர்கள் பேச்சு அத்தோடு முடிந்தது.

வீடு திரும்பினார்கள். இருவர் மனதில் ஆயிரம் எண்ணங்கள்! நிவேதாவினுள் நிறைய கேள்விகள்!

அப்போது இருவரும் நினைக்கவில்லை… இவர்கள் வாழ்க்கையில்… ரிஷியின் அத்தை, கௌரியின் அம்மா… ஸ்ரீ ஆகிய இருவரின் மூலமும்… விதியின் கடைசி ஆட்டம் நிகழப்போகிறது என்று!

25
7
7
4
1
1

2 thoughts on “மீண்டும் ஒரு காதல் – 16

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved